வனிஷா கிளம்பிக் கொண்டிருக்க, யது அவளை புரியாமல் பார்த்தான்.
“இன்னைக்கு லீவ் தான?” என்று குழப்பத்தோடு கேட்க, “ஆஃபிஸ் போகல. பார்லர் போறேன்” என்றாள்.
“பார்லரா? எதுக்கு?”
“ரெகுலரா போறது தான்”
“இப்ப ஏன் போற? ஈவ்னிங் போகலாம்ல?”
“அப்பாயின்ட்மண்ட் இப்ப தான் வாங்கி இருக்கேன்”
“இது வேறயா..” என்று சலித்துக் கொண்டவன், குப்புற படுத்து தலையணையை அணைத்துக் கொண்டு அவளை வேடிக்கை பார்த்தான்.
“பெட் விட்டு எந்திரிக்கிறதா இல்லையா?” என்று அவனது குறுகுறு பார்வை தாங்காமல் கேள்வி கேட்டாள்.
“நீ தான் லீவ் டேய்ஸ்ல கூட என்னை விட்டு ஓடுற. நான் ஏன் எந்திரிக்கனும்?”
“எனக்கு வீக் எண்ட் தான் டைம் கிடைக்குது. முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடுவேன்”
“எவ்வளவு நேரமாகும்?”
“சரியா சொல்ல முடியாது. மூணு நாலு மணி நேரம் ஆகலாம்”
“அவ்வளவு நேரமாகுமா? அவ்வளவு நேரம் என்ன செய்வ?”
“ஹேர் கட் பண்ணனும். ஃபேசியல் இருக்கு. மெனிக்கியோர் பெடிக்கியோர் ஐ ப்ரோ…”
“இதெல்லாம் எனக்கு புரியாத காலக்கேய பாசை. அதனால அத விடு. ஆக மொத்தம் நாலு மணி நேரம் வேலை இருக்கு?”
வனிஷா தலையாட்ட, சலிப்போடு படுத்துக் கொண்டான்.
“என்னாச்சு? எதாவது ப்ரோக்ராம் இருக்கா?”
“அதெல்லாம் இல்ல”
“இருந்தா சொல்லுங்க.. நான் கேன்சல் பண்ணிடுறேன்”
“இல்லடா.. நீ கிளம்பு..” என்றவன் எழுந்து சென்றான்.
அவள் கிளம்பி முடிக்க, யது தயாராகி வந்தான்.
“வா நான் உன்னை ட்ராப் பண்ணுறேன்” என்று கூறி பைக் சாவியை எடுக்க, வனிஷா அவனை இமை சிமிட்டாமல் பார்த்தாள்.
“வா.. என்ன பார்வை?” என்று இழுக்க, “உண்மையாவா சொல்லுறீங்க?” என்று கேட்டாள்.
“ஆமா.. வா” என்று அழைத்துக் கொண்டு வந்தான்.
“ம்மா.. நாங்க வெளிய போயிட்டு வர்ரோம்” என்று கூற, “அதியன் அப்பா வர்ரதா சொல்லிருந்தாங்களே.. பார்த்துட்டு போகலாம்ல” என்றார் வசந்தா.
வனிஷாவிற்கு அப்போது தான் விசயம் புரிந்தது. எதற்காக திரும்பத் திரும்ப கேட்டான் என்று.
“பார்த்துக்கலாம்மா.. பை” என்றவன் வனிஷாவோடு வெளியேறினான்.
“அவங்க வர்ராங்கனா இருக்கலாம். எப்ப வருவாங்க?”
“வேணாம். கிளம்பலாம்” என்றவன் பைக்கை எடுத்து நிறுத்தினான்.
யதுநந்தனுக்கு மகாலட்சுமியை சந்திக்க விருப்பம் இல்லையோ? என்று தோன்ற, எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்தாள்.
இரண்டு பக்கமும் காலை போட்டுக் கொண்டு அமர்ந்து அவன் தோளை பிடித்துக் கொண்டாள். அவள் கையை பார்த்தவன், பின்னால் சரிந்தான்.
“ஏன் இடுப்ப பிடிச்சுக்கலாமே?” என்று கேட்க, வனிஷாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“பேசாம கிளம்புறீங்களா?” என்று அதட்ட, தலைக்கவசத்தை அணிந்து கொண்டு கிளம்பி விட்டான்.
தெருவைக் கடந்ததும், வனிஷா தானாகவே தோளில் இருந்த கையை இடம் மாற்றி அவனை அணைத்துக் கொண்டாள்.
