Loading

அத்தியாயம் 4 

“சார், சைட்ல இன்ஜினியருக்கும் லேபர்ஸுக்கும் ஏதோ பிரச்சனைன்னு போன் வந்துருக்கு. செந்தில்நாதன் சார், கஸ்டமர் மீட்டிங்ல பிஸியா இருக்காரு. அபராஜித் சார் போனும் பிஸியா இருக்கு.” என்று கூற, “ஹ்ம்ம், ஓகே நானே வரேன்.” என்ற துஷ்யந்த் முதலில் அவன் அறைக்கு சென்றான். 

அப்போது செந்தில்நாதனே அவனுக்கு அழைத்து விட்டார். 

“துஷ்யந்த், சைட்ல ஏதோ பிராப்ளம்னு இப்போ தான் தகவல் வந்துச்சு. நான் ***** டீல் சைன் பண்றதுக்காக கஸ்டமர் கூட டிஸ்கஷன்ல இருக்கேன்.” என்று செந்தில்நாதன் கூற, “தெரியும் மாமா. திவ்யான்ஷி சொன்னாங்க. அது மட்டுமில்லாம, அபியும் வேற ஒர்க்ல ஸ்டக்காகி இருக்கான் போல. அதான் நானே போலாம்னு நினைச்சேன்.” என்றான் துஷ்யந்த். 

துஷ்யந்த் அவனின் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால், அவர்களின் உரையாடலை திவ்யான்ஷியும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். 

“நீ எப்படி அங்க போவ, துஷ்யந்த்? பப்லிக் பிளேஸ்… அதுவுமில்லாம இப்படி ஒரு பிராப்ளம் இருக்கப்போ, நீ அதுல இன்வால்வ் ஆகுறன்னு தெரிஞ்சா, மீடியாவும் இதை பெருசு படுத்துவாங்க.” என்று செந்தில்நாதன் கூறியதைக் கேட்டவனிற்கு அவர் கூற்றிலிருந்த உண்மையும் புரியத்தான் செய்தது. 

ஒரு பெருமூச்சுடன், “ஸ்டார்டம் இருந்தா ப்ரைவசி மட்டுமில்ல பிசினஸ் கூட பாதிக்கும் போல!” என்று அலுப்பாக கூறியவன், “இப்போ என்ன பண்றது மாமா?” என்று செந்தில்நாதனிடமே ஆலோசனை கேட்டான். 

“நீ, நம்ம திவ்யான்ஷியை சைட்டுக்கு அனுப்பு. ஷீ இஸ் டேலண்டட். அவ அந்த பிரச்சனையை ஈஸியா ஹேண்டில் பண்ணிடுவான்னு தோணுது.” என்று செந்தில்நாதன் கூற, திவ்யான்ஷிக்கே படபடப்பாக தான் இருந்தது. 

துஷ்யந்த்தோ திவ்யான்ஷி அங்கு தான் இருக்கிறாள் என்பதை எல்லாம் உணராமல், “மாமா, திவ்யான்ஷி எப்படி இதுக்கு…” என்று இழுத்தவன், ஏதோ யோசித்தவனாக, “அவங்க டேலண்டட் தான், நான் இல்லைன்னு சொல்லல. ஆனா, இந்த பிராப்ளமை அவங்க சால்வ் பண்ணுவாங்கன்னு எனக்கு தோணல!” என்றான். 

செந்தில்நாதன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சிலிருந்தவள், அதற்கு மறுமொழியாக துஷ்யந்த் கூறியதைக் கேட்டு மானசீகமாக தலையை சிலுப்பிக் கொண்டாள்.

 ‘அதான, நானெல்லாம் உங்க கண்ணுக்கு டேலண்டட்டா தெரியுறதே ஆச்சரியம் தான். அதுக்கு மேல எக்ஸ்பெக்ட் பண்ணிட முடியுமா?’ என்று யோசித்தவள், மறுநொடியே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, ‘இப்படி சொன்னதுக்காகவே அந்த பிரச்சனையை சரி பண்ணி, உங்க முன்னாடி கெத்தா நிக்கணும், நிப்பேன்!’ என்று சவால் விட்டாள். 

