Loading

 

இரவு, அறையில் அமர்ந்து நைட் க்ரீமை வனிஷா தடவிக் கொண்டிருக்க, யது அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

“அதான் நீளமா இருக்கே. தள்ளி உட்காரலாம்ல?” என்று வனிஷா வம்பிழுக்க, “எனக்கு இதான் பிடிச்சுருக்கு” என்று மேலும் உரசினான்.

“இத தடவிக்கிறேன் இருங்க” என்று அவள் க்ரீமை தடவி முடிக்க, அவளது கழுத்தை வளைத்து இழுத்தவன் கன்னத்தோடு கன்னம் உரசினான்.

வனிஷா கண்மூடிக் கொள்ள, “இத தடவுனா அழகாகிடலாமா?” என்று யது கேட்டு வைத்தான்.

அவனது கேள்வியில் பட்டென கண்ணைத்திறந்து அவனை தள்ளி விட்டவள், “ஆகலாம். வச்சுக்கோங்க” என்று டியூபை தூக்கி அவன் மடியில் போட்டாள்.

“சூடு ஜாஸ்தியா இருக்கே”

“ஆத்துங்க.. குறைஞ்சுடும்” என்று வெடுக்கென பதில் கொடுத்தாள்.

அவள் ஒன்றை நினைத்து கண்ணை மூடினால், அவன் ஒன்றை பேசி வைத்த கோபம். பேச்சில் அனல் பறந்தது.

“ஆத்திடலாமே.. அதுக்கு முன்னாடி கார்ல வச்சு ஒன்னு கொடுத்தியே.. அத கொடு” என்று கன்னத்தை காட்டினான்.

உடனே கோபம் மறைந்து விட, “அதெல்லாம் தர மாட்டேன்” என்று எழுந்து கொண்டாள்.

பிடித்து மடியில் அமர வைத்தவன், அவளது உதட்டை ஆராய்ந்தான். இதுவரை பூசி இருந்த எல்லாம் அழிக்கப்பட்டிருக்க, இயற்கை உதடுகள் அவனுக்கு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்றுக் கொண்டான்.

இதழ்கள் தீண்டித் தீண்டி களைத்துப் போக, அவளது கழுத்தில் முகத்தை புதைத்தான்.

“குளிச்சியா?” என்று கேட்டவன் வாசம் பிடிக்க, வனிஷாவிற்கு மேனி சிவந்தது.

“குளிச்சியா நிஷா?” என்று மீண்டும் கேட்க, “ம்ம்” என்றாள்.

“இந்த தாலியோட புது மஞ்சள் வாசமும்.. உன் சோப்பு வாசமும் மிக்ஸ் ஆகி எப்படி இருக்கு தெரியுமா?” என்று கேட்டவன், அடுத்து பேசிக் கொண்டே போனான்.

அவனது பேச்சை கேட்க முடியாமல், அவள் தான் திணறி விட்டாள்.

“அய்யோ.. இப்ப நான் கேட்டனா?” என்று அவனது வாயை அடைக்க, கையை எடுத்து உள்ளங்கையில் முத்தம் பதித்தான்.

“அத்த கிட்ட பால்கோவா என்னாச்சுனு சொல்ல போனப்போ இந்த வெட்கம் வரலயே. நான் பேசுனா மட்டும் என்ன வெட்கம்?”

“அது விளையாட்டுக்கு பண்ணேன். சொல்லவா செஞ்சேன்? நீங்க எல்லாத்தையும் பேசிட்டு இருக்கீங்க..”

வனிஷா சினுங்கி அவன் தோளில் முகத்தை புதைக்க, அவளை தூக்கிக் கொண்டு எழுந்தான்.

“நேத்து சேலையில வெயிட்டா இருந்த நிஷா. இப்போ வெயிட்டே தெரியல”

“அது பட்டுச்சேலை.”

“இன்னைக்கு ஏன் சேலை கட்டல?”

