ரன்வீர் கிளம்பிச் சென்று சில மணி நேரங்களில் காயத்ரியும் ஸ்ரீனிவாஸனும் வீடு திரும்பி இருந்தனர்.
செய்தியைப் பார்த்ததில் இருந்து இருவருக்கும் தம் மருமகளின் நிலையை எண்ணித் தான் பயமாக இருந்தது.
ரன்வீர் வேறு ஸ்ரீனிவாஸனுக்கு அழைத்து உடனே வீடு திரும்புமாறு கட்டளை இட்டிருந்தான்.
அதனால் தான் பாதியிலேயே இருவரும் திரும்பி வந்து விட்டனர்.
வீட்டுக்குள் நுழைந்த காயத்ரி நேரே மருமகளைத் தேடிச் சென்று அறைக் கதவை வேகமாகத் தட்டினார்.
எங்கு ரன்வீர் தான் திரும்பி வந்து விட்டானோ என மீரா சத்தம் காட்டாது அமைதியாக இருக்க, காயத்ரியோ மருமகளுக்கு என்ன ஆனதோ எனப் பயந்து போனார்.
“மீராம்மா… நான் தான் டா. வந்து கதவைத் திறம்மா.” என காயத்ரியின் குரல் கேட்டதும் தாய் மடி தேடிய சேயாய் ஓடி வந்து கதவைத் திறந்தாள் மீரா.
“அத்தை…” எனக் கதறிக் கொண்டு மறு நொடியே காயத்ரியை அணைத்துக் கொண்டு கதறி அழுதாள் பேதை.
இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த அழுகையை எல்லாம் மொத்தமாக அழுது கரைந்தாள்.
ஏற்கனவே மருமகள் இருந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்து நின்றிருந்த காயத்ரி அவள் வந்து அணைத்துக் கொண்டு கதறவும் மீராவுடன் சேர்ந்து கண்ணீர் விட்டார்.
போதாக்குறைக்கு முன்னிரவு அனுபவித்த கடற்காற்று, இன்று வெகுநேரம் தண்ணீரில் நின்றிருந்தது மட்டும் இல்லாமல் தலையைக் கூட துவட்டாது அமர்ந்திருந்தது எல்லாம் சேர்ந்து மீராவின் உடல் அனலாகக் கொதித்தது.
காயத்ரி அணிந்திருந்த சேலையையும் தாண்டி மீராவின் உடல் உஷ்ணம் அவரைத் தாக்க, பதறிக்கொண்டு மீராவை விலக்கிய காயத்ரி, “என்னம்மா இது கோலம்? இப்படி தான் தலையைக் கூட துவட்டாம ஈரத்தோட இருப்பியா? பைத்தியக்காரி.” என அதட்டியவர் மீராவைக் கையோடு அழைத்துச் சென்று அவரே தலையைத் துவட்டி உடை மாற்றி விட்டார்.
மீரா இன்னுமே அழுது கொண்டிருக்க, “ஷ்ஷ்ஷ்… அழுதா எல்லாம் சரியாப் போய்டுமா? பாரு இப்போ யாருக்கு கஷ்டம்னு? காய்ச்சல வேற இழுத்து விட்டிருக்க. ஏற்கனவே உடம்பு சரி இல்லாம இருக்க. இதுல அழுது அழுது எதையாவது தேடிக்க போறியா?” எனக் கேட்டார் காயத்ரி அதட்டலும் அக்கறையுமாக.
ஒரு கட்டத்தில் மீராவின் அழுகை கேவலாக மாற, “மீராம்மா…” எனக் கவலை தோய்ந்த குரலில் அழைத்த காயத்ரியின் முகம் பார்த்த மீரா, “செ…செத்துடலாம் போல இருக்கு அத்தை. கஷ்டமா இருக்கு.” என்றாள் கண்ணீருடன்.
“என் தங்கமே…” எனப் பதறியவாறு அவளை வாரி அணைத்து கொண்ட காயத்ரி, “என்ன பேச்சு டி பேசுற? பைத்தியக்காரி. இந்த அத்தை உன் கூட இருக்கும் போது நீ ஏன் அழணும்?” எனக் கேட்டார் ஆற்றாமையுடன்.
“வலிக்குதே…” என்ற மீராவுக்கு கண்ணீர் நிற்கவே இல்லை.
