Loading

 

தெருவோரம் 2 :

மை இருட்டு… பிணம் எரியும் வாடை… தூரத்தில் நாய்கள் ஊலையிடும் சத்தம்.. அடர்ந்த மரங்கள் சூழ, ஆங்காங்கே மண் மேடும், சமாதிகளும் காணப்பட்டன.

திடீரென பூமி பிளந்து எரிகின்ற நிலையில் தலை ஒன்று வெளியில் வந்தது.

மணல் மேட்டின் மீது கால்களை இறுக்கி பிடித்தபடி தலைவிரித்து அமர்ந்திருந்தாள் ஒரு பெண்.

அவ்விடம் எங்கும் புகை சூழ்ந்திருந்தது.

சமாதியின் மேலமர்ந்திருந்த உருவம் ஒன்று பிணத்தினை கிழித்து, ரத்தம் வழிய தன் வாயில் திணித்துக் கொண்டிருந்தது.

தீடிரென ஒரு உருவம் மின்னல் வேகத்தில் இடபுறமிருந்து வலப்புறம் ஓடியது.

தோல் சுருங்கி, ரத்தம் வழிய கோரமாக … கண்களை அகல விரித்து தனது முகத்தருகே வந்து விழுந்த உருவம் கண்டு காடே அதிர ‘ஆ……ஆஆஆஆ’ என்று கத்தினான் ஹரி.

“டேய்… டேய்… கத்தாதடா… அது நம்ம செட் பண்ண ஆளுடா. டேய் ஹரி கத்தாதடா… நீ கத்துறதும் கேமராவில் ரெகார்ட் ஆகுதுடா.”

அனிஷ்… கேமராவில் ரெகார்ட் ஆகிறது என்ற பிறகே… நடப்பது அனைத்தும் செட்டப் செய்யப்பட்டதென்பது புரிந்து ஹரி அமைதியாகினான்.

அனிஷ் மும்முரமாக காமிராவை ஓடவிட்டு அங்கு நடப்பவற்றை படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

அது ஒரு இடுகாடு. நிகழ்ச்சி தத்ரூபமாக இருக்க வேண்டுமென்று நினைத்த அனிஷ், செட் அமைத்து படப்பிடிப்பதை விட நிஜ சுடுகாட்டினிலே ஆட்களை பேய்கள் போல் உலவவிட்டு படம் பிடிக்கலாமென்று முடிவு செய்தான்.

அதன்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது தான்… நடப்பது அனைத்தும் செட்டப் என்பதை மறந்த ஹரி.. உண்மையிலேயே பயந்து அரண்டு போனான்.

“ஏன்டா, இப்படி என்ன சாகடிக்கிற, முன்ன பின்ன செத்தா தான் சுடுகாட்டுக்கு வழி தெரியும் சொல்லுவாங்க, ஆனால் சாகறதுக்கு முன்னாடியே என்னை சுடுக்காட்டுல பேய் மாதிரி கத்தி ஓட வச்சிட்டியேடா… உனக்கு நான் என்ன பாவம் செய்தேன்.” புலம்பிய ஹரிக்கு அனிஷிடமிருந்து பதில் தான் வரவில்லை.

தனக்கு அருகில் ஒருவன் உயிர் பயத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறான் என்பதை சற்றும் கவனியாதவன் போல் தன் வேலையில் தீவிரமாக இருந்தான்.

தூரத்தில் புகை மண்டலம் சூழ, அதற்கு நடுவே ஒரு உருவம் மெல்ல நடந்து வருவதைப் போல் படம்பிடிக்க நினைத்த அனிஷ்… அவ்வாறு ஒரு பெண்ணை நடக்க விட்டு காமிராவில் பதிவு செய்த நொடி,

அவன் ஏற்பாடு செய்த பெண் பின்னால் இன்னொரு உருவம் தெரிந்தது.

