நம்ம வாழ்க்கை கடைசி வரைக்கும் இப்படியே தான் புலம்பிக் கொண்டே தான் இருக்க போறேனோ? என்னுடைய பாட்டி அப்பவே சொன்னாங்க நான் தான் கேட்கமா இவளை கல்யாணம் பண்ணி கடைசில என்னை தனியா புலம்ப விட்டுட்டா . புலம்பிக் கொண்டு இருந்தவன் அப்படியே கட்டிலில் உறங்கியும் போனான். மதியம் சாப்பாட்டிற்கு நுவலி வந்து அழைத்தும் அவன் எழவே இல்லை. காலையில் இருந்து எதையோ நினைத்து புலம்பிக் கொண்டே இருந்தாரு என்னனு தான் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை காலையில் இவரு உடற்பயிற்சி செய்யும் போது ஊர் ஆட்கள் எல்லோரும் சேர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாங்களே ! அவங்க எல்லோரும் இவரு மேல கண்ணு வச்சி இருப்பாங்க அதனாலதான் இப்படி தனியா ஏதோ புலம்பிக் கொண்டு இருந்தார் னு நினைக்கின்றேன். அப்பா வீட்டுக்கு வந்ததும் பெரிய பூசணிக்காய் ஒன்றை எடுத்து அவருக்கு திருஷ்டி கழிக்க சொல்லனும் என்று நினைத்துக் கொண்டவள் ‘ நாம இப்ப போய் சாப்பிடனும் நமக்கு சாப்பாடு தான் முக்கியம் ‘ சாப்பிட்டு வந்து எனர்ஜியுடன் யோசிப்போம் என்று தனக்கு தானே கூறிக்கொண்டு சாப்பாடு தான் முக்கியம் என சாப்பிட போய்விட்டாள்.
நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தவனின் மீது யாரோ பெரிய கட்டையை போட்டது போல உணர்ந்தவன் மெதுவாக கண் திறந்து பார்க்க ,நுவலி தான் தூக்கத்தில் அவனின் வயிற்றின் மீது தன்னுடைய ஒரு காலைத் தூக்கிப் போட்டு இருந்தாள்.
“அடிப்பாவி எனக்கு இலவசமாகவே குடும்ப கட்டுப்பாடு பண்ணிவிட்டு விடுவா போல? ” என நினைத்தவன் மெதுவாக அவளின் காலை எடுத்து கீழே மெத்தையின் மீது வைத்தவன் தன்னுடைய போனில் நேரத்தைப் பார்க்க அது ஐந்து மணி என காட்டியது. என்ன இவ்வளவு நேரம் தூங்கி இருக்கேன்? நான் மதியம் கூட சாப்பிட இல்லையே ? இவ வேற இன்னைக்கு நைட்டு தான் முதன் முறையாக சமைக்கப் போறேன் என்றாளே ! அடேய் உதிரா ஒழுங்கா தூங்காம அத்தை செய்து வைத்துவிட்டு போன சாப்பாட்டை மதியம் சாப்பிட்டு இருக்கலாமே ! இவளுக்கு நான் தான் முதல் பலி ஆடு போல என நினைத்து கொண்டே எழுந்து முகம் கழுவ தோட்டத்திற்கு சென்றான்.
சிறிது நேரத்தில் தூக்கம் கலைந்தது எழுந்தவளுக்கு சமையல் கட்டில் பாத்திரம் உருட்டு சத்தம் கேட்டு அங்கே சென்றாள். உதிரன் தான் சாப்பாடு எதாவது இருக்கின்றதா ? என்று தேடிக்கொண்டு இருந்தான். எல்லா பாத்திரமும் காலியாக இருந்தது ‘ நம்ம இன்னைக்கு நைட்டு கண்டிப்பாக பலி தான். ஏன் நாம அவளுக்கு தெரியாம ஓட்டல் போய் சாப்பிட்டு வந்து விடலாமா ? இதுவும் நல்ல ஐடியா தான் .அவளுக்கு தெரியாம போய் சாப்பிட்டு வந்துவிடலாம் ‘ என தனக்கு தானே கூறிக்கொண்டு தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தான்.
