Loading

 

தெருவோரம் 6 :

 

மாலை 5.30 மணி…

பூங்காவின் கல் மேடையில் அமர்ந்திருந்த மைதிலி ஹரியின் மீது கொலைவெறியில் இருந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவள் அவனுக்காக காத்திருக்கிறாள். நான்கு மணிக்கெல்லாம் வர சொல்லி அழைத்த போது என்னால் முடியாதென்றவளை… “அனிஷ் சம்பந்தப்பட்ட விஷயம்” எனக் கூறி சம்மதிக்க வைத்திருந்தான்.

அனிஷ் என்றதும் கல்லூரியின் இறுதி வகுப்பினைக் கூட கட் செய்தவளாய் விரைந்து வந்திருந்தாள்.

அனிஷ் பற்றிய செய்தி என்பதாலேயே இவ்வளவு பொறுமையாக காத்திருக்கிறாள்.

கல்லூரி நாட்களில் மாலை ஆறு மணிக்குள் விடுதிக்குள் செல்லவில்லையென்றால் அந்த வாடர்ன் தன்னை ஒருவழி ஆக்கிவிடுமென்று புலம்பியவள் கிளம்ப எத்தனிக்க, வேகநடையுடன் பூங்காவின் உள்ளே நுழைந்தான் ஹரி.

ஹரியை கண்டதும்… ‘எப்போ வரான் பாரு தடிமாடு… இவன் அவ்ளோ பெரிய ஆளுன்னு நானும் வெயிட் பண்ணிட்டிருந்தேன் பாரு என்னை வீடு சுத்தம் செய்வதாலே அடித்துக்கொள்ள வேண்டும்.’ மனதிற்குள் பொருமினாள்.

“வந்து ரொம்ப நேரமாச்சா?”

‘கேக்குறான் பாரு கேள்வி… லேட்டா வந்தமே ஒரு சாரி சொல்லுவோம்ன்னு சொல்றானா பாரு.. இவனுக்கெல்லாம் டிவி சேனல்ல யாரு வேலை கொடுத்திருப்பா?’ மனதிற்குள் முணுமுணுத்தாள்.

தான் பேசியும் பதிலளிக்காது அமைதியாக முறைத்து நின்றிருப்பவளிடம், 

“சாரி…. கொஞ்சம் லேட் ஆகிருச்சு.” தன்மையாகக் கூறினான்.

“கொஞ்சமில்லை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், அண்ணாவை பற்றி ஏதோ பேசணும் என்றதால் தான் வந்தேன். நான் போறேன்” என இரண்டடி எடுத்து வைத்தவளின் மென்கரத்தினை தனது வலிமையான கரத்தினால் பிடித்து தடுத்து நிறுத்தினான்.

கையை விடு… திமிறினாள் மைதிலி. தனது கையினை விடுவிக்க போராடினாள்.

அசால்ட்டாக அவளின் எதிர்ப்புகளை புறம் தள்ளியவன்… “ஒரு ஐந்து நிமிடம், வா வந்து உட்கார்” என கல் மேடையை காண்பித்தான்.

அவனின் கண்களில் தெரிந்த அலைப்புறலில் ஒன்றும் வாதிடாது அவன் காண்பித்த இடத்தில் அமர்ந்தாள்.

“மாமா பேச்சுக்கு அவ்வளவு மரியாதையா, சொன்னதும் கேட்டுட்ட!” 

“இந்த மாதிரி கிறுக்குத்தனமா எதாவது பேசுனா, நான் எழுந்து போயிட்டே இருப்பேன்.” 

“ஓகே… ஓகே… ஜோக்ஸ் அப்பார்ட்…” அவளின் கோபத்தில் சரண் அடைந்தவன் விஷியத்திற்கு வந்தான்.

“நிஷா பற்றி எந்த தகவலுமில்லையா?”

!…

மௌனத்தில் இரண்டு நிமிடங்கள் கழிந்தன.