“டேய் ஹரி, நான் ஒருத்தரை தானே நடந்து வர சொன்னேன், இங்கே பாரு ரெண்டு பேர் வராங்க. யாராவது ஒருவரை ஷாட் விட்டு வெளியேற சொல்லு” என்ற அனிஷை விசித்திரமாக பார்த்தான் ஹரி.

“என்னடா? என் மூஞ்சிய பார்த்துட்டு இருக்க, சொன்னதை செய்” என்றான் அனிஷ் கடுப்புடன்.

“எதுக்குடா, இப்போ டென்ஸ் ஆகுற, அங்கு ஒருத்தி தான்டா நடந்து வறாள். ஏதும் உலறாமல் சீக்கிரம் வேலையை முடிடா. இங்கிருந்து வர ஊதுவத்தி ஸ்மெல்லே செம பயமா இருக்கு.”

ஒருத்தி தான் வருகிறாள் என்றதில் அதிர்ந்த அனிஷ்… காமிராவிலிருந்து பார்வையை அகற்றி பார்க்க, அங்கு அவன் சொன்னதை போல் ஒரு உருவம் மட்டுமே வந்தது.

மீண்டும் அனிஷ் லென்ஸில் கண்களை வைக்க, வந்து கொண்டிருக்கும் உருவத்திற்கு பின்னால் மெல்ல வந்து கொண்டிருந்த அந்த உருவம்.. இப்போது வேகமாக அடியெடுத்து வைத்தது, பெண்ணை ஊடுருவி வந்த உருவம் அனிஷை பார்த்து தன் கூர் பற்களை திறந்து காட்டி சத்தமாக சிரித்தது.

அதன் சத்தம் அனிஷிற்கு மட்டுமே கேட்க, ஹரி எதுவும் நடக்கவில்லை எனும் விதமாக நின்றிருந்தான்.

உண்மையிலேயே தன்னை ஏதோ துரத்துகிறது என்பதை கண்டு கொண்ட அனிஷ், காலை கணினி திரையில்… ஆப் ஆகிய நிலையிலும் கண் முன்னே தெரிந்த உருவத்தை நினைத்துப் பார்த்து மீண்டும் உள்ளுக்குள் நடுங்கினான்.

ஹரியிடம் சொன்னால் எப்படியும் தன்னை கேலி செய்வான் என்று நினைத்த அனிஷ்… “அவ்வளவு தான், எல்லாம் முடிந்தது. வாடா போலாம்” என்று ஹரியை அழைத்தான்.

இப்போது தான் ஹரிக்கு போன உயிர் திரும்ப வந்தது.

அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, அங்கு காவலிற்கு இருக்கும் நபரிடம்… இந்நிகழ்ச்சி முடியும் வரை இப்படி அடிக்கடி தொல்லை செய்வோம் என்று கூறி, அவரிடம் சில பண நோட்டுக்களை கொடுத்துவிட்டு வெளியேறினர்.

சுடுகாட்டின் கேட்டினைத் திறந்து வெளியே அடி வைத்த அனிஷின் செவிகளில்…

“இவ்வளவு தூரம் வந்துட்டு என்னை பார்க்காமலே போறியா அனிஷ்” எனக் கேட்டது.

மீண்டும் மீண்டும் அக்குரல் காதில் ஒலிக்க, திரும்பி பாராதவனாக பைக்கினை இயக்கி, ஹரி அமர்ந்ததும் அலுவலகத்திற்கு புறப்பட்டான்.

“டேய்… என்னடா ஆபிஸ் பக்கம் போற, நீ பேய் கூட குடும்ப நடத்துறது பத்தாதுன்னு என்னையும் ஏன்டா இதுல கோத்துவிடுற,”

“மூடிக்கிட்டு அமைதியா வாடா!”

ஹரியை அமைதியாக வர சொன்னாலும் அனிஷின் மனதில் புயல் அடித்துக் கொண்டிருந்தது.

