மகாலட்சுமியோடு காரில் சென்று கொண்டிருந்தான் அதியன். காருக்குள் பாடல் ஓடிக் கொண்டிருக்க, இருவரும் வாயை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
வாயைத்திறந்தால் எங்கே சண்டை போட்டு விடுவோமோ என்ற பயம் அதியனுக்கு.
அவனும் பொறுமையாக இருக்கத்தான் நினைக்கிறான். அவள் அதற்கு ஒத்துழைத்தால் தானே?
இன்று வனிஷாவையும் யதுவையும் மகா பார்த்த பார்வை, அதியனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர்கள் சந்தோசமாக இருப்பது மகாலட்சுமிக்குப் பிடிக்கவில்லை. அது அதியனுக்குப் பிடிக்கவில்லை.
மற்றவர்களின் வாழ்வை பார்த்துப் பொறாமைப் படுவது தவறல்லவா?
ஆனால் உண்மையில் மகாலட்சுமி அதற்காக மட்டும் கோபமாக இல்லை. தீபா அவளிடம் சில கேள்விகள் கேட்டிருந்தாள். அதன் தாக்கம் தான், வனிஷாவை மகாலட்சுமி முறைத்துக் கொண்டு சுற்றியது.
முதலிலேயே இருவரும் ஒன்றாக வெளியே சென்றதை தாங்க முடியாமல் தான் அமர்ந்து இருந்தாள். அது போதாதென்று செல்வகுமார் வந்து பேசினான்.
“அதியன் கூட பிரச்சனையா?” என்று கேட்க, அவள் பதிலே சொல்லவில்லை.
“பிரச்சனை இருந்தாலும் சரி பண்ணிக்க மகா. முன்னாடி என்ன நடந்ததுனு தான் சொல்ல மாட்டேங்குற. சரி அது உங்க தனிப்பட்ட விசயம். ஆனா இப்படி ஒதுங்கி போயிட்டு இருந்தா எப்படி? அதியனும் உன்னை பத்தி கவலையே பட மாட்டேங்குறார். அத பார்த்து கோபம் வருது. ஆனா நீயும் அவர பத்தி கவலையே பட மாட்டேங்குறியே. என்னனு போய் கேட்குறது? நீங்களா புரிஞ்சு வாழனும். அமெரிக்கா வர்ரதா சொல்லி இருக்கார். அங்க நான் இருப்பேன். பயப்படாம வா” என்று பேசியவன், மேலும் பல அறிவுரைகளை வழங்கி விட்டே கிளம்பினான்.
அடுத்ததாக சீதா வந்து சேர்ந்தாள். செல்வகுமார் அளவு பொறுமையாக அவள் பேசவில்லை. கோபமாகவே திட்டினாள்.
“இது தான் வாழ்க்கைனு ஆனப்புறம்.. சும்மா போட்டு மனச உளப்பிட்டு இருக்க கூடாது. எனக்கு தெரிஞ்சு அதியன் கெட்டவராவும் தெரியல. அப்புறமும் ஏன் இப்படி பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்க?” என்று நன்றாக திட்டி இருந்தாள்.
திட்டோடு அறிவுரையும் கூறி விட்டே கிளம்பினாள். கடைசியாக வந்து சேர்ந்தாள் தீபா.
இருவரும் வேலை செய்யும் பள்ளியில், மகாவை பற்றி கிளம்பிய புரளியை பற்றி புலம்பி தீர்த்தாள்.
“நான் வேலைய விட்டுருவேன்” என்று மகா கூறி விட, “அதான் நவ்லது. எனக்கும் அங்க இருக்க பிடிக்கவே இல்ல. எல்லாரும் என்னை சுத்தி சுத்தி ஒரே கேள்விய கேட்குறாங்க. எரிச்சலா இருக்கு” என்றாள்.
“சீக்கிரம் மறந்துடுவாங்க. விடு”
“ஆமா.. உன்னை எல்லாரும் தான் மறந்துட்டாங்களே.. அங்கயும் மறந்துடுவாங்க”
“ம்ம்..”
“கேட்கனும்னு நினைச்சேன்.. உங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணாங்களா?”
“ஏன்டி இத கேட்குற?”
