தெருவோரம் 4 :
ரயிலிலிருந்து இறங்கிய மைதிலி தனக்காக காத்திருக்கும் ஹரியின் அருகில் சென்று நின்றாள். அவளின் வருகை உணர்ந்தும் அமைதியாக பைக்கின் மீது சாய்ந்து நின்று மொபைலினை தீவிரமாக நோண்டிக்கொண்டிருந்தான். சில நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தவள் அவன் தன்னை பார்க்கப்போவதில்லை என்பதை அறிந்து ஆட்டோ என அழைத்தாள்.
அவள் ஆட்டோவை அழைத்ததும், ‘அய்யய்யோ காரியம் கேட்டுச்சு போ…’ தலையில் கை வைத்தவன் மைதியின் அழைப்புக்கு வந்த ஆட்டோ ஓட்டுநரை போகச் சொன்னான்.
மைதிலி முறைத்துப் பார்த்தபடி நின்றிருக்க, வண்டியிலேறு என்றபடி பைக்கினை ஸ்டார்ட் செய்தான்.
“நீ எதுக்கு வந்த?” கடுப்புடன் கேட்டவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அவளின் கேள்வி ஹரியின் காதல் மனதை புண்படுத்தினாலும்… இது வழக்கமான ஒன்று என மனதை சமன் செய்தவன்,
“உன் அண்ணனுக்கு ஷூட் இருக்கு… சீக்கிரம் வா, நானும் அங்கு போகணும்” என்றான்.
இவ்வளவு நேரம் தனது காதலியை உள்ளுக்குள் ரசித்திக் கொண்டிருந்தவன் நண்பனின் நினைவு வந்ததும்… கிளம்புவதற்கு அவளை துரித்தப்படுத்தினான். தானில்லா நிலையில் அனிஷிற்கு ஏதும் ஆபத்து நேரிடுமோ என்று பயந்தான்.
என்னாலெல்லாம் உன்னுடன் வர முடியாதென மல்லுக்கு நின்றவளை தன் பார்வையால் அடக்கி வண்டியில் அமர செய்தவன்… தார் சாலையில் சீறிப்பாய்ந்தான்.
“கொஞ்சம் மெதுவா போயேன்.” அவளின் கத்தலை அவன் கண்டு கொள்ளவேயில்லை.
பத்து நிமிடங்களில் மைதிலியை அனிஷின் வீட்டில் விட்டவன்… “வருகிறேன்” என்றதோடு அனிஷ் ஷூட் செய்து கொண்டிருக்கும் மயானத்தை நோக்கி வண்டியினை விரட்டினான். அனிஷிற்கு எதுவும் நடந்துவிடக் கூடாதென்று அவன் மனம் அடித்துக்கொண்டது.
வீட்டிற்குள் நுழைந்த மைதிலி ரெப்ரஷ் செய்து கொண்டு படுக்கையில் விழுந்தாள்.
திடீரென தன்னுடன் இந்த சிறிய வீட்டில் வேறொருவரும் இருக்கும் அரவம் உணர்ந்தாள். மெல்ல எழுந்து மின்விளக்கை ஒளிரச் செய்தாள்.
‘வீட்டினை தாம் தான் திறந்தோம்.. சோ, எனக்கு முன்னால் இங்கு வேறொருவர் இருக்க சான்ஸ் இல்லை…’ சிந்தித்தவள் மீண்டும் படுத்தாள்.
பலத்த காற்று வீச, ஜன்னலின் கதவுகள் பட படவென அடித்தன. மின்சாரம் தடைபட்டது.
மெழுகுவர்த்தியை தேடி எடுத்தவள் பயத்தில் உறைந்தாள். அவளுக்கு நேரெதிரே அந்தரத்தில் எரியும் மெழுகுவர்த்தி அவளை நோக்கி வந்துகொண்டிருந்தது. விரிந்த அவளின் விழிகளில் அப்பட்டமாக பயம் தெரிய, மைதிலியின் மணிக்கட்டில் யாரோ பிடிக்கும் அழுத்தம் ஏற்பட்டது. கையை உயர்த்த எவ்வளவோ முயன்றும் அவளால் முடியவில்லை. இருளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சுவற்றில் விழுந்த அவளின் பிம்பத்தோடு, விரித்துவிட்ட கூந்தல் காற்றில் படர்ந்து அசையும் மற்றொரு பிம்பமும் தெரிந்தது. அச்சத்தில் நெஞ்சுக்கூடு படபடத்தது. தொண்டைக்குழி ஏறியிறங்க வாய் திறந்தவள் திகிலுடன் யாரென வினவினாள்.
