தெருவோரம் 5 :
நடு நிசி….
பேய்களும் தங்களது மணல் மேட்டில் தஞ்சம் புகும் நேரம்…
முழு நிலவாய் தன் வெண் கதிர்களை பூமியின் எட்டு திக்கும் பாய்ச்சிக்கொண்டிருந்தான் சந்திரன்.
இருளுடன் போட்டி போடும் கருமை நிற சாலையின் ஒரு புறம் கடல் ஆர்ப்பரித்திருக்க… மற்றொரு புறம் வெறுமையாக காட்சியளிக்க.. அதன் நடுவில் தன் பின் உருவத்தை காட்டி மெல்ல நடந்தாள் அவள்.
அரூபமாகிப் போனவள். அனிஷின் மனதினை அன்பினால் கொய்தவள்.
தனது முதல் எண்ணம் வெற்றிகரமாக நடந்து முடிந்த உவகை அவளின் பளபளக்கும் விழிகளில் ஊற்றெடுத்தது.
அந்த பங்களாவின் வாயிலில் அரை மயக்கத்தில் கிடந்த அனிஷின் கண்களில் அரூபத்தின் இடை தாண்டி அசைந்தாடும் கார் குழல் மட்டுமே மங்களாக தெரிய.. முற்றிலும் தன்னுடைய சுயம் இழந்து மூர்ச்சையாகினான்.
தன்னுடைய கூட்டை விட்டு அரூபம் வெளியேறியதும் காற்றோடு கரைந்தாள் அனிஷா.
அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஹரிக்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது. அவனுள் தோன்றும் வழக்கமான கேள்வி தான். என்ன நடக்கிறது?
நேற்று இரவு நடந்ததைப்பற்றி தான் சிந்தித்தான்.
நள்ளிரவு தாண்டிய நேரத்தில் எங்கோ அடித்த அலைபேசியின் ஒலியில் கண்விழித்தான் ஹரி. தூரத்தில் கேட்ட ஒலி அருகில் கேட்டதும் கண்களை கசக்கி இமை திறந்தவனின் மொபைல் அமைதியாக அவன் படுத்திருந்த தலையணைக்கு அருகில் வீற்றிருந்தது.
முழுதாக சத்தம் ஓய்ந்து மீண்டும் ஒலியெழுப்பியது.
மனதினை திடப்படுத்திக் கொண்டவன்… தொண்டையை செருமி… எச்சிலை திரட்டி காய்ந்த குரல் வளையை ஈரப்படுத்தி காற்றாகிய குரலில்..
“நீ இங்க தான் இருக்கன்னு தெரியும்.. உனக்கு என்ன வேணும்” எனக் கேட்டிருந்தான்.
அதற்கு அவள் சிரித்த ஆக்ரோஷமான சிரிப்பிற்கு… ஹரியின் அருகிலிருந்த கண்ணாடி குடுவை வெடித்து சிதறி… அவன் நெற்றியில் ரத்த காயத்தை ஏற்படுத்தியது.
சிறு கீறலானாலும் அந்நேர வலியில் ஆவென அலறியவனின் முகத்திற்கு நேராக, விரித்துவிடப்பட்ட கற்றை கூந்தல் முன்னால் வழிய… ரத்தம் வழியும் தன் செந்நிற முகத்தைக் காட்டி கோரைப்பற்க்கள் தெரிய சிரித்த உருவம் தன் நாவினால் ஹரியின் நெற்றியில் வழியும் குருதியை சுவைத்தது.
நூலிழை இடைவெளியில் அரூபத்தின் பளபளக்கும் விழிகளை கண்டே நடுங்கிக்கொண்டிருந்தவன் அவளின் செயலில்.. ஒரு நொடி இதயம் துடிப்பது நின்று துடித்தான். உடல்முழுக்க அருவிபோல் வியர்வை வழிந்தது. சில்லிட்டு நடுங்கிய அவனின் கைகளை அழுத்தி பிடித்தவள்.. அந்த பங்களாவின் இருப்பிடத்தை கூறி, அங்கு விரைந்து செல் எனக் கட்டளையிட்டாள்.
நான் செல்ல மாட்டேன் என்றவனை உக்கிர பார்வை பார்த்தவள்…. “அனிஷிற்காக கூட செல்ல மாட்டாயா?” எனக் கேட்டு மறைந்தாள்.
