Loading

தெருவோரம் 10 :

கல்லூரி வாசலில் தன்னவளை தன் தங்கையுடன் கண்டதும்… அனிஷிற்கு ஏற்பட்ட உவகையினை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு மாதத்திற்கு பிறகு தன்னவளை கண்ட சந்தோஷத்தில் அனிஷின் மனம் துள்ளி குதித்தது.

அனிஷ் அவர்களை நெருங்குவதற்கு முன்பு , அவள் மைதியிடம் விடைபெற்று சென்று விட்டாள். மாணவிகளின் கூட்டத்தில் அவள் கலந்து காணாமல் போக… கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், அவள் பேருந்தில் அமர்ந்த பிறகே மீண்டும் அவன் கண்களுக்கு காட்சி கொடுத்தாள்.

அனிஷ் அவளை நோக்கி செல்வதற்கு முன் பேருந்து நகர்ந்திருந்தது.

பேருந்தை நோக்கி அனிஷ் சென்றதை வித்தியாசமாக பார்த்த மைதி… என்னவென்று கேட்பதற்கு முன் அனிஷ் அவளின் பெயர் என்னவென்று கேட்டு அவசரப்படுத்தினான்.

“நிஷா!” (இங்கு தான் விதி சதி செய்ததோ..)

மைதி சொல்லியதும், மாலை நேர வெயில் பனி மழை போல் அவனின் மேனி எங்கும் தீண்டிடும் உணர்வு அவனுள். தேகம் சிலிர்க்க “நிஷா” என அவனது இதழ்கள் உச்சரித்தன.

இடுப்பில் கை வைத்து அனிஷை முறைத்த மைதி, “அவளை எப்படி உனக்குத் தெரியும்?” என சந்தேகத்துடன் வினவினாள்.

மைதியின் கேள்விக்கு பிறகே தானிருக்கும் இடமறிந்து அமைதியாகிவன், “நிஷா உன் கிளாஸ்மேட்டா?” என்க,

“இல்லை… பிரண்ட்” என்று பதிலளித்து, “இன்னும் நீ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லல” என்றாள்.

அவன் சொல்லாது அசடு வழிந்தான்.

“இப்படியெல்லாம் கேட்டால் நீ சரியா பதில் சொல்ல மாட்ட, கேட்க வேண்டியவங்க கேட்டால் தான் பதில் சொல்வ” எனக் கூறியவள் ஹரிக்கு அழைத்திருந்தாள்.

என்றுமில்லாத அதிசயமாக மைதி அவனை அழைத்ததும்… உற்சாகமாக அழைப்பை ஏற்றான் ஹரி. 

அந்தப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும்… “இன்னும் பத்து நிமிடங்களில் கல்லூரிக்கு அருகிலிருக்கும் பார்க்கிற்கு நீ வர. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்”,

அவ்வளவுதான் என்பதை போல் இணைப்பை துண்டித்துவிட்டாள்.

“உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்.” இதிலே ஹரியின் மனம் சுற்றியது. என்றும் தன்னை அழைக்காதவள் இன்று அழைத்தது மட்டுமில்லாமல் ஒண்ணு சொல்லணும் என்றதில் ஹரியின் கற்பனை விரிந்தது. 

மைதி வர சொல்லிய நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தான். முகமெல்லாம் ஒளிர பூங்காவினுள் நுழைந்தவனின் கண்கள் தன்னவளை தேடி அலைப்பாய்ந்தது. காதல் கற்பனையில் தன்னவளை தேடியவனின் விழிகளுக்கு மைதியை தவிர வேறு யாரும் புலப்படவில்லை.

மைதி அமர்ந்திருந்த மரத்தடியை நோக்கி சென்றவன்… “ஹாய் பேபி” என்க, அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவளின் முறைப்பில் ஜர்க்கானவன் அமைதியாக நிற்க… மைதியே பேசினாள்.

“உன் பிரண்டு பேர் கூட தெரியாத பெண்ணுக்காக பஸ் பின்னாடி ஓடுறாரு என்னன்னு கேளு.”

அவளின் செய்தியில் ஹரியின் உற்சாகம் மொத்தமாக வடிந்தது.

“இதற்கு தான் வர சொன்னீயா?” என்பதை போல் அவளை ஏறிட்டவனின் கண்களுக்கு அப்போது தான் மைதியின் அருகிலமர்ந்திருக்கும் அனிஷ் தெரிந்தான்.