சட்டென நிழல் பிம்பம் மறைய மின்சாரம் வந்தது. உடல் மொத்தமும் வியர்வையில் நனைந்திருக்க, அருகிலிருந்த தண்ணீர் நிறைந்த கண்ணாடி பாட்டிலினை எடுத்து நீர் அருந்தியவள், அதனை எடுத்த இடத்திலேயே வைக்க, பாட்டில் அந்தரத்தில் சுழன்று.. சுழன்ற வேகத்திற்கு சுவற்றில் மோதி கண்ணாடி சில்லுகள் அறை முழுக்க சிதறின. தெறித்த வேகத்திற்கு ஒரு துண்டு கண்ணாடி சடாரென பாய்ந்து வந்து மைதியின் கழுத்தருகே பட்டென நின்றது. ஒரு நூலிழை அளவே கழுத்திற்கும் கண்ணாடிக்கும் இடைவெளியிருந்தது.
பயத்தில் நா வறண்டு, விழி பிதுங்கி நின்றவள்… ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் பனிக்கட்டியாய் உரைந்தாள்.
மைதிலி………
அவளின் பெயர் காற்றில் ஒலிக்கவும், மைதியின் மொபைல் சத்தம் எழுப்பவும் சரியாக இருந்தது.
அவளின் மொபைல் திரையில் அனிஷ் என்று ஒளிர்ந்ததுமே சற்று நேரத்திற்கு முன் நடந்தவை யாவும் கனவோ என எண்ணும்படி அனைத்தும் மாறியிருந்தது.
ஜன்னல் கதவுகள் சாற்றியிருக்க.. மெழுகுவர்த்தி, கூடத்தில் மேசையில் அமர்ந்திருக்க… தண்ணீர் பாட்டில் படுக்கையறையின் சிறு மேசையில் ஒய்யாரமாக வீற்றிருந்தது. விட்டு விட்டு ஒளிர்ந்து மின்விளக்குகளும் சீரான வெளிச்சத்தைப் பரப்பின. வெளியே புயல் போல் சுழற்றி அடித்தக் காற்று கூட தென்றலை விட இதமாக வீசியது.
தனியாக இருப்பதால் ஏதோ தேவையில்லா பிரம்மை என்று புறம் தள்ளியவள் அனிஷின் அழைப்பை ஏற்று பத்திரமாக வீடு வந்துவிட்டதாக அனிஷிடம் தெரிவித்து இணைப்பை துண்டித்தாள். சிறிது நேரத்தில் பயண களைப்பால் உறங்கியும் விட்டாள்.
அனிஷ் இருக்கும் மயானத்திற்குள் ஹரி நுழைய… இடுகாட்டிற்கு மத்தியில் அடர்ந்து படர்ந்து, பார்ப்பதற்கே ராட்சசத் தோற்றத்துடன் வளர்ந்திருந்த ஆலமரத்தின் விழுது அனிஷின் கழுத்தில் இறுக சுற்றியிருக்க.. விழிகள் பிதுங்கி… நாக்கு வெளியே தொங்க.. கை, கால்கள் விறைக்க தொங்கிக்கொண்டிருந்தான்.
“அனீஈஈஈஈஈஈஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…”
இடுகாடே அதிர கத்தினான் ஹரி…. தரையில் மண்டியிட்டு தலையில் அடித்துக் கதறினான்.
திசையெங்கும் அகோரா சிரிப்பொலி எதிரொலித்தது.
“ஹ…ஹா…ஹா….ஹா….ஹா….ஆ…ஆ…”
“உனக்கு ஆபத்து இருக்குன்னு தெரிந்தும், உன்னை விட்டு போனது என் மடத்தனம் தான்டா.” மண் தரையில் கையை அடித்து அழுதான்.