கண்களை கசக்கிக்கொண்டே ” என்னங்க பண்றீங்க ? சமையல் கட்டில் தனியா வந்து ?”
அடியேய்! புருசன் மதியம் சாப்பிடவில்லைனு எதாவது அக்கறை இருந்ததா? உனக்கு எம் மேல அக்கறையே இல்ல ? ஏதாவது ஒரு மூலையில் உன்னுடைய இதயத்தில் எனக்கான அக்கறை இருந்து இருந்தா என்னை எழுப்பு சாப்பாடு போட்டு இருப்பாய் . இதுவே என்னுடைய அத்தை இருந்து இருந்தால் என்னை பட்டினி போட்டு இருக்க மாட்டாங்க. நீ மட்டும் தனியா உட்கார்ந்து சாப்பிட்டு இப்படி பாத்திரத்தை எல்லாம் காலி பண்ணி வச்சி இருக்க’.
அடேய் மனசாட்சியே உனக்கு இல்லடா. நான் மதியம் வந்து உன்னை எத்தனை முறை எழுப்பினேன் தெரியுமா? நீ நல்லா கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு என்னை குற்றம் சொல்றீயா? சாப்பாடு எங்கே கெட்டு போய்டுமோன்னு நான்தான் எல்லா சாப்பாட்டையும் கஷ்டப்பட்டு சாப்பிட்டேன் தெரியுமா?. அப்பறம் என்ன சும்மா … சும்மா அத்தை .. அத்தைனு சொல்ற ‘ இன்னொரு முறை அத்தைனு உன்னுடைய வாயில் இருந்து எதாவது வரட்டும் “அப்படியே இழுத்து வச்சி உன்னுடைய நாக்கை அறுத்து விடுவேன் ” அவளுக்கும் தெரியாமல் சிறு பொறாமை எட்டிப்பார்த்தது அவளின் உள்ளே இருந்து. இப்ப என்ன சாப்பாடு தானே வேண்டும் நான் சமைக்கின்றேன் கொஞ்ச நேரத்தில் சுட… சுட வந்து சாப்பிடு என்று கூறிவிட்டு வேகமாக பாத்ரூம் சென்றாள் .
சரியான கொலைகாரியா இருப்பா போல’ இவ இப்ப முகம் கழுவு பாத்ரும் போய்ட்டா நாம இப்படியே ஓட்டல் போகலாம் என நினைத்துக்கொண்டே தெரிவில் நடக்க ஆரம்பித்தான்.
முகம் கழுவிக்கொண்டு வந்தவள் ” உதி எங்க இருக்க ? உனக்கு நைட் சாப்பிட சாப்பாடு என்ன சமைக்க ?” அவன் அங்கு இருந்தால் தானே பதில் சொல்ல ? வீடு முழுவதும் தேடிப் பார்த்தவள் அவன் இல்லாமல் போக “வெளியே எங்கேயாவது போய் இருப்பாரு என நினைத்துக்கொண்டு மற்ற வேலைகளை பார்க்க தொடங்கினாள்.
வீட்டைவிட்டு வெளியே வந்தவனுக்கு அந்த ஊரில் ஓட்டல் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. சரி இப்படி நடந்து பஸ்ஸ்டாண்ட் போனால் அங்கு கண்டிப்பாக ஓட்டல் இருக்கும் என நினைத்து நடந்துக் கொண்டு இருந்தான்.
அங்கு தெருவில் உட்கார்ந்துக் கொண்டு வருவோர் போவோரை வேடிக்கைப் பார்த்தபடி கதை அளந்து கொண்டு இருந்தனர் வயதான பாட்டிகள்.