தன் காதல் ஏக்கத்தை மனதோடு பூட்டியவன்… அனிஷிற்கு அந்தப்பக்கம் உட்கார்ந்து, “யாருடா மச்சி அது, உன் தங்கச்சி ஏதோ உளருறாள்” என்றான்.

“நான் உளரவில்லை.” சண்டைக்கோழியாய் சிலிர்த்தாள் மைதிலி. 

“நிஷாவை பார்த்ததும் அவள் பின்னாடியே போனாங்க, என்னை பார்க்கவில்லையென்றால் அப்படியே போயிருப்பாங்க…” அனிஷைப்பற்றி ஹரியிடம் புகார் வாசித்தாள்.

“நிஷாவா?” அந்த பெயர் ஹரிக்கு நிஷாவை முதல் முறை பார்த்ததை நினைவுபடுத்தியது.

மைதிக்கு விடுதியின் மெஸ் பீஸினை, அந்த மாதம் அனிஷ் செல்ல முடியாததால் ஹரி செலுத்த சென்றான். அப்போது தான் மைதி நிஷாவை தனது தோழியென்று ஹரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

பார்த்ததும் அண்ணா என அழைத்து ஒட்டிக்கொண்ட நிஷாவை ஹரிக்கு ரொம்ப பிடிக்கும். அதன் பின்னர் இருவரிடமும் நல்ல உறவு மலர்ந்தது. வாரத்தில் இரண்டு முறையாவது அண்ணன் என்கிற உரிமையில் நிஷா கால் செய்து ஹரியிடம் பேசிவிடுவாள்.

அப்படி பேசும்போது ஒருமுறை நிஷா “ஹரன் அண்ணா என்று அழைக்கவும், அதற்கு ஹரி விளக்கம் கேட்ட.. ஏனோ ஹரி என்ற பெயர் தனக்கு பிடிக்காது எனவும்.. தங்கச்சி எப்பவும் ஸ்பெஷல் தானே சோ, நான் வித்தியாசமா அழைக்கிறேன்” எனக் கூறினாள்.

அனிஷ் பலமுறை வந்திருந்தாலும் இன்று தான் நிஷாவை பார்க்க நேர்ந்தது.

நிஷாவைப் பற்றிய சிந்தனையிலிருந்து மீண்டவன், உனக்கு எப்படி  அவளைத் தெரியுமென நண்பனிடம் வினவினான்.

இதற்குமேல் இவர்களிடம் மறைக்க முடியாதென்று நினைத்த அனிஷ்.. ஒரு மாதத்திற்கு முன்பு அவளை கண்டதலிருந்து… இன்று அவளை மைதியுடன் பார்க்கும் நொடி வரை, அவளை நினைத்து வாழ்ந்ததையும், தன் கண்கள் அவளுக்காக அலைப்பாய்ந்ததையும் சொல்லி முடித்தான்.

இறுதியில்…   “ஐ லவ் ஹர்”.. என்றான்.

ஏதோ பல வருட காதலென அனிஷ் சொல்ல, அமர காதல் எபெக்டில் ஹரி கேட்டுக்கொண்டிருந்தான்.

ஹரியின் தோளில் மொத்திய மைதி… “அதெப்படி இரண்டு நாளில் காதல் வரும்?” சந்தேகமாக இழுத்தாள்.

“அதை உன் அண்ணனை அடித்து கேட்க வேண்டியது தானே,” மைதி அடித்த இடத்தை கையால் தேய்த்துக் கொண்டு மைதியின் புறம் திரும்பிய ஹரி… “காதல், பார்த்த நொடியில் கூட வரும், ஆனால் அதனை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளாத வரை அவர்களுக்கு உணர்த்த முடியாது.” அவனின் வார்த்தைகளில் மைதிக்கான காதல் விண்ணப்பம் ஒளிந்திருந்தது.

புரிந்தும் புரியாமலும் ஹரியை பார்த்த மைதி… “உன் காதல் ஈடேற வாழ்த்துக்கள் அண்ணா” எனக் கூறி, விடுதிக்கு செல்ல நேரமாகிவிட்டதெனக் கிளம்பிவிட்டாள்.