‘என்னைச் சுற்றி என்ன நடக்கிறது… நான் நிகழ்ச்சிக்காக பேய் இருப்பதை போன்று வடிவமைத்தால் உண்மையிலே பேய் வந்து நிக்குது.. நிஜமாவே அது பேய் தானா இல்லை ஹரி சொல்வதை போல் வெறும் பிரம்மையா?’

என்ன சிந்தித்தாலும்.. இதன் ஆரம்பம் என்ன, முடிவு என்னவாக இருக்கும்? எதற்கான விடையும் அவனிடத்திலில்லை என்பதை விட, நடப்பது என்னவென்று முற்றிலும் அவனுக்கு புரியவில்லை.

மனதில் உழன்று கொண்டிருந்தவன், நள்ளிரவு பயத்தில் ஹரி தன்னை இறுக்கி பிடிக்கவும்… “ச்சீ..சே… நா* கை எடுடா, என்னடா பயமா இருந்தாலும் இப்படியாட பிடிப்ப?” எனக் கேட்டான்.

ஹரியிடமிருந்து எந்த அசைவும் இல்லாமல் போக, கண்ணாடி வழியாக பார்த்தான். ஆனால், அனிஷ் நினைத்ததை போல் ஹரி அவனை பிடிக்கவில்லை. மாறாக அவன் தீவிரமாக மொபைலினை நோண்டிக் கொண்டிருந்தான். இருவருக்குமிடையில் இன்னொருவர் அமரும் இடைவெளி தெரிந்தது. 

‘அப்போ யார் என்னை பிடித்திருப்பது?’

சிறு அச்சத்துடன் தன் வயிற்றில் படிந்திருக்கும் கையினை, கண்களை தாழ்த்தி பார்த்தவனின் கைகளில் சென்று கொண்டிருந்த பைக் தடம் புரண்டது. கீழே விழுந்த பைக் தார் சாலையில் சிறிது தூரம் சறுக்கிக் கொண்டே சென்று நிற்க… சிறு சிறு சிராய்ப்புகளுடன் இருவரும் தப்பித்தனர்.

கரிய கைகள், விரல்களின் நகங்கள் நீண்டு சுருண்டு வளர்ந்திருக்க… அனிஷின் வயிற்றினை இறுக்கி அணைத்திருந்தது. எங்கோ ஒடுபவனை விட முடியாதென்பதை போன்று பிடித்திருந்தது. மீண்டும் பைக்கின் கண்ணாடியினை பார்க்க, அவனுக்கும் ஹரிக்கும் நடுவில் பளபளக்கும் விழிகள் தெரிய அதிலிருந்து ரத்தம் வழிந்தது. அதில் அனிஷ் தடுமாறியதாலே பைக் சறுக்கி தரையில் தேய்த்துக்கொண்டு சென்றது.

அனிஷ் அமைதியாக எழுந்து உடலில் ஒட்டியிருக்கும் மணலினை தட்டிவிட்டு பைக்கினை தூக்கி நிறுத்தினான். அவனின் முகத்தில் பலமான யோசனை கவிழ்ந்திருந்தது. சாலையில் உருண்டதில் வலி தாங்க முடியாமல் தரையில் அமர்ந்தபடி அய்யோ அம்மா என்று முனங்கிய ஹரிக்கு அனிஷின் யோசனை எதைப்பற்றி என்று புரியவில்லை. எப்படி பைக் ஸ்கிட் ஆகியதென்றும் புரியவில்லை.

“சரி வாடா கிளம்பலாம்.”

“எதுவுமே நடக்காத மாதிரி நடந்துக்க உன்னால் தான்டா முடியும். ஆமாம், இப்போ இங்க என்ன நடந்துச்சு… நாம் கீழே எதுவும் விழுந்துவிடவில்லையே?” கடுப்புடன் கேட்ட ஹரி… “உனக்கு என்ன தான்டா ஆச்சு?, வாய திறந்து ஏதாவது சொன்னால் தானே எனக்குத் தெரியும்” என்றான்.