“நிஷா” என்ற பெயரை ஹரி உச்சரித்ததும் அகல விரிந்த மைதியின் கண்கள் விரிந்த நிலையிலேயே இருந்தன.

“மைதி… மைதிலி…”

ஹரியின் இரண்டு அழைப்புகளுக்கு பிறகு தன்னுணர்வு அடைந்தவள், 

“லாஸ்ட் வீக் கூட நிஷா வீட்டுக்கு போயிட்டு வந்தேன். எந்தவொரு தகவலும் இல்லை. ஆனால், அங்கு போன பிறகு தான் எனக்கு இன்னொரு விஷயம் தெரிந்தது.”

“என்ன… என்ன விஷயம்?”

ஏதாவதொரு தகவல் கிடைத்துவிடாத என்ற எதிர்பார்ப்பு ஹரியிடத்தில்,

“எதுக்கு இப்போ இவ்வளவு ஆர்வம் உங்களுக்கு? அவ என்னுடைய பிரண்ட், நீங்க கொஞ்சம் அடக்கி வாசீங்க.”

“சரிங்க… இப்போ நீங்க அது என்ன விஷயம் சொல்லுங்க?”

“நிஷா’க்கு… ஒரு அக்கா இருக்காங்க. நிஷாவும் அவுங்களும் ட்வின்ஸ். இரண்டு பேரும் ஒரே நாளில் தான் காணாமல் போயிருக்காங்க.”

மைதிலி தனக்கு தெரிந்த தகவலை அளித்ததும் ஹரிக்கு தலை சுற்றியது.

எதையோ கண்டு கொள்ளும் ஆர்வத்தில், “அவங்க நேம் என்னன்னு தெரியுமா? என வினவினான்.

தெரியாதென்று உதடு பிதுக்கியவளை தலையில் கொட்டியவன், “என்ன எதாவது சொல்லனும்ன்னா வாய் எட்டு ஊருக்கு நீளும்.” கடிந்து கொண்டான் அவன்.

“அவங்க பெயர் எனக்கெதுக்கு? நிஷாவை பற்றி தகவல் கிடைத்ததான்னு கேட்க போனேன்… அங்கு, நிஷா இரண்டு உருவத்திலிருக்கும் ஒரு போட்டோ மாட்டப்பட்டிருந்தது. எடிட்டிங் நல்லாயிருக்கு ஆண்ட்டி சொன்னப்போ தான் அது ஒரிஜினல் மா, அவங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ் சொன்னாங்க. ஏற்கனவே, இரண்டு பிள்ளைகளும் என்ன ஆனாங்கன்னு தெரியாமல் சோகத்தில் இருப்பவர்களிடம் ஒன்றும் கேட்க கூடாதென்று நிஷா அக்காவுடைய பெயர் கேட்கவில்லை” என நீண்ட விளக்கம் கொடுத்தவளை முறைத்து பார்த்தான் ஹரி.

அவனின் முறைப்பை அசட்டை செய்தவள், “சரி உனக்கெதுக்கு நிஷாவை பற்றிய தகவல்?” எனக் கேட்டிருந்தாள்.

“நிஷா தனக்கொரு அக்கா இருக்கிறாள்.. நாங்க ட்வின்ஸ் என்பதை உன்னிடம் சொல்லியதில்லையா?

‘நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம, எதிர் கேள்வி கேட்கிறான் பாரு.. உனக்கு நான் பதில் சொல்லமாட்டேன்.’ அவள் மனம் முடிவு செய்தாலும், அவளையும் அறியாது அவளின் தலை இல்லையென ஆடியது.

“நீ இன்னைக்கு ஹாஸ்டல் காலி செய்துட்டு அனிஷுடன் தங்கிக்க.” கட்டளையிட்டான் அவன்.

“முடியாது.” அவனை வெறுப்பேற்றினாள் அவனவள்.