“ஆஃபிஸ் போனேன்ல.. அதான்”

அவளிடம் பேச்சுக் கொடுத்தவன் காரியத்தில் கண்ணாய் இருக்க, அவனுக்கு பதில் சொன்னவள் வெட்கத்தை துரத்த போராடிக் கொண்டிருந்தாள்.

“பால்கோவா வேணுமா?” என்று அவன் கண்ணடித்து கேட்டு வைக்க, பக்கென சிரித்தபடி அவனை அணைத்துக் கொண்டாள்.

_______

மகாலட்சுமி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். மூளைக்குள் எதெதோ ஓடிக் கொண்டிருந்தது. அவள் வாழ்க்கை அவளது கையை மீறி சென்று கொண்டிருந்தது.

யதுநந்தனை திருமணம் செய்ய ஆசைப்பட்டவள், இப்போது அதியனை மணம் செய்து விட்டாள். அதியனாவது அவளை விரும்பி ஏற்பானா என்றால் அதுவும் இல்லை.

மகாலட்சுமி திருமணத்தை முறிக்க நினைத்ததே இதனால் தான். அதியனின் மனதை உடைத்து விட்டாள் என்று அவளுக்கே தெரியும். அவனோடு எல்லாவற்றையும் மறந்து இயல்பான வாழ்வை வாழவே முடியாது.

முதன் முதலில், அதியனை மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் தான் சந்தித்தாள்.

அதீத இரத்தம் போய், புது இரத்தம் கிடைக்காமல் அல்லாடும் போது, தானாக சென்று தானம் செய்தாள். அன்று யாரென்றே தெரியாது. யாருக்கோ ரத்தம் தேவைப்படுகிறது என்று கொடுக்கப்போக, வினோத் தான் அவளைப்பற்றி விசாரித்து வைத்துக் கொண்டான்.

இரத்தம் கொடுத்து இரண்டு வாரங்கள் கழித்து அதியன் அவள் முன்னால் வந்து நின்றான். அவளுக்கு நன்றி சொல்ல.

அப்போது மட்டும் அதியன் அவளைத்தேடி வந்து நன்றி சொல்லவில்லை என்றால், இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கப்போவது இல்லை. இன்றைய நிலையும் வந்திருக்கப்போவது இல்லை.

_______

அடுத்த நாள் கடந்திருக்க, வீட்டில் அமர்ந்து இருந்தார் முத்துவேல். மிகப்பெரிய நிறுவனத்தின் சி.இ.ஓ. அவரை சந்திக்க முன் அனுமதி வாங்க பலர் காத்திருக்க, இங்கு மகனுக்காக வந்து அமர்ந்து இருந்தார்.

அதியன் வீட்டில் இல்லை. வேலை இருக்கிறது என்று சென்று விட்டான். முத்துவேல் மருமகளை பார்த்தார்.

“மகாலட்சுமி தானமா?” என்று கேட்க, தலையசைத்தவளுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை.

“உட்காருமா. ஃபார்மாலிட்டி எல்லாம் பார்க்கனும்னு இல்ல” என்ற அவர் புன்னகையுடன் கூற, அவளும் அமர்ந்து விட்டாள்.

“நீ டீச்சர் வேலை பார்க்குற இல்ல? ஸ்கூலுக்கு போகலயா?”

“லீவ் போட்டுருக்கேன்..”

அவளை கூர்ந்து பார்த்தவர், “இவ்வளவு நர்வஸ் ஆகத்தேவை இல்ல மகாலட்சுமி. எனக்கு எல்லாமே தெரியும் ரிலாக்ஸா இரு” என்றார்.

‘எல்லாம் தெரியும்னா?’ என்று குழப்பத்தோடு அவள் பார்க்க, “பாக்கியம் எதையும் என் கிட்ட சொல்லாம விட்டது இல்ல. முதல் முதல்ல நீ ரத்தம் கொடுத்து அதிய காப்பாத்துனதுல இருந்து இப்ப வரை எல்லாமே தெரியும்” என்றார்.