“பாட்டி பேசிட்டு இருக்கப்போ கேட்டேன். உங்களுக்கும் வனிஷாவுக்கும் தான் ஏற்பாடு செய்யனும்னு பேசிட்டு இருந்தாங்க. அந்த பாக்கியம் இருக்காங்களே, அவங்க கிட்ட சொன்னதா பேசினாங்க. இங்க அலங்காரம் எல்லாம் பண்ணாங்க. அதான் உங்களுக்கும்..?”
முடிக்காமல் நிறுத்த, மகா முறைத்து வைத்தாள். அதோடு தீபா கப்பென வாயை மூடிக் கொண்டாள்.
ஆனால் மகாலட்சுமிக்கு விசயம் புரிந்து விட்டது. வனிஷாவும் யதுவும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டார்கள். இருவரிடமும் புதுமணத்தம்பதியின் அன்யோன்யம் நிறைந்து இருந்தது. அதை அறிய முடியாத அளவு மகாலட்சுமி முட்டாளும் அல்ல.
“நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ண சொன்னாங்களா?” என்று மொட்டையாக மகா கேட்க, காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் அவளை திரும்பிப் பார்த்து விட்டு, “அது ஒன்னு தான் பாக்கி” என்றான் எரிச்சலாக.
“எப்ப சொன்னாங்க?”
“கல்யாணம் முடிஞ்ச மறுநாள். உன்னை விடும் போது சொல்லிட்டுப் போனாங்க”
“ஓஹ்”
“ஏன் கொண்டாட ஆசையா இருக்கா?”
வேண்டுமென்றே அதியன் கேட்க, அவனை அமைதியாக பார்த்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை.
“உன் கிட்ட தான கேட்குறேன். ஆசையா இருந்தா சொல்லு..”
“சொன்னா?”
அவனை முடிக்க விடாமல் அவள் கேள்வி எழுப்ப, “சத்தியமா நிறைவேறாதுனு புரிய வைப்பேன்” என்றான்.
“உங்களுக்கு என் மேல அப்படி என்ன கோபம்? என்ன தப்பு பண்ணிட்டேன் நான்?”
“இன்னும் என்ன செஞ்சனே உணராம இப்படி கேட்குற பார்த்தியா? இதுக்கே உன்னை கொல்லலாம்”
“என் பக்கம் எந்த தப்பும் இல்ல”
“அப்படியே நினைச்சுக்க. தூங்குறவங்கள தான் எழுப்ப முடியும். நடிக்கிறவங்கள இல்ல”
அதியன் வெடுக்கென சொல்லி விட்டுத் திரும்பிக் கொண்டான்.
____
வசந்தா மகனை அதிர்ந்து பார்த்தார்.
“என்னடா நீ.. அத எதுக்கு வாங்கனும்னு சொல்லுற?”
“வாங்குங்க மா. இத கொடுத்துட்டு அத வாங்கிடுங்க”
“வச்சுட்டு போகட்டுமே..”
“சரி வராதுனு சொல்லுறேன்ல?”
“அத்த.. அவங்க தான் சொல்லுறாங்கள்ல? வாங்கிடுங்க அத்த. அது சாதாரண மோதிரமா இருந்தா வச்சுட்டு போகட்டும்னு விடலாம். ஆனா நிச்சயத்துக்கு போட்டது. அதியன் தாலி கட்டுனப்புறம், அது மகா கிட்ட இருக்க கூடாது. இந்த ஜோடி மோதிரத்த அவங்க ரெண்டு பேர் கிட்டயும் கொடுத்துட்டு, அத வாங்குங்க. அதான் எல்லாருக்கும் நல்லது”
வனிஷா தெளிவாக பேச, வசந்தாவிற்கு மறுக்க முடியவில்லை. வெற்றிவேலை பார்த்தார்.
“நீங்க என்ன சொல்லுறீங்க?”
“வாங்கிடுமா. யதுவும் வானுவும் சொல்லுறாங்களே.” என்று கூற, வசந்தா சம்மதித்தார்.
மகாவட்சுமிக்கு நிச்சயத்தின் போது யதுநந்தன் அணிவித்த மோதிரத்தை திரும்பி வாங்கிக் கொண்டு, அதற்கு பதிலாக ஒரே மாதிரியாக கணவன் மனைவிக்கு செய்த மோதிரங்களை கொடுக்கச் சொல்லி யதுவும் வனிஷாவும் கூறினர். கொடுத்த பொருளை கேட்பது பிடிக்கவில்லை என்றாலும், இவர்கள் சொல்வதும் நியாயமாகவே பட்டது.
