தெருவோரம் 8 :
“நரேன்ன்…”
அனிஷின் கத்தலான அழைப்பு அவ்வீடு முழுக்க பட்டு, அந்த பகுதி எங்கும் எதிரொலித்தது.
அனிஷின்… கோபம், கத்தல், வெறி, ஆவேசம் அனைத்தும் ஹரிக்கு புதிது. ஹரிக்கே அவனின் செயல் புதிது என்றால் மைதிக்கு பெரிய ஆச்சரியம்.
தரையில் மடங்கி அமர்ந்து ஆவேசமாக கத்திக்கொண்டிருந்த அனிஷ்… தன் தோள் மீது படிந்த கரத்தின் உணர்வால் நிமிர்ந்து பார்த்தான்.
ஹரியை கண்டதும், “ஹரி… ஹரி…” என படப்படத்தவன், “அவன் தப்பிச்சிட்டான் ஹரி… அவன் தப்பிச்சிட்டான் டா, அவனை நான் விட்டுட்டேன்டா. அவனை கொல்லனும். கொன்னு புதைக்கணும்” என வெறிப்பிடித்தவன் போல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்த அனிஷை இரு தோளிலும் பிடித்து உலுக்கி அவனை நிதானத்திற்கு கொண்டு வர முயற்சி செய்தான் ஹரி.
அனிஷின் கத்தலிலே அதிர்ந்து உறைந்த மைதி இன்னும் சிலையெனவே நின்றிருந்தாள்.
“யாரு அனிஷ், யாரு தப்பிச்சிட்டா? அவன் யாரு? அவனை நீ ஏன் சாகடிக்கணும்?”
ஹரியின் நீண்ட கேள்வியில் தான் அனிஷ் தன்னுணர்வு அடைந்தான்.
நிகழ்விற்கு மீண்ட அனிஷ் தனது நண்பனிடம் என்ன கூறுவதென்று தெரியாமல் அமைதி காக்க,
ஹரியின் மனதில் டாக்டர் சொல்லியது நினைவுக்கு வந்தது.
“அனிஷின் மனம் இடம் கொடுக்காமல் அவனின் உடலிற்குள் ஆத்மா உள் நுழைந்திருக்க முடியாது.”
‘அப்போ, டாக்டர் சொல்லியதை போல் அனிஷிற்கு எல்லாம் தெரியுமோ?’ என மனதோடு கேள்வி கேட்டுக்கொண்ட ஹரி “எங்கிட்ட ஏதும் மறைக்கிறியா அனிஷ்? என நேரடியாகக் கேட்டிருந்தான்.
“மச்சான்… அது வந்து…”
“நீ பொய் கூறுவதென்றால் எதுவும் சொல்ல வேண்டாம்” என்ற ஹரி வீட்டிற்கு செல்லலாமென்று அங்கிருந்து நகர்ந்தான்.
என்ன நடக்கிறதென உணராமல் உறைந்து நின்ற மைதியை கையோடு அழைத்து வெளியில் வந்தவன், அனிஷின் பைக்கில் ஏறுமாறு கூறினான்.
அதிலே தன் நண்பன் இனி தன்னை நம்ப போவதில்லை என்பதை அனிஷ் உணர்ந்து கொண்டான்.
“அண்ணா வீட்டிற்கு தான் வருவான்.” அவனிருக்கும் நிலையில் தான் அவனுடன் வருவது சரியாக இருக்குமா தெரியவில்லையே என்று தயங்கிய மைதியை கூர்ந்து பார்த்த ஹரி,
“மைதி இப்போ டைம் 11. இன்னும் கொஞ்ச நேரத்தில் நிஷா தெருமுனையில் அனிஷிற்காக காத்திருப்பாள். நாம அங்கு செல்லும் நேரம் சரியாக இருக்கும். இனி அனிஷ் நிஷாவையோ அல்லது இன்னொரு ஆத்மா அனிஷையோ நெருங்க அனுமதிக்கக் கூடாது. நீ உடன் இருக்கின்றாய் என்ற எண்ணத்தில் அவன் தெருமுனையில் நிற்காமல் நேரா வீடு வருவான், அதனால் தான் உன்னை அவனுடன் வர சொல்றேன்.”
“இது எனக்கே தெரியும், இதுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை” என்றவள் அனிஷின் பின் வண்டியில் ஏறி அமர்ந்தாள். (என்ன இருந்தாலும் நமக்கு நம்ம கெத்து முக்கியம்)
தெருமுனையை அவர்கள் அடையும் நேரம் அனிஷா தோன்றினாள். அனிஷா இருப்பது அனிஷின் கண்களுக்கு மட்டுமே தெரியும். ஆத்மா அனுமதித்தால் மட்டுமே மற்றவர்கள் கண்களுக்கு புலப்படும்.
அனிஷா அமர்ந்திருப்பதை பார்த்தும் பார்க்காததை போல் அனிஷ் சென்றான். அவனின் வண்டி முதல் சக்கரம் அனிஷாவை கடந்ததும் வண்டியின் பின்புறம் அமர்ந்திருந்த மைதி இழுத்து வீசப்பட்டாள். அதில் வண்டி தடுமாற அனிஷும் சேர்ந்து கீழே விழுந்தான்.