அனிஷ் ஆகாயத்தை ரசித்து பார்திருந்ததிலேயே, அவனின் காதலின் ஆழத்தை புரிந்துகொண்ட ஹரி, “சீ்க்கிரம் தங்கச்சி கிட்ட சொல்லிடு மச்சான்” என்றான். சரியென தலையசைத்தவன் ஹரியுடன் இல்லம் சென்றான்.

சோகத்துடன் வீடு வந்து சேர்ந்த நிஷா… வரவேற்பறையில் கண்ணீருடன் அமர்ந்திருந்த தனது அன்னையை கட்டிக்கொண்டு, “அக்காவைப்பற்றி எதுவும் தெரியவில்லையாம்மா?” என அழுகையுடன் கேட்டிருந்தாள்.

“இல்லையே!” வேதனையுடன் கூறியவர், “எங்கே போனாளோ… என்ன பாடுபடுறாளோ! என புலம்பினார். இன்றோடு நிஷாவின் அக்கா காணாமல் சென்று இரண்டு வாரம் கடந்திருந்தது.

அவள் எப்படி காணாமல் போனாள்… கடத்தப்பட்டாளா அல்லது வீட்டை விட்டு சென்றாளா.. எதுவும் தெரியவில்லை. வீட்டை விட்டு வெளியேறுமளவிற்கு அவளுக்கு என்ன பிரச்சனை நடந்திருக்கும், அன்பான குடும்பத்தில் வளர்ந்தவளுக்கு காணாமல் போவதற்கு அப்படி என்னதான் காரணமாக அமைந்திருக்குமென்று புரியவில்லை.

முதல் இரண்டு நாட்கள் எப்படியும் வீடு வந்து சேர்ந்துவிடுவாளென திடமாக இருந்த பெற்றோர் மூன்றாவது நாள் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். அங்கு காவல்துறை அதிகாரி கேட்ட கேள்விகள் புகார் அளிக்க வந்தேயிருக்க கூடாதென்று அவர்களை எண்ண வைத்துவிட்டது.

பெண்பிள்ளை இரவு வீடு வந்து சேரவில்லையென்றாலே… அவள் தவறான பாதையில் தான் சென்றிருப்பாளென்ற சமூகத்தின் பார்வை எப்போது மாறுமென்று தெரியவில்லை.

பெண்ணை கடவுளோடு ஒப்பிட்டு அவளை வெறும் கல்லென்று பார்க்கும் மூடர்கள் நிறைந்த உலகம்.

நிஷாவின் அன்னை அழுகையில் கரைய அவரை தேற்றும் வழி தெரியாது கைகளை பிசைந்துகொண்டு அமர்ந்திருந்தாள் நிஷா. அச்சமயம் தளர்ந்த நடையுடன் உள்ளே வந்த அவளின் தந்தை இருக்கையில் தொப்பென்று அமர்ந்து, தானொரு வயது முதிர்ந்த ஆண்மகன் என்பதையும் மறந்து அழுகையில் வெடித்தார். இரண்டு வார மனக்குமுரல்கள் கண்ணீராய் வெளிவந்தன.

அவள் காணாமல் சென்ற நாள் முதல் இன்று வரை தங்களுக்கு தைரியம் வழங்கிய தந்தை முற்றிலும் உடைந்து அழுவதை நிஷாவால் காண முடியவில்லை.

அவரது மடியில் தலை சாய்த்தவள்.. ஸ்டேஷனில் என்னப்பா சொன்னாங்க எனக் கேட்டாள்.

அவளின் அந்த கேள்வியில் அவரது அழுகை அதிகமாகியதே தவிர குறையவில்லை… நீண்ட நேர அழுகைக்கு பின்னர் ஒருவாறு தன்னை தேற்றியவர், “போலீஸ் ஸ்டேஷனில் என் பொண்ணு எவனோடையோ ஓடி போய்ட்டாள்ன்னு கேஸ் க்ளோஸ் பண்ணிட்டாங்கம்மா” என்றவர்… தனது இரண்டாவது மகளை அணைத்துக்கொண்டு அழுதார்.

மகள் தான் இல்லையென்று ஆகிவிட்டது… இருப்பவர்களையாவது பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்ற தாய்மை உணர்வு உந்த, தன் கூந்தலை அள்ளி கொண்டையிட்ட சுமதி… சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்த துடைத்து எழுந்தார்.

