Loading

 

கேரளாவை விட்டு அவர்கள் கிளம்பிய செய்தி வந்து சேர, அதை பார்த்து விட்டு தூங்கச் சென்று விட்டான் சஞ்சய்.

மதுரா கேட்டவை எல்லாம் வந்து சேர, அவள் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

அவள் மனதில் வாசுதேவனின் எண்ணங்கள் தான். ஒரு மாதத்தில் திருமணம் முடித்து அவன் மனைவியாக வேண்டியவள். இங்கு எவனோ ஒருவன் வீட்டில் அமர்ந்திருக்கிறாள்.

சஞ்சய்யை பார்க்க அவ்வளவு கெட்டவன் போலவும் தெரியவில்லை. எதாவது பிரச்சனை என்றால், பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றே நினைத்தாள். ஆனால் அவன் வாயை திறக்க மறுக்கிறானே.

என்ன பிரச்சனை என்று தெரியாமல், இடையில் வந்து மாட்டியதை நினைத்து நொந்து கொண்டிருந்தாள்.

மாலை வரை சஞ்சய் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. மதுராவும் காரில் தூங்கியதால் அலுப்பு தீர குளித்து விட்டு உறங்கியிருந்தாள்.

இருவரும் மாலை எழுந்து வந்து சேர்ந்தனர். மதுரா வரும் போது சஞ்சய் நடு வீட்டில் அமர்ந்து கைபேசியை காதுக்குக் கொடுத்திருந்தான்.

அந்த பிரம்மாண்டமான வீட்டில், நடுநாயகமாக அவன் அமர்ந்திருப்பது அவ்வளவு கம்பீரமாக இருந்தது.

‘கெத்தா தான் இருக்கான்’ என்று நினைத்துக் கொண்டவள், அவனிடம் போகாமல் சமையலறை பக்கம் சென்றாள்.

அங்கு முனியா நின்றிருக்க, “எனக்கு பசிக்குது” என்றாள்.

காலையில் அழுது கொண்டே அவன் சுட்டுக் கொடுத்த சப்பாத்தியை அறையும் குறையுமாகத்தான் விழுங்கியிருந்தாள்.

விமானத்தில் அவன் வாங்கி கொடுத்த உணவையும், அவளால் முழுதாக உண்ண முடியவில்லை. எப்படி தப்பிப்பது என்ற யோசனையில் இருந்தாள். அதனால் தான் வீடு வந்ததும் அவளுக்கு செய்து கொடுத்து தானும் உண்டான் சஞ்சய்.

அப்போதும் அவள் சரியாய் சாப்பிடவில்லை. மதியம் தூங்கி கழிந்து போக, இப்போது பசியெடுத்தது.

அவள் தமிழில் பேச, அவருக்கு புரியவில்லை என்றாலும் அவளது சைகையில் புரிந்து கொண்டு, குளிர்சாதன பெட்டி பக்கம் கை காட்டினார்.

அதைத்திறந்து பார்க்க, உள்ளே ஏகப்பட்ட பழங்கள் இருந்தது. சில குளிர்பானங்களும் இருக்க, பழங்களை மட்டும் எடுத்து கழுவிக் கொண்டாள்.

“அதெல்லாம் நான் குடிக்க மாட்டேன்” என்று சைகையில் முனியாவிற்கு கூற, அவரும் தலையசைத்து விட்டு பாலை எடுத்துக் காட்டி, “குடிப்பாயா?” என்று கேட்டார்.

அவள் தலையாட்ட, அதை காய்ச்சி கொடுத்தார். வாங்கி குடித்து விட்டு இருந்த பழங்களை எல்லாம் உண்டு முடித்த பிறகு திருப்தியாக இருந்தது.

“நைட் என்ன சாப்பாடு?” என்று கேட்க, அவரோ சப்பாத்தியை தான் கை காட்டினார்.

“எதே? மூணு நேரமும் சப்பாத்தி தானா? எவன் சாப்பிடுவான்?”

“நான்” என்று பின்னாலிருந்து பதில் வர, திரும்பிப் பார்த்தாள்.

“நான் அதான் சாப்பிடுவேன். ஏன் உனக்கு வேணாமா?”