அலைபேசியில் பேசிய செந்தில்நாதனோ, “கிவ் ஹெர் ஏ சான்ஸ் துஷ்யந்த். இது மாதிரி முன்னாடி ஏற்பட்ட சில பிரச்சனைகளை நான் டீல் பண்ணப்போ, ஷீ வாஸ் வித் மீ. அதான் அவளை அனுப்ப சொல்றேன். ஃபர்ஸ்ட் அவ அங்க போய் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணட்டும். அதுக்கு அப்புறம் தேவைப்பட்டா, நாம இங்கயிருந்து கைட் பண்ணிக்கலாம்.” என்றார். 

துஷ்யந்த்திற்கு இந்த ஏற்பாட்டில் அவ்வளவு நாட்டமில்லை என்றாலும், அப்போதைக்கு இதை தவிர வேறு உபாயம் தோன்றாததால், இதற்கு சம்மதித்தான். 

செந்தில்நாதன் திவ்யான்ஷிக்கு தனியே அழைத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஓரளவு விளக்கியிருக்க, அவளும் பிரச்சனை நடக்குமிடத்திற்கு கிளம்ப ஆயத்தமானாள். 

தன்னிடத்திற்கு சென்று தேவையானதை எடுத்துக் கொள்ளும்போது, “வெளிய போறியா திவ்யா? சைட் விசிட்டா?” என்று சந்தியா வினவ, இப்போதைக்கு பிரச்சனையைப் பற்றி வெளியே எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்த திவ்யான்ஷியும், “ஆமா சந்தியா.” என்றதுடன் கிளம்பி விட்டாள். 

செல்லும்முன் துஷ்யந்த்திடம் சொல்லிக்கொள்ள வந்தவளை பெரிதாக கண்டுகொள்ளாமல், தலையை மட்டும் அசைத்தான். 

‘ஹ்ம்ம், இவ்ளோ ஆட்டிட்யூட் இருக்கக்கூடாது! என்னமோ என்னோட கம்பெனி வளர்ச்சிக்காக வேலை செய்யுற மாதிரி அப்படி என்ன ஒரு எக்ஸ்ப்ரேஷன்!’ என்று மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டே தான் சென்றாள். 

காலையில் அவனைப் பார்க்கும்போது ஏற்பட்ட நடுக்கம், தயக்கம் எல்லாம் எங்கு சென்று மறைந்து கொண்டனவோ! 

அவை மட்டுமா மறைந்து கொண்டன, அவள் எதற்கு இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள் என்பதை மறந்து, இதோ அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவளை அறியாமலேயே உழைத்துக் கொண்டிருக்கிறாள். 

***** 

அலுவலக வாகனத்தில் அவள் ஏறும்போது, அவளுடன் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் நிவேஷும் ஏறிக்கொள்ள, திவ்யான்ஷி அவனை கேள்வியாக பார்த்தாள். 

“துஷ்யந்த் சார் தான், உனக்கு துணையா என்னையும் போகச் சொன்னாரு.” என்று கூறி விஷமமாக அவளைப் பார்க்க, அவளால் அச்சமயம் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது. துஷ்யந்த் மட்டும் முன்னே நின்றிருந்தால், அவனை கடிந்திருப்பாளோ! 

நிவேஷ், அந்நிறுவனத்தில் சில ஆண்டுகளாக பணியாற்றி வருபவன். சரியாக கூற வேண்டும் என்றால், பணியாற்றுகிறேன் என்ற பெயரில், அங்கு வேலை செய்யும் பெண்களிடம் வம்பு வளர்ப்பவன். 

வாய்மொழியாகவும், அலைபேசி வழியாகவும் பல தொல்லைகளை கொடுத்து, பெண்களை கஷ்டப்படுத்திப் பார்க்கும் ஒருவித சைக்கோ மனநிலையைக் கொண்டவன். 

இவனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், ஏதோவொரு காரணத்தினாலும், சூழ்நிலையாலும் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்ல தயங்குபவர்களாக இருப்பர். அதனாலேயே, அவன் இதுவரை பிடிபடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். 

