தெருவோரம் 3 :
மருத்துவமனை படுக்கையில் ஹரி படுத்திருந்தான். தலையில் பேண்டேஜ் ஒட்டியிருக்க, காலில் கட்டுபோட்டிருந்தது. படிகளில் உருண்டதில் கணுக்காலில் மூட்டு நழுவியது. எப்படியும் எழுந்து நடக்க இரண்டு மாதங்கள் ஆகிவிடுமென மருத்துவர் தெரிவித்திருந்தார்.
“என்னாச்சுடா, ஏன் சடனா நீயே சுவற்றில் முட்டிக்கொண்டாய்?” அனிஷ் கேட்டதற்கு, “எனக்கு தெரிந்தால் தானே சொல்ல முடியும் பட் ஏதோ ஒண்ணு என்னைத் தள்ளிவிட்ட மாதிரி இருந்துச்சுடா” என்றான் ஹரி.
“வாட்?”
“எஸ்… இட்ஸ் டாமின் ஷ்யூர் டா… முதலில் உன்னை சுற்றி என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும்.”
“அதை அப்புறம் பார்த்துக்கலாம். உன்னோட ஹெல்த் தான் பர்ஸ்ட். ஓகே” என்ற அனிஷ் அன்றிரவு மருத்துவமனையிலேயே தங்கி விட்டான்.
தீடிரென அனிஷாவின் நினைவு வர, ஹரி தூங்கிவிட்டானா என்பதை உறுதி செய்தவன் புயல் போல் அத்தெருவிற்கு விரைந்தான்.
அவ்வளவு நேரமாகியும் அவனிற்காக அவள் அங்கு காத்திருந்தாள். இன்று எப்படியும் அவளது முகத்தையும் அவளை பற்றியும் முழுவதுமாக தெரிந்துகொள்ள வேண்டுமென்ற முடிவுடன் வந்திருந்தான்.
அவனைக் கண்டதும் அவளின் கண்களில் வழிந்த காதலில் எப்போதும் போல் கட்டுண்டவன்.. “ஹாய்” என புன்னகைத்தான்.
அவனது புன்னகை அவளுக்கு சந்தோஷத்தை அளித்ததுடன் துக்கத்தையும் ஒருங்கே கொடுத்தது.
அவனின் விரல்களுடன் தனது விரல்களை கோர்த்துக்கொண்டவள், அனிஷின் தோள் சாய்ந்து அவனது விழிகளுடன் தன் விழியை கலக்க செய்தாள்.
உள்ளுக்குள் இதயம் இடம்பெயரும் உணர்வு அவனுள்.
ஒருவித மோன நிலையில் இருவரும் சஞ்சரித்துக் கொண்டிருக்க… அவர்களுக்கு சற்று தொலைவில் ஒரு நாய் இவர்களையே உற்று பார்த்திருந்தது.
அனிஷா மெல்ல திரும்புவதைப்போல் நாயினை நோக்க, இரவு நேரத்திலும் வேங்கையின் விழி போல் பளபளக்கும் கண்களின் தீச்சுவாலையில் தனது வாலினை சுருட்டிக்கொண்டு நாய் ஓட்டமெடுத்தது.
காதலில் மயங்கிக் கிடந்தவன் இதனை அறியவில்லை.
வாடை காற்று மேனியை தழுவ, அவனுள் ஆண்மை உணர்வுகள் பேயாட்டம் போட்டன. (நீயே பேய் கூட தான்டா ஆடிட்டு இருக்க.)
அவள் மௌனமாக அனிஷை ரசித்திருக்க,
“அனிஷ் என்னவன்….” மனதில் கேட்ட குரலில் தன்னை சுதாரித்தாள்.
“அருவமாய் உலவுபவள் நேசம் கொண்டவளாக இருப்பின் வெற்றுடல் யாருடையதோ?”
“நிஷா.”
அவனின் விளிப்பில் அவள் மயங்கிக் கிடக்க,
காற்றாகியவள் தன் கோரபற்களைக் காட்டி நிகழ்காலம் திரும்புகிறாள்.
“நீ உண்மையில் பெண் தானா?”
தூக்கிவாரிப் போட நிமிர்ந்தவள், அதிர்வுடன் வினவுகிறாள், “ஏன்?”
“உன்னை தீண்டும் தருணமெல்லாம் என்னுள் தென்றலை வருடும் சுகம்”.. கவிதையாய் மொழிந்தவன்,
“எப்போது உன்னைத் தீண்டினாலும் தொடு உணர்வே இருப்பதில்லை. இப்போது கூட உன் விரல் இடுக்கில் என் விரல்கள் கோத்திருக்கின்றன, ஆனால்…. ஏதோ காற்றுக்குள் விரலினை நுழைத்திருக்கும் பீல்.”
“நான் போகனும், டைம் ஆச்சு.”
எப்போதும் போல் அவன் கேட்கும் ஒன்றிரண்டு கேள்விக்கு கூட பதிலளிக்காது போகனும் என்றவளை, விடாப்பிடியாக பிடித்து நிறுத்த முயன்றான்.