“எல்லாம் சரியாப் போயிடும் டா. நீ அழாதே. உன் புருஷன் வீட்டுக்கு வரட்டும். அவனுக்கு இருக்கு.” என்ற காயத்ரியிடம் மறுப்பாகத் தலையசைத்த மீரா, “என்னால அவர் முன்னாடி நிம்மதியா இருக்க முடியாது அத்தை. நெஞ்செல்லாம் அடைச்சிடுது.” என்றாள் அழுகையுடன்.
“சரி… அவன வேற எங்கேயாவது தங்கிக்க சொல்லலாம். இது உன் வீடும்மா…” என ஒவ்வொன்று கூறி அவளை சமாதானப்படுத்த முயன்றார்.
இப்போதும் மறுப்பாகத் தலையசைத்த மீரா, “நா…நான் வந்ததால தான் அவரால அவருக்கு பிடிச்ச மாதிரி அந்தப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்க முடியல. அதனால தான் இதெல்லாம் நடக்குது.” என்றாள் விம்மலுடன்.
அதனைக் கேட்டு காயத்ரிக்கு தன் மகன் மீது தான் கோபம் பீறிட்டுக் கிளம்பியது.
‘முதல் முறை பார்த்த போது புள்ளி மானாய் துள்ளித் திரிந்த பெண்ணை என்ன நிலையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறான் அந்த முட்டாள்.’ மனதுக்குள் மகனை வறுத்தெடுத்தார் காயத்ரி.
“எனக்கு என் வீட்டுக்குப் போகணும் அத்தை. என்னால இங்க இருக்க முடியல. அப்பாவ பார்க்கணும் போல இருக்கு.” என மீரா கண்ணீருடன் கேட்கவும் கண் கலங்கினார் காயத்ரி.
இப் பெண் எந்தளவுக்கு காயப்பட்டு இருந்தால் நாம் இவ்வளவு பாசத்தைக் கொட்டியும் தன் பிறந்த வீட்டு சொந்தங்களைத் தேடுவாள் என எண்ணிக் கலங்கினார் அவர்.
“சரிம்மா… ஈவ்னிங் வரைப் பொறுத்துக்கோ. அதுக்கப்புறம் நானே உன்ன கூட்டிட்டுப் போய் உங்க வீட்டுல விடுறேன்.” என காயத்ரி கூறவும் தலையை உயர்த்தி அவரின் முகம் நோக்கிய மீரா, “அப்போ இனிமே உங்களப் பார்க்க முடியாதுல்ல. நான் உங்களையும் மாமாவையும் மிஸ் பண்ணுவேன்.” என்றாள் உதடு பிதுக்கி.
அவளுள் நடைபெறும் ஹார்மோன் மாற்றத்தால் மீராவால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவள் என்ன அர்த்தத்தில் அவ்வாறு கூறுகிறாள் என்பதை உணர்ந்து அதிர்ந்தார் காயத்ரி.
மொத்தமாக இவ் உறவில் இருந்து விடுதலை பெற நினைக்கிறாளே.
ஆனால் தவறு முழுவதும் அவரது மகன் மீது இருக்கும் போது காயத்ரியும் என்ன தான் செய்வார்?
காயத்ரி மீராவின் தலையைப் பரிவாக வருடி விட, “ஏன் அத்தை என்னை உங்க மருமகளா தேர்ந்து எடுத்தீங்க? நான் தான் உங்க பையனுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லையே.” எனக் கேட்டாள் மீரா கேள்வியாக.
“உனக்கு என்ன தங்கம் குறை? மகாலட்சுமி கணக்காட்டம் இருக்க. எங்க வீட்டு மகாலட்சுமி நீ. என் பையனுக்கு உன்ன விட பொருத்தமான பொண்ணு எங்க தேடினாலும் கிடைக்காது.” என்றார் காயத்ரி அன்பொழுக.
அதனைக் கேட்டு விரக்தியாகச் சிரித்த மீரா, “ஆனா அவருக்கு தான் என்னைப் பிடிக்கவே இல்லையே. ஏன் அத்தை எனக்கு மட்டும் இப்படி நடக்குது? ஏன் அவருக்கு என்னைப் பிடிக்கவே இல்ல? அவருக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காதா?” எனக் கேட்டு மீண்டும் கதறி அழுதாள் பெண்ணவள்.