அனிஷ் என்றதுமே ஹரி அரூபம் கூறிய இடத்திற்கு விரைந்தான்.
ஹரி அங்கு வந்த போது அனிஷ் பங்களாவின் வாசலில் சுயமிழந்து கிடந்தான். பதறிய ஹரி மெல்ல அனிஷைத் தூக்கி காரிலேற்றி தனது இல்லம் வந்தான்.
ஹரியின் பெற்றோர் திருப்பதி சென்றிருப்பதால்.. எத்தகைய இடையூறும் இல்லாமல் போனது.
அதிகாலையில் கண்விழித்த அனிஷ்.. தனக்கு அருகில் படுத்திருந்த ஹரியை கண்ட பிறகே எங்கிருக்கின்றோம் என தெளிந்தான். மூளைக்குள் யாரோ சுத்தியலை வைத்து அடிப்பதை போலிருந்தது.
அனிஷ் எழுந்த அரவத்தில் கண்விழித்த ஹரி, “ஆர் யூ ஓகே?” என்றான்.
“நைட் அனிஷாவோடு வெளிய போயிருந்தேன். காதல் மயக்கத்தில் என்ன நடந்ததுன்னு கூட தெரியலை.” சிறு சிரிப்புடன் கூறியவன், “என் வீடு நினைத்து இங்கு வந்துட்டேனா? அவளோடிருந்தால் என்ன நடக்குது தெரிவதில்லை.” தன் போக்கில் பேசியவன், “சரிடா நான் வீட்டுக்கு சென்று கிளம்பி ஆபிஸ் வந்துடுறேன். அங்கு பார்ப்போம்” என்றவனாக சென்று விட்டான்.
ஹரிக்கு தான் தலை சுற்றியது.
அனிஷ் அங்கு எப்படி சென்றான்… அங்கு என்ன நடந்திருக்கும்… எப்படி அவன் மயங்கினான் எனும் குழப்பத்துடனே அலுவலகம் வந்தவன்… தனது மேசையிலிருந்த அன்றைய தின செய்தித்தாளை பிரித்து பார்த்தவன் மொத்தமாய் அதிர்ந்தான்.
“பிரபல தொழிலதிபர் ரவிக்குமார் அவர்கள் மர்மமான முறையில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது சொகுசு பங்களாவில் பிணமாக கிடந்தார்.” அச்செய்தியினை படித்ததும் ஹரிக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது.
என்ன யோசித்தும் பிரச்சனையின் ஆதியை கண்டறிய முடியவில்லை.
அனிஷ் வந்ததும் இரவு எங்கு சென்றாயென நேரடியாகக் கேட்டான்.
“நானும், அனிஷாவும் கடற்கரைக்கு சென்று சிறிது தூரம் நடந்தோம். அதன்பிறகு ஒரு வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்” என சாதாரணமாக அனிஷ் கூறிய பதிலில் எதையோ கண்டுபிடித்துவிட்டேன் என ஹரியின் மனம் கூகுரலிட்டது.
சில வினாடிகள் மனதிடம் ஆலோசித்த ஹரி… தன் கையிலிருந்த செய்தித்தாளை காண்பித்து அதிலிருக்கும் புகைப்படத்தை சுட்டிக்காட்டி “நீங்க சென்ற கடற்கரை வீடு இதுதானா?” என்று வினவினான்.
சிறிதும் யோசிக்காமல் ஆமென அனிஷ் பதிலளித்ததும்… “இங்க ஒரு கொலை நடந்திருக்கு. செய்தி வந்திருக்கு” எனக் கூறினான் ஹரி.
அதிர்ச்சியில் அனிஷ் சிலையாகினான்.
ஹரியின் தொடுகையில் உணர்வு பெற்றவன்… “நாங்க வந்த பிறகு நடந்திருக்கலாம்” என்றவனாக தனது வேலையில் ஈடுபட்டான்.
இரவு அங்கு என்ன நடந்திருக்குமென்று தனக்குள் உழன்று கொண்டிருந்த ஹரிக்கு அப்போது தான் ஒன்று விளங்கியது… அனிஷ் அனிஷாவுடன் சென்றேன் என்கிறான், அப்போ நான் அங்கு சென்ற போது அவள் எங்கே போயிருப்பாள். ஏதோ புரிவது போலவும், புரியாததை போலவும் இருந்தது.