தலை கவிழ்ந்து ஹரி அழுவது பரிதாபாத் தோற்றத்தை ஏற்படுத்தியது. திடீரென தோளில் கரம் படிய துள்ளி விலகியவன் இமைக்கவும் மறந்தான். ஹரியின் கண் முன்னே எவ்வித குறையுமின்றி அனிஷ் நின்றிருந்தான்.
மச்சி… என்றவனாக அணைத்துக் கொண்டவனின் பிடி மேலும் மேலும் இறுகியது.
“இங்கு நடப்பதெல்லாம் நாம் செட் செய்தன்னு எத்தனை முறைடா சொல்லுறது?” அனிஷ் ஹரியை கடிந்து கொண்டான்.
“உனக்கு ஒன்னும் ஆகலையே? அனிஷ் கிளம்புடா… இனி நாம் இங்கு இருக்க வேண்டாம்.. போலாம்டா… சீக்கிரம் கிளம்புடா.” எதிலிருந்தோ தன் நண்பனை காப்பாற்றிவிடும் வேகம் அவனுள்…
“சரி..சரி.. இதோ எல்லாம் எடுத்து வைத்துவிட்டு கிளம்பலாம், ஒரு பைவ் மினிட்ஸ்” என்ற அனிஷ் அனைத்தையும் பேக் செய்து காவலாளியிடம் கொடுத்தவன் காமிராவை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
அனிஷ் பின்னால் செல்ல முயற்சித்த ஹரியினால் அசைய கூட முடியவில்லை. அவனின் கை பின்னோக்கி தானாக செல்ல… திரும்பி பார்த்தவனின் கண்கள் அச்சத்தில் விரிந்தது. அன்று அனிஷ் பார்த்த அதே கரிய கை… இன்று ஹரியின் கையினை பிடித்து இழுத்திருந்தது.
“இப்போ கூட்டிட்டு போயிட்டால் மட்டும், என் அனிஷை என்னிடமிருந்து உன்னால் பிரித்துவிட முடியுமா?” அதன் குரலினிலேயே ஆக்ரோஷம் தெறித்தது.
உறைந்து நின்றவனை அனிஷின் வாடா என்றழைப்பு கலைத்தது. வீடு வரும் வரை அனிஷிடம் ஹரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
‘அந்த கை யாருடையது? அனிஷை குறி வைக்கும் ஆத்மா யாருடையது? அனிஷை ஏன் சுற்றி வருகிறது?’ கேள்விகள் மட்டுமே நீண்டது.
“மச்சி வீடு வந்திருச்சுடா.” அனிஷின் குரலில் யோசனையிலிருந்து மீண்ட ஹரி, “பார்த்து கவனமா போடா” என்றதோடு வீட்டிற்குள் சென்றுவிட்டான்.
ஹரியின் தோற்றத்தை ஒரு மாதிரியாக பார்த்த அனிஷ் நாளை பேசிக்கொள்ளலாமென்று கிளம்பினான்.
அனிஷ் தெருமுனையை அடைந்த நேரம், கண்களில் எதிர்பார்ப்புடன் அவனுக்காக காத்திருந்தாள் அவனவள். அவளுக்கு அருகில் சென்றமர்ந்தவன் அவளின் தென்றல் போன்ற கையினை தனது கைகளுக்குள் பொத்தி கொண்டான். பட்டும் படாமல் தன் இதழ் கொண்டு தீண்டியவன்,
“நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?” என வினவினான்.
அனிஷிற்கு அருகில் அரூபமாய் சூழ்ந்திருந்தவளின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால், தன் நிலை எண்ணி மகிழ்விலிருந்து மீண்டவள்… அனிஷை நேருக்கு நேர் பார்த்து, “நம் திருமணத்திற்கு முன் நாம் செய்து முடிக்க வேண்டிய செயல் ஒன்றிருக்கிறது.. அதுவரை காத்திருங்கள்” என பழிவாங்கும் வெறியுடன் உக்கிரமாகக் கூறியவள், நான் வருகிறேன் எனக் கூறி வழக்கம் போல் காற்றோடு கரைந்தாள்.
காதல் மோகத்தில் மூழ்கியிருப்பவன் எதையும் அலசி ஆராயும் நிலையில் இல்லை.
