வனிஷா மலர்விழியோடு சேர்ந்து, தன் பொருட்களை இடம்மாற்றும் வேலையில் இருக்க, வசந்தாவும் அங்கு வந்து அமர்ந்து கொண்டார்.
“இனிமேலாச்சும் ஒழுங்கா சேலை கட்டிப்பழகு” என்று மலர் வனிஷாவின் தலையில் கொட்ட, “அதெல்லாம் முடியாது” என்றாள்.
“கல்யாணம் ஆகியும் சேலை கட்ட முடியாதாம். உன் காத பிடிச்சு திருகுற மாமியார் அமையும்னு நினைச்சேன். இப்படி அப்பாவி அண்ணி கிட்ட போய் தப்பிச்சுட்ட”
வனிஷா பக்கென சிரித்து விட்டாள். மலர் அவளை முறைக்க, வசந்தா இதைக்கேட்டு புன்னகையுடன் அமர்ந்து இருந்தார்.
“அத்த.. அம்மாவோட பல நாள் கனவு என்ன தெரியுமா? எனக்கு ஒரு டெரர் மாமியார் வரனும். அவங்க என் காத பிடிச்சு திருகி, என்னை சேலை கட்ட வைக்கனும். அத பார்த்து இவங்க ஆனந்தமா சிரிக்கனும்னு நினைச்சுட்டு இருந்தாங்க.”
“அப்படியா நினைச்ச மலர்? சுடிதாரும் நல்லா தான் இருக்கு. அதுவும் இந்த சுடிதார் வானுக்கு அழகா இருக்கு. விருப்பப்பட்டத போடட்டுமே”
“அது சரி. அண்ணி.. இப்படி எல்லாம் சொல்லாதீங்க. அப்புறம் எந்த நேரமும் ஜீன்ஸ் மாட்டிட்டு சுத்துவா” என்றார் மலர்.
“ஹலோ.. மம்மி.. எங்களுக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு. இப்ப நான் புதுப்பொண்ணு. அதுனால கொஞ்சம் ட்ரெடிஸ்னலா டிரஸ் பண்ணிக்கிறேன். ஆனா ஆபிஸ் போகும் போது எனக்கு அதான் கரெக்ட்டா இருக்கும். முக்கியமா கம்ஃபர்டபிளா இருக்கும். சேலைய என்னால சமாளிக்கவும் முடியாது. இருக்க வேலையில அத பார்த்துட்டு இருக்கவும் முடியாது”
“நாங்க எல்லாம் தினமும் சேலை கட்டுறோம். நாங்க சமாளிக்கல?”
“சேலை ஆர்கியூமெண்ட்ட ஆரம்பிக்காதீங்க. அதுக்கு நான் ஆள் இல்ல. என் டிரஸ்ஸ பேக் பண்ணிக்கிறேன். போய் வேற வேலை இருந்தா பாருங்க”
மலர் கையிலிருந்த டாப்பை வெடுக்கென உருவிக் கொண்டு வனிஷா மடிக்க ஆரம்பித்தாள்.
“இத்தனை வருசத்துல இப்ப தான் வானு இவ்வளவு நீளமா பேசி பார்க்கிறேன்” என்று வசந்தா அதிசயமாக கூற, “எல்லாரு கிட்டயும் பேசாம இருக்கதால இவள நல்லவனு நினைச்சுட்டு இருக்கீங்க. என் கிட்ட மட்டும் இப்படித்தான் வாயடிப்பா” என்றார் மலர்.
“ஏன் வானு இதான் நீயா? எங்க கிட்ட மட்டும் தான் பேச மாட்டியா?” என்று வசந்தா கேட்க, வனிஷாவிற்கு சட்டென பதில் வரவில்லை.
அவள் தடுமாறி தாயை பார்க்க, “விடுங்க அண்ணி. போகப்போக எல்லாரு கிட்டயும் பேசிடுவா. வாங்க நாம போய் இருக்க வேலைய பார்ப்போம்” என்று அழைத்துச் சென்று விட்டார்.
வனிஷா பெருமூச்சோடு அவளது பொருட்களை அடுக்க ஆரம்பித்தாள்.
_________
அங்கு மகாலட்சுமி அதியனின் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள்.
கிளம்பும் முன்பு தீபா வந்து பேசியது அவளது கண் முன் வந்தது.
“என் மேல கோபமா மகா?” என்று தீபா கேட்க, “உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லையே. ஏன்?” என்று கேட்டாள்.
“நான் அவர் கிட்ட உன் லவ் மேட்டர சொன்னதால தான் இந்த பிரச்சனை எல்லாம் வந்துச்சு. அதான் என் மேல…”
மகாலட்சுமி மறுப்பாக தலையசைத்தாள்.