அதில் யதுவின் முகத்தில் சந்தோசம் மிளிர, பைக் பறந்தது.
காரில் வாழ்க்கை பற்றிய குழப்பத்துடன் சன்னலோரம் சாய்ந்து வந்து கொண்டிருந்த மகாலட்சுமி, வனிஷாவையும் யுதுநந்தனயும் பார்த்து விட்டாள்.
விழிகள் அதிர்ச்சியில் விரிய, நொடியில் கடந்து சென்று விட்டனர். எட்டிப்பார்க்க முடியாமல் கண்ணாடி முழுவதும் மூடி இருந்தது. அதிர்ச்சியில் இருந்து அவள் வெளி வரும் முன்பே, கார் வீட்டுக்கு சென்று விட்டது.
வீட்டினர் முத்துவேலை தடபுடலாக வரவேற்றனர். அன்பாக உபசரித்தனர். அதியனையும் கவனிக்க தவறவில்லை. பேச்சுக்கள் சுவாரஸ்யமாக கடந்தது. முத்துவேலும் எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாய் பழகினார்.
எல்லோரும் இருப்பதை பார்த்து விட்டு, “இன்னோரு ஜோடிய காணோமே?” என்று விசாரித்தார் முத்துவேல்.
“வெளிய போயிருக்காங்க. லீவ் நாள்ல?” என்று மட்டும் சொன்ன வசந்தா, வேறு எதுவும் சொல்லவில்லை.
அவர் பதிலை கேட்ட மகாலட்சுமிக்கு, அழுகை வரும் போல் இருந்தது. நிம்மதியாய் வாழ வேண்டிய வாழ்வை கெடுத்துக் கொண்டதை நினைத்து நொந்து கொண்டாள்.
நேரம் விரைவாக கடக்க, மதிய உணவு நேரம் வந்தது. மகாலட்சுமி அவளையும் அறியாமல் யதுவும் வனிஷாவும் வருவார்களா? என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவளைத்தவிர யாருமே இதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
எல்லோரும் நாளை இருக்கும் திருமண பதிவைப்பற்றிய பேச்சு வார்த்தையில் இருந்தனர்.
சாப்பிட்டு விட்டு தன் பாதுகாவலர்களுடன் முத்துவேல் கிளம்ப, அதியனும் எழுந்தான்.
“அவருக்கு வேலை இருக்கு. நீ இருபா” என்று பாட்டி தடுக்க, அதியன் மகாவை பார்த்து விட்டு இருந்து விட்டான்.
மாலை வரை யதுவும் வனிஷாவும் வராமல் போக, உண்மையை ஏற்க முடியாமல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
_____
வனிஷாவை பார்லரில் இறக்கி விட்ட யது, “முடிஞ்சதும் கால் பண்ணு. வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்” என்றான்.
தலைசரித்து அவனை பார்த்தவள், “அது வரை?” என்று கேள்வி எழுப்பினாள்.
“கடைக்கு சரக்கு வந்துருக்கு. பார்த்துட்டு வர்ரேன்”
“இது நம்புற மாதிரி இல்லையே..”
“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு?”
“பொய்னு சொல்லல. ஆனா வேணும்னே இந்த வேலைய உருவாக்குன மாதிரி தெரியுது”
“தெரியுதுல? அப்ப அதான் உண்மை. உள்ள போ. முடிச்சுட்டு கால் பண்ணு” என்று கூறி விட்டுக் கிளம்பி விட்டான்.
மூன்றரை மணி நேரம் கழித்து வனிஷாவிடமிருந்து அழைப்பு வர, குடோனில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை முரளியிடம் கொடுத்து விட்டுக் கிளம்பினான்.
வாசலில் வனிஷா நின்றிருக்க, பைக்கை நிறுத்தி விட்டு அவளை நன்றாக பார்த்தான்.
செல்லும் போது இருந்ததை விட முகம் பளிச்சென இருந்தது. புருவங்கள் திருத்தப்பட்டு உதட்டுச்சாயம் பூசப்பட்டு இன்னும் என்னவெல்லாம் செய்தாளோ. ஆனால் பார்க்க அழகாக இருந்தாள்.
“நல்லா இருக்கனா?”
“முடிய வெட்ட போறனு சொன்ன?”
“பண்ணல”
“ஏன்?”
“அம்மா பூ வைக்கனும். பின்னல் போட முடியாம வெட்டி வைக்காதனு சொன்னாங்க. அதான் விட்டேன்”
“ஓஹ்.. சரி வா கிளம்பலாம்”
வனிஷா பின்னால் அமர்ந்து கொள்ள, “சாப்பிடப்போகலாமா?” என்று கேட்டான்.