கணவனையும், மகளையும் பார்த்து… “அவங்க சொல்றபடி என் பொண்ணு ஓடிபோனவளாவே இருக்கட்டும். யாரோடையோ நல்லா வாழ்றான்னு மனசை தேத்திப்போம். ஒன்னா பிறந்த, ரெண்டுல ஒண்ணு பிறக்கவேயில்லைன்னு நினைச்சிப்போம். அதுக்காக நீங்க இப்படி உடைஞ்சி அழுறதை என்னால் பார்க்க முடியலைங்க.”

தைரியமாக தொடங்கியவர் இறுதியில் தழுதழுத்த குரலில் முடித்தார்.

தான் அழுது இவர்களையும் கஷ்டப்படுத்துகின்றோமோ என நினைத்த கிருஷ்ணன் தன் மனைவி மகளுக்காக அழுவதை நிறுத்தி அவர்களைத் தேற்ற முயன்றார்.

“உங்களை பொறுத்தவரை இனி நான் தான்ப்பா அனிஷா” எனக் கூறிய நிஷாவை ஆதுரத்துடன் அணைத்துக்கொண்டார் கிருஷ்ணன்.

சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்தில் அவரை பார்த்து அழகாய் புன்னகைத்தாள் அனிஷா.

அதிலிருந்து மீண்டவர்கள் ஒருவருக்காக மற்றொருவர் வேதனையை மறைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தனர்.

வழக்கம்போல் நிஷா கல்லூரி சென்றாலும், அவளால் தன்னுடன் இணைந்து பிறந்த இரட்டையை மறக்க முடியவில்லை. கருவில் உதித்தது முதல் ஒன்றாகவே உடன் சுற்றியவளை, எப்படி எளிதில் மறக்க முடியும். ஆம், நிஷாவும் அனிஷாவும் இரட்டையர்… அனிஷா பிறந்து இரண்டு நிமிட இடைவெளியில் பிறந்தவள் நிஷா. இருவருக்கும் சிறு வித்தியாசம் கூட கிடையாது. அனிஷாவிற்கு ஓரிடத்தில் மச்சம் இருக்குமென்றால் அதேயிடத்தில் நிஷாவிற்கும் இருக்கும். இருவரும் ஐடென்டிக்கள் ட்வின்ஸ். இருப்பினும் இவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம் விழிகள்.

அனிஷாவிற்கு அனைவருக்கும் காணப்படுவதை போன்ற கருவிழிகள் இல்லை…. அவை பழுப்பு நிறமுடைய அழகிய விழிகள். இருவருக்குமிடையே இருக்கும் வித்தியாசம் அது ஒன்று தான். இதனை அறிந்திடாத அனிஷ்… அனிஷாவை பார்த்த முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் கொண்டு, அவளை தேடி அலைந்து… நிஷாவை கண்டதும் அனிஷா என நினைத்தும்.. அவனவளின் பெயர் கூட தெரியாததால்… நிஷா தான் தன்னவளென எண்ணியும் அவளிடம் தன் காதலை சொல்ல புறப்பட்டான்.

இரண்டு நாட்களுக்கு பிறகு, இன்று எப்படியாவது தன் காதலை நிஷாவிடம் சொல்லிவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் அனிஷ் சரியாக கல்லூரி விடும் நேரம், கல்லூரி வாயிலில் நின்றிருந்தான்.

வழக்கம்போல் நிஷாவும் மைதியும் நடந்து வர…. தூரத்திலே அனிஷாவை நிஷாவென கண்டு கொண்டவனின் காதல் மனம் குதியாட்டம் போட்டது. இருவரும் தீவிரமாக ஏதோ உரையாடிக்கொண்டு வருவதை போலிருக்கவும் அனிஷ் சற்று பொறுமை காத்தான்.

நிஷா சில நாட்களாகவே ஏதோ சிந்தனையிலிருப்பதையும், எப்போதும் கவலையுடன் சுற்றுவதையும் கவனித்த மைதி.. சொல்லக்கூடியதென்றால் அவளே சொல்லுவாளென காத்திருக்க, நிஷா சொல்லுவதைப்போலில்லை. அதனால் இன்று முடிவுடன், கல்லூரி முடிந்ததும் இருவரும் ஒன்றாக வெளிவரும் சமயம் என்னவெனக் கேட்டிருந்தாள்.

