அத்தியாயம் 2
அன்றைய நாள் திவ்யான்ஷிக்கு மோசமான நாளாக இருக்கக்கூடும் என்பதை அவள் அறியவில்லை போலும். காலையிலேயே யாரை வெறுக்கிறாளோ, வெறுப்பதைப் போல நினைத்துக் கொண்டிருக்கிறாளோ, அவனை தொலைக்காட்சியில் பார்த்தது சற்று படபடப்பாகவே இருந்தது. என்னதான், அவன் அலுவலகத்தில் வேலை செய்கிறாள் என்றாலும், அவனை இதுவரை அங்கு நேரில் கண்டதில்லையே.
அதனால் ஏற்பட்ட பரபரப்பை தணிக்க, எப்போதும் நாடும் கடவுளின் பாதத்தையே சரணடைந்தாள். அவளின் வாழ்க்கையில், இதுவரை நேர்ந்த இழப்புகளை வைத்து பார்த்தால், மற்றவர்களாக இருந்தால், கடவுளின் புறம் திரும்பியிருப்பார்களோ என்னவோ! ஆனால், திவ்யான்ஷி மற்றவர்களைப் போல அல்லவே!
அனைவரும் கைவிட்ட போதும் கூட, தோழியை துணையாக அனுப்பியது அவள் கும்பிடும் கடவுள் தான் என்பதை தீர்க்கமாக நம்பினாள். அதுவே, அவளின் கஷ்டங்களையும், கவலைகளையும் கடவுளின் பாதத்தில் சமர்ப்பிக்க தூண்டியது. இப்போது கூட தன் மன அமைதி வேண்டியே கோவிலுக்கு சென்றாள்.
அது சாலையிலிருந்து சற்று ஒதுங்கியிருந்த சிறு கோவில் என்பதால், ஒன்றிரண்டு பேரைத் தவிர யாரும் இருக்கவில்லை.
அவள் வழக்கமாக வரும் கோவில் என்பதால் அங்கிருக்கும் அர்ச்சகரும் அவளிற்கு புன்சிரிப்பை பரிசாக அளித்துவிட்டு பூஜை செய்ய ஆரம்பித்தார். கருவறையை நோக்கியவளின் கண்கள் சிலை வடிவில் அமர்ந்து தன்னையே சாந்தமாக நோக்கிக் கொண்டிருக்கும் அம்மனின் முகத்திலேயே நிலைத்தன.
வேறு வேண்டுதல்களை எல்லாம் அவள் நினைக்கக் கூட இல்லை. இதிலும் அவள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவள் தான். அவள் கோவிலில் இருக்கும் ஒரு நொடி கூட தனக்காக வேண்டிக் கொள்ள மாட்டாள்.
கவலை என்றதும் நெருங்கிய ஒருவரிடம் எப்படி மனதிலுள்ள பாரத்தை இறக்கி வைக்கிறோமோ, அதைப் போலவே தன் கஷ்டங்களை கொட்டும் இடமாகவே கோவிலையும் அதில் உறைந்திருக்கும் அம்மனையும் கண்டாள்.
ஒருவேளை, அவள் தன் வாழ்வின் முதல் முறையாக கடவுளிடம் ஒன்றைக் கேட்டு, அது கிடைக்காமல் போனதால் உண்டான ஏமாற்றம், அவளை அதற்கு மேலும் எதையும் கேட்க தூண்டவில்லையோ! ஆனால், அந்த சம்பவத்தினால் தான், எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்றுக்கொண்டாள் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.
மனது எதையோ நினைக்கத் துவங்கும் வேளையில், தீபாராதனை தட்டுடன் அங்கு வந்த அர்ச்சகர், அவளின் எண்ணங்களை கலைத்தார்.
அதன்பின்னர், பிரகாரத்தின் ஓரத்தில் அமர்ந்து கண்களை மூடியவள், அவள் வணங்கும் கடவுளிடம் தன் வழக்கமான உரையாடலை மனதிற்குள் நிகழ்த்தினாள்.
