காலையில் வழக்கமான அலாரம் அடிக்க, வனிஷாவிற்கு கண்ணைத்திறக்க முடியவில்லை. ஆனால் வேலை இருக்கிறதே. யதுவின் அணைப்பிலிருந்து விலகி, அலாரத்தை அணைத்தை போட்டாள்.
அவளது அசைவில் யதுவும் விழித்து விட்டான்.
“தூங்கல?”
“ஆஃபிஸ் போகனும்” என்று எழுந்தவளை பிடித்து இழுத்து அணைத்தவன், “எட்டு மணிக்கு தான போவ?” என்று விசாரித்தான்.
வனிஷா தலையாட்டி வைக்க, “அப்போ நிறைய நேரம் இருக்கு” என்றான்.
“எதுக்கு?”
அவளது கேள்விக்கு பதில் கிடைக்க, “இல்ல எனக்கு லேட் ஆகிடும்” என்று பதறி தடுக்கப் பார்த்து தோற்றுப்போனாள்.
மீண்டும் யதுநந்தன் கண் விழிக்கும் போது, வனிஷா தலையை டிரயரில் காய வைத்துக் கொண்டிருந்தாள். அந்த சத்தத்தில் முழித்தவன், “கிளம்பியாச்சா? குட் மார்னிங்” என்றான்.
“குட் மார்னிங்.” என்றவள் அவன் முகத்தை பார்க்காமல் தலையை வார ஆரம்பித்தாள்.
யது எழுந்து குளித்து தயாராகி வர, வனிஷாவும் தயாராகி இருந்தாள்.
அவளது டிரஸ்ஸிங் டேபிளில் அமர்ந்து இருந்தாள். நேற்று உடைகளோடு இதுவும் இடம் பெயர்ந்திருந்தது.
“எல்லாம் ஓவரா?”
“எஸ் ரெடி. சாப்பிட்டு கிளம்புனா சரியா இருக்கும். கேப் மட்டும் தான் புக் பண்ணனும்” என்றவள் கேப் கிடைத்ததா என்று கைபேசியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள்.
அவள் அமர்ந்திருந்த நீளமான குஷனில் யதுநந்தனும் அமர்ந்து கொண்டு, “உன் லிப்ஸ்டிக் கொஞ்சம் ஓவரா இருக்கே” என்றான்.
“அப்படியா தெரியுது?” என்று கண்ணாடியை பார்த்தாள்.
“ஆமா. குறைச்சுக்கோ”
அவன் சொன்ன பிறகு அவளுக்கே அதிகமாய் தெரிய, குறைக்க முயற்சித்தாள். அதுவும் பிடிக்காமல் போக மொத்தமாய் அழித்து விட்டாள்.
“புதுசா போட்டுக்கலாம்” என்று லிப்ஸ்டிக்கை எடுக்க, அவளது முகத்தை திருப்பி இதழை சிறை செய்தான் யதுநந்தன்.
அடுத்த நொடி அத்தனையும் மறந்து போக, வனிஷா அவனோடு கரைந்தாள்.
அவளது இதழுக்கு விடுதலை கொடுத்தவன், “இனி லிப்ஸ்டிக் போட்டுக்கோ” என்றான்.
சட்டென விசயம் புரிந்து விட, “உங்கள..” என்று கையை ஓங்கினாள்.
“என்னை?”
“போங்க.. டைம் ஆச்சு. உங்க கூட பேசுனா இன்னும் லேட் ஆகிடும்”
“கேப் கேன்சல் பண்ணு. நான் ட்ராப் பண்ணுறேன்”
ஆச்சரியத்தில் விழிவிரிய பார்த்தாள் வனிஷா.
“தினமும் எல்லாம் பண்ணுவேன்னு எதிர் பார்க்காத. இன்னைக்கு என்னால லேட் இல்லயா.. சோ ட்ராப் பண்ணுறேன்”
“தெரிஞ்சா சரி. இனிமே இப்படி லேட் ஆக்காதீங்க”
“ஆக்குனா?” என்று குறும்புச் சிரிப்போடு யது கேட்க, வனிஷாவிடம் பதில் இல்லை.
“எனக்கு லேட் ஆகுது. ஆஃபிஸ் விட்டு வந்து பார்த்துக்கிறேன்” என்றவள் உதட்டுச்சாயத்தை அப்படியே போட்டு விட்டு, லிப் க்ளாஸ் மட்டும் அப்பிக் கொண்டு எழுந்து விட்டாள்.