மைதியின் கேள்வி அனிஷாவின் நினைவை தூண்டிவிட, தானிருக்கும் சுற்றுப்புறம் அறிந்து தன்னுடைய மனதையும், கண்ணீரையும் அடக்கியவள், “அப்பாவிற்கு பிஸ்னெஸில் பிரோப்ளேம்” எனக் கூறி உண்மையை மறைத்தாள்.

இதுவரை நிஷா தனக்கொரு அக்கா இருப்பதையோ… அவள் என்னுடன் இணைந்து பிறந்தவள் என்பதையோ மைதியிடம் சொல்லியதில்லை… சொல்லக்கூடாதென்ற எண்ணமெல்லாம்மில்லை. ஆனால், சொல்வதற்கான பேச்சோ சூழ்நிலையோ இருவருக்குள்ளும் ஏற்படவில்லை. தனிமையிலேயே வளர்ந்ததாலோ என்னவோ மைதிக்கும் நிஷாவின் குடும்ப உறுப்பினர்களை அறிந்து கொள்ளும் எண்ணம் தோன்றவில்லை.

அவள் சொல்லியதை நம்பிய மைதியும், “எல்லாம் சரியாகிவிடும்” எனக் கூறிக்கொண்டே சாலை பக்கம் திரும்ப.. அங்கு தங்களை நோக்கி நடந்து வரும் அனிஷை கண்டதும்.. நோட்புக் ஒன்றை வகுப்பிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டதாகக் கூறி நைஸாக நழுவிவிட்டாள்.

அனிஷ் எதற்கு வந்துள்ளான் என்பதை ஒரு தங்கையாக புரிந்து கொண்டவள், அவர்களுக்கிடையே தான் எதற்கு நந்தி மாதிரியென நினைத்து சென்றுவிட்டாள்.

அனிஷாவின் நினைவிலேயே நடந்து சென்று கொண்டிருந்தவள்… தரையிலிருக்கும் கல் இடறி கீழே விழப்போக, 

“ஹேய்… பார்த்து, பார்த்து” எனக் கேட்ட அனிஷின் குரலில்… தன்னை சமாளித்து நேரே நின்றாள்.

வேகமாக அவளை நோக்கி ஓடிவந்த அனிஷ்… “பார்த்து வர முடியாது, நடக்கும்போது கவனம் சாலையில் இருக்க வேண்டும்.. எங்கோ சிந்தனையை வைத்திருந்தால் இப்படி விழ வேண்டியது தான்” என்றவன் அவள் காலில் ஏதேனும் அடிப்பட்டுவிட்டதாவென கீழே குனிந்து ஆராய்ந்தான்.

யாரிவன் என மனம் கேள்வி கேட்டாலும்… அவனின் அக்கறையும், உரிமை கலந்த பேச்சும் நிஷாவிற்கு தனது சகோதிரியை நினைவுபடுத்த அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள். ஒருமுறை கிழே விழயிருந்த நிஷாவை தாங்கிப்பிடித்த அனிஷா, இதே வார்தைகளைக்கூறி திட்டியிருக்கின்றாள்.

அவளுக்கு ஒன்றுமாகவில்லை என்பதில் சாதாரண நிலைக்கு திரும்பியவன்… அவளின் முகத்தை நேரே சந்தித்து அருகிலிருக்கும் பூங்காவிற்கு சென்று பேசலாமா என்றான்.

சற்று நேரத்திற்கு முன் அவன் அதட்டியது அனிஷாவை ஞாபகப்படுத்த எவ்வித தடையுமின்றி அவன் பின்னோடு சென்றாள்.

பூங்காவினுள் நுழைந்து அவளை நேருக்கு நேர் பார்க்கும்போது தான் நிஷாவின் முகத்தில் ஏதோ மாற்றம் இருப்பதைப்போல் தோன்றியது அவனுள், காதலை சொல்லப்போகும் இனிமையான படப்படப்பில் அவனிருந்ததால்.. அந்த மாற்றம் என்னவென்று ஆராய முற்படவில்லை.

‘என்னிடம் என்ன பேசப்போகிறான், என்னை இதற்கு முன்பு பார்த்திருக்கின்றானா?’ என யோசித்தவள் அனிஷ் கூறியதில் அதிர்ந்தாள்.

“நீ குடையை கொடுக்க வந்தபோது உன் கண்கள் உணர்த்திய காதலை நான் புரிந்து கொண்டேன்” என்றவன், அவளை பார்த்து பேசும் துணிவற்றவனாக எதிர்புறம், தன் முதுகை காட்டியவாறு திரும்பி நின்றான்.