“வீட்டுக்குப் போகலயா?”
“இல்ல”
“அத்த அம்மா பாட்டி..”
“இன்ஃபார்ம் பண்ணியாச்சு” என்றவன் பைக்கை கிளப்ப, உள்ளே புன்னகைத்துக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டாள் வனிஷா.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும், வனிஷா திரையரங்கம் செல்ல விருப்பப்பட அங்கு சென்றனர். நகைச்சுவை படம் ஒன்றை பார்த்து நன்றாக சிரித்து விட்டு வெளியே வந்தனர்.
“சாப்பிங் போகலாமா?” என்று வனிஷா அடுத்துக் கேட்க, “வீட்டுக்கு போற ஐடியா இல்லையா?” என்று கேட்டு சிரித்தான்.
“நைட் டின்னருக்கு போகலாம். இப்ப வாங்க”
“கையில பணம் இல்ல. ஏடிஎம் போயிட்டு போகலாம்” என்றவன் அவளோடு கிளம்பினான்.
அவனுக்கு மகாலட்சுமியை பார்க்க விருப்பமில்லை என்று வனிஷாவுக்கு புரிந்தது. அதனால் அவளும் அவனோடு சுற்றினாள்.
சாப்பிங் என்ற பெயரில் நன்றாக அலைந்து திரிந்தனர். வீட்டில் ஒவ்வொருவருக்கும் தேவையானது என்று சில பொருட்களை வாங்கிக் கொண்டனர். தேவை என்று வாங்க ஆரம்பித்து, எல்லோருக்கும் ஒன்றை வாங்கி குவித்தனர்.
பில் கட்டும் போது யது தடுத்து விட்டான்.
“நான் சொல்லும் போது நீ கட்டு.” என்று அவளை தடுத்து விட்டு, எல்லாவற்றையும் அவனே வாங்கினான்.
கடைசியாக அவளை அழைத்துக் கொண்டு, மாலில் இருந்த ஆண்கள் உடைபகுதியை அடைந்தான்.
“இங்க நீ கட்டு” என்று கூறி கண் சிமிட்டி விட்டு பையை கவுண்டரில் கொடுத்து விட்டு, உடையை பார்க்க ஆரம்பித்தனர்.
அவனது செய்கையில் சிரித்தவள், ஒவ்வொன்றாய் பார்த்தபடி நடந்தாள். யதுநந்தனும் அவள் பின்னால் அவளிடம் பார்வையை பதித்துக் கொண்டு நடந்தான்.
சட்டென நின்று திரும்பி பார்த்தவள், “என்ன பின்னாடியே வந்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“நீ செலக்ட் பண்ணு”
“ஓஹ்.. நான் செலக்ட் பண்ணி பில் பண்ணி கிஃப்ட் பண்ணனுமா?”
“ஹப்பாடா.. புரிஞ்சுடுச்சா? என் நிலைமைய பார்த்தியா? கிஃப்ட்ட கேட்டு வாங்க வேண்டி இருக்கு” என்று சலித்துக் கொண்டான்.
“போதும் போதும்” என்று முறைத்தவள், உடனே திரும்பி எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்தாள்.
இரண்டு சட்டையை எடுத்து அவன் மீது வைத்துப் பார்த்து விட்டு, பிடிக்காமல் விட்டு விட்டாள். சில நிமிட தேடலுக்கு பின் ஒரு சட்டையை எடுத்தவள், “இது ஓகேவா? போட்டு பாருங்க” என்று கூறி அனுப்பி வைத்தாள்.
அவன் அணிந்த பிறகு அளவு பத்தாமல் போக, வேறு ஒன்றை முயற்சித்தான். அது அளவு சரியாக இருந்தது.
“சைஸ் கரெக்ட்டா இருக்கு. ஆனா இந்த கலர் உங்களுக்கு மேட்ச் ஆகல.. கழட்டிருங்க” என்று கூறி விட, அவனும் கழட்டி வைத்து விட்டு வந்தான்.
“போகலாமா?” என்று கேட்டதும் அவளை தலை சாய்த்துப் பார்த்தான்.
“என்ன லுக்? போகலாமானு கேட்டேன்” என்ற வனிஷா சிரித்துக் கொண்டே அவனை இழுத்துக் கொண்டு நடக்க, “மேடம் பில்” என்று விற்பனை பெண் வந்து பில்லை கொடுத்தாள்.
