அடுத்த நாள் காலை வழக்கமான அலாரம் அடிக்க, கண்ணை திறந்து கைபேசியை தேடி எடுத்த வனிஷா அதை அணைத்துப் போட்டாள்.
தூக்கம் இன்னும் மிச்சமிருக்க, தலையைத்திரும்பிப் பார்த்தாள். யதுநந்தனின் முகம் மிக அருகே இருந்தது.
‘பக்கத்துல வந்துட்டாங்க!’ என்று ஆச்சரியப்பட்டவள், தன் மீது கிடந்த கையைப்பார்த்தாள்.
புன்னகை வந்தது. கூடவே புதிதாய் வெட்கமும் வந்தது. கையை சில நொடிகள் பார்த்தவள், ஒன்றும் செய்யாமல் கைபேசியை எடுத்து அதில் பார்வையை பதித்தாள்.
சில நிமிடங்களில் யது கண்ணைத்திறந்தான். கைபேசி வெளிச்சம் முகத்தில் விழ, வனிஷா எதையோ பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவள் மீதிருந்த கையை பார்த்தவன், தனக்குள் புன்னகைத்துக் கொண்டு அவளை இமைக்காமல் பார்த்தான்.
உணர்வு தட்டி எழுப்ப, வனிஷா திரும்பிப் பார்த்தாள்.
“தூங்கலயா?”
“இன்னைக்கு லீவ் போட மறந்துட்டேன். அத இன்ஃபார்ம் பண்ணிட்டு இருந்தேன். எழுப்பிட்டனா?”
“இல்ல.. ஆமா நீ என்ன வேலை பார்க்குற?”
“ஐடில” என்றவள் நிறுவன பெயரைக்கூறினாள்.
“அது தெரியும். அங்க நீ என்னவா இருக்க?”
“ப்ராஜெக்ட் மேனேஜர்” என்றவள் கைபேசியை அணைத்து வைத்து விட்டு, அவன் பக்கம் நன்றாக திரும்பிப் படுத்தாள்.
இன்னமும் அவன் கை அசையாமல் அவள் மீது இருந்தது.
“பார்ரா.. அவ்வளவு பெரிய ஆளா நீ?”
“ஆமா.. பெரிய ஆளு தான்”
“இப்ப லீவ் எதுக்கு?”
“அம்மா நைட்டே சொன்னாங்க. நாளைக்கும் லீவ் போடுனு. கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே ஆஃபிஸ் போக வேணாம். அப்படி இப்படினு நிறைய சொன்னாங்க. அதான் இன்ஃபார்ம் பண்ணிட்டு டீம் மெட்ஸ்க்கு வொர்க்க பிரிச்சு கொடுத்துட்டு இருந்தேன்”
“ஓகே. லீவ்னா கொஞ்ச நேரம் தூங்கு.” என்றவன் கண்ணை மூடிக் கொள்ள, வனிஷா அவனை குறும்பாக பார்த்து விட்டு கையை எடுத்து விட்டாள்.
உடனே கண்ணைத்திறந்தவன், மேலும் நெருங்கி வந்து அவளை அணைத்துக் கொண்டான்.
“இப்படியே தூங்கு. இதான் நல்லா இருக்கு” என்று கூற, “யாருக்கு?” என்று கேட்டு வைத்தாள்.
“எனக்கும் உனக்கும்” என்றவன் சிரிப்போடு மீண்டும் கண்ணை மூடிக் கொள்ள, வனிஷாவும் தூங்க ஆரம்பித்து விட்டாள்.
மீண்டும் இருவரும் எழும் போது நன்றாக விடிந்திருந்தது.
“குட் மார்னிங்” என்று யதுநந்தன் கூற, “வெரி குட் மார்னிங்” என்ற வனிஷா எழுந்து மணியை பார்த்தாள்.
“மணி எட்டு. ரொம்ப நேரம் தூங்கிட்டோம்” என்றவள் கீழே இறங்கி அவனை பார்த்தாள்.