“நான் சொல்ற இதை மட்டுமாவது கேள்” என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

எப்போதும் தன்னிடம் வாய்க்கு வாய் மல்லுக்கட்டுபவன், இன்று புதிதாக மன்றாடுவது ஆச்சரியமாகத் தான் இருந்தது.

‘இவன் தன்னை அண்ணாவுடன் தங்க சொல்வதற்கும், அன்று இரவு அங்கு நடந்ததற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமோ?’ சட்டென்று அவளின் மூளை சிந்தித்தது.

தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் மீது பார்வை பதிந்திருந்த ஹரியை தொட்டு தன் பக்கம் திருப்பிய மைதிலி…

“ஏதும் மறைக்கிறியா ஹரி, உனக்கும் அண்ணாக்கும் எதாவது பிரச்சனையா?”

தான் கேட்டதில் திடுகிட்டவனை கண்டு கொண்டவள், பிரச்சனை இருப்பது உண்மையென உணர்ந்து கொண்டாள்.

இதற்குமேல் ஹரியிடம் மறைக்கக் கூடாதென்று நினைத்தவள், அன்றிரவு அனிஷ் வீட்டில் தான் தங்கியிருந்த போது நடந்த அனைத்தையும் தெளிவாகக் கூறினாள்.

மைதிலி கூறியதை கேட்டவன்… இதை ஏன் அன்றே சொல்லவில்லையென சீறினான்.

“நான் ஏதோ கனவுன்னு…”

மைதிலி வாக்கியத்தை முடிக்க கூடவில்லை, “லூசு லூசு… அறிவிருக்கா? கனவென்ன அவ்வளவு லென்த்தாவா வரும்?” எனத் திட்டியிருந்தான்.

ஹரியின் பதட்டத்திலேயே நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை பெரியது என புரிந்து கொண்டவள்.. முதல் முறையாக ஹரியின் கையினை பிடித்து, “எதுவாயிருந்தாலும் எல்லாம் சரியாகிடும் ஹரி” என்றாள் ஆறுதலாக.

தன்னவளின் முதல் அரவணைப்பு அவனிற்கு சுகமாக இருந்தது. காதலில் திளைக்கும் தருணம் இதுவல்ல, நொடியில் சுதாரித்தவன்.. 

மைதிலியிடம் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் அனைத்து குழப்பமான நிகழ்வுகளையும் வரிசையாகக் கூறினான். அவளிடம் சொல்லும் போது தனக்கே கூட ஒரு தெளிவு கிடைக்குமென்பது அவனின் எண்ணம்.

ஹரி கூற அனைத்தையும் கேட்டவள்,

“இப்படியும் கூட இந்த கணினி யுகத்தில் நடக்குமா?” என கேட்டிருந்தாள்.

“நம்பவும் முடியல, நம்பாமல் இருக்கவும் முடியல” என்றவளின் மனதில் ஏதோ ஒரு வழி கண்டுபிடித்துவிட்ட மகிழ்வு.

“ஹரி… எங்க காலேஜ் டீன் சைக்கார்ட்ரிஸ்ட் , அவர் கிட்டத்தட்ட மூணு வருஷத்துக்கும் மேலாக… மனிதனின் இறந்து போன ஆத்மாக்களை மீண்டும் உடலில் செலுத்துவதன் மூலம் அவன் உயிருடன் வருகிறான அல்லது எல்லோரும் சொல்வதை போன்று ஆத்மா தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனித உடலை பயன்படுத்தி கொள்கிறதா? என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். நாம் ஏன் அவரை சென்று பார்க்க கூடாது?” என்று யோசனை வழங்கினாள்.

“இது நல்ல ஐடியாவா தான் தெரியுது. அவரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக்கோ.. எவ்வளவு விரைவில் அவரை பார்க்க முடியுதோ அவ்வளவு நல்லது” என்றவன், நேராக மைதிலியை ஹாஸ்டலிற்கு அழைத்து சென்று காப்பாளரிடம் தெரிவித்து அறையை காலி செய்து அனிஷின் வீட்டில் அவளை விட்ட பிறகே சற்று நிம்மதியாக உணர்ந்தான்.