இன்னமும் ஹரி கண்களை மூடினால் அந்த விழிகள் அவனின் மனக்கண் முன்னே தோன்றி பயம் காட்டுகிறதே… அதிலிருந்து விடுபடவேண்டும்… நண்பனை எப்படியும் காப்பாற்ற வேண்டுமென தீவிரமாக இதில் இறங்கினான்.
யோசிக்க யோசிக்க அவனுள் ஒரு தெளிவு பிறந்தது.
அனிஷ் அவனின் காதலைப்பற்றி கூறியதிலிருந்து சிந்தித்தவன்.. தனக்கு பின்புறம் திரும்பி, “மச்சி நீ எப்போவாது உன் ஆளை பகலில் மீட் செய்திருக்கியா” என்றான்.
“எங்கடா மீட் பண்ணுறது… டே டைமில் தான் இங்கேயே இருக்கோம். அப்புறம் எப்படி சந்திப்பது. இந்நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பாதி ராத்திரிக்கு மேல தான் வீட்டுக்கே போறேன், இதெல்லாம் முடிஞ்சா தான் அவளுடன் பகலில் சுற்றித் திரியனும்” என காதல் கனவு கண்களில் வழிய கூறியவன், “ஆனால், என் வேலை பளுவை புரிந்துகொண்டு எனக்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து என்னை பார்த்த பிறகு தான் செல்வாள்” என பேச்சினை முடித்து செய்து கொண்டிருந்த வேலையில் கவனமானான்.
‘எங்கோ சரியில்லை.’ மனதில் உருப்போட்டான் ஹரி.
மாலை வீட்டுக்கு கிளம்பியவன், அனிஷிடம் சென்று… “எனக்கு இன்னும் என் தங்கையை காட்டவேயில்லையே” என்றான் வருத்தத்துடன்.
“அவள் போட்டோ இல்லை மச்சான்” அனிஷ்.
“டேய் மூணு மாசமா லவ் பண்ணிட்டுருக்கன்னு சொல்ற… இதுவரை ஒரு சுயமி(selfie) கூடவா எடுத்ததில்லை?” ஹரியின் முகத்தில் உண்மையிலேயே ஆச்சரியம் தொக்கி நின்றது.
இல்லையென உதடு பிதுக்கிய அனிஷ்… “இன்றே என்னவளுடன் போட்டோ எடுத்து நாளை உனக்கு காட்டுகிறேன்” என்க, ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையுடன் ஹரி விடைபெற்றான்.
ஹரியை மிரட்டும் அரூபத்தின் நேற்றைய செயலின் மூலம்… அனிஷை கேடயமாக மட்டுமே பயன்படுத்துகிறது, அதனால் தன் நண்பனுக்கு ஒன்றும் நேராது என்று தெரிந்துகொண்ட ஹரி தைரியமாக அனிஷை விடுத்து இல்லம் சென்றான்.
பங்களாவில் ரவிக்குமார் உடனிருந்த பெண் கதவு திறக்கும் சத்தத்தில் உடனடியாக குளியலறைக்குள் புகுந்து கொண்டதால் அங்கு நடந்த நிகழ்வு அவளுக்குத் தெரியாமல் போனது.
குளியலறைக்குள்ளிருந்து அவள் வெளியே வந்த சமயம் ரவிக்குமார் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தான். இங்கிருந்தால் போலீஸ் கோர்ட் என்று அலைய வேண்டியிருக்குமென்று கணித்த அப்பெண்… தன் பெயரும் வெளியில் தெரிந்து தன்னை இழிவாகப் பார்ப்பார்களென்று எண்ணி சடுதியில் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
ஆதலால்… தடயம் ஏதுமின்றி, தொழில் எதிரிகளால் நடந்த கொலையாக இருக்கலாமெனக் கருதிய காவல்துறை அதிகாரிகள்.. அதற்கேற்ற கண்ணோட்டத்தில் கேசினை கொண்டு சென்றதால் அனிஷ் தப்பித்தான். இது தற்காலிகமாகவும் இருக்கலாம்.
ஹரி சென்றதும் வேலையில் மூழ்கிய அனிஷ் முற்றிலும் தன்னை வேலையினுள் புதைத்துக் கொண்டான்.
