Loading

 

வனிஷா உடைகளை எல்லாம் யதுநந்தனின் அறையில் மாற்றிக் கொண்டிருந்தாள். மற்ற எல்லாவற்றையும் வைத்து விட்டு, கடைசியாக நேற்று கட்டிய புடவையை கையில் எடுத்தாள்.

பட்டுச்சேலை. கனமாகவும் அழகாகவும் இருந்தது.

“கட்டிட்டு பார்த்தா நல்லா தான் இருக்கும். இப்ப இத மடிச்சு வைக்கனுமே” என்று தனியாய் புலம்பி விட்டு அதை மடிக்க முயற்சித்தாள். முயற்சி எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது.

எப்படி மடித்தாலும் எதோ ஒரு பிரச்சனை வர, “எவன்டா இவ்வளவு நீளமா சேலைய தயாரிக்க சொன்னது? கொஞ்சம் சின்னதா செய்ய கூடாதா?” என்றவள் சேலையை முறைத்துப்பார்த்தாள்.

பிறகு விடாமுயற்சி தானே விஸ்வரூப வெற்றியை கொடுக்கும் என்று நினைத்து, மீண்டும் கையிலெடுத்தாள்.

வெளியில் கட்டியிருந்த வாழை மரங்களை எல்லாம் எடுத்து வீட்டுக்குள் போட்டு விட்டு, அப்போது தான் அறைக்குள் நுழைந்தான் யதுநந்தன்.

வனிஷா சேலையை மடிக்க போராடிக் கொண்டிருக்க, அவளைப் பார்த்து சிரித்தபடி, “சேலை கூட சண்டை போடுறியா?” என்று கேட்டான் யது.

அவனை திரும்பிப் பார்த்து விட்டு முகத்தைச் சுருக்கினாள்.

“இத எப்படி மடிக்கிறதுனே தெரியல. இவ்வளவு பெருசா எதுக்கு சேலை வைக்கிறாங்க?” என்று கடுப்போடு கூற, “நான் ஹெல்ப் பண்ணுறேன் இரு” என்றவன் சேலையை எடுத்தான்.

“உங்களுக்கு மடிக்க தெரியுமா?”

“நோ ஐடியா. ஆனா.. இவ்வளவு நீளமா இருக்க பெட்சீட் மடிக்கிறோம். அதே மாதிரி இதையும் பண்ணுவோம்” என்று ஒரு நுனியை அவளிடம் கொடுக்க பிடித்துக் கொண்டாள். மற்றதை அவன் பிடித்துக் கொண்டான்.

மடிக்க ஆரம்பித்த இரண்டு நொடியில் மீண்டும் சேலை தவறாக புரண்டு இருப்பது புரிய, வனிஷா கடுப்பாகி விட்டாள்.

“இப்படித்தான் அப்போ இருந்து மாத்தி மாத்தி வருது. போங்க” என்று கோபத்தோடு கீழே போட்டு விட்டு, மெத்தையில் போய் அமர்ந்து விட்டாள்.

“ஹேய்..” என்று சிரித்தவன், “நாம சரியா பிடிக்கல.. இப்ப பிடிக்கலாம். எந்திரி” என்று கூறி கையில் திணித்து விட, அப்போதும் கடுப்பாகவே எழுந்து நின்றாள்.

இம்முறை பொறுமையாக மடித்து முடித்தனர். அந்த பட்டுச்சேலை, அவர்களிடம் இருந்து கடைசியாக சாபவிமோச்சனம் பெற்று விட்டது.

மடித்து பையில் வைத்தவள், “உஃப்..” என்று மூச்சு விட்டுக் கொண்டாள்.

“இது கட்டுறது தான் பெரிய பாடுனா மடிக்கிறது அத விட கொடுமையா இருக்கு. எவன் கண்டு பிடிச்சான் சேலைய? டயர்டாகிட்டேன்.” என்றவளை பார்த்து யதுநந்தன் புன்னகைத்தான்

“தண்ணி.. தண்ணி.. இங்க இல்லயா? இருங்க போய் குடிச்சுட்டு வர்ரேன். தொண்டயே காஞ்சு போச்சு இதோட போராடி” என்று அறையில் தேடி இல்லாததால் வாசலை நோக்கி நடந்தாள்.