‘ஹ்ம்ம், எதுலயிருந்து ஆரம்பிக்க? ச்சே, உனக்கு தான் எல்லாமே தெரியுமே! அப்பறம் நான் என்ன புதுசா சொல்லப்போறேன்? சில நேரம் எனக்கே நான் செய்யுறது தப்போன்னு தோணுது! ஷர்மி சொல்ற மாதிரி ஆழம் தெரியாம காலை விடுறேனோ! ஒதுங்கியே இருந்துருக்கணுமோ? எனக்கு அவரை நினைச்சுக் கூட பயமில்ல. ஆனா, என் மனசை நினைச்சு தான் பயமே. அவரைப் பார்த்ததும் எனக்குள்ள உண்டாகுற உணர்வுகள், என்னோட இலட்சியத்தை பாதிச்சுடுமோன்னு பயமா இருக்கு.’ என்று புலம்பியவள், ஒருமுறை கூட, ‘எனக்கு ஏன் இவ்ளோ கஷ்டத்தை கொடுத்த?’ என்று வினவவில்லை. மாறாக, ‘என்ன கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்குற சக்தியை தா!’ என்றே கேட்டுக் கொண்டாள்.
“என்ன மா நீ இன்னும் கிளம்பலையா?” என்று அர்ச்சகரின் குரலில் கண்களைத் திறந்தவள் தன் கைக்கடிகாரத்தைக் கண்டதும் தான் நேரமாகி விட்டதே தெரிந்தது.
அவசரமாக அர்ச்சகருக்கு சிரிப்புடன் கூடிய தலையசைப்பை வழங்கியவள், கோவிலிலிருந்து வெளியே வந்து தன் இருசக்கர வாகனத்தை கிளப்பினாள்.
*****
அன்று எப்போதும் இல்லாமல் சற்று நேரம் கடந்தே அலுவலகத்திற்கு வந்தாள் திவ்யான்ஷி. உள்ளே நுழையும்போது, அலுவலக வாசலில் காத்திருந்த துஷ்யந்த்தின் ரசிகர்களை பார்த்தும் கூட, அவர்களை சட்டை செய்யாமல் உள்ளே சென்றாள்.
இது இன்று மட்டும் நடக்கும் சம்பவம் இல்லையே! அவன் இல்லாத சமயம் கூட, இப்படி சிலர் வாசலில் காத்திருப்பதைக் கண்டிருக்கிறாளே. அதனாலேயே அவர்களின் காத்திருப்பை பெரிதாக எண்ணவில்லை.
அலுவலகத்திற்குள் நுழைந்ததும் அவள் முதலில் கண்டது, அங்கு அனைவரும் அமைதியாக அவரவர்களின் வேலையை செய்து கொண்டிருந்ததை தான்.
‘செந்தில்நாதன் சார் வந்திருப்பாரோ?’ என்று நினைத்தாலும், அவர் வந்தாலும் இவ்வளவு அமைதியாக இருக்க மாட்டார்களே என்றும் எண்ணிக் கொண்டே தன் மேசைக்கு சென்றாள்.
அப்போது அவள் மேசைக்கு அருகில் அமர்ந்திருக்கும் சந்தியா, “ஹே, என்ன இன்னைக்குன்னு பார்த்து லேட்டா வந்துட்ட?” என்று திவ்யாவிடம் கிசுகிசுத்தாள்.
திவ்யான்ஷியோ ஒன்றும் புரியாமல், “ஏன் இன்னைக்கு என்ன?” என்று வினவ, “நம்ம பாஸ் வந்துருக்காரு.” என்று சந்தியா சொல்வதற்குள், அவள் இடத்திலிருந்த இன்டர்காம் ஒலியெழுப்பியது.
செந்தில்நாதன் தான் திவ்யாவை அறைக்குள் வருமாறு கூறியிருந்தார். அவரும் துஷ்யந்த் வந்ததை தெரிவிக்கவில்லை.
தாமதமாக வந்ததே திவ்யாவிற்கு சற்று அசௌகரியமாக இருக்க, வந்தவுடன் செந்தில்நாதன் அழைத்ததும் சந்தியாவிடம் கூட சொல்லிக் கொள்ளாமல், ‘எம்.டி’ என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்தாள்.