“என்னை பார்க்காமல் போனால் இது தான் நடக்கும்.” சத்தமாக சிரித்த அரூபம் காற்றோடு கரைந்தது.
உடலோடு சுற்றும் ஆத்மாவோ, ஓடி சென்று அவர்களை தூக்க முற்பட போதிய வலிமை அதற்கில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அ(னி(நி)ஷா) நின்றிருக்க, அவர்கள் பின்னோடு வந்து கொண்டிருந்த ஹரி அவர்கள் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
அதற்குள் சுதாரித்து எழுந்திருந்த அனிஷ் மைதி எழ உதவி செய்தான்.
இம்முறை அனிஷின் கண்களுக்கு கூட அவள் புலப்படவில்லை. மெல்ல எழுந்தவர்கள் வண்டியை தள்ளிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். எதனால் விழுந்திருப்போமென்று மூன்று பேருக்கும் தெரிந்திருந்தாலும், யாரும் வெளியே சொல்லிக்கொள்ள வில்லை.
வீட்டினுள் நுழைந்ததும் அனிஷ் தன் அறைக்குள் செல்ல, “நில்லு அனிஷ்” என்று தடுத்தான் ஹரி.
“இப்போ எதையும் சொல்லும் மனநிலையில் நானில்லை ஹரி, பிளீஸ்ஸ்…” என்றவனை அழுத்தமாக நோக்கிய ஹரி, “உன்னை விட்டால் நடப்பதைப்பற்றி யாரும் சொல்ல முடியாது” என்றான்.
அனிஷ் என்ன கூறப் போகிறானென்று மைதி ஆர்வமாக பார்த்திருக்க, ஹரி சொல் என ஊக்கப்படுத்தினான்.
“எனக்கு நான்கு நாட்களிலேயே அனிஷா தான் என்னை தொடர்கிறாளென்று தெரியும்.”
“அனிஷா யாரு?”
ஹரி கேட்க, “ஒருவேளை நிஷாவின் ட்வின் சிஸ்டராக இருப்பாங்களோ?” என்று மைதி முணுமுணுத்தாள்.
அனிஷும் ஆமென்று தலையசைத்து “மை லவ்” எனக் கூறினான்.
“அப்போ நிஷா உனக்கு… ச்சே…, நீ நிஷாவைத் தானே லவ் பண்ண?” ஹரியின் கேள்விக்கு விரக்தி புன்னகை ஒன்றை பரிசளித்த அனிஷ்… “நான் என் அனிஷாவை விரும்பிட்டு, காதலை நிஷாவிடம் சொல்லிட்டேன்” என்றான்.
“உனக்கு பழைய நினைவு வந்துடுச்சா?”
“ம்…”
“எப்போ?”
“என் அனிஷாவோட முதல் தீண்டலை உணர்ந்த அன்னைக்கு எல்லாம் எனக்கு நினைவு வந்துவிட்டது. அப்போ தான் அவள் என்னைவிட்டு மொத்தமா போய்விட்டதும் தெரிந்தது.”
“முதல் நாள் அலுவலகத்தில் என்னை பயம் கொள்ள செய்து படியில் செல்ல வைத்து என் உயிரை காப்பாற்றினாள். அப்போ மட்டும் நான் மின்தூக்கியில் பயணித்திருந்தால் எனக்கு மரணம் தான். நம் போட்டி சேனல் நான் வழங்கும் நிகழ்ச்சியை நிறுத்துவதற்காக, நான் செல்லும் நேரத்தை யூகித்து, ஆள் வைத்து மின்தூக்கியின் இயக்க முறையை மாற்றி அமைத்திருக்கிறான். அதனால் தான் அன்று அவள் என்னை பயமுறுத்தியிருக்கிறாள்.
ஒவ்வொரு முறையும் அவள் தன்னை என்னிடம் உணர்த்துவதற்கே அவளின் விழிகளை திறந்து காட்டியிருக்கிறாள். நான் தான் அதை சரியா புரிஞ்சிக்கல.”
தரையில் விழுந்து கண்களை மூடி அழுபவனை ஹரியால் தேற்ற முடியவில்லை.
அனிஷின் பேச்சினை அரூபமாகக் கேட்டிருந்த அனிஷாவும் தன் கண்ணீரை சுரந்தாள்.
“அப்போ நீ… நீ… ஏன் நிஷாவின் ஆத்மாவோடு பழகிட்டிருக்க?”
ஹரியிடத்தில் கேள்விகள் மட்டுமே.
“ஆரம்பத்தில் அனிஷா நினைத்து தான் பழகினேன்.”
“ஏன்?”
“என் அனிஷா இறந்த கதை எனக்குத் தெரியணும். அவள் இயற்கையா இறக்கல, சோ அவளின் இறப்பிற்கு காரணமானவர்களை நான் பழிவாங்க வேணும்.
நிஷாவுடன் பழகும் போது தான் அவளின் கன்ட்ரோல் என் அனிஷாவிடம் இருப்பதும்… என்னை தொடர்வது ஒன்றல்ல, இரண்டு ஆத்மா எனவும் தெரிய வந்தது.”
“நிஷாவை காதலிப்பதாகத் தானே சொன்ன?” இடையிட்டாள் மைதி.