“மூணு நேரமும் அதையே எப்படி சாப்பிடுறது?”

“அப்புறம் என்ன வேணும் உனக்கு?”

“இட்லி, தோசை, பூரி, பொங்கல், பணியாரம்…”

“எல்லாம் தமிழ்நாடு ஃபுட் ஐயிட்டம்?”

“ஆமா. எனக்கு அதான் பிடிக்கும். சப்பாத்திய எப்படி சாப்பிடுறது?”

“அப்ப நீ தான் சமைக்கனும்”

“என்ன?”

“முனியாக்கு அதெல்லாம் செய்ய தெரியாது. சோ நீயே சமைச்சுக்கோ”

“கிழிஞ்சது” என்று முணுமுணுத்தவள், “எனக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும். சமைக்க தெரியாது” என்றாள்.

“தெரியும்” என்றவன் முகத்தில் சிரிப்பு படர, மதுரா முகத்தை சுருக்கினாள்.

“எங்கம்மா நல்லா சமைப்பாங்க. ஐ மிஸ் ஹர்” என்றவளுக்கு கண் கலங்க ஆரம்பித்து விட்டது.

“உன்னை பார்த்தாலே தெரியுது.. நல்லா சமைப்பாங்கனு” என்றவன் அவளை மேலும் கீழும் பார்த்து வைக்க, கலங்கிய கண்ணோடு அவனை முறைத்தாள்.

“முனியாக்கு ஆல் இண்டியா ஃபுட் ஐட்டமும் சமைக்க தெரியும். அழாம அவங்க கிட்ட கேட்டு சாப்பிடு. உன்னை பட்னி போட்டது தெரிஞ்சா உன் லவ்வர் அழுதுடுவான்” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.

மனதில் ஒரு வலி வர, அதை மறைத்துக் கொண்டு முனியாவிடம் சாப்பாடை பற்றி பேச ஆரம்பித்தாள்.

அங்கிருந்து சென்ற சஞ்சய் கைபேசியை பார்த்தான். வாசுவுக்கு மது காரில் தூங்கிக் கொண்டிருந்த புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தான்.

அதை அனுப்பியதிலிருந்து வாசு விடாமல் அழைத்துக் கொண்டிருந்தான். அதை பார்த்து சிரித்து விட்டு, சஞ்சய் தன் வேலையை பார்க்கச் சென்றான்.

____________

வாசு தன் கையில் இருந்த படத்தை வெறித்துக் கொண்டிருந்தான். அதில் போர்வையை போர்த்திக் கொண்டு மதுரா நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

பார்க்க பார்க்க, வாசுவுக்கு எதுவோ கை விட்டு போவது போல் இருந்தது. சஞ்சய்யிடம் எவ்வளவு முயற்சி செய்தும் பேசவே முடியவில்லை.

ஜவஹரை தான் அழைத்து நூறு முறை பேசி இருந்தான். அவனும் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ல, கடைசியாக மதுராவை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்.

நூறு முறை கெஞ்சிய பின்பு, “என் பால்ய நண்பன் கேட்டு இல்லாமலா?” என்ற தலைப்போடு அவள் தூங்கும் படம் தான் வந்தது.

கடத்திச் சென்றவன் வாகனத்தில் மது உறங்குவது என்றால்? என்ன நடக்கிறது? எதை அவளிடம் சஞ்சய் சொல்லி வைத்தான்?

ஒவ்வொரு நொடியும் சஞ்சய்யிடம் மதுரா இருப்பது, அவனுக்கு முள்ளின் மீது நிற்பது போன்று இருந்தது.

எதை எல்லாம் அவளிடம் சொல்வானோ? எல்லாம் தெரிந்தால் மதுரா அவனை மொத்தமாய் வெறுத்து விடுவாளோ? என்று நினைத்து நினைத்து பதறிக் கொண்டிருந்தவன், தன் நிறுவன வேலையை கூட பார்க்காமல் ஓரம் கட்டினான்.