‘பாஸ் வந்ததை சொல்றதுக்குள்ள உள்ள போயிட்டாளே! ஒருவேளை செந்தில்நாதன் சார் சொல்லியிருப்பாரு.’ என்று நினைத்துக் கொண்டு தன் வேலைகளை பார்க்க துவங்கினாள் சந்தியா.
வழக்கம் போல ஏதோ வேலை சொல்வதற்கு தான் செந்தில்நாதன் அழைத்திருக்கிறார் என்று எண்ணிய திவ்யா அந்த அறையின் கதவை லேசாக திறந்து, “மே ஐ கம் இன் சார்?” என்று வினவ, “எஸ் கம் இன்.” என்று அவள் குரலுக்கு எதிரொலியாக ஒலித்த கம்பீர குரலைக் கேட்டதும் உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள். இத்தனைக்கும் அவன் முகத்தை இன்னும் பார்க்கவில்லை.
குரலை வைத்தே அவன் அடையாளத்தை கண்டுபிடித்தவளிற்கு, சற்று நேரம் முன்பு கோவிலுக்கு சென்று தணிய வைத்திருந்த பதட்டம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டதைப் போல இருந்தது.
அவன் இன்றே அலுவலகத்திற்கு வருவான் என்று எதிர்ப்பார்க்கவில்லையோ!
அவன் அறைக்குள் தான் இருக்கிறான் என்ற செய்தி உள்ளே வரும் முன்பே கிடைத்திருந்தால் கூட சற்று சுதாரித்திருப்பாளோ!
எத்தனை நேரம் வெளியிலேயே நிற்க முடியும்? மெதுவாக உள்ளே செல்ல, அவள் முதலில் கண்டது, அந்த அறையின் மத்தியிலிருந்த பெரிய சுழல்நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்த துஷ்யந்த்தை தான்.
வாசலில் நிழலாட துஷ்யந்த்தும் சரியாக அதே நேரம் அவளைப் பார்க்க, இருவரின் கண்களும் முட்டிக்கொண்டன. அந்த ஒரு நொடி இருவரையும் கட்டிப்போட்டிருக்க, அவர்களின் விழிவழி மோதலை அறியாத செந்தில்நாதன், “என்ன மா அங்கேயே நின்னுட்ட? உள்ள வா.” என்று திவ்யாவை அழைத்தார்.
அவரின் குரலில் தான் இருவரும் தங்களின் மோன நிலையிலிருந்து வெளிவந்தனர். ஒரு ஜீவனின் அதிர்ச்சியையும், மற்றொரு ஜீவனின் ஆச்சரியத்தையும் செந்தில்நாதன் அறியவில்லை என்றாலும் மற்ற இருவரும் அறிந்து தான் இருந்தனர்.
‘இந்த பொண்ணு இங்க எப்படி? நான் தான் கண்ணு திறந்து வச்சுகிட்டே கனவு காணுறேனோ!’ என்று நினைத்தவன் அடுத்த நொடியிலேயே தெளிந்து அவள் தன்முன் நிற்பது நிஜம் தான் என்பதை உணர்ந்து கொண்டான். ஏனோ அவளைக் காணும்போது உள்ளுக்குள் எழும் பரபரப்பை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனினும், முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டாமல் இருக்க பழகியிருந்ததால், அவனின் முகம் நிர்மலமாகவே இருந்தது. ஆனால், திவ்யாவினால் என்ன முயன்றும் அந்த கலையை கையாள முடியவில்லை.
இருவரும் பேசாமல் இருப்பதை உணர்ந்த செந்தில்நாதன் தான் மீண்டும் பேசினார்.
“ஏன் மா இவ்ளோ டென்ஷனா இருக்க?” என்று அவர் வினவ, திவ்யாவோ அவரை சமாளிப்பதாக எண்ணி, “இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிடுச்சு சார். அதான் கொஞ்சம் டென்ஷனாகிடுச்சு.” என்று சிறுகுரலில் மன்னிப்பு கேட்கும் பாவனையில் கூறினாள்.
