Loading

 

மகாலட்சுமி கண்விழித்து திரும்பிப் படுக்க, மெத்தையில் அதியன் இல்லை. எழுந்து சென்றிருப்பான்‌ என்று புரிந்தது.

‘ப்ச்ச். எத்தனை நாள் இவன் கூட குப்பை கொட்டனுமோ?’ என்று சலிப்பாக நினைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

வீட்டில் எந்த சத்தமும் கேட்கவில்லை. அமைதியாக இருந்தது. மணியைப்பார்த்தாள். ஒன்பது மணி. நேற்று வெகுநேரம் உறங்காமல் விழித்திருந்ததன் விளைவு, காலையில் நன்றாக தூங்கி விட்டாள்.

எழுந்து குளித்து சேலையை கட்டிக் கொண்டு வெளியே வர, வீட்டின் வாசல் கதவு பூட்டி இருந்தது.

“எல்லாரும் வெளிய போயிட்டாங்களா?” என்று சந்தேகமாக வீட்டை சுற்றிப் பார்த்தாள்.

உணவுகள் அவளுக்கென வைக்கப்பட்டிருக்க, அதன் அருகே பாக்கியத்தின் கைபேசி எண் ஒரு காகிதத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

அவர் தான் எழுதி வைத்திருந்தார். எழுந்து எதாவது வேண்டும் என்றால் அழைக்கட்டும் என்று. மகாலட்சுமி அதைப்பார்த்து விட்டு, கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தாள்.

ஒரு வேலையும் இல்லை. வெளியே செல்லவும் விருப்பம் இல்லை. கைபேசியை எடுக்கப்பிடிக்கவில்லை.

அவளோடு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு பத்திரிக்கை வைத்திருந்தாள். அவர்கள் எல்லோருமே திருமணத்திற்கு வந்திருப்பார்கள். வந்தவர்களுக்கு மணப்பெண் மாறி விட்ட விசயம் தெரிந்திருக்கும்.

சொந்தபந்தங்கள் வேறு வாய்க்கு வந்ததை எல்லாம் கதை கட்டி விடக்கூடியவர்கள். இந்நேரம் பள்ளி முழுவதும் விசயம் விபரீதமாக பரவியிருக்கும். இனி அங்கு வேலை பார்க்க முடியுமா? முடியாது.

ஒருவாரம் விடுமுறை மிச்சமிருந்தது. அதன் பிறகு வேலையை விட்டு விடலாம் என்று தோன்றியது. ஆனால் வேறு இடத்தில் வேலை செய்ய வேண்டும். வீட்டில் இப்படி அமர்ந்திருப்பது அவளுக்கு பிடிக்கவும் இல்லை.

எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டே தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்து இருந்தாள்.

ஒரு மணிநேரம் கழித்து பாக்கியம் வந்தார். கையில் பையோடு. தேவையான பொருட்களை வாங்கச் சென்றிருந்தார்.

மகாவை பார்த்து விட்டு, “சாப்பிட்டியாமா?” என்று விசாரிக்க, தலையை மட்டும் அசைத்தவள் அவரை திரும்பியும் பார்க்கவில்லை.

மாலை வரை அதியன் வரவில்லை. வினோத் கல்லூரியிலிருந்து திரும்பியிருந்தான். மகாலட்சுமி அதியனை எதிர் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

_______

மாலை வீடு வந்து சேர்ந்த வனிஷா, உடையை மாற்றிக் கொண்டு யதுநந்தனை தேடினாள்.

“யது வெளிய போயிருக்கான்மா” என்று வசந்தா கூறவும், “ஓஹ்.. நான் அம்மாவ பார்த்துட்டு வர்ரேன் அத்த” என்று கூறி விட்டு ஓடிவிட்டாள்.

“ம்மா.. என்ன நீங்க மட்டும் இருக்கீங்க? பாட்டி எங்க?”

வீட்டுக்குள் நுழைந்ததும் கேள்வி எழுப்பினாள்.