“நான் உன் கல்லூரியில் அனிஷா என நினைத்து நிஷாவை பார்க்க, நீ தானே நிஷா என அறிமுகப்படுத்தினாய்? என்னவள் இறந்த பிறகு தானே எனக்கே உண்மை தெரிய வருகிறது” என்று வெடித்துச் சிதறினான்.
“இவ்வளவு உண்மைகள் உனக்கு தெரிகிறதென்றால், அந்த கொலை?”
ஹரியின் கேள்விக்கு அனிஷ் சத்தமாக, வெறியுடன் சிரித்தான்.
அவனது இந்த ஆக்ரோஷமான சிரிப்பு ஹரி மற்றும் மைதிக்கு கிலியை ஏற்படுத்தியது.
“கொலையல்ல. கொலைகள்” எனத் திருத்திய அனிஷ், “என் அனுமதியில்லாமல் அனிஷாவின் ஆத்மா எனக்குள் நுழைந்திருக்க முடியாது” என்றான்.
அழுத்தமாக கூறியவன் தான் செய்த இரண்டாவது கொலையையும், அது நடந்த விதத்தையும் தெரிவித்தான். அதிர்ச்சியில் மைதியின் கண்கள் அகல விரிந்தது.
“தெரிந்தே கொலை செய்திருக்க… நான் கேட்டதுக்கு ஒன்னும் நினைவில் இல்லாத மாதிரி ஏன்டா நடித்து என்னை ஏமாற்றினாய்?” ஹரி தன் நண்பன் தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணி கத்தினான்.
“நான் உன்னை ஏமாற்றல ஹரி… முதல் கொலை அப்போ அனிஷா எனக்குள் வரும் வரை தான் நினைவிருந்தது. கொலை செய்தது சுத்தமா எனக்குள் பதியல. அடுத்த கொலையின் போது தான் அன்று என்ன நடந்திருக்கக் கூடுமென்று யூகித்தேன். முதல் கொலை நடந்த மறுநாள் செய்தித்தாளில் ஒரு குறிப்பிட்ட செய்தியை காண்பித்து நீ கேட்டது நினைவில் தோன்றி தான் அக்கொலை என்னால் செய்யப்பட்டதென்று கணித்தேன்.”
அனிஷ் சொல்வதையெல்லாம் கேட்டால், ஹரிக்கு தலையை பிய்த்து கொள்ளலாம் போலிருந்தது.
மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றி தன் உணர்வுகளை சமன் செய்தான்.
“சரி, இந்த கொலைக்கான காரணம் உனக்குத் தெரியுமா?”
ஹரியின் சரியான கேள்விக்கு அனிஷிடம் பதிலில்லை. உதட்டை பிதுக்கி தெரியாதென தலையசைத்தான்.
“யூ… பிலடி இடியட். அறிவிருக்கா டா… முட்டாள், முட்டாள்…. ஏன் எதுக்கு ரீசன் எதுவும் தெரியாம வெறும் ஒரு மாதம் காதலித்தவளுக்காக கொலை செய்வாயா?” ஹரியின் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.
திடீரென… அவ்வறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த குழல் மின்விளக்கு வெடித்து சிதறியது. கடிகாரக் குயில் இரவு ஒன்றென சத்தமிட்டது.
ஒரு மாதமில்லை, ஒரு நாள் ஒரு நொடி காதலித்திருந்தாலும் காதல் காதல் தான். அனிஷாவிற்காக நான் எதுவும் செய்வேன். அனிஷ் கூறி முடிக்கவும், யாரோ தன்னை இறுக்கி அணைப்பதை அவன் தேகம் உணர்ந்தது.
“அனிஷா!” அவன் உதடுகள் அழைக்க, அவளின் அணைப்புக் கூடியது.
அனிஷும் தன்னவளை அணைக்க… ஹரிக்கும், மைதிக்கும் யாரையோ அணைத்திருப்பதை போல் அவன் நின்றிருந்த தோற்றம் விநோதமாக இருந்தது.
“அனிஷ் என்னடா செய்ற?” என ஹரி அவனை பிடித்திழுக்க, அவனின் அணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அனிஷாவின் ஆத்மா… ஹரியின் கன்னத்தில் பளாரென்று அறைந்தது.
“அனிஷா!” இரண்டு குரல் ஒலித்தது.
ஒன்று அவளவன். மற்றொன்று நிஷா. உருவத்தின் தமக்கை. மற்றொரு ஆத்மா.
அறைந்ததை உணர மட்டுமே முடிந்த ஹரி தனக்கு எதிரே யாருமில்லாமல் குழம்பி, “என்னடா அனிஷ் இது? என வினவினான்.
“உனக்கு இதெல்லாம் தேவையா?தெரிந்தே மாட்டிக்கிட்ட. இதிலிருந்து வெளிவர முயலு. உனக்குள் அவள் உட்புகாமலிருக்க மனதினை திடப்படுத்து” எனக் கூறிக்கொண்டே போக…
அனிஷா தனது கோப மூச்சுகளை வெளியிட்டுக்கொண்டிருந்தாள். அறை முழுக்க ஒருவித அனல் தகிக்கும் உணர்வு.
அங்கிருந்தோரின் தேகம் சூட்டில் தகித்தது. அப்போது தான் அனிஷாவின் ஆத்மாவை கவனித்த அனிஷ் அவளின் கோபத்தை உணர்ந்தான். ஹரியை நோக்கி அவள் தனது பார்வையை திருப்ப,
“ஓம்…
ஓம் நமச்சிவாயா….”