அறைக்குள் வந்த யது, “இப்ப என் கிஃப்ட்ட காட்டுறியா?” என்று கேட்டான்.
“இருங்க.. நான் போய்..” என்றவளை பிடித்து இழுத்துச் சென்று, அலமாரியை திறந்து நிறுத்தினான்.
“எடுத்துக் கொடு” என்று கேட்டதும், சிரித்துக் கொண்டே எடுத்து நீட்டினாள்.
அதில் இரண்டு வகையான சட்டைகள், அதற்கு ஏற்ற பேன்ட் எல்லாமே இருந்தது.
“நான் சேன்ஜ் பண்ண போன கேப்ல இதெல்லாமே செலக்ட் பண்ணிட்டியா?”
“எஸ்.. போட்டு பாருங்க”
ஒரு சட்டையை அணிந்து பார்த்தவன், “எப்படி இருக்கு?” என்று கேட்டான்.
“அழகா இருக்கு… சட்டை” என்றதும், அவளை இழுத்து பிடித்து கன்னத்தை கடித்து வைத்தான்.
“வலிக்குது அத்தான்..” என்று அவனை பிடித்து தள்ளி விட்டாள்.
“திரும்பப் பேசு. கடிச்சு கடிச்சு சதைய காலி பண்ணிடுறேன்*
“இது இன்னோரு கிஃப்ட்” என்று ஒரு பெட்டியை நீட்ட, வாங்கி பார்த்தான்.
இரண்டு கைபேசி உறை இருந்தது.
“இத ஆர்டர் பண்ணிருந்தேன். வாங்கலாம்னு தான் சாப்பிங் கூட்டிட்டுப் போனேன். அதுக்குள்ள கேட்டா தான் கிஃப்ட்னு என்னமா பேசுறீங்க” என்றவள் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டு, மற்றொன்றை தன் கைபேசிக்கு மாட்டினாள்.
இருவரும் கை கோர்த்து அக்னியை வலம் வந்த புகைப்படம். இன்னும் ஆல்பம் வரவில்லை. இதை மட்டும் வாங்கி செய்ய சொல்லி இருந்தாள்.
“எப்படி இருக்கு?” என்று கேட்டவளை அணைத்து முத்தமிட்டவன், “அழகா இருக்கு” என்றான்.
“சரி.. எடுங்க”
“எத?”
“அதான் எனக்காக வாங்குனீங்களே.. அது”
“நான் எதுவும் வாங்கலயே..”
“நம்ப மாட்டேன். கண்டிப்பா இருக்கு. எடுங்க”
“அவ்வளவு நம்பிக்கையா?” என்று கேட்டு சிரித்தவன், அவன் பங்கிற்கு இரண்டு பெட்டியை எடுத்துக் கொடுத்தான்.
இரண்டும் பால்கோவா. ஒரு நொடி இமை சிமிட்டாமல் பார்த்தவள், அடுத்து வரத்துடித்த சிரிப்பை அடக்கினாள்.
“என்னாது இது?”
“சொல்லிருந்தேன்ல ரெண்டு வாங்கித்தர்ரேன்னு”
“ஓஹ்.. இத யாரு சாப்பிடுறது?”
“நாம தான்”
“நாம?” என்று இழுத்தவளின் தோளில் கை போட்டு முகத்துக்கு நேராக குனிந்தவன், “ஆமாடா” என்று கண்ணடித்தான்.
சிரிப்பை உதட்டிலேயே அடக்கியவள், “அப்புறமா சாப்பிடலாம்” என்று கையை தட்டி விட்டு திரும்பினாள்.
பின்னாலிருந்து அணைத்தவன், “அப்புறம்னா?” என்ற கேள்வியோடு அவள் கழுத்தில் மூக்கை, உரச உடல் சிலிர்த்தது.
“எப்போ?” என்ற கேள்வியில் உதடுகள் அழுத்தமாக அவள் காதில் பதிய, கூச்சத்தில் நெளிந்தாள்.
“அப்புறம்னா அப்புறம் தான்.. தள்ளுங்க” என்று தள்ளி விட்டாள்.
“உனக்கு பால்கோவா பிடிக்குமா நிஷா?”
“ரொம்ப.. பால்ல பண்ணுற எல்லா ஸ்வீட்டும் பிடிக்கும்.” என்றவளின் வாயில் கொஞ்சம் திணித்து விட்டான்.