“இன்னைக்கு ஆஃபிஸ் போயே ஆகனுமா?”
“மீட்டிங் இருக்கு. அதுவும் முக்கியமான மீட்டிங். ஸ்கிப் பண்ண முடியாது”
“கல்யாணம் ஆன விசயம் உன் ஆஃபிஸ்ல தெரியுமா?”
“இல்ல. சொல்லல” என்றவள் வெளியே வர, அவளோடு யதுவும் வந்தான்.
“நான் எட்டு மணி வரை தூங்குறேன்னு ஒருத்தன் திட்டிட்டே இருப்பான். அவன பார்த்தீங்களா மா?” என்று கிருபா கிண்டலாக கேட்க, “இப்பவும் எட்டு மணிக்கு நாங்க கிளம்பிட்டோம். நீ தான் இன்னும் காபி கப்போட உட்கார்ந்துருக்க. மாமா வந்து கூப்பிட்டு போற வரை இப்படியே தான உட்கார்ந்துருப்ப?” என்று யது பதிலுக்கு பேசினான்.
“அவள விடு. அவளுக்கு அவ மாமியாரு தான் சரி. இங்க இருக்க வரை சோம்பேறி தான். நீயும் வந்து உட்காரு சாப்பிடுவ” என்று வசந்தா இடையில் வந்து பஞ்சாயத்தை தீர்த்தார்.
வனிஷா ஏற்கனவே அமர்ந்து அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“இன்னைக்கு வேலைக்கு போகனுமாமா?”
“நேத்தே சொன்னேன்ல அத்த. முக்கியமான வேலை. மிஸ் பண்ண முடியாது.”
“சரி சரி. பொறுமையா சாப்பிடு விக்கிக்க போகுது” என்றவர் மகனை பார்த்தார்.
“இவள ட்ராப் பண்ணிட்டு வந்து சாப்பிடுறேன் மா” என்று விட, வசந்தா நகர்ந்து விட்டார்.
“பொறுமை பொறுமை. நான் தான் விடுறேன்னு சொல்லுறேன்ல?”
“ட்ராஃபிக் பத்தி தெரியாம பேசுறீங்க.”
“கல்யாணம் முடிஞ்ச விசயத்த முதல்ல உன் ஆஃபிஸ்ல சொல்லு”
“அங்க எனக்கு யாரும் க்ளோஸ் இல்ல. தெரியலனாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல”
“நான் அதுக்கு சொல்லல. ஒழுங்கா விசயத்த சொல்லி ஒரு வாரம் லீவ் போடுற. புரியுதா?”
“எதுக்கு?”
“சொல்லிடுவேன். சென்சார் போர்ட் மாட்டனும். பரவாயில்லயா?”
படக்கென கையில் இருந்ததை அவன் வாயில் திணித்து விட்டு, தண்ணீரை குடித்தவாறு எழுந்து ஓடிவிட்டாள்.
இருவரும் வசந்தாவை அழைத்து சொல்லி விட்டுக்கிளம்ப, “நில்லு நில்லு” என்றவர் கார் சாவியை எடுத்துக் கொடுத்தார்.
“பைக் வேணாம். கார்ல கூட்டிட்டுப்போ”
“ஏன்மா?”
“சொன்னா செய். லேட் ஆகுது பாரு” என்று அதட்ட சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.
வசந்தாவிற்கு மனம் திருப்தியாக இருந்தது. மகாலட்சுமியுடன் திருமணம் பேசி, வனிஷாவை மணம் முடித்து வைத்து விட்டதில் மகன் என்ன செய்வானோ? என்று பெரிய கவலை மனதில் இருந்தது.
அதுவும் வனிஷா யாரிடமும் ஒட்டாத ரகம். அவளோடு இவனது வாழ்வு சிறக்குமா? என்ற சந்தேகம் வசந்தாவுக்கும் வெற்றிவேலுக்கும் தான் நிறைய இருந்தது.
ஆனால் அதிசயத்தக்க விதமாக, வனிஷா இயல்பாய் இணைந்து கொண்டாள். தன்னிடம் ஒரு வார்த்தை அதிகம் பேசாதவள், திருமணத்திற்கு பிறகு அவரிடம் உரிமையாய் பேசுகிறாள். இயல்பாய் நடக்கிறாள்.
