நந்தவனம் இல்லம். நகரின் முக்கியப்பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய நிலத்தில், பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டிருந்தது அந்த நான்கு வீடுகளும். நான்கு வீடுகளுக்கும் இடையில் தாராளமாக இடைவெளி இருந்தது. ஆனால், ஒரே காம்பவுண்டிற்குள் இருந்தது. வெளியேறும் பாதையும் ஒன்று தான்.
அடுக்குமாடியாக வீடுகள் இருந்த போதும், பெயருக்கேற்ப நிறைய மரங்களும் செடிகொடிகளும் அந்த இடத்தை நிறைத்து இருந்தன.
அந்த நந்தவனத்தின் உரிமையாளர் நந்தகோபாலன். சில வருடங்களாக இராணுவத்தில் வேலை செய்து விட்டு, விருப்ப ஓய்வோடு ஊர் திரும்பியவருக்கு, அரசு பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்தது.
வகித்த பதவிக்கு ஏற்ப விரைப்பாக சுற்றினாலும், அடிமனதில் பாசம் அதிகம் கொண்டவர். அவர் விருப்ப ஓய்வு பெற்றதே, மனைவியின் மீது கொண்ட பாசத்தினால் தான்.
நந்தகோபலனுக்கு ஏற்ற சத்தியபாமா அவருடைய மனைவி. கணவனிடம் கொள்ளை பிரியம். பிரியத்திற்கு பரிசாக மூன்று பிள்ளைகளும் உண்டு.
நந்தவனத்தில் இருந்த நான்கு வீடுகளில், முதலாவதாக இருந்த வீட்டில் அறையை விட்டு வெளியே வந்து சாப்பிட அமர்ந்தான் யதுநந்தன்.
ஆறடிக்கு சற்றே குறைவான உயரம். பளிச்சென்ற நிறம். அளவான மீசையும், ட்ரிம் செய்யப்பட்ட தாடியும், அவனது முகத்தை பாதி மறைத்து இருந்தது. வெந்தய நிறத்தில் சட்டை அணிந்து இருந்தவன், அதில் முழுக்கையை மடக்கியபடி கை கழுவி விட்டு அமர்ந்தான்.
மகனை பார்த்ததும் தட்டை எடுத்து வைத்தார் வசந்தகுமாரி.
“அப்பா எங்கமா?” என்ற கேள்வி பெற்றவளிடம் இருக்க, உணவை தானே எடுத்து தட்டில் போட்டுக் கொண்டான்.
“மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க போயிருக்காங்க. அப்படியே யாரையோ பார்க்க வேற போகனும்னு சொன்னாங்க”
மகனுக்கு பதில் சொல்லியபடி சட்னி சாம்பார் பாத்திரத்தை அருகே தள்ளி வைத்தார். யதுநந்தனுக்கு பரிமாறினால் பிடிக்காது. தனக்கு வேண்டிதை தானே போட்டுக் கொள்ள கூட முடியாத குழந்தையா? என்று எரிந்து விழுவான். அதனால் தள்ளி வைத்ததோடு நிறுத்திக் கொண்டார்.
யதுநந்தன் வேகமாகவும் அவசரமாகவும் சாப்பிட, “பத்திரிக்கை எழுதனும் யது. அப்பா உன் கிட்ட எழுதி வைக்க சொன்னாரு. அப்படியே தாத்தா கிட்டயும் கேட்டுக்க.” என்றதற்கு அவனிடம் தலையாட்டல் தான் வந்தது.
அந்நேரம், உடலை முறுக்கி சோம்பலை விரட்ட மனமில்லாமல் விரட்டியபடி, அறையிலிருந்து வெளியே வந்தாள் கிருபாநந்தினி. யது நந்தனின் அக்கா.
“ம்மா.. காபி” என்று கேட்டபடி வந்தவள், “என்னடா கிளம்பிட்டியா?” என்று தம்பியை பார்த்து வினவினாள்.
“எல்லாரும் உன்னை மாதிரி ஒன்பது மணி வரை தூங்குவாங்கனு நினைப்பா?”