வீட்டிற்கு வந்தவன் மைதிலி உறங்கிக்கொண்டிருப்பதை ஆதுரத்துடன் பார்த்தவன், அவளிற்கு போர்வையை போர்த்தி விட்டு மற்றொரு அறைக்குச் சென்று படுத்தான்.
மறுநாள் மைதிலியை கல்லூரி விடுதியில் விட்டவன், “பத்திரமா இரும்மா” எனக் கூறி அலுவலகம் சென்றான்.
அலுவலகத்தில் நுழைந்தவன் நிகழ்ச்சியின் அன்றைய தொகுப்பிற்காக நேற்று இடுகாட்டில் எடுத்த பகுதியை சிறு தொகுப்பாக மாற்றுவதற்காக கணினியில் ஓட விட்டான். எந்தெந்த பகுதியை சேர்க்க வேண்டுமோ அதற்கேற்றவாறு வெட்டி கோர்த்தவன், முழு தொகுப்பையும் சரி பார்க்கத் தொடங்கினான்.
தொகுப்பின் பின்னணியில் வாய்ஸ் கொடுப்பதற்காக ஹரியை அழைத்தான்.
திரையில் காட்சி ஓடிக்கொண்டிருக்க, அனிஷ் எழுதி கொடுத்ததை ஹரி பேச ஆரம்பித்தான்.
“மயானம்…
பகலில் அமைதியாக மணல் மேடுகளாக மட்டுமே காணப்படும் இவ்விடம், இரவு நேரங்களில் பேய்களின் கூட்டத்தோடு காட்சியளிக்கும் உண்மை நிகழ்வு..
தினமும் நம் நிருபர் பேய்களை காணொளியாக எடுப்பதை கண்டு கொண்ட ஆத்மாக்கள், இன்று நம் நிருபரின் உயிரையே எடுக்க முனைந்த காட்சி தான் இன்றைய தொகுப்பு.”
பேசி முடித்தவன் அனிஷுடன் நிகழ்ச்சியினை பார்க்க.. அங்கு வந்தார் அவர்களின் ஹெட் மனோ.
ஆலமரத்தின் விழுதுகளில் தொங்கிக்கொண்டிருந்த அனிஷ், பேய்களின் மாயாஜாலத்திலிருந்து தன்னை காத்துக்கொள்ள போராடுவது தத்ரூபமாக அமைந்தது. அந்நிகழ்வு நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டதென்று தெரியாமலிருக்க பின்னணியில் புகையினை பரப்பச் செய்து அனிஷின் கழுத்தை சுற்றி வளைத்திருந்த விழுதுகளில் கோரமுகம் கொண்ட ஆத்மாக்கள் தொங்குவதை போன்று ஆட்கள் செட்டப் செய்யப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. அனிஷ் தொங்கிக்கொண்டிருக்க அவன் விழுந்துவிடாதவாறு ஒரு உருவம் அனிஷின் கால்களை பிடித்தபடி தாங்கிக்கொண்டிருந்தது. பார்போருக்கு அவ்வுருவம் அனிஷை இழுப்பதைப்போலே தோன்றும்.
“இத்தொகுப்பு சிறப்பாக மிரட்டலாக வந்துள்ளது. இதில் ஹைலைட்டே இறுதியில் உன்னை இழுக்கும் அந்தப் பெண் தான். நிஜப் பேய் போலவே இருந்தாள்” என்று பாராட்டியவர் சென்றதும் அனிஷ் மற்றும் ஹரியின் முகம் உண்மையிலேயே பேய் அறைந்ததை போன்றிருந்தது.
அனிஷ் விழுதில் தொங்கிய போது பதறியடித்து துடித்த ஹரிக்கும் தொங்கிக் கொண்டிருந்தவனுக்கும் கீழே யாரும் தெரியவில்லை. ஆனால் இப்போது எப்படி.. அது யாரென இருவரும் குழம்பினர். பிரீஸ் செய்து உற்று நோக்கிய ஹரிக்கு அவ்வுருவம் மனோ சொல்லியதை போல் அனிஷை கீழே விழச்செய்ய இழுக்கலாம் இல்லை. மாறாக, அவன் கழுத்தில் சுற்றியிருக்கும் விழுது பொய்யாக இருந்தாலும், மேலும் இறுகாமலிருக்க அனிஷின் கால்களை தாங்கிப்பிடித்திருந்தது. அதன் பளபளத்த ஹேசல் விழிகள் நன்கு பரிட்சியமானதாகப் பட்டது.