“இத எங்க வைக்கனு சொல்லிட்டு போ வனி..” என்றதும் சட்டென நின்று விட்டாள்.

“இங்க கபோர்ட்ல வைக்கனுமா? இல்ல ட்ரை க்ளீன் எதுவும் கொடுக்கனுமா?”

அந்த சேலை இருந்த பையை எடுத்து கையில் வைத்தபடி யது கேட்க, வனிஷாவிடமிருந்து பதில் வரவில்லை.

“வனிஷா?” என்று கேள்வியாக அழைக்கவும், திரும்பி பார்த்தாள். முகத்தில் ஒரு சோகம் இழையோட பார்க்க, இரண்டெட்டில் அருகே சென்றான் யதுநந்தன்.

“என்னாச்சு?”

“அப்பா.. அப்பா மட்டும் தான் வனினு கூப்பிடுவாங்க” என்று கூறி அமைதியானாள்.

அவளது சோகம் புரிய ஒரு நொடி அமைதி காத்தவன், “அப்ப அத்த எப்படி கூப்பிடுவாங்க?” என்று கேட்டு பேச்சை வளர்க்க ஆரம்பித்தான்.

“வானு. அம்மா பாட்டி தாத்தா எல்லாரும்”

“அப்ப ஃப்ரண்ட்ஸ்?”

“எனக்கு க்ளோஸ் ஃப்ரண்ட்னு யாரும் இல்ல. எல்லாரும் வனிஷா தான்”

“அப்போ நான் உன்னை எப்படி கூப்பிடுறது?”

“எப்படினா?”

“அதான் ஹஸ்பண்ட் வொய்ஃப்னா சொல்லமா பேரு வச்சு கூப்பிடுவாங்களே.. அது”

அவனது கேள்வியில் சோகத்தை மறந்து புன்னகைத்தவள், “அது ரொம்ப அவசியமா என்ன?” என்று கேட்டாள்.

“கண்டிப்பா அவசியம். என்ன இப்படி கேட்டுட்ட? சரி என்ன சொல்லி கூப்பிடலாம்? வனி.. வேணாம்.. அது மாமாவுக்கு மட்டும். வானு? வேணாம். எல்லாரும் நானும் ஒன்னா? நிஷா? நல்லா இருக்குல? நிஷா ஃபிக்ஸ் பண்ணிப்போம்”

அவனது பேச்சில் அவளது சோகம் மறந்து விட, “நிஷா?” என்று சிரிப்போடு கேட்டாள்.

“ஏன் உன் பேர்ல இருக்கது தான? பிடிக்கலயா?”

“இல்ல இல்ல. நல்லா தான் இருக்கு.”

“இப்ப நீ எனக்கு ஒரு பேரு வை. பார்க்கலாம்”

உடனே அவளும் யோசித்தாள்.

“யது? எல்லாரும் கூப்பிடுறது.. நந்து? அது தாத்தா பேரு. சட்டுனு கூப்பிட்டுட்டா தாத்தாவுக்கு மரியாதை இல்ல”

“சோ?”

தீவிரமாக யோசித்தவள் விழிகள், திடீரென பளிச்சிட்டது. யது அதைப்பார்த்து புருவம் உயர்த்த, “இத பத்தி அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாம். தண்ணி வேணும்” என்றவள் அவன் பேசும் முன்பு ஓடிவிட்டாள்‌.

எதையோ யோசித்து விட்டு சமாளிக்கிறாள் என்று புரிய, சேலை இருந்த பையை அலமாரியில் வைத்தபடி அது என்னவென்று யோசிக்க ஆரம்பித்து விட்டான்.