ஆனால், அவன் கைகளுக்குள் அவள் கை சிக்கினால் தானே! காற்றாய் வாழ்பவளை எப்படி பிடித்து நிறுத்த முடியும். தன்னைப்பற்றி ஒன்றும் கூறாமல் காதலை மட்டும் காட்டுபவளின் மீது சிறு கோபம் எட்டி பார்த்தது. அவளைப் பற்றி அவள் கூறுகிறேன் என சொல்லும்வரை பார்க்க வரக்கூடாதென்ற முடிவுடன் மருத்துவமனைக்கு சென்றான்.
அறையினுள் அனிஷ் நுழையும் சமயம்,
“இந்நேரத்தில் எங்கடா போயிட்டு வர?” வினவியது ஹரி.
அக்கேள்வி அனிஷாவை ஞாபகப்படுத்த அனிஷின் முகம் சிவப்பேறியது. அனிஷின் வெட்கம் ஹரிக்கு நகை பூக்க செய்தது.
“ஆண்கள் வெட்கப்படுவது கூட அழகா தான்டா இருக்கு” எனக் கூறியவன், “தங்கச்சி பெயர் என்னடா?” எனக் கேட்டான்.
“நான் சொல்லாமலே எப்படிடா கண்டுபிடிச்ச?”
“ஆமா, இதை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் படிச்சிட்டா வருவாங்க. ஊறுகாயினை எதுக்கு தேடுறான்னு மூஞ்சிய பார்த்தா தெரியாதா?”
“அனிஷா…ஆஆஆஆ…” சொல்லும் போதே , மயக்கத்தில் அனிஷின் கண்கள் மெல்ல சொக்கி… காதலில் பறந்தான். அவனின் முகபாவம் ஹரிக்கு அனிஷின் காதல் தீவிரத்தை உணர்த்தியது.
“நான் படியில் உருளுவதற்கு முன்பும் இந்த பெயர் தானே சொன்ன?” ஹரியின் குரலில் கோபம் வெளிப்பட்டாலும் அவனின் கண்கள் கேலியில் துடித்தது.
“அது வந்துடா… மச்சி… அவளை பற்றி எனக்கு தெரிந்தது, அவளின் பெயர் மட்டும் தான், வேறெதுவும் தெரியாம உன்னிடம் எப்படி சொல்றது?” என்று தான் சொல்லவில்லை.
“இட்ஸ் ஓகே…. நோ பிரோப்ளேம், நெக்ஸ்ட் டைம் பார்க்கும் போது அனைத்தையும் கேட்டுவிடு.”
“நான் அவளைப் பற்றி கேட்டாலே ஓடிவிடுவாள். இப்போ கூட கேட்டதும் காலில் தீப்பூண்டை மித்தது போல் எழுந்து ஓடிவிட்டாள்.”
அனிஷ் சொல்லியதும் சிறிது யோசித்த ஹரி… “அவள் உண்மையிலே உன்னை காதலிக்கிறாளா?” எனக் கேட்க, “நிச்சயமாக” என்று உரக்கக் கூறினான் அனிஷ்.
அவள் கண்களில் வழியும் ஏக்கம் சுமந்த பார்வை அவனுக்கு அதீத காதலை தான் உணர்த்துகிறது. மெல்ல கண் மூடியவனின் விழிகளுக்குள் அவளது விரல் தந்த சுகம் தோன்றி மறைந்தது.
ஏன் அர்த்தராத்திரியில் அவளை சென்று பார்த்துவிட்டு வருகிறாயென ஹரி கேட்க நினைத்த கேள்வி அவனின் தொண்டைக்குழியிலேயே சிக்குண்டது. யாரோ தனது தொண்டையில் அழுத்தத்தை கூட்டுவது போலிருந்தது. பிடியின் வலியில் தவித்தவனின் மனதில் தோன்றிய கேள்வி மறைந்து போக, அவனின் தொண்டை சீரானது. சில நொடி தனது குரலுக்கு என்னவானது… ஹரி சிந்தித்த நிமிடங்களில், அங்கு போடப்பட்டிருக்கும் மற்றொரு படுக்கையில் படுத்து அனிஷ் உறங்கிவிட்டான்.
உறங்கியவனின் மனம் விழித்து தான் இருந்தது. இரவில் அவன் உணரும் மெல்லிய தென்றல் வருடலை எதிர்பார்த்து காத்திருந்தது. அவன் மனம் தேடும் தீண்டல் கிடைத்ததும், கனவோடு வாழத் தொடங்கிவிட்டான்.
கனவில் அனிஷாவின் முகம் உதிக்க, நிஜத்தில் அழகாய் புன்னகைத்தான். கனவில் உணர்ந்த தீண்டல் மேலும் அவனின் முகத்தை பிரகாசமாக்கியது. முகத்தின் பிரகாசமே, அவனின் மனம் தன்னை நினைத்து வாழ்கிறது எனக் கண்டுகொண்ட அருவம் கண்ணீர் சிந்தியது.