ஒரு நொடி அதிர்ந்தவள், உடனே பார்வையை தளைத்துக் கொண்டாள்.

பாக்கியம் தேநீரோடு வந்தார்.

“எடுத்துக்கங்க ஐயா” என்று ஒன்றை அவரிடம் கொடுத்து விட்டு, மற்றொன்றை மகாவிடம் நீட்ட, மறுத்து விட்டாள்.

“இந்தியா வந்தா தான் இந்த மாதிரி டீ குடிக்க முடியுது. அங்க எந்த நேரமும் காபி பின்னாடி தான் அலைய வேண்டி இருக்கு” என்ற முத்துவேல் ஆற அமர ரசித்துக் குடித்தார்.

“அதியனுக்கும் இங்க இருக்க சாப்பாடு எல்லாம் ரொம்ப பிடிச்சு போச்சு ஐயா. இத்தாலிய கட்டிட்டு அழுத பையன்.. இப்ப சாம்பாரும் ரசமும் தான் வேணும்னு கேட்டுட்டு இருக்கான்”

“பின்ன? பிறந்தது இங்கல. அந்த டேஸ்ட்க்கு அடிக்ட் ஆகாம இருக்க முடியுமா?”

பாக்கியத்திடம் சிரிப்போடு பேசியவர், மகாலட்சுமியை பார்த்தார். அவள் இன்னும் தலையை‌ நிமிர்த்தவில்லை. பாக்கியத்திடம் எதோ ஒரு பெட்டியை எடுத்து வரச்சொன்னார்.

பாக்கியம் எடுத்து வந்து நீட்ட, “மகாலட்சுமி கிட்ட கொடு” என்றார்.

“வாங்கி பாருமா” என்றதும் வாங்கி திறந்து பார்த்தாள்.

பொன்னால் செய்த தாலி. இதை எதிர் பார்க்காமல் நிமிர்ந்து பார்க்க, “உனக்கு தான். ரிஜிஸ்டர் பண்ணும் போது இத உனக்கு போட சொல்லலாம்னு வாங்கி வைக்க சொன்னேன்” என்றார்.

கழுத்தில் கிடக்கும் மஞ்சள் கயிறே அவளுக்கு பாரம் தான். மேலும் தங்கத்தில் வேறு போட வேண்டுமா?

ஒன்றும் சொல்லாமல் அதை மூடி வைத்தாள்.

“உங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். உங்க வாழ்க்கையில நான் நுழையவும் மாட்டேன். ஆனா இப்ப நீ எனக்கு மருமகள். நான் மாமனார். இந்திய வழக்கப்படி வீட்டுக்கு வந்த மருமகளுக்கு முறையான உரிமைய செய்யனும். உன் அத்த.. ஆனந்தி இருந்திருந்தா எல்லாம் செஞ்சுருப்பா. இப்ப எனக்கு எத வாங்கிக் கொடுக்கனு தெரியல. பாக்கியம் கூட மாப்பிள்ளை வீட்டுல தான் தாலி செஞ்சு போடுவாங்கனு சொன்னா. அதான் அதையே வாங்க சொல்லிட்டேன். பிடிச்சுருக்கா? இல்லனா மாத்திக்கலாம்”

அவர் அமைதியாய் கேட்க, அவளுக்குள் பூகம்பம் தான் வெடித்துக் கொண்டிருந்தது. மீள முடியாத பிணையில் மேலும் மேலும் விழுகிறாள் என்று மூளை எச்சரித்தது. ஆனால் அதை உதறி எழவும் வழி தெரியவில்லை.

“என்னமா?” என்று அவர் மீண்டும் கேட்க, “நல்லா இருக்கு” என்று மட்டும் சொன்னாள்.

“அப்போ சரி. பத்திரமா வச்சுரு பாக்கியம். கல்யாணத்தப்போ எடுத்துட்டு போகலாம்” என்று முடித்து விட்டார்.

