Loading

 

தெருவோரம் 1 :

தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே! 

வெச்ச கண்ண எடுக்கலயே மயக்கிட்டியே!

தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே!

வெச்ச கண்ண எடுக்கலயே மயக்கிட்டியே!!!

மொறச்சாலும்…. ரசிக்கரனே!!

அடிச்சாலும்…. சிரிக்கரனே!!

பிரிஞ்சாலும்…. காத்திருப்பேனே!!

மறைஞ்சாலும்…. நெஞ்சில் இருப்பேனே!!

தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே!

வெச்ச கண்ண எடுக்கலயே மயக்கிட்டியே!

தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே!

வெச்ச கண்ண எடுக்கலயே மயக்கிட்டியே!!!

“தமிழ் தொலைக்காட்சி”யின் அலுவலகம் அமைந்துள்ள, ஏழு மாடி கட்டிடத்தின் நான்காம் தளம் முழுக்க ஆள் அரவமின்றி அமைதியாக காட்சியளிக்க.. ஒரே ஒருவன் மட்டும் தீவிரமாக கணினியின் முன்பு அமர்ந்து ஏதோ தட்டிக்கொண்டிருந்தான்.

அந்நேரம் அவனின் மொபைல் தனது இருப்பைத் தெரிவித்து தளத்தையே அதிர வைத்தது.

நள்ளிரவு நேரத்தில் தன்னை அழைப்பது யாராக இருக்குமென்று திரையை பார்க்காமலே தெரிந்து கொண்டவனின் இதழில் புன்னகை குடிகொண்டது.

முதன் முதலில் அந்த அழைப்பு வந்த நாளை நினைத்து பார்த்தான்.

மூன்று மாதங்களுக்கு முன்பு,

‘அவன் அனிஷ்…’

மாஸ் மீடியா படித்து அப்போது தான் தமிழ் தொலைக்காட்சியில் “ஷோ ஹெட்டாக” சேர்ந்திருந்தான்.

எடுத்ததும் பெரிய பதவி அவனுக்கு வழங்கக் காரணம், படிக்கும் போதே அவன் தயாரித்திருந்த ப்ரொஜெக்ட் அனைத்தும் வித்தியாசமாகவும் அட்டகாசமாகவும் இருந்ததே.. அதனை நிகழ்ச்சியாக ஒளிபரப்பினால் நிச்சயம் ‘தமிழ் தொலைக்காட்சியின் டிஆர்பி’ எங்கோ செல்லும்.

அதன் அடிப்படையிலேயே, அவன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றால் நல்ல ரீச் கிடைக்குமென அனிஷ் ஷோ ஹெட்டாக நியமிக்கப்பட்டான்.

என்று அவன் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தானோ.. அன்றிலிருந்து அவன் வீட்டிற்கு செல்வது நள்ளிரவிற்கு மேல் தான்.

பணியில் அமர்ந்ததும் தன்னால் மேற்கொள்ளப்படும் முதல் நிழ்ச்சி என்பதால், நேரம்காலம் பார்க்காது , நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் சேகரிக்கத் தொடங்கினான்.

அதனால் அவன் வீட்டிற்க்கு செல்வதென்பதே இரவு பதினோரு மணிக்கு மேல் என்றானது மட்டுமில்லாமல்… சில நாட்களில் நள்ளிரவு ஒன்று கூட ஆகிவிடும்.

ஓரளவு நிகழ்ச்சிக்கான காரணிகளை தயார்படுத்தியவன்… அந்நிகழ்விற்கான தலைப்பினை தேர்வு செய்தான்.

“பேய் இருக்கா? இல்லையா?”

மிகவும் பிரபலமான தலைப்பு என்று சேனல் ஹெட்டும் அப்ரூவல் வழங்கிட, அன்று முழுவதும் எப்படி நிகழ்ச்சியினை மக்களிடம் கொண்டு சேர்ப்பதென்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு நேரம் பணிரெண்டைத் தாண்டியது தெரியவில்லை.

கடிகாரத்தில் டிங் டாங் என்ற ஒலி எழும்பி அனிஷிற்கு நேரத்தை உணர்த்தியது.