“நான் ஃபர்ஸ்ட் குளிச்சுட்டு வந்துடுறேன். எனக்கு குளிக்காம ஒரு வேலையும் ஓடாது”
“ஓகே போ” என்று அவளை அனுப்பி விட்டு, தனது கைபேசியை எடுத்துப் பார்த்தான்.
நேற்று காலையில் அணைத்துப் போட்டது. இப்போது தான் எடுக்கிறான். அவனுடைய எந்த நண்பர்களுக்கும் திருமண விசயத்தைக் கூறவில்லை. பள்ளி கல்லூரியில் இருந்த நண்பர்களையும் சில வருடமாக ஒதுக்கி வைத்திருந்தான். அதனால் யாருக்கும் சொல்லவில்லை.
எப்படியோ விசயம் தெரிந்து நிறைய பேர் அழைத்திருக்கின்றனர். நிறைய குறுஞ்செய்திகள் குவிந்து கிடந்தது. ஒவ்வொன்றாய் திறந்து பார்த்து, சிலவற்றுக்கு பதில் அனுப்பினான். மற்றதை கண்டு கொள்ளவில்லை.
குளித்து முடித்து சுடிதாரில் வந்தாள் வனிஷா. அவளது உடையை பார்த்தவனுக்கு பெரும் ஆச்சரியம்.
“வாவ்..! உன்னை இந்த லுக்ல நான் பார்த்ததே இல்லயே?”
“ஏன்னா இது அம்மா எடுத்த சுடிதார். கிராண்ட் லுக். போடவே மாட்டேன்னு வச்சுருந்தேன். ஆனா கரெக்ட்டா இத கொண்டு வந்து கொடுத்துட்டாங்க”
“இதுவும் நல்லா தான் இருக்கு உனக்கு”
கண்ணில் மெச்சுதலோடு பாராட்டினான் யது.
மலர் பாட்டி தாத்தாவை தவிர யாரிடம் பேசாதவளுக்கு, இப்படிப்பட்ட பாராட்டு புதிதாய் இருக்க, உச்சி குளிர்ந்தது.
“தேங்க்யூ” என்று சந்தோசமாக பாராட்டை ஏற்றுக் கொண்டாள்.
யது நந்தன் குளிக்க சென்று விட, வனிஷா தன் வழக்கமான மேக் அப் போட்டு விட்டு வெளியே வந்தாள்.
சந்தன நிற சுடிதார் அழகிய வேலைப்பாடுகளோடு அவளுக்கு அழகு சேர்க்க, அதை அவளது முக அலங்கார பொருட்கள் மெருகூட்ட, கழுத்தில் இருந்த புதுத் தாலியும் உள்ளார்ந்த சந்தோசமும் ஜொலிக்க வைத்தது.
அறையிலிருந்து கண் கூசும் அழகோடு அவள் வெளியே வர, பார்த்திருந்த கிருபா, “வாவ்!” என்று வாயைப்பிளந்தாள்.
‘என்னடா இது அக்கா தம்பி எல்லாம் ஒரே மாதிரி ரியாக்ட் பண்ணுறாங்க’ என்று நினைத்தவள், கிருபாவை பார்த்து புன்னகைத்தாள்.
“சூப்பரா இருக்க புதுப்பொண்ணே” என்று கூற, “தேங்க்யூ அண்ணி” என்றாள்.
“இங்கவா.. என் மாமியார் பார்க்குறதுக்கு முன்ன திருஷ்டி பொட்டு வச்சுடலாம்” என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
வசந்தா சமையலை கவனித்துக் கொண்டிருந்தார். கிருபாநந்தினியின் புகுந்த வீட்டினர் இருப்பதால், சாப்பாடு தடபுடலாக தான் இருந்தது.