காயத்ரியாலும் கூட ஒரு கட்டத்தில் அவளைச் சமாதானப்படுத்த இயலவில்லை.
வெகுநேரம் கதறி அழுது கொண்டிருந்த மீராவுக்கு திடீரென மூச்சு வாங்கத் தொடங்க, பதறி விட்டார் காயத்ரி.
ஏற்கனவே காய்ச்சல் வேறு அதிகமாக இருக்க, இப்போது அழுத களைப்பும் சேர்ந்து மீரா அப்படியே மயங்கி விட, காயத்ரிக்கு கை கால் ஓடவில்லை.
நேரம் பார்த்து ஸ்ரீனிவாஸன் கூட வீட்டில் இருக்கவில்லை.
அவரும் வந்ததுமே ரன்வீரைத் தேடிச் சென்றிருந்தார்.
உடனே தம் குடும்ப மருத்துவருக்கு தகவல் தெரிவித்து அவரை வீட்டுக்கே வரவழைத்தார் காயத்ரி.
மீராவைப் பரிசோதித்து ட்ரிப்ஸ் ஏற்றியவர், “ஒன்னும் பயப்படாதீங்க காயத்ரி. சாதாரண மயக்கம் தான். ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்காங்க. ஃபீவர் வேற இருக்கு. அதனால மயங்கி இருக்காங்க. நான் இன்ஜெக்சன் போட்டு இருக்கேன். கொஞ்சம் நேரத்துல கண் விழிச்சிடுவாங்க. எழுந்திரிச்சதும் மறக்காம சாப்பிட ஏதாவது கொடுங்க.” என்று விட்டுக் கிளம்பினார்.
அவர் சென்றதும் மீராவின் அருகிலேயே அமர்ந்து கொண்டவருக்கு குற்றவுணர்வாக இருந்தது.
தான் ரன்வீரைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து இருக்காவிட்டால் இன்று யாருக்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்காதே.
தன் மகனுக்கு நல்லது செய்வதாக எண்ணி ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை அழித்து விட்டேனே என்று வருந்தினார் காயத்ரி.
ஆனால் காலம் கடந்த ஞானத்தால் என்ன பயன்?
காலையில் கிளம்பிச் சென்ற ரன்வீர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
இடையில் கண் விழித்த மீராவுக்கு காயத்ரி உணவை ஊட்டு விட, கொஞ்சமாக உண்டவள் மருந்தின் வீரியத்தில் மீண்டும் உறங்கிக் விட்டாள்.
வெகு நேரம் கழித்து கண் விழித்த மீராவுக்கு அனைத்தும் கனவாக இருந்து விடக் கூடாதா என்று ஏக்கமாக இருந்தது.
ஆனால் அறை இருந்த கோலமே நடந்தது அனைத்தும் நிஜம் எனப் பரை சாற்ற, பெருமூச்சுடன் எழுந்தமர்ந்தாள்.
இப்போது லேசாகக் காய்ச்சல் விட்டிருக்க, இருந்தும் உடல் அசதியாக இருந்தது.
அவள் எழுந்து விட்டதை உணர்ந்து கையில் சூப்புடன் வந்த காயத்ரி அதனை மீராவுக்கு பருக்கி விட, ஒரு வாய் குடித்தவள், “அ…அவர் வந்துட்டாரா அத்தை?” எனக் கேட்டாள் தயக்கமாக.
“எவர்?” என காயத்ரி வேண்டும் என்றே புரியாதது போல் கேட்க, “உ…உங்க பையன் தான்.” என்றாள் மீரா.
“ஓ… உன் புருஷனா? இன்னும் வரல. அவன் கிடக்குறான். நீ இதைக் குடி.” என காயத்ரி கூறவும், “புருஷன் தான்… புருஷன் தான்…” என முணுமுணுத்தாள் மீரா எள்ளலாக.
ரன்வீர் இன்னுமே வீடு திரும்பாதது அவள் மனதை உறுத்த, காலையில் அவன் சொல்லி விட்டுச் சென்ற விதம் வேறு அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது.
மீரா சூப் முழுவதையும் குடித்து முடித்ததும் கோப்பையை வாங்கிக் கொண்ட காயத்ரி, “இந்த டேபிள்ல வெச்சிருக்க டேப்லெட்ஸ போட்டுட்டு சீக்கிரம் ரெடி ஆகுமா.” என்றவரிடம், “எ…என் வீட்டுக்கு போகப் போறோமா?” எனக் கேட்டாள் காயத்ரி குழப்பமாக.
