தெருவோரம் 11 :
மயான பூமி,
மெல்ல முன்னேறியவன் திடீரென தான் கண்டதில் பயமுற்று போகலாமென திரும்பி அடியெடுத்து வைத்த நொடி,
காற்றின் சத்தமும்… இருட்டு பூச்சிகளின் ரீங்காரமும் ஒலித்துக்கொண்டிருந்த கானகத்தில், எங்கோ தூரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது.
திசை ஒன்றில் ஒலித்த அலறல், அனிஷின் மற்றொரு அடி நகர்தலுக்கு நாற்திசையும் பரவி எதிரொலித்தது.
அப்பெண்ணின் அழுகை ஒலிக்கு நடுவில் அனிஷ் நின்றிருப்பதை போல் அவனுள் ஒரு மாயத்தோற்றம்.
அவளின் அலறல் ஒலியின் அலை கற்றைகள் ஒரு மதில் போன்று அனிஷை சுற்றி வளைத்திருந்தது. அதை தாண்டி அவனால் வெளியேற முடியுமா என்பது சாத்தியமற்றது.
காற்றில் எங்கும் அனிஷ் என்ற அழைப்பு பரவியது,
ஆலமரத்தின் விழுதுகள் அவனை சுற்றி வளைத்து மேல்நோக்கி தூக்கியது. மரக்கிளையினில் அமர்ந்து விழுதுகளை அவிழ்க்க போராடியவனின் பார்வையில் தூரத்தில் ஒரு பெண் நின்றிருப்பது தெரிந்தது. அவனது உள்ளுணர்வு அவள் உன்னவள் எனக் கூறிய சமயம்.. அவனை இறுக்கியிருந்த விழுதுகள் அவிழ்க்கப்பட்டு, அனிஷ் தரையில் கிடந்தான்.
நடப்பவற்றை நிச்சயம் அவனால் நம்ப முடியவில்லை… ஆனால், அதே சமயம் நம்பாமலும் இருக்க முடியவில்லை. இவையெல்லாம் தனது கற்பனையின் வடிவம் என நினைத்தவன், அப்பெண்ணிருக்கும் திசையை நோக்கி நடந்தான்.
அனிஷ் முன்னேறி செல்ல செல்ல…. அப்பெண் தூரம் சென்றாள். கை தொடும் தூரத்தில் நெருங்கி விட்டால், சட்டென தூரம் தெரிவாள். என்ன விந்தையென அவனால் வியக்கமால் இருக்கமுடியவில்லை.
எப்படியும் இதுவும் பிரம்மையாகத் தானிருக்கும் என நினைத்தவன், மணியை பார்க்க மூன்று எனக் காட்டியது. நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கு வந்தவன், இந்நேரம் வரை திரும்பி செல்ல இயலாது அங்கு நடக்கும் அமானுஷ்யங்களில் சிக்கி தவிக்கிறான்.
திடீரென கேட்ட அழுகுரல் நின்று… அப்பெண் பேச்சுக்குரல் கேட்டது,
“என்னை மறந்துவிட்டாய் அல்லவா? எனக்கு துன்பம் நடக்கும்போது நீ ஏன் வரல அனிஷ்? இப்போ மட்டும் எதற்கு வந்திருக்கிறாய்?”
“நீ என்னைத்தானே நேசித்தாய், எதற்கு என் தங்கையிடம் உன் காதலை கூறினாய்? சொல் அனிஷ்… எனக்கு பதில் சொல்.”
எங்கிருந்து யார் பேசுகின்றார் என அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், அப்பெண்ணின் குரல் அனிஷின் ஆழ் மனதில் அவளின் நினைவுகளை தட்டி எழுப்ப முயற்சித்தது. தலையெல்லாம் வெடித்துவிடும் போலிருந்தது. மூளை நரம்புகள் உள்ளுக்குள் பிண்ணி பிணைவதை போல் வலி எழுந்தது. தலையை பிடித்துக்கொண்டு வலியில் அலறியவன் மயங்கி சரிந்தான்.
ஒரு மணி நேரம் கடந்த நிலையில் கண் விழித்தவன்… இடுகாட்டிற்கு வெளியிலிருக்கும் தார் சாலையில் கிடந்தான். தான் எப்படி இங்கு வந்தோம் என்று யோசித்தவனுக்கு பதிலில்லை. நடந்தவைகள் யாவும் ஒரு கனவு போல் இருந்தது. ஆனால், வீட்டிற்கு வந்து தன் காமிராவில் பதிவு செய்தவற்றை பார்த்தவனுக்கு, தான் கண்ட காட்சிகள் அனைத்தும் உண்மை எனக் பறைசாற்றியது. உண்மையில் பேய்கள், ஆத்மாக்கள் இருக்கின்றன என அவன் மனம் அந்த நொடி நம்பியது. இருப்பினும் வெளியில் நடந்தவற்றை யாரிடமும் சொல்லாமல், நிகழ்ச்சியினை நடத்த முடிவு செய்தான். தேவையற்ற வீண் மூட நம்பிக்கைகளை மக்களிடம் பரப்பக் கூடாதென்பதற்காகவே இவ்வாறு முடிவு எடுத்தான்.
எடுத்த முடிவினால், நேற்று நடந்தவற்றை மறந்தவனாக தனது வேளையில் கவனமானான். அன்றிரவு வேலை முடித்து வீடு திரும்பியவன் முதல் முறையாக தெரு முனையில் அவள் அமர்ந்திருப்பதைக் கண்டான்.
‘உனக்காக உன்னவள் காத்திருக்கிறாள் என்று இதயம் துடித்தது அவனுள்.’
நேற்றிலிருந்து ஒரு பெண் எனக்காக இருக்கிறாளென மனம் சொல்வதை ஏற்பதா வேண்டாமா அவனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. முயன்று தன் வேலைகளை மேற்கொண்டான்.
மூன்று தினங்களாக அவன் வரும் நேரம் தெருமுனையில் அவளமர்ந்திருந்ததும், ஒருவேளை எனக்குள் ஒலிப்பது உண்மை தானோ என எண்ணியவன் நான்காம் நாள் இரவு அவளிடம் தானே சென்று பேசினான்.
பல நாள் பழகியவளை போல் அவள் உரிமையாக பேசியது அனிஷிற்கு ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் அவளைப்பற்றி அவள் ஒன்றும் கூறாதது அனிஷிற்கு சந்தேகத்தை தோற்றுவித்தது.
தன் மனம் அவளுக்காக ஏங்குவதை உணர்ந்து கொண்டவன், எப்படியாவது அவளைப்பற்றி தெரிந்துகொள்ள நினைத்தான். அன்றைய தினம் வழக்கமாக அவர்கள் சந்தித்த போது, அவனின் மனதில் உள்ள கேள்வியினை அவள் உணர்ந்து கொண்டாளோ… தன்னை அவனுக்கு உணர்த்த முடிவு செய்து… அனிஷிற்கு மிகவும் பிடித்த தன் விழிகளை கொண்டு ஞாபகப்படுத்த முயற்சித்தாள்.
ஒவ்வொரு முறையும் அவளின் விழிகளை அனிஷ் சந்திக்கும் போதும் உள்ளுக்குள் ஆழ்மனம் ஏதோ சொல்ல வரும்… ஆனால் அதனை அவனின் மூளை கேட்க அனுமதியாது.
முதல் முறையாக அவளின் கரம் பற்றிய போது.. அவனுள் தோன்றிய உணர்வு… அடுத்ததாக அவன் அவளிடம் உதிர்த்த வார்த்தைகள்… “உன் கரம் பிடிக்கும் போது ஏதோ தென்றலை வருடும் உணர்வு..”, தினமும் தன்னிடம் விடை பெறுபவள் சிறிது தூரத்தில் காணாமல் போவது.. இவை தான் அனிஷை சிந்திக்க தூண்டியது.
ஒரு நாள் முகத்தருகே தெரிந்த பளபளக்கும் விழிகள். தனக்கு மிகவும் பழக்கப்பட்ட, தான் நேசித்த விழிகளென்ற உணர்வு அவன் உடல் செல்கள் முழுக்க பரவியது. அன்றைய தினம் கனவில் அவளுடன் கூடி களித்த நிகழ்வு அவள் யாரென்ற நினைவினை அனிஷிற்கு மீட்டுத்தந்தது.
அவளை தனக்கு நினைவில்லையென்பதால் தான் அவளைப் பற்றி என்னிடம் ஒன்றும் கூறவில்லையெனக் கருதியவன்.. “எனக்கு உன் நினைவுகள் மீண்டுவிட்டன” என்று சொல்லி, அதற்கு அவள் கொள்ளும் மகிழ்வினைக் காண ஆசையாக சென்ற இரவு தான் அனிஷிற்கு உண்மையை உணர்த்தியது.