“உன் தப்பு எதுவும் இல்ல”
“அப்புறம் ஏன் என் கிட்ட பேசவே இல்ல. பாட்டி வேற உன் பக்கத்துல போகக்கூடாதுனு சொல்லி புடிச்சு வச்சுக்கிட்டாங்க. நீயா கூப்பிடுவியானு பார்த்தேன்.”
“இருக்க பிரச்சனையில நான் எத பத்தியும் யோசிக்கல தீபா. இத பத்தி இன்னொரு நாள் பேசிக்கலாம். இப்ப எதுவும் நினைக்காத” என்று கூறி விட்டுக் கிளம்பி இருந்தாள்.
தீபாவை பொறுத்தவரை, அதியன் தான் மகாலட்சுமியை ஒரு தலைக்காதலால் துரத்தினான். அது நிறைவேறாத கோபத்தில் இருந்தான். மகாலட்சுமிக்கு அதியன் மீது பரிதாபம் மட்டுமே இருக்கிறது. காதல் இருக்கிறதா என்று தெரியவில்லை. மகாலட்சுமியின் திருமணத்தை ஏற்க முடியாமல், அதியன் தற்கொலைக்கு முயன்றான்.
அப்படித்தான் மகாலட்சுமி அவளிடம் சொல்லி வைத்திருக்கிறாள். அதைத்தான் தீபா யதுநந்தனிடம் சொல்லி வைத்திருந்தாள். ஆனால், நள்ளிரவு மகாலட்சுமி தீபாவிடம் கூட சொல்லாமல் சென்றிருக்கிறாள் என்றால், அது காதல் இல்லாமல் இருக்க முடியாதே?
இரத்தம் மட்டும் கொடுக்க வேண்டும் என்றால், வீட்டினரிடம் பேசி இருக்கலாம். யாரும் மனிதாபிமானமற்றவர்கள் கிடையாது. மகாலட்சுமியை அனுப்பா விட்டால் கூட, நிச்சயமாக எதாவது ஏற்பாடு செய்திருப்பார்கள். அப்படி யார் உதவியையும் நாடாமல், தானாகவே கிளம்பி சென்றால் அதற்கு என்ன அர்த்தம்? யாருக்கும் காதல் விசயம் தெரியக்கூடாது என்று தானே?
யதுநந்தன் அப்படி நினைத்து தான், வேறு ஒருவனை விரும்பும் பெண் தனக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.
ஆனால் உண்மை வேறு. உண்மையை பரமேஸ்வரியிடம் சொன்னது போல் மொத்த குடும்பத்திடமும் மகாலட்சுமி சொல்லவில்லை. அதியனும் சொல்ல விரும்பவில்லை.
யார் காதலித்தது? ஏன் பிரிந்தார்கள்? என்ன பிரச்சனை? எதையும் யாரும் தூண்டி துருவிக் கேட்கவில்லை. அவர்களுக்குள் அப்படியே பிரச்சனை இருந்தாலும், அவர்களே சமாளிக்கட்டும் என்று நினைத்தனர்.
அதியன் எந்த வகையிலும் குறைந்தவனாகவும் இல்லை. அதனால் அவனை வீட்டு மருமகனாக சுலபமாக ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் ஏற்க வேண்டியவள்? அவனை கணவனாக ஏற்க முடியாது என்று உறுதியாக இருந்தாள்.
அதியனின் வீட்டுக்கு வந்து சேர, பாக்கியம் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றார். எல்லோரையும் அமர வைத்து உபசரித்தார்.
அந்த வீடு இரண்டு படுக்கை அறைகளையும், மேலும் ஒரு சிறிய அறையும் கொண்டு விசாலமாக தான் இருந்தது. மகாவின் குடும்பத்தினர், அந்த வீட்டை சுற்றிப்பார்த்து விட்டுப் பேசி விட்டுக் கிளம்ப ஒரு மணி நேரத்திற்கு மேலானது. பாக்கியம் மதிய உணவை சாப்பிடச்சொல்ல, மறுத்து விட்டுக் கிளம்பி விட்டனர்.
அவர்களை சென்று வழியனுப்பி வைத்தான் அதியன். அவர்கள் கிளம்பியதும் வீட்டுக்குள் வர, மகாலட்சுமி அவன் முன்னால் சென்று நின்றாள்.
“எனக்கு கொஞ்சம் பேசனும்” என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பேச, அதியன் புருவம் உயர்த்தினான்.
பாக்கியமும் வினோத்தும் உடனே அங்கிருந்து நகர்ந்து விட்டனர்.
“என்னால உன் கூட வாழ முடியாது. இந்த கல்யாணம் ஒத்து வராது. டைவர்ஸ் வேணும்”
‘இத இவ விடலயா?’ என்று சலிப்பாக நினைத்தவன், அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.
