Loading

அத்தியாயம் 5 

 

அஸ்மிகா தன் அலைபேசியிலிருந்த ஒலிப்பதிவை கேட்டுக் கொண்டிருக்கும்போது, தன்னவனிடமிருந்து அழைப்பு வருவதை பார்த்து, ஒரு பெருமூச்சுடன் அதை ஏற்றாள். 

“ஹே, அஸ்மி மா…” என்று அபராஜித்தின் குரல் உற்சாகமாக ஒலிக்க, அதன் பிரதிபலிப்பு சற்றும் இல்லாதவாறு, “ம்ம்ம்…” என்று முனகினாள் அவனின் காதலி. 

அவளின் குரல் பேதத்தை அந்த ‘ம்ம்ம்’மிலேயே உணர்ந்த அபராஜித், “என்னாச்சு அஸ்மி? ஏன் ஒரு மாதிரி இருக்கு உன் வாய்ஸ்? ஏதாவது மூட்-அவுட்ல இருக்கியா? இல்ல வழக்கம் போல ‘ஹோம்-சிக்’கா இருக்கியா?” என்று படபடவென்று தனக்கு தெரிந்த காரணங்களை கொட்ட, அவளோ மறுமொழி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

“அடியேய், ஏதாவது பேசு டி. அமைதியா இருந்து மனுஷனை அலைகழிக்குறதுல அப்படியே உங்க அண்ணன் மாதிரியே இருக்க.” என்று அவள் குரல் கேட்காததால் கத்தியவன், பின் அவளிருக்கும் நிலை உணர்ந்து, “என்னாச்சுன்னு சொல்லு அஸ்மி.” என்று இறங்கித்தான் போக வேண்டியதாயிற்று. 

தன்னவனின் பதற்றத்தை உணர்ந்தவளாக, மேலும் அவனை பதற்றப்பட வைக்க நினைக்காதவளாக, தன் மனதில் தேக்கி வைத்த கவலையை வாய்வழியே கூற ஆரம்பித்தாள். 

“அபி, உனக்கு பூஜி பத்தி தெரியும் தான?” என்று அஸ்மிகா வினவ, ஒருவழியாக அவள் பேசிவிட்டதை எண்ணி சற்று நிம்மதியடைந்த அபராஜித், “ஆமா, உன் வாயிலயிருந்து அடிக்கடி வர பேரு பூஜி தான. தெரியாம இருக்குமா என்ன? ஆனா, அந்த பொண்ணை நான் நேர்ல பார்த்தது இல்லல, சோ அவளோட முகம் சரியா ஞாபகத்துக்கு வரல.” என்றான். 

“ஹ்ம்ம், என் வாழ்க்கைல முக்கியம்னு நினைக்குற சிலர்ல அவளும் ஒருத்தி. ஆனா, அவ என்னை அப்படி நினைக்கல போல அபி! கடைசியா அவ என்கிட்ட பேசுனது, நான் லண்டன் கிளம்புனப்போ தான். இத்தனை நாள்ல ஒருமுறை கூடவா என்கிட்ட பேசனும்னு தோணியிருக்காது? ப்ச், ரொம்ப கஷ்டமா இருக்கு அபி. ரொம்ப வருஷமா, என் பெஸ்ட் பிரெண்டா இருந்தவ, என் வாழ்க்கைல இருக்க பல ரகசியங்களை ஷேர் பண்ணிகிட்டவ, இப்போ ஒரு ஹாய்-பை கூட சொல்லாம இருக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு!” என்று அழும் குரலில் கூறினாள் அஸ்மிகா. 

அபராஜித்திற்கோ, அவள் கூறுவதை புரிந்து கொள்ள சற்று நேரம் பிடித்தது. அதுவும் அவளின் அழும் குரலை கேட்டவனிற்கு சட்டென்று மூளை வேலை செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். 

அஸ்மிகா, சட்டென்று அழுபவள் இல்லை. இயல்பிலேயே தைரியம் மிக்கவள். மேலும், அவள் வாழ்வில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் அவளை பக்குவப்படுத்திருந்தது. 