ஆத்மாவின் காதில் கடவுளின் மந்திர உச்சாடம் ஒலித்தது.
ஆத்மா தனது காதுகளை பொத்திக்கொண்டு, “நிறுத்து… நிறுத்து… நிறுத்துடா!” என ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
_______________________________
(இப்பகுதி தனிப்பட்ட எந்தவொரு மதத்தினரையோ அல்லது மூட நம்பிக்கையினை பரப்புவதற்காக அல்ல)
தெருவோரம் 9 :
“ஓம் நமச்சிவாயா…
நெற்றிக்கண் பார்வையால் கெட்ட ஆத்மாவை சுட்டெரிக்க…
ஓம் நமச்சிவாயா…
உடுக்கை ஒலியில் பேய்களின் ரத்தவெறி அடங்கி போக…
ஓம் நமச்சிவாயா…
கொண்டையில் வீற்றிருக்கும் பிறை நிலவின் ஒளியில் பிசாசு கூட்டம் சுட்டெரிய…
ஓம் நமச்சிவாயா…
ருத்திராட்ச வீச்சினில் மண்ணோடு மடிந்த காட்டேரி மீண்டும் சாம்பலாகிட வேண்டும்.
ஓம் நமச்சிவாயா…”
ஹரியை தாக்க முற்பட்ட அனிஷாவின் காதுகளில் சிவனின் உச்சாடம் ஒலிக்க… மந்திரங்கள் ஓதும் திசை பக்கம் திரும்ப, அங்கே கைகளில் உடுக்கையுடனும், ருத்திராட்ச மணிகளை உருட்டியவாறும் சிவாச்சாரியார்கள் நால்வர் நின்றிருந்தனர்.
ஹரி தான் அவர்களை வர வைத்திருந்தான். அனிஷையும் மைதியையும் வண்டியில் அனுப்பி வைத்தவன் நேராக அவர்களை பார்த்து இங்கு வருமாறு வேண்டி வந்தான்.
ஹரிக்கு அளித்த வாக்கிற்காக, சரியான நேரத்திற்கு அவர்கள் வந்திருந்தனர்.
நால்வரில் தலைமை சிவாச்சாரியரின் வாயில் மந்திரங்கள் வெளி வந்து கொண்டேயிருக்க,
அனிஷாவின் ஆத்மா காதுகளை பொத்திக்கொண்டு, “நிறுத்துடா” என்று ஓலமிட்டாள். மற்றொரு ஆத்மாவோ எதுவும் பேசாமல், அவர்களிட்ட மந்திர கட்டத்திற்குள் சாந்தமாக அமர்ந்தாள். மந்திர கட்டத்திற்கு நேரெதிரேயிருந்த ஆளுயரக் கண்ணாடியில் நிஷாவின் உருவம் தெரிய,
“நிஷா” என அழைத்தவாறு அவளை கண்டுவிட்ட மகிழ்வில் அவளிடம் சென்ற மைதியை, தான் கூறிக்கொண்டிருக்கும் மந்திர உச்சரிப்பினை நிறுத்தாமல் தனது பாரவாயாலே தடுத்து நிறுத்தினார்.
கட்டத்திற்குள் அமர்ந்திருந்த நிஷாவின் ஆத்மா கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பில் எரிய பார்த்த மைதிக்கு தனது தோழியின் வேதனை வருத்தத்தை அளித்தது.
ஹரியும், மைதியும் அமைதியாக ஆச்சாரியர்களின் அருகில் அமர, அனிஷை வலுக்கட்டாயமாக பிடித்திழுத்து அமர வைத்தான் ஹரி.
கண்களை மூடி அனிஷாவை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்த ஆச்சாரியார் மிகுந்த அதிர்வுடன் கண்களை திறந்து, மந்திர கட்டத்திற்குள் அமர்ந்திருந்த நிஷாவினை உருத்து விழித்து, “நீ ஒரு ஆன்மாவே கிடையாது” என்றார்.
ஆமாமென்று குனிந்தவாறே கண்களில் நீருடன் தலையசைத்தாள் நிஷா.
அவளின் கண்ணீரை கருத்தில் கொள்ளும் கால அவகாசம் அவரிடமில்லை.
“கட்டத்திற்கு வெளியே செல்” என அவரிட்ட சத்தத்தில் உடல் நடுங்க எழுந்து மைதியின் அருகில் அமர்ந்தாள்.
அவள் ஆத்மா இல்லையென கேட்டதில் மிகுந்த அதிர்ச்சி அனிஷிற்கு தான். தனது தோழி இறக்கவில்லையென்ற சந்தோஷம் மைதியின் உள்ளம் எங்கும் நிறைந்தது.
மைதியின் அருகிலமர்ந்திருந்த நிஷாவின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோட, தோழியை ஆதரவாக அணைத்துக்கொண்டாள் மைதி.
“நிஷா ஆத்மா இல்லையெனில், அவள் காற்றோடு கரைந்தது… யார் கண்ணுக்கும் புலப்படாததெல்லாம் எப்படி?” ஹரி தான் அதிர்விலிருந்து மீண்டு, வினாவை எழுப்பினான்.
ஹரி கேட்ட பிறகு தான் அனிஷிற்கே அது எவ்வாறென்று கேள்வி உதித்தது.
