Loading

அதிகாலை ஐந்து மணி.

“மதுரா.. பேபி.. பேப்ஸ்” என்று கதவை தட்டினான் சஞ்சய்.

உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மதுரா, அவ்வளவு சீக்கிரம் விழிக்கவில்லை. சஞ்சய்யும் விடுவதாக இல்லை. கதவை விடாமல் தட்ட, தூக்கம் கலைந்து எழுந்து வந்து கதவை திறந்தாள்.

“என்னாச்சு?” என்று கேட்டவளை மதிக்காமல், கதவை முழுதாக திறந்து அதில் சாய்ந்து நின்று கொண்டான்.

அவன் நின்ற தோரணையில், அவளுக்கு கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த தூக்கமும் ஓடிப்போனது.

“உனக்கு டென் மினிட்ஸ் டைம். போய் ஃப்ரஸ்ஸாகிட்டு வா. ஜாக்கிங் போகலாம்”

புரியாத மொழியை கேட்டது போல் அவள் திருதிருத்தாள்.

“எனக்கு ஜாகிங் போற பழக்கமெல்லாம் இல்ல”

“ஐ டோன்ட் கேர். போய் ரெடியாகு”

“நான் வரல. எனக்கு தூக்கம் வருது” என்று திரும்ப, “ஃபைன்” என்றவன் கையை கட்டிக் கொண்டு அவளை வேடிக்கை பார்த்தான்.

அவன் அசைய மாட்டான் என்று புரிந்தது. திரும்பவும் தூங்க வேண்டும் என்றாலும் அவன் முன்னால் எப்படி தூங்குவது? நடக்காத காரியம் அல்லவா?

அவள் பாவமாய் பார்க்க, “கோ” என்றான்.

“கடத்திட்டு வந்து கொடுமை படுத்துறதுனா என்னனு இப்ப தான் புரியுது” என்று அவள் முணுமுணுக்க, அவனுக்கு சிரிப்பு வந்தது.

சிரிக்காமல் அடக்கிக் கொண்டு அசையாமல் நிற்க, அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்துக் கொண்டே குளியலறையில் புகுந்தாள்.

பத்து நிமிடத்தில் அவள் வர, “உனக்கு ட்ராக் சூட் வாங்கிட்டு வர சொல்லுறேன். இனி அத போட்டுக்கோ” என்றவன் அவளோடு வாசலை நோக்கிச் சென்றான்.

விடிந்தும் விடியாத அந்த நேரத்தில் நடக்க மதுராவுக்கு பிடிக்கவில்லை தான். நேற்று இரவு, வெகு நேரம் குடும்பத்தை நினைத்து அழுது தூக்கம் வராமல் விழித்துக் கிடந்தாள். காலையில் தூக்கம் வந்திருக்க சஞ்சய் எழுப்பி விட்டான்.

“கம்..” என்று அவள் மெதுவாக நடப்பதை பார்த்து கூறியவன், காலை எட்டிப்போட்டு நடக்க ஆரம்பித்தான்.

ஜாகிங் என்றால் ஓட விடுவானோ என்று யோசித்துக் கொண்டு வந்தவளுக்கு, அவன் நடக்கவும் சற்று தைரியம் வந்தது. ஆனால் அவனது வேகத்துக்கு அவள் பாதி ஓடத்தான் வேண்டியிருந்தது.

முடியாமல் நின்று விட்டால் திரும்பி முறைத்து வைத்தான். அந்த முறைப்பே அவளை கதிகலங்க செய்ய, அவனோடு ஓடினாள்.

ஆறு மணி வரை இரண்டு தடவை மட்டுமே அமர விட்டவன், நடக்க வைத்து அவளது காலை ஒடித்தான்.

“இதுக்கே இவ்வளவு மூச்சு வாங்குற?” என்று கேட்டவன் குரலில் அதிருப்தி.

“பழக்கமில்லனு சொல்லியும் பண்ண வச்சுட்டு கேள்வி வேற” என்று எரிச்சலாக முணங்கியவள், தண்ணீர் பாட்டிலை காலி செய்து முடித்தாள்.

வியர்வை ஆறாய் ஓடியது. ஆனால் எழுந்து வீட்டுக்கு செல்ல கூட அவளால் முடியவில்லை. வீட்ட சுற்றி இருந்த மொத்த பகுதியையும் மூன்று முறை சுற்ற வைத்திருந்தான்.

நடந்ததில் ஒரே உபயமாக, அந்த வீட்டில் எந்தப் பக்கமும் சுவறேரி குதித்து தப்பிக்க முடியாது என்பதை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலை பிடித்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, அவனும் அருகே அமர்ந்து கொண்டான்.

கடுப்பாகிப்போய் சற்று தள்ளி அமர்ந்தவள், அவனை பார்க்காமல் வேறு பக்கம் பார்க்க, அந்த சந்நிதியில் அவளோடு சேர்ந்து சத்தமில்லாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டான்.