“ம்ம்ம் ஆமா. நீ சீக்கிரம் ரெடி ஆகு.” என்று விட்டுக் கிளம்பவும் சோர்வான முகத்துடன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு கீழிறங்கினாள் மீரா.
அந் நேரம் ஸ்ரீனிவாஸனும் வீடு திரும்பி இருக்க, மீராவைக் கண்டதும் அவள் தலையைப் பரிவாக வருடி விட்டவர், “இப்போ எப்படி இருக்கம்மா? ஃபீவர் இன்னும் இருக்கா?” எனக் கேட்டார் அன்பாக.
“இல்லை மாமா. இப்போ குறைஞ்சிடுச்சு.” என்றவளின் விழிகள் ரன்வீரைத் தேடின.
அதனைக் கண்டும் காணாமல் இருந்தார் ஸ்ரீனிவாஸன்.
தன் கைப்பையுடன் அங்கு வந்த காயத்ரி, “சரி அப்போ போலாமாங்க?” எனக் கேட்டார் கணவனிடம்.
அவரை அதிர்ந்து நோக்கிய மீரா, “இ…இப்போவேவா?” எனக் கேட்டாள் வருத்தமாக.
“ஆமாம்மா. இப்போ போனா தான் சரியா இருக்கும்.” என்ற காயத்ரியிடம், “இ…இல்ல. அவர் வ…வரட்டுமே அத்தை.” என்றாள் மீரா உட்சென்ற குரலில்.
எங்கு தன்னவனை இனி மீண்டும் காணும் சந்தர்ப்பமே வாய்க்காதோ என எண்ணிப் பயந்தவள் ஒரு முறையேனும் அவனை முழுதாகக் கண்களில் நிரப்பிக் கொண்டு செல்ல விரும்பினாள்.
“அதெல்லாம் ஒன்னும் அவசியம் இல்ல மீரா ம்மா. அவன் வந்து என்ன பண்ண? நாம கிளம்பலாம். என்னங்க… நீங்க வண்டிய எடுங்க.” என்ற காயத்ரி மீராவின் கரம் பிடித்து இழுத்துச் சென்றார்.
வேறு வழியின்றி அவருடன் சென்ற மீராவுக்கு கண்களில் குளம் கட்டின.
ஒரு பெரிய அரங்கத்தில் ரன்வீர் மற்றும் சனாவின் புதிதாக வெளிவிடப்பட்ட திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சுற்றியும் கேமராக்கள். அனைத்துமே நேரலையாக ஒலிபரப்பாக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அங்கு தன் காரியதரிசியுடன் வந்து சேர்ந்தாள் சனா.
ஏனைய முக்கிய உறுப்பினர்களும் வந்து சேர்ந்தனர்.
வந்திருந்த செய்தியாளர்களுக்கோ திரைப்படத்தைப் பற்றி அறிந்து கொள்வதை விட ரன்வீர் மற்றும் சனாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது.
சனாவும் கூட அதற்காகத் தான் காத்திருந்தாள்.
இன்று ரன்வீருடன் சேர்ந்து பகிரங்கமாகவே தமக்குள் இருப்பதாக அவள் எண்ணும் உறவை அறிவித்தால் தான் அவளுக்கு ரன்வீரின் வாழ்வில் நிலையாக இருக்க முடியும் என்ற எண்ணம் சனாவிற்கு.
அனைவருமே வந்து விட்டனர் ரன்வீர் மற்றும் தேஜைத் தவிர.
நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு சில நொடிகள் முன்பாக தன் நண்பனுடன் வந்து சேர்ந்தான் ரன்வீர்.
அவன் வந்ததுமே அங்கு சந்தோஷக் கூச்சல் சத்தம் அதிகரித்தது.
செய்தியாளர் சந்திப்பிற்காக அழகாகத் தயாராக வந்திருந்தான்.
சனாவின் பார்வை ரன்வீரை விட்டு எங்கும் அகலவில்லை.
இவ்வளவு ஆணழகனான ஒருவன், அதுவும் பணத்தில் புரள்பவனை அவ்வளவு இலகுவில் விட்டு விட எந்தப் பெண்ணால் இயலும் என்ற எண்ணத்துடன் ரன்வீரை ரசித்தாள் அவள்.