ஏன்டி , கமலா இவன் நம்ம ரத்னவேல் மருமவன் தானே ?
ஆமா பேபி மா என்றார் இன்னொரு பாட்டி.
பேபி, ஏன்டி இவன் பார்க்க ராசா கணக்கா இருக்கான் பாரு. அந்த காலத்தில் எம்புருசனும் இப்படிதான் ராசாவாட்டம் இருந்தாரு. இப்ப நிம்மதியா மண்ணுல போய் படுத்துக்கொண்டு உறங்குறாரு.
கமலா, இன்னைக்கு காலையில் கூட அவங்க வீட்டு தோட்டத்தில் ஏதோ உடம்பை வளைத்து வித்தை எல்லாம் காட்டிக்கொண்டு இருந்தானாம் ஊரு ஜனமே அங்க தான் இருந்தது.
பேபி, “ஆமாம் டி ” என்ற பேத்தி கூட வீட்டுக்கு வந்து சொன்னா. அந்த பயங்கர வித்தைக்காரன் இவன் தானா!
கமலா, அதனால தான் நுவலியை இவனுக்கு கல்யாணம் பண்ணி குடுத்து இருக்காங்க இல்லைனா ரத்னம் இவனுக்கு எப்படி அவன் பொண்ணை குடுத்து இருப்பான்?
பேபி, நீ சொல்றதும் சரிதான் டி. என்ற பேத்திக்கும் இம்புட்டு அழகாக இருக்கிற பையன் மாதிரி தான் கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்.
கமலா, “ஆமாம் டி ” பார்க்க தேக்கு மரம் போல உயர்ந்து எப்படி இருக்கான் பாரேன்.
உதிரன், தன்னுடைய மனதிற்குள் ‘ இவங்க இந்த வயதிலும் எப்படி இப்படி டீன் ஏஜ் பெண்களைப் போல பேசுறாங்களோ தெரியவில்லை?’ எப்பா இவங்க புருசனை எல்லாம் என்ன ஓட்டு ஓட்டி இருப்பாங்கள்? இவங்களுக்கு கடவுள் ஒரு வாயை மட்டும் குடுக்க வில்லை? பல பேரோட வாயையும் சேர்த்து குடுத்து இருக்காரு போல! நம்ம தூரமா இருக்கும் போதே இத்தனை கமெண்ட் குடுக்குறாங்க , நாம அவங்ககிட்ட பேசிட்டா போதும் நம்மளை ஒரு வழி ஆக்காம விட மாட்டங்க போல! அவங்க யாராவது கூப்பிட்டாலும் காது கேட்காத மாதிரியே போய் விடனும் என்று நினைத்தவன் வேகமாக அங்கிருந்து போய்விட்டான்.
அந்த ஊரில் ஒவ்வொரு வீட்டையும் தெருவில் செல்லும் போதே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அப்பொழுது ஒரு வீட்டின் முன்பு ஒரு கணவனும் மனைவியும் வாக்குவாதம் செய்துக்கொண்டு இருந்தனர்.
இங்க பாரு யா ‘ நான் வீட்டில் என்ன சமைக்கின்றேனோ அதைத்தான் நீ சாப்பிடனும்.
நீ சமைக்கிற சாப்பாட்டை மனுசன் சாப்பிடுவானா டி?
எனக்கு சமைக்க வே தெரியாது யா. உன்னை கட்டிக்கிட்டு தான் சமையல் கட்டு எந்த பக்கம் இருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன்.
உங்க வீட்ல உன்னை ஒழுங்கா வளர்க்கவில்லை. புருசனுக்கு சாப்பாடு கூட செய்து போட சொல்லித்தர வில்லை.
உனக்கு சாப்பாடும் ஒழுங்கா செய்யத் தெரியவில்லை. எங்க அம்மா ஊருக்கு போயிட்டாலே நான் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டு தான் உயிர் வாழனும் போல. உன்னை கட்டியதற்கு என்ற மாமன் மகள் நுவலியை கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரம் எனக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போட்டு இருப்பா தெரியுமா?