மகாலட்சுமி அவஸ்தையாய் அமர்ந்திருக்க, “உனக்கு வேலை இருந்தா போ மகாலட்சுமி” என்றார்.

விட்டால் போதுமென அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

பாக்கியத்தை அழைத்தவர், “இங்க வந்ததுல இருந்து இப்படித்தான் இருக்காளா?” என்று விசாரித்தார்.

“இன்னைக்கு அமைதியா இருக்கு. ரெண்டு‌ நாளா அதி கூட சண்டை தான்.”

“அவன் என்ன செஞ்சான்?”

“அதிய பத்தி தான் நமக்கு தெரியுமே. பதிலுக்கு பதில் பேசிடுறான். இடையில பேச எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. நீங்க சொல்லி வைங்க ஐயா. கொஞ்சம் பொறுமையா பேசச்சொல்லி”

“சொல்லி பார்ப்போம். கேட்டா சரி” என்று முடித்து விட்டார்.

அறைக்குள் மகாலட்சுமிக்கு மூச்சு முட்டியது. இந்த வீட்டில் இருக்காமல் எங்காவது ஓடி விடத்தோன்றியது. ஆனால் போகத்தான் இடம் இல்லையே. பிரிந்து வந்தால் வீட்டிற்குள் விட மாட்டேன் என்று விட்டார் பரமேஸ்வரி‌.

மீறி சென்றாலும் அதியன் விவாகரத்து தந்தால் தானே? அவன் இந்த திருமணத்தை அவளைப் பழிவாங்க செய்திருக்கிறானே. இதில் பதிவு திருமணம் , பொன் தாலி, அமெரிக்கா பயணம் என்று அடுக்கிக் கொண்டே போகிறது.

இருக்கும் பாரமே மூச்சு முட்ட வைத்துக் கொண்டிருக்க, மேலும் மேலும் பாரத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறான். என்ன செய்து தப்பிப்பது என்று புரியாமல் அமர்ந்து விட்டாள்.

_________

வசந்தா ஹாலில் அமர்ந்து கொண்டு, யதுநந்தனின் அறையை எட்டிப் பார்த்தார்.

வனிஷாவின் பொருட்கள் எல்லாம் வந்திருக்க, அதை வைக்க இடமில்லாமல் புதிதாய் ஒரு அலமாரியை யது வாங்கி இருந்தான். பழையதை வேறு அறையில் மாற்றி விட்டு, புதியதை அறைக்குள் வைத்து பொறுத்திக் கொண்டிருந்தனர்.

வனிஷாவும் யதுநந்தனும் அங்கே நின்று வேலையை கவனித்துக் கொண்டிருந்தனர்.

வசந்தாவின் பார்வை வனிஷாவின் மீது படிந்து, புன்னகை வரவைத்தது.

எவ்வளவு அமைதியான பெண்ணாக வலம் வந்தாளோ, அதே அளவு இப்போது யதுவிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். இந்த பெண் எப்படி இத்தனை நாள் அமைதியாக இருந்தாள்? என்பதே அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

கோயிலில் வைத்து சத்தியபாமா கேட்டது அவருக்கு நினைவு வந்தது.

சாமி கும்பிட்டு விட்டு அமர்ந்திருக்கும் போது, “உன் கிட்ட இத கேட்கனும்னு இருந்தேன் வசந்தா… உனக்கு வானுவ யதுவுக்கு கட்டி வச்சதுல வருத்தமில்லயே?” என்று கேட்டார்.

“இதுல என்னமா வருத்தம்?”

“நீ மகாவ தான கட்டி வைக்க ஆசைப்பட்ட?”

“ஆசைப்பட்டேன் தான். ஆனா இன்னாருக்கு இன்னாருனு இருக்குல?”

