Loading

 

மதுரா தன் உயிரையே பறி கொடுத்தது போல் அமர்ந்து விட்டாள். சஞ்சய் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“இனி இந்த கார எதுவுமே பண்ண முடியாதுல?”

“முடியாது பாஸ். டோட்டல் டேமேஜ்”

“குட். ஆமா கார் ஓனர் என்ன பண்ணிட்டு இருக்கான்?”

“நொறுங்குன கார திகைச்சுப்போய் பார்த்துட்டு இருக்கார் பாஸ்”

“அதிர்ச்சியில மயங்கி எதுவும் விழுந்துட போறான். தண்ணிய கொடுத்து ஹோட்டல்ல விடு”

“ஓகே பாஸ்”

கைபேசியை அணைத்துப்போட்டு விட்டு மதுவை பார்த்தான்.

அவளுக்கு அப்போது தான் விசயம் புரிந்தது. கார் மட்டும் தான் நொறுங்கி இருக்கிறது. காரில் சென்ற வாசு தனியாக பத்திரமாக இருக்கிறான்.

“எந்திரி” என்று சஞ்சய் கூற, அவனை நிமிர்ந்து பார்த்தாள்‌.

“போய் முகம் கழுவிட்டு வா. நான் டிரஸ்ஸ மாத்திட்டு வர்ரேன். சேர்ந்து சப்பாத்தி சாப்பிடலாம்”

அவள் அசையாமல் அவனை வெறித்துப் பார்த்திருக்க, கையை நீட்டினான்.

அந்த கையைப்பார்த்தவள், கண்ணீரை துடைத்துக் கொண்டு தானாகவே எழுந்து நின்றாள்.

“போய் முகம் கழுவிட்டு வா.” என்றவன் தன் கைபேசியை அங்கேயே வைத்து விட்டு நகர, “வாசுக்கு.. ஒன்னும் இல்லயே?” என்று பயம் மறையாத குரலில் உறுதிபடுத்திக் கொள்ள கேட்டாள்.

“கால் அட்டன் பண்ணாததால இப்ப உயிரோட தான் இருக்கான்” என்றவன் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.

அவனது கைபேசி அங்கேயே தான் இருந்தது. அதைப்பார்த்த மதுவிற்கு எடுக்க தைரியம் வரவில்லை. தொலை பேசியை பார்த்தாள். தொடவும் தைரியம் இல்லை. மீண்டும் முயற்சித்தால்? வாசுவின் உயிர் அதோடு உலகை விட்டுப்பறந்து விடும் என்று புரிந்து கொண்டாள்.

அதை வெறித்துப் பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். முனியா அவளை அழைத்துச் சென்று அறையை காட்டினார்.

அவரால் பேச முடியாது என்று புரிந்து கொண்டவள், எதையும் கேட்காமல் உள்ளே சென்றாள்.

அவர் சென்றதும் அறைக்குள் அமர்ந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். சற்று முன் தோன்றிய பயம் அவளை விட்டு அவ்வளவு சீக்கிரம் போகவில்லை.

அவளால் ஒரு உயிர், அதுவும் வாசு இறந்து போய் விடுவானோ என்ற பயம் இன்னும் உடலில் மிச்சம் இருந்து, நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.

அழுகை தேம்பலாக மாறி குறைந்ததும், முகம் கழுவிக் கொண்டாள். நேற்றிலிருந்து ஒரே ஆடையில் இருப்பது வேறு கசகசவென இருந்தது.

எதாவது உடை இருக்கிறதா? என்று பார்க்க, அப்படி எதுவும் அந்த அறையில் இல்லை.

“அந்த வீட்டுல இருந்தது. இங்க இல்லையே. அப்ப அது யாரோட வீடு?” என்ற கேள்வி எழ, யோசனையுடன் வெளியே வந்தாள்.

சஞ்சய் ஏற்கனவே சமைக்கும் வேலையை முடித்திருந்தான். அவள் வந்ததும், “நாளையில இருந்து நீயும் என் கூட சமைக்கனும். இப்ப வா” என்றவன் அவளோடு அமர்ந்து சாப்பிட்டான்.

அப்போது தான் அழுது ஓய்ந்திருந்ததால் மது அமைதியாக சாப்பிட்டாள். சஞ்சய்யும் பேச்சு கொடுக்கவில்லை.