திவ்யான்ஷி வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே, அவளின் அலைபேசிக்கு ஆபாசமான செய்திகளையும் படங்களையும் அனுப்பி வைத்திருந்தான். 

அவளோ அடுத்த நாளே, மீண்டும் ஒருமுறை ஆபாச படங்களை அனுப்பி வைத்தால், அவன் மீது புகார் கொடுக்கப் போவதாக மிரட்ட, நிவேஷின் மனம் அவளின் மீது வஞ்சம் வைத்தாலும், வெளியே சற்று அடங்கித்தான் போனான். 

திவ்யான்ஷியும் அதற்கு மேல் அவனிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இப்போதும் கூட இவனுடனெல்லாம் செல்ல வேண்டுமா என்று தான் தோன்றியதே தவிர, அவன் மீது பயமெல்லாம் இல்லை. 

“க்கும், அந்த செந்தில்நாதன் நீ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டவும், இங்க எல்லாம் உன்னோட கண்ட்ரோல்னு நினைச்சியாக்கும்! த்சு, இந்த துஷ்யந்த், உன்னை நம்பாம என்னையும் உன்கூட அனுப்பியிருக்காரே. என்ன செந்தில்நாதனை மாதிரி துஷ்யந்த்தையும் மடக்கிடலாங்கிற உன் பிளான் ஃபெயிலியர் ஆகிடுச்சுன்னு கவலையா இருக்கியா?” என்று இளித்துக் கொண்டு வினவ, அதைக் கேட்ட திவ்யான்ஷிக்கு தான் நாராசமாக இருந்தது. 

‘பாவி, எப்படி பேசுறான்! ச்சே, என்கூட அனுப்புறதுக்கு இந்த மூஞ்சி தான் கிடைச்சதா?’ என்று நிவேஷில் ஆரம்பித்து துஷ்யந்த்தில் முடித்தாள். 

‘என்மேல நம்பிக்கையே இல்லையா?’ என்ற சிந்தனையுடன், ‘இந்த ஹராசர் கூட எப்படி போறது?’ என்ற புலம்பலும் சேர்ந்து கொண்டது. 

அப்போது அந்த வாகனத்தின் காரோட்டியாக வந்த ஈஸ்வர், அவளை சிந்தனைகளிலிருந்து வெளிவரச் செய்தான்.

ஈஸ்வர், தப்பைக் கண்டால் பொங்கிவிடும் குணம் கொண்டவன். அதே சமயம், உதவி என்று வந்தால், யோசிக்காமல் எதையும் செய்பவன். இத்தனை ஏன், ஒருமுறை நிவேஷ் ஒரு பெண்ணிடம் வம்பு வளர்ப்பதைக் கண்டு, அவனை அடிக்க, அதன் பின்னர், அவனைக் கண்டால், சற்று தள்ளியே நின்றுவிடுவான் நிவேஷ்.

அவர்களின் காரோட்டியாக ஈஸ்வர் வந்ததைக் கண்ட நிவேஷிற்கு வியர்த்து வழிய, திவ்யான்ஷியோ நிம்மதி பெருமூச்சு விட்டாள். 

தன்னை சில நொடிகள் தவிக்க விட்ட நிவேஷை பயமுறுத்த வேண்டுமென்றே ஈஸ்வரிடம் பேச்சு கொடுத்தாள். 

“நார்மலா ஜெகதீஷ் அண்ணா தான இந்த காரை எடுப்பாங்க. இன்னைக்கு நீங்க வந்துருக்கீங்க?” என்று திவ்யான்ஷி வினவ, அவளிடம் சிரிப்பை வெளிப்படுத்திவிட்டு, நிவேஷை பார்த்து முறைத்தவாறே, “துஷ்யந்த் சார் தான் அனுப்புனாங்க.” என்றான். 

‘ஹ்ம்ம், இந்தளவுக்காவது தெரிஞ்சுதே!’ என்று மனதிற்குள் சற்று முன்னர் அர்ச்சித்த துஷ்யந்த்திற்கு சற்று ஓய்வளித்து வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். 