அன்று வேலைகள் நிறைய இருந்ததால் எப்போதும் சந்திக்கும் நேரத்தை விட, காலதாமதமாகவே தெருமுனைக்கு வந்து சேர்ந்தான்.
ஆவலாய் நிஷாவை நெருங்கியவன் அவளின் ஒத்துக்கத்தில் சற்று தள்ளி அமர்ந்தான். எப்போதும் தான் வந்ததும் ஓடி வந்து முதலில் அணைப்பவள் அவளாகவே இருக்கும். ஆனால், அவளின் திடீர் ஒதுக்கம் ஏனென்று புரியவில்லை. அதற்கான பதில் அடுத்த இரண்டு நிமிடங்களில் தெரிந்துவிட்டது.
ஏனெனில்… அனிஷாவின் ஆத்மா, நிஷாவின் உடலிற்குள் புகுவதற்குள் அனிஷ் வந்திருந்தான்.
தன்னுடைய அக்கா தன்னை பயன்படுத்திக்கொண்டாலும், தான் அனிஷை பயன்படுத்திக்கொள்ளக் கூடாதென்று அவள் நினைத்தாள். அன்று தவறுதலாக அனிஷ் நிஷாவிடம் காதலை சொல்லிய போதும் அவன் மீது சலனப்படாமல் இருந்தவள், அவனின் காதலில் சிறு தடுமாற்றம் அடைந்தாள். எங்கே அநிஷாவிற்காக அனிஷிடம் நெருங்கி பழகி தான் காதலித்துவிடுவோமோ என்ற நிஷாவின் பயம் நிஜமாகியது. நிஷாவின் மனதிலும் அனிஷ் மீது காதல் மலர்ந்தது. அதனை அவளும் தெளிவாக உணர்ந்திருந்தாள். எங்கே தனது அதிகப்படியான நெருக்கம் அனிஷாவிற்கு தன் மீது சந்தேகத்தை தோற்றுவித்து, அனிஷிற்கு அது ஆபத்தாக அமைந்துவிடுமோ என்று எண்ணியதாலே அனிஷிடம் இன்று நிஷாவாக ஒத்துக்கத்தை காண்பித்தாள்.
ஆனால், அவளின் அந்த ஒதுக்கம் தான்… நிஷா யார் என்பதையும்… அவன் யார் என்ற, அவனின் மறந்த பக்கங்களையும் அவனிற்கு தெளிவு படுத்தியது.
தெருமுனையில்.. சாலையோர நடை பாதையில் நிஷாவும் அனிஷாவும் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு முன்பு அனிஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது.
எப்பொழுதும் தன்னுடைய முகத்தை இமைக்காமல் பார்த்திருக்கும் தன்னவள்… இன்று வித்தியாசமாக தரையை மட்டுமே பார்த்திருக்கவும், என்னவென்று புரியாது தற்செயலாக பைக்கின் ரிவர்வ்யூ கண்ணாடியை பார்க்க.. முதலில் பயந்து போனான்.
நிஷாவின் பின்னால் அனிஷா… கலைந்திட்ட காற்றில் பறக்கும் விரிந்த கூந்தலுடன், கரிய தேக தோற்றத்தில் நின்றுகொண்டிருந்தாள். சில நாட்களாக பேய்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு அது என்னவாக இருக்குமென்று நொடியில் தெரிந்துவிட்டது. அதனை நிஷாவிடம் சொல்லி அவளை கலவரப்படுத்த வேண்டாமென்று எண்ணி சற்று அமைதி காத்தான். அப்போது தான் அனிஷிற்கு புரிந்தது… நிஷாவிற்கு பின்னால் நின்றிருந்த உருவம் அவளின் உட்புக முயற்சித்துக் கொண்டிருந்தது.
என்ன நடக்க போகிறதென்று கண்ணாடியின் வழியே அனிஷாவின் உருவத்தையே பார்த்திருந்தவனின் பார்வை, அதனின் பளபளக்கும் விழிகளிலேயே நிலைத்தது. அவனின் ஆழ்மனம் ஏதோ சொல்லத்துடிப்பதை போன்று உணர்ந்தான். மூளையிலுள்ள வரி நரம்புகள் வெடித்துவிடுமளவிற்கு வலி எழும்பியது. மூளையின் வழியே இதயத்திற்குள் அனிஷாவினை சந்தித்தது முதல், அவன் நினைத்ததைப்போல் தன்னவளிடம் காதல் சொல்லிய தருணம் வரை மங்கலான நிழற்படமாக ஓடியது. தலை இரண்டாக பிளப்பதை போலிருந்தது. தலையை அழுந்த பிடித்தவன் நிஷாவிற்கு தெரியாமல் மெல்ல குனிந்து தன்னை நிலைப்படுத்த முயன்ற தருணம் அனிஷா நிஷாவின் உடம்பிற்குள் குடிப்புகுந்திருந்தாள்.
முற்றிலும் அனிஷாவாக மாறிய நிஷா… அனிஷின் கலைந்த தோற்றத்தில் அன்புமிக்கவளாய் அவனின் தோள் தொட, அவளின் கையை தனது கரத்தினால் பற்றியவனின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது. இதயத்தில் ஒரு சிலிர்ப்பு பரவியது. இமைகளை மூடி தன்னவளின் தொடுகையை ஆழ்ந்து அனுபவித்தவனின் விழிகளுக்குள் அனிஷாவின் நினைவுகள் மெல்ல திரும்பின.
தனது உயிரானவளை மறந்து விட்டேனே என்ற குற்றவுணர்வில் கண்களை திறந்தவன் அனிஷாவை இறுக்கி அணைக்கும் போது தான்… தான் காதலை சொல்லிய அன்று அவளின் முகத்தில் தெரிந்த வேறுபாடு என்னவென்று புரிந்தது.
அவனவளின் பளபளக்கும் அழகிய பழுப்பு நிறக் கண்கள். அன்று இல்லையே, எப்படி? எவ்வாறு? இது சாத்தியம்? என சிந்தித்தவனின் மூளையில் நொடிப்பொழுதில் தோன்றி மறைந்தது, சற்று நேரத்திற்கு முன்பு அவன் பார்த்ததும்.. தினமும் அவனை பின்தொடரும் அதே பழுப்பு நிற விழிகள், ‘அப்போ நிஷா யாரு… நான் காதல் சொல்லியது நிஷாயில்லையென்றால் என்னவள் யார்?’
மனதின் கேள்விகளுக்கு விடையறிந்திடத் துடித்தான்.
தன்னவனின் கேள்விகளுக்கு பதிலளித்திட நினைத்தாளோ… அனிஷின் அணைப்பிலிருந்து விலகியவள், மெல்ல அவனின் கரம் பற்றி அழுத்தம் கூட்டினாள்.
ஏதேதோ பிம்பங்கள் அவன் கண் முன்னே ஊர்வலம் போயின…. அவனுக்குத் தான் ஒன்றும் புரியவில்லை… சரியாக நிகழ்வினை அவனால் காண முடியவில்லையோ?
“நேரமாகிவிட்டது.” அனிஷின் கையிலிருந்து தனது கையினை உருவியவள், எழுந்து சென்றாள்.
அனிஷின் மனதில் தன்னவள் யாரென்பதை கண்டுக்கொள்ளும் போராட்டம் அதிகமானதால், இன்று எப்படியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற வேகம் அவனுள் அதிகரித்தது. அதனால் அனி(நி)ஷாவை பின்தொடர முடிவு செய்தான்.
அவள் போக வேண்டுமென்றதும்…. அவளிடமிருந்து விடைபெற்றவன் தெருமுனை கடந்து மறைவாக சென்று தனது வண்டியை நிறுத்திவிட்டு, அனிஷாவை பின் தொடர மீண்டும் தெருமுனைக்கு நடந்து வந்தான்.
அனிஷ் அத்தெருவிலிருந்து மறையும் வரை பார்த்திருந்த அனிஷா அவன் மறைந்ததும் காற்றாகிப் போனாள்.
தெருமுனைக்கு வந்தவன் அவள் எந்த பக்கம் சென்றிருப்பானென்று யூகித்து வலதுபுறம் நடந்தான்.
அனிஷின் நான்கு நிமிட ஓட்டத்திற்கு பிறகு சற்று தொலைவில் நிஷா செல்வது தெரிந்தது. அருகில் சென்றால் அவளுக்கு தெரிந்துவிடும் என்பதால், சிறு இடைவெளி விட்டே பின்தொடர்ந்தான். அவளின் நடையில் தடுமாற்றம், சோர்வு எல்லாம் காணப்பட்டது.