அவள் தாய்நாட்டை விட்டு தனியே லண்டன் செல்லும்போது கூட கலங்காமல், அபராஜித்திற்கு சமாதானம் கூறிச்சென்றவள். 

அத்தகையவள், இப்போது உடைந்து போனதை உணரும்போது, அபராஜித்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவன் இதுவரை கையாண்டிராத புது சூழ்நிலை அல்லவா! 

முதலில் திகைத்து தடுமாறியதெல்லாம் சில நொடிகள் தான். விரைவிலேயே சுயத்தை அடைந்தவன், தன்னவளை தேற்றும் வேலையை கையிலெடுத்துக் கொண்டான். 

அதே சமயம் அவன் மனமோ, ‘இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கா, என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே! என்கிட்ட ஷேர் பண்ண தோணலையா அஸ்மி! இல்ல நான் அதுக்கான ஸ்பேஸ் உனக்கு கொடுக்கலையா?’ என்று மானசீகமாக அவளுடன் உரையாடியது. 

அதற்கான பதில் தனக்கு தெரிய வேண்டும் என்பதால், அவளிடமே அதைக் கேட்டான். 

“அஸ்மி, இவ்ளோ நாள் இதை உனக்குள்ளேயே வச்சு மறுகிட்டு இருந்தியா? என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல. உன் வாய்ஸ் வச்சே, நீ எவ்ளோ கஷ்டத்துல இருந்துருக்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது அஸ்மி. ஆனா, ஏன் இதுவரை என்கிட்ட இதை ஷேர் பண்ணல? ஷேர் பண்ண தோணலையா?” என்று வினவினான். 

“ச்சே, உன்கிட்ட ஷேர் பண்ணக்கூடாதுன்னு இல்ல அபி. ஃபர்ஸ்ட் நான் இதை பெருசா எடுத்துக்கல. அவளுக்கு ஏதோ பிரச்சனை போலன்னு விட்டுட்டேன். ஆனா, நாளாக நாளாக அவகிட்ட இருந்து எந்த தகவலும் வரல. என் மெசேஜுக்கு எந்த ரிப்ளையும் இல்ல. அது, ‘அவளே பேசல, நான் எதுக்கு இவ்ளோ மெனக்கெடனும்’ங்கிற ஈகோவை தான் ஏற்படுத்துச்சு. அப்பறம் கொஞ்ச நாள் அவளுக்கு டெக்ஸ்ட் பண்ணாம இருந்தேன். ஆனா, ரொம்ப நாள் அப்படி அவளை ஒதுக்க முடியல. சீரியஸ்லி, இதை வேற யாருக்கிட்டயும் சொல்லணும்னு தோணல அபி. பிளீஸ், நீ தப்பா மீன் பண்ணிக்காத. உன்கிட்ட ஷேர் பண்ணக்கூடாதுன்னு இல்ல. அப்படி நினைச்சுருந்தா, இப்பவும் சொல்லியிருக்க மாட்டேன்ல.” என்று அவசரமாக தன்னை தன்னவனிற்கு புரிய வைத்திடும் வேகத்தில் பேசினாள் அஸ்மிகா. 

அவள் கூறுவது புரியத்தான் செய்தது. இருப்பினும், மனதின் ஓரத்தில், ‘இக்கட்டான நிலையில் தன்னவள் தன்னை தேடவில்லையோ!’ என்ற எண்ணம் அரித்துக் கொண்டு தான் இருந்தது. 

அதை அவளிடம் கூறி, ஏற்கனவே கவலையில் இருப்பவளை, மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று எண்ணியவனாக, “நீ எதுக்கும் ஃபீல் பண்ணாத அஸ்மி. இன்னும் ஒரு வாரத்துல இந்தியா வரப்போற. அதுக்கு அப்பறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே உன் பிரெண்டை தேடுவோம். அதுக்கு அப்பறம் நீயாச்சு உன் பிரெண்டாச்சு. சோ, இப்போ என்ன பண்றன்னா, பிழிய பிழிய சோகம் வடியுற உன் முகத்தை, சிரிச்ச மாதிரி மாத்தி, மாமனுக்கு அங்கயிருந்து வரப்போ என்ன வாங்கிட்டு வரப்போறன்னு சொல்லுவியாம்.” என்று பேச்சை மாற்றினான். 