கடிகார சத்தத்தில் தன்னவளின் நினைவு எழும்ப…. அவளை சந்தித்தது முதல் இந்த நொடி வரையிலான மூன்று மாத காலத்தை நினைத்து பார்த்தவன் உதட்டில் உதித்த புன்னகையுடன் பைக் சாவியினை எடுத்துக்கொண்டு உற்சாகமாகக் கிளம்பினான்.
செல்லும் வழி முழுக்க அனிஷிற்கு தன்னவளின் நினைவுகள் மட்டுமே..
அவன் எதிர்பார்த்ததை போலவே நள்ளிரவைத் தாண்டியும் அவனுக்காக அவள் காத்திருந்தாள்.
அன்று போல் இன்றும் அவனை வெளியே செல்லலாமென்று துரித படுத்தியவள் அவன் என்னவென்று கேட்பதற்கு முன் வண்டியிலேறி அமர்ந்திருந்தாள்.
“உனக்கு வண்டி ஓட்டத் தெரியுமா?” ஆச்சரியமாகக் கேட்டவன் அனிஷாவின் பதிலை எதிர்பாராமல் பின்னால் ஏறினான்.
சீரான வேகத்தில் வண்டியை செலுத்தியவள், செல்ல வேண்டிய இடத்தை நெருங்க நெருங்க புயல் போல் ஓட்டினாள். அதில் அனிஷே சற்று மிரண்டு தான் போனான்.
“நிஷா மெதுவா ஓட்டு எதற்கு இந்த வேகம்? சாலை வெறிச்சோடி தானேயிருக்கு. பொறுமையாவே செல்லலாம். அவசரமில்லை” என்றவன் அவள் திரும்பி பார்த்த அனல் கக்கும் பார்வையில் அரண்டான். பிரம்மையோ என ஒதுக்கியவன், காற்றில் அவன் முகத்தைத் தீண்டும் அவளின் பட்டு கூந்தலில் தன்னை தொலைத்தான்.
ஒருவித மோனை உலகத்தில் சஞ்சரித்தவன் வண்டி நின்ற கிரீச்சென்ற ஒலியில் மீண்டான். அவன் இறங்குவதற்கு கூட நேரமளிக்காது, “வா அனிஷ் வா.. சீக்கிரம் வா… அவன் போயிடப் போறான்…”
“யார் போய்விடுவா?”
“இங்க யாரையாவது ரிசீவ் பண்ண வந்திருக்கிறோமா?”
ஏனென்றால் அவர்கள் வந்திருக்கும் இடம் ரயில் நிலையம்.
எதற்கும் பதிலளிக்காது அவனை இழுத்துக்கொண்டு ஓடியவள்… நகரத்திற்குள் வலம் வரும் லோக்கல் ட்ரெய்னில் ஏறினாள்.
“நாம் தான் எங்கோ போகின்றோமா, எங்கு?”
அவனிடம் கேள்விகள் நீண்டது…
“கொஞ்சம் அமைதியாக வருகிறாயா?”
இதுவரை தன்னிடம் அதிர்ந்து கூட பேசாதவள் இன்று கத்தவும்.. ஆச்சரியம் அடைந்தவன், அவளின் உரிமை குணமென்று அனிஷா சொல்லியதை கேட்பதைப்போல் அதன் பிறகு அமைதியாகவே வந்தான்.
காதலிக்கலாம்… கண் மூடித்தனமாக காதல் கொள்வதும் ஆபத்து தான். ஒருவரை சார்ந்து நம் மனம் வாழக் கற்றுக்கொண்டு விட்டால் அதிலிருந்து வெளிவருவது மிகக்கடினம்.. ஏனோ அதை அனிஷ் புரிந்துகொள்ளவில்லை.
இவர்கள் ஏறிய பெட்டியில் ஒருவன் மட்டுமே அமர்ந்து மொபைலில் எதையோ பார்த்திருந்தான். அவனிற்கு வயது முப்பதிற்குள் இருக்கலாம்.
அவனுக்கு நேரெதிரேயிருந்த இருக்கையில் உட்கார்ந்தவள், அனிஷையும் தனக்கு அருகில் அமரச்செய்தாள்.
“இவ்வளவு இடம் காலியாக இருக்கும்போது எதுக்கு இவருக்கு முன்னால் உட்கார வேண்டும்?”
“உனக்கு கேள்விகள் மட்டும் தான் கேட்கத் தெரியுமா?”