உடனே திரும்பி சுவற்றில் தொங்கிய கடிகாரத்தை பார்த்து விட்டு, “எட்டு தான் ஆகுது” என்று முறைத்தாள்.
“அதுல உனக்கு பெருமையா?” என்று பதிலுக்கு அவனும் பேசினான்.
“இந்நேரத்துல காபி குடிச்சா எப்ப சாப்பிடுவ நீ?” என்று வசந்தா அதட்ட, “இங்க தான் இப்படி தூங்க முடியுது. அங்க போயிட்டா.. இன்னேரம் காபி மட்டும் இல்ல மதிய சாப்பாடும் சேர்த்து செஞ்சு வச்சுட்டு, எதையும் சாப்பிட முடியாம சுருண்டு கிடப்பேன். கொஞ்ச நாள் நிம்மதியா காபி குடிச்சுட்டு அப்புறம் சாப்பிடுறனேமா” என்றாள் கிருபா.
திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் தான் ஆகறது. அந்த ஆறு மாதத்திற்கே திருமண வாழ்வு சலித்து தான் போனது. அது அவ்வப்போது அவளது பேச்சில் வெளிப்படும். பக்கத்து ஊரில் தான் இருக்கிறாள். மாமியார் இல்லாத நேரத்தில் பிறந்த வீட்டுக்கு வந்து, இரண்டு நாட்கள் தங்கிச் செல்வாள்.
வசந்தா காபியை எடுக்க செல்ல, “சோம்பேறி” என்று திட்டிய யது, அதற்கு மேல் பேசாமல் எழுந்து சென்று விட்டான்.
பைக் சாவியை எடுத்துக் கொண்டு அவன் வெளியேற, கிருபா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இந்தா.. குடி” என்று வசந்தா காபியை நீட்ட, “இவன் என்னமா இப்படி இருக்கான்?” என்று கேட்டு வைத்தாள்.
“எப்படி இருக்கான்? நல்லா தான இருக்கான்?”
“நல்லாவா? இவனுக்கு கல்யாணம்மா. அந்த பூரிப்பு எதுவுமே அவன் முகத்துல இல்ல. எதையோ யோசிச்சுட்டே இருக்கான்”
“அவன் எப்பவுமே அமைதி தான?”
“அதுக்காக இது ஓவர் மா. கல்யாண மாப்பிள்ளை மாதிரியே இல்ல.”
“கல்யாணம் நெருங்கும் போது சரியாகிடுவான். விடு”
வசந்தா முடித்து விட்டாலும், கிருபா அப்படி விடாமல் யோசித்துக் கொண்டே இருந்தாள்.
யதுநந்தன் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியேற, எதிரில் வந்தாள் அவள். அவனுக்காக நிச்சயிக்கப்பட்ட மகாலட்சுமி. அவனை பார்த்ததும் உள்ளம் பூரிக்க புன்னகைக்க, அவனோ கடனுக்கு உதட்டை இழுத்து வைத்து விட்டு தாமதிக்காமல் சென்று விட்டான்.
மகாலட்சுமி அவனது சிறு புன்னகையிலேயே பூரித்துப்போனாள். உள்ளம் துள்ள வீட்டை நோக்கி ஓடினாள்.
பைக்கில் சென்ற யதுநந்தனுக்கு எந்த பூரிப்பும் தெரியவில்லை. வேலையை பற்றிய நினைப்புடன், அவர்களது அலுவலகம் சென்று சேர்ந்தான்.
அலுவலகம் என்றால் பெரிய பெரிய கட்டிடம் எல்லாம் கிடையாது. சிறிய அறை தான். அதில் யதுநந்தனோடு சேர்த்து மூன்றே பேர் தான் இருந்தனர்.
ஒரு பெண் கணினியின் முன்னால் அமர்ந்து இருந்தாள். காலையில் சீக்கிரம் வந்து விட்டு, மதியம் இரண்டு மணிக்கு வீடு சென்று விடுவாள். அதற்கு மேல் வேலைகள் இருக்காது. திருமணமானவள்.
அங்கிருந்த ஒரு மேசையின் பின்னால் ஒருவன் அமர்ந்து இருந்தான். பெயர் முரளி. மிகத்தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த முரளி, யதுவை பார்த்ததும் எழுந்து நின்றான்.