வியர்வை சற்று உலரும் வரை அமர்ந்து விட்டு எழுந்தவன், “கெட் அப்” என்றான்.

“என்னால முடியாது. கால் உடைஞ்சு போயிடும்” என்று மறுக்க, “எழுந்து போய் குளி. குளிச்சுட்டு இருபது நிமிஷத்துல வந்தா தான் உனக்கு சாப்பாடு. இல்லனா இன்னைக்கு பட்னி தான்” என்றான்.

“வாட்?” என்று அலறினாள்.

இவ்வளவு தூரம் நடக்க வைத்து விட்டு உணவு தர மாட்டானா?

“கத்துற அளவுக்கு ஸ்ட்ரென்ட் இருக்குல? அப்ப சொன்னத செய்” என்றவன் விறுவிறுவென சென்று விட, வாய்க்குள் அவனைக் கண்டபடி திட்டி தீர்த்தாள்.

‘நைட் தோசை சாப்பிடும் போது கண்ணு வச்சப்போவே புரிஞ்சுருக்கனும். பொறாமை புடிச்சவன். அய்யோ என் சாப்பாடு..’ என்று புலம்பிக்கொண்டே வலித்த காலோடு வீட்டுக்குள் சென்றாள்.

சுடு தண்ணீருக்கடியில் நிற்கும் போது, ​​வலியெல்லாம் குறைவது போல் இருந்தது. அப்படியே கிடக்க ஆசையாக தான் இருந்தது. ஆனால் வயிறு அந்தப் போக்கில் கத்திக் கொண்டிருந்ததால், வேகமாக ஓடிச் சென்று கிளம்பி மேசைக்கு வந்தாள்.

எப்போதடா சாப்பிடுவோம்? என்று ஆர்வமாக வர, அங்கு உணவே இல்லை.

“முனியா.. ரொம்ப பசிக்குது.. என்ன வச்சுருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர, “நீங்க போங்க” என்று அவரை அனுப்பி விட்டான் சஞ்சய்.

“இன்னைக்கு நீ தான் சமைக்கிற”

“அய்யய்யோ..”

“என்ன அய்யய்யோ? தோசை மாவு தான் இருக்குல? ஊத்தி ஏடு” என்றவன் அவனது சப்பாத்தியை செய்ய ஆரம்பித்து விட்டான்.

அதீத பசியில் சாப்பிட முடியாததும், சமைக்க தெரியாததும் அவளை அவமானப்படுத்தியது, கண் கலங்கி விட்டது.

அவனோ அவளை திரும்பியும் பார்க்கவில்லை. ஒரு அடுப்பில் எதையோ கிண்டிக் கொண்டே, மறு அடுப்பில் சப்பாத்தியை போட்டு உப்ப விட்டு எடுத்து கொண்டிருந்தான்.

அதை சில நொடிகள் பார்த்தவளுக்கு, மனதில் பொறாமை வந்தது.

‘ஆம்பள பையன் அவனே சமைக்கிறான். எனக்கு சமைக்க வராதா? நானே செய்யுறேன்’ என்று நினைத்தவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு சுற்றியும் பார்த்தாள்.

நான்கு பேர் கொண்ட அடுப்பு அது. ஒரு பக்கம் அவன் நின்றிருந்தான். மறு பக்கம் அவள் சென்று நின்றாள்.

தோசை தவாவை அடுப்பில் வைத்து விட்டு பத்த வைக்க பயந்து நின்று விட்டாள். வெடித்து விடுமோ என்ற பயம். ஆனால் அவன் முன்னால் காட்டிக் கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தாள்.

எல்லாம் தெரிந்தவள் போல் அவள் கொடுத்த பில்டப்பில், சஞ்சய்க்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது.

ஒரு வழியாய் லைட்டரை தேடி எடுத்தவள், தைரியத்தை போராடி தான் வரவழைத்தான்.

கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டு, ‘என் உயிரை மட்டும் எப்படியாவது காப்பாத்திடு’ என்று வேண்டிக் கொண்டு அடுப்பை பத்த வைக்க போக, “பூம்” என்றொரு சத்தம் காதில் விழுந்தது.

கூடவே ஒரு தட்டும் கீழே விழ, “அம்மா…” என்று அலறி விட்டாள்.

அவளது அலறலுக்கு எதிரொலியாக, சஞ்சய் வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தான். எதுவும் நடக்கவில்லை என்று புரியவே சில நொடிகள் பிடிக்க, நிமிர்ந்து பார்த்தாள்.

