Loading

முகவுரை

 

இரவு மணி ஏழு தான் என்றாலும் நள்ளிரவைப் போல தோன்றியது அன்று. அதற்கு முக்கிய காரணமாக விளங்கியது அன்றைய நாளின் வானிலை மாற்றங்கள். காலையிலிருந்தே பூமிப்பெண்ணிடம் விளையாடிப் பார்க்கும் காதலனாக, அவ்வபோது தன் இருப்பைக் காட்டிக்கொண்டு மறைந்துவிடும் மழையானவன், அதன் காரணமாக ஏற்பட்ட செல்ல ஊடலை முடிவிற்கு கொண்டுவர முயற்சிக்கும் அக்மார்க் காதலானாகி, இரவு நேரத்தை தேர்ந்தெடுத்து, தன் முழு இருப்பையும் தன் காதலிக்கு உணர்த்திக் கொண்டிருந்தான். 

 

இவர்களின் காதலும் ஊடலும், சிலருக்கு உற்சாகத்தை அளித்தாலும், பலருக்கு எரிச்சலையும் சோர்வையும் தான் பரிசாக அளித்திருந்தது. அதே எரிச்சலில் அந்த மாநகராட்சி பேருந்தில் அமர்ந்திருந்தவர்களும் அடக்கம்.

 

அவர்களுள், அம்மழையினால் எவ்வித பாதிப்புமின்றி இருந்தவள் அவள் ஒருத்தியே. ஏனெனில், அவளை வேதனைப்படுத்தும் நிகழ்வு தான் சற்று முன்னரே நிகழ்ந்திருந்ததே. அந்த ஏமாற்றத்திற்கு முன், மழையின் கண்ணாமூச்சி ஆட்டமெல்லாம் அவளிற்கு ஒரு பொருட்டே இல்லை தானோ!

 

ஜன்னலை சரியாக மூட முடியாததால் தன்மீது விழுந்த சாரல்களை ரசிக்கும் மனநிலையில் இல்லை என்றாலும் அதற்கான சிறு பிரதிபலிப்பு கூட இல்லாமல் இருந்தவளைக் கண்ட அவளின் பக்கத்து இருக்கை பெண், “எக்ஸ்க்யூஸ் மீ, நான் ஜன்னல் ஓரத்துல உட்கார்ந்துக்கவா?” என்று வினவினாள். 

 

ஒரு நொடி அப்பெண்ணிடம் பார்வையைப் பதித்தவள், எதுவும் கூறாமல் எழுந்து நிற்க, தன் விருப்பத்தை நிறைவேற்றப் போகிறாள் என்ற உற்சாகத்துடன் அப்பெண்ணும் எழுந்தாள். 

 

அப்போது தான் அந்த விபத்து நிகழ்ந்தது. ஆம், விபத்து தான்! கொட்டித்தீர்க்கும் மழை ஒருபுறம் ஓட்டுனருக்கு இடையூறாக இருக்க, அவ்வபோது வானத்தையே வெளிச்சமாக்க முயன்றபடி மின்னி மறைந்த மின்னல்களும் வாகனத்தை தடுமாறச் செய்தன. 

 

அப்படிப்பட்ட ஒரு மின்னல்வெட்டின் போது தான், இருபத்தைந்து ஆட்களை சுமந்து செல்லும் அந்த பேருந்து, ஓட்டுனரின் கைகளில் தடுமாறி, சாலையிலிருந்து வழிதவறி , அருகிலிருந்த வெற்றுநிலத்தில் உருண்டு பிரண்டு அங்கிருந்த ஒற்றை மரத்தில் மோதி நின்றது. 

 

இத்தனை களேபரங்கள் நிகழ, அந்த வேதனை சுமந்த விழிகளுக்கு சொந்தமானவளோ, பேருந்து கவிழ ஆரம்பிக்கும்போதே, ‘இனி உங்களை பார்ப்பேனான்னு தெரியல. இதுவும் நல்லதுக்கு தான். ஏன்னா, இனி எந்த ஏமாற்றத்தையும்  தாங்குற அளவுக்கு என்கிட்ட சக்தி இல்ல. சோ, நம்மை பிரிக்க விதி செய்யற முயற்சின்னு இதை எடுத்துக்கிறேன். இந்த முயற்சில விதி ஜெயிச்சா, நிரந்தரமா நாம பிரிஞ்சுடுவோம். ஒருவேளை தெய்வாதீனமா, நான் பிழைச்சுகிட்டேன்னா, உங்க கூட சேர எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்புன்னு நினைச்சுப்பேன். இப்போ கூட பார்த்தீங்களா, இந்த பாழாப்போன மனசு உங்களை விட்டுக்கொடுத்துட நினைக்க மாட்டிங்குது! நீங்க என்னை நினைச்சு பார்ப்பீங்களான்னு தெரியல. ஆனா, நான் எப்பவுமே உங்க நினைப்பில் தான் இருப்பேன். பை யது…’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டாள்.

 

இவையனைத்தையும், அந்த பேருந்து கவிழ்ந்து அந்த மரத்தில் மோதும் இடைவெளியில் நினைத்திருந்தாள் அவள். அவரவர்களின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களே பேருந்து உருளும் போது முன்னும் பின்னும் தூக்கியெறியப்பட, இருக்கையை மாற்றுவதற்காக எழுந்த இருவரின் நிலையைக் கூறவும் வேண்டுமா! 

 

உடல் முழுவதும் காயங்களையும், எங்கிருந்து வழிகிறது என்று தெரியாத அளவிற்கு பெருகி வழிந்த குறுதியையும் கண்டவள் விரக்தி சிரிப்புடன், “யது…” என்று முணுமுணுத்து, அவனின் புன்னகைக்கும் வதனத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து அதை ரசித்தபடியே கண்களை மூடினாள்.

 

காதலி வருவாள்

******

ஹாய் பிரெண்ட்ஸ்…😍😍😍 அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்…❤️❤️❤️ புது கதையோட வந்துட்டேன்… இதெல்லாம் ஒரு எபியான்னு நினைக்கக்கூடாது, இது இந்த கதையோட மெயின் பாயிண்ட். சோ, சின்னதா தான் இருக்கும். முதல் எபியிலிருந்து பெருசா இருக்கும் பிரெண்ட்ஸ்…😊😊😊 இந்த முகவுரை எப்படி இருக்குன்னு உங்க கருத்துகளை சொல்லுங்க…😍😍😍

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்