வாசுதேவன் வைத்திருப்பது விளம்பர கம்பெனி. எத்தனையோ பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு, இப்போது தான் வளர்ந்து கொண்டிருக்கிறான். வேலை மட்டுமே உயிராக இருந்தது போய், இப்போது அதை மறந்து விட்டு மதுராவை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான்.

“சார்.. இன்னைக்கு அந்த ஹீரோயின் சோபியா கூட மீட்டிங் இருக்கு” என்று வந்து நின்றான் வாசுவின் அசிஸ்டன்ட்.

பாலிவுட்டிலிருந்து நடிகையை விளம்பரத்திற்காக அழைத்திருந்தனர். அந்த சோப்பு கம்பெனி முதலாளிக்கு அவள் தான் நடிக்க வேண்டுமாம். எதாவது மாடலை வைத்து எடுக்கலாம் என்றால், மசிய மாட்டேன் என்றார். சோபியா வாங்கும் பணமோ எக்கச்சமாக இருந்தது. பட்ஜட்டை உயர்த்தினால் தான் அவளை அழைக்க முடியும் என்று திட்டவட்டமாக பேசிய பின்பே, இன்று அழைத்திருந்தனர்.

அவளை பிடிப்பதற்கே ஒரு மாதம் ஆகியிருந்தது. அவ்வளவு கஷ்டப்பட்டு அழைத்தவளை, பார்த்து பேச வேண்டும் என்பது கூட மறந்து போயிருந்தான்.

மதுராவின் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு, “வர்ரேன்” என்று எழுந்து கொண்டான்.

அலுவலகத்தில், அங்காங்கே தொலைகாட்சியில் அவர்கள் எடுத்த விளம்பரங்கள் சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. அந்த நடிகை வந்ததும், கீழே சென்று அழைத்து வந்தவன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தான்.

எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த நடிகையுடன் நடிக்கப்போகும் நடிகனை தான் அவளுக்குப் பிடிக்கவில்லை.

“இவரோட எனக்கு செட் ஆகாது.” என்றாள் சோபியா.

“மேடம்.. அவர ஏற்கனவே புக் பண்ணிட்டோமே”

“பட் அவருக்கும் எனக்கும் நிறைய இஸ்யூ இருக்கு”

அவள் திடமாக மறுத்து விட்டு, “இதுக்கு நீங்க சஞ்சய்யை புக் பண்ணலாமே. அவர் நல்ல மாடல்” என்றாள்.

சஞ்சய் பெயரைக்கேட்டதும் வாசுவின் முகம் இறுகி விட, “அவர் டேட் கிடைக்கிறது கஷ்டம் மேடம்” என்றான் வாசுவின் அசிஸ்டன்ட்.

“ரீசண்ட்டா அவர் கூட நீங்க ஆட் பண்ணுறதா கேள்வி பட்டேனே.”

சோபியா விடாமல் கேட்க, வாசுவிற்கு தான் கடுப்பாகி விட்டது.

“அவர ஃபிக்ஸ் பண்ணுங்க. நான் நடிக்கிறேன். அவ்வளவு தான்”

அதோடு அவள் முடித்து விட, வாசு சில நொடிகள் யோசித்தான்.

“நாங்க பேசி பார்க்குறோம்” என்று வாசு சொல்லி விட, சோபியா திருப்தியாய் கிளம்பி விட்டாள்.

வாசு உடனே சஞ்சய்யை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டான். ஜவஹர் இதைக்கேட்டு புருவம் உயர்த்தி விட்டு, “சார் கிட்ட பேசிட்டு சொல்லுறேன்” என்றான்.

_______

இரவு முனியா நெய் தோசையை சுடச்சுட வார்த்து போட, கணக்கில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் மதுரா.

அவள் உண்ணும் அளவை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே, தன்னுடைய சப்பாத்தியை உண்டான் சஞ்சய்.

“இவ்வளவு தூரம் உள்ள தள்ளுனா எப்படி டைஜஸ்ட் ஆகும்?” என்று வேறு கேட்டு வைக்க, அதை காதில் கூட வாங்காமல் சாப்பிட்டாள் மதுரா.

இரண்டு நாட்களாக உணவை கொறித்தது என்ன? இப்போது வெட்டுவது என்ன?