யதுந்நனின் முகமும் பளிச்சென்று மின்னுகிறது. இருவரின் நெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இப்போது வேலைக்குச் செல்லும் போது, அவள் அணிந்திருந்த குர்தா லெக்-இன்ஸ் அவருக்கு சற்று நெருடலை கொடுத்தாலும், யதுநந்தனும் அவளை ரசித்துக் கொண்டிருப்பது வசந்தாவுக்கு இதமாய் இருந்தது.
வனிஷாவின் விருப்பங்களுக்கு யதுநந்தன் தடைசொல்லப்போவது இல்லை. அவனைப்போலவே தானும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்து விட்டார்.
அதே போல் வனிஷா பொறுப்பற்றவளும் அல்ல. அவளே தன் நிலையை சரியாக விளக்கிய பிறகு, குறை காண்பது தவறல்லவா?
இப்போது வேலைக்கு கிளம்பும் போதும் மகனை அனுப்பி வைக்கத்தான் நினைத்து இருந்தார். ஆனால் அவர் பேசும் முன்பே, மகன் அவளை விட்டு வர கிளம்பி விட்டான். இந்த புரிதல் அவர்களை நன்றாக வாழவைக்கும் என்று நினைத்த போதே மனம் நிறைந்து விட்டது.
காரில் சென்று கொண்டிருந்தனர் வனிஷாவும் யதுநந்தனும். அந்த காரை வாங்கியது என்னவோ வெற்றிவேல் தான். ஆனால் வீட்டு உபயோகத்திற்கு வைத்திருந்தனர்.
யதுநந்தன் எப்போதும் பைக்கில் சுற்ற, செல்வகுமாரும் பைக்கை மட்டுமே வாங்கி நிறுத்தியிருந்தான்.
வீட்டினர் குடும்பமாய் வெளியே செல்லும் போது மட்டும் காரை எடுத்துக் கொண்டு செல்வார்கள். அதிகம் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் தான் உபயோகமாகும். இன்று இவர்கள் எடுத்து வந்திருந்தனர்.
காரில் ஏறிய சில நிமிடங்களில் வனிஷாவின் கைபேசி இசைக்க, அதைக்காதில் வைத்தவள் பேசிக் கொண்டே வந்தாள். அடுத்தடுத்த அழைப்புகள் வர, அவளும் பேசிக் கொண்டே இருந்தாள். அவள் பேசுவதை வைத்து யதுநந்தனுக்கும் புரிந்தத. வேலையைப்பற்றிப்பேசுகிறாள் என்று. அதனால் தொந்தரவு செய்யாமல் காரை மட்டும் ஓட்டி நிறுவனத்தில் வந்து நிறுத்தினான்.
பேசிக் கொண்டிருந்தவளின் தோளை தட்ட, திரும்பிப் பார்த்தாள்.
“நான் ஆஃபிஸ் வந்துட்டேன். உள்ள போயிட்டு செக் பண்ணிட்டு கால் பண்ணுறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
யதுநந்தனை பார்த்து புன்னகைத்தவள், “தேங்க்ஸ” என்றாள்.
“மறக்காம ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் கொடுத்துடுங்க மேடம்” என்று யது சிரிக்க, வனிஷாவுக்கும் சிரிப்பு வந்தது.
சுற்றியும் பார்த்தாள். பரபரப்பான சாலையில் கார் ஓரமாகத்தான் நின்று இருந்தது.
சீட் பெல்டை கழட்டியவள், யதுவின் கழுத்தை பிடித்து வளைத்து அவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தாள்.
ஆச்சரியத்தில் யதுநந்தன் உறைந்து போக, “கொடுத்தாச்சு. போதும் தான?” என்று கேட்டவள் உடனே இறங்கி விட்டாள்.
யதுநந்தன் கன்னத்தை தொட்டுப்பார்த்து சிரிக்க, வனிஷா கையாட்டி விட்டு திரும்பி நடந்தாள். அவள் உள்ளே செல்லும் வரை பார்த்திருந்து விட்டுக் கிளம்பி விட்டான்.
அலுவலக வேலை எல்லாம் முடிந்து போக, ஓய்ந்து போய் இருக்கையில் அமர்ந்தாள் வனிஷா.
வேலைகள் மிச்சமிருந்தது. ஆனால் தூக்கமும் வந்தது. இரவு தூங்காததன் விளைவு.
காரணத்தை யோசித்தவளுக்கு வெட்கம் வந்தது.