“ஆமா ஆமா”

“ஆனா கொஞ்சம் பயந்தேன். அவங்க கல்யாணம் அவசரத்துல இக்கட்டுல நடந்துடுச்சு. எப்படி வாழப்போகுதுங்களோனு இருந்துச்சு. இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு”

“வானு நல்ல பொண்ணு வசந்தா. எல்லாரு கிட்ட இருந்து ஒதுங்கி போனாலும் நல்லவ தான். உனக்கு ஒன்னு தெரியுமா? நான் வானுவ யதுவுக்கு கட்டி வச்சா என்னனு பல தடவ யோசிச்சுருக்கேன்.”

இதைக்கேட்டு வசந்தா புன்னகைத்தார். இப்போது தான் அவருக்கும் விசயம் புரிந்தது. மகாலட்சுமி இல்லை என்றதும், ஏன் சத்தியபாமா வனிஷாவை உடனே மணப்பெண்ணாக்கினார்? என்ற கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது.

“என் கிட்ட சொல்லவே இல்லயேமா?”

“எங்க சொல்ல? கிருபாவுக்கு ஜாதகத்துல இருக்க பிரச்சனை எல்லாம் முடிஞ்சு அவளுக்கு கல்யாணம் ஆனதும் சொல்லலாம்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள நீ மகாலட்சுமி பக்கம் கைய காட்டிட்ட. வேற என்னனு சொல்லுறது? சரி நடக்குறது நடக்கட்டும்னு விட்டுட்டேன்”

“நீங்க மட்டும் தானா? இல்ல இது போல வேற யாராவது நினைச்சாங்களா?”

“உங்கப்பா கிட்ட கூட சொல்லிருக்கேன். அவரு தான்.. நடக்கும் போது தானா நடக்கும். சும்மா நீ எதுவும் சொல்லிட்டு இருக்காதனு அடக்கிட்டார்.”

“ஓஹ்.. அப்ப மலரு?”

“மலருக்கெல்லாம் தெரியாது. எனக்கு தான் ஆசை”

“மலர் கிட்ட கேட்டீங்களா? அவ ஒத்த மக கல்யாணம் இப்படி நடந்துடுச்சேனு வருத்தப்படலயே?”

“கேட்டேன். நேத்து நைட்டே கேட்டேன். எதுவும் வருத்தமானு. இல்லனுட்டா. அவ அப்பாவி. எதுவா இருந்தாலும் சரினு போயிடுவா. வானு கூட அவள பார்த்துட்டு கண்ண காட்டுனப்புறம் தான் சம்மதம் சொன்னா. அதுனால மலருக்கு பிரச்சனை இல்ல. எனக்கு உன்னை நினைச்சு தான் கவலை. நீ மகாவ புகழ்ந்து பேசிட்டே இருப்பியா. அதான் வானுவ உனக்கு பிடிக்காம போயிடுமோனு தோனுச்சு”

“மகாவ பிடிச்சுருந்துச்சு தான். ஆனா.. விடுங்க. அத பத்தி பேசி என்னாக போகுது?”

“சரி கிளம்புவோம். வீட்டுக்கு போகும் போது மகாவ பத்தி பரமேஸ்வரி சொன்னத சொல்லுறேன் வா” என்று அழைத்துச் சென்றார் சத்தியபாமா.

பரமேஸ்வரி மகளின் மூலம் அறிந்த விவரங்களை கணவனிடம் கூறி புலம்பிக் கொண்டிருக்க, சத்தியபாமா கேட்டு விட்டார். விவரம் அறிந்து அவருக்குமே வருத்தம் தான். அதையே மகளிடமும் சொல்லி புலம்பி விட்டார்.

எல்லோரும் நினைத்தது, மகாவை அவளது பாட்டியிடம் விட்டிருக்க கூடாது என்பது தான்.

அதை எல்லாம் கேட்ட பிறகு, வனிஷாவை பார்த்த வசந்தாவுக்கு மனநிறைவாக இருந்தது. முக்கியமாக அமைதியே உருவாய் இருந்த மகன், வனிஷாவுக்கு சளைக்காமல் வாய் பேசுவது பிடித்து இருந்தது. இந்த சந்தோசம் நிலைக்க கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
29
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்