“ம்மா.. வானுக்கு திருஷ்டி பொட்டு வச்சு விடுங்கமா.. எல்லாரும் கண்ணு வைக்க போறாங்க”
“அண்ணி.. ரொம்பத்தான் கிண்டல் பண்ணுறீங்க” என்று வனிஷா சிரித்தாள்.
வேலையை விட்டு மருமகளை பார்த்த வசந்தா கூட புன்னகைத்தார்.
“நல்லா இருக்கடா. நைட் மறக்காம சுத்திப்போட்டுரலாம்”
“நீங்களுமா அத்த?”
“புதுப்பொண்ணு களை இது” என்று கிருபா அவளது தோளில் இடித்தாள்.
“இது வேறயா?”
“ஆமா.. இப்ப டீய கொடுங்கமா. அங்க என் அத்த சாமியாடுறதுக்கு முன்னாடி போறேன்” என்ற கிருபா தேநீரை எடுத்துக் கொண்டாள்.
“இத கொடுத்துட்டு வந்து உங்க கூட ஜாயின் ஆகிக்கிறேன்” என்று விட்டு வேகமாக கிளம்பி விட்டாள் கிருபா.
“உனக்கு டீ வேணுமா?”
“டீ குடிக்க மாட்டேன் அத்த. அவங்க குடிப்பாங்களா? உங்க பையன்”
“காலையில சீக்கிரம் குடிப்பான். இது சாப்பிடுற நேரம் ஆகிடுச்சு. இருந்தாலும் கொண்டு போய் கொடு. குடிச்சுப்பான். உனக்கு காபி போடவா?”
“நான் போட்டுக்கவா? எனக்கு வேற எதுவும் சமைக்க தெரியாது. காபி மட்டும் தான் போடத்தெரியும்”
“தெரியும் தெரியும். போட்டுக்கோ” என்று வசந்தா வழி விட்டார்.
மகாலட்சுமி விதவிதமாய் சமைப்பாள். சமைப்பதை வசந்தாவுக்கு கொண்டு வந்தும் கொடுப்பாள். எந்த நேரமும் அவளை சேலையில் தான் பார்க்க முடியும்.
அதற்கு நேர் எதிராய் வனிஷா. இவளோடு மகன் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்தார் வசந்தா.
காபியை போட்டு எடுத்துக் கொண்டவள், தேநீரையும் எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
யதுநந்தன் குளித்து விட்டு வராமல் இருக்க, அவள் மட்டும் காபியை குடித்தபடி கைபேசியில் பொழுதை போக்க ஆரம்பித்தாள்.
“என்ன இங்க உட்கார்ந்து இருக்க?” என்று கேட்டுக் கொண்டே யது வர, “உங்களுக்கு டீ. அத்த கொடுத்து விட்டாங்க” என்று காட்டினாள்.
அதை எடுத்துக் கொண்டவன், அவளருகே அமர்ந்து கொண்டான்.
___________
மகாலட்சுமி காலையில் எழுந்ததுமே, பரமேஸ்வரி வந்து நின்றார்.
“சேலைய கட்டி ரெடியாகு. உன் அப்பாவும் மாமாவும் மாப்பிள்ளைய கூட்டிட்டு வந்ததும் கிளம்பனும்” என்று கறாராக கூறி விட்டுச் சென்றார்.
மகள் மீதிருந்த பாசம் எல்லாம் காணாமல் போயிருந்தது. குரலிலும் முகத்திலும் இளக்கம் கொஞ்சமும் இல்லை.
அவரது கட்டளைக்கிணங்க கிளம்பி விட்டாலும், மகாலட்சுமிக்கு அங்கு போக சுத்தமாக விருப்பமில்லை.
அதியன் அவளை முழுவதுமாக வெறுக்கிறான் என்று அவளுக்குத் தெளிவாக தெரியும். ஆனால் எதற்காக விவாகரத்து பற்றிப்பேசும் போது உடனே சம்மதிக்காமல் கோபப்பட்டான் என்று அவளுக்குப் புரியவில்லை.