***** 

அடுத்த இரண்டு மணி நேரத்தில், யாருடைய உதவியும் இல்லாமலேயே வெற்றிகரமாக அந்த பிரச்சனையை சரி செய்து விட்டாள். நிவேஷ் கூட, அவளின் முடிவெடுக்கும் திறன் கண்டு ஆச்சரியப்பட்டான். 

தன் வேலையை முடித்தவள், துஷ்யந்த்தின் முன்னே நின்றிருக்க, அவனோ அப்போதும் அவளைக் கண்டுகொள்ளாமல், இன்னும் அவனின் அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தான். 

‘ப்ச், அப்படி என்னதான் இருக்கோ அந்த மொபைல்ல!’ என்று திவ்யான்ஷி சலித்துக் கொண்டவள், அதற்கு மேல் பொறுமையில்லாமல்,

“சார்..” என்று கத்தியிருக்க, துஷ்யந்த்தும் அவனின் மோன நிலையிலிருந்து வெளியே வந்து அவளைக் கண்டான். 

விழியாலேயே என்னவென்று அவன் வினவ, “அந்த பிராப்ளம் சால்வாகிடுச்சு.” என்று சிறு மகிழ்ச்சியுடன் கூறினாள். 

தன் மீது நம்பிக்கை வைக்காது அவன் கூறிய வார்த்தைகளை, பொய்யாக்கி விட்டதால் தோன்றிய உற்சாகமோ! 

“சோ? என்ன ஏதாவது அப்ரிசியேஷனை எதிர்பார்க்குறீங்களா மிஸ். திவ்யான்ஷி?” என்றான் துஷ்யந்த். 

அதில் சற்று மட்டுப்பட்டிருந்த எரிச்சல் மீண்டும் உயர, இடவலமாக தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். 

அப்போதும் அவளை சும்மா விடாமல், “மார்னிங் நடந்த டிஸ்கஷனோட மீட்டிங் மினிட்ஸை மெயில் பண்ணிடுங்க.” என்று வேலையை கூறியே அனுப்பி வைத்தான். 

‘இதுக்கு அவன் ரூமுக்கு போகமலேயே இருந்துருக்கலாம்!” என்று சலித்துக் கொண்டாள் திவ்யான்ஷி. 

***** 

இங்கு, துஷ்யந்த்தின் மனநிலையோ, அவளின் மனநிலைக்கு எதிர்பதமாக இருந்தது. அவளின் முகபாவனைகள் அனைத்தும் அவனிற்கு சுவாரசியத்தையே தந்தது. 

அதிலும், அவளின் மீது எழுந்த நம்பிக்கையின்மையை தகர்த்து அவள் வெற்றி பெற்றதை தன்னிடம் உணர்த்தும் வகையில், அவன் அறைக்கு வந்து நின்றதையெல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். 

“பார்க்கத்தான் மெச்சூர்ட், ஆக்டிவிட்டீஸ் எல்லாம் இன்னும் சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு! பட், ஷீ வில் பீ அன் இன்ட்ரெஸ்டிங் அசிஸ்டெண்ட்!” என்று கூறி சிரித்துக் கொண்டான். 

அது மட்டுமல்லாமல், காலையில் அவளின் மீது தேவையில்லாமல் தோன்றிய கோபம் கூட இப்போது இல்லை. தாமதமாக வந்தாள் என்பதால் அவளின் திறமை மீது உண்டான சந்தேகமும், சற்று முன்னர் ஏற்பட்டிருந்த பிரச்சனையை அவள் தீர்த்து வைத்த விதத்தை அறிந்த பின்னர் காணாமல் போயிருந்தது. 

ஆனால், மாறாமல் இருந்தது என்னவோ அவளின் மீதான அவனின் சலனம் தான். அதையும், ‘இப்போ இருக்க சூழ்நிலைல இந்த ஆராய்ச்சி எல்லாம் அவசியமா?’ என்று தனக்குத்தானே கேட்டு, அந்த ஆராய்ச்சியை தற்காலிகமாக கிடப்பில் போட்டு விட்டான். 