“அதான் பால்ல செஞ்ச பன்னு மாதிரி இருக்கியா?” என்று கேட்டு கன்னம் கடித்தான்.
“அத்தான்.. இதெல்லாம் வைக்கனும்..”
“நாளைக்கு வைக்கலாம்” என்றவன், அவள் கையிலிருந்ததை பிடுங்கி போட்டு விட்டு, அவளை சிறையெடுத்திருந்தான்.
_____
அடுத்த நாள் இரண்டு ஜோடிகளும் பதிவுத்திருமணம் செய்ய வந்திருந்தனர். யதுநந்தனும் வனிஷாவும் ஒரே நிறத்தில் உடையணிந்து இருக்க, அதியன் மகாலட்சுமி எனோதானோவென கிளம்பி இருந்தனர்.
முத்துவேல் தனது பாதுகாவலர்களோடு வந்திருக்க, மகாலட்சுமியின் பெற்றோர்களும் யதுநந்தனின் பெற்றோர்களும் சாட்சி கையெழுத்திட வந்திருந்தனர்.
முதலில் யதுநந்தன் வனிஷாவின் திருமண பதிவு முடிந்து விட, அதியன் முத்துவேல் கொடுத்த தாலியை மகாவின் கழுத்தில் போட்டு விட்டு, கையெழுத்திட்டான்.
ஒன்றுக்கு இரண்டாய் கழுத்தில் கிடந்த தாலியை, வெறித்து பார்த்துக் கொண்டே மகாலட்சுமி கையெழுத்திட்டாள்.
திருமணம் முடிந்த கையோடு இரண்டு ஜோடிகளுக்கும் விருந்து ஏற்பாடு செய்திருந்தார் முத்துவேல். அதனால் மற்றவர்கள் கிளம்பி விட, முத்துவேல் பாக்கியம் வினோத்துடன் இரண்டு ஜோடிகளும் சென்றது.
மிகப்பிரம்மாண்டமான அந்த ஹோட்டலில் கார் நிற்க, உணர்ச்சியில்லாமல் பார்த்தாள் மகாலட்சுமி. அவளை ஒரு ஏளன பார்வை பார்த்தான் அதியன்.
“நீங்க இங்க வந்துருக்கீங்களா?”
“காலேஜ் படிக்கும் போது வந்துருக்கேன்”
“நானும் அம்மா கூட வந்தேன். இங்க நான்வெஜ் நல்லா இருக்கும்”
எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேசிக் கொண்டிருந்தது வனிஷாவும் யதுவும் தான்.
எல்லோருக்கும் ஒரே மேசையாக இருக்க, அவரவர் ஜோடியின் அருகே அமர்ந்தனர். பிடித்ததை வரவைத்து பேசிக் கொண்டே சாப்பிட, மகாலட்சுமிக்கு உணவு உள்ளே செல்லவில்லை.
யதுவின் கையைப்பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவளை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவளைத்தவிர எல்லோருமே கலகலப்பாக பேசினர். விருந்து முடிந்ததும், “நான் நந்தவனம் போகனும். அங்க என் திங்க்ஸ் எடுக்கனும்” என்றாள் மகாலட்சுமி.
“நீங்க நாலு பேரும் போங்க. நாங்க கிளம்புறோம்” என்று முத்துவேல் கிளம்பி விட்டார்.
அதியன் காரை ஓட்ட, மகாலட்சுமி வேகமாக பின்னால் சென்று அமர்ந்து கொண்டாள். அவளை பார்த்து விட்டு, யது முன்னால் அமர்ந்து கொண்டான்.
வீடு செல்லும் வரை அதியனும் யதுவும் பேசிக் கொண்டு வந்தனர்.
வனிஷா வீட்டுக்குள் சென்று விட, மகாலட்சுமி தன் வீட்டில் சென்று எதையோ எடுத்து விட்டு, வனிஷாவை தேடிச் சென்றாள்.
வீட்டில் யாருமில்லாமல் வனிஷா மட்டுமிருக்க, மகாலட்சுமிக்கு வசதியானது.
“ஏய்.. நில்லுடி” என்று அதட்ட, வனிஷா திரும்பிப் பார்த்தாள்.
“நீ இங்க என்ன பண்ணுற?”
“கேட்படி.. இந்த வீட்டுல மருமகளா நான் இருக்க வேண்டியது. அத தட்டிப்பறிச்சுட்டு கேட்ப”
வனிஷா அவளை ஆழ்ந்து பார்த்தாள்.