அவளின் பார்வை செந்தில்நாதனிடம் இருந்தாலும், துஷ்யந்த் அவளையே நோக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து தான் இருந்தாள். அதுவே அவளின் சிறிதாகிவிட்ட குரலுக்கு காரணமோ!
அத்தனை நேரம் மனதிற்குள் சுவாரசியமாகவும் வெளியே அதைக் காண்பித்துக் கொள்ளதாவாறும் பார்த்துக் கொண்டிருந்த துஷ்யந்த்திற்கு தான் சப்பென்று ஆகிவிட்டது.
‘நேரம் தாழ்த்துவது’ என்பது அவனிற்கு சற்றும் பிடிக்காத குணமல்லவா!
“இவங்களை தான் நீங்களும் அபியும் புகழ்ந்து பேசுனீங்களா மாமா?” என்று நக்கலாக கேட்க, அவன் சட்டென்று அப்படி பேசுவான் என்று எதிர்பார்க்காததால் இருவரும் திகைத்து அவனைக் கண்டனர்.
வார்த்தைகளை உதிர்த்தவனிற்கு கூட, பேசிய பின்னர் தான் ‘ஏன் அவ்வாறு பேசினோம்’ என்று இருந்தது.
என்ன தான் நேரம் கடந்து வருவது பிடிக்காவிட்டாலும், அவன் எப்போதும் இது போல முகத்தில் அடிப்பதைப் போன்றோ, அதைக் காரணமாக வைத்து அவர்களின் திறமையை குறைத்தோ பேசியதில்லை.
இது செந்தில்நாதனிற்கும் புரிந்தது. எனினும், திவ்யாவின் முன் அதைக் கேட்க விரும்பாததால், அவன் கேள்வியிலிருந்த நக்கலை விடுத்து, அதற்கு பதில் கூற ஆரம்பித்தார்.
“ஆமா பா, இந்த பொண்ணை தான் உனக்கு செக்ரெட்டரியா செலக்ட் பண்ணியிருக்கேன். இவங்க பேரு திவ்யான்ஷி. நம்ம மிஷ்டியோட பிரெண்டாம்.” என்று மேலும் சில தகவல்களை கூற, அவனிற்கோ அதிலிருந்த ஒன்று மட்டும் மனதில் நன்றாக பதிந்து அவளைப் பார்த்து கேலியாக உதட்டை வளைக்க தூண்டியது.
ஏற்கனவே, அவனின் நக்கலான கேள்வி திவ்யான்ஷிக்கு தலையிறக்கமாக இருந்தது. இதில் அவனின் கேலியான சிரிப்பும் சேர்ந்து கொள்ள, அவனைக் கண்டு பயந்த தருணங்கள் மறைந்து, அவனிற்கு பதிலடி தரும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
“நீ ஏதாவது கேள்வி கேட்கணும்னா கேட்டுக்கோ துஷ்யந்த்.” என்று கூறிய செந்தில்நாதனிற்கு அலைபேசியில் அழைப்பு வர, அதை எடுத்துக் கொண்டு அந்த அறையின் ஒரு மூலைக்கு சென்றார்.
அவர் சென்றபின்னர், அவளைப் பார்த்து, “உட்காருங்க மிஸ். திவ்யான்ஷி.” என்று அமர்த்தலாக கூற, உள்ளுக்குள் கனன்ற கோபத்தை மிகவும் முயன்று வெளிக்காட்டாமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததும், கேள்விகளை வரிசையாக அடுக்கி அவளைத் திணற வைத்தான் துஷ்யந்த்.
அவள் படிப்பில் ஆரம்பித்து, முதல் நாள் வேலை வரை அனைத்தையும் ஒரே நாளில் தெரிந்து கொள்வதைப் போன்று இருந்தன அவனின் கேள்விகள்.
முதலில் பதில் சொல்வதற்கு சிரமப்பட்ட திவ்யான்ஷி, அவன் வேண்டுமென்றே தான் அந்த கேள்விகளைக் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு, தன்னைத் தானே சமன்படுத்திக் கொண்டு அவனிற்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள்.