புகை போல் காட்சியளிக்கும் அரூபத்தின் பளபளக்கும் விழிகளிலிருந்து கோடென வழிந்த கண்ணீர் உறங்காமல் யோசித்துக் கொண்டிருந்த ஹரியின் கண்களில் சிக்கியது. சீலிங்கில் நீர் கசிகிறதோ என்று நோட்டமிட்டவனுக்கு, அந்தரத்தில் இரு கொடேன தெரிந்த நீர் அச்சத்தையே அளித்தது.
காலையிலிருந்து நடப்பது எதுவும் நல்லதாகப் படவில்லை.
“யாரது?”
ஹரியின் குரலில் அவனைத் திரும்பி பார்த்த அரூபம் முற்றிலும் மறைந்துபோனது.
ஒரு நொடியே ஆனாலும் அதன் பளபளக்கும் விழிகளை சந்தித்தவனின் இதயம் நின்று துடித்தது. பேயென்ற ஒன்று இருக்கிறதோ என்று குழம்பியவனின் மனம் அதை தாண்டி யோசிக்கவில்லை.
நடப்பவற்றை யோசிப்பதை விட நடக்கும் போக்கில் அனைத்தையும் தெரிந்து கொள்வோமென்று முடிவுசெய்தான் ஹரி. மனம் சற்று தெளிந்ததைப் போலிருக்க, உனக்கு எதுவும் ஆபத்து நடக்க விடமாட்டேனென்று அனிஷை பார்த்து மனதிற்குள் கூறியவன் கண் மூடினான்.
அதிகாலை ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஹரியின் செவிகளில்… “அனிஷ் என்னவன்” என்ற குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
கண்களை திறக்க எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை. கைகளை அசைக்க கூட இயலவில்லை. நெஞ்சின் மீது யாரோ அமர்ந்திருப்பதை போன்று பாரமாக உணர்ந்தான்.
காலையில் துயில் கலைந்தவனுக்கு இரவு நடந்த அனைத்தும் குழப்பமாகவே இருக்க தனக்குள்ளே மறைத்துக்கொண்டான்.
ஒருவேளை அனிஷிடம் கூறியிருந்தால் அவன் சற்று கவனமாக இருந்திருப்பானோ?
நாட்கள் அதன் போக்கில் செல்ல இரண்டு வாரம் கடந்திருந்தது. அரூபமும் அனிஷையே சுற்றித் திரிந்தது.
அனிஷா அவளைப்பற்றி கூறும்வரை அவளை பார்க்கக்கூடாதென்று முடிவெடுத்தவனால் ஒரு நாள் கூட அதனை கடைபிடிக்க முடியவில்லை.
அன்றும் அவன் அவளைப்பற்றி கேட்க, “இதைப்பற்றி கேட்பதென்றால் இனி நான் உங்களை காண வரமாட்டேன்” எனக் கூறியவள்… அனிஷின் கண்களுக்கு தெரியும் வரை நடந்து சென்று காணாமல் போனாள்.
கோபமாக சென்றுவிட்டாளே என தவித்தவன் வழக்கத்தைவிட,
அன்றிரவு அவள் வரும் நேரத்திற்கு முன்பே சென்று அவளுக்காக காத்திருந்தான். மணி அதிகாலை ஐந்து ஆகியும் அவள் வரவில்லை, பால்போடும் நபர் அந்நேரத்தில் அனிஷ் தெருமுனையில் அமர்ந்திருப்பதை ஒருமாதிரியாக பார்த்துச்சென்றான். அதன் பின்னரே தன் சுயம் உணர்ந்து வீட்டிற்குத் திரும்பினான்.
வீட்டிற்குள் அனிஷ் நுழையும் போதே யாரோ இருக்கும் அரவம் உணர்ந்தான். ஆழ்ந்து மூச்சினை உள்ளிழுத்தவனின் நுரையீரலைத் தீண்டியது அவனவளின் வாசம். கண்மூடி ரசித்தான். மெல்ல நிஷா என்று உச்சரித்த அவனின் குரல் அரூபத்திற்கு மகிழ்வினைத் தந்தது.
அவன் முன்பு ஆவி பறக்கும் சூட்டுடன் தேநீர் கோப்பை நீட்டப்பட்டது. அதன் நறுமணத்தில் கண் திறந்தவன் இமைக்கவும் மறந்து சிலையானான்.
தனது விழிகளை மட்டுமே காட்டியிருந்தவள்… முதன்முறையாக தன் முகத்தை துணி கொண்டு மறைக்காமல் அவன் முன் நின்றிருந்தாள்.
பிறை நெற்றி… வானவில்லை வளைத்து வைத்த புருவம்… இயற்கையாகவே மையிட்ட வேம்பு விழிகள்.. கன்னம் தொடும் இமை.. கூர் நாசி, செதுக்கிய சிவந்த உதடு.. மாசுமறுவற்ற பால் முகம்.. இடை தாண்டி மயில் தொகையென நீண்டு காணப்படும் கூந்தல்… பார்ப்போரை பேரழிகியென சொல்லத்தூண்டும் அழகியவள்.
கணுக்கால் வரை உள்ள சாதாரண காட்டன் கையில்லா டாப்பிலும் தேவதையென மின்னினாள்.