அனிஷிற்கு வழக்கம்போல் தன்னை சுற்றி என்ன தான் நடக்கிறது என்ற குழப்பம் மேலும் அதிகரித்தது. தன்னை யாரும் பிடித்திருந்த மாதிரி ஞாபகமில்லையே என்று கூர்ந்து பார்த்தவனிற்கும் அவ்விழ்களை நன்கு அடையாளம் தெரிந்தது.
அனிஷிற்கு அவ்விழிகள் பழக்கப்பட்ட உணர்வை தோற்றுவித்தது. தினமும் தான் சந்திக்கும் ஒரு நபரின் கண்கள் என உணர்ந்து கொண்டவனுக்கு, அது யாருடையதாக இருக்குமென்று நினைவில்லை.
ஆனால், அந்த பளபளக்கும் விழிகள் யாருடையதாக இருக்குமென்று ஹரிக்கு நன்கு நினைவிருந்தது. அன்று மருத்துவ மனையில் அவன் பார்த்த அதே விழிகள். அன்று கண்ணீரில் தோய்ந்த உக்கிர விழிகள், இன்று அனிஷை தவிப்புடன் நோக்கும் விழிகள்.
‘இதில் எது உண்மை… என்னை மிரட்டும் குரல் அனிஷிற்கு பாதுகாப்பா அல்லது ஆபத்தா? அந்த ஆன்மாவே நம்மிடம் வந்து சொன்னால் தான் தெரிந்துகொள்ள முடியும். பட் அது உண்மையிலேயே ஆன்மா தான அல்லது வேறெதேனுமா?’
தனக்குள் எழுந்த பல விடை தெரியா வினாக்களுடன் பயணித்துக் கொண்டிருந்தவனை கலைத்தது திகிலூட்டும் ஆக்ரோஷமான குரல்.
“உன் வேலையை மட்டும் பார்… அனிஷ் என்னவன், அவனைப்பற்றி கவலைப்பட நானிருக்கிறேன்.”
குரல் எங்கிருந்து வருகிறது… சுற்றி பார்வையை அலசியவன் திடுக்கிட்டான். அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த காணொளியில் தெரிந்த அந்த உருவம் ஹரியை உருத்து விழித்தபடி மிரட்டியது.
ஹரிக்கு அருகிலமர்ந்திருந்த அனிஷ் எந்தவொரு சலனமுமின்றி இருக்கும் போதே இங்கு நடப்பது தனக்கு மட்டுமே கேட்கிறது என அறிந்துகொண்ட ஹரி இருக்கையிலிருந்து வேகமாக எழுந்தான்.
அவன் எழுந்த வேகத்தில் அதிர்ந்த அனிஷ் என்னடா எனக் கேட்க,
“இந்த நிகழ்ச்சியிலிருந்து நீ விலகிக்கொள் அனிஷ்… இனி நீ அந்த மயானத்திற்கு செல்லக்கூடாது.” கட்டளையாகவே மொழிந்தான்.
ஹரிக்கு அந்த உருவம் எதற்காக அனிஷின் பின்னால் சுற்றுகிறதென்றெல்லாம் தெரியாது. ஆனால், அதன் பின்தொடர்தல் நிச்சயம் ஒரு பேர் ஆபத்தாகவே இருக்குமென்று ஹரியின் உள்ளுணர்வு சொல்லியது.
“எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று எபிக்களில் நிகழ்ச்சியியை முடிச்சிடுறேன்.. பாதியில் விலகுவதென்பதெல்லாம் முடியாது, மற்றொரு வாய்ப்பு எனக்கு அளிக்க ஹெட் யோசிக்கும் வாய்ப்பினை நானே ஏற்படுத்தி கொடுப்பதுபோல் ஆகிவிடும்.”
அனிஷ் கூறுவதும் ஹரிக்கு சரியெனப்பட்டதால்.. நீ சொல்லியது போல் மூன்று எபிக்களில் முடித்துவிட வேண்டுமென்று அழுத்தமாகக் கூறினான் ஹரி.