தெளிவாக பேசி எப்படியாவது விவாகரத்து வாங்கி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
தன் நீண்ட கூந்தலை நன்றாக உலர்த்தி பின்னி முடிய, பரமேஸ்வரி பூவோடு வந்து நின்றார்.
“இங்க பாரு.. இனி உன் வாழ்க்கை மாப்பிள்ள கூட தான். முதல்ல உண்மை தெரிஞ்சுருந்தா உன்னை அந்த பையனுக்கு கட்டி வச்சுருக்கவே மாட்டேன். ஆனா நடந்து போச்சு. இனி அங்க தான் வாழனும். எதுக்காவது சண்டை போட்டு அம்மா வீடு இருக்குதுனு இங்க வர கூடாது. அப்படி வந்த.. வீட்டுல வச்சு சோறெல்லாம் போட மாட்டேன். துரத்தி விட்டுருவேன். ஒழுங்கா வாழ்க்கைய வாழப்பாரு.”
மிரட்டி விட்டு அவளது பதிலைக்கேட்காமல் அவர் சென்று விட, மகாலட்சுமி சலித்து விட்டாள்.
“இவங்க கிட்ட உண்மைய சொன்னா நம்மல புரிஞ்சுக்காம, அவனுக்கு சப்போர்ட் பண்ணுறாங்களே.. இவங்க எனக்கு அம்மாவா? அவனுக்கு அம்மாவா?” என்று எரிச்சலாக கேட்டுக் கொண்டாள்.
ஒரு மணி நேரத்தில் அதியனை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர்.
வசந்தா வீட்டில் தான் இரண்டு ஜோடிக்கும் விருந்து என்று கூறியிருக்க, அங்கு மகாவுக்கு சோதனை ஆரம்பமாகியது.
ஒரு பக்கம் வனிஷாவும் யதுநந்தனும் அமர்ந்து கொள்ள, அவர்களுக்கு எதிரில் அதியனும் மகாலட்சுமியும் அமர வைக்கப்படனர்.
தாத்தாவும் வெற்றிவேலும் மட்டுமே இருந்தனர். மற்ற எல்லோருமே பிறகு சாப்பிட்டுக் கொள்வதாக சொல்லி விட்டு, தள்ளிச் சென்று விட்டனர்.
வனிஷாவோ யாரைப்பற்றியும் அக்கறை கொண்டாள் இல்லை. அவள் போக்கில் வசந்தாவும் பரமேஸ்வரியும் பரிமாறிய உணவை உள்ளே தள்ள ஆரம்பித்தாள்.
அதியனும் அதே நிலை தான். இருந்த பசிக்கு, அருகே இருந்த மகாலட்சுமியின் மீதிருந்த கோபத்தை கூட மறந்து விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
யதுநந்தனுக்கு மகாலட்சுமியை பார்த்ததுமே சிரிப்பு மறைந்து போனது. அதனால் அமைதியாகவே இருந்தான்.
மகாலட்சுமி தான் ,அத்தனை பேருக்கும் சேர்த்து தவித்துக் கொண்டிருந்தாள்
வனிஷாவும் யதுநந்தனும் ஒன்றாக அமர்ந்திருப்பதயே தாங்க முடியாமல் அவள் தவிக்க வனிஷா வேறு, “இத சாப்பிடுங்க.. அம்மா பண்ணது. நல்லா இருக்கும்” என்று அவனுக்கு எடுத்தும் வைத்தாள்.
யார் பரிமாறினாலும் கோபப்படும் யதுநந்தன், உணவை உண்ட கையோடு அவன் தட்டில் தன் தட்டில் இருப்பதை வனிஷா மாற்றினாலும், “நல்லா இருக்கா?” என்று கேட்டபடி சாப்பிட வேறு செய்தான்.
விட்டால் இருவரும் ஒரே தட்டில் கூட சாப்பிடுவார்கள் போலும். இதை பார்த்து வயிறு எரிந்ததில், மகாவிற்கு ஒரு வாய் உணவு கூட உள்ளே செல்லவில்லை.