மணியை பார்த்தவன்,

‘ஓ… ஷிட்… மணி 12 ஆகிவிட்டதா?அவள் இருப்பாளோ அல்லது சென்றிருப்பாளோ?’ தன் மனதிடம் கேட்டுக்கொண்டவனுக்கு அதற்கான விடை தான் தெரியவில்லை.

என்று இவன் இந்நிகழ்ச்சிற்க்காக தகவல்களை சேகரிக்க இரவு நேரங்களில் சுற்ற ஆரம்பித்தானோ, அன்றிலிருந்து தான் அவளை பார்க்கிறான். அதுவும் அவன் வசிக்கும் வீட்டிற்கு அடுத்த தெரு முனையில்… இரவு 11 மணிக்கு மேல் தான் அவளை அவனால் அங்கு காண முடியும்.

முதல் ஒரு நான்கு நாட்கள் அவளை கண்டுகொள்ளாமல் சென்றவன், இப்பெண் ஏன் இரவு நேரத்தில் தனியாக தெரு முனையில் தினமும் அமர்ந்திருக்கிறாளென்று யோசிக்க ஆரம்பித்தான்.

தனிமையில் இரவு நேரத்தில் ஒரு பெண்ணிடம் சென்று பேசுவது அவ்வளவு உவப்பானதாக படவில்லை, எனவே அப்பெண்ணை பார்ப்பதை மட்டும் வழமையாகக் கொண்டான்.

இரண்டு வாரம் கடந்த நிலையில் தான் அனிஷிற்கு சிறு சந்தேகம் தோன்றியது.

தலை குனிந்தபடி தெருமுனையில் அமர்ந்திருப்பவள், எப்படி தான் அனிஷின் வருகையை கண்டறிவளோ?

அவன் அவள் அமர்ந்திருக்கும் தெருவை அடைந்ததும்… கண்களில் தவிப்போடு அனிஷை ஏறிட்டுப் பார்ப்பவள்… அவன் அத்தெருவினைக் கடக்கும் வரை பார்வையால் பின் தொடர்வாள்.

ஒரு நாள் அவள் தனக்காக காத்திருக்கிறாளோ என்பதை அறிந்து கொள்ள நினைத்தான். ஆதலால், அத்தெருவினைக் கடந்து அவன் வீடு இருக்கும் தெருவிற்கு வளைந்தவன் இரண்டு நிமிடங்கள் கழித்து எட்டிப் பார்க்க அங்கு அப்பெண் இல்லை.

ஒருவேளை தன்னை தினமும் பார்ப்பதற்காக இரவு நேரங்களில் காத்திருப்பவள் என்னிடம் நேராக வந்து பேசியிருக்கலாமே என்று எண்ணிய அடுத்த கணமே, ஒரு ஆண் நீயே அவளிடம் சென்று பேச தயங்கும் போது.. பெண் அவள் எப்படி பேசுவாள் என சமாதானம் அடைந்தான்.

ஆனால், அனிஷ் ஒன்றை மட்டும் சிந்திக்க தவறினான். நள்ளிரவில் ஏன் அவள் வருகிறாள் என்பதை,

இதுவரை அவளது முகத்தை அவன் முழுதாக பார்த்ததில்லை. விழிகள் மட்டும் தெரியும்படி தனது முகத்தினை துப்பட்டா கொண்டு மூடியிருப்பாள்.

ஆனால் முன்னால் செல்லும் தன்னை பார்வையால் பின்னால் தொடர்பவளின் விழிகளை, பைக்கின் ரிவர்வ்யூ கண்ணாடி வழியாக ரசித்து பார்த்திருக்கிறான்.

சில இரவுகளில் அவளின் பார்வை அவனை உறங்கச் செய்யாது இம்சிக்கும். அதெல்லாம் அவன் மனதிற்கு சுகமாகவே இருந்தது.

அவளின் பார்வையை தாண்டி அனிஷ் யோசித்ததில்லை.

அவளின் பார்வையில் உள்ள ஏக்கம், தவிப்பு அவனால் உணர முடிந்தது. தனக்காகத் தான் அவள் காத்திருக்கிறாளென்று அறிந்து கொண்டவன் காலை எழும் பொழுதே, இன்று அவளிடம் பேசிவிட வேண்டுமென்று முடிவெடுத்தான்.