மந்திர சக்கரம் நடுவே வீற்றிருக்க, நான்கு திசைகளிலும் நால்வர் அமர்ந்திருந்தனர். அதிலொருவர் எழுந்து நிஷா மற்றும் அனிஷின் கையில் ருத்ராட்சம் கோர்க்கப்பட்ட சிவப்பு நிற கயிறு ஒன்றினை காட்டியவாறு…
“எல்லாம் ஆத்மாவின் செயல்” என ஹரியின் கேள்விக்கு பதிலளித்தார்.
மந்திர உச்சரிப்பு அதிகரிக்க அனிஷாவின் ஆத்மா காற்றில் சுழன்றடிக்கப்பட்டது. அறையின் விட்டத்தில் சுழன்று கொண்டிருந்தவள் ஆக்ரோஷமாக நிஷாவின் உடலில் உட்புக முயல, மின்சாரம் பாய்ந்ததை போன்று வீசியடிக்கப்பட்டாள்.
ஹோமத்தில் நெய்யினை ஊற்றி சிவபெருமானின் வேத மந்திரங்கள் ஒலிக்க… தீச்சுவாலையின் வீரியம் அதிகமாகியது. ஆத்மாவின் நிலையும் மோசமானது.
எதனால் தூக்கி எறியப்பட்டோமென்று நிஷாவின் உடலை அனிஷா ஆராய அவளின் வலது கையில் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது ருத்ராட்சம்.
அனிஷின் கையிலும் ருத்ராட்சம் இடம்பெற்றிருக்க, மைதியின் உடலுக்குள் புக நினைத்த அனிஷாவால், அது முடியவில்லை. அனிஷா யாரென்றே தெரிந்திடாத போது… மைதியின் மனம் எவ்வாறு ஆத்மாவை அனுமதிக்கும். ஹரியும், மைதியும் தங்களின் மனதினை திடப்படுத்திக்கொண்டனர்.
தான் நினைத்ததை செய்ய முடியாமல் ஆத்மா வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் தனது பார்வையால் அடித்து நொறுங்கியது.
ஆச்சாரியரின் பூஜையின் வீரியத்தால் ஆத்மா காற்றில் துடிதுடித்தது. தன்னவள் படும் வேதனை அனிஷிற்கு உயிர் வலியை கொடுத்தது.
தான் உயிராய் நேசித்தவள்.. இறந்தும் துன்பப்படுவது… காதலித்த இதயத்திற்கு மரண வலியை அல்லவா கொடுக்கும். அதை தான் இப்போது அனிஷ் அனுபவித்தான். அனிஷால் எழ முடியாதபடி அவனின் தொடை மீது தனது தொடையை வைத்து அழுத்தி பிடித்திருந்தான் ஹரி.
“ப்ளீஸ் ஹரி. என்னை விடு. அவள் படும் வேதனையை என்னால் கண் கொண்டு பார்க்க முடியல. என்னை விடு. நான் இங்கிருந்து போயிடுரேன்” என கை எடுத்து கும்பிட்டு வேண்டினான் கண்ணீரோடு.
ஹரிக்கு நண்பனின் வலி நன்கு புரிந்தது.
அவன் ஆச்சாரியரை பார்க்க, அவரோ விடு என அனுமதியளித்தார். ஹரி தனது பிடியை தளர்த்தியதும் மின்னேலென தனது அறைக்குள் புகுந்து கதவடைத்தான் அனிஷ்.
உள்ளுக்குள் அவன் வெடித்து கதறும் ஓலம் வெளியே அமர்ந்திருப்பவர்களுக்கு துல்லியமாகக் கேட்டது. அவனின் அழுகுரலின் சத்தம் ஓங்கி ஒலித்தது.
தனக்காக தன்னவன் படும் வேதனை ஆத்மாவான அனிஷாவையே அசைத்து பார்த்தது போலும், அனிஷ் இருக்கும் அறையில் தன்னுடைய பார்வையை பதித்தவாறே… ஆச்சாரியரின் மந்திர சக்கரத்தில் அமர்ந்தாள்.
ஆத்மாவாக இருப்பினும் தன் காதலனுக்காக தன்னை பணயம் வைக்க முன் வந்தவளின் காதல் ஹரி மற்றும் மைதிக்கு ஆச்சரியத்தை அளித்தது.
கருப்பு புகை உருவமாக… முடிக்கற்றைகளெல்லாம் பறக்க, ஆவேசமாக அமர்ந்திருந்த அனிஷாவின் மீது, கடவுள் சன்னிதானத்தில் திருநீறு என்றழைக்கப்படும் சாம்பலை விசிறியடித்தார்.
தீச்சுட்டார் போல் அலறியது ஆத்மா.
நிஷாவிற்கு தனது சகோதிரியின் வேதனையை பார்க்க முடியவில்லை, கண்ணீரோடு மைதியின் மடியில் முகம் புதைத்தாள்.
“சொல்… உன் கதை என்ன?” ஆச்சாரியார் அதிக அழுத்தத்துடன் வினவினார்.
“முடியஆஆஆஆத்து…” நர நரவென கடிப்பட்ட பற்களுக்கிடையே மொழிந்தாள்.
