ரன்வீரின் அறை வாசலில் நின்றிருந்த மீரா தயக்கத்துடன் கதவுப் பிடியில் கை வைத்துத் திறக்க, அதுவோ சட்டெனத் திறந்து கொண்டது.
மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து உள்ளே சென்றவளுக்கு அவ் அறையின் விசாலம் ஆச்சரியத்தை அளித்தது.
அவ் அறை மட்டுமே அவளின் வீட்டின் பாதி இடத்தைப் பிடித்து விடும்.
மீரா நின்ற வண்ணமே அவ் அறையைச் சுற்றி வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் குளியலறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்தவள் பார்த்த மாத்திரத்திலேயே அவசரமாக மறுபக்கம் திரும்பி நின்று கொண்டாள்.
ஏனெனில் ரன்வீரோ குளித்து இடையில் ஒரு டவலை மற்றும் சுற்றிக் கொண்டு வெளியே வந்தவன் அங்கு மீராவை எதிர்ப்பார்க்கவே இல்லை.
அதன் பின் தான் நிதர்சனம் உரைக்க, போதாக்குறைக்கு மீராவின் செயலில் அவனின் முகத்தில் ஒரு நக்கல் சிரிப்பு தோன்றி மறைந்தது.
“ஓ… இனிமே உன் கூட தான் நான் ரூம ஷேர் பண்ணணுமா?” என இளக்காரமாகக் கேட்டவன் மீராவின் முன் வந்து நின்று அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தான்.
இடையில் ஒரு டவலுடன் மட்டும் தனக்கு முன் வந்து நின்றவனைக் கண்டதும் மீரா அவசரமாகக் கண்களை மூடிக் கொள்ள, “ஓஹோ… அவ்வளவு நல்லவளா நீ?” எனக் கேலியாகக் கேட்ட ரன்வீரின் கவனம் மீராவின் இதழில் இருந்த சிறு மச்சத்தில் பதிந்தது.
அம் மச்சம் ரன்வீரை ஏதோ செய்ய, அவனின் கரம் தன்னால் அதனை நோக்கி நீண்டது.
மீராவின் இதழ்களை ரன்வீரின் விரல்கள் தீண்ட நூலளவு இடைவெளி இருக்கும் போது சட்டென தன்னிலை அடைந்த ரன்வீர் அவசரமாகத் தன் கரத்தைப் பின்னோக்கி இழுத்தான்.
மறு நொடியே மீராவை விட்டு சில அடிகள் தள்ளி நின்றவன், “ஹேய்…” எனச் சொடக்கிட்டு மீராவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினான்.
ரன்வீரின் பக்கம் திரும்பி நின்று கொண்ட மீரா இப்போதும் கூட அவனின் முகத்தைப் பார்க்காது தரையை நோக்கிய வண்ணமே நின்றிருந்தாள்.
அதனைக் கண்டுகொள்ளாத ரன்வீர், “இங்க பாரு. எங்க அம்மாவுக்காக மட்டும் தான் நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மத்தபடி எனக்கு உன்ன சுத்தமா பிடிக்காது. ஐ ஹேட் யூ டு தி கோர். முதல்ல எனக்கு ஒரு விஷயம் சொல்லு. உனக்கும் எனக்கும் எந்த விதத்துல பொருந்தும்?” எனக் கோபமாகக் கேட்டவன் நொடியில் மீராவின் கரத்தை இழுத்து அழுத்தமாகப் பற்றிக்கொண்டு, “பாரு… நல்லா பாரு… பொருத்தமா? பொருத்தமா?” என இருவரின் நிறத்தையும் சுட்டிக்காட்டி வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
ஒரு பக்கம் ரன்வீரின் பிடி வலியைக் கொடுக்க, இன்னொரு பக்கம் அவனது வார்த்தைகள் மீராவை உயிருடன் வதைத்தன.