நிஷாவை அனிஷ் பின்தொடர, அனிஷை அனிஷா பின்தொடர்ந்தாள். தன்னவன் தன்னை அறிந்திட முயல்வது அரூபத்தின் காதல் மனதினை குளிர்வித்தது. அனிஷிற்கு எல்லாம் தெரிந்து விட்டால், அவனை பகடைக்காயாக உருட்டும் குற்றவுணர்வு இருக்காது என்று ஆத்மா நிம்மதியடைந்தது.
ஐந்து தெரு… இரண்டு சந்து… ஒரு சர்ச்… மூன்று கோவில்… மூன்று சந்து… ஒரு பேருந்து நிலையம்… துவா ஓதும் பள்ளிவாசல் ஒன்று.. மீண்டும் இரண்டு தெரு என தளர்ந்த நடையுடன் நடந்தவள் தனது வீட்டின் முன் நின்றாள். அவளின் முகத்தில் விரக்தியான புன்னகை தவழ்ந்திருந்தது. நிஷாவிற்காக வாயிலிலேயே அவளின் பெற்றோர் காத்திருந்தனர்.
‘இவர்களுக்கும் தெரிந்து தான் இதெல்லாம் நடக்கிறதா?’ அனிஷின் மனம் அதிர்ச்சியடைந்தது.
இந்த இடத்தில்.. கடந்த கால நிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்த மைதி… “அன்று நான் வீட்டிற்கு சென்றபோது நிஷாவும் காணாமல் போய்விட்டதாக என்னிடம் பொய் சொன்னார்களா?” என சிறு அதிர்ச்சியுடன் கேட்க, வாயின் மீது விரல் வைத்து மைதியை அமைதியாக இருக்கச்செய்தான் ஹரி. மீண்டும் அவர்களின் கவனம் அனிஷா சொல்லிக்கொண்டிருக்கும் கடந்த காலத்திற்கு சென்றது.
வாயில் சேலை தலைப்பை பொத்திக்கொண்டு கண்ணீர் வடித்த நிஷாவின் தாயை அவரது கணவர் தோளில் அணைத்து சமன் செய்தார். நிஷா நிற்க முடியாமல் தள்ளாட பெற்றோர் இருவரும் ஒன்றாகத் தாங்கி உள்ளே அழைத்துச் சென்றனர்.
வரவேற்பறையில் மூவரும் அமர.. நிஷாவின் தந்தை அவளுக்கு கால்களை பிடித்து விட, நிஷா அன்னையின் மடியில் தலை சாய்த்தாள். மூவரின் கண்களிலும் கண்ணீர் உருண்டோடியது.
நிஷாவிற்கு பின்னோடு வந்தவன்… நடப்பவை அவளின் பெற்றோருக்கும் தெரிந்து தான் நடக்கிறது என்பதிலே அதிர்ந்து உறைந்து நின்றவன்… தூரத்தில் நாய் ஊலையிடும் சத்தத்தில் உணர்வு பெற்று.. வாயிலில் இருக்கும் சிறு கேட்டினை கடந்து உள் நுழைந்தவன்.. வீட்டிற்க்கு வெளிப்புறமாக, வரவேற்பறையைலிருக்கும் ஜன்னலுக்கு நேரே சென்று நின்று உள் நடப்பவற்றை கவனிக்கலானான்.
அப்போது வீட்டின் சுவற்றில் மாற்றியிருக்கும் புகைப்படங்களை கண்டவன் மேலும் குழம்பிப் போனான். நினைவுகள் மீண்டதில் தலைவலி வர பெற்றவன், மேலும் தலை வெடித்து சிதறிவிடும் வலியை மண்டைக்குள் உணர்ந்தான்.
சில நிமிடங்கள் புகைப்படத்தினையே பார்த்திருந்தவனுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தது அனிஷாவின் விழிகள்.
‘இருவரும் இரட்டையர், அதில் தன்னவளுக்கு தன் மனதை களவாடிய அழகிய பழுப்பு நிறக் கண்கள், இதனை முற்றிலும் தெரிந்து கொள்ளாமல் அவளின் இரட்டையிடம் காதலை சொல்லிவிட்டோமே.. காதலை சொல்லிய அன்று எப்படி விழிகளின் வித்தியாசத்தை மறந்து போனேன்.’ உள்ளுக்குள் மருகினான்.
‘இவளின் பெயர் நிஷா என்றால் என்னவளின் பெயர் என்ன? உயிரோடு இருப்பது நிஷா.. அவளின் விழிகளே அதற்கு சான்று… அப்போ இறந்து பளபளக்கும் விழிகளுடன் பின் தொடர்வது தான் என்னவளா? அப்படியானால், என்னவள் இறந்து விட்டாளா?’ கண்களில் கண்ணீர் கரகரவென வழிய அவனின் மனம் ஊமையாக அழுதது. இதயத்தை யாரோ கத்திக்கொண்டு இரண்டாக பிளக்கும் ரணம் அவனுள். அவனின் அழுகை ஆத்மாவான அனிஷாவிற்கு மகிழ்வினையே அளித்தது. அந்த அழுகை அவளுக்கானதல்லவா.. சந்தோஷம் இருக்கத்தானே செய்யும். அனிஷின் அழுகை நிற்கும் வழி தெரியாமல் உப்புநீர் வெள்ளமென அவனின் கன்னங்களில் வழிந்தோடியது.
அப்போது கேட்ட பேச்சுக்குரலில் தன் அழுகையை கட்டுப்படுத்தியவன் அவர்களின் பேச்சினைக் கூர்ந்து கேட்டான்.
“அவள் உன்னோடு பிறந்தவள் தானே… உன்னை இந்த பாடு படுத்துவதற்கு அவளுக்கு எப்படி மனசு வருது?” தாயாக வருந்தினார்.
“அனிஷாவை குறை சொல்லாதேம்மா. அவளின் இறப்பிற்கு காரணமே நான் தானே!”
நிஷா கூறிய அனிஷா என்ற பெயர் அனிஷின் மனதில் அழுத்தமாக பதிந்தது. உங்க பெயரிலேயே என் பெயரும் உள்ளது, அன்று அவள் சொன்னதுக்கு விடை இன்று அவனுக்கு கிடைத்தது. அன்றைய அவளின் குரல் இன்றும் அவன் செவிகளில் ஒலித்தது.
“அனிஷா.” அவனின் உதடுகள் ஒரு நொடியில் பல முறை முணுமுணுத்தது. பல பேர் சொல்லி அழைத்த போது ஏற்படாத இன்பம் இப்போது ஆத்மாவிற்கு ஏற்பட்டது. தன்னுடைய பெயர் இத்தனை அழகா என ஆத்மா சிலிர்த்தது. அரூபத்தின் முகத்தில் வெட்கம் தவழ்ந்ததோ, நிலவு வெளிச்சத்தையும் அவளின் கரிய முகத்தில் தோன்றிய வெட்கம் தோற்கடித்தது.. (முன்ன பின்ன பேயா இருந்திருந்தா பேயுக்கும் வெட்கம் வருமான்னு தெரிந்திருக்கும்… எல்லாம் கற்பனை தானே.. சோ, அட்ஜஸ்ட் கரோ)
அனிஷா இறந்துவிட்டாள் என்பது உறுதியானதும், அவர்கள் பேசுவதை… கேட்கும் மனமில்லாமல் தன் வீடு வந்து சேர்ந்தான்.
வந்தவன் நேராக சென்ற இடம் அவனின் குளியலறை. மனதின் ரணத்தை சில்லிட்டு ஆற்ற நினைத்தானோ, ஷவர்க்கு அடியில் நின்றவன் அங்கேயே தரையில் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்து கதறியழுதான். தண்ணீரோடு அவனின் கண்ணீரும் கரைந்தது.
அனிஷா அனிஷின் கரம் பற்றிய போது அவன் கண் முன் தோன்றிய காட்சிகள் மீண்டும் ஊர்வலம் போயின. மிகத் தெளிவாக, அதற்கு காரணம் அனிஷா அவனுள் புகுந்திருந்தாள்.
அன்று…
அனிஷிடம் குடையை கொடுத்துவிட்டு அவள் ஆட்டோவில் பயணித்தபோது,
“அனிஷ்… அனிஷா…”
தங்கள் இருவரது பெயரையும் மாற்றி மாற்றி சொல்லிப் பார்த்தவள்… வெட்கப் புன்னகை இதழில் படர, தன் நெற்றியில் தட்டி தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.