சற்று நேரத்தில் செய்தியாளர் சந்திப்பை ஆரம்பித்து விட, முதலில் திரைப்படத்தைப் பற்றி ஒரு சில கேள்விகளைக் கேட்டவர்கள் அடுத்ததாக தாம் கேட்க விரும்பிய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.
“தொடர்ந்து நீங்களும் சனா மேமும் நடிக்கிற எல்லாப் படமுமே மெகா ஹிட் அடிக்குது. அது பத்தி என்ன நினைக்கிறீங்க?” என ரன்வீரிடம் கேட்கப்படவும், “எல்லாம் SaVeer ஃபேன்ஸால தான். அப்புறமா கூடவே கொஞ்சமா எங்க லக்.” என்றான் ரன்வீர்.
“ஆல்ரெடி உங்க ரெண்டு பேரையும் சேர்த்து நிறைய ரூமர்ஸ் வந்துட்டு இருந்தது. இப்போ சில மாதங்களுக்கு முன்னால கூட நீங்க டேட்டிங் போன நேரம் எடுக்கப்பட்ட ஃபோட்டோஸ்னு சோஷியல் மீடியாவுல எல்லாம் வந்துச்சே. அதெல்லாம் நிஜமா? அதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ஏன்னா நீங்க அதை மறுத்து கூட எதுவும் சொல்லலயே.” என இம்முறையும் ரன்வீரிடமே கேள்வி கேட்கப்பட்டது.
பதிலுக்கு வசீகரமாகப் புன்னகைத்த ரன்வீர், “ஓக்கே… நீங்க எல்லாரும் எங்க வரீங்கன்னு புரியுது. அதைப் பத்தி க்ளாரிஃபை பண்ணவும் தான் முக்கியமா இந்த ப்ரஸ் மீட்.” என்றவன் சனாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.
பதிலுக்கு சனாவும் வெட்கப்பட்டுக் கொண்டு புன்னகைக்க, அனைத்தும் புகைப்படமாக்கப்பட்டன.
“உங்களுக்கு இருக்குற கேள்வி எல்லாத்தையும் நீங்க கேட்டு முடிங்க. நான் கடைசியாக எல்லாத்துக்கும் மொத்தமா சேர்த்து ஆன்சர் பண்ணுறேன்.” என ரன்வீர் கூறிய மறு நிமிடமே அவனை நோக்கி சரமாரியாகக் கேள்விக் கணைகள் வீசப்பட்டன.
“நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறதா சொல்றாங்க. அது உண்மையா?”
“ரெண்டு பேருமே ரொம்ப வருஷமா சிங்கிளா இருக்கீங்க. சோ இந்த இயர் என்ட்ல ஃபேமிலி என்ட் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் கூப்பிட்டு கல்யாணம் பண்ணிக்க போறீங்கலாமே.”
“நீங்க ரெண்டு பேரும் லிவிங்ல இருக்குறதா சொல்றது உண்மையா?”
“உங்களோட இத்தனை மாதங்களுமான மௌனத்த நாங்க சம்மதத்தின் அறிகுறியா எடுத்துக்கலாமா?”
“நேத்து முழு நாளுமே சோஷியல் மீடியா, நியூஸ்னு எல்லாத்துலயுமே தலைப்புச் செய்தி நீங்க ரெண்டு பேரும் தான். உங்க ரெண்டு பேரோட ரொம்ப இன்ட்டிமேட் ஃபோட்டோஸ் ரிலீஸ் ஆச்சே. அதெல்லாம் நிஜமா? இல்ல மார்பிங் செய்யப்பட்டதா?”
எல்லாக் கேள்விகளுமே ரன்வீரையும் சனாவையும் மையப்படுத்தியதாகவே இருந்தன.
கேள்விகள் ஓரளவு அடங்கவும் எழுந்து நின்ற ரன்வீர், “ஓக்கே… உங்க எல்லாரோட கேள்விகளுக்குமான பதில நான் இப்போ சொல்றேன். ஒரு நிமிஷம்…” என்றவன் சனாவிற்கு கை கொடுத்து எழுப்பி தனக்கு நெருக்கமாக நிறுத்திக் கொண்டான்.
ரன்வீரின் செயலில் சனா வானில் பறக்காத குறை.
அவள் எதிர்ப்பார்த்த நேரம் வந்து விட்டதாக கனாக் கண்டாள்.