அடுப்பின் மறு பக்கம் நின்றிருந்தான் அவன். அவள் அலறி கண்ணை மூடி, காதை அடைத்திருந்த கோலத்தை கேலியாக பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

அவனது சிரிப்பில் நின்று போயிருந்த கண்ணீர் மீண்டும் வருவேன் என்றது. அடக்கிக் கொண்டு அவனை முறைத்து வைத்தாள்.

“அடுப்ப கூட பத்த வைக்க தெரியல. ஆனா பத்து தோசை சாப்பிடுவ”

“அதுக்கு இப்படியா செய்வீங்க?”

“ஒழுங்கா அடுப்ப பத்த வை” என்றவன் தன் வேலையை முடித்து விட்டான்.

“அத அப்படியே விடுங்க” என்று அவன் அணைக்க போன போது தடுத்து நிறுத்தியவள், “அதுல நான் சுட்டுக்கிறேன்” என்றாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன் இரண்டு அடுப்பையும் அணைத்து விட்டான். அதை பார்த்து அவள் ஏமாந்து போய் நிற்க, “டூ இட் யுவர் ஓன்” என்றவன் தன் உணவை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

பசி வேறு இன்னும் வயிறை பிடித்து இழுக்க, உதட்டைக் கடித்துக் கொண்டவள் கண்ணை மூடிக் கொண்டு ஒரு வழியாய் அடுப்பை பத்த வைக்க நினைத்து திருக, அது தானாய் எரிந்தது.

புரியாமல் அவள் திருதிருக்க, சஞ்சய் மீண்டும் சிரித்தான்.

“அது ஆட்டோமேடிக். லைட்டர ஓரமா வச்சுட்டு வேலைய பாரு” என்றவன், உள்ளே வந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு சென்றான்.

‘இத முதல்லயே சொல்லிருக்க கூடாதா?’ என்று நினைத்தவள், தவாவை வைத்து பார்த்து இரண்டு தோசை சுட்டாள்.

அதற்கு அவன் செய்து வைத்த தக்காளி தொக்கையும் எடுத்துக் கொண்டாள்.

ஒன்று வேகும் போதே, தட்டில் பிய்ந்து கிடந்ததை உள்ளே தள்ளினாள். அவ்வளவு பசி. வந்த வரை சுட்டு வயிறை நிரப்பும் போது, ​​அப்பாடா என்றிருந்தது.

ஆனால் அப்போதே ஆண்டாளின் நினைவு வந்தது. ஆண்டாள் எப்போதும் நன்றாக சமைப்பார். ஆனால் அவர் கொடுத்துவிடும் உணவுகளை விட்டு, வெளியில் சாப்பிடுவது தான் மதுவுக்கு பிடிக்கும்.

இன்று, பாசமாய், பிடித்த விதத்தில், பார்த்து சமைத்துக் கொடுத்த அன்னையை மனம் தேடியது.

‘என்னைக் காணோம்னு அழுதுட்டு இருப்பாங்க?’ என்று நினைத்தவளுக்கு கண்ணீர் வர, அதை துடைத்துக் கொண்டே கையை கழுவி விட்டு நகர்ந்தாள்.

அவளது முக மாற்றத்தை வேடிக்கை பார்த்த சஞ்சய், அவள் அறை பக்கம் போகவும், “எங்க போற?” என்று கேட்டு நிறுத்தினான்.

“என்ன?” என்று கேட்டவளின் குரல் கலங்கி இருந்தது.

அதை கண்டும் கருத்தில் கொள்ளாமல், “லஞ்சும் நீ தான் சமைக்கனும். இப்போ போனா எப்ப சமைப்பா?” என்று கேட்டான்.

“ஓஹ்..” என்றவள் சற்று யோசித்து விட்டு, “எனக்கு எதுவும் செய்ய தெரியாதே” என்றாள்.

“முனியா” என்று சஞ்சய் சத்தம் கொடுக்க, அவரும் வந்து நின்றார்.

“பேபி சமைக்கும். கூட நின்னு சொல்லி மட்டும் கொடுங்க” என்றதும் முனியா தலையசைத்தார்.

மதுரா அமைதியாக முனியாவை பின் தொடர்ந்தாள்.

அவள் என்ன செய்யப்போகிறாள் என்று கேட்டு, தேவையானதை காட்டினார்.

“நீங்களே செய்யுங்களேன்” என்றாள் மதுரா.

சஞ்சய் இருக்கிறானா? என்று பார்த்து அவன் இல்லை என்றதும் தான் கேட்டாள். முனியா புன்னகையுடன்’ மறுப்பாக தலையசைக்க, மதுரா முகத்தை சுருக்கினாள்.

“ரொம்ப தான் பண்ணுறீங்க” என்று நொடித்துக் கொண்டவள், தனக்கு தேவையானதை சொல்லி அதை எப்படி செய்வது என்று கேட்டு ஒருவாறு சமைத்தாள்.