மகாலட்சுமியை விட்டு விட்டு வந்த பின், எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும், இருக்கும் வேலையைப்பார்ப்பதும் பொழுதை ஓட்டுவதுமாக இருந்தனர்.

கிருபாவின் புகுந்த வீட்டினர் கிளம்பிச் சென்று விட, கிருபா மேலும் ஒருநாள் தங்கப்போவதாக சொல்லி விட்டாள்.

________

மகாலட்சுமி அறையை விட்டு வெளியே வரும் போது, மாலை நேரமாகி இருந்தது.

பாக்கியம் வேலையில் இருக்க, வினோத் தொலைகாட்சியை பார்த்துக் கொண்டிருந்தான். அதியனை காணவில்லை.

பசி வேறு எடுக்க ஆரம்பித்தது. ஆனால் பாக்கியத்திடம் கேட்கவும் ஈகோ விடவில்லை.

அவராகவே அவளை கவனித்து விட்டு, “சாப்பாடு வைக்கட்டுமா?” என்று கேட்டார்.

“ஒன்னும் வேணாம்” என்றாள் வீம்புக்காக.

ஆனால் அவளது பசிக்களைப்பை உணர்ந்து கொண்டார் பாக்கியம்.

“கோபத்துல வயித்த காயப்போட்டு என்னமா செய்ய போற? சாப்பாடு வேணம்னா காபி டீ எதாவது போட்டுத்தர்ரேன். குடிக்கிறியா? உனக்கு என்ன வேணும்?”

இவ்வளவு கேட்ட பிறகும் மறுத்தால் பட்டினியில் செத்து தான் போக வேண்டும் என்று புரிய, “டீ” என்றாள்.

உடனே சென்று தேநீரோடு வந்தார். அவர் கொடுத்த சிற்றுண்டி வகைகளோடு தேநீரையும் பருகி வயிற்றை நிரப்பியவளுக்கு, ஒன்று மட்டும் புரிந்தது.

இனி பட்டினி கிடப்பது எல்லாம் எந்த வகையிலும் அவளுக்கு உதவாது. அவள் எப்படி இருந்தாலும், அதியன் கண்டு கொள்ளப்போவது இல்லை.

இனி இது போன்ற வேலைகளை விட்டு விட்டு, விவாகரத்து வாங்குவதை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

இரவு வீடு திரும்பிய அதியன், ஹாலில் இருந்தவளை கண்டு கொள்ளவே இல்லை. நேராக அறைக்குச் சென்று விட்டான்.

அவனை நன்றாக பார்த்த மகாலட்சுமிக்கு, அவனிடம் எதோ வித்தியாசம் இருப்பதாக தோன்றியது.

அறையை எட்டிப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள், அவன் வந்ததும் நன்றாக ஆராய்ந்தாள்.

“தலையில இருந்த கட்டு எங்க?” என்று கேட்க, திரும்பிப் பார்த்தான்.

“காயம் ஆறிடுச்சா? பிரிச்சிட்டியா?”

“அக்கறையா?” என்று அதியன் நக்கலாக கேட்க, “ஹலோ.. இரத்தம் கொடுத்தவளுக்கு அக்கறை இருக்க கூடாதா?” என்று முறைத்துக் கொண்டே கேட்டாள்.

“உன் இரத்தம் வாங்கி தான் நான் பொழைக்க போறேன்னு தெரிஞ்சுருந்தா, அப்படி ஒன்னும் வாழத்தேவை இல்லனு செத்தே போயிருப்பேன். நினைவுல இல்லாத நேரம் ஏத்தித் தொலைச்சுட்டானுங்க”

எரிச்சலாக பேசியவனை அதிர்ந்து பார்த்தவள், கோபத்தோடு எழுந்து விட்டாள்.

“நானும் ஒன்னும் தேடி வந்து உங்கள வாழ வைக்கல. உங்களுக்கு ரத்தம் கொடுக்க வந்ததால, என் வாழ்க்கையும் தான் இப்ப வீணா போச்சு. நியாயமா பார்த்தா நான் தான் உங்கள முறைச்சுட்டு திரியனும்”

“முறைச்சுட்டு போ. எனக்கென? ஆனா அக்கறை படுற மாதிரி மட்டும் நடிக்காத. எரிச்சலா இருக்கு”

“யாரு நடிச்சா?”