“சொல்லப் போறீயா இல்லையா?” தன் விரல்களில் உருட்டி கொண்டிருந்த சிவனின் ருத்ராட்ச மாலையை ஆத்மாவின் மீது தூக்கி எறிந்தார்.
“அய்யோ… எரியுதே… எரியுதே… விட்டுடு… உடம்பெல்லாம் எரியுதே…” கடவுளின் உக்கிர சக்தியின் எரிச்சல் அனிஷாவை வதைத்தது.
“எரிந்தவளை இன்னும் எத்தனை தடவைடா எரிப்பிங்க?” எனக் கத்தியவளின் உடல் முழுக்க வெட்டியிழுக்க, அறைக்குள்ளிருந்த அனிஷ் காதல் வலியில் துடித்தான்.
ஆத்மாவின் அலறலை அனிஷால் செவி மடுக்க இயலவில்லை. காதுகளை கை வைத்து அடைத்தவன் தரையில் புரண்டு கதறினான்.
“தான் துடிப்பதாலே தன்னவனும் துடிக்கின்றான்” என அவனின் அலரலில் உணர்ந்து கொண்ட அனிஷா தன் வலியை வெளிப்படுத்தாமல் அழுத்தமாக கைகளை இறுக்கி அமர்ந்தாள்.
ஒரு ஆன்மாவின் இவ்வளவு அழுத்தம், பல ஆன்மாக்களை பார்த்த சிவனடியாருக்கு ஆச்சரியமாக இருந்தது.
“நீ சொல்லவில்லையென்றால் இப்போதே உன் ஆன்மாவை அழித்து விடுவேன்” எனக் கூறிய ஆச்சாரியார், கமண்டலத்திலிருக்கும்… சிவனின் உடல் தொட்ட அபிஷேக தீர்த்தத்தை தனது கையினில் ஊற்றி,
“ஓம் நமச்சிவாயா…”
சிவனின் பெயரை உச்சரித்தவராய், நீரினை அனிஷாவின் மீது தெளிக்க கையினை கொண்டு போகையில்,
“சொல்றேன்… சொல்றேன். என் மேல் அதை ஊத்திடாதே!” எனக் கத்திய அனிஷாவின் ஆத்மா தனது கதையை சொல்ல துவங்கியது.
அங்கிருக்கும் அனைவரும் அனிஷா சொல்ல வருவதை கேட்க ஆயத்தமாக, அறையில் முடங்கியிருக்கும் அனிஷ்… தனக்கு தெரிந்த மற்றும் தான் அறிந்து கொண்ட கடந்த காலத்தை நினைத்து பார்த்தான்.
°ஐந்து மாதங்களுக்கு முன்பு…
மைதி கல்லூரி சேர்ந்து ஆறு மாதங்கள் முடிவடைந்திருந்தன.
நீல நிற வானமெங்கும் காரிருள் மேகம் சூழ்ந்திருக்க… சாலையோரம் வீற்றிருக்கும் மரங்களெல்லாம் குளிர் காற்றில் சிலிர்த்து வண்ண மலர்களால் தார் சாலையை போர்த்தியது. மாலை நேரம், இயற்கையின் மாற்றத்தால் மென் இருளில் மூழ்க… இருளினை விலக்குவதை போல் மின்னல் வெட்டி இடி இடித்து, பூமி பெண்ணை நோக்கி தன் காதல் அம்புகளாக மழை நீரினை அனுப்பி வைத்தான் மேகக் காதலன்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெலுத்துக்கட்டிய மழை… தன் வலுவிழந்து தூரலாக உருப்பெற்று மென் சாரலாக வீசிக்கொண்டிருந்தது.
சில்லென்ற வானிலைக்கு ஏற்ப சூடாக தேநீர் அருந்த, தனது வீட்டு வளாகத்தை விடுத்து தெருவிற்கு குடையுடன் வந்த அனிஷ் சாலையோர தேநீர் கடையில் போடப்பட்டிருக்கும் மர பெஞ்சில் அமர்ந்தான்.
இப்போது அனிஷிடம் கேட்டால், மழைச்சாரலில் நனைந்தபடி.. மாலை நேர எழிலை ரசித்தவாறு தேநீர் பருகுவது தான் இவ்வுலகிலே மிகவும் அழகானத் தருணம் என்பான்.
ரசித்து ருசித்து அவன் பருகிக்கொண்டிருந்த சமயம்…
“ஹேய்.. ஹேய்…” என்ற இனிமையான குரல் அவனின் செவிகளைத் தீண்டியது.
குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தவன் முற்றிலும் அக்குரலுக்கு சொந்தகாரியிடம் மனதால் கவிழ்ந்தான்.
சிறுவர்களிடம் இளம் பெண்ணொருத்தி சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்.
வானுலக தேவதை மண்ணுலகம் வந்ததை போன்று மிகவும் அழகாக இருந்தாள் அவள். பார்த்ததும் அவனின் கண்கள் எனும் சாலையில் பயணித்து இதய வீட்டில் குடியேறிவிட்டாள்.
இமைக்கவும் மறந்து அனிஷ் அவளின் விழிகளிலே லயித்திருந்தான். அவளின் ஹேசல் விழியிலிருந்து அவனால் பார்வையை அகற்ற முடியவில்லை. அவளின் வித்தியாசமான விழியில் அவனோ மயங்கி நிற்க… சாரல், மழையாக வலுப்பெற்றது.