இருவரின் கேள்வி – பதில் நேரம் ஒரு முடிவிற்கு வருவதைப் போல தெரியாததால், செந்தில்நாதனே குறுக்கிட்டு இருவரையும் சற்று அமைதி படுத்தினார்.
“விட்டா ரெண்டு பேரும் கேள்வி பதில்லயே இன்னைக்கான நேரத்தை முடிச்சுடுவீங்க போல! துஷ்யந்த், எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, நீ இங்க பார்த்துக்கோ. இன்னும் கொஞ்ச நேரத்துல அபியும் வந்துடுவான்னு நினைக்குறேன்.” என்றவர், திவ்யான்ஷியிடம் திரும்பி, “நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து மீதியை சொல்லு மா.” என்றார்.
அவளின் சோர்ந்த முகம், துஷ்யந்த்தின் கண்களிலும் விழுந்ததால், அவன் எதுவும் மறுத்து கூறவில்லை. அவளும், அவனின் மறுமொழிக்காக காத்திருந்து, அவன் பார்வையை ஆமோதிப்பாக ஏற்றுக் கொண்டே அங்கிருந்து விடைபெற்றாள்.
திவ்யான்ஷி வெளியே சென்றதும், “துஷ்யந்த், உனக்கு அந்த பொண்ணை செக்ரெட்டரியா அப்பாயின்ட் பண்ணது பிடிக்கலையா? அப்படி ஏதாவதுன்னா என்கிட்டயே சொல்லியிருக்கலாமே! ஏன் இப்படி உன்னோட கேள்விகளால அந்த பொண்ணை துளைச்சு எடுத்துட்ட?” என்று மெல்லிய குரலில் வினவினார் செந்தில்நாதன்.
“ச்சே, அப்படியெல்லாம் எதுவுமில்ல மாமா. ஜஸ்ட் அவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பார்க்க தான் அப்படி கேட்டேன்… என்னோட செக்ரெட்டரியா இருக்கணும்னா, பொறுமை ரொம்ப அவசியம். என்ன தான் சீக்ரெட்டா வச்சுருந்தாலும், என்னோட ஃபேன்ஸ், வெல்விஷர்ஸ்னு நிறைய பேரு எனக்கு கான்டேக்ட் பண்ண முயற்சிப்பாங்க. சோ, அவங்களையும் கஷ்டப்படுத்தாம, என்னோட வேலையையும் பாதிக்காம அவங்களை சமாளிக்க தெரியணும். அதுக்கு தான் இந்த டெஸ்ட்.” என்று சமாளித்து விட்டான்.
பின்னே, ‘அவளைக் கண்டால் நான் தடுமாறுகிறேன். அதனால் ஏற்படும் உணர்வுகளை மறைக்கவே அவளிடம் இப்படி நடந்து கொள்கிறேன்.’ என்றா கூற முடியும்!
“ஹ்ம்ம், ஆனாலும் உன்னோட ஃபேன்ஸ் பண்ற அலப்பறைகள் தாங்க முடியல!” என்று கூறிய செய்தில்நாதனின் குரலில் சலிப்பு இருந்தாலும், அவரின் விழிகளோ தன் முன்னே வானளவு புகழிற்கு சொந்தக்காரனாக அமர்ந்திருக்கும் தன் மருமகனை வாஞ்சையுடன் பார்த்தன.
“இது மட்டும் என் ஃபேன்ஸ் காதுல விழுந்துச்சு, அவ்ளோ தான்.” என்று விளையாட்டாக மிரட்டிக் கொண்டிருக்கும்போதே, “உனக்கென்னப்பா, நீ சும்மா சுவத்துல சாஞ்சு நின்னா போட்டோ போட்டா கூட அது வைரலாகும். லைக்ஸ், கமெண்ட்ஸ், ஷேர்ஸ்னு வியூஸ் பிச்சுக்கிட்டு போகும். ‘புகைப்படம் போட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் ட்ரெண்டிங்’னு நியூஸ்ல கூட வரும்!” என்று கூறியவாறே உள்ளே நுழைந்தான் அபராஜித்.
“உனக்கு என்ன டா அதுல பொறாமை?” என்று சிரித்துக் கொண்டே வினவினான் துஷ்யந்த்.