“அனிஷ் வந்த பிறகு நான் போறேன். நீ போ படுத்துக்கோ” என்ற ஹரியிடம்.. மெல்ல தன் மனதில் சிறிது நேரமாக உருத்தும் கேள்வியினைக் கேட்டாள்.

“ஹரி… அனிஷ் அண்ணா பின்னால் ஒரு ஆத்மா சுற்றுது என்றாயே, அது… அ…. த்…. அ…….து வந்து நி….ந்…நி..நி..ஷாஆஆஆஆ’வா இருக்கலாம்ன்னு நீ நினைக்கின்றாயா?”

ஒரு வழியாக தனது கேள்வியை திக்கித் திணறிக் கேட்டே விட்டாள்.

இல்லையென மெல்ல தலையசைத்தவன் அவளை நம்ப வைத்து அறைக்குள் அனுப்பினான்.

மைதியிடம் அது நிஷாயில்லையென சொல்லியிருந்தாலும் அவன் நினைவு இன்று காலை அனிஷ் காட்டிய புகைப்படத்தை நோக்கி சென்றது.

முதலில் அனிஷைத் தவிர அந்த புகைப்படத்தில் யாரும் தெரியவில்லை.. மீண்டும் பார்த்த போது அனிஷின் மார்பு பகுதி அருகே பளபளக்கும் ஹேசல் விழிகள் மின்னி மறைந்தன. சட்டென்று தோன்றி மறைந்த விழிகளுக்கு கீழே தென்பட்ட மச்சத்தில் அடையாளம் கண்டு கொண்டவனாக அதிர்ந்து எழுந்தான்.

இதுவரை இரண்டு முறை அவ்விழிகளை ஹரி பார்த்திருக்கிறான். அப்போது தென்படாத மச்சம் இப்போது தெரிகிறதென்றால், அந்த ஆத்மா தன்னை யாரென உணர்த்த நினைக்கிறதென்பதை சரியாக யூகித்த ஹரி தனக்கு பழக்கப்பட்ட விழிகளை நினைவு கூறுகையில் தான் நிஷாவின் நினைவு வந்தது.

ஹரிக்கு தெரிந்து அவனின் வட்டத்தில் அவளுக்கு மட்டுமே அழகிய ஹேசல் விழிகள். அதற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக வலது கண்ணிற்கு கீழே மிக அருகில் சிறு பொட்டு வடிவில் கருமை நிற மச்சம் அமைந்திருக்கும்.

நிஷா மைதிலியின் கல்லூரி தோழி… ஆகவே, நிஷாவின் மீது சந்தேகம் தோன்றியதாலே மைதிலியை அழைத்து அனைத்தும் தெரிவித்தான் நிஷா என்பதை மட்டும் மறைத்து.

ஹரி நினைப்பதை போல் அனிஷை சுற்றி வரும் ஆத்மா நிஷா எனும் பட்சத்தில்.. அது மைதியை ஒன்றும் செய்யாது, மைதி தன்னுடன் தங்கியிருப்பதால் அனிஷும் இரவு தாமதிக்காமல் வீடு வந்துவிடுவான்.. மேலும் அவனுக்கும் ஒரு பாதுகாப்பு இருக்குமென்று எண்ணியதாலே மைதியை அனிஷுடன் தங்க வைத்தான்.

‘இவ்வளவு நாள் அனிஷுடன் ஒன்றாக இருந்து அவனுக்கு சுமையாகிவிடமாட்டேன்’ என்று விடுதியில் தனித்திருந்தவள் தன் அண்ணனுக்கு ஆபத்து என ஹரி விளக்கிக் கூறியதும் அனிஷுடன் தங்க ஒப்புக்கொண்டாள்.