“பாட்டி அக்கா கூட கோவிலுக்கு போயிருக்காங்க. எதோ வேண்டுதல் செய்யனுமாம்”

“வேண்டுதலா?”

“உன் கிட்ட கல்யாணத்துக்கு கேட்கும் போது நீ சரினு சொன்னா வேண்டுதல் செய்யுறதா வேண்டிக்கிட்டாங்க போல. என்னனு சொல்லல. செய்யும் போது தான் சொல்லுவாங்க.”

“இத பார்ரா… நான் சம்மதிச்சா கடவுளுக்கு செய்வாங்களா? நியாயமா எனக்கு தான செய்யனும்?”

“அதுவும் சரி தான். நியாயமா உனக்கு மொட்ட போடுறதா தான் வேண்டியிருக்கனும்”

“எதே? எனக்கு மொட்டையா? எம்மா..” என்று அலறினாள்.

“நீ தான வேண்டுதல் கேட்ட?”

“நான் எத கேட்டா நீங்க எத சொல்லுறீங்க?”

“அத விடு. இங்க ஏன் ஓடி வந்த? அங்க அண்ணிக்கு வேலையில ஹெல்ப் பண்ணலாம்ல?”

“அத்த டீவி தான் பார்த்துட்டு இருக்காங்க.”

“ஹூம்ம்… உனக்கு கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போனதும் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். விதிய பாரு! இதே வீட்டுல கல்யாணம் பண்ணி, இங்கயே தினமும் வர்ர மாதிரி ஆகிடுச்சு.” என்றவர் நீளமாய் ஒரு பெருமூச்சு விட்டார்.

“வீட்டுக்குள்ள பெரு மூச்சு விடுறீங்கனு பாட்டி கிட்ட சொல்லித் தர்ரேன். அண்ட் என் பாட்டி வீட்டுக்கு நான் வரத்தான் செய்வேன். நீங்க ரொம்ப சலிச்சுக்க வேணாம்” என்று முறைத்தவள், சிலுப்பிக் கொண்டு ஹாலுக்கு சென்று அமர்ந்தாள்.

பைக்கில் வந்து இறங்கிய யதுநந்தன் தன் வீட்டு வாசலை பார்த்தான். வனிஷாவின் செருப்பு இல்லை. உடனே திரும்பி பாட்டி வீட்டை பார்த்தான். அங்கு செருப்பு கிடக்க, புன்னகையுடன் சாவியை எடுத்துக் கொண்டு அவளைத்தேடிச் சென்றான்.

“ஹாய் நிஷா..” என்று அவளை இடித்துக் கொண்டு அமர, முகத்தில் புன்னகை மலர திரும்பிப் பார்த்தாள்.

“எங்க போயிருந்தீங்க?”

“குடோன்க்கு” என்றவன், அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த திராட்சையில் ஒன்றை எடுத்து வாயில் போட்டான்.

“வா யது” என்று மலர் வரவேற்க, “பாட்டி தாத்தா எங்க அத்த?” என்று கேட்டான்.

“பாட்டி அக்கா கூட கோவிலுக்கு போயிருக்காங்க. தாத்தா வாக்கிங் போயிட்டு ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டு வருவாரு”

“ஓகே அத்த”

“காபி போடவா?”

“இவருக்கு டீ தான் பிடிக்கும்மா. எனக்கு காபி” என்று வனிஷா முந்திக் கொண்டு பதில் சொல்ல, யதுநந்தன் அவளை பார்த்து சிரிப்பை அடக்கினான்.

“நீயே போட்டுக்கிறது” என்று மலர் முறைக்க, “ப்ளீஸ்மா..” என்று தன் பற்கள் மொத்தமும் காட்டி கெஞ்சினாள்.

மகளை முறைத்து விட்டு காபி டீ இரண்டையும் போட்டு வந்து கொடுத்து விட்டு, எதையோ தேட ஆரம்பித்து விட்டார் மலர்.