“பின்ன, உன் ஒரே ஒரு பெஸ்ட் பிரெண்டுன்னு இவ்ளோ வருஷமா உன்கூட குப்பை கொட்டிட்டு இருக்கேன், ஒரு தடவையாச்சும், உன்கூட நடிக்குற நடிகைகள் கிட்ட இண்ட்ரோ கொடுத்துருக்கியா டா? உனக்கு ஆட் சூட்டிங் இருக்குறப்போ எல்லாம், ஆர்வமா உன்னைப் பார்க்க வந்தா, பிசினஸ் மீட்டிங், பிரெஸ் ரிலீஸ்ன்னு எதையாவது சொல்லி என்னை அங்கயிருந்து கிளப்பி விட்டுடுறது!” என்று கோபமாக இருப்பதைப் போலவே பேசினான் அபராஜித்.
“என்னது, என்னைப் பார்க்க வந்தியா? நீ எதுக்காக யாரைப் பார்க்க வந்தன்னு தெரிஞ்சதுனால தான, உன்னை கிளப்பிவிட்டதே!” என்ற துஷ்யந்த்தை ‘துரோகி’ என்பது போல பார்த்தான் அபராஜித்.
இருவரின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த செந்தில்நாதன் தான், “அடச்சே போதும் நிறுத்துங்க. ஒண்ணுமே இல்லாத விஷயத்தை இவ்ளோ பில்ட்-அப் பண்ணியா பேசுவீங்க? ஒருத்தனுக்கும் காலாகாலத்துல லவ் பண்ணி கல்யாணம் பண்ணி வாழ்க்கையை என்ஜாய் பண்ற எண்ணம் இல்ல!ஆனா, இந்த மாதிரி சீன் போடுறதுல மட்டும் குறைச்சல் இல்ல.” என்றார்.
“என்ன அங்கிள், இன்னைக்கு ஃபுல் பார்ம்ல இருக்கீங்க போல? உங்க மருமகனை பார்க்கவும், வார்த்தைகள் வாயில சடுகுடு ஆடுதே! இவன் இல்லாதப்போ, இங்கயிருந்து பார்த்துக்கிட்ட அந்த சிடுமூஞ்சி அங்கிள் தான நீங்க?” என்று அவரையும் விடாமல் கேலிக்குள் இழுக்க, அவரோ விலாங்கு மீனாய் நழுவி வெளியே சென்றுவிட்டார்.
அவர் சென்றதும், “என்ன டா உள்ள வரப்போ ஃபேன்ஸ் தொல்லை, அது இதுன்னு பேசிட்டு இருந்த, என்ன விஷயம்?” என்று அபராஜித் வினவ, “அடப்பாவி, அப்போ என்ன விஷயம்னு தெரியாம தான், கிண்டல் செஞ்சுட்டு இருந்தியா?” என்றான் துஷ்யந்த்.
“’பேன்ஸ்’னு பேரு காதுல விழுந்ததும், ஒரு ஃப்லோல அடிச்சுவிட்டேன். அது ஏதோ சிங்க்காகியிருக்கு!” என்று தோளை குலுக்கியபடியே எதிரிலிருந்த நாற்காலியில் தளர்வாக அமர்ந்தான்.
துஷ்யந்த்தோ, அங்கு நடந்த நிகழ்வுகளைக் கூற, “ஏன் டா, அதுக்குன்னு அந்த பொண்ணுகிட்ட இவ்ளோ கேள்வியா கேட்ப? பாவம் டா திவ்யா!” என்று அவளிற்காக பரிந்து பேச, ஏன் என்றே தெரியாமல் அந்நொடி அவளின் மீது கோபம் எழுந்தது, துஷ்யந்த்திற்கு.
“இப்ப என்ன டா பண்ண சொல்ற? எனக்கான செக்ரெட்டரி போஸ்டுக்கு சரியான தேர்வான்னு குட்டியா டெஸ்ட் வச்சு பார்த்தேன். அதுக்கு ஏன் ரெண்டு பேரும் அவளுக்காக பேசிட்டு இருக்கீங்க? ஆமா, இவ்ளோ பேசுறியே, அவ இன்னைக்கு லேட்டா வந்தா. அது சரி, மிஸ்டியோட பிரெண்டு அவளை மாதிரி தான இருப்பா!” என்று அவனே கேள்வியும் கேட்டு, பதிலையும் கூறிக்கொண்டான்.