காலையில் தான் எடுத்த முடிவு ஞாபகமில்லாமல் தனது வேலையில் மூழ்கிவிட்டான். எப்போதும் வீட்டிற்கு செல்லும் நேரம் கடந்து, இரவு ஒன்றை நெருங்கிய நொடி… அவன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தளம் முழுவதும் ஒளிர்ந்து கொண்டிருந்த மின் விளக்குகள் அனைத்தும் ஒரு சேர அணைந்து ஒளிர்ந்தது.

வெளியில் காற்று பலமாக வீச, ஜன்னலின் கதவுகள் படபடவென அடித்துக்கொண்டன… அவனது நாசி மல்லிகையின் மணம் அறிந்தது. யாரோ தன்னை உரசி நிற்கும் தொடுகையை உணர்ந்தவன் சுற்றி தனது பார்வையை சுழல விட, அங்கு அவனைத் தவிர வேறு யாரும் இருப்பதற்கான சிறு அறிகுறி கூட தென்படவில்லை.

யாருமில்லாத தளத்தில் திடீரென நாசியில் நுழைந்த மல்லிகையின் மணம் அனிஷிற்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

கிளம்பலாமென்று மேசையிலிருந்த அனைத்தையும் ஒழுங்கப்படுத்த தொடங்கிய கணம் மின்வெட்டு ஏற்பட்டு அத்தளம் முழுவதும் இருள் சூழ்ந்தது.

தன் முதுகுக்கு பின்னால் ஒரு உருவம் நிற்பதைப் போன்று தோன்ற, திரும்பி பார்க்க அஞ்சியவனாக தளத்தை விட்டு வெளியேற எண்ணி மெல்ல அடியெடுத்து வைத்தான்.

அவனின் ஒவ்வொரு அடிக்கும்…

“அனிஷ்…”

“அனிஷ்…”

என்ற அழைப்பு அவனுக்கு பின்னால் ஒலிப்பதைப் போன்று அனிஷின் செவிகளைத் தீண்டியது.

அனிஷ் தைரியமானவன் தான்… இருப்பினும் யாருமற்ற தனிமை.. மேலும் சில நாட்களாக பேய்களை பற்றி அவன் சேகரித்த தகவல்கள் அனைத்தும் சேர்ந்து அவனை சிறிது பயம் கொள்ள செய்தது.

தளத்திலிருந்து வெளியேற மின்தூக்கியில் அனிஷ் காலெடுத்து வைத்த சமயம், அதிக சத்தத்துடன் அவனின் அலைபேசி அழைத்தது.

ஒரு நொடி உடல் தூக்கி வாரிப்போட நின்றவன் தன்னை சுதாரித்து மெல்ல அலைபேசியை பாக்கெட்டிலிருந்து எடுத்து பார்த்தவன் முற்றிலும் அதிர்ந்தான்.

அழைப்பு வருவதற்கான பெயரோ அல்லது எண்ணோ திரையில் ஒளிரவேயில்லை. வெறும் சத்தம் மட்டும் வந்துகொண்டிருக்க, கால் அட்டெண்ட் மற்றும் ரிஜெக்ட் செய்வதற்கான பச்சை மற்றும் சிவப்பு வர்ணங்கள் மட்டுமே ஒளிர்ந்தது.

கை விரல் நடுங்க மெல்ல ஏற்று செவி மடுத்தவனின் காதில்… அமுத கானத்தை விட இனிமையான குரலில் யாரோ ஒரு பெண் அனிஷ் என்று விளித்தாள்.

“யா….ர்ர்ர்….. ர்…ரு…?”

நா தடுமாற… திக்கி திணறி மெல்ல வினவினான்.

“நீ ஏன் இன்னும் வரவில்லை அ..னி..ஷ்?”

“நானா… எங்…எங்கு வரனும்? ஏன் வரனும்?”

இன்னும் அரை மணி நேரத்தில், எப்போதும் என் விழிகளை மட்டும் ரசிக்கும் இடத்தில் நீ இருக்க வேண்டுமென்று கட்டளையாக உரைத்த அக்குரல், அவன் பேசுவதற்கு முன் இணைப்பினைத் துண்டித்திருந்தது.

அலைபேசி இணைப்பு முறியவும் மின்சாரம் வரவும் சரியாக இருந்தது.