“வ…வலிக்கிது. வி..டுங்க.” என மீரா கண்ணீருடன் கெஞ்ச, அவளின் கரத்தை உதறித் தள்ளியவன், “எனக்கும் தான் டி வலிக்கிது. ஒரு படிக்காத பட்டிக்காட்ட கல்யாணம் பண்ணிக்க வேண்டி வந்ததேன்னு எனக்கும் தான் டி வலிக்குது. ச்சே… இங்க பாரு. எனக்கு உன்ன சுத்தமா பிடிக்காது. இனிமேலும் பிடிக்கப் போறது கிடையாது. அதனால இதை நல்லா மைன்ட்ல ஏத்தி வெச்சிக்கோ. எந்த நிலைமையிலும் நீ என் கிட்ட ஒரு பொண்டாட்டியா எந்த உரிமையும் கேட்கக் கூடாது. எதிர்ப்பார்க்கவும் கூடாது. எப்போவுமே கூடாது. முக்கியமா நம்ம கல்யாண விஷயம் வெளிய தெரியக் கூடாது. என் அம்மாவ கைல போட்டு வெச்சிக்கிட்டு என்னை ஆட்டிப் படைக்கலாம்னு நினைக்காதே. அது இந்த ஜென்மத்துல நடக்காது. நமக்குள்ள நடக்குற விஷயம் நமக்குள்ளவே இருக்கணும். என் அம்மா, அப்பா வரை போச்சுன்னா உன்ன சும்மா விட மாட்டேன். அப்புறம் இன்னொரு விஷயம். எப்படியோ பெரிய இடமா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்ட. அதனால நல்லா எல்லாத்தையும் அனுபவிச்சுக்க. இந்த வீட்டுல நீ எங்கே வேணா போகலாம். எதை வேணா தொடலாம். ஆனா இந்த ரூம்ல… என் ரூம்ல என் பர்மிஷன் இல்லாம எதையுமே தொடக் கூடாது நீ.” என்றான் ரன்வீர் கடுமையான குரலில்.
அதனைக் கேட்டு மீராவால் சம்மதமாகத் தலையாட்ட மட்டும் தான் முடிந்தது.
வேறு என்ன செய்து விட முடியும் அவளால்?
இதையெல்லாம் எதிர்ப்பார்த்துத் தான் திருமணமே செய்தாள்.
ஆனால் நிஜத்தில் நடக்கும் போது அதிகமாகவே வலித்தது.
பின் ரன்வீர் அவனின் வாட்ரோபைத் திறந்து ஒரு போர்வையும் தலையணையையும் எடுத்து சோஃபாவில் எறிந்தவன், “இதோ… இனிமே நீ இதுல தான் தூங்கணும். பொண்டாட்டி ஆச்சேன்னு பெட்ல சரிசமமா இடம் கேட்குறது எல்லாம் இருக்கக் கூடாது. என் பெட்ல மட்டும் இல்ல. என் வாழ்க்கைலயும் உனக்கு இடம் இல்ல. அப்புறம் இன்னொரு விஷயம். முடிஞ்ச மட்டும் நான் வீட்டுல இருக்கும் போது என் கண்ணுல படாம இரு. உன்ன பார்க்கவே எனக்கு எரிச்சலா இருக்கு.” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பி விட்டு கதவை அடித்து சாத்திக் கொண்டு வெளியேறினான்.
மீராவை விட்டு விட்டு ரன்வீர் சென்றதும் சோஃபாவில் தொய்ந்து அமர்ந்த மீரா சத்தம் வராமல் கண்ணீர் வடித்தாள்.
பின் அதற்கும் சேர்த்து ரன்வீர் கோபப்படுவானே.
ஏற்கனவே நேரம் நள்ளிரவைக் கடந்திருக்க, மீரா அழுதழுதே உறங்கிப் போனாள்.
இங்கோ ரன்வீரோ யார் மீது தன் கோபத்தைக் காட்டுவது எனத் தெரியாமல் ஆற்றாமையுடன் அமர்ந்திருந்தான்.
முழுப் போதையில் இருந்த ரன்வீர் அவனைப் போலவே போதையின் பிடியில் இருந்த மீராவின் கற்பை மொத்தமாகக் கொள்ளையடித்து விட்டே அவளை விட்டான்.
இருவருக்கும் இடையில் வெகுநேரம் நடந்த வன்மையான சங்கமத்தின் அத்தாட்சியாக இருவரின் உடலிலும் மாறி மாறி அவர்கள் பதித்துக் கொண்ட அச்சாரங்கள் ஆழப் பதிந்து இருந்தன.
ரன்வீரின் மார்பில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த மீராவிற்கு எங்கோ தூரத்தில் அவளது கைப்பேசி ஒலி எழுப்பும் சத்தம் கேட்கவும் இமைகளைக் கூடப் பிரிக்காமல் தட்டுத் தடுமாறி கைகளால் துலாவி கைப்பேசியைத் தேடி எடுத்து அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“எங்க டி போய் தொலைஞ்ச?” என மறு முனையில் மீராவின் தோழி ஒருத்தி வசை மாரி பொழிய, அதில் கொஞ்சம் கொஞ்சமாக மீராவின் போதை தெளியத் தொடங்கியது.