“ரிலாக்ஸ் டா, ஏன் நீ இவ்ளோ டென்ஷனாகுற? அந்த பொண்ணைப் பார்த்தா கொஞ்சம்… இல்ல இல்ல ரொம்பவே சாந்தமா இருக்கேன்னு பேசுனேன். அது ஒரு குத்தமா!” என்று புலம்பிய அபராஜித் சுற்றிலும் பார்த்துவிட்டு, “அப்பறம் உன் மாமா பொண்ணோட யாரையும் கம்பேர் பண்ணிடாத. அதெல்லாம் தனி பீசு, சப்ஸ்ட்டிட்யூட்டே இல்ல! அண்ட் இந்த பொண்ணு ஒன்னும் உன் மாமா பொண்ணோட பிரெண்ட் இல்லயாம், அவளோட பிரெண்டுக்கு பிரெண்டாம்!” என்று கூடுதல் தகவல்களையும் சேர்த்து கூறினான்.
இதையெல்லாம் துஷ்யந்த்தின் மனம் ஒப்புக்கொண்டாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“ப்பா எவ்ளோ டீடெயிலா சொல்ற, அப்போ நீ இதையே தான் வேலையா பார்த்துருக்க, அப்படி தான?” என்று கிண்டலாக துஷ்யந்த் வினவ, “அஃப்கோர்ஸ் டா, நம்ம கம்பெனிக்காக நான் எவ்ளோ உழைக்கிறேன்னு இதுலயிருந்தாவது உனக்கு தெரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்.” என்று பெருமையாக கூறினான் அபராஜித்.
“ஆஹான், உன் உழைப்பு பத்தி லண்டன் வரைக்கும் தெரிஞ்சுருக்கு போல!” என்று துஷ்யந்த் கேட்க, சட்டென்று சுதாரித்தான் அபராஜித்.
“சரி சரி நான் கிளம்புறேன். எனக்கு வேலை இருக்கு.” என்று அவன் எழ, ‘எவ்ளோ நாள்னு பார்க்குறேன்!’ என்று சிரித்துக் கொண்டான் துஷ்யந்த்.
கதவருகே சென்றவன், “ஆமா கேட்க மறந்துட்டேன், வெளிய உன் ஃபேன்ஸ் கூட்டமா நின்னுட்டு இருக்காங்க. நீ எப்படி அவங்களைத் தாண்டி உள்ள வந்த?” என்று அபராஜித் வினவ, “வழக்கம் போல மாறுவேஷத்துல தான்!” என்று கண்ணடித்தான்.
“எது தொப்பியும் மாஸ்க்கும் உனக்கு மாறுவேஷமா? மாறுவேஷத்துக்கு உண்டான மரியாதையே போச்சே டா உன்னால.” என்று அபராஜித் சிரிக்காமல் கூற, அதைக் கேட்ட துஷ்யந்த் விளையாட்டாக மேசையிலிருந்த பேனாவை அவனை நோக்கி எரிய, அவன் அதிலிருந்து தப்பிக்க எண்ணி நகர, அது சரியாக உள்ளே நுழைந்த திவ்யான்ஷியின் மீது பட்டு கீழே விழுந்தது.
காதலி வருவாள்…
ஹாய் பிரெண்ட்ஸ்…😍😍😍 எல்லாருக்கும் ஹாப்பி வீகெண்ட்…😁😁😁 இதோ துஷ்யந்த் வந்தாச்சு… படிச்சுட்டு உங்க கருத்துகளை கமெண்ட்ல சொல்லுங்க…😍😍😍
ஒரு வேலை அஷ்வின் ஃபேனா இருப்பானோ🤭🤭🤭 மாறுவேஷத்துல வரே🤣🤣🤣🤣
🤣🤣🤣 irupano… Adei captain daw konjamachum mariyadhai kudunga daw 😝😝😝