சமைக்கும் போது குடும்பம் கூட மறந்து போனது. அத்தனை குளறுபடிகளை செய்து திருத்திக் கொண்டிருந்தாள்.

ஏனோ தானோவென அவள் சமைத்து முடிக்க, சஞ்சய் வந்து சேர்ந்தான்.

மதுரா அவனை பார்த்து விட்டு, “எப்படி தினமும் சமைக்கிறீங்க? முடியல” என்றாள்.

“ஒரு நாளுக்கே சலிப்பு…” என்று நக்கலாக கேட்டு விட்டு, அவள் சமைத்ததை பார்த்தான்.

கொஞ்சமாய் எடுத்து சாப்பிட்டுப் பார்த்து விட்டு, “பரவாயில்ல சால்ட் கரெக்ட்டா போட்டுட்ட” என்றான்.

“போதும் போதும். எனக்கு பசிக்குது. போய் உங்க சப்பாத்திய சுடுங்க. நான் சாப்பிடனும்” என்றவள், அவனைத் தாண்டிக் கொண்டு உணவை தட்ட ஆரம்பித்தாள்.

அவன் எதுவும் செய்யாமல் அவளை வேடிக்கை தான் பார்த்தான். அவள் நகர்ந்ததும் அவள் சமைத்த அதே உணவை எடுத்துக் கொண்டு, மேசைக்கு வந்து அமர்ந்தான்.

“ஹேய் நீங்களும் இதையா சாப்பிடுறீங்க?”

“ஏன்?”

“முன்னாடியே சொல்லிருக்கலாம்ல?”

“ஏன்?”

“இன்னும் கொஞ்சம் கேவலமா சமைச்சுருப்பேன். எனக்குனு பார்த்து பார்த்து செஞ்சேன்”

“இனிமே கேவலமா சமைச்சு வை. ஆனா அதையே தான் நீயும் சாப்பிடனும். அத மறந்துடாத” என்றவன் சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

அவன் உணவை வாயில் வைத்ததும், மதுரா தான் சாப்பிடுவதை மறந்து, அவன் முகத்தை தான் ஆராய்ந்தாள். ஏதாவது மாற்றம் வருகிறதா என்று.

அவனோ ஒரு உணர்ச்சியும் காட்டாமல் போக, “நல்லா இருக்கா?” என்று கேட்டு விட்டாள்.

நிமிர்ந்து பார்த்தவன், “நீயே சாப்பிட்டு தெரிஞ்சுக்க வேண்டியது தான?” என்று கேட்டான்.

“என் டெஸ்ட் வேற உங்க டெஸ்ட் வேறல.. அதான்… நல்லா இருக்கா?”

மீண்டும் கேட்டாள்.

“ம்ம்ம்.. முனியா கூட நின்னு சொல்லிக் கொடுத்ததால நல்லாவே இருக்கு”

பளிச்சென புன்னகைத்தவள், “சொன்னது அவங்கனா? செஞ்சது நான்ல?” என்று தலையை சிலுப்பியவள், உண்ண ஆரம்பித்தாள்.

அவளாக சமைத்து சாப்பிடுவது இதுவே முதல் முறை. மனதுக்குள் திருப்தி ஏற்பட்டது. மற்ற எண்ணங்கள் கூட மறந்து போனது.

அவளது முக மாற்றத்தை பார்த்தவன், “நைட் க்கு என்ன சமைக்க போற?” என்று கேட்டுக்கொண்டே கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இதுவே இருக்குமே.. சூடு பண்ணி சாப்பிட வேண்டியது தான்”

“அப்ப நெய் தோசை?”

“அதுவும் வேணும் தான். ஆனா நெய் தோசைய நானே சுடனும். அது நெய் தோசைக்கு பதிலா பரோட்டா மாதிரி பிஞ்சு போகுது.”

“நிறைய சுட்டு பழகு. தானா வந்துடும்”

“நீங்க எப்ப சமைக்க கத்துக்கிட்டீங்க?”

“பசிக்கும் போது தான்”

அவன் கிண்டலாக சொல்ல அவனை முறைத்து வைத்தவள், “பெரிய ஜோக்கு” என்று பழிப்பு காட்டினாள்.

“நைட்டும் எனக்கு சேர்த்து செஞ்சுடு. கூட முனியா இருப்பாங்க” என்றவன் கைபேசியை அணைத்து, விட்டு சாப்பிட்டு முடித்தான்.

அவள் இரவு சமைக்கப்போவதை பற்றி முனியாவிடம் பேச ஆரம்பிக்க, சஞ்சய் தன் கைபேசியை திறந்து பார்த்தான்.

சற்று முன் அவளோடு ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டதை வீடியோ எடுத்திருந்தான்.

‘என் நண்பனுக்கான ஸ்பெஷல் கிஃப்ட்’ என்று நினைத்தவன், சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்