அஸ்மிகாவிற்கும் அவனின் முயற்சி புரிய, அவனிற்காகவே அவன் கூறியதை செய்தாள். அத்தனை நேரம் அவள் மனதிலிருந்து பாரம் குறைவதை போலிருக்க, ‘உன்கிட்ட ஏதோ மேஜிக் வச்சுருக்க டா அபி’ என்று தனக்குள் கூறிக் கொண்டவள், சிறு சிரிப்புடன், “என்ன வேணுமாம் என் மாமனுக்கு?” என்று இழுத்தவள், “ஹான், குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிட்டு வரேன்.” என்று சிரித்தாள். 

அவளின் சிரிப்பே அவள் மீண்டு விட்டதை உணர்த்த, சற்று நிம்மதியடைந்தவனாக, அந்த பேச்சில் கலந்து கொண்டான். 

“எதே! குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியுமா? லண்டன்ல இருக்கன்னு தான் பேரு, கொஞ்சமாச்சும் ரொமான்டிக்கா யோசிக்கிறியா? இன்னும் சின்ன பாப்பா மாதிரி குச்சி மிட்டாய், குருவி ரொட்டின்னு சுத்திட்டு இருக்க…” என்றவன், அவளுக்கு கேட்குமாறு, “உன் வருங்காலம் இப்படி இருக்குதே டா அபி!” என்று புலம்பினான். 

“ஹலோ, என்னமோ நீ இதுல பி.ஹச்.டி பண்ண மாதிரி தான்! லண்டன் போறதுக்கு முன்னாடி அங்க தான இருந்தேன், அப்படி என்ன ரொமான்டிக்கா பண்ண நீ?” என்று அஸ்மிகாவும் உற்சாகமாக அவனை வாரினாள். 

“ஆஹா, கள்ளி உனக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு தெரியாம, பாவம் சின்ன பொண்ணுன்னு தள்ளியே இருந்தேனே! கவலைப்படாத டா செல்லம், நீ இந்தியா வந்ததும் பாரு மாமனோட பெர்ஃபார்மன்ஸை!” என்று குறும்பு கொப்பளிக்க அபராஜித் கூற, அதைக் கேட்டவளிற்கு என்றும் இல்லாத அதிசயமாக வெட்கம் வந்தது. 

‘உஃப் நல்ல வேளை, வீடியோ கால் இல்ல!’ என்று ஆசுவாசப்பட்டவளிற்கு தன் வெட்கத்தை நினைத்து வேறு வெட்கம் வந்து தொலைத்தது. 

அவளிடமிருந்து எவ்வித மறுமொழியும் இல்லாததால், “என்னடா அஸ்மி, மாமாவோட டிரிம்ஸ்ல டூயட் ஆட போயிட்டியா?” என்று அபராஜித் வினவ, “க்கும், ஃபர்ஸ்ட் என் அண்ணா கிட்ட பேசுற வழியை பாரு டா! அதுக்குள்ள டூயட் – டிரீம்ஸ்ன்னு பேசிட்டு!” என்றாள். என்ன முயன்றும் அவள் குரலிலிருந்த குழைவை மறைக்க முடியவில்லை. 

அதை புரிந்து கொள்ளாதவனோ, “நோ நோ நோ நோ! காலைல சொன்னது தான்! என்னால தனியா எல்லாம் உன் அண்ணனை சமாளிக்க முடியாது மா. நீ இந்தியா இறங்குனதும் முதல் வேலையா, ரெண்டு பேரும் அவன் காலுல விழுந்துடுவோம்.” என்றான். 

மேலும், சில மணி நேரங்கள் ‘ஸ்வீட் நத்திங்ஸ்’ஸில் கழிய, அவர்களின் அலைபேசி சார்ஜ் இல்லாமல் செயலிழந்து தான் அவர்களின் பேச்சை முடித்து வைத்தது. 