முனியா வந்து சஞ்சய்யிடம் எதோ கேட்க, “இவளுக்கு தேவையானத கேட்டுட்டு போய் வாங்கிக் கொடுங்க” என்றான் தெலுங்கில்.

அவன் பேசுவது புரியாமல் மதுரா விழிக்க, “உனக்கு என்ன வேணும்னு லிஸ்ட் கொடு. வாங்கிட்டு வருவாங்க” என்றான்.

இனி ஒரு மாதம் இங்கே தான் என்று புரிய, பெருமூச்சு விட்டாள்.

அவளிடம் பட்டியலை வாங்கிக் கொண்டு முனியா சென்று விட, சஞ்சய்யிடம் வந்து நின்றாள் மதுரா.

“என்னை இந்த வீட்டுல அடைச்சு வச்சுருக்க போறீங்களா?”

“ஏன்?”

“அப்படி அடைச்சு வச்சாலும் சரி. இங்க தான் இருக்கேன்னு என் வீட்டுல சொல்லிடுறீங்களா? காணோம்னு தேடிட்டே இருப்பாங்க”

தன் கைபேசியில் மின்னி மறைந்த வாசுதேவனின் எண்ணை பார்த்துக் கொண்டே, “தேடுனா தேடட்டுமே” என்றான் சஞ்சய்.

“அது… என்னை காணோம்னு போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்துட்டாங்கனா? நீங்க மாட்டுவீங்க தான? அதான்..”

“என்ன ட்ரை பண்ணுற பேபி? என் கூட இருக்கனு தெரிஞ்சா வந்து கூட்டிட்டு போயிடுவாங்கனா?”

பிடிபட்ட உணர்வில் திருதிருத்தாள். அப்படித்தான் நயமாக பேச நினைத்திருந்தாள். ஆனால் உடனே கண்டு கொண்டானே. ஆமென்றும் சொல்ல முடியாமல் இல்லை என்றும் சொல்ல முடியாமல் அவள் நிற்க, சஞ்சய் சிரித்தான்.

“ரொம்ப ஸ்மார்ட்டா யோசிக்காத பேப்ஸ். ஆனா நீ சொன்னத நான் ஏற்கனவே செஞ்சுட்டேன்.”

அவன் தோளை குலுக்கி கூற, அவள் புரியாமல் பார்த்தாள்.

“என்ன? நான் இங்க இருக்கேன்னு சொல்லிட்டீங்களா?”

“இது யாரோட நம்பர்னு பாரு”

தன் கைபேசியை திருப்பிக் காட்டினான். வாசுவின் எண் தான் தெரிந்தது. பார்த்ததும் மதுரா அதிர, சஞ்சய் புன்னகைத்தான்.

“வாசு..” என்றவளுக்கு உடனே அந்த கைபேசியை பிடுங்கி பேசும் வெறியே வந்தது. ஆனால் முடியாதே. கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.

மீண்டும் மீண்டும் அது அடித்து ஓயும் வரை வேடிக்கை பார்த்தான் சஞ்சய்‌. அதை ஏற்கும் எண்ணமே அவனுக்கு இல்லை.

“ப்ளீஸ் அட்டன் பண்ணுங்க” என்று வாய்விட்டு கெஞ்சவும் ஆரம்பித்தாள்.

“அட்டன் பண்ணி?”

அவன் கேள்வியாய் நிறுத்த, அவளிடம் பதில் இல்லை. ஒன்றும் சொல்ல முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு சில நொடிகள் அமர்ந்து விட்டாள்.

பிறகு முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள், “என்ன செய்யனும்?” என்று கேட்டாள்.

“தட்ஸ் குட்” என்றவன், “இந்த நிமிஷத்துல இருந்து நானே உன்னை விடுற வரை யாரு கிட்டயும் நீ பேச ட்ரை பண்ண கூடாது.” என்று கட்டளை போட்டான்.

“பேச மாட்டேன்”

அவள் உடனே சம்மதம் சொன்னதும், திருப்தியாய் தலையாட்டி விட்டு திரும்பிக் கொண்டான்.

__________

நள்ளிரவில் ஊரை சுற்றி மதுராவை தேடி விட்டு காலையில் தான் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான் வாசு தேவன். இடையில் தண்ணீர் வாங்க இறங்கியவனின் கார் லாரியால் அடித்து நொறுக்கப்பட்டது.