அதை கவனித்த வனிஷா, “என்னம்மா தேடுறீங்க?” என்று திராட்சை பழத்தை ஒவ்வொன்றாக வாயில் போட்டபடி, தொலைகாட்சியை ஒரு பார்வையும் தாயை ஒரு பார்வையும் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“நேத்து ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வச்சேன். இப்ப தேடுனா எங்க இருக்குனே தெரியல?” என்று மலர்விழி தேடிக் கொண்டே பேச, அவளுக்கு உள்ளே போன திராட்சை விக்கிக் கொண்டது.

‘அய்யய்யோ..’ என்று மனதிற்குள் அலறியபடி அருகே இருந்தவனை திரும்பிப் பார்க்க, அவன் ஒரு மார்கமான பார்வையை அவளிடம் பதித்து இருந்தான்.

அவளது பதட்டத்தை கூர்ந்து கவனித்தவனுக்கு, விசயம் புரிந்து விட்டது. நேற்று இரவு கொடுத்த பால்கோவா பெட்டியை தான் மலர்விழி தேடுகிறார் என்று.

‘சொல்லிடாத’ என்று அவள் தலையை வேகமாக அசைக்க, இதழோரத்தை பல்லிடுக்கில் கடித்து சிரிப்பை அடக்கினான்.

“ஃப்ரிட்ஜ்ல வச்ச மாதிரி தான் ஞாபகம் இருக்கு. வேற எங்கயும் வச்சுட்டனானு தெரியல.” என்று அறைக்குள் சென்று தேடினார்.

இனிப்பை மகள் மருமகனுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தான் அவர் தேடியது. ஆனால் அது எப்போதோ சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டதே.

சில நொடிகள் மனைவியின் கெஞ்சலை ரசித்த யது, மலர்விழி தேடுவதை பார்த்து விட்டு வாயைத்திறந்தான்.

“அத்த.. அது பால்கோவா பாக்ஸா?” என்று கேட்டதும் மலர் வேகமாக திரும்பி பார்த்தார்.

‘மாட்டுனேன்’ என்று நொந்து கொண்ட வனிஷாவிற்கு, தாயை திரும்பிப் பார்க்க தைரியம் இல்லை.

“நேத்து எங்க ரூம்ல பார்த்தேன் அத்த” என்று மட்டும் கூறி விட்டு, அவனும் வனிஷாவை பார்த்தான்.

மகளின் திருட்டு முழியை கண்டு மலர்விழி முறைத்து வைத்தார்.

‘உக்கிரமா பார்க்குறாங்களே.. பாட்டி வேற இல்ல. சமாளிப்போம்’ என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.

“ஹி ஹி… ம்மா.. அது பால்கோவா கெட்டு போயிடக் கூடாதுனு பாட்டி தான்மா கொடுத்தாங்க”

முப்பத்திரண்டு பல்லையும் காட்டிக் கொண்டு அவள் பேச, “வரட்டும் உன் பாட்டி பேசிக்கிறேன்” என்று அவளை முறைத்து விட்டு சென்று விட்டார் மலர்.

கையிலிருந்த பாத்திரத்தை டொம்மென டீபாவில் வைத்து விட்டு, கணவனை முறைத்தாள் அவள்.

“இப்ப எதுக்கு போட்டுக் கொடுத்தீங்க?”

“சொல்லலனா தேடிட்டே இருப்பாங்க. பாவம்”

“இப்ப என்னை வச்சு செய்ய போறாங்க. பாட்டி அம்மாவுக்கு தெரியாம கொடுத்தாங்க”

“சொந்த வீட்டுல திருடுறது தப்புடா” என்று அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு பேச, முறைத்து முகத்தை தூக்கிக் கொண்டாள்.

சில நொடிகளில் வனிஷாவின் முகத்தில் கள்ள சிரிப்பு வர, அவன் காதோரம் குனிந்தாள்.