“ம்ம்ம்… கத்தாதே. வரேன் டி.” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்கு உடலெல்லாம் அடித்துப் போட்டது போல் வலி.
தலை வேறு பாரமாக இருக்க, மெதுவாக இமைகளைப் பிரித்தவள் கண்டது என்னவோ அவளுக்கு மிக நெருக்கத்தில் இருந்த ரன்வீரின் முகத்தைத் தான்.
அதிர்ச்சியில் பட்டென அவனை விட்டு விலகியவள் அதன் பின்னர் தான் அவள் இருக்கும் கோலத்தைக் குனிந்து பார்த்தாள்.
“ஐயோ…” எனப் பதறிக் கொண்டு வேகமாகப் போர்வையால் தன்னை சுற்றிக் கொண்டவளுக்கு அதன் பின்னர் தான் போதையில் நடந்தவை எல்லாம் நினைவுக்கு வந்தன.
“என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க மீரா?” எனத் தன்னையே கடிந்து கொண்டவளுக்கு லேசாக இமையோரம் ஈரம் படர்ந்தது.
அவள் கனவில் கூட இப்படி ஒரு நிலையை எதிர்ப்பார்க்கவில்லை.
‘இவர் எப்படி இங்க?’ என யோசித்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை.
அவளது கைப்பேசி வேறு மீண்டும் ஒலி எழுப்பவும் ரன்வீர் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் அவசரமாக அதனைத் துண்டித்து விட்டவள் வேகமாக தன் உடைகளைத் தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.
தன் கைப்பேசியையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புவதற்காக அறை வாயில் வரை சென்ற மீரா என்ன நினைத்தாளோ மீண்டும் உறங்கிக் கொண்டிருந்த ரன்வீரின் அருகில் வந்து அவனைக் கண்களில் நிரப்பிக் கொண்டு, “நீங்க கண் விழிச்சதுக்கு அப்புறம் உங்களுக்கு என்ன ஞாபகம் இருக்குமாங்க? ஒருவேளை ஞாபகம் இருந்தா என்னைத் தப்பான பொண்ணா நினைப்பீங்களா? வேணாம். என் முகம் உங்களுக்கு ஞாபகம் வராமலே போகட்டும்.” என்றவள் குனிந்து ரன்வீரின் நெற்றியில் ஆழமாக ஒரு முத்தத்தைப் பதித்து விட்டு விலக முயல, மீராவை விலக விடாது அவளின் இடுப்பை வளைத்துப் பிடித்துக் கொண்ட ரன்வீரோ, “சனா… போகாதே. என் கூடவே இரு.” என உறக்கத்தில் உளறவும் தீச் சுட்டார் போல் விலகினாள் மீரா.
அவளின் விழிகள் கண்ணீரால் குளம் கட்ட, அதன் பின் தான் இருவரும் உடலால் இணைந்த நேரம் ரன்வீரின் வாயில் இருந்து வார்த்தைக்கு வார்த்தை ‘சனா’ என்ற பெயர் வந்தது மீராவுக்கு நினைவுக்கு வந்தது.
போதையில் இருந்தவளுக்கு ரன்வீரின் வாயில் இருந்து வேறு ஒரு பெண்ணின் பெயர் வந்தது பெரிதாகப் பாதிக்காவிட்டாலும் நினைவு தெளிந்த பின் மீராவுக்கு தன்னை நினைத்தே அருவருப்பாக இருந்தது.
வேறு ஒரு பெண்ணின் நினைவில் தன்னை நெருங்கியவனிடம் தன்னை மொத்தமாக இழந்ததை எண்ணி கூனிக் குறுகி நின்றாள்.
ரன்வீரை முதல் முறை திரையில் பார்த்ததும் தன் முறைப் பையன் என்பதையும் தாண்டி அவனைப் பார்த்ததுமே பிடித்து விட்டது மீராவுக்கு.
இருந்தும் அவன் எப்போதும் தனக்கு எட்டாக்கனி தான் என்று மனதைத் தேற்றிக் கொண்டவள் சனாவையும் ரன்வீரையும் இணைத்து வைத்து வரும் செய்திகளைக் கண்டு மனம் வலித்தாலும் அவர்கள் இருவருக்குமே நல்ல பொருத்தம் தான் என்று பலமுறை அவளே எண்ணி உள்ளாள்.