*****

அந்த பெரிய பங்களாவின் மேல் தளத்திலுள்ள நீச்சல்குளத்தில் நீந்திவிட்டு மேலே வந்தவள், துவாலை மூலம் தன் மேனியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் நீரினை துடைத்தாள். 

அவள் வெளியே வருவதற்காகவே காத்திருந்ததைப் போல, அவளிற்கான பழச்சாறுடன் வந்தாள் அவளின் பி.ஏ. 

“மேம், சித்தார்த் சார் உங்களை பார்க்க வந்துருக்காரு.” என்று தகவல் கூற, “இதை ஏன் முன்னாடியே சொல்லல? யூஸ்லெஸ்!” என்று தன் பி.ஏவை திட்டியபடி, தன் கையிலிருந்த பழச்சாறை வேகமாக குடித்துவிட்டு, தன்னை பைத்தியமாக காதலிப்பவனை காணச்சென்றாள். 

அவள் மாடிப்படியிலிருந்து இறங்கி வருவதை கண் சிமிட்டாமல் அவன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒரு கர்வ புன்னகையுடன் கீழே இறங்கி வந்தவள், அவனை அப்போது தான் பார்ப்பது போல, “ஹே சித்து, வாட் அ சர்ப்ரைஸ்!” என்று கூறி அவனை லேசாக அணைத்து விலகினாள். 

“என் மிஷ்டிக்கு தான் சர்ப்ரைஸ்னா ரொம்ப பிடிக்குமே, அதான் இந்த திடீர் விசிட்!” என்றான் அவளின் ‘சித்து’. 
  
“அதுக்காக இப்படியா?” என்று அவள் வினவினாலும், ‘தனக்காக இவன் எதையும் செய்வான்’ என்ற எண்ணம் மனம் முழுவதும் இனித்தது.

மேலும், சில நிமிடங்கள் தங்களை பற்றிய பேச்சில் கழித்தவர்களுக்கு, அந்த வீட்டின் வேலையாள் சூடான குளம்பியை பரிமாறினார். 

அதைக் குடித்துக் கொண்டிருந்த சித்தார்த், “மிஷ்டி, அன்னைக்கு நம்ம ஹாஸ்பிடல்ல ட்ரீட்மெண்ட் எடுத்தாங்களே, உன் பிரெண்டு… அவங்க இப்போ எப்படி இருக்காங்க?” என்று வினவ, இதமாக நகர்ந்த நொடிகள் சட்டென்று கசந்ததை போல உணர்ந்தாள் மிஷ்டி. 

“இப்போ எதுக்கு அவளைப் பத்தி கேட்குறீங்க?” என்று தடுக்க முயன்றும் வெளிப்பட்ட எரிச்சலுடன் அவள் வினவ, “இல்ல, அவங்க நம்ம ஹாஸ்பிடல்ல இருந்தப்போ தான என்கூட நல்லா பேச ஆரம்பிச்ச, அதான் அவங்க எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க கேட்டேன். ஜஸ்ட் அ பிரெண்ட்லி ஜெஸ்டர். நீ கோபப்படுறதை பார்த்தா, என் மிஷ்டிக்கு ஜெலஸா இருக்கு போலயே!” என்று அவளின் தோளின் மீது கைவைத்து லேசாக அணைத்துக் கொண்டான். 

‘ப்ச் இவன் வேற என்னன்னு புரியாம ஜெலஸ்னு உளறிட்டு இருக்கான்!’ என்று நினைத்தாலும் வெளியே சொல்லாமல், அவன் கூறியதற்கும் மறுப்பு எதுவும் சொல்லாமல், அவன் அணைப்பிற்குள் வாகாக அமர்ந்திருந்தாள்.

“ம்ச், என்னைப் பாரு மிஷ்டி.” என்று அவள் முகத்தை நிமிர்த்தி தன் கண்களை நோக்க செய்தவன், “இந்த ஜென்மத்துல நீதான் எனக்குன்னு ஃபிக்ஸ்ஸாகிட்டேன். இனி, அதை யாராலயும் மாத்த முடியாது. சோ, இந்த மாதிரி விளையாட்டு பேச்சுக்கெல்லாம், நீ தேவையில்லாம டென்ஷனாக கூடாது புரியுதா?” என்று அவன் கூற, ஏனோ மிஷ்டியின் தலை தானாகவே அசைந்தது. 