“என்ன வெறுப்பேத்துறியா? சும்மா சும்மா என் முன்னாடி அவர் கூட உரசிட்டு இருக்க. பொது இடத்துல எப்படி நடந்துக்கனும்னு தெரியாது? மேனர்ஸ் இல்ல”
“மேனர்ஸ் பத்தி க்ளாஸ் எடுக்க வந்தீங்களா டீச்சர்? எனக்கு அதுக்கு நேரமில்ல. கிளம்புங்க”
“நக்கலா பண்ணுற? கொன்னுடுவேன். ப்ளான் பண்ணி என் வாழ்க்கைய பறிச்சுட்டு எவ்வளவு திமிரா பேசுற?”
‘லூசா இவ?’ என்பது போல் பார்த்து வைத்தாள்.
“உன்னை போய் மொத்த குடும்பமும் நம்புது. அமைதியா இருந்து காரியத்த சாதிச்சுட்டல”
“ஆமா மேடம். நான் தான் ப்ளான் பண்ணி உன் வாழ்க்கைய பறிச்சேன். அதுக்கு இப்ப என்னங்குற?”
“ஏய்..”
“சொல்லு.. வெறும் ஏய்யோட நிறுத்துனா எப்படி? சொல்லு என்ன செய்வ? உன்னால என்ன பண்ண முடியும்?”
“ஓவரா பேசாத.. அப்புறம் பாவம் பார்க்க மாட்டேன்”
“நீ என்ன எனக்கு பாவம் பார்க்குறது? நான் தான் அதியனுக்கு ஆக்ஸிடென்ட் பண்ண வச்சேன். நான் தான் நடுராத்திரி உன்னை மூஞ்சிய மூடிட்டு இரத்தம் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைச்சேன். நீ திரும்பி வரலனதும், அத்தான மயக்கி கல்யாணம் பண்ணிட்டேன். போதுமா?”
வனிஷா கிண்டல் சிரிப்போடு பேச, மகாலட்சுமிக்கு ஆத்திரமாக வந்தது. நான் எதுவும் அறியாதவள் என்று கூறினால், சண்டை போடலாம். நானே செய்தேன் என்று செய்யாததையும் சேர்த்து சொல்கிறாளே.
“லூசா நீ? என்னமோ சீரியல் வில்லி மாதிரி பேசிட்டு இருக்க. கல்யாணத்தன்னைக்கு எதோ வருத்தத்துல பேசுறனு நினைச்சேன். இது சரியில்லயே. என்ன உன் பிரச்சனை?”
“நீ தான்”
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”
“இதுவரைக்கும் பண்ணது போதாதா?”
“உன்னோட… இப்ப என்னங்குற? என் புருஷன் யது. அவர் கூட நான் உரசுவேன். உனக்கு என்ன வந்துச்சு? நீயும் வேணா உன் ஹஸ்பண்டோட சந்தோசமா இரு. என்னை பார்த்து ஏன் பொறாமை படுற?”
“பொறாமை? எனக்கா? முதல்ல யுது வாழ்க்கையில வந்தது நான் தான். அத தெரிஞ்சுக்கோ. இப்ப நீ வாழுறியே.. அது என்னோட வாழ்க்கை. அவர் என்னை தான் நிச்சயம் பண்ணார். என்னை தான் கல்யாணம் பண்ணவும் வந்தார். இடையில நீ வந்துட்டா அது உனக்கு சொந்தமாகிடுமா?”
“ஆகாம?”
“எனக்கு சேர வேண்டியது இது. உன் கூட அவர் வாழ்ந்தாலும் மனசுல நான் இருப்பேன். அப்படினா.. வாழ்க்கை முழுசும் அது என் இடம் தான்.”
“திரும்ப சொல்லு?”
“எத்தனை தடவ வேணா சொல்லுவேன்.. என்னை மனசுல வச்சுட்டு தான் உன் கூட…”
சப்பென்று ஒரு அறை மகாலட்சுமியின் கன்னத்தில் விழுந்தது.
“இன்னொரு தடவ சொல்லு…” என்று மீண்டும் அடிக்கத்தயாரானாள் வனிஷா.
அடிவாங்கிய அதிர்வில் மகா ஒரு நொடி நின்றாள். மறுநொடி திருப்பி அடித்து விட்டாள்.
தொடரும்.