இதெல்லாம் நடந்ததென்னவோ, கலந்துரையாடல் முடிந்த சிறு இடைவேளையில் தான். அவன் தன் அலைபேசியில் கேட்டதென்னவோ இளையராஜாவின் பாடல்களை தான். ஆனால், விதி செய்த சதியோ, இல்லை அவனைப் பற்றி சொல்லப்பட்ட தகவல்களாலோ, திவ்யான்ஷி அதை வேறு விதமாக பார்த்திருந்தாள். 

***** 

திவ்யான்ஷி தன்னிடத்திற்கு வந்ததும், “ஹே திவ்யா, கலக்கிட்ட போ!” என்று கூறியபடி வந்தாள் சந்தியா. 

‘அதுக்குள்ள நியூஸ் வந்துடுச்சா?’ என்று நினைத்த திவ்யான்ஷி எதுவும் கூறாமல் சிரிக்க மட்டும் செய்தாள். 

ஆனால், சந்தியாவோ அவளை சும்மா விடும் நிலையில் இல்லை போலும்! 

“துஷ்யந்த் சார் வந்த அன்னைக்கே இப்படி செஞ்சு அவரை இம்ப்ரெஸ் பண்ணிட்ட போல?” என்று சந்தியா விஷமமாக வினவ, அவளின் ‘இம்ப்ரெஸ்’ என்ற வார்த்தை பிரயோகம் திவ்யான்ஷியை மகிழ்விக்கவில்லை. 

“சந்தியா, இது என் வேலை. அந்த வேலையை செஞ்சு உங்க சாரை இம்ப்ரெஸ் பண்ணனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல!” என்று நறுக்கென்று கூறிவிட்டாள் திவ்யான்ஷி. 

அதைக் கேட்ட மற்றவளின் முகம் தான் வாடிப்போனது.

 “திவ்யா, நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நீ சீரியஸா எடுத்துக்காத.” என்று அவள் கூற, திவ்யான்ஷிக்கும் தான் செய்தது அதிகப்படியான எதிர்வினையோ என்று தோன்றியது. 

“கூல் சந்தியா. நானும் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன். லெட்ஸ் லீவ் திஸ் டாப்பிக்.” என்றாள். 

“ம்ம்ம், இருந்தாலும் நீ கம்பெனிக்காக இந்தளவுக்கு உழைக்குற. உன்னை மாதிரி ஒரு அசிஸ்டெண்ட் இருந்தா போதும், கம்பெனி எங்கயோ போயிடும்.” என்று கூறி, மேலும் சில பல பாராட்டுக்களை வழங்கிவிட்டே தன்னிடத்திற்கு சென்றாள் சந்தியா. 

ஆனால், திவ்யான்ஷியின் நினைவு எல்லாம், அவள் கூறிய ‘கம்பெனிக்காக உழைக்குற’ என்பதிலேயே நின்றுவிட்டது. அவளின் மனமோ, அன்றைய நாளின் நிகழ்வுகளை அசைபோட்டது.

‘நான் எதுக்கு இங்க வந்துருக்கேங்கிறதையே மறந்துட்டு, என்ன வேலை பார்த்துட்டு இருக்கேன். இதுல, அவன் என் மேல நம்பிக்கை வைக்காதது ஒன்னு தான் இப்போ குறை!’ என்று மனதிற்குள்ளேயே சலித்துக் கொண்டாள். 

அப்போது, அந்த இடம் சற்று பரபரப்பாக காணப்பட, தன் சிந்தனையிலிருந்து வெளியே வந்தவள் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள். 

“நம்ம நிவேஷுக்கு என்குவெரியாம்! ஹராஸ்ட்மெண்ட் கேஸ் போல.” என்ற செய்தி காட்டுத்தீயாக பரவ ஆரம்பித்தது. 

அதைக் கேட்டதும் திவ்யான்ஷிக்கு ஆச்சரியமாக இருந்தது. இது போல நடக்காதா என்று அவனுடன் வாகனத்தில் செல்லும்போது கூட யோசித்தவளாகிற்றே! 