தீடிரென ஒலித்த ஹாரன் ஒலியில் காதலிலிருந்து மீண்டவள், தான் இன்னும் எங்கு செல்ல வேண்டுமென்று டிரைவரிடம் சொல்லவில்லையே என்று நிமிர்ந்தாள், அப்போதுதான் கவனித்தாள். ட்ரைவர் ஆட்டோவை நகரத்திற்கு வெளிப்புறம் செல்லும் சாலையில் செலுத்திக் கொண்டிருந்தார்.
“அண்ணா… எங்கப் போறீங்க? எங்க ஏரியாவுக்கு போக இந்தப்பக்கம் போகக்கூடாது.”
அனிஷா சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஆட்டோவின் இரு பக்கமிருந்தும் இரண்டு தடியர்கள் உள் நுழைந்தனர். பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்த அவர்களின் தோற்றத்தைக் கண்டு அனிஷா அரண்டு போனாள். திமிர கூட முடியாதபடி அவளை இறுக்கி வளைத்திருந்தனர். இரண்டு குண்டு தடியர்களின் இடையே அவளிருக்கும் தோற்றம், கரும் பாறைகளுக்கு இடையே மாட்டிய சுண்டெலி போலிருந்தது. ஆட்டோ காற்றை கிழித்து பறந்தது. சிறிது தூரம் சென்றதும் ஆட்டோ பெரிய பாதுகாப்பு சுவற்றிற்க்கு முன் நிற்க… ஒரு கரும்பாறை கீழிறங்கி அதன் உயர்ந்த கேட்டினை திறந்தான். கேட்டின் மேல் பகுதியில் ஆர்ச் வடிவிலிருந்த சுவற்றில் எழுதியிருந்ததை படித்த அனிஷாவிற்குள் கிலி படர்ந்தது.
“மயான பூமி. இறந்தோரை தகனம் செய்யுமிடம்.”
வியர்த்து வடிந்தது. அவளின் இதய துடிப்பு சீரற்று துடித்தது.
கேட்டினைத் திறந்ததும் அவன் மீண்டும் வந்து ஆட்டோவில் ஏற…. மயானக் காட்டிற்குள் ஆட்டோ வேகமெடுத்தது.
வழியில் சமாதிகளும்… இறந்தவரை புதைக்கப்பட்ட மணல் மேடுகளும்.. ஆங்காங்கே தென்பட்ட எலும்புகளும் அனிஷாவிற்கு மூச்சை அடைப்பதை போன்றிருந்தது. அங்கு வீசும் காற்று கூட பயத்தை ஏற்படுத்தியது. இடுகாட்டிற்கு நடுவிலிருக்கும் ஆலமரத்தின் ராட்சஷத் உருவம் காற்றில் அசைவது, அவளைப் பார்த்து எள்ளி நகைப்பதைப் போன்ற மாயத்தை உணர்த்தியது.
அப்பகுதியை கண்களினால் காண முடியாது அச்சத்தில் மூடிக் கொண்டாள். இரண்டு நிமிடங்களுக்கு உள் சென்ற ஆட்டோ பிரேக் பிடிக்க, இரண்டு தடியர்களும் அனிஷாவை வெளியில் இழுத்து தள்ளினர்.
கரும் மணல் நிறைந்த தரையில் விழுந்த அனிஷா மெல்ல கையினை ஊன்றி எழுந்தாள். அவள் அணிந்திருந்த ஆடை முழுவதும் ஈர மணல் ஒட்டியது.
அவளுக்கு முன்பாக.. கருப்பு நிற பி.எம்.டபிள்யூ நிற்க.. அதன் முன்பகுதி எஞ்சின் மீது கால்நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தான் ஒருவன். வயது பின் இருபதுகளில் இருக்கலாம். பார்ப்பதற்கு அழகாகவே இருந்தான். ஆனால், அழகில் தானே பேராபத்தும் நிறைந்திருக்கிறது.
அவன் நரேன்…. பெரும்புள்ளி ஒருவனின் மகன். பணமும், அழகும் அவனிற்கு கர்வத்துடன் சேர்த்து தலைகணத்தையும், ஆணவத்தையும் தானென்கிற அகம்பாவதையும் நிறையவே கொடுத்திருந்தது. நினைத்ததை எந்த எல்லைக்கும் சென்று அடைந்து விடும் வெறி அவனின் ரத்திற்குள்ளே கலந்திருந்தது.
நரேன்… அவன் யாரென்று சுத்தமாக அனிஷாவிற்கு தெரியவில்லை. நெற்றியில் முடிச்சிட… கண்களை சுருக்கி, யாராக இருக்கக்கூடுமென்ற அவளின் யோசனை படிந்த முகத்தினைக் கண்டவன்.. காரிலிருந்து எம்பி குதித்தான் அவள் முன்.
எதிர்பாரா சமயத்தில் திடீரென அவன் குதித்ததும் பயத்தில் ஆவென்று கத்தியவள், அனிச்சை செயலாக இரண்டடி பின் நகர்ந்திருந்தாள்.
“நல்லா தான்டி பயந்தவள் மாதிரி நடிக்கிற. அன்னைக்கு என்னை அடிச்சப்போ இந்த பயம் எங்கிருந்தது” எனக் கேட்டவன் ஒவ்வொரு அடியாக அனிஷாவை நோக்கி எடுத்து வைக்க.. அவள் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள்.
“நீ அடிச்சது இன்னும் எனக்கு எரியுது டி.” இங்கில்லை என கன்னத்தைக் காட்டியவன், இங்கென இதயத்தை சுட்டினான்.
அவன் அடிச்சது எனக் கூறியதும் தான் அவளிற்க்கு நினைவு வந்தது. அன்றொரு நாள் நிஷா, தன்னிடம் வம்பு செய்த ஒருவனை தான் அடித்துவிட்டதாகக் கூறியது நினைவு வந்தது. நிஷா என நினைத்து தன்னை தூக்கி வந்துவிட்டார்கள் என புரிந்துகொண்டாள். இருப்பினும் தங்கையை காட்டிக்கொடுக்க நினைத்திடாது, அன்று உன்னை நான் அடித்தது தவறு தான் என்னை மன்னித்துவிடென நரேனிடம் கெஞ்சினாள், மன்றாடினாள்.
எதற்கும் இளகாத அரக்கன் பாவையவளின் கண்ணீருக்கா இறங்கிவரப் போகின்றான்.
“என்னை பார்த்ததும் தெரியாதவனைப் பார்ப்பதைப்போல் பார்த்தா, இப்போ அடிச்சதுக்கு மன்னிப்புக் கேட்கிற. என்னை அடித்தது மட்டும் உன் நினைவிலிருக்கா?” எனக் கேட்டவன்,
“என்னால் மறக்க முடியலடி.”
காடே அதிர கர்ஜித்தான்.. மரங்களில் அமர்ந்திருந்த பறவைகளிடையே சலசலப்பு எழுந்து அடங்கியது.
அவன் கண்களை மூடி… கைமுட்டியை தொடையில் தட்டி நடந்ததை நினைவு படுத்தினான். தன்னை அடித்தவளின் மீது வெறி குறையும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் அந்நிகழ்வினை நினைத்துப் பார்த்து வெறியேற்றிக்கொள்வான். அவனுக்கு அதுவொரு போதை மாதிரி அமைந்தது.
ஒரு நாள் சிக்னலில் நரேன் காத்திருக்கும் சமயம்… சாலையை கடந்து சென்றாள் ஒரு தேவதை பெண். பார்த்த நொடியே அவளின் அழகில் மயங்கிப்போனவனுள் அவளை அடைந்துவிட வேண்டுமென்ற வெறி துளிர்விட்டது. அன்றே அவளை பின் தொடர்ந்து அவளது கல்லூரியைத் தெரிந்துகொண்டான்.
பார்த்ததிற்கே ஜிவ்வுன்னு போதை ஏறுதே… ஒரு முறை மட்டும் இவளை அனுபவித்து எப்படி விடுவது.. இவள் மீது நான் கொண்டிருக்கும் பசிக்கு நாள்தோறும் இவள் வேண்டும் எனக்கென எண்ணியவன்… அவளை மொத்தமாக சாய்ப்பதற்கு தேர்ந்தெடுத்த வழிதான் காதல்.
அடுத்த நாளே அவளின் கல்லூரி பேருந்து நிலையத்தில் அவளுக்காகக் காத்திருந்தான். சில நிமிடங்களில் அங்கு வந்து பேருந்திற்காக நின்றவளை “நிஷா” என விளித்து பல பேர் நிற்குமிடமென்ற அச்சம் சிறிதுமில்லாமல் அவளை உரசி நின்றான்.