தன்னவளின் அழகில் முழுவதும் நொறுங்கினான்.
அனிஷ் என்ற அவளின் விளிப்பில்… சிலையாகிப் போனவனுக்கு உயிர் வந்தது.
தன்னவளின் மயக்கும் விழிகளை நேருக்கு நேராக சந்தித்து…. தன்னவளை மெல்ல நெருங்கியவன், நொடிபொழுதில் அனிஷாவின் செவ்விதழ்களை சிறை செய்திருந்தான். காற்றில் மிதந்தான்.. உண்மையிலேயே காற்றில் முத்தம் வைப்பதை போன்று தான் உணர்ந்தான். மொத்தமாய் அவளின் ஆன்மாவே அவனது இதயத்திற்குள் சிறை வைத்துவிடும் வேகம் அவனுள்… அவளின் விழி அசைவிலே சொக்கி போனவன்..
மொத்தமாக அவளின் முக அழகில் பித்தம் கொண்டான். அவனின் இளமை உணர்வுகள் முந்திக்கொள்ள முற்றிலும் தன்னை மறந்தவனாக தன்னவளை கைகளில் அள்ளி எடுத்து படுக்கையறைக்குள் நுழைந்தான்.
தனது நீண்ட நாள் ஆசை ஈடேற போகிறதென்று நினைத்த அரூபம் அவன் கைகளில் சிறு பிள்ளையென தவழ்ந்தது.
அனிஷாவோ அவனின் காதலில் கட்டுண்டவளாய் தன் தேகம் சிலிர்க்க அவனுக்குள் அடங்கியிருந்தாள்.
தனது கைகளில் பூக்குவியலாய் ஒடுங்கியிருப்பவளை ரசித்தவனாய் மெத்தையில் கிடத்தியவன்.. அவளருகில் சரிந்தான். வண்ணத்துப்பூச்சியாய் படபடக்கும் அவளின் இமைகளில் முத்திரையை ஆரம்பித்தான். இலக்கில்லாமல் முன்னேறியவனின் முத்தம் முடிவின்றி நீண்டது. அவனின் முத்த மழையில் முற்றிலும் நனைந்தவள் மயங்கிக்கிடக்க, தன்னுடைய அடுத்த இலக்கிற்கு முன்னேறினான்.
வெளியே மின்னல் வெட்ட… காலை வேளையும் காரிருள் சூழ்ந்து இரவு போல் காட்சியளிக்க… இயற்கைக்கு புறம்பான நிகழ்வு நடைபெற போவதை அறிந்ததால்… ஆகாயம் ஓவென்று கதறி மழையாய் தனது கண்ணீரை பொழிந்தது.
முத்தம் பதிக்கும் அவனது உதடுகளுக்கும்… தன்னவளை இறுக்கி அணைத்திருக்கும் அவனது கைகளுக்கும்… அவளின் உடலை மொத்தமாய் சிறை பிடித்திருக்கும் அவனின் கால்களுக்கும் அவளது உடல் காற்றின் இதத்தையே அளித்தன.
அரூபம் அவனை முழுவதுமாய் சுற்றி வளைத்தது. அவனது சுவாசமாய் அவனிற்குள் நிரம்பியது. அவனை முற்றிலும் தன் வசப்படுத்தியது. அவன் அரங்கேற்றும் ஒவ்வொரு தீண்டலுக்கும் ஐ லவ் யூ அனிஷ் என்ற வார்த்தைகளையே அவனின் காதுகளில் முனுமுனுத்தது. காற்றோடு தன் கூடலை அரங்கேற்றியவன்… அதன் சுகத்தில் அவளை அணைத்தவாறு உறங்கிப்போனான்.
அனிஷ் கண் விழித்த போது மதியம் மூன்றாகியிருந்தது. என்ன நடந்ததென்று சிந்தித்தவனின் கண் முன்னே உதித்தது… கனவில் தனக்கும் தன்னவளுக்குமான கூடல் நிகழ்வு. அவளை மனைவியாக நினைத்து விட்டவனிற்கு, கல்யாணத்திற்கு முன்பான கற்பனை கூடல் தவறாகத் தோன்றவில்லை. மாறாக மனதில் சந்தோஷ பேரலை வீசியது.
அனிஷா என்று வீடு முழுக்க தேடியவனின் கண்களில் பட்டது… வரவேற்பறையில் சிதறி கிடந்த தேநீர். தான் தன்னவளுடன் படுக்கையில் சரிந்ததுமே, ஏதோ மாயவலையில் சுழன்றடிக்கப்பட்டு அவள் மேல் தலை சாய்த்தவன் மெல்ல கனவுலகிற்கு சென்றான். அதன் பின் நடந்தவை யாவும், அவளுடன் அவன் வாழ வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கும் கற்பனைகளே.