யது மற்றொரு மேசையின் பின்னால் சென்று அமர்ந்து கொள்ள, “சார்.. இது பில்ஸ்” என்று ஒரு கோப்பை முன்னால் வைத்தான்.
அது மிகச்சிறிய அலுவலகம். வெற்றி டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் கடைகளுக்கான அலுவலகம். ஊர் முழுவதும் ஏழு கிளைகள் உண்டு. அதற்கான வரவு செலவு கணக்குகளோடு மொத்த வேலையும் இங்கு தான் நடக்கும். கொள்முதல் முதல் லாபம் வரை, எல்லாமே யதுவின் பொறுப்பில். வெளிவேலைகள் எல்லாம் வெற்றிவேலின் பொறுப்பு.
கடந்த மூன்று ஆண்டுகளாக தான் யது இங்கு வருவது. அதற்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.
யது பில்களை பார்த்து முடித்து விட்டு, வரவேண்டிய பொருட்களை பற்றி விசாரித்து, வராத பொருட்களுக்கு காரணம் கேட்டு முடிக்க, செல்போன் கிண்கிணியாய் ஒலியெழுப்பியது.
அதை எடுத்துக் காதில் வைத்தவன், “ஹலோ” என்றான்.
“யது.. மண்டபத்துக்கு பணம் கொடுத்துட்டேன்.”
அந்த பக்கம் வெற்றிவேலின் குரல் ஒலித்தது.
“சரிங்கபா..”
“அப்படியே அந்த காண்ட்ராக்டர பார்க்க போயிட்டு இருக்கேன். அவரோட வேலை நடக்குற இடத்தயும் பார்க்க கிளம்பிடுவேன். நீ கடைய பார்த்துக்க”
“சரிங்கபா”
“வச்சுரட்டுமா?”
“ம்ம்”
வைத்து விட்டு எழுந்தவன், “லாரி எப்ப வருதுனு போன் பண்ணி கேளு முரளி. நான் கடைய பார்த்துட்டு வர்ரேன்” என்று கூறி வெளியேறி விட்டான்.
அங்கிருக்கும் இருவருமே வயதில் சிறியவர்கள் தான். ஆனால் இருவரிடமும் யதுநந்தன் சரியாக பேசியது இல்லை. ஒதுங்கி தான் நின்றான். அல்லது ஒதுக்கி வைத்தான்.
பைக்கை எடுத்துக் கொண்டு நகரின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் அவர்களது கடை ஒவ்வொன்றிற்கும் சென்றான். முதலில் இந்த வேலை வெற்றிவேலிடம் இருந்தது. இப்போது யதுநந்தன் பார்த்துக் கொண்டான்.
மகன் வந்ததும், பலநாட்களாக காம்ப்ளக்ஸ் கட்ட திட்டமிட்டுருந்த வேலையை வெற்றிவேல் ஆரம்பித்து விட்டார். மகனை இங்கே பொறுப்பில் அமர வைத்து விட்டு, கட்டுமானப்பணியை கவனித்தார்.
கடைகளுக்குள் சென்று வேலை நடப்பதை கவனித்தபடி யது நடந்து கொண்டிருக்க, கிருபாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ”
“யது மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவியானு அம்மா கேட்டாங்க”
“வர்ரேன்கா. பக்கத்துல தான் இருக்கேன்”
“சரி சரி” என்று வைத்து விட்டாள்.
_______
நந்தவனம் இல்லத்தில், யதுநந்தனின் வீட்டுக்கு எதிராக இருந்த வீட்டிற்குள் நுழைந்தாள் மகாலட்சுமி.
காலையில் எழுந்து கோவிலுக்கு சென்று வந்திருந்தாள். பெயருக்கேற்ற முகம். நீண்ட விழிகளும், அதற்கேற்ப இயற்கையிலேயே செதுக்கிய புருவங்களும், வட்ட முகமும் என்று செதுக்கிய சிற்பமாக இருந்தாள். நீளமான கூந்தலை பின்னி, தலையில் அவளே கட்டிய மல்லிகை சரத்தை வைத்திருந்தாள். கோவிலுக்கு சென்று வந்ததால், நெற்றியில் குங்குமம் திருநீறும் இடம் பெற்றிருக்க ஒரு பொட்டும் இருந்தது.