“ம்ம்ம் குட். இப்போ சொல்லு, அவங்க எப்படி இருக்காங்க? ஏன், கேட்குறேனா, பழைய மெமோரிஸ் இல்லாம, இந்த உலகத்துல சர்வைவ் பண்றது அவ்ளோ ஈஸி இல்ல. அதுவும் இல்லாம, அவங்களுக்கு ஆபத்து வரலாம்னு நீ சொன்னதுனால அவங்க ஐடென்டிட்டியை மாத்தியிருக்கோம். அதான், இப்போ அவங்க எப்படி இருக்காங்கன்னு கேட்டேன்.” என்றான் சித்தார்த். 

“ம்ம்ம் ஆல் குட் சித்து. அவ நல்லா இருக்கா. இப்போ வேலைக்கு போயிட்டு நார்மல் லைஃப் லீட் பண்ணிட்டு இருக்கா.” என்று மிஷ்டி அவனிடம் கூறினாலும், மனதிற்குள்ளே பயம் சிறிய அளவில் தோன்றி மிரட்டியது. 

சுயநலத்திற்காக தான் செய்த செயல்களை சித்தார்த் கேள்வியுற்றால் என்ன ஆகும் என்பதே அந்த பயத்திற்கான காரணம். 

‘ஜென்மம் முழுவதும் நீதான்’ என்று சொன்னவன், தானே அதை பொய்யாக்கி விலகிச் செல்வானோ! 

***** 

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு, தன்னறையின் பால்கனியில் நின்று கொண்டு, இரவு நேர காற்றை ரசித்தபடி, அந்த ஒலிப்பதிவை கேட்டுக் கொண்டிருந்தான் துஷ்யந்த். 

“பூஜி, உண்மையை சொல்லு, நீ எங்க அண்ணாவை லவ் பண்றியா?” 

“எதே! லவ்வா? அடிப்பாவி ரோல் மாடல்னு சொல்லிட்டு இருக்கேன், லவ்னு சொல்லிட்ட! அவரை எனக்கு பிடிக்கும் தான், அதுக்காக லவ்வெல்லாம் இல்ல பா. அந்த ஸ்டார்டம், பப்லிசிட்டி எல்லாம் தூரத்துல இருந்து பார்த்தா நல்லா இருக்கும். ஆனா, அதுக்குள்ள போனா தான் அதுல இருக்க கஷ்டம் தெரியும். இப்போ நீயே எங்க போனாலும், உன்னை ரெகக்நைஸ் பண்ணவங்க, உன்னையே பார்க்குறது உனக்கு அன்ஈஸியா தான இருக்கு. அப்படி ஒரு லைஃப் எல்லாம் எனக்கு வேணாம் பா. என் ஹப்பியோட கை கோர்த்து பட்டப்பகல்ல பீச்ல நடந்தா கூட, அதை யாரும் கண்டுக்காம அவங்க வேலையை பார்த்துட்டு போகணும்!” 

“ஹலோ மேடம் உங்க இமேஜிநேஷனை விட்டு வெளிய வாங்க. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டா, இதான் சாக்குன்னு இப்படி கண்ணை மூடிட்டு கனவுல பேசுற மாதிரி பேசுறியா?” 

“அடிப்பாவி, நீ ஏதோ உங்க அண்ணா லைஃபுக்காக கேட்குறன்னு நானும் சீரியஸா பதில் சொல்லிட்டு இருக்கேன்! ஆனாலும், ஐ லவ் மை ஹீரோ… பட் அஸ் அ ஃபேன்!” 

“உன்கிட்ட இந்த டாப்பிக்கை பத்தி பேசுனா, கூடிய சீக்கிரத்துல பைத்தியம் ஆகிடுவேன்.” 

இத்துடன் அந்த ஒலிப்பதிவு முடித்திருக்க, அதைக் கேட்டவனின் இதழ்கள், அவளின் நினைவில், எப்போதும் போல இன்றும் சிரிப்பில் விரிந்தன. 