“நீ தான். மறுபடியும் உன் நடிப்புல ஏமாற நான் முட்டாள்னு நினைச்சியா? இதோட நிறுத்திக்க. திரும்ப பொறுமையா எல்லாம் போக மாட்டேன்.”

விரல் நீட்டி எச்சரித்தவன், அவளை தீயாய் முறைத்து விட்டு சென்று விட்டான்.

மகாலட்சுமிக்கு தூரமாக நின்றிருந்த வினோத்தை பார்த்து தான் கோபம் வந்தது. இவன் மட்டும் அத்தனை முறை அழைத்து அழவில்லை என்றால், அவள் சென்றிருக்க மாட்டாளே. இப்படி ஒரு மோசமான நிலையும் அவளுக்கு வந்திருக்காது.

“ஏய்.. இங்க வா” என்று வினோத்தை அழைக்க, “என்னங்க அண்ணி?” என்று அருகே வந்தான்.

“அண்ணியா? உனக்கு நான் அண்ணியெல்லாம் கிடையாது. உன் அண்ணன் கூட நான் வாழப்போறதும் கிடையாது.”

அவள் கோபமாக பேச, வினோத்தின் முகம் வாடியது.

“அது உன் ரூம் தான?”

“ம்ம்”

“அத காலி பண்ணு. இனி நான் அங்க தான் இருப்பேன்”

“சரிங்க அ…” என்று பாதியில் நிறுத்தி விட்டு, திரும்பி நடந்தான்.

“வினோத்” என்று அதியன் கோபமாக அழைக்கும் குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பினான்.

“அந்த ரூம்ம விட்டு வெளிய போன.. தொலைச்சுடுவேன்.” என்று மிரட்டியவன், மகாலட்சுமியை முறைத்து வைத்தான்.

மகா அதியனை முறைக்க, அதியன் மகாவை முறைக்க, இருவருக்கும் நடுவே பாவமாக நின்றது என்னவோ வினோத் தான்.

“இப்ப எதுக்கு அவன மிரட்டுறீங்க மிஸ்டர்? நான் உங்க கூட இருக்க முடியாதுனு சொன்னேன்ல?”

“அப்படினா ஹால்ல படுத்துத் தூங்கு. அதுவும் பிடிக்கலயா.. நந்தவனத்துக்கே கிளம்பி போயிடு. அத விட்டுட்டு வினோத் ரூம்ம கேட்ட மரியாதை கெட்டுரும்.” என்று அவளை எச்சரித்தவன், “நீ வெளிய போய் பாரு. அப்புறம் இருக்கு உனக்கு” என்று வினோத்தையும் மிரட்டி வைத்தான்.

இரவு அதியனின் அறைக்குள் வேண்டாவெறுப்பாய் அமர்ந்திருந்தாள் மகாலட்சுமி. அவனோடு இருக்கவும் பிடிக்கவில்லை. போகவும் வழியில்லை. விவாகரத்து கொடுத்தாலாவது எதையாவது செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கும் அசைய மாட்டேன் என்கிறானே.

அதியனோ அவளை பற்றிக் கவலையே இல்லாமல், மாத்திரையை விழுங்கி விட்டு படுத்து விட்டான்.

நிம்மதியாய் படுத்துக் கிடந்தவனை பார்த்து, வெறி வந்தது அவளுக்கு. அவளுடைய நிம்மதியை பறித்து விட்டானே.

“ஏய்.. ஹேய்.. உன்னை தான்” என்று அழைக்க, அவன் கண்ணைத்திறந்தால் தானே?

“கூப்பிடுறேன்ல? என்ன திமிரா?” என்று மகாலட்சுமி குரலை உயர்த்த, “ப்ச்” என்ற சிறு சத்தத்தோடு கண்ணை திறந்து பார்த்தான்.