கனவை நினைத்ததும் அவளின் அழகு கண் முன்னே காட்சியளிக்க, மந்தகாசமாய் அவனின் இதழ்கள் புன்னகை சிந்தியது, தனது அணைப்பில் தன்னவள் கட்டுண்டு கிடந்த கனவு காட்சிகள் கண் முன்னே விரிய… சீக்கிரம் உனது வீட்டில் பேசி நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென எண்ணினான். (பேயோடு குடும்பமே நடத்த முடிவு பண்ணிட்டியா ராசா… உன்னை இந்த கதையின் ஆசிரியர் தான் காப்பாற்ற வேண்டும்.)
அவனின் எண்ணம் எப்போதும் அவளைச் சுற்றியே உலவும் காற்றுக்கு வருத்தத்தை அளித்தது. அதனால் கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது. அவளின் ஆசையும் அவனுடனான இன்பமான குடும்ப வாழ்க்கையே. ஆனால், அது நடைபெறுமா?
அனிஷின் மனதிற்குள் ஊடுருவி வாழ்பவள் அவனின் கற்பனையான கனவு கூடலில் இதயம் உருகினாள்.(பேய்க்கு இதயம் இருக்கான்னு கேட்பவர்களுக்கு…. நான் பேய் ஆகியதும் கூறுகிறேன்😁😁)
எப்படியும் உன்னுடன் நான் வாழ்வேன் என உரக்க கத்திய அரூபம், தனது பளபளக்கும் விழிகளை அகல விரித்து… ரத்தம் வழிய கோரபற்களைக் காட்டி இடியென சிரித்தது.
கனவில் கூட தன்னவனின் ஆளுமையான காதல் இணைப்பில் மயங்கி நின்ற அரூபம் அவனை பார்த்தவாறே மறைந்து போக… கூடற்ற உடலாக கிடந்தவள் அரூபத்தின் பின்னே காற்றாகினாள்.
‘அப்படியே காற்று மாதிரி இருந்தடி… உன்னைத் தூக்கின போது ஒரு குழந்தையின் கணம் கூட கைகளில் உரைக்கவில்லை.. எப்போதும் போல் உன் ஸ்பரிசம் ஒரு தென்றல் தான்.’
காதலிலும் அவளுடனான கூடலிலும் முழு பித்தாகிப் போனவனால் அதை தாண்டி வேறெதுவும் சிந்திக்கத் தோன்றவில்லை. அவனை பொறுத்தவரை அவளின் மேனியொரு தென்றல் காற்று.
தன்னவளின் நினைவில் மூழ்கியிருந்தவனுக்கு அப்போது தான் அன்றைய நாளின் வேலை நினைவு வர அதிவேகமாக ஹரிக்கு அழைத்தான்.
ஹரி இப்போது ஓரளவிற்கு தேறியிருந்தாலும், காலில் வலி இருக்கத்தான் செய்தது. முற்றிலும் குணமாகும் வரை பழைய மாதிரி அவனால் நடக்க முடியவில்லை. இருப்பினும் அனிஷுடன் தானிருக்க வேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தவன் தனது வலியையும் பொருட்படுத்தாது அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்டான்.
அனிஷின் அழைப்பை ஏற்றவன், “மச்சி ஏதேனும் பிரச்சினையாடா? உனக்கு எத்தனை முறை கால் பண்றது?” என்று வினவினான்.
அவனின் பதட்டத்தை உணர்ந்து கொண்ட அனிஷ் தன்னையே கடிந்தவனாக… “சாரி மச்சி நைட் முழுதும் உறங்கவில்லை.. சோ, அதிகாலை அசந்து உறங்கிட்டேன்” என்று பதிலளித்தான்.
“ஹோ… இட்ஸ் ஒகேடா. உண்மையிலே ஏதும் பிரோப்ளேம் இல்லையே?”
சந்தேகத்துடன் இழுத்தவனை சமாதானம் செய்வதற்குள் அனிஷின் நிலை ஒரு வழியானது. இறுதியாக அனிஷின் சமாதான பேச்சுக்களை ஏற்றுக்கொண்டவன், உன் சார்பாக ஹெட் கிட்ட லீவ் சொல்லிவிட்டேன். நைட் ஷூட் என்பதால் அவரும் அக்செப்ட் பண்ணி” என்ற ஹரியின் தகவலில் இன்றிரவு மயானத்திற்கு செல்ல வேண்டுமா என நினைத்த அனிஷின் தொண்டைகுழி ஏறி இறங்கியது.
அப்போது அனிஷிற்கு செகண்ட் கால் வருவதற்கான பீப் சவுண்ட் ஒளிர… அனிஷ் நண்பனிடம் விடைபெற்றான்.
“சொல்லும்மா…. கேம்ப் முடித்து வந்துட்டாயா?”
அழைத்தது ஹரியின் காதலி மைதிலி.
“முடிஞ்சிருச்சு அண்ணா. ட்ரெய்னில் வந்துட்டிருக்கிறேன். ஸ்டேஷன் ரீச்சாக நைட் பதினோரு மணியாகும், ஹாஸ்டல் அந்நேரத்தில் போக முடியாது. என்னை பிக்கப் செய்துக்கிறிங்களா?” நீண்ட விளக்கத்துடன் பேசியவள், இறுதியாக தடுமாறி நின்றாள்.