‘அய்யோ லூசு மாதிரி தனியா வெட்கப்பட வச்சுட்டாங்களே’ என்று உள்ளே புலம்பி விட்டு, கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
கண்ணாடி சன்னல் ஓரம் சென்று நின்று யதுநந்தனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள். என்றோ குடும்பத்தில் எல்லோருடைய எண்ணனும் வேண்டும் என்று சேமித்தது. இன்று தான் முதன் முறையாக தொடர்பு கொள்ள தோன்றியது.
பதிலுக்காக அவள் காத்து நின்ற நேரம், “வனிஷா மேடம்” என்று அழைத்தாள் ஒருத்தி.
அவளருகே விஷ்வாவும் நின்றிருந்தான்.
“என்ன?”
அவள் விஷ்வாவை இடிக்க, “எனக்கு பர்த்டே மேடம். அதான் சாக்லேட்..” என்று நீட்டியவனுக்கு, சிறுபிள்ளை தனமாக இருந்தது.
ஆனால் இன்று பிறந்தாள். வனிஷாவிடம் பேசிய ஆக வேண்டும் என்று தோன்ற, தோழியின் ஐடியாவில் வந்து விட்டான்.
“ஓஹ்.. ஹாப்பி பர்த்டே” என்று சாக்லேட்டை எடுத்துக் கொண்டு வனிஷா கை நீட்ட, விஷ்வாவிற்கு வானில் பறக்கும் உணர்வை.
உடனே கையைப்பிடித்துக் குலுக்கினான்.
“தேங்க்யூ மேடம்” என்றவனுக்கு கையை விட மனமில்லை. ஆனால் விட்டுத்தானே ஆக வேண்டும் என்று விட்டு விட்டான்.
“இன்னைக்கு ஈவ்னிங் நம்ம டீம்க்கு பார்ட்டி அரேன்ஜ் பண்ணிருக்கேன். நீங்களும் வரனும்”
“நோ.. சாரி.. எனக்கு வொர்க் இருக்கு”
எந்த உணர்வும் இல்லாமல் சட்டென வனிஷா மறுக்க, விஷ்வா இதை எதிர்பார்த்து இருந்தான்.
“ப்ளீஸ் மேடம் ஒரு நாள் தானே?”
“ஆமா மேடம். எங்க கூட எல்லாம் மிங்கிள் ஆகவே மாட்டேங்குறீங்க. ஒரு நாள் வரலாம்ல?”
இருவரும் கேட்க மற்றவர்களும் வந்து விட்டனர்.
“எங்க கூட எல்லாம் பழக மாட்டீங்களா மேடம்? ஜஸ்ட் பர்த்டே பார்டி தான? அதுவும் காஃபி சாப்ல பீட்சா ஹட்ல தான் பார்ட்டி. வரலாம்ல?” என்று மற்றவர்களும் கேட்க, வனிஷா அசையவில்லை.
“எனக்கு வேலை இருக்கு.” என்று அவள் அழுத்திக் கூற, அந்நேரம் யதுநந்தன் அழைத்து விட்டான்.
“எக்ஸ்கியூஸ்மீ” என்றவள், அங்கிருந்து நகர்ந்து படிகளின் அருகே நின்று கைபேசியை எடுத்துக் காதில் வைத்தாள்.
உணர்வில்லாத அவள் முகத்தில், இப்போது ஆயிரம் உணர்வுகள் வர ஆரம்பித்தது. சிரிப்போடு யதுநந்தனிடம் பேசிக் கொண்டிருக்க, அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு வந்தாள் விஜயா.
வனிஷா வேலைக்கு சேர்ந்த போது விஜயாவும் சேர்ந்திருந்தாள். அதனால் வனிஷாவிற்கு அவளை நன்றாக தெரியும். அவளிடமும் வனிஷா அதிகம் பேச மாட்டாள் என்றாலும், வனிஷாவிடம் சகஜமாக பேசும் ஒரே ஆள் இப்போது விஜயா மட்டுமே.
“என்ன முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுது. யாரு லவ்வரா? பாய் ஃப்ரண்டா?” என்று விஜயா உதட்டசைவில் கேள்வி எழுப்ப, மறுப்பாக தலையசைத்தவள், “ஓகே பை” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
“யாரு? யாரு? லவ்வரா? எவ்வளவு நாளா நடக்குது?”