தன் தட்டிலிருந்த பனியாரம் ஒன்றை எடுத்து இரண்டாய் பிய்த்த யதுநந்தன், தேங்காய் சட்னியில் தோய்த்து வனிஷாவின் தட்டில் வைத்தான்.
“இத சாப்பிட்டுப்பாரு. ஸ்வீட் பனியாரத்துக்கு சட்னி நல்லா இருக்கும்” என்று கூற, வனிஷா உடனே எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
“லைட்டா மிங்கிள் டேஸ்ட்” என்று ஆர்வமாக சாப்பிட்டு வனிஷா கூற, யது நந்தன் தலையாட்டிக் கொண்டான்.
‘டேய்.. முன்னாடி தாத்தா இருக்காரு. அப்பா மாமா எல்லாரும் இருக்காங்க. கொஞ்சம் கூட வெட்கமில்லாம இதுங்க இப்படி நடந்துக்குதுங்க’ என்று மகா வயிறு எரிந்தாள்.
கூடவே யதுநந்தனை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. தன்னிடம் ஒரு வார்த்தை கூட அதிகம் பேசாதவன், வனிஷாவிடம் இவ்வளவு அன்பாய் நடந்து கொள்கிறானே. திருமணம் முடிந்து விட்டதால் வந்த மாற்றமா? அப்படி என்றால் இது எல்லாம் தனக்கு கிடைக்க வேண்டிய ஒன்றல்லவா?
அவர்களை நேரடியாக முறைக்க முடியாமல் மகாலட்சுமி தடுமாறிக் கொண்டிருக்க, அதியன் தண்ணீரை அவள் பக்கம் தள்ளி வைத்தான்.
“குடி. இல்லனா எரிஞ்சு சாம்பலாகிடுவ” என்று வேறு கூறி வைத்தான்.
மகாலட்சுமிக்கு சட்டென கோபம் வந்து விட்டது. திரும்பி அவனை முறைத்தாள்.
அதியன் கண்டு கொள்ளாமல் இருக்க, தாத்தா அவனிடம் பேச ஆரம்பித்தார்.
“அப்பா எப்போபா வர்ரார்?”
“நாளைக்கு தான் கிளம்புறாங்க தாத்தா. இங்க வந்து சேர ஒரு நாளுக்கு மேல ஆகிடும். ஜாயின் ஃப்ளைட்ல வர்ராங்க. கிளம்பும் போது சொல்லுறேன்”
“அப்ப அவங்க வந்தப்புறமே மத்தத பேசிக்கலாம். எத்தனை நாள் இருப்பாங்க?”
“மினிமம் ரெண்டு வாரம் இருப்பாங்கனு நினைக்கிறேன். இங்க கொஞ்சம் வொர்க் இருக்கு. பார்த்துக்கலாம் தாத்தா”
“நீங்க அமெரிக்கா கிளம்புற ப்ளான் என்னாச்சு?” என்று யதுநந்தன் கேட்க, “இப்போ தள்ளி வச்சுருக்கேன்” என்று மட்டும் சொன்னான்.
“உங்க கூட இருந்தவங்க எங்க? அந்த பையன் வினோத் கூட காணோம்?”
“அவங்க வீட்டுக்கு போயிருக்காங்க. அரேன்ஜ்மெண்ட் பார்க்கனும்னு”
இப்படியே ஆளுக்கொன்றாய் பேசி முடித்,து சாப்பிட்டு முடித்து விட்டனர்.
மகாலட்சுமியையும் அதியனையும் அழைத்துக் கொண்டு, அதியனின் வீட்டுக்குக் கிளம்பினர்.
மலர்விழி, வனிஷா, யதுநந்தன், வசந்தா தவிர, மற்ற அத்தனை பேரும் அவர்களை விடச்சென்றனர்.
தொடரும்.