ஹரிக்கும் கோபம் வருமென்று அனிஷிற்கு அப்போது தான் தெரியும்.

“இப்படியே இங்கேயே கத்திக்கொண்டிருக்க வேண்டுமானால், எனக்கு ஒன்றுமில்லை.. நான் கிளம்புறேன்.”

அமைதியாக சொன்ன அனிஷை முறைத்துப் பார்த்தவன் எதுவும் பேசாமல் பைக்கில் ஏறி அமர்ந்தான்.

அலுவலகம் செல்லாமல் ஹரியை அவனது வீட்டில் ட்ராப் செய்தவன் நேராக தனது இல்லம் வந்தான். இப்போது அவனிருக்கும் மனநிலையில் அனிஷாவை பார்க்க முடியாதென்று கருதியவன் மற்றொரு வழியாக வீடு வந்திருந்தான்.

உடல் மற்றும் மன அசதியில் உடை கூட மாற்றாது நீண்ட கோச்சில் அமர்ந்தவன், மெல்ல கண் மூடினான். மூடிய விழிகளுக்குள் உருண்ட கருமணிகள் அவன் இன்னும் உறங்கவில்லை என்பதை யாருக்கோ உணர்த்தியது.

பத்து நிமிடங்கள் கடந்த நிலையில் அவனிடமிருந்து எந்த அசைவுமில்லாமல் போக, அனிஷின் அருகில் நின்று அவனையே பார்த்திருந்த உருவம் மெல்ல அவனருகில் அமர்ந்தது. அவ்வுருவம் அனிஷின் தலை வருடியபடி கண்ணீர் சிந்தியது.

காதில் நுழைந்த விசும்பல் ஒலியில் உறக்கம் கலைந்தவன், தன் முடியை கோதும் கையினை இறுக்கி பிடித்து “அனிஷா” என்று விளித்தான்.

அவள் எங்கு சென்றுவிடுவாளோ எனும் பயத்தில் கையை விடாமலே எழுந்து அமர்ந்தவன், முதல் முறையாக அவளை அணைத்து,

“ஐ லவ் யூ அனிஷா, என் மனம் அலைப்புறும் போதெல்லாம் உன் நினைவு தான் வருது. உன்னை பார்க்கணும் நினைக்கும் போது நீயே என்னருகில் அமர்ந்திருப்பது ஆறுதலா இருக்கிறது” என்று குரலில் காதல் வழிய கூறினான்.

அவளிடமிருந்து எவ்வித பிரதிபலிப்புமில்லை. தலை குனிந்து அமர்ந்திருந்தவளை மெல்ல நிமிர்த்தினான். அவளின் விழிகளில் தான் எவ்வளவு காதல். அதைவிட ஏக்கம் நிறைந்து காணப்பட்டது.

அவளின் பார்வையில் மொத்தமாய் கட்டுண்டவன், இந்நேரத்தில் மூடிய வீட்டிற்குள் எப்படி வந்தாள் என்பதை யோசிக்கவில்லை.

“உன்னை தொடும் போது ஏதோ தென்றலை வருடுவது போல இருக்கு.”

அதில் விலுக்கென நிமிர்ந்து பார்த்தவள்,

“இன்னைக்கு ஏன் என்னை பார்க்காமலே வந்துட்டீங்க?” எனக் கேட்டிருந்தாள்.

நடந்த அனைத்தையும் அனிஷாவிடம் தெரிவித்தவன்,

“என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல, என்ன நடந்தாலும் எனக்கு உறுதுணையா நீ எப்போதும் என்னுடன் இருக்கணும்” என்று கூறியவன் அவளின் மடியில் தலை சாய்த்தான்.

அவளின் மடி தந்த இதத்தில் நிம்மதியாக உறங்கினான். அவன் கூறியவற்றை நினைத்தவளால் அழுக மட்டுமே முடிந்தது. தன்னால் ஏதும் செய்ய முடியாதே என்று தவித்தாள். அதிகாலையை நெருங்க மெல்ல காற்றோடு கரைந்து போனாள்.