அனிஷுடன் ஹரியே தங்கிக்கொள்ளலாம். ஆனால், அவனின் பெற்றோர் அதற்கு சம்மதிக்க மாட்டார்களே.

அனிஷ் வரும் வரை காத்திருக்க நினைத்த ஹரி வீட்டிலிருந்து அழைப்பு வரவும் மைதியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

அவன் வண்டியினை உதைத்து ஸ்டார்ட் செய்யவும்… கடிகாரம் பதினொரு மணியென ஒலியெழுப்பவும் சரியாக இருந்தது.

ஸ்டார்ட் ஆகிய வண்டி அனிஷின் வீட்டு தெருமுனையில் திடீரென நின்றது. வண்டியை ஆராய்ந்தவனுக்கு என்ன பிரச்சினை என புரியவில்லை.

‘அம்மா சீக்கிரம் வர சொன்னாங்க’ என சிந்தித்தவன் வண்டியை தள்ளிக்கொண்டே சென்று அனிஷ் வீடிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு, காவலாளியிடம் அனிஷ் வந்தால் சொல்லிவிடுமாறு உரைத்தான். 

தெருவில் நடந்தபடி கேப் புக் செய்ய முயற்சிக்க.. மொபைல் செயலிழந்து போனது. முக்கிய சாலைக்குசென்று ஆட்டோ பிடித்துக்கொள்ளலாமென நடந்தவன் பாதியிலே நின்றுவிட்டான். யாரோ அவனை பின்தொடரும் உணர்வு.

கடிகாரத்தை பார்க்க நேரம் பதினொன்று கடந்து பத்து நிமிடம் ஆகியிருந்தது. மனதில் எழுந்த பயத்தை மறைத்துக்கொண்டு முன்னேறினான். 

அவன் செல்ல செல்ல வீதியில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மின்விளக்குகளும் பட்… பட்டென்று வெடித்தது. தெரு முழுக்க இருள் கவிழ்ந்தது. வானத்தில் பவனி வரும் சந்திரனும் பயம் கொண்டானோ மேகத்திடம் ஒளிந்து கொண்டான். அருகில் நிற்பவரையும் உணர முடியாது இருளுக்குள் இருள் போர்வையாய் படர்ந்திருந்தது.

தெருமுனையில் சிறு வெளிச்சம் தென்பட… திரும்பியும் பாராது நடந்தான். தெருமுனைக்கும் ஹரிக்கும் பதினைந்து அடி இடைவெளியிருக்கும், காலில் ஏதோ இடிக்க நின்றவன் தரையில் குனிந்து பார்க்க… தீயில் பாதி எரியப்பட்ட பிணம், பயத்தில் உறைந்தவன் கண்களை மூடித்திறக்க. பிணத்தின் கண்களும் மூடி திறந்தன. ஓட நினைத்தவனின் கால்களை அசைக்க கூட முடியவில்லை, பசைபோட்டு ஒட்டியதை போன்று தரையோடு பதிந்திருந்தது அவனது கால்கள்.

காற்றில் பிணம் எரியும் வாடை கலந்து வீசியது. 

ஹரியின் உடல் அனலில் சுட்டது. தீயாய் தகித்தது. ஒரு இன்ச் கூட அவனால் நகர முடியவில்லை.

அந்நேரம் சூறாவளியாய் சுற்றி சுழன்று அடித்த காற்றில் ஒரு குரல் ஹரியின் செவிகளைத் தீண்டியது.

“தோல் எரியும் வாடை குமட்டுதா? தீயின் சூட்டினை தாங்க முடியலயா? எரிந்த உடலை கண்கொண்டு பார்க்க முடியலயா? அப்போ அனிஷின் விஷியத்திலிருந்து ஒதுங்கியிரு” என கரகரத்த குரலில் மொழிந்தது.

“உனக்கு என்ன தான் வேணும், யார் நீ?”