அன்றிரவு வழக்கம்போல் அனிஷாவை பார்க்க சென்றான் அனிஷ்.
அவனைக் கண்டதும், “வா போகலாம்” என்று அழைத்தவளை எங்கே என கேட்க, “போகும் போது சொல்றேன். முதலில் கிளம்பு” என துரிதப்படுத்தினாள்.
அவர்களின் பயணம் பத்து நிமிடத்திற்கு மேலும் நீடிக்க, சாலையில் வண்டியை நிறுத்திய அனிஷ், “எங்க போகனும் சொல்லாமல் இப்படி போ’ன்னு சொன்னால் எங்க போறது?” என முதல்முறையாக உயிராய் நேசிக்கும் தன்னவளிடம் எரிச்சலுற்றான்.
அதில் அவள் கண்களில் நீர் கசிய பதறியவனாக… “அய்யோ நிஷா’ம்மா சாரிடா. ஹெவி வொர்க் லோடு.. அந்த டென்ஷன் உன் மேல் காட்டிட்டேன்.. மன்னிச்சிடுடா” என மன்றாடியவனை மன்னித்து விட்டதாக சொல்லாமல் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் ஒரு பங்களாவின் முகவரியை தெரிவித்து, அங்கு போகுமாறு கூறினாள்.
ஏன்? எதற்கு? என்ற வினா அவனுள் எழுந்தாலும், எப்படியும் தான் கேட்கும் கேள்விக்கு அவளிடமிருந்து பதில் வராது என எண்ணியவன் அவள் சொல்லிய முகவரிக்கு அரை மணி நேரத்தில் வந்திருந்தான்.
கடலின் குளிர்ந்த காற்று உடலில் உரசிச் செல்ல.. உப்புக் காற்றின் வாசம் தன்னவளின் அருகே அவனை போதைக்குள்ளாக்கியது.
உணர்வுகள் அவனுள் கொதித்தன.. வண்டியிலிருந்து இறங்கி அந்த பெரிய பங்களாவினையே பார்த்திருந்தவளை பின்னிருந்து அணைத்தவன் அவளினுள் ஊடுருவி தரையினில் விழுந்திருந்தான்.
அனிஷா தான் தன்னை தள்ளிவிட்டாள் என நினைத்தவன் மெல்ல எழுந்து நிற்க… அனிஷா முதலில் எவ்வாறு பங்களாவினை நோட்டம் விட்டிருந்தாளோ அவ்வாறே இப்போது நின்றிருந்தாள்.
பிறகு, தான் எப்படி விழுந்தோம் என கீழே பார்த்தவன்… அனிஷாவிற்கு அருகே ஒரு கல் இருக்கவும், அது தடுக்கி தான் விழுந்திருப்போமென்று தவறாக கருதினான். (ஏன் ராசா.. பேய்க்கு உருவம் இல்லாமல் நீ கீழே விழுந்ததை உணரவில்லையா??)
“இப்போவாவது சொல் நிஷா.. இங்கு எதற்கு வந்திருக்கோம்?”
அனிஷின் கேள்வியில் அவனை திரும்பி பார்த்த அனிஷா அமைதியாக இருக்க.. அந்த உருவம் அவனது விழிகளுக்குள் தன்னுடைய பளபளக்கும் விழிகளின் வீச்சினை படர விட்டது.
அவனுள் ஒரு மின்சாரம் பாய்ந்தது.. கோபம் ஊற்றாய் பெருகியது… உள்ளம் சுனாமியாய் கொதித்தெழுந்தது. கண்கள் ரத்த நிறம் கொண்டன… ஆழ் மனதில் தீச்சுவாலை பற்றி எரிந்தது.
“போ…. போ… போ… உன் பழி வெறியை தீர்த்துக்கொள்.. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்… உள்ளே செல்.”
காதுகளில் விடாமல் ஒலித்த வார்த்தைகள் தான் யாரென்பதை முற்றிலும் மறைக்கச் செய்தன.
ஆக்ரோஷமாக பங்களாவின் உள்ளே நுழைந்தவன்… அவ்விடம் ஏற்கனவே பழக்கப்பட்டதை போன்று விடுவிடுவென மாடியறையை நோக்கி ஓடினான். அறையின் கதவினை… தன் மொத்த பலத்தையும் காலில் கொண்டு வந்து எட்டி உதைத்தான். கதவு தரையில் பொத்தென்று உடைந்து விழுந்தது.