இதைக்கேட்ட உதிரனுக்கு புறை ஏறியது. “என்னது வாய்க்கு ருசியா சமைத்து போட்டு இருப்பாளா ?” சரியான காமடியா பேசுறான்.
ஆமாம் யா நீ சொல்ற மாதிரியே உன்ற மாமன் மகளை கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டியது தானே!
நானா வேண்டாம்னு சொன்னேன்.
என்ற மாமன் தான் உனக்கு எல்லாம் என்ற மகளைத் தர முடியாதுனு சொல்லிட்டாரு.
ஊர்ல ஒரு ஏக்கர் நிலத்தை வச்சிக்கிட்டே இப்படி பேசுற அவங்களுக்கு ஊர்ல பாதி நிலம் சொந்தம் . உனக்கு அவங்க பொண்ணு கேட்குதா? நானாவது எதோ சமைத்து போடுறேன். அந்த நுவலி இதுவரைக்கும் ஒரு டீயாவது போட்டு இருக்காளானு தெரியுமா? அவளுக்கு சாப்பாடு செய்ய என்ன செய்யனும்னு ஒன்னுமே தெரியாது அது உனக்கு தெரியுமா? அவளை அவங்க வீட்ல மெடல்கள் பல வாங்கி வச்சி இருக்கா அது தெரியுமா? நீயோ படிக்காத அரைவேக்காடு உனக்கு நான் கிடைச்சதே அதிகம் இதுல நல்லா படிக்கிற பொண்ணு கேட்குதா உனக்கு?
உனக்கு எம்புட்டு கொழுப்பு இருந்தா எம்முன்னாடியே இன்னொருத்தி பத்தி பேசுவ? இனிமே நான் சாப்பாடு செய்யமாட்டான். நீ எப்ப தெருவில் வந்து என்னை அசிங்க படுத்தும் விதமா “எனக்கு ஒழுங்கா சமைக்க தெரியவில்லைனு சொன்னீயோ? இனிமே நீயே சமைத்து சாப்பிடு . உன்னால முடியவில்லைனா ஓட்டல் போய் சாப்பாடு வாங்கி வா எனக்கும் சேர்த்து புரிந்ததா ?” அவள் கோவமாக பேசிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றுவிட்டார். அவனும் பின்னாடியே முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு சென்றான்.
உதி, நமக்கும் இன்னும் வாழ்க்கை இருக்குடா. அவளுக்கு சமைக்க தெரியவில்லைனா என்ன? நாம சமைப்போம். நாம ஓட்டல் போய் சாப்பிட்டால் அவளுடைய இமேஜ் என்னாவது ? அவளுக்கு சமைக்க தெரியவில்லைனாலும் என்னுடைய பொண்டாட்டி தான். அவ இன்னைக்கு தானே முதன் முறையா சமைக்கப் போறேன் என்றாளே எதாவது தப்பா நடக்கும் முன்னாடி நாம வீட்டுக்கு போகனும் என்று நினைத்தவன் வேகமாக வீட்டை நோக்கி நடந்தான். வீட்டிற்கு வரும் வழியில் எல்லாம் ” அவளுக்கு எதுவும் ஆகி இருக்க கூடாது கடவுளே!” என்று வேண்டிக்கொண்டே வேகமாக வீட்டிற்கு வந்தான்.
நுவலி, காய்களை எடுத்து காய்கறி வெட்டும் கட்டையில் வைத்து கத்தியால் வெட்ட அதில் இருந்து ஒரு துண்டு காய் பறந்தது சரியாக அந்த நேரம் உதிரன் பிடித்துவிட்டு காய்களைப் பார்த்தான்.