அதைக்கண்டு அதிர்ந்து போய் நிற்க சிலர் அவனை அசுவாசப்படுத்தி ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தனர்.

காலையில் காவல்துறையிடம் புகார் செய்வதற்காக கிளம்பினார்கள் வாசுவும் ஆண்டாளும். கூடவே அடி பட்டு வந்திருந்த ஞானசுந்தரமும்.

ஞானசுந்தரமும் எதோ ஒரு வேலைக்காக சென்றிருக்க, ஒரு லாரி அவர் சென்ற காரை இடித்து விட்டுச் செல்ல சாலையில் போன ஒருவன் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாக ஞானசுந்தரம் கூறி இருந்தார்.

அவருடைய கைபேசி காருக்குள் உடைந்து போனதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இப்போது பத்திரமாக மனைவி மகளை தேடிக் கொண்டு வந்து விட்டார்.

ஆண்டாளுக்கும் வாசுவுக்கும் அவரை பார்த்ததே சற்று நிம்மதியாக இருக்க, மதுராவை மூவருமாக தான் நேற்று தேடினர்.

காலையில் இப்படி கார் நொறுங்கியதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் வாசுதேவன். எல்லாம் தவறாகவே நடக்கிறதே என்ற சந்தேகம் அவனுக்கு.

நேற்று மது காணாமல் போனாள். ஞானசுந்தரம் அடி பட்டார். காலையில் அவனது காரும் நொறுங்கியது. எல்லாமே யாரோ ஒருவன் தான் செய்கிறான் என்று தோன்றியது. யார் அவன் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

யோசித்துக் கொண்டே அவன் கிளம்பிக் கொண்டிருக்க வாசுவுக்கு அவனுடைய நண்பன் ஜாக்சன் அழைத்தான்.

“ஹலோ”

“டேய்.. சஞ்சய் ரீசண்ட் போஸ்ட் பாருடா”

“டேய்.. எனக்கு வேற வேலை இல்லையா? நான் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பிட்டு இருக்கேன். அப்புறம் பேசுறேன்”

“டேய்.. சொல்லுறத கேளு. அவன் போட்டோல மதுரா இருக்காடா”

“வாட்?”

வாசு அதிர, “சீக்கிரம் பாரு” என்றான்.

உடனே அழைப்பை துண்டித்து விட்டு சஞ்சய்யின் சமூகவலைதள கணக்கை திறந்து பார்க்க, தூரத்தில் மங்கலாக நின்றிருந்தாள் மதுரா. அவனது புகைப்படத்திற்கு கீழ் ஏகப்பட்ட கேள்விகள், யார் அந்த பெண்? என்று

ஆனால் சிலர், யாரோ ஒரு பெண் செல்ஃபி எடுக்கும் போது குறுக்கே வந்து விட்டதாக நினைத்து தட்டிக் கழித்தனர்.

வாசு பார்த்த உடனே கண்டு பிடித்து விட்டான் மதுவை.

“சஞ்சய்.. சஞ்சய்யா மதுவ…” என்றவன், உடனே சஞ்சய்யின் எண்ணை தேடிப்பிடித்து அழைத்தான்.

அழைப்பு சென்று கொண்டிருந்ததே தவிர, யாரும் எடுக்கவில்லை. அவன் தலையை பிடித்துக் கொள்ள, வாசுவின் அசிஸ்டன்ட் இடம் இருந்து அழைப்பு வந்தது.

“சார் உங்க பர்ஸ்னல் நம்பருக்கு லேண்ட் லைன்ல இருந்து நிறைய மிஸ்ட் கால்ஸ் வந்துருக்கு” என்று கூறி காருக்குள் கிடந்த கைபேசியை தூக்கி வந்து கொடுத்தான். அது சைலண்ட்டில் இருந்ததால், அவன் அப்போது பார்க்கவே இல்லை.

‘மது கூப்பிட்டு இருப்பாளோ?’ என்று நினைத்தவன், அந்த எண்ணிலிருந்து சஞ்சய்யைஅழைக்க, அப்போதும் அவன் எடுக்கவில்லை.

அவன் மதுராவிடம் டீல் பேசிக் கொண்டிருந்தானே. எங்கிருந்து அழைப்பை எடுப்பான்?