அவன் முதலில் கூறியதில்… அக்கா என நினைத்து நம்மிடம் பேசுகின்றார் என கணித்தவள், தான் யாரென்பதை கூறுவதற்கு முன்…

“ஐ லவ் யூ நிஷா… லவ் யூ ஃபாரெவர்…” என சொல்லியிருந்தான்.

அவன் நிஷா என்றதில் குழம்பியவள்… ‘இவர் அக்காவை சந்தித்துவிட்டு தவறுதலாக என் பெயரை அவளதென அறிந்துகொண்டுள்ளார்’ என்பதை சரியாக யூகித்தாள்.

“நான் சொல்ல வருவதை…”

பேச வாய் திறந்தவளை அவள் புறம் திரும்பாமலே… “பிலீஸ் என்னை லவ் பண்ணலன்னு மட்டும் பொய் சொல்லாதே. எனக்கான தேடலை நான் அன்று உன் கண்களில் கண்டது உண்மை” என சொல்லிக்கொண்டே திரும்பியவன், அவள் அங்கில்லாததைக் கண்டு சுற்றிலும் தன் பார்வையை சுழற்றினான்.

பூங்காவின் வாயிலில் முகத்தினை மூடியபடி இருவர் நிஷாவை..  அவள் திமிர திமிர காரிலேற்றி விரைந்தனர்.

நிஷாவிற்கு ஏதோ ஆபத்தென உணர்ந்தவனின் கைகளில்… அக்காரை நோக்கி இருசக்கர வாகனம் சீறிப்பாய்ந்தது.

எவ்வளவு முயன்றும் அனிஷால், நிஷாவை கடத்திச்சென்ற காரினை நெருங்க முடியவில்லை. அனிஷ் மேலும் தன் வண்டியின் வேகத்தை அதிகரிக்க… அவனின் மூளை, மனம் எங்கிலும் நிஷாவை எப்படியாவது காப்பாற்றிட வேண்டுமென்ற சிந்தனைகளே நிரம்பியிருந்தன. அவன் கண்களுக்கு அக்காரினைத் தவிர சாலையில் பயணிக்கும் வேறெந்த வாகனங்களும் புலப்படவில்லை.

“நிஷா… நிஷா…” என அவன் வாய் ஓயாது சொல்லிக்கொண்டேயிருக்க… அவன் பார்வை காரின் மீதே படிந்திருக்க… எதிரே வந்த லாரியினை கவனிக்க தவறினான்.

லாரி ஓட்டுநர் அனிஷின் அசுர வேகத்தில் நிதானித்து பிரேக் பிடிப்பதற்குள் டமால் என்ற சத்தத்துடன் லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டிருந்தான்.

வீசப்பட்டதில், பத்தடி தூரம் சென்று மல்லாக்கு வாக்கில் தார் சாலையில் விழுந்தவனின் பின்னந்தலையில் அடிப்பட்டு ரத்தம் வெளியேறியது.

**********************************

ஒரு வாரத்திற்கு பிறகு கண்விழித்தவனின் நினைவுகளிலிருந்து முற்றிலும் அனி(நி)ஷா தொலைந்து போயிருந்தாள்.

அனிஷ் கண்விழித்துவிட்டானென்று தகவலறிந்த மைதி கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மருத்துவமனை வந்திருந்தாள்.

அனிஷிடம் நலம் விசாரித்தவள்… அமைதியாக இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவளின் அமைதி ஹரிக்கு ஆச்சரியமாக இருக்க என்னவெனக் கேட்டான்.

அனிஷிற்கு அடிப்பட்ட தினத்திற்கு மறுநாளிலிருந்து நிஷா கல்லூரிக்கு வரவில்லை, அவளுக்கு என்னவானதென்றே தெரியவில்லையென மைதி ஹரியிடம் சொல்லியபோது… “யாரது நிஷா?” என அனிஷ் கேட்ட கேள்வி ஹரி மற்றும் மைதிக்கு பேரதிர்வாக இருந்தது.

“நிஷாவை உனக்கு ஞாபகமில்லையா?” எனக் கேட்கப்போன மைதியை தடுத்த ஹரி, “மைதி’ஸ் பிரண்ட்” என்றதோடு அப்பேச்சிற்கு டாட் வைத்தான்.