அப்போது தான், அவள் துஷ்யந்த்தின் அறையிலிருந்து வெளியேறும்போது, தன்னை இடிப்பது போல நிவேஷ் உள்ளே சென்றது நினைவிற்கு வந்தது. 

அவள் மூளைக்கு வேலை கொடுக்கும் அதே வேளையில், அதை எளிதாக்க இன்னும் சில தகவல்கள் அவளை வந்தடைந்தன. 

“சரியான சேடிஸ்ட் அந்த ஆளு. இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுங்க அவன்கிட்ட சிக்கி கஷ்டப்பட்டிருக்காங்க. ஆனா, அவன் சிக்க சரியான ஆதாரம் கிடைக்கல. இன்னைக்கு எந்த பொண்ணு கிட்ட வம்பு வளர்த்தானோ, ஏதோ ஆதாரம் கிடைக்கவும் மொத்தமா தூக்கியிருக்காங்க!” 

இதைக் கேட்டதும் ஈஸ்வரின் நினைவும் எழ, ‘இதுக்காக தான் ஈஸ்வர் இன்னைக்கு டிரைவரா வந்தாரோ? அப்போ அந்த ஆதாரம் அவன் என்னோட பேசுனதா?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். 

அந்நேரம் ஈஸ்வர் உணவகத்திற்கு செல்வதை கண்டவள், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், அவனைப் பின்தொடர்ந்தாள். 

***** 

ஈஸ்வர் தனக்கான குளம்பியை எடுத்துக் கொண்டு ஒரு மேஜையில் அமர, அவன் முன்னே காலியாக இருந்த நாற்களியில் திவ்யான்ஷியும் அமர்ந்து கொண்டாள். 

“ஈஸ்வர், இன்னைக்கு நீங்க ஏன் டிரைவரா வந்தீங்க?” என்று வினவ, முதலில் அங்கு அவளைக் கண்ட அதிர்ச்சியில் இருந்தவன், அவளின் கேள்வியைக் கேட்டு, சிறு சிரிப்புடன், “அதான் அப்போவே சொன்னேனே, துஷ்யந்த் சார் தான் போக சொன்னாருன்னு.” என்றான். 

மறைமுகமாக கேட்டால், அவனிடமிருந்து பதில் வராது என்று தெரிந்து கொண்ட திவ்யான்ஷி, “ஓஹ், அப்போ இன்னைக்கு கார்ல கேமரா ஃபிக்ஸ் பண்ண சொல்லி அந்த ராஸ்கல் பேசுனதை ரெக்கார்ட் பண்ண சொன்னதும் உங்க சார் தானா?” என்று திவ்யான்ஷி வினவ, ஈஸ்வரோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல், “உங்களுக்கு அப்படி தோணுச்சுன்னா, அப்படியே நினைச்சுக்கோங்க!” என்றான். 

‘உஃப் கேள்வி கேட்டா பதிலை சொல்றாங்களா?’ என்று சலித்துக் கொண்டாலும், நிவேஷுக்கு எதிரான துஷ்யந்த்தின் நடவடிக்கையை வரவேற்கவே செய்தாள். 

அவள் அங்கிருந்து செல்ல முற்பட, “என்ன மேடம், உங்க டவுட்ஸ் க்ளியரா?” என்று ஈஸ்வர் வினவ, “ம்ம்ம் அது க்ளியராகிடுச்சு. இந்த என்குவரிக்கு அப்பறம் என்ன ஆகும்?” என்று பதில் கேள்வி கேட்க, “இத்தனை நாள் கிடைக்காத ஆதாரம் இப்போ கிடைச்சுருக்கு. சோ, அதிகபட்சமா டிஸ்மிஸே பண்ண சான்ஸ் இருக்கு.” என்றான் ஈஸ்வர். 

“ஓஹ்!” என்றவள் பின் ஏதோ கேட்க வந்து மீண்டும் அமைதியாகிவிட, “ஏதோ டவுட் இன்னும் இருக்கு போல. பரவால கேளுங்க!” என்று ஈஸ்வர் ஊக்க, “கேட்டா மட்டும் சொல்லவா போறீங்க!” என்று முணுமுணுத்தாள். 