அதை வாங்கி கவுண்டரில் கொடுத்ததும் உடைகளை கொடுத்தனர்.
“வாங்கிட்டியா!” என்று யது ஆச்சரியப்பட, “நீங்க தான கிஃப்ட் கேட்டீங்க. அது கொஞ்சம் சர்ப்ரைஸா இருக்கட்டும்” என்று கண் சிமிட்டினாள்.
அவளது விளையாட்டு புரிய, “காட்டு” என்றான்.
“வீட்டுக்கு போய் பார்க்கலாமே” என்று கூறியவள் அங்கிருந்து நடந்தாள்.
இருவரும் அதோடு வீடு வந்து சேர்ந்தனர்.
பைக்கை வாசலில் நிறுத்தியவன், “வீட்டுல யாரையும் காணோம் போல” என்று பார்த்தான்.
“பெரியப்பா வீட்டுல இருப்பாங்க. நான் அங்க போய் பார்க்குறேன். இதெல்லாம் உள்ள வச்சுட்டு வர்ரேன்” என்றவளை நிறுத்தியவன், “அவங்களுக்கு வாங்குனத கொண்டு போய் கொடு. நம்மலோடத கொடு. உள்ள வச்சுடுறேன்” என்று வாங்கிக் கொண்டான்.
“ஏய்.. என்ன வாங்கிருக்கேன்னு பார்க்க தான கேட்குறீங்க?”
ஒற்றை விரலை நீட்டிக் கேட்க, யது சிரித்தான்.
“நீ வந்து காட்டாம நான் பார்க்க மாட்டேன் போதுமா?” என்றவன் அவளது நெற்றியில் முட்ட, பதறி விலகினாள்.
“வாசல்ல நின்னுட்டு.. போங்க.. உள்ள வைங்க” என்று கூறி விட்டு, பைகளோடு ஸ்ரீனிவாசன் வீட்டை நோக்கி நடந்தாள்.
வாசலில் அதியன் நிற்க, “ஹாய்..” என்று சந்தோசமாக கூறினாள்.
“ஹாய்.. சாப்பிங் பலமோ?”
“அப்படி இல்ல.. ஒவ்வொருத்தருக்கும் ஒன்னு வாங்குனதுல இவ்வளவு வந்துடுச்சு”
“இங்க கொடுங்க. நான் தூக்கிக்கிறேன்”
பிகு பண்ணாமல் கொடுத்து விட, அவனும் உள்ளே சென்று வைத்தான்.
“வானு.. வந்துட்டியா..” என்று மலர் முன்னால் வர, “எங்கமா அவன்?” என்று வசந்தா விசாரித்தார்.
“ஃப்ரஸ் ஆக போயிருக்காங்க அத்த.. சாப்பிங்ல எல்லாருக்கும் வாங்குனது. பிரிச்சு பாருங்க” என்று கையிலிருந்ததை வைத்தாள்.
“சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்?” என்று மலர் மெல்லிய குரலில் மகளிடம் விசாரிக்க, “லன்ச் சாப்பிட்டோம். இப்ப டின்னர் வீட்டுல பார்த்துக்கலாம்னு கிளம்பிட்டோம்” என்று பதில் சொல்லி விட்டு நிமிர, அறை வாசலில் நின்று மகாலட்சுமி அவளை முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவளது பார்வையை கவனித்தவள், குழப்பத்தோடு திரும்பிக் கொண்டாள்.
வாங்கி வந்த பொருட்களை பற்றி பேச்சு நீண்டது.
“எல்லாருக்கும் பிடிச்சுருக்கா?”
“எல்லாம் இருக்கு. ஆனா மகா அதியனுக்கு எதுவும் இல்லயே?’ என்று சீதா நேரடியாக கேட்டு விட்டாள்.
“எனக்கு எதுவும் வேணாம்மா” என்று அதியன் புன்னகையுடன் மறுக்க, “அவங்களும் எங்கள போல கல்யாண ஜோடி அண்ணி. அதுனால நாளைக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சதும் கிஃப்ட் பண்ணிப்போம்” என்றாள் வனிஷா.
“இத நாங்க யோசிக்கல பாரேன்” என்ற செல்வகுமார், தங்கைக்கு என்ன வாங்கிக் கொடுப்பது என்று யோசித்தான்.
முதலில் சீரோடு செய்தது வேறு. அதுவும் திருமணத்தில் நடந்த குழப்பத்தில் எதுவும் தனியாக தெரியவில்லை. இப்போது வேறு எதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தான்.
தொடரும்.