“லவ்வர் எல்லாம் இல்ல மேடம். ஹஸ்பண்ட்”
“வாட்?” என்று அதிர்ந்த விஜயா, அப்போது தான் வனிஷாவின் கழுத்தை உற்றுப்பார்த்தாள்.
கழுத்து வரை இருந்த குர்தியும் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையும், தாலியை கிட்டத்தட்ட மறைத்து இருந்தது.
வனிஷாவின் அலங்காரத்தில் நெற்றியில் இருந்த குங்குமம் கூட,
உற்றுப்பார்த்தபிறகே கண்ணுக்கு தெரிந்தது.
“அடிப்பாவி..! கல்யாணம் ஆகிடுச்சா? சொல்லவே இல்ல. எப்போ ஆச்சு?”
“இப்ப தான். ரெண்டு நாள் ஆகுது”
“திருட்டுக் கல்யாணமா?”
வனிஷா இதைக்கேட்டு முறைக்க, “யாருக்கும் சொல்லாம பண்ணிருக்கியே.. அதான் கேட்டேன்” என்றாள்.
“குடும்பத்து முன்னாடி மண்டபத்துல தான் நடந்தது”
“அப்புறம் ஏன் என்னை கூப்பிடல? சோறு பத்தாதுனு கூப்பிடலயா? ஆனா இப்ப விட மாட்டேன். ஒழுங்கா ட்ரீட் வை”
“ட்ரீட்டா? ஆமா யார் நீங்க?” என்று கேட்டவள் அங்கிருந்து நகர, “அடியேய்.. யாருனு கேட்குற?” என்று முறைத்தாள் விஜயா.
வனிஷா அங்கிருந்து சென்று, தன் குழுவினரை பார்த்தாள். அவர்களோ எப்படியாவது இன்று விஷ்வாவின் பிறந்தநாள் விழாவிற்கு வனிஷாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று பேசி திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
“வேலை இல்லயா? போய் பாருங்க”
“மேடம்.. பார்ட்டி..”
“ஏற்கனவே சொல்லிட்டேன். இன்னும் என்ன?”
“நீங்களும் வந்தா நல்லா இருக்கும் மேடம். ஒரு பார்ட்டிக்கு கூட வாரக்கூடாதா?”
“யாரு வைக்கிறா பார்ட்டி? நீயா?” என்று கேட்டுக் கொண்டு விஜயா வந்தாள்.
“நான் இல்ல மேடம். விஷ்வா சார் பர்த்டே. அவர் வைக்கிறார்”
“ஓஹ்..” என்றவள், உடனே வாழ்த்தி சாக்லேட்டை எடுத்துக் கொண்டாள்.
“பாரு.. ஒரு பர்த்டேக்கே பார்ட்டி வைக்கிறாங்க. நீ கல்யாணமே பண்ணிட்டு ட்ரீட் தர மாட்டேங்குற. ஏன்டா.. நீங்களும் கூட எனக்கு சொல்லல.. உங்களுக்கெல்லாம் இருக்கு”
வனிஷாவை திட்டு விட்டு, அதிர்ந்து நின்றிருந்த மற்றவர்களையும் திட்டினாள் விஜயா.
“யாருக்கு கல்யாணம் ஆச்சு?” என்று விஷ்வா வினவ, “உங்க மேனேஜர் மேடம்க்கு தான். அப்ப உங்களுக்கும் தெரியாதா? யாருக்குமே சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறா. உன்னை அப்புறமா கவனிக்கிறேன்” என்ற விஜயா அங்கிருந்து சென்று விட, விஷ்விற்கு இதயம் நொருங்கி விட்டது.
அத்தனை பேரும் அதிர்ந்து போய் பார்த்தனர்.
“மேம்.. நிஜம்மாவே கல்யாணம் ஆகிடுச்சா?”
“எஸ்”
“எப்போ?”
“ரெண்டு நாளுக்கு முன்னாடி”
“அதான் லீவ் போட்டீங்களா? சொல்லவே இல்ல”
“இதுல சொல்ல என்ன இருக்கு? போய் வேலைய பாருங்க போங்க” என்றவள் அங்கிருந்து சென்று விட்டாள்.
விஷ்வாற்கு அங்கு நிற்க முடியவில்லை. சாக்லேட் பாக்ஸை தோழியிடம் கொடுத்து விட்டு, விறுவிறுவென சென்று விட்டான்.
தொடரும்.