அவனின் உரசலில் அவனைப் பார்த்து முறைத்தவள் தள்ளி நின்றாள்.
“உரசுனதுக்கே பத்திக்குதே!”
அவனின் விரசமான பேச்சில் பெண்ணவள் முகம் சுளித்தாள்.
“ஷெல் வீ டேட்” என கூச்சம் சிறிதுமின்றி கேட்டிருந்தான். அவனின் வார்த்தைகளில் அறுவருத்தவளாக நிஷா திரும்பி நடக்க அவளின் கரம் பற்றி இழுத்தான் நரேன்.
நிஷாவின் தோள்பட்டைக்கு கீழே கையினை நரேன் பிடித்திழுக்க, அவளின் பக்க மார்பில் அவனின் கரம் உரசிச்சென்றதில் ஆத்திரம் வரப் பெற்றவள், அவன் இழுத்த வேகத்திற்கு… அவனின் கன்னத்தில், பொறுக்கியெனக் கூறி பளத்த சத்தத்துடன் அறைந்திருந்தாள்.
அவன் கண்கள் தீக்கங்குகளாய் சிவக்க கன்னத்தை தாங்கியபடி நின்றிருந்தான்.
அவள் அடித்த சத்தத்தில் கூட்டம் கூட,
“இனியொருமுறை என்கிட்ட வந்த செருப்பு பிஞ்சிடும்” எனக் கூறி வந்த பஸ்ஸிலேறி சென்றுவிட்டாள். வீட்டிற்கு கோபமாக வந்தவளிடம் அனிஷா என்னவெனக் கேட்க நடந்தவற்றை கூறியவள் சற்று அமைதியானாள்.
நிஷா சென்றும் சில நிமிடம் அப்படியே நின்றிருந்தவன்.. அங்கிருந்த மனிதர்களின் சுடு பேச்சில் தனது காரினைக் கிளப்பிச் சென்றான்.
அதன் பிறகு நிஷாவை அவன் சந்திக்கவேயில்லை. ஆனால், அவளை அழிக்க வேண்டுமென்ற அவனின் வெறி மட்டும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.
அன்று மழையில் அனிஷாவும் அனிஷும் புன்னகை முகமுடன் பேசிச் சென்றதை கொலைவெறியுடன் பார்த்தவன் விரைவில் இவளை அனுபவித்துவிட வேண்டுமென்று ஆத்திரம் கொண்டான். அனிஷாவை நிஷாவென்று நினைத்தான்.
அதற்கடுத்த நாளே அனிஷ் வீட்டு தெருமுனையில் இருவரும் நின்று பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவன், தன் ஆளை வைத்து ஆட்டோவில் அனிஷாவைக் கடத்தினான். அதன் விளைவாக இப்போது நரேன் முன்பு அனிஷா நிஷாவாக நின்றிருக்கின்றாள்.
நடந்ததை எண்ணி தன் கோபத்தை ஏற்றியவன்,
அனிஷாவின் முகத்தருகே தன் முகம் வைத்து… “உன் ட்ரெஸ்ஸெல்லாம் அழுக்காகிருக்கே, கழுட்டிடலாமா?” வெட்கமேயின்றிக் கேட்டான்.
அவள் ச்சீ என்றவாறு முகத்தை திருப்பிக்கொள்ள,
வாடியென இழுத்தவன்…
“இன்னைக்கு இந்த தடியர்கள் முன்பு தான் நமக்கு முதலிரவு” என்றபடி அனிஷாவை காரில் தள்ளி அவனும் உள் நுழைந்தான். அடுத்த நொடியே அவளின் ஆடையை கிழித்து.. காரின் விண்டோ வழியே தூக்கி எறிந்தவன், ஆடைகளற்ற அவளின் மேனியில் தனது பார்வையை படர விட்டான்.. அவளின் அந்நிலையே அவனுள் போதையேற்ற… தாமதிக்காது, கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு மொத்த உடலையும் அனிஷாவின் மீது சரித்தான்.
வெறிப்பிடித்த ஓநாயாய் அவன் மாறியிருக்க… ஓநாயிடம் அகப்பட்ட முயல் குட்டியாய் தவித்தாள் அவள். ஓநாயின் பசிக்கு ஒருமுறை முயலினை வேட்டையாடியது போதவில்லை. மீண்டும் மீண்டும் வேட்டையாடினான். முயலின் அலறல் ஒலி காட்டையே அதிர வைத்தது. அதன் அழுகுரல் அந்த ஆண்டவனுக்கும் கேட்கவில்லையோ, ஒரு கட்டத்தில் முயல் தன் மொத்த சக்தியும் வடிந்து ஓநாயிற்கு முழு உணவாகியது.
“எத்தனை முறை உண்டாலும் உன் ருசி எனை மீண்டும் மீண்டும் சுவைத்திட தூண்டுதடி” எனக் கூறியவன் அவளின் உடலில் உயிர் ஊசலாடும் சமயம் அவளை விடுத்தான்.
அவளின் வேதனை, கத்தல், அழுகை, திமிறல், எதுவும் அவனின் கருத்தில் பதியவில்லை.
வியர்வையில் குளிக்க காரிலிருந்து இறங்கியவன்… இடுப்பில் ஒரு கரம் வைத்து நின்று… நெற்றியில் வழியும் வியர்வையை மற்றொரு கரத்தின் விரலால் துடைத்து அவள் மீது சுண்டினான்.
அனிஷாவின் உடலில் உயிர் மட்டுமே எஞ்சியிருந்தது.
“அவளை வெளிய இழுத்து போடுங்கடா” என தடியர்களிடம் கூறியவன், காரின் பின்பக்கம் சென்று எதையோ எடுத்து வந்தான்.
காரிற்க்குள் அவளிருந்த நிலை.. இரக்கமற்ற அந்த தடியர்களுக்கே உள்ளத்தை பதைப்பதைக்க செய்தது.
அனிஷாவை தரையில் கிடத்தியவர்கள் ஒதுங்கிக்கொள்ள நரேன் அவளின் முகத்தருகே குத்திட்டு அமர்ந்தான்.
“உன்னை இவ்வளவு செய்தும், நீ என்னை அடித்த கோபம் தீரலடி” என்றவன் உன்னை மேலும் கொல்லப் போகிறேன் என்றவாறு எழுந்தான்.
நிற்பவனின் காலை நடுங்கும் கரங்களினால் பற்றியவள் என்னை விட்டுவிடென அந்நிலையிலும் கெஞ்சினாள். அவளிற்கு, இதற்கு பிறகும் உயிர்வாழ ஆசையில்லை… ஒரேயொருமுறை தன்னவனை தன் பார்வையில் நிரப்பி, அவனின் மடியில் உயிர்விட நினைத்தால். அதற்காகவே அந்நிலையிலும் நரேனிடம் விட்டுவிடெனக் கெஞ்சினாள் சத்தமில்லாக் குரலில்.
“இந்தநிலையிலும் உனக்கு உயிர் வாழ ஆசையா?” எனக் கேட்டவன்… “உன்னை உயிரோடு விட்டால் தானே” என்றவாறு தன் கையில் வைத்திருந்த திராவகத்தை அனிஷாவின் உடல் மீது ஊற்றினான்.
அமிலத்தின் எரிச்சலில், வேதனையில் அவளின் பூவுடல் துடிக்க… கத்தி அலற கூட சக்தியின்றி தன் உயிரை பிரிந்தாள்.
அவள் உயிர் துறந்தும் அவனின் வெறி அடங்கவில்லை… ஐந்தரையடி பெண்ணவளின் உடல்… திராவகத்தின் வீரியத்தால், சூம்பிப் போன சதைபிண்டமாக சுருங்கிக் கிடக்க… பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்தான். அவளின் உடல் எரிவதில் அவனின் வெறியும் சேர்ந்து எரிந்தது.
இறுதியாக தன்னவனை காண முடியாத ஏக்கத்தாலும், அணுஅணுவாய் தன்னை சிதைத்த மனித மிருகத்தினை கொள்வதற்காகவும் அனிஷாவின் ஆத்மா விண்ணுலகம் சேராமல்… தன் உடல் எரிவதை ஒருவித குரோதத்துடன் பளபளக்கும் விழிகளால் பார்த்திருந்தது.
எதுவும் நடவாது போன்று வீடு வந்தவனை.. அன்றே அவனின் தந்தை வேலை விஷயமாக அவனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க… வேலையெல்லாம் முடிந்து மூன்று மாதத்திற்கு பிறகே இங்கு வந்தான். வந்தவனை ஏன் வந்தாயென அவனின் தந்தை கேட்க, நான் எதற்கு வெளிநாட்டில் தலைமறைவாக இருக்க வேண்டுமென்றான்.