“என்ன வேணும் உனக்கு?”

“டைவர்ஸ் வேணும்”

“மிட்டாய் கேட்குற மாதிரி காலையில இருந்து இதையே கேட்டுட்டு இருக்க. வேற வேலை இல்லையா உனக்கு?”

“பேசுவ ஏன் பேச மாட்ட? உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கலனு தெரிஞ்சும், எல்லாரும் சொன்னாங்கனு தாலி கட்டி கூட்டிட்டு வந்துட்டு, இதுவும் பேசுவ. இன்னமும் பேசுவ”

அவனுக்கு இதைக்கேட்டு கேட்டு சலித்து விட்டது. காலையிலிருந்து ஒரே பல்லவியை திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருக்கிறாளே.

“நேத்து காலையில தாலி கட்டும் போது எனக்கு பிடிக்கலனு சொல்லியிருக்க வேண்டியது தான? அப்ப அழுதுட்டே சும்மா இருந்துட்டு, இங்க வந்து என்னை போட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்க? நான் ஒன்னும் உன் மேல ஆசைப்பட்டு தாலி கட்டல. என் விதி. உன் கிட்ட கோர்த்து விட்டுருச்சு.”

“அப்ப டைவர்ஸ் கொடுக்க வேண்டியது தான?”

“அய்யோ லூசு மாதிரி பேசுறாளே.. நீ எல்லாம் எப்படி டீச்சர் ஆன? காலையில கல்யாணம் பண்ணிட்டு நைட் டைவர்ஸ் கேட்டா கிடைச்சுடுமா? பைத்தியத்த என் தலையில கட்டி வச்சுருக்கானுங்க. ச்சை.”

அவன் தலையில் அடித்துக் கொள்ள, மகாலட்சுமிக்கு என்னவோ போலனாது. அவளை இவ்வளவு தூரம் அவமானப்படுத்தியது அதியன் மட்டும் தான்.

“நான் ஒன்னும் உடனே கேட்கல” என்று அவள் மூக்கு விடைக்க பேச, “அப்புறம் எதுக்கு இப்ப குதிச்சுட்டு இருக்க?” என்று அவனும் எரிச்சலை காட்டினான்.

“டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு மட்டும் சொல்லு. அப்புறம் நான் பேச மாட்டேன்”

“ஏன் சொல்லனும்?”

“ஏன் சொல்லனும்னா?”

“அதான் ஏன் சொல்லனும்?”

அவனை மகா வெறித்துப் பார்த்தாள்.

“அப்போ டைவர்ஸ்…”

“பண்ண முடியாது”

“அதியன்..”

“லுக்.. இந்த கல்யாணம் நடந்து முடிஞ்சுருச்சு. பிரியனும்னு எல்லாம் யோசிக்காத. கண்டிப்பா நடக்காது. உனக்கு பிடிக்கலனா போய் உங்க வீட்டுல இருந்துக்க. நான் தேடிக்கூட வர மாட்டேன். இதுக்கு மேல என் தூக்கத்த கெடுக்காத. அப்புறம் கோபத்துல எதாச்சும் பண்ணிடுவேன்”

அடங்கிய குரலிலேயே தெளிவாக எச்சரித்து விட்டு, மீண்டும் படுத்து விட்டான்.

மகாலட்சுமிக்கு எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட உணர்வு. என்ன செய்வதென்றே புரியவில்லை. கோபம் கோபமாக வந்தது.

எதையாவது தூக்கிப்போட்டு உடைக்கும் அளவு கோபம் வந்தது. ஆனால் அடக்கிக் கொண்டாள்.

மெத்தையை விட்டு ஒரு பாயை எடுத்து கீழே விரித்தவள், அதிலேயே படுத்துக் கொண்டாள். மனதிற்குள், தீபா, வனிஷா, பரமேஸ்வரி என்று எல்லோரையும் அர்ச்சித்துக் கொண்டே தூங்கிப்போனாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்