“ஹ… ஹா… ஹா… ஹா…”

ஹரியின் கேள்விக்கு ஆக்ரோஷமான சிரிப்பு சத்தமே விடையாய் கிடைத்தது.

தெருமுனையில் பைக் வரும் ஓசை கேட்ட நொடி… வீசிய காற்று அமைதியாகியது, வெடித்து சிதறிய மின்விளக்குகள் பளிச்சென ஒளிர்ந்தன. மேகத்தில் ஒளிந்திருந்த சந்திரன் பிரகாசமாய் காட்சியளித்தான். ஹரியின் காலுக்கடியில் கிடந்த பிணம் தரைக்குள் புதைந்தது. அவனோடு உரையாடிய குரல் மறைந்து தேய்ந்தது.

மாறிய அனைத்தும் சமநிலை அடையவும் தெருமுனையில் அனிஷ் வண்டியை நிறுத்தவும் சரியாக இருந்தது.

சிறு இடைவெளி மட்டுமே என்பதால் அனிஷ் என்பது ஹரிக்கு நன்றாக தெரிந்தது.

அனிஷ் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை போல் தோன்றவும் வேக எட்டுக்களை எடுத்து வைத்து அனிஷை நெருங்கினான்.

நாயின் ஊளை சத்தம் காதை கிழித்தது.

இரவு நேரத்தில் அந்நாயின் சத்தம் பழகிய ஒன்றென அனிஷ் தன்னவளுடன் கதைத்துக் கொண்டிருக்க,

ஹரிக்கு உடல் தூக்கி வாரிப்போட்டது… அந்நாயின் பார்வையும், ஊளையும் அனிஷின் பக்கமே நிலைத்திருந்தது.

அதிர்ச்சி பார்வையுடனே மெல்ல முன்னேறினான்.

அனிஷின் பின் சென்ற ஹரி அவனின் தோள் தொட திரும்பிய அனிஷ், நிச்சயம் ஹரியினை எதிர்பார்க்கவில்லை.

“ஹரி என்னடா நீ இங்க?”

“ஏன் மச்சான் நான் இந்த தெருவுக்கு வரக்கூடாதா இல்லை உன் வீட்டுக்கே வரக்கூடாதா?”

“ஹேய் அப்படியெல்லாம் இல்லை…”

சரி… சரி… அதை விடு… இந்நேரத்தில் இங்க என்ன செய்ற? தனியாக நின்று யாரிடம் பேசிட்டிருக்க?”

ஹரிக்கு ஒன்றும் புரியவில்லை.

“அது வந்து மச்சான்” தலையை தடவி அசடு வழிந்த அனிஷ்… உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் தனக்கு எதிரே கைகாட்டி, “இவள் தான் அனிஷா” என்றான்.

அனிஷா அறிமுக நிமித்தமாக தன் கரத்தினை ஹரியின் முன் நீட்ட, அனிஷ் கை கொடு மச்சான் என ஹரியின் கரம் பிடித்து அனிஷாவின் கையோடு பொருத்தினான்.

ஹரியோ, யாருக்கு கை கொடுக்க சொல்கிறான் என்று குழப்பத்துடன் ஏறிட்டு பார்க்க.. அவன் கண்களுக்கு யாரும் தெரியவில்லை. ஆனால், ஹரியின் கையோடு கை கோர்க்கும் உணர்வுத் தோன்ற அவனின் கரம் காற்றில் மித்தப்பதை போல் தான் அவனுக்கு தெரிந்தது.

அனிஷாவின் கரம் தீண்டிய நொடியில் ஹரியின் கரத்தில் அழுத்தம் கூட… அவனின் கரத்திலிருந்து மெல்ல மெல்ல ஒரு உருவம் வெளிப்பட்டது.

முதலில் கரம், உடல், முகமென ஹரியின் கண்களுக்கு காட்சியளித்த அனிஷா இறுதியாக தனது கண்களை மலர்ந்து மொத்த உருவம் காட்டினாள்.