உதி, ஏன்டி’ இப்படி காய்களை கொலைப் பண்ணிக்கொண்டு இருக்க? எதுக்கு இவ்வளவு காய்களை எடுத்து வச்சி இருக்க? தெருவில் போய் காய்களை விற்க போறியா? உனக்கு சமைக்க தான் தெரியாதுனு பார்த்தா ஒரு காய் வெட்ட கூட தெரியாதா? எல்லாம் என் நேரம் டி. உன்னை வச்சிகிட்டு இன்னும் என்னென்ன கஷ்டம் எல்லாம் படவேண்டிய இருக்கோ தெரியவில்லை?.
அவளின் முகம் சுருங்கி விட, அமைதியாக தலையை குனிந்த படியே இருந்தாள். தன்னுடைய கையில் இருந்த கத்தியை கொஞ்சம் …. கொஞ்சமாக இருக்கி பிடிக்க , அதைப் பார்த்தவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. வேகமாக அவளிடம் இருந்து கத்தியை வாங்கியவன் ” இந்த கோவத்திற்கு மட்டும் ஒன்னும் குறை இல்லை” கத்தியை இன்னும் கொஞ்சம் அழுத்தி பிடித்து இருந்தால் என்ன ஆகி இருக்கும்னு தெரியும் தானே? நீ படிச்ச பொண்ணு தானே? அவன் கோவமாக கத்த,
அங்கிருந்து புறப்பட எழுந்து நின்றாள் நுவலி.
உதி, “அடேய் என்னடா பண்ற ? அவளை திட்டவா அங்கிருந்து வேகமா வந்த? அவளுக்கு தான் எதுவுமே சமையலை பத்தி தெரியாதே? தன்னைத்தானே கடிந்து கொண்டவன்” அவளின் அருகில் வேகமாக சென்று அவளின் கையை பிடித்து தன்புறமாக இழுத்தவன் அவளின் தாடையை பிடித்து தன்னுடைய முகத்தைப் பார்க்கும்படி செய்தான். அவள் கலங்கிய கண்களோடு அவனைப் பார்க்க . அவனோ “சாரி டி” உனக்கு சமைக்க தெரியாதுனு சொன்ன ஆனால் எனக்காக சமைக்க முயற்ச்சி பண்ணதே எனக்கு சந்தோஷம் தான். உன்னை கத்தியோடு பார்த்தேனா அதான் கொஞ்சம் பதட்டத்துல கத்தி விட்டேன் டி . கொஞ்சம் சத்தமாக பேசியதற்கே கண்கள் எல்லாம் என் பொண்டாட்டிக்கு கலங்கி விட்டது இன்னும் எதிர்காலத்தில் எல்லாம் எப்படி இருப்ப ?.
அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் , நான் ரொம்ப பயந்து விட்டேன் டா .உன்னுடைய அக்கறை என்னை கொஞ்சம் இல்ல ரொம்ப பயப்பிட வைக்கிறது.
சரி பொண்டாட்டி வாங்க போய் சமைக்கலாம். நீங்க அமைதியா உட்காருங்க நான் உங்களுக்கு சமைத்துக் கொடுக்கின்றேன் சரியா. அவளும் சரி என்று தலையை ஆட்ட, அரிசியை ஊரவைத்து வேகமாக காய்கறிகளை நறுக்கியவன் சிறிது நேரத்தில் நறுக்கிய வெங்காயம் தக்காளி பூண்டு விழுது சேர்த்து வதக்கினான். சிறிது நேரத்தில் நறுக்கிய காய்களையும் சேர்த்து வதக்கி விட்டு அரிசியை நன்கு கழுவி காய்கறிகளுடன் போட்டு தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி வைத்தான். நுவலி , எல்லாத்தையும் ஆர்வமாகவும் அதிசயமாகவும் பார்த்துக்கொண்டு இருந்தாள் . அரைமணி நேரத்தில் சாப்பாடு ரெடியாகி தட்டில் போட்டுக்கொண்டு அவளின் அருகில் வந்து உட்கார்ந்துக் கொண்டு அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான்.