“என்ன? எதுவும் பேச மாட்டேங்குற?”
“என்ன பேசனும்?”
“என்ன நக்கலா? டைவர்ஸ்க்கு அப்ளை பண்ண போறியா இல்லையா?”
“முடியாது”
“ஏன்? ஏன் முடியாது?”
“எனக்கு வேற வேலை இருக்கு”
“ஹலோ.. டூ மச்சா போற நீ. கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டா, காலம் முழுக்க உன் கூட வாழுவேன்னு நினைப்பா?”
“கட்டாயப்படுத்தி? நான் உன்னை கட்டாயப்படுத்துனனா? எப்போ?”
அதியன் நக்கலாக கேட்க, மகாலட்சுமியிடம் பதில் இல்லை. அவனா வற்புறுத்தினான்? அவளது குடும்பம், முக்கியமாக பரமேஸ்வரி தானே செய்தார். உடனே அத்தனை பேரும் சம்மதித்து விட்டனர்.
பரமேஸ்வரி, மகளுக்காக உயிரைக்கூட கொடுக்க ஒருவன் தயாராக இருக்கிறான் என்ற எண்ணத்தில் செய்தது. அது மட்டுமில்லாமல், மகாலட்சுமியின் பெயர் அதியனோடு சேர்ந்து விட்டது. அதனால் திருமணம் செய்து விடுவது தான் சிறந்த வழி என்று நினைத்து விட்டார். ஆனால், மகாலட்சுமிக்கு மட்டும் பரமேஸ்வரி தவறான முடிவெடுத்து வற்புறுத்தியதாகவே தோன்றியது.
“திகைச்சுப்போய் நிக்கிற? யாரு கம்ப்பல் பண்ணதுனு ஞாபகம் வந்துடுச்சா?”
“அவங்க கம்ப்பல் பண்ணா நீ பிடிக்கலனு சொல்லி இருக்க வேண்டியது தான? எனக்கு உன்னை பிடிக்கலனு தெரிஞ்சும் நீ தான தாலி கட்டுன?”
‘லூசா இவ?’ என்பது போல் பார்த்தவன், சலிப்பாய் தலையசைத்து விட்டு எழுந்து அங்கிருந்த சிறிய அறைக்குள் புகுந்தான்.
“பேசிட்டு இருக்கேன்ல?” என்று மகா அவன் முதுகை பார்த்து கத்த, அவன் கதவை அடைத்து விட்டான்.
சட்டென அவமானமாய் உணர்ந்தாள் மகா. கதவை முறைத்துப்பார்த்து விட்டு, சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தாள்.
பிறகு பட்டுச்சேலையை மாற்ற நினைத்து எழுந்தாள். மகாவினுடைய பொருட்கள் உடைகள் எல்லாம் அதியனின் அறையில் வைக்கப்பட்டிருந்தது.
அறைக்கதவை திறந்து பார்க்க, உள்ளே இருந்த பொருட்களும் ஃபைல்களும் அதியனின் பெயரை சொன்னது.
‘இவன் கூட இந்த ரூம்லயா? நோ நெவர்’
வெறுப்போடு கதவை மூடி விட்டு, எதிரில் இருந்த கதவை திறக்க அது பூட்டிக் கிடந்தது. முயற்சித்து பார்த்தவள் எரிச்சலாக திரும்பி வந்தாள்.
பாக்கியம் வெளியேயிருந்து வர, “அந்த ரூம் சாவி எங்க?” என்று அதிகாரமாய் வினவினாள்.
எந்த அறையை கேட்கிறாள் என்று புரியாமல், “அதியன் கிட்ட இருக்கும்” என்றார் பாக்கியம்.
விறுவிறுவென அதியன் சென்ற அறைப்பக்கம் சென்றாள். கதவை பெரும் சத்தத்தோடு திறக்க, அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவன் முன்னால் மடிக்கணினி திறந்து கிடக்க, அவன் பார்வையும் அதில் இருந்தது.
“ரூம் சாவி வேணும்” என்று மகா அதிகாரமாக பேச, அவனிடம் அசைவில்லை.
“உன் கிட்ட தான் கேட்குறேன். அதியன் காதுல விழலயா?”
“விழுது”
“அப்ப சாவி எங்க?”
“ரூம் திறந்து தான் இருக்கு”
“நான் உன் ரூம் சாவிய கேட்கல. எதிர் ரூம் சாவிய கேட்டேன்”
பட்டென நிமிர்ந்து பார்த்தவன், முறைத்து வைத்தான்.
“அது எதுக்கு?”
“என்னால உன் கூட ஒரே ரூம்ல இருக்க முடியாது”
அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவன், “அப்ப ஹால்ல தூங்கு. இன்னொரு ரூம்ம எல்லாம் உனக்கு தர முடியாது” என்றான்.