“விழிகளை மட்டும் ரசிக்கும் இடம்”, அதில் தான் அக்குரலுக்கு உரியவர் யாரென்று தெரிந்து கொண்டவன் இன்பமாக அதிர்ந்தான்.

மனம் ஏனென்றே தெரியாமல் படபடத்தது.

இளமை தாக்கத்திலிருந்தவன் எதையும் யோசிக்க மறந்தான். எண்ணே இல்லாமல் எப்படி கால் வரும் என்பதை கூட சிந்திக்கவில்லை.

அலைபேசியையே பார்த்திருந்தவன், மின்தூக்கியின் கதவு திறந்ததும் உள்ளே நுழைய நிமிர்ந்தவன், மின்தூக்கியின் உள்ளே தனக்கு எதிரே இருக்கும் கண்ணாடியில் தெரிந்த உருவத்தைக் கண்டு சர்வமும் ஒடுங்கினான்.

முகம் முழுவதும் நீண்ட கூந்தலினால் மூடியிருக்க, பழுப்பு நிற கண்கள் மட்டும் பளபளக்க, அவன் முதுகுக்கு பின்னால் கோரமாக ஒரு உருவம் நின்றிருந்தது.

மெல்ல கண்களை கசக்கி பார்க்க, சில நொடிகளுக்கு முன்பு தான் பார்த்தது பொய்யோ எனும் விதமாக கண்ணாடியில் அவனின் பிம்பம் மட்டுமே தெரிந்தது.

மனதை திட படுத்திக்கொண்டு, ஒற்றைக் காலை தூக்கி உள்ளே வைக்க போகையில் மீண்டும் மின்சாரம் தடைபட, அதற்கு மேல் இமைக்கும் நேரத்தையும் வீணாக்காது படிகளில் விரைந்து இறங்கினான்.

“அனிஷ்” என்ற ஹஸ்கி குரல் காற்றில் கலந்து அவனது செவிகளை நிறைத்தது.

வேகமாக படியிறங்கி கொண்டிருந்தவனை யாரோ பின்னால் இழுப்பதை போல் தோன்ற, கால் இடரி படிகளில் உருண்டான்.

தரையை அடைந்தவன் மெல்ல விழியுயர்த்தி படிகளுக்கு மேலே பார்க்க, அதே பளபளக்கும் கண்கள் மட்டும் மின்ன, இருள் படிந்த கோரமுகம் அகோரமாக காட்சியளித்தது. அனிஷின் இதயம் தாறுமாறாக துடித்தது, நொடியும் தாமதிக்காது வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு சென்றவன் தனது டுகாட்டியை உயிர்பித்து… யாருமற்ற சாலையில் காற்றுக்கு இணையாக சீறிப்பாய்ந்தான்.

அலுவலகத்திலிருந்து பத்து நிமிட பயணத்திற்கு பிறகே அவனின் மூச்சு சீரானது.

இதயத் துடிப்பு மட்டுப்பட்டது.

திடீரென பைக் ஆட்டம் காண, சமாளித்து சாலையில் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் போது தான் அவனுக்கு அந்த வித்தியாசம் புரிந்தது.

‘பைக்கின் பின்னால் யாரோ அமர்ந்திருக்கிறார்.’ அவனது ஆழ் மனம் அடித்துக் கூறியது.

கண்ணாடியின் வழியாக பார்க்க, பின்னால் யாருமில்லை. ஏதோ பிரம்மை என்று அனிஷ் ஒதுக்கிய நொடி அவனின் தோளில் ஒரு கரம் படிந்த உணர்வு.

திக்… திக்…. என்று மனம் அடித்துக்கொள்ள.. இரவு நேர பைக் பயணத்தின் குளிர் காற்றிலும் முழுவதுமாக வியர்வையில் குளித்திருந்தான். அதையெல்லாம் பொருட்படுத்தாது வீட்டிற்க்கு சென்றுவிட வேண்டுமென்று புயலென சீறினான்.

தனக்காக ஒருத்தி காத்திருக்கிறாள் என்ற ஞாபகமே அத்தெருவினை அடையவிருந்த வேளையில் தான் அனிஷிற்கு நினைவு வந்தது.

தன்னுடைய வீட்டிற்கு பக்கத்து தெருவில் நுழையவும்… இவனை எதிர்பார்த்து காத்திருந்த பெண் தலை நிமிர்த்தி இவனை பார்க்கவும் சரியாக இருந்தது.