சஞ்சய் சாப்பிட்டு முடித்து பத்து நிமிடங்கள் கடந்தும் அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, “ஸ்டாப் முனியா. இதுக்கு மேல சுடாதீங்க” என்று அவன் தான் தடுக்க வேண்டியிருந்தது.

“பொறாமை புடிச்சவன்” என்று முணங்கியவள், “போதும்” என்றாள் மனமே இல்லாமல்.

அவளது கோபத்தை பார்த்து விட்டு, “நேத்துல இருந்து கடத்திட்டு வந்தேன்னு அவ்வளவு அழுதுட்டு இருந்த.. இப்ப என்னனா அந்த நினைப்பே இல்லாம சாப்பாட இப்படி வெட்டுற?” என்று கேட்டான்.

“அதுக்காக? வயிற காயப்போட முடியுமா? எனக்கு ஃபுட் தான் ஃபர்ஸ்ட் மத்த எல்லாம் நெக்ஸ்ட்”

“இப்படி சாப்பிட்டு என் சொத்த அழிக்கலாம்னு ப்ளானா?”

“அவ்வளவு வீக்கான சொத்தா உங்களோடது?” என்று கிண்டலாக கேட்டவள், சுவரருகே சென்று தட்டி பார்த்தாள்.

“இல்ல தாங்கும்” என்று வேறு சொல்ல, சஞ்சய் சிரித்து விட்டான்.

“விட்டா வீட்டையே முழுங்கிடுவ நீ.” என்றவன், “என் கூட வா” என்று அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்.

காலையில் ரம்யமாக இருந்த காட்சிகள் எல்லாம் இருளில் சிறு திகிலை தான் கிளப்பியது. சுற்றியும் பார்த்து விட்டு அப்படியே நின்று விட்டாள்.

“என்ன?”

“இருட்டுனா பயம். நான் வரல. எங்க போறீங்க?”

“இப்படி சாப்பிட்டு அப்படியே தூங்குனா உடம்புக்கு நல்லது இல்ல. டைம் இருக்கு. கொஞ்ச நேரம் நடந்துட்டு அப்புறம் போய் படு”

“எனக்கு நடக்குறதே பிடிக்காது”

“பார்த்தாலே தெரியுது”

“கிண்டலா? நான் வரல”

“அதிகாரம் பண்ணுற… ம்ம்ம்….”

அவன் ஒரு மாதிரி இழுக்க, திடீரென அவள் மனதில் திகில் பரவியது. ஆனால் அதை உடனே உதறினாள்.

“உங்க வீட்டுல இருக்கேன். யாரு கிட்டயும் பேச மாட்டேன்னு சொல்லிட்டேன். அதுக்கு மேல நடுராத்திரி பேய் மாதிரி நடக்க சொன்னா என்னால முடியாது. இதுக்கெல்லாம் நீங்க மிரட்ட முடியாது. ஆமா.. குட் நைட்” என்றவள் உடனே திரும்பி உள்ளே ஓடி விட்டாள்.

அவள் ஓடியதை பார்த்து சஞ்சய் சிரித்து விட, முனியா அதை பார்த்துக் கொண்டே வந்தார்.

அவர் சைகையில் பேச, “யாரு இவளா? சில விசயத்துல தான் குழந்தை மாதிரி இருக்கா. சில நேரம் ரொம்ப புத்திசாலியா பேசுவா” என்றான்.

“ஆனா அழகா இருக்கா” என்றார் அவர்.

சஞ்சய் பதில் சொல்லவில்லை. அவள் அழகை பற்றி அவனுக்கு எந்த அக்கறையும் இல்லை. பேச்சை மாற்றி, வேறு பேசி அவரை அனுப்பி விட்டான்.

ஜவஹரை அழைத்தான்.

“எஸ் பாஸ்”

“வாசுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துடு”

“பாஸ்?”

“நாளைக்கு வேணாம். அடுத்த நாள் ஸ்டூடியோல மீட் பண்ணலாம்னு சொல்லு”

“ஓகே பாஸ்”

அழைப்பை துண்டித்தவன், மதுரா போன பக்கம் ஒரு முறை பார்த்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
12
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்