திடீரென சடசடவென கொட்டிய மழையில் நனைந்தபடி, சில நொடிகளுக்கு முன்னால் தன் மனம் எனும் சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்த பெயர் தெரியாத அந்த அழகிய யுவதியுடன் கனவுலகம் பறந்தான்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல சாலையோர நடை பாதையில் நின்றிருந்த சிறுவர்களின் மீது… வாகனங்களின் வேகத்தால் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் பட்டுவிடாது தன் குடை கொண்டு பாதுகாத்தவள் மழை வந்ததும் தன்னிடமிருந்த குடையை அவர்களிடம் கொடுத்துவிட்டு மழையில் நனைந்தபடி நடக்க ஆரம்பித்தாள்.
செல்லும்போது அக்குழந்தைகளுக்கு அவளிட்ட முத்தம் தன் கன்னம் தீண்டியதாக சிலிர்த்தான்.
அவள் அனிஷை கடந்து சென்ற போது…
“எக்ஸ்க்யூஸ் மீ…” என அழைத்து அவளை நிறுத்தினான்.
திரும்பியவள்… அனிஷைக் கண்டு மென்னகை சிந்தினாள். அவள் கண் முன்னே சற்று நேரத்திற்கு முன் அவனை கண்ட காட்சி நினைவில் தோன்றியது.
தனது தோழி ஒருத்தியை பார்க்க அப்பகுதிக்கு வந்தவள்… எத்திசையில் செல்ல வேண்டுமென்று தெரியாது சாலை ஓரத்தில் நின்றிருந்தவளுக்கு வித்தியாசமான ஒலி கேட்கவும்.. தேநீர் கடை பக்கம் தனது பார்வையை பதித்தாள்.
அங்கு, கண்களை மூடி தேநீரின் நறுமணத்தை நாசியின் வழியே ஆழ்ந்து உள்ளிழுத்து… மெல்ல நாவில் ம் என்ற நீண்ட சத்தத்துடன் திரவத்தை தொண்டைக்குள் நிரப்பி ரசித்து பருகியவனை அவள் தன்னையும் அறியாது ரசித்து பார்த்தாள். அந்நொடியே அனிஷ் அவளின் மனதில் நச்சென்று ஒட்டிக்கொண்டான்.
எதையோ நினைத்து மேலும் புன்னகைப்பவளை ஆழ்ந்து ஜொள்ளிட்டவன்… மேம் என அழைத்து அவளின் மோன நிலையை களைத்தான்.
அப்போது தான் அவளுக்கு புரிந்தது தான் மழையில் நனைந்து கொண்டிருப்பது. அவளிடம் தன் கையிலிருக்கும் குடையை அளித்தவன்… “உங்க குடையை பசங்களிடம் கொடுத்ததை பார்த்தேன், நீங்க நனைந்தா போவீங்க அதான் குடை கொடுக்கலாமென அழைத்தேன்” என்றான்.
“உங்களுக்கு?” என்றவளிடம்,
“அதோ தெரியுதே தெருமுனை அதை கடந்ததும் என் வீடு வந்துடும். மிஞ்சிப்போனால் ஒரு பத்தடி நான் சென்றுடுவேன்” என விளக்கமளித்தான்.
“தேங்க்ஸ் பார் யூர் மனிதநேயம்” என்றவள் சிறு தலையசைப்புடன் திரும்பி நடந்தாள்.
செல்லும் அவளையே பார்த்திருந்தவன்.. அவளின் பெயரை கூட கேட்காத தனது மடத்தனத்தை எண்ணி தன்னைத்தானே தலையில் கொட்டிக்கொண்டான்.
தனது தோழியை சந்தித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தவளின் மனம் முழுக்க அனிஷே நிறைந்திருந்தான்.
“என்ன மேடம் தூக்கம் வரவில்லையா?” என்ற தனது தமக்கையின் கேள்விக்கு பதிலளிக்காது போர்வைக்குள் புகுந்து கொண்டவள் உறங்காது அனிஷையே நினைத்திருந்தாள்.
இங்கு அனிஷிற்கும் மாலை நேர மழையில் தென்றலாய் மனதை வருடியவளிடமே நிலைத்திருந்தது. என்ன முயன்றும் அவளுக்காக துடிக்கும் மனதினை அனிஷால் கட்டுப்படுத்த முடியவில்லை. இரவு கடந்து சூரியன் உதித்ததும் அனிஷ் சென்ற இடம் நேற்று அவளை சந்தித்த தேநீர் கடைக்கு தான். அன்று விடுமுறை தினம் என்பதால் எந்த வேலையுமின்றி அந்நாள் முழுக்க அவளுக்காக அங்கேயே அமர்ந்திருந்தான்.
அவள் வருவதை போல் தெரியவில்லை, யாரென்றே தெரியாத ஒருத்திக்காக … அதுவும் ஒரு நாளில் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்தவளுக்காக… பெயர் கூட அறிந்திடாத பெண்ணவளிற்காக காவல்காரன் போல் காத்திருக்கின்றாயே நீ என்ன முட்டாளா என்பதை போன்று அவனின் மனம் அனிஷை இடித்துரைத்தது.