“பால்கோவா பாக்ஸ் நம்ம ரூம்ல இருந்துச்சுனு சொன்னீங்களே.. அத யாரு முழுசா சாப்பிட்டதுனு சொல்லவே இல்லயே?” என்று கேட்டு வைக்க, இப்போது அவனுக்கு விக்கிக் கொண்டது.

“அடிப்பாவி” என்று சத்தமில்லாமல் பதறியவன், அவசரமாக பார்வையை நாலா பக்கமும் அலசினான்.

மலர்விழி கேட்டு விடுவாரோ என்று பயந்து விட்டான்.

யாருமே இல்லை என்றதும், “எங்க உட்கார்ந்துட்டு என்னடி பேசுற?” என்று கேட்டான்.

“இல்ல.. அம்மா பாக்ஸ தான் தேடுனாங்க. பால்கோவா என்ன ஆச்சுனு சொல்லனும்ல? இருங்க. அம்மா கிட்ட சொல்லிட்டு…” என்றவள் உடனே திரும்பி அழைக்கப்போக, அவள் வாயைப்பொத்தி தன் பக்கம் இழுத்தவன், “ஏய்.. லூசா நீ?” என்று பதறி விட்டான்.

அவனது பதட்டத்தில் சிரித்து விட்டு கையை விலக்கியவள், “ஏன் சொல்ல வேணாமா? அம்மாவும் தெரிஞ்சுக்கட்டும். என்னையா மாட்டி விடுறீங்க.. நீங்க அம்மா முகத்த நிமிர்ந்து பார்க்க கூட முடியாத அளவுக்கு பண்ணிடுவேன். பீ கேர்லஸ் மேன்” என்று பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசினாள்.

“தெரியாம சொல்லிட்டேன். உனக்கு ரெண்டு பாக்ஸ் பால்கோவா வாங்கி தர்ரேன் போதுமா? வாய மட்டும் மூடிட்டு இரு”

“எதுக்கு? அதையும்…” என்றவளின் வாயை வேகமாக அடைத்தவன், “வாய் வாய்.. அங்க வா உன்னை பேசிக்கிறேன்” என்று வெட்கத்தை மறைத்து மிரட்டினான்.

“அங்க வந்தாலும் நான் வாய் பேசத்தான் செய்வேன்”

“வந்து பேசிப்பாரு.. அப்புறம் தெரியும்” என்று யதுநந்தன் கண்ணடித்தான்.

அவன் அர்த்தம் விளங்கினாலும், “என்ன தெரியும்?” என்று வேண்டுமென்றே கேட்டாள்.

“சென்சாராகிடுச்சுனா பரவாயில்லனு சொல்லு. சொல்லுறேன். சொல்லட்டுமா?”

“இல்ல வேணாம். நான் கேட்கல” என்று உடனே பின்வாங்கி விட்டாள்.

யது சிரித்துக் கொண்டே அவளை தோளோடு அணைத்துக் கொள்ள, அவன் தோளில் சாய்ந்து பார்வையை தொலைகாட்சியில் பதித்தாள். அவள் முகம் வெட்கத்தில் மின்னிக் கொண்டிருக்க, யது அவளை ரசித்தான்.

கதவோரம் சத்தம் கேட்க, உடனே யதுவிடமிருந்து விலகி எட்டிப் பார்த்தாள்.

“பாட்டி வந்துட்டாங்க.. ம்மா.. பாட்டி வந்தாச்சு” என்று உள்ளே திரும்பி குரல் கொடுத்தபடி எழுந்து வெளியே சென்றாள்.

______

இதே நேரம் மகாலட்சுமி அதியனின் முன்னால் சென்று நின்றாள்.

அவன் நிமிர்ந்து பார்க்காமல் போக, “உங்க கிட்ட பேசனும்” என்றாள்.

‘பல நாளுக்கு பிறகு பேச்சுல மரியாதை தெரியுதே’ என்ற யோசனையோடு நிமிர்ந்து பார்த்தான்.

“உங்க கிட்ட ஒன்னு கேட்டனும்”

‘மறுபடியுமா?’ என்று சலித்தாலும் பார்வையை மாற்றவில்லை.