அப்பெண்ணின் பார்வை அவனுக்குள் எதையோ உணர்த்தியது. அது என்ன என்று தான் அவனுக்கு புரியவில்லை. இப்போது சற்று யோசித்து அதென்னவென புரிந்து கொண்டிருந்தால் பின்னால் வரப்போகும் பல பிரச்சனைகளை தடுத்திருக்கலாமோ?

விதி யாரை விட்டது.

அனைவரும் ஏதோ ஒரு வகையில் விதியிடம் சிக்கி தவிப்பவர்கள் தான்.

தன்னை கண்டதும், தனக்காக காத்திருந்தவளின் கண்களில் வந்துபோன மின்னல் அவனுக்குள் சில்லென்று இறங்கியது.

மெல்ல பைக்கினை ஓரம் கட்டி நிறுத்தியவன், முதல் முறையாக அவளிடம் பேசச் செல்கிறான்.

இரண்டடி இடைவெளி இரண்டு கிலோமீட்டர் தூரம் போல் நீள்கிறது.

அனிஷ் அவளை நெருங்குவதற்கு முன் ஓடி வந்தவள், அவனை இறுக்கி அணைத்திருந்தாள்.

உச்சி முதல் பாதம் வரை, ஒரு பெண்ணின் முதல் அணைப்பு என்று நினைக்கையில் அவனை என்னவோ செய்தது. அவள் அவனை அணைத்திருக்கிறாள். ஆனால், அவளின் ஸ்பரிசம் அவனுள் ஊடுறவவில்லை. ஒரு பெண்ணின் முதல் அணைப்பு என்பதிலே உழன்று கொண்டிருந்தவனுக்கு அந்த வித்தியாசம் பிடிபடவில்லை.

“ஏன் இவ்வளவு தாமதம்?”

போனில் ஒலித்த அதே குயிலின் குரல். நேரில் ஆழ்ந்து அனுபவித்தான்.

மெல்ல அவளை தன்னிடமிருந்து விலக்கியவனுக்கு தொடு உணர்வேயில்லை.

‘முதன் முதலாக ஒரு பெண்ணை தீண்டும் போது இப்படித்தான் இருக்குமோ’ என்று அசட்டையாக நினைத்தான். சற்று சிந்தித்திருக்கலாம்.

“வேலை அதிகம்” என்று பதிலளித்தவனிடம்,

“என் நினைவேயில்லையா?” என்று வருத்தத்துடன் கேட்டிருந்தாள்.

அவளின் வருத்தம் உயிர் வரை அவனை வருத்தியது.

அதனை இயல்பாக மறைத்தவன்… “உன் பெயர் என்ன?” என்று வினவினான்.

“அனிஷா.”

“வாவ்… நமக்குள்ள பெயர் பொருத்தம் கூட பக்காவா இருக்கே” என்றான் புன்னகையுடன்.

அவனின் புன்னகை அவளுக்குள் கோபத்தை தூண்ட,

“நான் கிளம்புறேன். நாளை சீக்கிரம் வந்துடுங்க” என்றவள் இமைக்கும் நேரத்தில் அவன் கண்ணிலிருந்து மறைந்து போனாள்.

அவள் அணைப்பு மெல்லிய காற்று உடலை தழுவியது போன்று இருந்ததே.

‘யாரையாவது அணைத்தாள் அப்படித்தான் இருக்குமோ?’ என்று அப்போது தான் சிந்தித்தான்.

அவள் அனிஷை கண்டதும் ஓடி வந்து அணைத்தது, அவனுக்கு அவள் தன்னை காதலிக்கின்றாள் என்று தான் எண்ண வைத்தது. அதனால் தான் அனிஷும் முதல் முறை பேசுவதை போல் எந்த வித தயக்கமும் இல்லாமல் அவளைத் தொட்டு தன்னிடமிருந்து பிரித்தான்.

‘நானா ஒரு பெண்ணிடம் எந்தவித தடையுமின்றி தொட்டு பேசினேன்?’ என்று சிந்தித்தவனின் மனதில் அவளது அழகிய கூர் விழிகளே ஊர்வலம் போனது.

தன்னை மறந்து, தெருவில் நின்று சிரித்துக் கொண்டிருந்தவன் நாய் ஊலையிடும் சத்தத்தில் நினைவு திரும்பினான்.