“அவள் என்னவள். எனக்கானவள். என் இதயம் கவர்ந்த என்னுயிர் யட்சிணி அவள். என் மனதை முதல் பார்வையிலேயே கொள்ளை கொண்ட ராட்சசி அவள்.. மொத்தத்தில் அவளின்றி எனதுயிர் வாழாது.”
கவிதையாக தன் மனதிற்கு பதிலளித்தவன் அவள் வரும் சுவடு தெரியாததால்… வீடு திரும்பினான்.
அனிஷ் இரண்டு நிமிட நடை தூரத்தை தன்னவளை காண முடியாத ஏக்கத்தால் அடிமேல் அடி வைத்து எறும்பை போன்று ஊர்ந்து சென்றான்.
அவன் தெருமுனையை அடைந்த நேரம்…
“ஹலோ பாஸ்.” இனிமையாக அவன் காதில் நுழைந்தது அவனவளின் அழைப்பு.
எங்கோ கேட்ட குரல், என்னவளின் அமுத கானமென்று தனது நடையை திருப்பியவன்… அவளை கண்டதும் இன்பமாய் அதிர்ந்தான்.
தனக்கான தேடுதலை அவனின் அலைப்புறும் கண்களில் கண்டவளின் மனதில் சில்லென்ற உணர்வு.
அனிஷின் பார்வை வீச்சினை தாங்காது நிலம் நோக்கியவளிடம்.. “என்ன இந்த பக்கம்?” வேண்டுமென்றே கேட்டான்.
“உங்களுடைய குடை.”
நீட்டியவளிடம் வாங்கியவாறே..
“இதற்கு தான் வந்தீர்களா?” என்றான்.
அவன் முன் தடுமாறும் மனதினை அடக்கும் வழி தெரியாது அவள் திணறி நிற்க… அந்நேரம் அனிஷை காண வந்த ஹரி அவன் தெருமுனையில் யாரோ ஒரு பெண்ணிடம் நின்று பேசுவதை பார்த்து அனிஷ் என அழைத்தவாறு அவர்களுக்கு அருகில் சென்று வண்டியை நிறுத்தினான்.
புதியவன் ஒருவன் வந்ததும் படப்படப்பில் பட்டென திரும்பி, சென்று கொண்டிருந்த ஆட்டோவினை நிறுத்தி ஏறிவிட்டாள். உள்ளே அமர்ந்ததும் அனிஷ் என அவனின் பெயரை மெல்ல முணுமுணுத்தாள்.
“உங்க பெயர் கூட சொல்லல, உங்க பெயர் என்ன?” அனிஷ் கேட்டதற்கு,
“உங்க பெயரிலே என்னுடைய பெயரும் இருக்கு” என்ற அவளின் குரல் மட்டுமே அனிஷிற்கு கேட்டது.
அவள் ஆட்டோவில் பறந்து விட்டாள்.
ஹரி அவளின் முகத்தை பார்க்க முடியாமல் போனது விதியின் சதியோ? பார்த்திருந்தால் அனிஷின் காதலில் குழப்பங்கள் நடக்காமல் இருந்திருக்குமோ?
“அதன் பின்னர் அவள் யார்… உனக்கு எப்படி தெரியும்… நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய்…?” கவி கேட்ட எந்த கேள்வியும் அவனின் செவிகளில் நுழையவில்லை.
அனிஷின் சிந்தனையெல்லாம் அவளின் பெயர் என்ன என்பதிலே உழன்று கொண்டிருந்தது.
அனிஷ்…. (அனி(னு))… (அனிஷா)… (நிஷா)… (ஆஷா)… பலவாறு யோசித்தும் எதுவென்று அவனால் சரியாக உறுதியாக யூகிக்க முடியவில்லை.
ஆனால், உங்களுடைய பெயரிலேயே என் பெயர் உள்ளதென்ற அவளின் வாக்கியம் அனிஷிற்கு மிகவும் பிடித்தது.
நாட்கள் கடந்து வாரங்கள் ஓடின…. சரியாக அவளை பார்த்து இன்றோடு ஒரு மாதமாகிறது. ஆனால், அவளின் நினைவுகளிலிருந்து மட்டும் அவனால் வெளிவர முடியவில்லை. எங்கு சென்றாலும் அவளின் முகம் தென்பட்டுவிடாதா என அவனின் கண்கள் அலைபாயும்.
அன்று எப்போதும் போல் மைதியை பார்த்துவிட்டு வரலாமென்று அனிஷ் கல்லூரி விடுதிற்கு சென்றான். சிறப்பு வகுப்பு முடிந்து மைதி இன்னும் வரவில்லையென்ற செய்தியை அறிந்து கல்லூரிக்கு சென்றான். வெளியே தங்கைக்காகக் காத்திருந்தான்.
அவன் மைதிக்காக காத்திருக்க… அவனின் தேவதையோ மைதியின் கை பிடித்து நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அவனவளின் முகத்தில் சோகத்தின் ரேகை படர்ந்திருந்ததோ. காதலின் உணர்ச்சியில் அனிஷ் அவளின் வேதனை படிந்த முகத்தை கவனிக்க தவறிவிட்டானோ. தன்னவளை பார்த்ததும் காதல் பெருக்கில் தடுமாறாமல் இருந்திருந்தால் இன்னொரு பெண்ணின் மனம் இவனால் சலனப்பட்டிருக்காதோ.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
+1