“எதுக்கு என்னை கல்யாணம் பண்ணீங்க?”

அமைதியாய் மகாலட்சுமி கேட்க, அதியன், “ஏன்?” என்று புருவம் உயர்த்தினான்.

“உங்களுக்கு என்னை பிடிக்காதுனு தெரியும். அப்புறமும் ஏன் என்னை கல்யாணம் பண்ணீங்க?”

“நீ ஏன் கல்யாணம் பண்ண?”

“நான் தான முதல்ல கேட்டேன்?”

“பரவாயில்ல.. டீச்சர்னா கேள்வி தான் கேட்கனும்னு இல்ல. பதிலும் சொல்லலாம். சொல்லு”

கோபம் வந்தாலும் பல்லைக்கடித்து அடக்கிக் கொண்டவள், “என் அம்மா மிரட்டுனாங்க. கல்யாணத்துக்கு சம்மதிக்கனும்னு. அதுனால அமைதியா இருந்துட்டேன்.” என்று பதில் கொடுத்தாள்.

“எப்பவும் அடுத்தவங்க பேச்ச கேட்டு ஆடியே நீ உருப்புடாம போற”

“இப்ப அது தேவை இல்ல. நீங்க ஏன் சம்மதிச்சீங்க?”

“நான் எங்க சம்மதிச்சேன்? அங்க யதுநந்தன் தான்…”

ஆரம்பித்து நிறுத்தியவன் எழுந்து நின்றான்.

“யதுநந்தன் சொன்னாங்கனு கல்யாணம் பண்ணீங்களா?”

“இல்ல.. ஆனா..”

“ஆனா..?”

“ப்ச்.. உன்னை கல்யாணம் பண்ண எனக்கு ஆசை இல்ல. உன்னை கூட்டிட்டு ஓடலனு சொல்லத்தான் வந்தேன். ஆனா உன் மொத்த குடும்பமும், என்னவோ நாம உயிருக்கு உயிரா லவ் பண்ணதா நினைச்சுட்டாங்க. முடியாதுனு சொல்லிட்டு கிளம்பும் போது தான், ஒன்னு தோனுச்சு. என்னை கல்யாணம் பண்ணிக்கிறது முட்டாள் தனம்னு பேசுனவளே அமைதியா இருக்கா. அப்ப அந்த தைரியத்த நானும் பார்க்கனும்ல? நீ கம்முனு ரெடியாகும் போது, நான் ஏன்‌ பயந்து ஓடனும்? இப்பவும் சொல்லுறேன். உன் மேல ஆசையோ காதலோ எதுவும் என் கிட்ட இல்ல. உன் கூட நான் வாழப்போறதும் இல்ல. அதுக்காக டைவர்ஸ் கேட்டா கொடுக்கவும் மாட்டேன். என்னை ஏமாத்த நினைச்சல. அனுபவி. என் பொண்டாட்டியா வாழவும் முடியாம பிரியவும் முடியாம அனுபவி. என்னைக்கு உன் தண்டனை போதும்னு எனக்கு தோனுதோ அன்னைக்கு டைவர்ஸ் தர்ரேன். கிளம்பி போ”

அமர்ந்த குரலில் அழுத்தமாக பேசியவனை, அதிர்ச்சியோடு இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி.

“அண்ட்.. என் அப்பா அங்க இருந்து கிளம்பிட்டாரு. இங்க வர ஒரு நாள் ஆகும். வந்ததும் நமக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் இருக்கு. உன்னை அமெரிக்கா கூட்டிட்டுப்போகனும். அதுக்கு இந்த கல்யாணத்த ரிஜிஸ்டர் பண்ணி ஆகனும். அவர் முன்னாடி தான் ரிஜிஸ்டரேஷன் நடக்கும்”

சொல்லி முடித்து விட்டு அதியன் மடிக்கணினியை திறந்து பார்க்க ஆரம்பித்து விட, மகாலட்சுமி அசையாமல் நின்று விட்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
26
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்