காலையில் கண் விழித்தவன், அனிஷா அங்கில்லாததும்.. வந்த மாதிரியே யாருக்கும் தெரியாமல் சென்றிருப்பாளென்று நினைத்தவன் அலுவலகம் கிளம்பினான்.

(ஆனால் அவள் ஏன் யாருக்கும் தெரியாமல் வருகிறாள், செல்கிறாளென்று கொஞ்சம் உன் மூளையை கசக்கி யோசிடா…. உன்னை பார்த்தா எனக்கே பாவமா இருக்கு.)

தனது அறையிலிருந்து கிளம்பி அனிஷ் வெளிவரும் போது.. வரவேற்பறையில் ஹரி அமர்ந்திருந்தான்.

“என்னடா, காலையிலே இங்க வந்திருக்க?” வெளியில் அவ்வாறு கேட்டவன், ‘நான் கதவை திறக்காமலே எப்படித்தான் உள்ள வரீங்க?’ என உள்ளுக்குள் கேட்டுக்கொண்டான்.

“ஏன் மச்சான் நான் உன் வீட்டுக்கு வரக்கூடாதா?” என்ற ஹரியை முறைத்த அனிஷ்,

“நான் வர சொன்னாலும் வரமாட்டியே அதனால் தான் கேட்டேன்” எனக் கூறினான்.

“சரி, நான் நேரடியாக விஷியத்துக்கு வறேன். உனக்கு என்ன தான் பிரச்சனை மச்சான்? என்கிட்ட சொல்?” நண்பனின் பிரச்சினையை எப்படியாவது சரி செய்துவிட வேண்டுமென்ற உறுதி ஹரியின் பேச்சில் வெளிப்பட்டது.

அனிஷ் வழக்கம்போல் அமைதியாகவே நின்றிருக்க, “இப்போவாவது வாயை திறந்து பேசுடா?” என்றான்.

ஹரி இவ்வளவு கோவப்படுவதிலும் அர்த்தம் இருப்பதாகவே அனிஷிற்கு தோன்றியது.

இங்கு எதுவும் பேச வேண்டாமென்ற அனிஷ் ஹரியை அழைத்துக்கொண்டு அந்த வளாகத்தின் பூங்காவிற்கு சென்றான்.

ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்தவன் நீல வானை வெறித்தான். அவன் கண்களில் பழைய உற்சாகமில்லை. 

ஒரு துளி நீர் அனிஷின் கன்னங்களில் உருண்டோடியது.

ஹரி பதறியவனாக, “மச்சி” எனத் தோள் தொட,

“என்ன பிரச்சினைன்னு எனக்கே தெரியலடா. என்னை சுற்றி என்னவோ நடக்குது, இப்போ கூட என்னோடு உன்னைத் தவிர வேறு யாரோ இருக்கா போல பீல் ஆகுது. அதுவும் என் தோளோடு உரசி நிற்பதை போல். இதையெல்லாம் வெறும் பிரம்மைன்னு என்னால் ஒதுக்க முடியல” என்றான்.

‘அன்று அலுவலகத்தில் இரவு நேரத்தில் ஏதோ ஒரு உருவத்தை அனிஷ் பார்த்ததாக சொல்லியது ஒருவேளை உண்மையாக இருக்குமோ?’ ஹரி சிந்தித்தான்.

நேற்று இரவு, ஒருவரை மட்டும் நடந்து வர சொல்லுடா என்றது… எடுத்துக்கொண்டிருந்த ஷாட்டினை பாதியிலேயே நிறுத்திவிட்டு போகலாம் என்றது. எப்போதும் கவனமாக டிரைவ் செய்பவன் கைகளில் திடீரென வண்டி தடம் புரண்டது, என அனைத்தையும் யோசித்த ஹரிக்கும் ஏதோ நடப்பதைப் போன்றே தோன்றியது.

“நீ பார்க்கும் உருவம் எப்படி இருந்தது?”