“நீயும் இப்போது கேள்வி தானே கேட்கின்றாய்?”
சரி வந்த வேலையை பார்ப்போமேன அனிஷிடமிருந்து முகத்தை திருப்பிக்கொண்டவள்.. தனக்கு எதிரே அமர்ந்திருப்பவனின் மிக அருகில் பயங்கரத் தோற்றத்தில் அமர்ந்திருந்த அரூபத்திடம் கண்ஜாடை செய்தாள்.
“அனிஷ்… அனிஷ்…” மெல்லிய குரலில் அரூபத்தின் அழைப்பு அவனை உரசியது.
யாரென சுற்றி பார்த்தவனின் பார்வை பளபளக்கும் விழிகளை கண்டு நிலைக்குத்தி நின்றது.
ஒரு நாழிகையில் அனிஷின் மனம் மூளையென கட்டுப்படுத்தியவள், இங்கு என்ன நடக்கிறதென்று கூட உணராமல் இருப்பவனை கொலை செய்யச் சொல்லி அனிஷிற்கு கட்டளையிட்டது.
அரூபத்தின் வசியத்தை மீறி வெளிவரத் துடித்த அனிஷின் ஆன்மாவை தன் கை சிறைக்குள் கொண்டு வந்தவள் மொத்தமாக அவனின் உடம்பிற்கு குடிபெயர்ந்தாள்.
பத்து ட்ரான்ஸ்போர்ம்களின் மொத்த வோல்ட் மின்சாரமும் அவனுள் பாய்ந்திருப்பதைப் போன்று உணர்ந்தவனின் உடல் வெட்டியிழுக்க, கீழே உருண்டு புரண்டான்.
திடீரென ஒருவன் தனக்கு முன்பு வந்து அமர்ந்ததை கண்டு கொள்ளாதவன், அவன் தரையில் துடிப்பதை விநோதமாகப் பார்த்தான்.
அவன் கண்களுக்கு அனிஷிற்கு முன்பே அவனுக்கு முன்னால் வந்தமர்ந்த அனிஷா தெரியவேயில்லை.
அனிஷின் உடலில் உள்ள நரம்புகளுக்குள் ஏதோ ஓடுவதை போன்று தசைகள் குதித்தன. அதை பார்த்தவன் கண்களில் அச்சம் தோன்றியது.
விபரீதமாக இங்கு ஏதோ நடக்கப்போகிறதென்று அவனின் மனம் கட்டியம் கூறியது.
அந்நேரத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமாக அமைந்துள்ள ரயில் நிலையத்தில் சிக்னல் விழவும் வண்டி நின்றது. அதுதான் சமயமென்று அவன் இறங்கி ஓடினான்.
அனிஷாவோ, அனிஷின் உடலில் புகுந்த அரூபத்திடம், “அவன் தப்பித்து விட்டான். ஓடுகிறான், சீக்கிரம் தன்னிலை அடைந்து ஓடிவா” என்று கத்தினாள்.
“இன்று விட்டால் அவனை பிடிக்க முடியாது, நமக்கும் காலமில்லை என உரக்கக் கூறினாள்.
நம் காலம் முடிந்துவிட்டால் நாம் இங்கு இருக்க முடியாது எனும் கூற்று உள்ளுக்குள் பதிய, கீழே உருண்டு கொண்டிருந்தவன் கம்பீரமாக எழுந்து அமர்ந்தான்.
கருவிழிகள் மட்டும் ரத்தம் நிறம் கொண்டன… அவன் ஓடும் திசையை பார்வையாலே அலசியவன், மின்னலென பாய்ந்து ஒடுபவனின் குறுக்கே நின்றான்.
சட்டென்று ஓடும் தன் முன்னால் உருவம் ஒன்று குதிக்கவும் தடுமாறியவன் பின்னோக்கி தரையில் விழுந்தான். பயத்தில், விழுந்த வாக்கிலே பின்னால் நகர்ந்தவனை நகர விடாமல் ஏதோ தடுத்து.
திரும்பி பார்த்தவன் சர்வமும் கலங்க “நீயா?” என அதிர்ந்தான்.