மருந்தின் தாக்கத்தில் அனிஷ் தூக்கத்திற்கு செல்ல, மைதியை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்றான்.

அவரிடம்….

“டாக்டர்… அனிஷ்,” என ஆரம்பித்து, “தான் உயிராய் நேசித்த பெண்ணையே யாரெனக் கேட்கிறான். இதற்கான அர்த்தம் என்ன?, அவன் கடந்த காலத்தை மறந்து விட்டானென்றால்.. நாங்க மட்டும் எப்படி நினைவிலிருக்கோம்?” என தனக்குள் எழுந்த சந்தேகத்தினை கேள்விகளாக அடுகினான்.

“அனிஷ், சிகிச்சைக்கு பிறகு, குறிப்பிட்ட நேரம் கடந்தும் மயக்கம் தெளியாத போதே எனக்குள் சிறு பயம் இருந்தது. அப்போது உங்களிடம் சொல்லி கலவரப்படுத்த வேண்டாமென இருந்தேன். மேலும் இரண்டு நாட்கள் கழித்து மருந்தின் வீரியத்தை அதிகரித்து பார்க்கலாமென நினைத்தபோது அவரே கண்விழித்தது மட்டுமல்லாமல், உங்களையும் சரியாக அடையாளம் கண்டுகொண்டதும் எவ்வித பிரச்சனையுமில்லையென எண்ணினேன்.

இப்போ, நீங்கள் சொல்வதை பார்த்தால்…”

தனது பேச்சினை இழுத்தவர்,

“அனிஷின் ஸ்கேன் ரிப்போர்ட்டினை ஆழ்ந்து கவனித்து, நீங்கள் சொல்லும் பெண்ணை அவர் சந்தித்து எத்தனை மாதங்கள் இருக்கும்?” எனக் கேட்க…. ஒன்றரை மாதமென ஹரி பதிலளித்தான்.

“அவருக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ் ஏற்பட்டிருக்கு. அதாவது குறுகிய இடைவெளி காலம் மட்டும் மறந்து போகும். அவருக்கு கடந்த காலம் எதுவரை நினைவிருக்கு என்பதை சொல்ல முடியாது. அந்த பெண்ணை பற்றி நீங்கள் பேசும் போது தான் அவளின் நினைவு மறந்து போயிருக்கிறது என்பது நமக்கு தெரிய வந்துள்ளது, அதேபோல்… நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து தான் அவரின் மறந்து போன கடந்த காலங்கள் எதுவரையென நம்மால் கணிக்க முடியும்” என்றவர், “அவர் மறந்த நினைவுகள் மறந்தவைகளாகவே இருக்கட்டும். நினைவுபடுத்த முயன்றால் மொத்த நினைவுகளையும் இழப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த பெண்ணை மீண்டும் அவர் பார்க்கும்போது கூட நினைவுகள் திரும்பி விடலாம்” எனக் கூறி விடையளித்தார்.

அனிஷின் நினைவுகளிலிருந்து நீங்கியது குறுகிய கால நினைவுகள் என்பதால், நிகழ்காலத்தில் எந்தவொரு வித்தியாசமும் அவனுக்குத் தெரியவில்லை. முற்றிலும் அனி(நி)ஷா’வை மறந்தே போனான்.

அதன் பின்னர் ஒரு மாதத்தில் உடல்நிலை தேறி… வேலையிலமர்ந்த அனிஷ்… தொலைக்காட்சி நிகழ்விற்காக செய்திகளை சேகரிப்பதற்கு இடுகாட்டிற்கு சென்றான். அந்த நாள் தான், அனிஷின் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் மர்மங்களுக்கு வழியாக அமைந்தது.

நிகழ்ச்சி துவங்க இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. எப்படியாவது முடிந்தளவிற்கு பல செய்திகளை அறிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தவன் முதலில் இடுகாட்டிலிருந்து ஆரம்பித்தான்.

பகலில் சென்றபோது அவன் எதிர்பார்த்ததை போன்று ஒன்றும் சுவாரஸ்யமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆதலால் இரவில் செல்ல முடிவெடுத்தான்.

ஹரி எவ்வளவோ தடுத்தும் அனிஷ் அதிலிருந்து பின்வாங்கவில்லை. ஹரியிடம் நான் போகமாட்டேன் எனக் கூறியவன் நள்ளிரவில், நகரத்திற்கு வெளியே காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் இடுகாட்டிற்கு தனியாகச் சென்றான்.