அன்று போல் இன்றும் தான் கூறுவதைக் கேட்டு ஹரி சிரிக்கத்தான் போகிறானென்று நினைத்த அனிஷிற்கு ஹரியின் கேள்வி ஆச்சரியமாக இருந்தது. தன் நண்பன் தன்னை புரிந்துகொண்டான் என்று நிம்மதியாக உணர்ந்தான்.

அனிஷ் யோசித்துக்கொண்டிருக்க,

“என்னடா சொல்லு… அந்த உருவம் எப்படி இருந்தது?”

“தலைவிரித்து கருப்பு நிழல் உருவம் போல்…”

திடீரென பலத்த காற்று வீச… மேக கூட்டம் இணைந்து நீல வானத்தை கரிய நிறமாக மாற்றியது. மணல் காற்று சுற்றி சுழன்றது. ஹரி, வீசிய காற்றில் நிலையாக நிற்க முடியாமல் தடுமாற தரையில் விழுந்தான். கண்களை கசக்கி எழ முயற்சித்தவன் முன் ஒரு கரம் நீண்டது. அதனைப் பற்றி எழும்பியவன்,

“தேங்க்ஸ் அனிஷ்” என்று நிமிர அங்கு அனிஷ் அமர்ந்திருக்கவில்லை.

“அனிஷ்… அனிஷ்…” என்றழைத்தபடி ஹரி அனிஷைத் தேட, அவனோ பூங்காவிற்கு வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தான்.

“என்னை தூக்கிவிட்ட வித் இன் செகண்டில் எங்கடா போன?” என்ற ஹரியை ஒரு மாதிரி பார்த்த அனிஷ்,

“என்னடா சொல்ற? நான் ஏன் உன்னைத் தூக்கனும், சரி நின்னுட்டு இருக்க நீ எப்படிடா கீழே விழ முடியும்?” என்று வினவினான்.

ஹரிக்கு தலை வெடித்துவிடும் அளவிற்கு மூளை குழம்பியது. தலையை பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான்.

“என்னடா… என்னாச்சு மச்சான், உன்கிட்ட சொல்லிட்டு இருக்கும் போது ரோட்ல ஒரு குழந்தை குறுக்க போயிருச்சு. குழந்தையை தூக்கி அவங்க அம்மாகிட்ட கொடுத்துட்டு வரேன்டா” என்ற அனிஷ் அவனருகில் அமர்ந்தான்.

“அப்போ இங்கு பலமா காத்து வீசலையா?” என்ற ஹரியை விநோதமாக ஏறிட்ட அனிஷ், “நீயும் என்னை மாதிரி ஆரம்பிச்சிட்டீயா, நேத்தே உன்னை சுடுகாட்டுக்கு அழைத்து சென்றிருக்க கூடாது” என்றான்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை மச்சான். ஆபீஸ் டைம் ஆகிடுச்சு போலாம்” என்றவனாக அங்கிருந்து எழுந்தான் ஹரி.

நடப்பவனை தடுத்த அனிஷ்…

“இப்போது எந்நிலை புரியுதா ஹரி? சுற்றியிருப்பவர்களைத் தவிர்த்து உனக்கு மட்டும் நடக்கிறதல்லவா! ஆனால் அது ஏன் எதற்காக நடக்கிறதென்று தான் தெரியவில்லை” என்றான்.

தனது பிரச்சினையால் தன் நண்பனுக்கு எதாவதாகிவிடுமோ என கவலைக் கொண்டான்.

அனிஷின் முகத்தை வைத்தே அவன் என்ன நினைக்கின்றானென்று யூகித்த ஹரி… “சில் அவுட் மச்சி… இதெல்லாம் ஒரு பரோப்ளேமே கிடையாது பார்த்துக்கலாம்” என ஆதரவாக மொழிந்தான்.