“என்ன டியர்? SaVeer ஃபேன்ஸ் கிட்ட உண்மைய சொல்லிடலாமா?” என சனாவிடம் ரன்வீர் வசீகரப் புன்னகையுடன் கேட்கவும், “யூ ஆர் மேக்கிங் மீ ப்ளஷ் பேபி.” எனக் கொஞ்சல் குரலில் கூறியவாறு ரன்வீரின் மார்பில் சாய்ந்தாள் சனா.
சினிமா உலகின் அடுத்த காதல் ஜோடி என எண்ணி அவர்களை அனைவருமே ரசிக்க, “வெய்ட் அ மினிட். இன்னொருத்தங்களையும் உங்க எல்லாருக்கும் அறிமுகப்படுத்தணும்.” என ரன்வீர் சனாவைத் தன்னை விட்டு விலக்கி நிறுத்தியவாறு கூறவும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
சனாவும் ரன்வீரைக் குழப்பமாக நோக்க, ரன்வீர் தேஜுக்குக் கண் காட்டினான்.
அதனைப் புரிந்து கொண்ட தேஜ் கண்களை மூடித் திறந்து தான் பார்த்துக் கொள்வதாக சைகை செய்து விட்டு வெளியே சென்றான்.
அனைவரும் ரன்வீர் அவ்வளவு முக்கியமாக யாரை அறிமுகம் செய்யப் போகிறான் எனக் குழப்பத்துடன் தமக்குள் சலசலத்துக் கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் தேஜ் உள்ளே வர, அவனைத் தொடர்ந்து தம் மருமகளுடன் காயத்ரியும் ஸ்ரீனிவாசனும் உள்ளே நுழைந்தனர்.
மீராவோ தன் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விட்டு இவர்கள் தன்னை எங்கு அழைத்து வந்துள்ளனர் என்ற குழப்பத்துடனேயே வந்தவள் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டதும் ஒரு நொடி தயங்கி நின்றாள்.
அதன் பின்பு தான் அங்கு மேடையில் அவள் கணவனும் அவனுக்கு மிக அருகில் அவனுடன் இணைத்துப் பேசப்படும் பெண்ணும் இருப்பதைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தாள்.
அங்கு வந்திருந்த செய்தியாளர்களும் திரைப்படக்குழுவும் காயத்ரியையும் ஸ்ரீனிவாஸனையும் நன்கு அறிந்திருந்தாலும் அவர்களுடன் வரும் பெண் யார் எனத் தெரியாது குழப்பத்துடன் காணப்பட்டனர்.
ரன்வீரின் பெற்றோர்கள் மீராவை மேடைக்கு அருகே அழைத்துச் செல்ல, அவர்களை நெருங்கிய ரன்வீர் தன் மனைவியை நோக்கி கரத்தை நீட்டினான்.
என்ன நடக்கிறது எனப் புரியாமல் முழித்த மீராவோ தயக்கத்துடனேயே கணவனின் கரம் பற்றி மேடை ஏற, மீராவைத் தன் அருகில் நிறுத்திக் கொண்டான் ரன்வீர்.
மீராவின் கரத்தைப் பிடித்ததுமே அவளின் உடல் உஷ்ணத்தை உணர்ந்த ரன்வீர் எச்சில் கூட்டி விழுங்கி தன் உணர்வுகளை அடக்கினான்.
அனைவருமே மீராவின் அறிமுகத்துக்காகக் காத்திருக்க, மீராவிற்கு இதெல்லாம் பழக்கம் இல்லாததால் தயங்கித் தயங்கி நின்றாள்.
சனாவோ ரன்வீர் ஒரு பெண்ணின் கரம் பற்றி மேடைக்கு அழைத்து வந்ததும் இல்லாமல் அவளைத் தனக்கு மிக நெருக்கமாக ரன்வீர் நிறுத்தி இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் குமைந்தாள்.
“காய்ஸ்… நான் உங்களுக்கு முக்கியமான ஒருத்தங்கள அறிமுகப்படுத்துறதா சொல்லி இருந்தேன்ல. அது இவங்க தான்.” என்ற ரன்வீர் மீராவின் தோளைச் சுற்றிக் கை போட்டு தன்னோடு நெருக்கமாக நிறுத்தியவன், “மீட் மை வைஃப். மிசிஸ் மீரா ரன்வீர்.” என்றான் பெருமையாக.