“உயிரோடு ஒரு பெண்ணை எரித்ததற்காக.”
பிசிறின்றி உரைத்தவர்… “அவள் காணவில்லையென அவளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்… போலீசிடம் பேசி கேசினை முடித்துவிட்டேன். ஆனால், போலீஸ் சரியாக விசாரணை செய்யவில்லையென மேலதிகாரியிடம் அவளின் தந்தை முறையிட்டாள் சிக்கலாகிவிடும். சோ, கொஞ்ச மாதம் வெளிநாட்டிலேயே இரு” என்றார்.
சரியென்றவன், “நாளை கிளம்புகிறேன்” எனக் கூறி வெளியில் சென்றான்.
ஏதேதோ சிந்தனையில் காரினை ஓட்டிக்கொண்டு வந்தவன், நிஷாவின் கல்லூரியை கண்டு அந்தப்பக்கம் திரும்பி பார்த்தான்.
அப்போதுதான் அனிஷ், நிஷா விழப்போக இருந்ததை தடுத்து அதட்டினான். தான் கொன்றவள் உயிரோடு இருப்பதைக் கண்டு அதிர்ந்தான். அவள் இறந்துவிட்டாள் என்பதை அவனால் மறுக்க முடியாது. ஆனால், மீண்டும் அவளை அனுபவித்திட ஒரு சந்தர்ப்பம் வாய்க்கிறது என எண்ணினான். இவள் எப்படி மீண்டும் உயிருடன் என்பதை அவன் சிறிதும் யோசிக்கவில்லை. அவள் யாராக இருந்தாலென்ன எனக்கு வேண்டுமென நினைத்தான்.
இருவரும் பூங்காவிற்கு செல்வதை பின்தொடர்ந்தவன்… அனிஷ் திரும்பி நின்ற நேரம், தான் வரவைத்திருந்த தன் அடியாட்களை வைத்து அவளின் வாயை பொத்தி கடத்தியிருந்தான்.
அந்நேரம் மொபைலில் அழைப்பு வரவும், “நீங்க அங்க போங்க, நான் வந்துடுறேன் என்றான்.
நிஷாவை அவர்கள் தூக்கி வந்த இடம் அதே மயானம்…
அளரவமற்ற ஒதுக்குப்புறமான இந்த இடம் நரேனின் சல்லாப செயல்களுக்கு வசதியாய் அமைந்திருந்தது.
கார் உள் நுழைந்ததுமே மணற்காற்று சூறாவளியாய் வீசியது. அடுத்த நொடி அத்தடியர்கள் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு ஆலமரத்தின் விழுதுகளில் பிணமாக தொங்கினர்.
அதனைப் பார்த்து மிரண்ட நிஷா காரிலிருந்து இறங்கவும் அவள் முன் அனிஷாவின் கரிய ஆத்மா ஆக்ரோஷமாகத் தோன்றியது.
திடிரென தன் முன் குதித்த உருவத்தில் அலறி முகத்தை மூடிகொண்ட நிஷா…
அனிஷாவின், நிஷா என்றழைப்பில்.. அனி என முகம் திறந்தாள். தனது சகோதரியின் குரலைக் கேட்டதும் அனி… என்று விளித்தவாறு வனம் முழுக்க தன் பார்வையை சூழற்றினாள் நிஷா.
“நான் தான் நிஷா. அனிஷா…” என ஆத்மா நிஷாவின் கரம் பற்ற,
“அய்யோ.. அனி, நீ இறந்துவிட்டாயா?” என அழுகையில் வெடித்தாள்.
ஆமெனக் கூறிய ஆத்மா, “உன்னால் இறந்து விட்டேன். உன்னால் என்னைக் கொன்றான். நீயென நினைத்து என்னை சிதைத்தான்.”
“நானா?” நிஷா சர்வமும் நடுங்கக் கேட்டிருந்தாள்.
எல்லாவற்றையும் அனிஷாவின் ஆத்மா நிஷாவிடம் சொல்லியது கண்ணீருடன்.
நிஷா தன் தலையில் அடித்துக்கொண்டு, தரையில் மண்டியிட்டு அமர்ந்து கதறினாள்.
“என்னை மன்னித்திடு அனி… உன் சாவிற்கு நானே காரணமாயிட்டேனே” எனக் கூறி அழுதவளிடம்,
“உன் மன்னிப்பு வேண்டாம் எனக்கு, என்னைக் கொன்றவனையும், அவனைக் காப்பாற்ற நினைக்கும் அவனின் தந்தையும், என் மீது அவதூறாக பழிபோட்டு கேசினை மூடிய அந்த போலீஸையும் நான் சாகடிக்க வேண்டும், துடிக்க துடிக்க பழிவாங்க வேண்டும் அதற்கு உன் உடல் வேண்டும் எனக்கு” எனத் தன் விழிகள் பளபளக்க ஆக்ரோஷமாகக் கேட்டாள்.
அனிஷாவின் வார்த்தைகளில் பயந்த நிஷா… தன்னால், தன் செயலால் தானே இன்று தன்னுடைய சகோதரிக்கு இந்தநிலை… இவள் அனுபவித்த இறந்த வேதனை, வலிகளை விட தான் அனுபவிக்க போவது குறைவு தானென்று சிந்தித்தவள் சரியெனத் தலையசைக்க அனிஷாவின் ஆத்மா நிஷாவின் உடம்பிற்குள் புகுந்தது.
நிஷாவின் நடவடிக்கைகளில் அனிஷாவைக் கண்ட பெற்றோர் என்னவென்று கண்டறிய… இளைய மகளின் உடலிற்குள் காணாமல் போன தங்களது மூத்த மகளின் ஆன்மா இருப்பதை அறிந்தனர்.
அனிஷா இறந்தது வருத்தமாக இருப்பினும், உயிருடன் இருக்கும் மகளையாவது அவர்கள் காப்பாற்ற நினைக்க, அனிஷா அவர்களை கொல்லும் வரை அமைதியாக இருங்கள்.. இல்லையெனில் அவளின் ஆன்மா சாந்தியடையாதென தனது பெற்றோரை அமைதியாக்கினாள் நிஷா.
யாருக்காக யோசிப்பதென்று தெரியாமல் தவித்தவர்களால் அழ மட்டுமே முடிந்தது.
ஏற்கனவே ஒரு பெண் ஓடி போய்விட்டாளென்று ஊர் மக்கள் பேசுவதை தாங்க முடியாதவர்கள்.. இன்னொரு மகளுக்கும் பேய் பிடித்திருக்கிறதென்றால் என்னவெல்லாம் பேசுவார்களோ எனக் கருதி அதனை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டனர். அதனாலே, மைதி வந்த அன்று நிஷாவும் காணவில்லையெனக் கூறினர்.
அனிஷாவும் இரவு நேரங்களில் மட்டுமே நிஷாவின் உடலிற்குள் வந்து செல்வதால் மறைப்பது எளிதானது.
விபத்தில் சிக்கிய அனிஷ் நலம்பெற்று நிகழ்ச்சிற்காக அந்த இடுகாட்டிற்கு செல்ல… அனிஷாவின் ஆத்மா தானின்று உயிரோடில்லையென வருந்தியது. தன்னைக் கொன்றவர்களை பழிவாங்க மட்டுமில்லாது தன்னவனுடன் வாழவும் நிஷாவினை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தது.
முடிவின் காரணமாக அனிஷை நிஷாவின் உடலிற்குள் புகுந்து பின்தொடர்ந்தது… சுற்றி வந்தது… காதலித்தது… அவனுடன் நிஷாவாக வாழ்ந்தது.
அனைத்தையும் தெரிந்துகொண்ட அனிஷ் தன்னவளுக்கு நரக வேதனையளித்து கொன்றவனை தானே கொல்ல வேண்டுமென்று நினைத்தான். அதன் விளைவாகவே… அனி(நி)ஷா மற்றும் அனிஷ், மூவரும் சேர்ந்து… அந்த பங்களாவில் நடுத்தர வயதுடைய ஒருவரையும், அடர்ந்த காட்டில் ஒருவனையும் கொன்றனர்.
நரேனிற்கு துணையாக இருந்த இரண்டு தடியர்களையும் நிஷா கடத்தப்பட்டன்றே சாகடித்திருந்தாள் அனிஷா. பங்களாவில் கொலை செய்யப்பட்டவர் நரேனின் தந்தை. அடர்ந்த காட்டில் இறந்தவன் விசாரிக்காமலே பணத்திற்காக கேசினை மூடிய காவல் அதிகாரி.