“நீங்க மைண்ட்வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டீங்க!” என்று நமுட்டுச் சிரிப்புடன் ஈஸ்வர் கூற, “கேட்கட்டும்னு தான் சத்தமா சொன்னேன். அது சரி, அவன் என்கிட்ட வாலாட்டுனான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள். 

“சார் தான் சொன்னாரு.” என்று அவன் கூறி முடிக்கவில்லை, “இதுக்கும் உங்க சார் தான் காரணமா!” என்று வெளிப்படையாகவே சலித்துக் கொண்டாள். 

அதன்பின்னர், சில நிமிடங்கள் நிவேஷ் பற்றிய பேச்சை பேசிய பின்னர், இருவரும் தங்களின் வேலையை பார்க்க சென்றனர். 

‘துஷ்யந்த்திற்கு நிவேஷ் தன்னிடம் வம்பு செய்த விஷயம் எப்படி தெரியும்’ என்ற கேள்வியை திவ்யான்ஷியும் கேட்கவில்லை, ஈஸ்வரும் சொல்லவில்லை. 

***** 

“அவரு ஃபீல்டுக்குள்ள வந்தாலே ஒரே கூஸ்பம்ப்ஸ் மொமெண்ட்ஸ் தான் அஸ்மி. பேட்டிங் பண்றப்போ ஹெல்மெட்டையோ, ஃபீல்டிங் பண்றப்போ க்ளோவ்ஸையோ கழட்டுற நேரத்துல, ப்பா மனுஷன் எவ்ளோ ஃபயரா இருக்காரு. சினிமா ஹீரோஸ் எல்லாரும் தோத்தாங்க போ! தலைவரு கிட்ட பிடிச்சதே, அந்த பார்வை தான். ஷார்ப் அண்ட் அக்ரஸிவ்… ‘வாட் ஏ மேன்’னு பொண்ணுங்க ஜொள்ளு விடுற அளவுக்கு சார்மிங் பெர்சனாலிட்டி. ஹேண்ட்ஸம் அட் தி சேம் டைம் இன்டெலிஜெண்ட் டூ… இப்படி இருந்தா அடிக்கடி கிசுகிசு வரத்தான் செய்யும். அதுக்காக என் முன்னாடியே என் ஹீரோவை பத்தி குறை சொல்லுவியா!” 

“அடியேய் பூஜி, இப்போ நீ வர்ணிச்சுட்டு இருக்குறது எங்க அண்ணா டி!” 

“வீட்டுக்குள்ள இருக்க வரைக்கும் தான் உனக்கு அண்ணா. இப்போ நீ குறை சொன்னது, பப்லிக் ஃபிகர், தி கிரேட் ‘துஷ்யந்த்’தை. அது மட்டுமில்லாம, அழகை ரசிக்கிறது ஒன்னும் தப்பில்லையே!” 

“பூஜி, உண்மையை சொல்லு, நீ எங்க அண்ணாவை லவ் பண்றியா?” 

தனக்கு ஏதோ அழைப்பு வர, அலைபேசியில் ஒலித்துக் கொண்டிருந்த ஒலிப்பதிவை நிறுத்தி அழைத்தது யாரென்று பார்த்தாள் அஸ்மிகா. 

இரவு நேர காற்றை ரசித்தபடி, இதே ஒலிப்பதிவை தான் துஷ்யந்த்தும் கேட்டுக் கொண்டிருந்தான்.

காதலி வருவாள்…

ஹாய் பிரெண்ட்ஸ்…😍😍😍 போன எபிக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்த எல்லாருக்கும் நன்றி…😍😍😍 இதோ அடுத்த எபி போட்டாச்சு… படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க…😁😁😁

கதை எப்படி போகுது? எங்கயாவது ட்ரேக் பண்ற மாதிரி இருக்கா? இதுவரைக்கும் படிச்சவங்க உங்க யூகத்தையும் சொல்லுங்க… தெரிஞ்சுக்குறேன்…😉😉😉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்