சாப்பாட்டை சாப்பிட்டவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை? அவனின் கண்ணத்தில் முத்தம் வைத்தவள் ” சாப்பாடு சூப்பரா இருக்கு டா! உன்னை மாதிரி ருசியா சமைத்து போடுற புருசன் எனக்கு கிடைக்க நான் ஏதோ புண்ணியம் பண்ணி இருக்கேன் டா.
அவன் சிரித்துக்கொண்டே உனக்கு என்னதான் தெரியும் டி?
எனக்கு என்னோட புருசனை நல்லா சைட் அடிக்க தெரியும்.
அவன் அவளை முறைக்க.
சரி …. சரி முறைக்காதே! எனக்கே நீ ஊட்டிக் கொண்டு இருந்தது எல்லாம் போதும் எனக்கு வயிறு நிரம்பி விட்டது. நான் இப்ப உனக்கு ஊட்டுவேன் நீ சாப்பிடு என்று அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். அவனும் சாப்பிட்டு விட்டு இருவரும் கைகழுவி கொண்டு சமையல் கட்டை சுத்தம் செய்துவிட்டு உட்கார்ந்துக் கொண்டனர். அவனின் தோளின் மீது தலை சாய்த்தவள் ” எனக்கு படிக்கிறது . சாமி கும்பிடுவது, எதாவது ஆராய்ச்சி பண்றது இதுதான் எனக்கு பிடிக்கும் . சின்ன வயதில் இருந்தே எனக்கு முன்னாடி ரெடியா சாப்பாடு இருக்கும் அதனால சமைக்க நான் நினைத்தது இல்லை. எனக்கு ஓட்டல் சாப்பாடு பிடிக்காது , எப்பவுமே எனக்கு வீட்டு சாப்பாடு தான். எனக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வம் மற்ற விசயங்களில் இல்லாமல் போய்விட்டது அதற்கு நான் என்னப் பண்றது? அவன் சிரித்துவிட.
எதுக்கு இப்ப நீ சிரிக்கிற?
அவளின் உதட்டை பிடித்து “இந்த வாய் தான் இல்லாமல் போனால் உனக்கு என்ன ஆகும்னு நினைத்துப் பார்த்தேன் சிரிப்பு வந்து விட்டது டி.
போடா எருமை. இருவரும் இப்படியே பேசிக்கொண்டே இருக்க மணி பதினொன்று எனக் காட்டியது .
நுவலி, எனக்கு தூக்கம் வருது வா போய் தூங்கலாம் .
ஆமாம் தூக்கம் தான் முக்கியம் நீங்க போய் படுத்துக் கொள்ளுங்கள் நான் போய் கதவு எல்லாத்தையும் மூடி விட்டு வருகின்றேன். கதவு எல்லாத்தையும் மூடிவிட்டு தங்களின் அறைக்கு செல்ல அங்க நுவலி இல்லை . தீடீரென விளக்கு அணைக்கப்பட்டு அந்த அறையின் கதவு சாத்தப்பட்டதும் திருடன் தான் வந்துவிட்டானோ என நினைத்து அருகில் எதாவது இருக்கிறதா என தேட ஆரம்பித்தான். அந்த நேரத்தில் அவனை இறுக்கமாக அணைத்தபடி ” மாமா ஐ லவ் யு டா என்று அவனின் உதட்டில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்”. சில நொடிகள் சாக் அடித்தது போல இருந்தது அவனுக்கு பிறகு தன் நிதானம் செய்துக்கொண்டு அவளைப் பார்க்க அந்த மங்கிய வெளிச்சத்தில் அவளின் முகம் சிவந்து காணப்பட்டது . அச்சிவப்பை மறைக்க அவனின் மார்பினில் தலையை புதைத்துக் கொண்டாள் .அவர்களின் இல்வாழ்க்கை இன்பமாக தொடங்கியது இனிதே!!