நாயினை திரும்பி பார்த்தவன், தன் பைக்கினை கிளப்பி சென்று விட்டான்.

செல்லும் அவனையே உருத்து விழித்தது அந்த பளபளக்கும் பழுப்பு நிறக் கண்கள்.

அனிஷ் சென்றதும், ஒரு வீட்டின் பின் மறைந்து நின்றிருந்த அனிஷா வெளியில் வந்து, ஏக்கம் சிந்தும் பார்வையினை அனிஷின் முதுகின் பின்னால் வீசினாள்.

நாய் அவளை பார்த்ததும் எகிறி குதித்து குரைக்க, அதனை தன் ஒற்றை பார்வையால் சுருண்டு ஓட வைத்தவள் காற்றோடு கரைந்து போனாள்.

அத்தெரு முழுக்க அவளின் வாசம் நிரம்பி வழிந்தது.

வீட்டிற்குள் நுழைந்தவனின் மனம் ஒரு நிலையில்லாது தவித்தது. இவ்வளவு நெருக்கமாக அவளை சந்தித்தும் முகத்தை கூட பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று தன்னையே கடிந்து கொண்டான்.

ஏற்கனவே நேரம் அதிகாலையை நெருங்கிக்கொண்டிருக்க, எதை பற்றியும் நினையாது கட்டிலில் விழுந்தவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்.

அனிஷின் கண்கள் மூடிய நொடி, அவன் முன்னே தோன்றியது ஒரு அரூபம்.

அதனின் வாசனை, அவனது நாசியை தீண்ட பட்டென்று விழித்தவன் “அனிஷா” என்று வீடே அதிர கத்தினான்.

அவ்வீட்டில் அனிஷ் மட்டுமே வசிக்கின்றான். அவனிற்கு தாய் மட்டுமே உள்ளார். அவரும் கிராமத்தில் வசிக்கிறார். எவ்வளவோ முறை அழைத்தும் அவர் கிராமத்தை விட்டு வர முடியாதென்று உறுதியாக மறுத்துவிட்டார். தன் அன்னையை விட்டு இருப்பது அவனிற்கு வருத்தமாக இருந்தாலும், தனது வேலைக்காக இங்கே தனியாக வீடெடுத்து தங்கியிருக்கின்றான்.

அனிஷா என்று அவன் உச்சரித்ததும், அவளது கண்கள் மட்டுமே அனிஷிற்கு நினைவு வந்தது. அவளிற்கு என்னவோ, ஏதோவென்று அவன் இதயம் படபடத்தது.

அவள் எங்கு இருக்கின்றாள்,அவளை எப்படி தொடர்பு கொள்வதென்று தெரியாமல் தவித்தான்.

அப்போது அவனை யாரோ தீண்டும் உணர்வு தோன்றியது. இரவு நேர காற்றின் வருடல் என்று எண்ணி அதனை ஒதுக்கினான்.

இதற்கு மேல் எங்கு தூங்குவதென்று நினைத்தவன், தொலைக்காட்சி நிகழ்விற்காக சேகரித்த தகவல்களை புரட்டி பார்க்க ஆரம்பித்தான்.

பேய்களை பற்றி தகவல்களை விசாரிக்க, பல சாமியார்களையும்.. பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றை செய்யும் மாந்ரீகர்களையும் சென்று சந்தித்தான். அப்போது ஒருத்தர் கூறியது அவன் நினைவிற்கு வந்தது.

“ஒரு ஆத்மா தனது ஆசையை நிறைவேற்றி கொள்ளவோ அல்லது யாரையாவது பழிவாங்க வேண்டுமென்றாலோ… அந்த எண்ணம் ஈடேறும் வரை இங்கு தான் அரூபமாக உலாவும். இது முற்றிலும் உண்மை, நானே பல முறை அப்படிப்பட்ட ஆத்மாக்களை அடக்கி வழி அனுப்பி வைத்திருக்கிறேன்” என்றார்.

“அப்போ, உண்மையிலேயே ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதோ?”

அவன் மனதில் தன்னைத் தானே கேட்டுக்கொண்ட கேள்விக்கு,

“நிச்சயமாக இருக்கிறது அனிஷ்”, வார்த்தைகள் அவனின் செவிகளை உரசியது.