இப்போது தன் மனம் கவர்ந்தவனின் வாயில் இருந்தே சனாவின் பெயர் வரவும் பேதைப் பெண்ணால் அதனைத் தாங்க முடியவில்லை.
கண்ணீருடனேயே அங்கிருந்து கிளம்பியவள் தோழிகள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காது வீடு வந்து சேரும் வரை அமைதியாவே இருந்தாள்.
வீட்டுக்கு வந்த பின்னும் ரன்வீருடன் இருந்த நினைவுகளே அவளை வாட்ட, எக் காரணம் கொண்டும் இனி யாரையும் திருமணம் செய்யப் போவதில்லை என முடிவெடுத்தாள்.
என்ன தான் ரன்வீரின் மனதில் வேறு ஒருத்தி இருந்தாலும் மீராவின் மனம் முழுவதும் அவளவனே நிரம்பி இருக்க, அவனிடம் தன்னை மொத்தமாக இழந்த பின் வேறு திருமணம் செய்தால் அது தான் திருமணம் செய்பவனுக்கு செய்யும் பெரும் அநீதி ஆகி விடும் என்பதால் தான் மீரா அம் முடிவை எடுத்ததே.
ஒரு பக்கம் எங்கு கர்ப்பம் தரித்து விடுவோமோ என்றும் பயமாகவும் இருந்தது.
அப்படி மட்டும் நடந்தால் அவளது பெற்றோரால் நிச்சயம் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது உயிரை மாய்த்துக் கொள்வார்கள் என்பதை அறிவாள் அவள்.
அடுத்த முறை அவளுக்கு மாதவிடாய் வரும் வரையிலுமே மீரா பயந்து கொண்டு தான் இருந்தாள்.
அதன் பின் தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
அடுத்து வந்த நாட்களில் ரன்வீரின் நினைவுகளை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு சாதாரணமாக வலம் வந்த மீராவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது காயத்ரியின் வரவு.
தந்தைக்கு ஒன்று விட்ட சகோதரி என்பதையும் தாண்டி தன் மனம் கவர்ந்தவனின் தாய் என்பதால் தான் திருமண வீட்டில் வைத்து மீரா காயத்ரியைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டது.
ஆனால் அதுவே அவளுக்கு வினையாக வந்து நிற்கும் என மீரா எதிர்ப்பார்க்கவில்லை.
தந்தையின் வாயிலாக காயத்ரியின் விருப்பத்தை அறிந்த மீராவுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் இத் திருமணம் நடந்தால் மனதின் அடி ஆழத்தில் இவ்வளவு நாளும் போதையில் தன்னையே இழந்து விட்டோமே என்ற குற்றவுணர்வு நீங்கி விடும் என்ற எண்ணம் வருவதைத் தடுக்க இயலவில்லை.
ஆனாலும் ரன்வீரின் மனதில் வேறு ஒரு பெண் இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியும் எழுந்தது.
எப்படியும் ரன்வீர் இத் திருமணத்தை மறுத்து விடுவான் என மீரா நினைக்க, அவன் சம்மதித்து விட்ட செய்தி அதிர்ச்சியாக இருந்தது.
இருந்தும் ரன்வீருடன் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேசாமல் அவளால் இத் திருமணத்தில் முழுதாக ஒன்ற முடியாது என்று அதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தாள் மீரா.
ஆனால் அவளுக்கு அந்த சந்தர்ப்பமே வாய்க்கவில்லை.
அதுவும் ரன்வீர் காயத்ரியிடம் பேசியதைக் கேட்ட பின் மீண்டும் அவளது மனம் பழையபடி குழம்பியது.
ஆனால் அவளது பெற்றோரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக் கண்ட பின் அவளாலும் இத் திருமணத்தை நிறுத்த முடியாமல் நடப்பது நடக்கட்டும் என அனைத்தையும் அதன் போக்கில் விட்டாள்.
மறுநாள் காலை கண் விழித்த மீரா இதனை எல்லாம் எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்க, முன் தினம் இரவு எங்கோ கிளம்பிச் சென்ற ரன்வீர் அப்போது தான் வீடு திரும்பி இருந்தான்.
இரவு முழுவதும் உறங்காததால் கண்கள் சிவக்க வந்திருந்தவனைக் காணும் போது மீராவுக்கு குற்றவுணர்வாக இருந்தது.
ரன்வீர் என்ன தான் மீராவை வார்த்தைகளால் வதைத்தாலும் அவனை மனதில் நிரப்பிக் கொண்டிருந்தவளால் ரன்வீரின் வலியை உணர முடிந்தது.