தனக்கு முன்னால் கொலை வெறியுடன் நிற்பவனையும், பின்னால் பழிவாங்கிவிடும் வேட்கையில் உக்கிரமாக நிற்பவளையும் மாறி மாறி பார்த்தவன்,
அனிஷாவிடம், “நீ இன்னும் இறக்கவில்லையா?” எனக் கேட்டான் நடுங்கும் குரலில்.
கும்மிருட்டு பரவியிருக்கு எங்கும் கருவேல மரங்களும் முட்புதர்களும் அடர்ந்து வளர்ந்து பார்ப்பதற்கே கானகம் போல் காட்சியளித்த அவ்விடத்தில் அவளின் சிரிப்பொலி எல்லா திசைகளிலும் எதிரொலித்தது.
“நீயெல்லாம் உயிருடன் இருக்கும் போது நான் மட்டும் விரைவில் இறந்து விடுவேனா என்ன… உங்களையெல்லாம் கொன்று புதைக்கும் வரை எங்கும் காற்றாய் நிறைந்திருப்பேன்” என்றவள்,
அனிஷிடம் தன் கரத்திலிருக்கும் கேனை நீட்டி… “அதிலிருக்கும் பெட்ரோலை அவன்மீது ஊற்றி எரித்துவிடு” எனக் கூறினாள். பழிவாங்கும் மகிழ்வில் அனிஷாவின் கண்களும் பளபளத்தது.
“என்னை மன்னிச்சிடு. நான் தெரியாமல் செய்து விட்டேன்” என்றவன் அனிஷாவின் கால்களை பிடிக்கப் போக, அவனின் கைகளுக்குள் சிக்கவேயில்லை. அதில் அவன் பயந்து, அனிஷை பார்க்க, அவனுலிருந்த அரூபம் வெளியே எட்டிப்பார்த்தது.
“பேயா நீ?”
அவன் முடிப்பதற்குள், “எங்களை பேயாக அலையாவிட்ட உன்னை பிசாசாக உலவ விடப் போகிறேன்” எனக் கூறி சிரித்த அரூபம், அனிஷின் உடல் மூலமாக தன் எண்ணத்தை நிறைவேற்ற முனைந்தது.
அனிஷ் அவன் மீது பெட்ரோலை ஊற்ற, எழுந்து ஓடினான்.
அனிஷாவும், அனிஷிற்குள்ளிருக்கும் அரூபமும் சத்தமாக சிரித்தன.
“ஓடு, ஓடு இன்னும் நல்லா ஓடு… எங்கு ஓடினாலும் உன் மரணம் இன்று நிறைவேற்றப்படும்.”
ஆக்ரோஷமாக உரைத்தவள் தன் ரத்த நிற கண்களின் வீச்சிலேயே அவனை பற்ற வைத்திருந்தாள்.
நெருப்பில் அவன் படும் வேதனை அவளுக்கு பேரானந்தத்தை கொடுத்தது. அவன் உடல் கொஞ்சம் கொஞ்சமாக வேக, அனிஷின் உதட்டில் புன்னகை மலர்ந்தது. அவன் எரியும் நெருப்பு அனிஷாவிற்கு குளுமையை அளித்தது.
சிறு எலும்பும் மிஞ்சாது சாம்பலாகியவன் முற்றிலும் காற்றோடு கரைந்து போனான்.
அவனின் மரணம் அரூபத்தின் கண்களில் பழிவாங்கும் பளபளப்பை குறைத்தது.
அனிஷா… “அடுத்து யார்?” எனக் கேட்க, “கொஞ்சம் காத்திரு” என்றதோடு அனிஷின் உடலை விட்டு வெளியேறி மறைந்தாள்.
இம்முறை அனிஷை தெருமுனை வரை கொண்டு வந்து விட்ட அனிஷா.. அவனின் மயக்கத்தை தெளிய வைத்தாள்.
கண்விழித்ததும் எங்கிருக்கின்றோம் என யோசித்தவனின் என்ன ஓட்டத்தை தடை செய்தது அனிஷாவின் இறுகிய அணைப்பு. மெல்ல அவளின் முகத்தை மூடியிருக்கும் துப்பட்டாவை விலகியவன், அழகு சொட்டும் ரோஜா நிற முகத்தை வைத்த கண்ணெடுக்காமல் கண்டு ரசித்தான்.