காலையில் கோவிலுக்கு சென்று வந்ததோடு, எதிரே யதுவை பார்த்து விட்டதில் அவளது துள்ளல் அதிகரித்தது. ஆனால், அதை மனதில் அடக்கிக் கொண்டு வெறும் புன்னகையுடன் உள்ளே வந்தாள்.
“ம்மா..” என்று அழைத்தவளுக்கு, “இங்க இருக்கேன் மகா” என்று வீட்டின் பின்புறமிருந்து பதில் கிடைத்தது.
குரல் வந்த பக்கம் சென்று பார்க்க, அங்கு செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் பரமேஸ்வரி. மகாலட்சுமியின் அன்னை.
“அப்பா கிளம்பியாச்சா?”
“இவ்வளவு நேரமாவா இருக்க போறாரு? அப்பவே கிளம்பிட்டாரு” என்று பதில் சொன்னவர் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டு, “சாப்பாடு ரெடியாமா? பசிக்குது” என்றாள்.
“இருக்குடா போய் சாப்பிடு” என்றதும் உள்ளே ஓடினாள்.
பரமேஸ்வரிக்கு மகளை பார்க்க பார்க்க பெருமை தாங்கவில்லை.
ஸ்ரீனிவாசன் தனியார் வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். அடுத்த வருடம் ஓய்வு பெற்று விடுவார். பரமேஸ்வரி வீட்டு நிர்வாகத்தை பார்த்துக் கொள்கிறார்.
ஸ்ரீனிவாசன் பரமேஸ்வரி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். முதலில் ஒரு மகன் செல்வகுமார். இப்போது மனைவி மற்றும் குழந்தையுடன் அமெரிக்காவில் நான்கு வருடங்களாக வேலை பார்த்து வருகிறான். அவனது மனைவி சீதாவும் அங்கு வேலை செய்கிறாள். சமீரா என்ற குழந்தையும் உண்டு.
அடுத்து வயிற்றிலேயே ஒரு குழந்தை அழிந்து போக, பல வருடங்களுக்கு பிறகே மகாலட்சுமி பிறந்தாள். அவளை ஆசையாகவே வளர்த்தனர். ஆனால், கடந்த எட்டு வருடங்களாக மகளை தன் தாயின் வீட்டில் விட்டு வைத்திருந்தார். பரமேஸ்வரியின் தந்தை இறந்து போக, தனியாக இருந்த தாய்க்கு துணையாக மகாலட்சுமியை அவரிடம் விட்டு விட்டார். பாட்டி வீட்டில் தங்கி படித்து முடித்த மகாலட்சுமி, அங்கேயே ஒரு ஆரம்ப பள்ளியில் சிறார்களுக்கு ஆசிரியையாக பணி புரிந்தாள்.
ஒரு வருடத்திற்கு முன்னால் பரமேஸ்வரியின் தாய் இறந்து போக, மகளை அழைத்துக் கொண்டு வந்தனர். இங்கு மீண்டும் ஒரு பள்ளியில் வேலையில் சேர்ந்தாள். வசந்தா மகாலட்சுமியை யதுவிற்கு பெண் கேட்க, திருமண பேச்சு கூடி வந்தது.
சென்ற வாரம் தான் வீட்டளவில் நெருங்கிய சொந்தங்கள் மத்தியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இரண்டு வாரங்களில் திருமணம். பள்ளி விடுமுறைக்குள் திருமணம் வைக்க பார்த்து, மண்டபம் கிடைக்காமல் இரண்டு வாரங்கள் தள்ளிப்போயிருந்தது.
கையில் மின்னிய தங்க மோதிரத்தையும் அதில் பதித்து இருந்த கல்லையும் ஆசையாக வருடிக் கொடுத்தாள் மகாலட்சுமி. வருடும் போதே அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அதை மறைக்க முயற்சிக்காமல் வளைய வந்தாள்.
தொடரும்.