எஞ்சியிருப்பவன் நடந்ததற்கு சூத்திரதாரியான நரேன். நிஷாவை தடியர்கள் கடத்திய போது, நரேனை அழைத்தது அவனின் தந்தை தான். அப்போதே அவனை கடல்கடந்து செல்ல வழியனுப்பி வைத்துவிட்டார்.
தன் மீது சிறு சந்தேகம் ஏற்பட்டுவிட்டாலும்… ஹரி இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டானென்றே, தனக்கு ஒன்றும் தெரியாததைப்போல் தன் வாழ்வில் தன்னை சுற்றி பல மர்மங்கள் நிகழ்வதைப் போன்று அனிஷ் காட்டிக்கொண்டான்.
அனிஷ் நினைத்ததை போலவே ஹரிக்கும் தன் நண்பன் மீது சந்தேகம் வராது, அவனைக் காப்பாற்ற நினைத்தான்.
நரேனை எப்படியாவது கொன்றுவிட இவர்கள் காத்திருந்த சமயம் தான்… தன் தந்தை இறந்து விட்டாரென்று அவன் இங்கு வந்திருந்தான்.
நரேனைக் கண்டதும் அனிஷ் பழிவெறியுடன் செல்ல… அவன் தப்பி விட்டான். அனிஷ் ஹரி மற்றும் மைதியிடம் மாட்டிக்கொண்டான்.
நடந்த அனைத்தையும் அனிஷாவின் ஆத்மா சொல்லி முடிக்க… அறையினுள் அனிஷ் நினைவுகளிலிருந்து மீண்டான்.
கேட்டவை ஹரியின் மனதினையே பதற வைத்தது… மைதி கண்களில் நீர் வழிய அசையாது அனிஷாவை பார்த்திருந்தாள்.
“உனக்கு நடந்த கொடுமைக்கு அந்த இறைவன் நிச்சயம் நியாயம் வழங்குவார். அதற்காக எந்த பாவமும் அறிந்திடாத இருவரை பகடைக்காயாக உருட்டுவது தர்மமில்லை.. நீ முக்தி அடைவதே அவர்களுக்கு நன்மை” எனக் கூறிய சிவாச்சாரியார் ஈசனின் கழுத்தில் அனுவிக்கப்பட்டிருந்த வில்வ மாலையை தீர்த்தத்தில் தோய்த்து அனிஷாவின் ஆத்மா மீது போட…. முதலில் எனக்கு முக்தி வேண்டாமென்று அலறியவள், “நீ சாந்தியடைவதே அனிஷ் மற்றும் நிஷாவிற்கு நன்மை” எனக் கூறியது நினைவுவரவும் கொஞ்சம் கொஞ்சமாக காற்றாகினாள்.
அவளின் அதீத அலறலில் அறையிலிருந்து ஓடிவந்த அனிஷிற்கு தெரிந்தது, இறுதியாக காற்றோடு கலந்த அவனின் மனம் கவர்ந்தவளின் விழிகளே. ஆத்மாவும் தன் விழிகளில் தன்னவனை நிரப்பி காற்றாகி விண்ணுலகம் சென்று மறைந்தது.
“அனிஷாவின் ஆத்மாவிற்கு முக்தி கிடைத்துவிட்டது. இனி அதனால் உங்களுக்கு எந்தவொரு துன்பமும் நேராது” எனக் கூறிய சிவாச்சாரியார்கள் அவர்களிடம் விடைபெற்றனர்.
அவர்கள் சென்றதும் தன்னிடம் வந்த ஹரியிடம் பார்வையாலே அனிஷ் மன்னிப்பினை யாசிக்க, “விடு மச்சான்” என்றவனிடம் “நரேனை கொலை செய்ய வேண்டும். மைதி முன்னர் இருந்த ஆசிரமத்தில் பெண் பிள்ளைகளை தவறாக நடத்தியதும் இந்த நரேன் தான். அன்று மைதி இவங்கிட்ட மாட்டியிருந்தாலும் இதே நிலை தான். அந்த ஆசிரம நிர்வாகி இவனுடைய பெரியப்பா. அவர் நல்ல நோக்கத்திற்காக தொடங்கியதை இவன் தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்துகிறான்” என்றான் அனிஷ். ஒருவித வெறியுடன், அவனது கண்களில் தெரிந்த வேட்கையில் ஹரியே சற்று அஞ்சினான்.
“உனக்கு இதெல்லாம் வேண்டாம் அனிஷ்…”
“நீ மைதியை திருமணம் செய்து வாழும் வழியை பார், நான் அவனை கொன்றுவிட்டு போலீசில் சரணடைகின்றேன்” என்றான்.
“நீ ஜெயிலுக்கு போயிட்டால் எங்க கல்யாணம் எப்படி நடக்கும்?”
மைதி கேட்டதில் அனிஷ் அமைதியாகினான் என்றால், தன்னவள் தன் காதலை ஏற்றுக்கொண்டாள் என்பதில் ஹரி துள்ளிகுதித்தான்.
“பேபி” என்றழைத்தவாறு மகிழ்ச்சியுடன் ஹரி மைதியை அணைக்க போக, “முதலில் நரேனை கொலை செய்துவிட்டு வாங்க.. பிறகு இதையெல்லாம் வைத்துக்கொள்ளலாம்” எனக் கூறிய மைதி, விடிந்துவிட்டதால் வீட்டினை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
அதில் ஜர்க்கானவனுக்கு ஒன்று புரிந்தது… மைதி முதலில் கூறிய ஜெயில் இப்போது சொல்லிய கொலை என்ற வார்த்தைகள் நிதர்சனத்தை உணர்த்தி அவனின் கோபத்தை கட்டுப்படுத்தியது. நிச்சயம் நரேனுக்கு இறைவனே கூடிய விரைவில் தண்டனை வழங்குவாரென்று அமைதியாகினான்.
நிஷாவை வீட்டில் விட்டு வருமாறு அனிஷிடம் கூறிய ஹரி தன்னவளுக்கு உதவி செய்யச் சென்றான்.
இரவு நடந்தவைகளை தனது பெற்றோரிடம் நிஷா கூற, இருவரும் அனிஷினை கையெடுத்து வணங்கினர்.
அவர்களின் செயலில் பதறியவன் “என் மனைவி இறந்த பிறகாவது நிம்மதியாக இருக்க வேண்டுமென்றே இதனை செய்தேன்.. அவள் அங்காவது சந்தோஷமா இருக்கட்டும்” எனக் கூறியவன் கிளம்பினான்.
நடந்த நிகழ்வுகளிலிருந்து அனிஷை வெளியே கொண்டுவர, ஹரி தனது திருமணத்தை உடனே நடத்த ஏற்பாடு செய்தான். தன் திருமண வேளைகளில் அனிஷ் மூழ்கி விட்டால் நரேனை மறந்து விடுவானென்று தவறாக எண்ணினான்.
ஹரியின் பெற்றோரும் அனிஷின் அன்னையும் எவ்வித தடையுமின்றி இருவரின் காதலை ஏற்றுக்கொண்டதால் திருமணம் விரைவில் நடைபெற நாள் குறித்தனர்.
மைதிக்கு உடன் பிறந்த அண்ணனாக இருந்து அனைத்தையும் பார்த்து பார்த்து அனிஷ் செய்தான். சிறு குறை கூட அவளுக்கு ஏற்படக் கூடாதென்று நினைத்தான்.
இன்னும் இரு தினங்களில் திருமணம்…
அனிஷ் பம்பரமாக தங்கையின் திருமணத்திற்காக சுழன்றான். அவனின் முழு கவனமும் திருமண வேலைகளிலேயே இருக்கின்றன என்ற ஹரியின் எண்ணத்தை பொய்யாக்கியது அன்றைய மாலை நேர செய்தித்தாளில் வந்த செய்தி.
அனிஷ் அவனின் அன்னையிடம் மேடையில் வைக்க வேண்டிய பொருட்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்க கலக்கத்துடன் வந்த ஹரி… அனிஷை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து கதவடைத்தான்.
ஹரியின் செயல்களை புரியாது பார்த்திருந்த அனிஷின் முன் செய்தித்தாளில் உள்ள செய்தியை காண்பித்து “உனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லைதானே” என நடுங்கும் குரலில் கேட்டான்.
“இல்லையென சொல்லுடா” என்று ஹரியின் மனம் கூகுரலிட்டது.
அமைதியாக ஆமென்று தலையாட்டினான் அனிஷ். அவனின் சாவுக்கு நான் தான் காரணமென்றான்.