தன்னுடைய பாக்கெட்டிலிருந்து மொபைலினை எடுத்தவன், “உன்னைப்பற்றி தான் எதுவுமே சொல்ல மாட்டேங்கிறாய்.. அட்லீஸ்ட் என்னுடன் ஒரு போட்டாவாவது எடுத்துக்கொள்ளேன்” என்ற அவனின் கண்களில் வழிந்த காதலிலும்.. குரலில் தென்பட்ட ஏக்கத்திலும் அவளின் தலை தானாக சம்மதமென ஆடியது.
கிளிக்.
போட்டோ எடுக்கப்பட்ட சத்தத்தில் உணர்வு பெற்றவள்… “அதை முதலில் டெலிட் செய்யுங்க” என்றாள்.
அவள் கண்களில் தெரிந்த கோபத்தில்,
“ஹே…. கூல்… கூல்…. இப்போவே டெலிட் பண்ணிவிடுறேன்” என்றவன் அவள் முன்பே அதை அழித்தும் விட்டான்.
வீட்டிற்கு வந்தவன் பேக்-அப் ஆப்ஷன் மூலம் அந்த போட்டோவினை ரெகவேர் செய்தான். மொபைலின் வால்பேப்பரில் பொறுத்தியவன் இருவரின் கண்களில் தெரிந்த காதலில் கட்டுண்டவனாய் ரசித்து பார்த்தான்.
தன்னை கிண்டல் செய்யும் ஹரியின் முன்பு இந்த போட்டோவை காண்பித்து, என் ஆளு எவ்வளோ அழகுன்னு வாய்பிளக்க வைக்கின்றேன்.. சபதம் செய்தவனாக அனிஷ் நித்திரையில் ஆழ்ந்தான்.
ஹரி போட்டோவினை பார்த்து அனிஷ் கூறுவதைப்போல் வாய் பிளக்கத்தான் போகின்றான்… ஆனால், அது ஆச்சரியத்தால் இல்லை, அதிர்ச்சியால்.
ஹரியின் அதிர்ச்சி பெரிய விளைவினை விலை கொடுத்து வாங்கப்போகிறது. அதற்கு விலை நிர்ணயத்தவனோ.. எவ்வித அதிர்வுமின்றி இருக்கப் போகின்றான்.
அடுத்த நாள் காலை உற்சாகமாக எழுந்த அனிஷ் அதே உற்சாகத்துடன் அலுவலகம் சென்றான்.
தானிருக்கும் தளத்தில் நுழைந்தவன் முதலில் தேடியது ஹரியைத் தான். நேராக ஹரி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் ஒரு இருக்கையை இழுதுபோட்டு அமர்ந்தவன், தனது சட்டை காலரை தூக்கி விட்டவனாக… பாக்கெட்டிலிருந்து மொபைலினை ஸ்டைலாக எடுத்தான். லாக் ஓபன் செய்தவன் கண்களில் சிறு கர்வத்துடன் திரையில் ஒளிரும் வால் பேப்பர் போட்டோவினை ஹரியின் முன் சுட்டிக் காட்டினான்.
ஹரி போட்டோவினை பார்த்ததும் அமைதியாக, “அழகா இருக்க மச்சி” என்க…
“என் ஆளு தானே?”அனிஷின் கேள்வியில் ஒரு மாதிரியாக அவனை பார்த்தவன்..
“உன் ஆளா, எங்கே டா?” என எதிர் கேள்வி கேட்டான். ஹரியின் கண்களில் எதிர்பார்ப்பை கண்ட அனிஷ் அவன் தன்னிடம் விளையாடவில்லை என்பதை உணர்ந்து… மீண்டும் தனது மொபைலினை காண்பித்து “இந்த போட்டோவில் உனக்கு என்னைத் தவிர வேறு யாரும் தெரியவில்லையா?” என்று எவ்வித உணர்வும் பிரதிபலிக்காது வினவினான்.
அனிஷ் அவ்வாறு கேட்டதுமே ஹரிக்கு தான் கணித்தது பொய்யில்லை. சந்தேகப்பட்டது சரியே என்ற எண்ணம் உதித்தது.
“இதில் நீ மட்டும் தானிருக்க” எனக் கூறிக்கொண்டே ஹரி மீண்டும் ஒருமுறை புகைப்படத்தினை பார்க்க… இருக்கையிலிருந்து அதிர்ந்து எழுந்தான்.
ஹரியின் அதிர்ச்சிக்கு காரணம் என்னவாக இருக்கும்?
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
+1