“உனக்கு ஹாஸ்டல் எல்லாம் வேண்டாம் இந்த அண்ணனோடு தங்கிகன்னு ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லிட்டேன் நீ தான் அங்கேயே இருக்க.”
மைதி’யின் தடுமாற்றத்திற்கான காரணம் எதுவென்று யூகித்தவன்,
“இன்னைக்கு நைட் மட்டுமில்லை நிரந்தரமாகக் கூட நீ இந்த அண்ணனுடன் தங்கிக்கொள்ளலாம்.” அவனின் வார்த்தைகள் உள்ளார்ந்த அன்புடன் வெளிவந்தது.
“இந்த அனாதையை நீங்க அனைத்து வசதிகளுடன் படிக்க வைப்பதற்கே நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன்னு தெரியல. இதில் உங்களுக்கு பாராமாக…”
“நான் இருக்கும் வரை நீ அனாதையில்லை, அப்போ வெறும் வாய் வார்த்தையாகத் தான் அண்ணா கூப்பிடுறியா?”
அவள் கூறி முடிப்பதற்குள் ஒரு அண்ணனாக வெடித்திருந்தான்.
“அய்யோ… அண்ணா அப்படியெல்லா இல்லை.”
பதறியவளின் குரலை கேட்பதற்கு அனிஷ் இணைப்பில் இல்லை. சரியான நேரத்திற்கு ஸ்டேஷனில் இருப்பேனென்று மொழிந்தவன் அவள் பேசுவதற்குள் கட் செய்திருந்தான்.
தன்னையே நொந்து கொண்டவள், ரயில் பயணத்தோடு தன் வாழ்க்கையில் கடந்து போன பயணத்தையும் நினைத்து பயணித்தாள்.
மைதிலி நான்கு நாள் குழந்தையாக அந்த அனாதை ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள். எபோதும் அனைவரிடமுமிருந்து ஒதுங்கியே இருப்பாள். மாநிறம், கலையான முகம்.. ஒருமுறையேனும் பார்க்கத்தூண்டும் அழகு.
துன்பங்களோடு துன்பமாக வளர்ந்தாலும் படிப்பில் படு சுட்டி. நன்றாக படித்தாள். அவள் பள்ளியின் இறுதி வருடம் படித்துக்கொண்டிருக்கும் போது இல்லத்தை நடத்தும் நபரின் மகன் ஆசிரமத்தினை தனது பொறுப்பிலேற்றான். தனக்கும் வயதான காலத்தில், முன்பை போல் இல்லத்தை நடத்த முடியவில்லையென்பதால் அவரும் சந்தோஷத்துடனும் நம்பிக்கையுடனும் தனது மகன் கையில் பொறுப்பினை ஒப்படைத்தார்.
அவன் கடவுகளாக அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியோரை பாதுகாப்பான் என்று நினைத்ததற்கு மாறாக நடந்துக்கொண்டான்.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் மர்மமான முறையில் இறந்தனர். எப்படி என்று யோசிப்பவர்களுக்கு பதில் தான் இல்லை.
ஒருநாள் இரவு உறங்கிக்கொண்டிருக்கும் தன்னை யாரோ கட்டி தூக்கிக்கொண்டு போவதை உணர்ந்தவள்… தூக்கம் கலைவதற்குள் ஒரு வேனில் அடைத்தனர். வண்டி குலுங்கும் அசைவிலிருந்தே தான் எங்கோ கடத்தப்படுகிறோம் என்பதை அறிந்துகொண்டவள் வண்டி நிற்கும்வரை அமைதி காத்தாள்.
வண்டியை நிறுத்தியதும் தன்னை தூக்க வந்தவனை காலினால் எட்டி உதைத்து, கட்டப்பட்ட கைகளுடன் ஓடியவள், அனிஷின் பைக்கின் குறுக்கே விழுந்தாள். அன்று கல்லூரியில் விழா என்று, அனிஷும், ஹரியும் இரவு தாமதமாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அனிஷ் முதுகலை இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தான். வண்டியில் மோதிய வேகத்தில் மைதி மயக்கிமாகிவிட்டாள். அவள் பின்னால் ஓடிவந்த இரண்டு தடியர்களும் வாட்டசாட்டமான இரு இளைஞர்களை தூரத்திலே கண்டு கொண்டு பின் வாங்கிவிட்டனர்.
ஹோஸ்பிட்டல் அழைத்து செல்லலாமென்ற அனிஷை தடுத்த ஹரி,
“இந்நேரத்தில் ஒரு பெண்ணை மருத்துவமனை அழைத்துச் சென்றால், போலீஸ் கேஸ் ஆகிவிடும் மச்சி, உன் பிளாட்டிற்கு அழைத்துச் செல்லலாம். பார்த்தால் சாதாரண மயக்கம் மாதிரி தான் தெரியுது” என்க, அனிஷிற்கு சரியெனப்பட தனது வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வரவேற்பறை கோச்சில் மைதிலியை படுக்க வைத்த அனிஷ், அவள் மீது தண்ணீர் தெளிக்க.. கண் விழித்தவள்,
“என்னை விட்டுடுங்க, எதுவும் செய்துடாதிங்க” எனக் கதறினாள்.