அதனாலேயே அவனுக்காக வருத்தப்பட்டாள் பேதை.
இது தான் காதலா?
அறைக்குள் நுழைந்த ரன்வீரோ மீராவை ஏறெடுத்தும் பார்க்காது தன் உடைகளை எடுத்துக் கொண்டு நேராக குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவன் வெளியே வரும் வரை மீரா அங்கேயே அமர்ந்திருக்க, குளித்து உடை மாற்றி வந்தவனோ வந்த வேகத்தில் கிளம்பிச் சென்றான்.
அதன் பின் தான் மீரா தன் வேலைகளை முடித்துக் கொண்டு கீழே இறங்கினாள்.
மணி வேறு பத்தைக் கடந்திருக்க, முதல் நாளே இவ்வளவு நேரம் தூங்கிய தன்னை மனதில் அர்ச்சித்துக் கொண்டு நடந்தவளுக்கு காயத்ரி வேறு என்ன கூறுவாரோ எனப் பயமாக இருந்தது.
ஆனால் அவரோ மீராவைக் கண்டதும், “அட… மீராம்மா… எழுந்துட்டியா? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி இருக்கலாமே.” என்றார் காயத்ரி பரிவாக.
“இ..ல்ல அத்தை. ரொம்ப நேரம் தூங்கிட்டேன். மன்னிச்சிடுங்க. வழமையா சீக்கிரம் எழுந்திருப்பேன். இன்னைக்கு என்னாச்சுன்னு தெரியல.” என மீரா தயக்கமாகக் கூறவும், “இதுக்கெல்லாம் யாராவது மன்னிப்பு கேட்பாங்களா? இது உன் வீடு ம்மா. நீ இங்க எத்தனை மணி வரையிலும் தூங்கலாம். யாரும் உன்ன கேள்வி கேட்க மாட்டாங்க. விடி காலைலயே எழுந்திருச்சன்னு இங்க உனக்கு செய்ய பெரிசா எந்த வேலையும் இல்ல. எல்லாத்துக்கும் வேலைக்கு ஆட்கள் இருக்காங்க. உன் புருஷனுக்கும் மாமாவுக்கும் என் கையால சாப்பிடலன்னா திருப்தி இல்ல. அதனால சமையல் மட்டும் நான் பண்ணுவேன். அதுக்கு கூட ஹெல்ப் பண்ண ஆள் இருக்காங்க. அதான் இப்போ நீயும் வந்துட்டியே. ரெண்டு பேரும் சேர்ந்து சமைக்கலாம். சரி நீ வாம்மா. பசியா இருப்ப.” என்ற காயத்ரி மீராவைக் கையோடு அழைத்துச் சென்று உணவைப் பரிமாறினார்.
கணவனின் கோபம் மனதை வாட்டினாலும் இப்படி ஒரு பாசமான குடும்பம் கிடைத்ததில் மீராவுக்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கின.
“என்னாச்சு மா? காரமா இருக்கா? நீ எப்படி காரம் எடுத்துக்குவன்னு எனக்கு தெரியல. இனிமே பார்த்து பண்ணுறேன் மா.” என காயத்ரி கூறவும் அவசரமாக மறுத்துத் தலையசைத்த மீரா, “இல்ல அத்தை. சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு. அப்படியே எங்க அம்மா சமையல் போல.” என்றாள் புன்னகையுடன்.
அதனைக் கேட்டு மனம் நிறையப் புன்னகைத்த காயத்ரிக்கு ஒரே கவலை தன் மகனின் நடவடிக்கைகள் தான்.
முன் தினம் நள்ளிரவில் கிளம்பிய ரன்வீர் காலையில் தான் வீடு வந்து சேர்ந்ததும் வந்து சற்று நேரத்தில் மீண்டும் கிளம்பிச் சென்றதும் என அனைத்தையும் காயத்ரியும் அவதானித்துக் கொண்டு தான் இருந்தார்.
ஸ்ரீனிவாஸன் தான் அவனுக்கு சற்று அவகாசம் கொடுக்கும் படி கேட்டதால் அமைதியாக வேடிக்கை பார்த்தார் காயத்ரி.
இருந்தும் தான் பார்த்துப் பார்த்து செய்து வைத்த திருமணம் இது.
தன் மகனின் செயலால் மருமகள் வாடுவதை அவர் விரும்பவில்லை.
அதனால் தான் மீராவைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டார் அவர்.
Mental RV