சட்டென்று திரும்பியவன் முன்னிருந்த சுவற்றில் அவனின் தோளோடு உரசி நின்றிருக்குமாறு நிழல் உருவம் தெரிந்தது.

அது ஒரு பெண்ணின் உருவம் போல், நீண்ட கூந்தல் காற்றில் விரித்து பறக்க காட்சியளித்தது. அனிஷின் இதயம் நின்று துடித்தது. மெல்ல ஓரவிழிப் பார்வையில் தனக்கு அருகில் பார்த்தவன் யாருமில்லையென்றதும் அவ்வறை முழுக்க சுற்றித் தேடினான்.

நேற்று இரவிலிருந்து நடப்பது எதுவும் அவனுக்கு சரியாக படவில்லை. ஆனால், அப்போது கூட அப்பெண்ணின் மேல் அவனால் சந்தேகம் கொள்ள முடியவில்லை. ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாக புரிந்தது. யாரோ தன்னை பின் தொடர்கின்றனர். அது யாராக இருக்குமென்று தான் அவனால் யூகிக்க இயலவில்லை.

தன்னை சுற்றி வருபவருக்கு தன்னிடம் என்ன வேண்டுமென்று சிந்தித்துக் கொண்டிருந்தவன் மெல்ல உறங்கிப் போனான்.

காலை எட்டு மணியளவில் அவனின் அன்னை அழைத்த பிறகே கண்விழித்தான். நடப்பவற்றை தன் அன்னையிடம் கூறி அவரை கவலையில் ஆழ்த்த வேண்டாமென்று நினைத்தவன், தாயின் நலம் விசாரித்து இணைப்பை துண்டிக்கவிருந்த சமயம்,

“என்னப்பா ரொம்ப வேலையா? குரல் சோந்து கிடக்கு?” என்று அக்கறையாக விசாரித்தார்.

இப்போது என்ன கூறினாலும், தான் கஷ்டப்படுவதாக நினைத்து வருந்ததான் செய்வாரென்று எண்ணியவன்…

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா, உங்க மருமகள் தான் இரவு நேரத்தில் தூங்க விடாது தொல்லை செய்கிறாள்” என்று உண்மையைக் கூறினான்.

“அனிஷ், என்னப்பா சொல்ற?” என்று பதறியவரை அமைதிப்படுத்தியவன்,

“அய்யோ அம்மா, நீங்க நினைப்பதை போலெல்லாம் ஒண்ணுமில்லை.. இங்கு நான் ஒரு பெண்ணை விரும்புறேன், பகலில் நான் வேலையில் பிஸியாக இருப்பதால்… வேலை முடிந்து வரும் போது அவளை சந்தித்துவிட்டு வர லேட் ஆகிவிட்டது. சரியா உறங்காததால் குரல் சோர்வா இருக்கு” என்று தெளிவாகக் விளக்கமளித்தான்.

அதன் பின்னரே அவர் சமாதானமடைந்து போனை வைத்தார்.

தன் அன்னை தான் ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்ற பிறகும் அமைதியாக இருந்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. தன் தாயால், தனது காதலுக்கு எந்த தடையும் இருக்காதென்று நிம்மதியடைந்தான்.

‘நீ இன்னும் அப்பெண்ணை முழுதாக கூட பார்க்கவில்லை, அதற்குள் காதலா?’ கேள்வி கேட்டது அவனின் மனசாட்சி.

‘அவள் தான் என் மனைவி’ அழுத்தமாக மனதிடம் கூறியவன், தனக்கும் ஒருமுறை கூறிக்கொண்டான்.

அவனைச் சுற்றி வரும் அந்த அரூபம் நிம்மதி கொண்டது.

அலுவலகம் கிளம்பி சென்றதும் அனிஷ் முதலில் செய்த வேலை, கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்த வீடியோ புட்டேஜை பார்த்து நேற்று இரவு என்ன நடந்ததென்று தெளிவுபடுத்திக்கொள்ள முனைந்தான்.

மின்சாரம் தடைபடும் வரை தெளிவாக இருந்த காட்சிகள், அதன் பின்னர் கலங்கி காட்சியளித்தன. குறைந்த தரத்தில் பதிவாகிருந்ததாலும், இருட்டில் என்னவென்று சரியாக தெரியவில்லை. காணொளி ஓடிக்கொண்டிருக்க ஒரு இடத்தில் அவனின் முகத்திற்கு நேராக ஒரு உருவம் வந்ததைப் போலிருந்தது.