அவள் கூறியதின் பொருளுணர்ந்த ஹரி…
“எங்களை பார்த்தால் உனக்கு பொறு** மாதிரி தெரிகிறதா?” என கோபத்துடன் கேட்டிருந்தான்.
அதில் அவள் அரண்டு கோச்சில் கால்களை மடக்கி ஒடுங்க…
“அவளே பயந்து போயிருக்கா, நீ வேற மிரட்டாதே” என்ற அனிஷ்..
“பயப்படாதம்மா! எங்களை உன் சகோதரர்களாக நினைத்துக்கொள்.” தன்மையாகக் கூறினான். அதில் அவள் பயம் நீங்கியவளாக, மெல்ல தலையை உருட்ட…
“இவளுக்கெல்லாம் என்னால் அண்ணனா இருக்க முடியாது” என்ற ஹரி சட்டமாக அவளுக்கு எதிரிலிருந்த இருக்கையிலமர்ந்தான். (உன்னோட எதிர்காலம் இவள் கையில் தான்னு அப்போவே உனக்கு தெரிஞ்சிடுச்சா ஹரி😂😂)
“இவன் எப்பவும் இப்படித்தான்… சரி இந்நேரத்தில் நீ யாரை பார்த்து மூச்சிரைக்க ஓடிவந்த?”
“நீ விழுவதற்கு எங்க வண்டி தான் கிடைச்சுதா?”
அனிஷ் மைதியிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே ஹரி குறுக்கிட்டான். அவனை முறைத்த அனிஷ்,
“வாயை மூடிட்டு இருப்பதென்றால் இரு” எனக் கூறினான்.
“இப்படி ரோட்டுல நம்ம வண்டி முன்னாடி விழறவங்களாம் வீட்டுக்கு கூட்டிட்டு வரனும்ன்னா நாமா ஆசிரமம் தான் நடத்த வேண்டும்.”
ஹரி தன் வாய்க்குள் முனுமுனுக்க.. ஆசிரமம் என்ற வார்த்தையில் மைதி திருதிருவென முழித்தாள்.
அதைக்கண்டு கொண்ட அனிஷ் என்னம்மா என்க, அவள் ஒன்றுமில்லையென தலையசைத்தாள்.
“உன் வீட்டு அட்ரஸ் கொடு… உன்னை உன் வீட்டில் விட்டுடுறோம்” என்று கடுமை காட்டிய ஹரியை பார்த்து மேலும் பயந்தவள்,
“எனக்கு வீடேயில்லை தெரியுமா?” என்று அழும் விழிகளுடன் கேட்டிருந்தாள்.
அவ்விழிகளுக்குள் ஹரி முதல் முறையாக தடுமாறினான். அவளின் கண்ணீரை துடைக்க சொல்லி ஹரியின் ஆழ்மனம் அவனிடம் சண்டையிட்டது. தன் மனதின் போக்கு அவனிற்கு வியப்பாக இருந்தது.
மைதி வீடில்லை என்றதும்… நீ எங்கே தங்கியிருக்கிறாய் எனக் கேட்ட அனிஷ் அவளின் அலைப்புறுதலை உணர்ந்தவனாக, மைதியின் கையினை தனது கைகளுக்குள் பொத்திக்கொண்டு “இந்த அண்ண மீது நம்பிக்கையிருந்தால் உன் பிரச்சினை என்னன்னு சொல்லு” எனக் கேட்டான்.
அனிஷின் பேச்சில் நம்பிக்கை வரபெற்றவளாக, தானொரு அனாதை என்பதையும்.. ஆசிரமத்தில் வளர்ந்ததாகவும்… அந்த ஆசிரம பள்ளியிலேயே இந்த வருடம் தான் பள்ளி படிப்பை முடித்ததாகவும் கூறியவள்,
இன்று நான் உறங்கிக்கொண்டிருக்கும் போது யாரோ என்னைத் தூக்கிட்டு போயிட்டாங்க, அவர்களிடமிருந்து தப்பித்து வரும்போது தான் உங்க வண்டியில் விழுந்துட்டேன்” என அப்பாவியாக கூறியவளை அப்போதே அனிஷின் மனம் உடன்பிறந்தவளாக ஏற்றுக்கொண்டது.
அவள் நானொரு அனாதை என்பதை சொல்லிய இடத்திலேயே உழன்று கொண்டிருந்த ஹரி… ‘இந்த நொடி முதல் என் வாழ்நாள் முழுக்க உனக்காகவே வாழ்கிறேன் கண்ணம்மா’ என்று தீர்மானித்தான்.”
சிறு பெண்ணான அவளுக்கு தான் எதற்காக கடத்தப்பட்டோமென்று புரியவில்லை எனினும்… அனிஷ் மற்றும் ஹரிக்கு அதற்கான காரணம் நன்கு விளங்கியது.