***** 

பின்மாலை வேளையில் தன் வீட்டிற்கு திரும்பிய திவ்யான்ஷி, அந்த நாளின் நினைவுகளை கூட திரும்பி பார்க்க முடியாதவாறு சோர்ந்திருந்தாள். அப்படியே நினைத்து பார்த்தாலும் கூட, அவன் தானே அன்றைய நாள் முழுவதும் நிறைந்திருந்தான். அதன் காரணமாகவே, எதையும் யோசிக்காமல், தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள சென்றாள். 

என்ன தான், நினைக்கக்கூடாது என்று மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டாலும், தன் வேலைகள் அனைத்தும் முடிந்ததும், சும்மா இருக்காமல் தனக்கு கூறப்பட்ட விஷயங்களை நோக்கியே நகர்ந்தது அவளின் மனம். 

ஆம், கூறப்பட்ட தகவல்கள் தான்! 

பெரியதொரு விபத்தில், தன்னிலை இழந்து கிடைந்தவளை, அவளின் சொந்தங்கள் கூட விட்டுப்போன போதிலும், நட்பை மதித்து, தனக்கு உதவிய அந்த நல்ல உள்ளம் கூறிய தகவல்களால் தான் இப்போது அவள் துஷ்யந்த்தின் அலுவலகத்தில் வேலைக்கு வந்திருக்கிறாள்.

அவளின் நலனுக்காக, அவளின் அடையாளத்தையே மாற்றியமைக்க கூறியபோதும் அவளின் நட்பை நம்பி தான், அதற்கு சம்மதிக்கவும் செய்தாள். 

அவளின் நம்பிக்கை பொய்த்து போனால், அவளின் எதிர்வினை எவ்வாறு இருக்குமோ? 

அவளின் சிந்தையை ஆக்கிரமித்த துஷ்யந்த்தின் நினைவை என்ன முயன்றும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. 

அவனை முதலில் கண்டபோது உண்டான அதிர்வும், அவனின் அடுத்தடுத்த செயல்களினால் உண்டான கோபமும் கூட அவனைக் கண்டதும் உண்டான மயக்கத்தை வெளிக்காட்டி விடாமல் இருக்க, அவள் போடும் வேஷம் தான் என்பது மற்றவர்களுக்கு தெரியாவிடினும் அவளுக்கு புரியாமல் இருக்குமா? 

மேலும், அவள் அந்த அலுவலகத்தில் சேர்ந்ததற்கான காரணமும் ஒருபுறம் அவளின் மனதை அரிக்க, ‘இனி, அந்த துஷ்யந்த் கிட்டயிருந்து விலகியே இருக்கணும். அப்போ தான், சீக்கிரமா வந்த வேலையை முடிச்சுட்டு கிளம்ப சரியா இருக்கும்!’ என்று தனக்குள்ளே கூறிக் கொண்டவளிற்கு தெரியவில்லை, அடுத்த நாளே அவள் நினைத்ததற்கு மாறாக, அவனுடனே இருப்பது போன்ற சூழ்நிலையை அவளின் நினைவுகளுக்குரியவன் உருவாக்க போகிறான் என்பது!

காதலி வருவாள்…

ஹாய் பிரெண்ட்ஸ்…😍😍😍 இதோ “துஷ்யந்தனின் காதலி” கதையின் ஐந்தாம் அத்தியாயம் போட்டாச்சு… என் கதை வரலாற்றுலயே ஐந்தாவது எபில சஸ்பென்ஸ் ரிவீல் பண்றதுக்கான நேரடி ஹிண்ட் கொடுத்தது இது தான் முதல் முறை…😎😁😂 அது என்னன்னு கண்டுபிடிச்சுட்டா, கமெண்ட்ல சொல்லுங்க…😁😁😁

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Archana

      கண்டுபிடிச்சுட்டேன் தட் பூஜி தான் இந்த திவ்யா🙃🙃🙃 plastic surgery பண்ணி மூஞ்சியே மாத்திட்டாங்க😁😁😁