அலுவலகத்தில் இருவரும் அமர்ந்து வேலையில் மூழ்கியிருந்த சமயம் அனிஷின் ஹெட் அழைப்பதாக ஒருவர் தெரிவிக்க… அவரது அறை நோக்கி சென்றான்.

அனிஷ் எழுந்த அரவத்தில் திரும்பிய ஹரி பலமாக அதிர்ந்தான். அனிஷ் ஒருவன் மட்டும் செல்ல… அது கண்ணாடி தடுப்புகளைக் கொண்ட கட்டிடம். கண்ணாடியின் வழியாக கதிர்கள் ஊடுருவி தரையில் விழுந்த அனிஷின் நிழல் பிம்பம் இரண்டாகத் தெரிந்தது.

ஏதேனும் ரிப்லெக்ஷனாக இருக்குமென்று கருதிய ஹரி…. அனிஷின் நிழல் இரண்டாகத் தெரிந்த அதேயிடத்தில் சென்று நின்றான். விழுந்தது என்னவோ ஹரியின் ஒற்றை நிழல் பிம்பம் மட்டுமே, எப்படி என்று சிந்தித்தவன் நிச்சயம் பேயாகா இருக்காது. பேயென்ற ஒன்று இல்லவே இல்லையென மனதில் அழுத்தமாக பதிய வைத்தான்.

‘வாஷ்ரூம் சென்று வந்து ஒரு கப் அடிச்சா தான் (நான் காபியை சொன்னேன்) தெளியும்’ என நினைத்தவன் அங்கு சென்றான்.

கண்ணாடியின் முன் நின்று முகத்தை சுத்தம் செய்தான். மின்விளக்குகள் அணைந்து ஒளிர்ந்தன. லூஸ் கனெக்ஷன் என்று எண்ணினான்.

தண்ணீரின் மீது யாரோ நடக்கும் சப்தம், பைப் லைன் கட் ஆகி ப்ளோரில் தண்ணீர் நிரம்பி விட்டதோ என்றவாறு தரையை பார்க்க… சொட்டு நீர் கூட தரையில் தேங்கி நிற்கவில்லை.

கண்ணாடியில் விரிசல் ஏற்பட நிமிர்ந்தவனின் தொண்டைகுழி பயத்தில் ஏறி இறங்கியது.

“அனிஷ் என்னவன். நீ குறுக்கே வராதே!”

கண்ணாடி விரிசலால் எழுதப்பட்டிருந்தது.

“யாரு விளையாடுறது?” உமிழ்நீரை திரட்டி உள்ளுக்குள் விழுங்கியபடி ஹரி கேட்க,

“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?” என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

திடீரென அந்தரத்தில் ஹரி தொங்கிக்கொண்டிருந்தான்.

‘நிச்சயம் யாரோ ஒருவர் தன்னை தூக்கி பிடித்திருக்கின்றனர்’ என்பது அவன் கழுத்தில் ஏற்பட்ட பிடி அழுத்தத்திலும், சுவற்றில் அவனை சாய்த்து நிறுத்தியத்திலுமே தெரிந்தது.

“யார் நீ?”

ஹரியின் கேள்விக்கு சத்தமில்லை.

“அனிஷ் என் ஃபிரென்ட், அவனை காப்பாற்ற நான் எது வேண்டுமானாலும் செய்வேன்.”

ஹரி அவ்வாறு கூறிய நொடி தொப்பென்று தரையில் விழுந்தான். தடுமாறி எழுந்து நின்றவன் மூக்கினை உரசி நின்றவாறு ரத்தம் தோய்ந்த முகம் தெரிய சர்வமும் உறைந்தான். ஹரியின் விழிகள் அச்சத்தில் உருள, அதன் விழிகள் ஆக்ரோஷமாக அலை பாய்ந்தன.

பயத்தில் கண்களை மூடினான். “நீ தலையிடாதே.” உருவம் மறைந்தது.