மறு நொடியே இச் செய்தியைக் கேட்டு அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர்.
சனாவிற்கு அப்போது தான் ரன்வீரின் விலகளுக்கான காரணம் புரிந்தது.
“என்ன? RV க்கு கல்யாணம் ஆகிடுச்சா?”
“அப்போ ஏன் இத்தனை நாளா அதை ரகசியமா வெச்சு இருந்தாங்க?”
“இந்த ரகசியக் கல்யாணத்தின் பிண்ணனி என்ன?”
“அப்போ சனா கூட அவரோட ரிலேஷன்ஷிப் என்ன?”
“இந்தப் பொண்ணு எப்படி RV க்கு பொண்டாட்டியா இருக்க முடியும்? அவங்களுக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லையே.”
“சனாவ ஏமாற்றி விட்டுட்டு இந்தப் பொண்ண RV கல்யாணம் பண்ணிக்க நோக்கம் என்ன? பணமா? புகழா? இல்ல வேற ஏதாவது காரணமா?”
“அப்போ சனாவுக்கு என்ன பதில்?”
இப்படிப் பலவாறாக கேள்விக் கணைகள் ரன்வீரை நோக்கி வீசப்பட்டன.
ரன்வீர் மீராவை மனைவி என அறிமுகப்படுத்தியதுமே அனைத்து கேமராக்களும் அவளைச் சுற்றி வளைத்துப் படம் பிடித்தன.
கேமரா வெளிச்சத்தில் அசௌகரியமாக உணர்ந்த மீரா கணவனுக்குப் பின்னால் ஒளிய முயல, அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான் ரன்வீர்.
ரன்வீருக்கு எந்த விதத்திலும் பொருந்தாத ஒருத்தியைக் கொண்டு வந்து நிறுத்தி அழகும் அறிவும் கொண்ட தன்னை எல்லோர் முன்னிலும் அவமானப்படுத்தி விட்டானே என்ற கோபத்தில் பதிலுக்கு ரன்வீரை அவமானப்படுத்தி விடும் நோக்கில் ரன்வீரின் சட்டையை ஆக்ரோஷமாகப் பற்றிய சனா, “யூ ப்ளெடி சீட்டர்… ஹவ் டேர் யூ டு டூ திஸ் டு மீ? யூ ஆர் சச் அ ப்ளேபாய் RV.” என்றாள் கோபமாக.
சனாவின் கோபத்தில் பயந்த மீரா ரன்வீரின் மார்பில் புதைய, அதனைக் கண்டு இன்னும் ஆத்திரமுற்ற சனா, “யூ ப்ளெடி கேர்ள். அப்படி என்னத்த காட்டி RVய மயக்கின? என் லைஃப என் கிட்ட இருந்து பறிச்சிட்டியே. கோ டு ஹெல்.” என்றவாறு மீராவை இழுத்துத் தள்ளி விட முயல, மறு நொடியே ரன்வீரின் வன்மையான கரம் சனாவின் கன்னத்தைப் பதம் பார்த்தது.
ஒரு நொடி அவ் இடமே அமைதி அடைந்தது.
ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு ஒரு அமைதி.
எந்த மீடியா தன்னைத் தூக்கி வைத்துக் கொண்டாடியதோ அதே மீடியா முன் தன்னை அவமானப்படுத்தி விட்டானே எனக் கூனிக் குறுகி நின்ற சனா அடுத்த ஆயுதமாக கண்ணீரைக் கையில் எடுத்தாள்.
உடனே அனைத்துக் கேமராக்களும் அவள் பக்கம் திரும்பின.
“ஹவ் டேர் யூ டு டூ திஸ் டு மீ RV? எல்லாரும் பார்த்தீங்களா? உங்க சோ கோல்ட் ஹீரோ எவ்வளவு கேவலமான ஒருத்தர்னு. ஆல்ரெடி கல்யாணம் ஆனத மறைச்சி என் கிட்ட ஆசை வார்த்தை பேசி என்னை மயக்கி இவ்வளவு பெரிய துரோகத்தை எனக்கு செஞ்சிருக்கான். என் வாழ்க்கையையே அழிச்சிட்டானே. என் கண்ணீர் அவன சும்மா விடுமா?” எனக் கதறினாள் சனா.
Enna nadipu
Superb ma Sana