“ஆனால், மச்சான் அவன் மூச்சடக்கி செத்துப் போவானென்று தான் நினைத்தேன் இப்படி எரிஞ்சி சாம்பலா போவான்னு நினைக்கவில்லை” எனக் கூறிச் சிரித்தவன்,
“தன் வினை தன்னைச் சுடும்” என்றான்.
நாம் பிறருக்கு செய்த மற்றும் செய்ய நினைத்த வினைகளெல்லாம் திரும்பி நம்மையேத் தாக்கும்.
மைதி சொல்லிய ஜெயில் என்ற வார்த்தை அனிஷையும் சிந்திக்க வைத்தது. ஒரு கெட்டவனை கொன்றுவிட்டு என் வாழ்க்கையை நானிழக்க வேண்டுமா எனத் தன்னைத்தானேக் கேட்டுக்கொண்டவன் அவன் மரணம் விபத்தால் ஏற்பட்டவாறு இருக்குமாறு முடிவு செய்தான்.
நரேன் அமர்ந்ததும் கார் லாக் ஆகி, திறக்க முயற்சி செய்தாலும் திறந்து விடாதவாறு இருக்குமாறு செட் செய்து… ரேடியேட்டர் மூலம் காரிலுள்ள ஏசி வழியாக வேதியல் வாயு உட்புகுந்து.. சுவாசிக்க காற்றில்லாமல் மூச்சடக்கி அவன் இறந்து போகுமாறு அனைத்து ஏற்பாடுகளையும் அனிஷ் பக்காவாக செய்து முடித்திருந்தான்.
அனிஷ் நினைத்தது போலவே சுவாசிக்கத் தவித்தவனின் கைகளில் கார் தடுமாறியது.
கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியவில்லை. பிரேக் பிடிக்க முயற்சி செய்ய… அந்தோ பரிதாபம் பிரேக் பழுதடைந்திருந்தது. சில நிமிடங்களிலேயே வேதியல் வாயுவினால் நரேன் காருக்குள் மூர்ச்சையாகினான். அவன் ஓட்டாமலேயே சிறிது தூரம் ஓடிய கார் சாலையிலிருந்து கீழிறங்கி மலையடிவாரத்தில் உருண்டது. உருண்ட வேகத்தில் என்ஜினில் தீப்பிடித்து கார் மொத்தமும் எரிந்து நரேன் சாம்பலாகினான்.
அவனின் இறப்பு விபத்தாகவே பார்க்கப்பட்டது. அதனால் அனிஷ் நரேனின் கொலையிலிருந்து தப்பித்தான்.
எவ்வித பிரச்சனைகளுமின்றி தன் நண்பன் தனக்கு கிடைத்ததே போதுமென ஹரியும் நிம்மதியடைந்தான்.
நரேனின் மரணத்தை கேள்விப்பட்ட அனிஷாவின் குடும்பத்தாரும் கடவுள் தண்டனை வழங்கிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தனர்.
தன்னவளுக்கு நியாயம் அளித்திட்ட மகிழ்வில் அனிஷ் மேற்கொண்டு திருமணத்திற்கு செய்யவேண்டிய வேலைகளை கவனித்தான்.
இதோ, அவர்கள் எதிர்பார்த்த திருமணமும் இனிதே நடந்து முடிந்தது. நல்ல நேரத்தில் ஐயர் தாலி எடுத்து கொடுக்க, பெரியவர்கள் மற்றும் இறைவனின் ஆசிர்வாதத்துடன் ஹரி தன்னவளின் கழுத்தில் மங்கல நாணை பூட்டினான். மைதியும் மனமுவந்து அவனிட்ட தாலியை சந்தோஷத்துடன் வாங்கிக்கொண்டாள்.
திருமணத்திற்கு நிஷாவும் அவளின் பெற்றோரோடு வந்திருந்தாள். உறவினர்கள் கூட்டம் கலைந்ததும் நிஷாவுடன் அனிஷிடம் வந்த ஹரி..
“நிஷாவை திருமணம் செய்து கொண்டு நீயும் சந்தோஷமா வாழ வேண்டும்” எனக் கூறினான்.
“அனிஷா மாதிரி இருப்பதால் நிஷா என் காதலியாகிவிட முடியாது ஹரி. நிஷாவைத் திருமணம் செய்து கொண்டாள் எனக்கு அனிஷாவைத் தான் தினமும் இவளின் முகம் நினைவுபடுத்தும். இவளிடம் என்னவளைத் தேடி தேடி நான் ஏமார்ந்து போவேன். எனது ஏமாற்றம் நிஷாவின் வாழ்வையும் சிதைத்துவிடும்” என்ற அனிஷ் ஹரியை மட்டுமல்லாது அங்கிருந்த பெரியவர்களிடமும் என்னை புரிந்து கொள்ளுங்கள் என்ற பார்வையை வீசினான்.
“எனக்கும் இவரிடம் ஈர்ப்புத் தோன்றியது உண்மை தான். ஆனால், அனிஷாவின் ஆத்மா முக்தி அடையும் போது இவர் ஓடிவந்து அவளைப் பார்த்த பார்வையில் அவள் மீதான அத்தனை காதலை நான் பார்த்தேன். இவரை மணந்து கொண்டால் அது என் உடன் பிறந்தவளுக்கு நான் செய்த துரோகமாகிவிடும்” என்று நிஷாவும் எடுத்துரைக்க, இருவரையும் அவர்களது குடும்பத்தினர் புரிந்துகொண்டனர்.
ஹரி தனது நண்பனின் காதலில் சிலிர்த்தவனாய் அனிஷை ஆரத் தழுவினான். அந்நேரம் அனிஷின் அலைபேசி சத்தமிட்டது. அழைத்தது அவனின் ஹெட்.
“ஹாய் அனிஷ்…. நண்பனின் திருமணத்தில் பயங்கர பிஸி போல் தெரிகிறது” என்று வினவியவர், “நாளை நிகழ்ச்சியின் பைனல் எபி மறந்துவிடாதே” எனக் கூறி இணைப்பைத் துண்டித்தார்.
அப்போது தான் அனிஷிற்கு நிகழ்வின் இறுதி அத்தியாயம் நினைவிற்கே வந்தது. அன்றைய இரவு எல்லா வேலைகளையும் முடித்து மறுநாள் தனது ஹெட்டிடம் நிகழ்ச்சிக்கான தொகுப்பை சமர்பித்துவிட்டான்.
திரைக்குப் பின்னால் நடந்தவை… அவர்கள் செட் செய்து எடுத்த காட்சிகள்… எந்தெந்த இடத்தில் தொழில்நுட்பத்தின் அறிவினை பயன்படுத்தினர் என்பதை கோர்வையாக எடிட் செய்து…
“எல்லாம் நிகழ்ச்சிற்காக நாங்களே உருவாக்கியவை பேய் என்ற ஒன்றில்லை.. அவை யாவும் நம் மனதிற்குள் ஒளிந்திருக்கும் பயத்தின் வெளிப்பாடே” என்றவன், “நமக்கு மேலான நல்ல சக்தி ஒன்றிருப்பதை போல்… தீய சக்தியும் இருக்கிறதென்று நம்புகின்றோம்” என்றான்.
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கான விடை அனிஷிற்கு நன்றாகத் தெரியும்… இருப்பினும் மீடியாவின் மூலம் சொல்லப்படும் கருத்து மக்களிடையே விரைவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதனால், “யாவும் நம் நம்பிக்கையே காரணம்” என முடித்திருந்தான்.
அதனை பார்த்த ஹெட் அனிஷை பாராட்டினார். அன்றைய நிகழ்ச்சி மிகுந்த வரவேற்ப்பை பெற்றுத் தந்தது. அப்போதே சேனலில் எடிட்டராக பதிவி உயர்வு அளித்தார் .
தனது திறமைக்கு கிடைத்த முதல் அங்கீகாரத்தில் மகிழ்வுடன் தெருமுனையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் நள்ளிரவில் இல்லம் நுழைந்து தன்னவளின் புகைப்படத்தை அணைத்தவாறே உறங்கிப் போனான்.
கனவில் அவனவளின் உருவம் தோன்றி அனிஷை பார்த்து அழகாய் சிரித்தது. அவளை முதல் முதலாய் பார்த்த காட்சி தென்றலாய் அவன் மனதை வருடியது.
வாழ்நாள் முழுமைக்கும் அவனின் காதல் ஒன்றே அவனுக்குத் துணை. அவனின் காதலே அவனை மகிழ்வுடனும், உயிர்ப்புடனும் வாழ வைக்குமென்ற நம்பிக்கையுடன் அனிஷிடமிருந்து நாமும் விடைபெறுவோம்.
முற்றும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
1
+1