பாஸ் அழுத்தியவன், ஜூம் செய்து பார்க்க.. கரிய நிறத்தில், வெண்ணிற நீண்ட ப்ராக் மட்டும் அணிந்து… முகத்தின் முன் முடிக்கற்றைகள் வழிய, கண் மூடிய படி ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது.

‘இரவு பத்து மணிக்குமேல் இங்கு யாரும் என்னோடு இல்லை, அப்போ இது யாராக இருக்கும்?’ என்று காணொளி திரையை பார்த்தவாறு அனிஷ் தனக்குள் கேட்க, திரையில் பாஸ் செய்யப்பட்ட நிலையில்… கண் மூடியிருந்த அந்த உருவம் சட்டென கண்களை திறந்து, கணினி திரைக்கு வெளியே கையினை நீட்டியது.

பளபளத்த விழிகளைக் கண்டவன் பயத்தில், இருக்கையில் அமர்ந்தவாறு பின்னோக்கி கீழே விழுந்தான்.

அப்போது தான் அலுவலகம் வந்து சேர்ந்த அனிஷின் நண்பன் ஹரி ஓடிவந்து அவனைத் தூக்க, ஒருவாறு தன்னை சமாளித்து எழுந்து நின்றான்.

ஹரி, “என்னாச்சுடா?” என்று மீண்டும் மீண்டும் கேட்க, அனிஷின் பார்வை கணினி திரையின் மீதே பதிந்திருந்தது.

“இப்போ சொல்ல போறீயா இல்லையாடா?”

அனிஷின் அமைதி ஹரியின் பொறுமையை சோதித்து, ஹரியை கத்த வைத்தது.

நேற்று இரவு அலுவலகத்தில் நடந்தது முதல், இப்போது அவன் இங்கு கண்டது வரை அனைத்தையும் கூறியவன் அனிஷாவை பற்றி மட்டும் சொல்லவில்லை.

அனிஷ் சொல்லியதை கேட்டதும் ஹரி தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

அனிஷ் இருக்கும் நிலையில் ஹரியின் சிரிப்பு அவனுக்கு கோபத்தை உண்டாக்கியது.

அனிஷின் முறைப்பில் தன் சிரிப்பை கட்டுப்படுத்தியவன்,

“நிச்சயம் உன் ஷோ டாப் லெவல் ரீச் ஆகிடும் டா… இப்போ நீ என்னிடம் சொன்னதை அப்படியே மக்களிடம் கொண்டு போ” எனக் கூறி கலாய்த்தான்.

“நான் சொல்வதை நீ நம்பலனா இந்த சிசிடிவி புட்டேஜை பார்” என்று ஹரியின் முன்பு அதனை ஓடவிட்டான். அதில் இப்போது அனிஷ் மட்டுமே மின்தடைக்கு பிறகு எதற்கோ பயந்து வெளியேறுவதை போன்று இருந்ததே தவிர, அந்த பெண்ணின் உருவம் பதிவாகியிருந்ததற்கான சிறு தடயம் கூட அதிலில்லை.

“காதுல பூ சுத்துவாங்கன்னு தெரியும், அதுக்காக நீ காளிஃப்ளவரலாம் சுத்தக் கூடாது.. என் காது சின்னது, அவ்வளவு வெயிட் தங்காது” என்று சிரித்துக்கொண்டே கூறியவன்,

“இந்த ஒரு மாசமா பேய் பற்றி யோசித்து யோசித்தே உனக்கு நடப்பதெல்லாம் மர்மமா தெரியுது. முதலில் இந்த ஷோவை முடிச்சிட்டு மனதை அதிலிருந்து வெளி கொண்டு வா, எல்லாம் சரியாகும்” என்ற ஹரி தனது கேபினிற்கு சென்றான்.

ஹரி செல்வதற்கு முன் கணினியை ஆப் செய்திருந்தான்.

ஹரியின் முதுகையே வெறித்திருந்த அனிஷ் கணினியின் பக்கம் திரும்ப, மூச்சுவிட மறந்து பயத்தில் உறைந்தான்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்