அனிஷாவின் முகத்தை கண்டதும் ஷாக் அடித்ததை போன்று ஹரி தன்னுடைய கரத்தினை உருவ… இழுத்த வேகத்தில் தரையில் விழுந்தான்.

ஹரி என்று பதறிய அனிஷ் நண்பனை தூக்கிவிட, 

“என்னாச்சுடா… ஆர் யூ ஓகே?”

“ம்…” ஒற்றையாக பதிலளித்தவன், “வீட்டில் மைதி தனியாக இருக்கின்றாள் கிளம்பலாம் வா” என்று அனிஷை துரித்தப்படுத்தினான்.

“மைதி?”

யோசனையாக இழுத்த அனிஷிடம்…

“ஆமாம் மைதி தான், உன் தங்கை உன்னுடன் தானே இருக்கணும்… ஹாஸ்டலில் மைதியின் ரூமெட் காலி செய்துட்டதால் புதிதா வந்த ரூமெட்டிடம் செட் ஆகலையாம், அறையும் மாற்றித் தர மாட்டுகிறார்களாம். அதான் உன்னுடனே தங்கிக்கொள்ள வந்துட்டா” என்று விளக்கம் அளித்தவன் “மீதியை வீட்டில் போய் உன் தங்கையிடமே கேட்டுக்கொள்” என்று அவசரப்படுத்தினான்.

“என்ன ஹரன் அண்ணா என்னிடம் எல்லாம் பேச மாட்டிங்களா?” எனக் கேட்டு ஹரிக்கு அதிர்ச்சி அளித்தவள், அனிஷிடம் “உனக்கு தங்கை இருக்காங்களா?” எனக் கேட்டாள்.

அனிஷ் ஆமோதிப்பாக தலையசைக்க, அதென்ன ஹரன் என்றான் ஹரி.

ஒருவேளை தான் நினைப்பதை போல் இவள் நிஷாவாக இருக்கக்கூடாதென்ற நப்பாசை அவனிடத்தில்,

“தங்கச்சி எப்பவும் அண்ணனை ஸ்பெஷலாத்தானே அழைக்கணும்… அதுமட்டுமில்லாம ஹரி என்ற பெயர் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.. அதை கேட்டாலே பிபி அதிகமாகுது. அதான், உங்க… முழுப்பெயர் ஹரிஹரனிலிருந்து ஹரன் என்பதை அழைத்தேன்” எனக் கூறினாள்.

‘அதே பதில். அதே உரிமை பேச்சு.’

அனிஷாவையே இமைக்க மறந்து அவன் பார்த்திருக்க… சட்டென நாக்கினை இடது புறம் வெளியே காட்டி வலது கண்ணை அடித்தாள்.

‘அதே குறும்பு…’

மைதி தனித்து இருப்பதை மறந்தவனாக… “நீ…. சாரி, நீங்க இதுக்கு முன்ன என்கிட்ட பேசியிருக்கீங்களா?” எனக் கேட்டான்.

அவளின் பதில் யாவும் தெளிவாக இருப்பினும், அவனுக்கு அவை மேலும் மேலும் குழப்பத்தையே அளித்தன.

அனிஷ் மற்றும் ஹரிக்கு பின்னால் நின்றிருந்த அரூபம் அனிஷாவை முறைத்துப் பார்க்க, அவள் ஏதோ புரிந்ததை போன்று “நேரம் ஆகிவிட்டது நான் கிளம்புறேன்” என அவசரமாகக் கூறி ஓடிவிட்டாள்.

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். நீண்ட நேரம் மணியடித்தும், மைதி கதவினை திறக்காததால்… அனிஷ் தன்னிடமிருந்த மற்றொரு சாவி கொண்டு திறக்க உள் நுழைந்தனர்.

அங்கே அவர்கள் கண்ட காட்சியில், இருவரும் ஒரு சேர “மைதி” எனக் கத்தினர்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்