அதன் சத்தத்தில் அங்கே இளம் பெண்ணுடன் படுக்கையில் ஈடுபட்டிருந்த நாற்பது வயதிற்கும் மேலான ஒருவன் அதிர்ச்சியில் துள்ளிக்குதித்து அவளிடமிருந்து விலக, அப்பெண்ணோ தனது ஆடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் மின்னலென மறைந்தாள்.
ஆறடிக்கும் மேல் ஆஜனபாகுவாய் தன்னெதிரே நிற்பவனை அச்சத்துடன் பார்த்தவன், “உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்க…
சற்றும் அசராது… அடுத்த நொடி,
“உன் உயிர்” என்றான் அனிஷ்.
அவன் அவ்வாறு கூறக் காரணம்… அனிஷின் மனதையும் மூளையையும் ஒருங்கே தனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அவனவள். அவனுள் அவளாய் நீக்கமற நிறைந்து விட்ட அரூபம்.
அனிஷ் கண்கள் பளபளக்க ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து அவனை நோக்கி மெல்ல முன்னேறினான்.
எப்படி அனிஷின் கைகளில் கத்தி வந்ததென்றேல்லாம் தெரியாது, ஆனால் அவன் கத்தியை பிடித்திருப்பதை பார்ப்பதற்கே அய்யனார் எதிரே வந்து நிற்பதை போன்று இருந்தது.
பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, உமிழ்நீரை திரட்டி முழுங்கியவன் அனிஷின் ஒவ்வொரு அடிக்கும் பின்னோக்கி சென்றான்.
கத்தியின் கூர் முனை அரூபத்தின் கண்களை விட பளீரென பளபளத்தது.
கட்டில் தடுக்கி அதன் மீது விழுந்தவன் எழ முடியாமல் தடுமாற, அவனுக்கு அருகே கட்டிலில் ஒற்றை காலை தூக்கி அழுத்தமாக வைத்த அனிஷ் அவனையும் கத்தியையும் மாறி மாறி பார்க்க,
“கொன்னுடு அவனை.”
“இவனெல்லாம் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.”
“கொன்னுடு… கொன்னுடு…”
“அவன் சாகனும்… கொன்னுடு அனிஷ்…”
“நீ வச்சிருக்க கத்தியாலே குத்திடு…”
அனிஷின் காதுகளில் அவனை கொன்றுவிடென்ற வார்த்தைகளே ரீங்காரமிட்டன.
“அனிஷ்ஷ்ஷ்… அவனை குத்து.”
ஆக்ரோஷமாக அரூபம் குரல் கொடுக்க,
அனிஷ் கத்தியை மேல்நோக்கி உயர்த்தி பிடித்தான்..
பலத்த காற்று வீச, இடியுடன் மின்னலும் வெட்ட… சோவென்று கனமழை கொட்டத் துவங்கியது.
அனிஷின் முகத்தில் வெளிப்பட்ட அனலும்… கத்தியின் கூர்மையும் எதிரே விழுந்து கிடப்பவனின் கண்களில் மரண பயத்தை தோற்றுவித்தது.
அனிஷின் ஆழ் மனம் முரண்டு பிடிக்க… மூளையோ உன் செவிகளைத் தீண்டும் குரலுக்கு நியாயம் செய்திடு என முழங்கியது.
தான் யார் என்பதே மறந்து கொலை செய்திடத் துடித்தான்.
அரூபத்தின் குரலோடு அவனின் மூளையும் கொலை செய்யத் தூண்ட… கத்தியுடன் ஓங்கிய கையை… அவனின் இதயத்தை நோக்கி குறி வைத்து அழுத்தத்துடன் இறக்கினான்.
ஒரே குத்து,
நெஞ்சில் பாய்ந்திட்ட கத்தி வழியே குருதி வழிந்தோடியது.
கண்கள் மேல்நோக்கி சொருக… உயிரற்ற கூடாகினான் அவன். மூர்ச்சையாகினான் அனிஷ்.
அவன் இறக்க அனிஷ் கொலையாளியாகினான்.
யார் அவன்?
வருவாள்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
+1