ஒரு ஆசிரமத்தில் கூட்டு குடும்பம் போல் அவ்வளவு பேருக்கு மத்தியிலிருக்கும் ஒரு பெண் கடத்தப் படுகிறாளென்றால் அங்கிருப்போருக்கும் இதில் உடன்பாடிருக்க வேண்டுமென யூகித்த அனிஷ் “நீ மீண்டும் ஆசிரமம் செல்ல வேண்டுமா?” என வினவினான்.
ஆசிரமத்தில் தன் வயதை ஒத்த பெண் சிறுமிகள் இறந்து போவதை நினைத்தவள்… அதனை அனிஷிடம் தெரிவிக்காமல் நான் அங்கு போகமாட்டேனென்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
நள்ளிரவென்றும் பாராமல் தன் தாய்க்கு அழைத்தவன்… நாளை காலை நீங்கள் இங்கிருக்க வேண்டுமென்று கூறி.. தனது அறையில் மைதியை படுக்க வைத்தான்.
மறுநாள் அனிஷின் அன்னை வந்ததும் அவரிடம் மைதிலியை பற்றிக் கூறியவன்,
“அவளை உங்க மகளா ஏற்றுக்கொள்ள சம்மதமாம்மா?” என்று எதிர்பார்ப்புடன் வினவினான்.
தன் மகனின் குணத்தில் பெருமையடைந்தவர்… “உனக்கு ஒரு தம்பியோ, தங்கையோ இல்லையென பல நாள் வருந்தியிருக்கிறேன்.. அதற்கு ஈடா மைதிலியை கடவுள் அனுப்பி வைத்ததாக நினைத்து அவளை என் மகளா ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.
அவரின் காலில் கண்ணீருடன் விழுந்தவளை அணைத்தவாறு தூக்கியவர்.. நாங்க இருகோமென்று உறுதியளித்தார்.
அதன்பின்னர் அவளின் விருப்பப்படி அவளை கல்லூரியில் சேர்த்தவன்.. அவளை தன்னுடன் தங்கிக்கொள்ளுமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் கேளாமல் விடுதியில் தங்கிக்கொண்டாள். வாரம் இருமுறை அனிஷ் தன் தங்கையை விடுதிக்கு சென்று பார்த்து அவளிற்கு தேவையான அனைத்தையும் வாங்கிக்கொடுத்துவிட்டு வருவான்.
அவளின் கல்லூரி செலவுகள் அனைத்தையும் அவன் தான் பார்த்துக்கொள்கிறான். ஹரி நானும் கொஞ்சம் செய்கிறேன் எனக் கேட்டதை திருமணத்திற்கு பின் செய்துகொள் நான் குறுக்கே வரமாட்டேன் என்று கராராக கூறிவிட்டான்.
மேலும் அனிஷை கஷ்டப்படுத்தக் கூடாதென்று விரும்பிய மைதிலி பகுதி நேரம் வேலை பார்த்து அதில்வரும் குறைந்த பட்ச தொகையில் தன்னுடைய இதர தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறாள்.
முதல் வருட கோடை விடுமுறைக்கு அனிஷின் கிராமத்திற்கு சென்று லட்சுமி அம்மாவுடன் நாட்களை கழித்துவிட்டு வந்தாள்.
இதற்கிடையில் ஒருமுறை ஹரி தனது காதலை கூற… இப்போதைக்கு படிப்பு மட்டுமே எனக்கு முக்கியமென்று கூறியவள்…
“அண்ணா மற்றும் அம்மாவின் விருப்பம் தான் என்னுடையது. அவர்களை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்” என்று உறுதியாக மறுத்துவிட்டாள்.
தனது நண்பன் தன் காதலுக்கு எதிரி ஆகமாட்டானென்று ஹரி இரண்டு வருடங்களாகக் காத்திருக்கிறான்.
மைதிலி அப்போது தானிருந்த மனநிலையில் எதற்கு கடத்தப்பட்டோமென்று புரிந்துகொள்ளவில்லையெனினும்… அதற்கடுத்து வந்த நாட்கள் மற்றும்.. பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் நிகழ்வுகளை செய்திகளின் மூலம் அறிந்து தெரிந்து கொண்டவளுக்கு… தான் இன்று நல்லமுறையில் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணமான அனிஷை கடவுளாகவே பூஜித்து வருகிறாள்.
தன் வாழ்க்கை பயணத்தை திரும்பி பார்த்தவள்… இறங்க வேண்டிய இடம் வந்ததும், இறங்குவதற்கு தயாராக ரயில் பெட்டியின் வாயிலில் வந்து நின்றாள்.
அங்கு இவளுக்காக காத்திருந்தவனைக் கண்டதும், “அய்யோ… ஈஸ்வரா என்னைக் காப்பாத்துப்பா, இந்த மாதம் வரும் பிரதோஷத்துக்கு உனக்கு வில்வ மாலை சாற்றுகிறேன்” என உடனடியாக லார்ட் சிவாவிடம் ஒப்பந்தம் போட்டாள்.
‘மகளே…. தன்னால் உனக்கு இதில் உதவிட முடியாது’ என்று அவரோ பின் வாங்கிவிட்டார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
+1