“வாட்?” என்று அலற, “இங்கிலீஷ் டீச்சர்னா வாட்னு கத்தனுமா? வெளிய போ முதல்ல. எனக்கு வேலை இருக்கு” என்று வாசலைக்காட்டினான்.
“அதியன்..”
“இப்ப போறியா கழுத்தபிடிச்சு வெளிய தள்ளவா?”
“என்ன சொன்ன?”
“ஏன் தமிழ் தெரியாதா? கெட் அவுட்”
“உன் இஷ்டத்துக்கு தாலி கட்டி கூட்டிட்டு வந்துட்டு, வெளிய போனு துரத்துர. என்ன திமிரா?”
“ஏய்.. மரியாதையா வெளிய போடி. சும்மா சொன்னதயே சொல்லிக்கிட்டு” என்றவன், எழுந்து வந்து அவளை வெளியே தள்ளிவிட்டு கதவை பூட்டிக் கொண்டான்.
சுவற்றைப்பிடித்து நின்ற மகாலட்சுமிக்கு கண் கலங்கி விட்டது. யாரும் இதுவரை அவளை இவ்வளவு அவமானப்படுத்தியது இல்லை. எங்கும் அவளைக் கொண்டாடித்தான் பழக்கம். அவமானம் தாங்காமல் அழுகை வந்து விட்டது.
பாக்கியம் அங்கு நின்று அவளை பார்ப்பது தெரிய, கண்ணை துடைத்துக் கொண்டு அதியனின் அறைக்குச் சென்றாள்.
சேலையை அழுதபடியே மாற்றிக் கொண்டு அங்கேயே அமர்ந்து இருந்தாள்.
“சாப்பிட வாமா” என்று அழைத்த பாக்கியத்தை அவள் திரும்பியும் பார்க்கவில்லை.
திரும்ப திரும்ப அழைத்து ஓய்ந்தவர், அதியனை தேடிச் சென்றார்.
“என்ன ஆண்ட்டி?”
“மகாலட்சுமி சாப்பிடலபா”
“சரி”
“நீ கூப்பிடு”
“நான் ஏன் கூப்பிடனும்?”
“என்ன அதி இது? அவ உன் பொண்டாட்டி”
“அதுக்காக தலையில தூக்கி வச்சுட்டு சுத்த முடியாது ஆண்ட்டி. அவ சாப்பிட்டா என்ன? பட்டினி கிடந்தா எனக்கென்ன? நீங்க வினோத்த கூப்பிடுங்க. நாம சாப்பிடுவோம்” என்று முடித்து விட்டான்.
பாக்கியத்திற்கு உணவு உள்ளே போகவில்லை. ஒருத்தி பட்டினியாக இருக்க தான் மட்டும் சாப்பிடுவதா? என்ற தயக்கம்.
அதியன் அவரை முறைத்து பார்த்தான்.
“நீ கூப்பிடு அதி. வருவா”
“நான் கூப்பிட்டு அவ சாப்பிடனும்னு அவசியம் இல்ல. ஒரு வேலை இந்த பிச்சைக்காரன் வீட்டு சாப்பாடு நல்லா இருக்காதுனு நினைச்சு, ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி இருப்பா. அதுனால பேசாம சாப்பிடுங்க”
உள்ளே இருந்த மகாலட்சுமிக்கு இந்த வார்த்தைகள் கேட்கத்தான் செய்தது. கண்ணை இறுக மூடி அமைதியாய் இருந்தாள்.
“உன்னை விட அழகான பையன முக்கியமா பணக்கார பையன எங்க வீட்டுல மாப்பிள்ளையா பார்த்துருக்காங்க. அதுனால இனிமே எனக்கு கால் பண்ணாத” என்று கூறியது தான் கடைசியாக பேசியது.
இந்த பிச்சைக்காரன் வார்த்தை அவள் அவனிடம் நேரடியாக சொல்லவில்லை. பேசியதை கேட்டிருக்கிறான். ஏன் அதியன் தன்னை மீண்டும் ஒரு முறை கூட தொடர்பு கொள்ளாமல் ஒதுங்கினான்? என்ற அவளது பலநாள் கேள்விக்கு, இன்று பதில் கிடைத்து விட்டது.
மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு அவரவர் வேலையை பார்க்க, மகாலட்சுமி அறையிலேயே இருந்தாள். காலைக்கட்டிக் கொண்டு நடந்ததை எல்லாம் யோசித்தவளுக்கு, தன் பக்கம் தவறிருப்பதாகத் தோன்றவில்லை.
ஆனால் அதையே நினைத்த அதியன், மனதளவில் வெந்து கொண்டிருந்தான்.
தொடரும்.