நகரத்தில் குறிப்பிட்ட சுவற்றிற்குள் காணப்படும் இடுகாட்டினை போன்றில்லாமல்… அடர்ந்த மரங்கள் சூழ, பரந்தவெளியில் நீண்டு காணப்பட்டது அவ்விடம். உள்நுழைந்ததுமே அனிஷிற்கு மனதிற்குள் பயம் சூழ்ந்தது. பயத்தினை புறம் தள்ளியவன் மெல்ல இடுகாட்டினுள் தன் முதல் அடியை வைத்தான்.

அவனுள் ஒரு சிலிர்ப்பு ஓடியது.

‘உனக்கு சொந்தமான ஒன்று இங்கு புதையுண்டு இருக்கிறது.’ அவனின் உள்ளுணர்வு உந்தியது.

அமாவாசை இருட்டு… அமானுஷ்ய இரவு…. பிணங்கள் புதைக்கப்பட்ட மணல் மேடுகள்… எங்கும் புகை மண்டலம் மயானத்தின் நடுவில் ராட்சஷத் தோற்றத்தில் வீற்றியிருக்கும் ஆலமரம்… அதில் பாம்புகளை போன்று தடித்து தொங்கும் விழுதுகள்… எலும்புகளும், மண்டை ஓடுகளும் பரவி கிடந்தன. சில தினங்களுக்குள் புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி சதைபிண்டங்களை கிழித்து தின்னும் நாய்கள்… முட்புதர்களுக்கிடையே பாம்புகள் ஊறும் சத்தம்.. ஒவ்வொன்றாக பார்த்தவாறு மெல்ல முன்னேறினான். அனைத்தையும் தனது காமிராவில் பதிவு செய்து கொண்டான். 

“கிராஃபிக்ஸ் பண்ணாமலே இங்கு ஷூட் எடுக்கலாம் போலவே.” மனதிற்குள் நினைத்தவன்… “எவ்வளவு பயமாயிருக்கு” என வாய்திறந்து கூறினான்.

இதுவரை நடந்தது போதுமென நினைத்தவனை மேலும் செல் என உள்ளுணர்வு சொல்ல, அதற்கு கட்டுப்பட்டு மேலும் பல அடிகள் உள் சென்றவனின் இதயம் சட்டென்று நின்று துடித்தது அவன் கண்ட காட்சியில்.

முதுகில் அடர்ந்த நீண்ட கூந்தல் பரப்பி கிடக்க, மண்ணில் குத்திட்டு அமர்ந்திருந்தது ஒரு உருவம். அது தரையில் எதையோ தோண்டி எடுத்து உண்டு கொண்டிருந்ததது.

உருவத்திற்கு அருகில் சென்றவன்.. “யார் நீங்க?” எனக் கேட்டிருந்தான்.

அவனின் சத்தத்தில் பட்டென திரும்பிய உருவத்தின் தோற்றத்தைக் கண்டே அனிஷின் இதயம் ஒரு நொடி நின்றது.

அதன் முகத்தில் தோல் சுருங்கி புழுக்கள் கொட்ட… நீண்டு வளர்ந்து வளைந்து காணப்பட்ட நகங்களை கொண்ட கைகளில் ரத்தம் சொட்ட தரையில் கிடந்த நாயின் சதையை தன் கோரப்பற்களுக்கிடையே அசைபோட்டபடி அனிஷை திரும்பி பார்த்தது.

அக்காட்சி அனிஷின் கண்ணில் பட்டது ஒரு நொடியே… ஒரு நிழல் படம் போன்று அவன் கண் முன் தோன்றிய உருவம் இமைக்கும் நேரத்திற்குள் மறைந்திருந்தது. தரையில் அது உண்டுகொண்டிருந்த நாயின் சடலமுமில்லை. பயத்தில் தோன்றிய ஏதோ பிரம்மை என்று ஒதுக்கியவன் திரும்பி செல்ல நினைத்த கணம் ஒரு பெண்ணின் அழுகுரல் கானகமெங்கும் எதிரொலித்தது.

அழுகுரலுக்கு சொந்தக்காரர் யாராக இருக்கும்? அனிஷிற்கு இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்கும்?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்