தன்னை யாரோ உளுக்குவதில் கண்களைத் திறந்தவன் முன்பு அனிஷ் நின்றிருந்தான். ஏற்கனவே குழம்பியிருப்பவனை மேலும் குழப்ப வேண்டாமென நினைத்தவன் அனிஷிடம் எதையும் கூறவில்லை.

“நம்ம ஷோ நல்ல ரெஸ்பான்ஸ் டா… அதை சொல்ல தான் ஹெட் அழைத்தார். உங்கிட்ட சொல்ல வந்தா நீ ஆளை காணோம். சோ, இங்கு தான் வந்திருப்பன்னு வந்து பார்த்தால் சார் நின்னுட்டே கனவு கண்டுட்டு இருக்கீங்க. கனவுல யாரு… மைதி’யா?” அனிஷின் கேலிப் பேச்சு ஹரியின் செவியைத் தீண்டவில்லை.

“மச்சி, ஆர் யூ ஓகே?”

“யா மென்… அம் குட்.”

எப்போதும் கண்களில் குறும்புடன் இருப்பவனின் இந்த முகம் அனிஷிற்கு ஏதோ சரியில்லையென உணர்த்தியது.

மாலை ஆறு மணியளவில் அனைவரும் அலுவலகம் விட்டு வெளியேற, அனிஷ் மட்டும் ஷோவிற்கான விசுவெல் செட் செய்து கொண்டிருந்தான்.

“நீ இன்னும் கிளம்பல?” ஹரி தான் கேட்டிருந்தான்.

“கொஞ்சம் வொர்க் இருக்குடா, முடிச்சிட்டு கிளம்பிடுவேன்.”

“சரி முடி, நானும் உன்கூட வறேன்” என்ற ஹரி அனிஷின் பக்கத்தில் அமர்ந்துவிட்டான்.

அனிஷ் கணினியில் தன் வேலையை பார்த்திருக்க ஹரியின் கண்கள் அந்த தளம் முழுக்க சுற்றி மேய்ந்தது. நேரம் சென்று கொண்டேயிருக்க,

“இன்னும் முடியலையாடா?” என்றான் ஹரி.

நீ கிளம்புவதென்றால் கிளம்புடா” என அனிஷ் கூறிய பிறகும், ஹரி அவனை தனித்துவிட பயந்தவனாய் அங்கே அமர்ந்திருந்தான்.

ஹரி வெட்டியாக அமர்ந்திருப்பதை கண்ட எடிட்டர்,

“எதுவும் வேலையில்லையென்றால் இந்த செய்திக்கு ஒரு ஹெட் லைன் எழுதி கொடு” என ஒரு பேப்பரினை அவனிடம் அளித்தார்.

இருவரும் வேலையில் மூழ்க, நேரம் நள்ளிரவை கடந்தது. கடிகார ஓசையில் கலைந்த அனிஷ் அன்று போல் இன்றும் ஏதேனும் நடந்துவிடுமோ என்று அஞ்சியவனாக ஹரியை சீக்கிரம் கிளம்புமாறு அவசரப்படுத்தினான்.

“இருடா எல்லாம் எடுத்து வைத்துவிடுகிறேன்” என்ற ஹரி மேசையை ஒழுங்குபடுத்த, அனிஷிற்கு அழைப்பு வந்தது.

“அனிஷா” அவன் உதடுகள் முணுமுணுத்தன.

“யாரந்த அனிஷா?”

ஹரியின் கேள்வியில் தடுமாறியவன், “அனிஷாவா? யாரு?நானெதுவும் சொல்லலையே?” என மழுப்பினான்.

“இன்னைக்கு நானும் உங்கூடவே தங்கிக்கிறேன்.” ஹரி திடீரென அவ்வாறு கூறவும், அனிஷிற்கு அய்யோ என்றிருக்க… ஹரி வேகமாக சென்று சுவற்றில் முட்டிக்கொண்டான். நெற்றியில் ரத்தம் வழிந்தது.

“ஹேய் ஹரி” என அனிஷ் கத்த, ஹரி படிகளில் உருண்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்