பல முயற்சிக்கு பிறகு சஞ்சய்யை அழைப்பதை விட்டு விட்டு, ஜவஹரை அழைத்தான்.

“ஹலோ” என்று எடுத்ததுமே, “எங்க சஞ்சய்?” என்று கேட்டான்.

“எந்த சஞ்சய்? நீங்க யாரு?”

“நடிக்காத. உனக்கு என் நம்பர் தெரியும்னு எனக்கு தெரியும். தெரியாமலா மதுவ தூக்கி இருக்கீங்க. எங்க அவன்?”

“பேசுறது வாசுதேவன் சாரா?”

“டேய்.. எங்கடா மது?”

“எனக்கு தெரியாது”

“என் பொறுமைய சோதிக்காத. அவன் கிட்ட போன கொடு”

“உங்களுக்கு பேச விருப்பமிருந்தா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வாங்க சார். இப்படி எல்லாம் பேச முடியாது”

சொன்னதோடு அழைப்பை துண்டித்து விட, வாசு கோபத்தின் உட்சத்திற்கு சென்று விட்டான். எதையாவது தூக்கிப்போட்டு உடைக்கும் வெறியில் அவன் நிற்க, ஆண்டாளும் ஞானசுந்தரமும் வந்தனர்.

“போகலாமா?” என்று கேட்டுக் கொண்டு.

“அங்கிள்.. மது..”

“இருக்க இடம் தெரிஞ்சுடுச்சா?” என்று ஆண்டாள் பரபரப்பாக கேட்க, தலையை மட்டும் ஆட்டினான்.

“எங்க? எங்க?”

“இத பாருங்க”

சஞ்சயின் படத்தை காட்ட, பின்னால் இருந்த மதுவை கண்டு பிடித்து விட்டனர்.

“இது மது.. மது தான்..”

“இந்த பையன் கிட்ட போய் கேட்கலாமா? எங்க இருக்கான்னு?” என்று ஆண்டாள் பரபரக்க, “கடத்துனதே இவன் தான்” என்றான் வாசு.

“என்ன சொல்லுற?” என்று கேட்ட ஆண்டாள் அதிர்ந்து போய் விட்டார்.

“ஆமா அத்த. என்னோட எதிரி இவன். என் மேல இருக்க கோபத்துல இவள கடத்திருக்கான்.”

ஆண்டாள் பேச்சற்றுப் போக, “அப்ப இவன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்கலாம். கிளம்பு” என்றார் ஞானசுந்தரம் கோபமாக.

“இல்ல அங்கிள். அவன் மேல கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் வேஸ்ட். அவன் யாரு தெரியுமா?”

“யாரா இருந்தா என்ன? என் பொண்ண எதுக்கு கடத்துறான்? அவன் எவ்வளவு பெரிய கொம்பனா வேணா இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன்”

“அங்கிள் ப்ளீஸ்… அவன் யாருனு தெரிஞ்சுக்கோங்க. அவன் ஒரு ஆக்டர்”

“ஒரு நடிகனா? அவனுக்கு இவ்வளவு தைரியமா? அவனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?”

“ஆக்டர் மட்டுமில்ல. அவன் சி.எம் தத்து பிள்ளை அங்கிள்”

இதைக்கேட்டதும் அதிர்ந்து போய் பார்க்க, “ஆந்திரா சி.எம் விபாகரன் தத்து பிள்ளை அவன். இப்ப மது ஆந்திரால தான் இருப்பா. நாம இங்க கம்ப்ளைண்ட் கொடுக்குறது வேஸ்ட்” என்றான்.

இதைக்கேட்டு ஆண்டாள் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார். கண்ணீர் வேறு அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தது. ஞானசுந்தரத்திற்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

முதலில் அதிர்ந்தாலும் பிறகு, “அவனுக்கும் உனக்கும் பிரச்சனைனா எதுக்கு என் புள்ளைய தூக்கனும்?” என்று ஞானசுந்தரம் எகிற, வாசுவிடம் பதில் இல்லை.

“கிளம்பு.. இப்பவே போய் என் மகள கூட்டிட்டு வரலாம். அவன் சி எம் பிள்ளையா இருந்தா என் மகள தூக்குவானா? பிரச்சனை உன் கூடனா உன்னை எதுவும் பண்ணிருக்கனும். என் வீட்டு பொண்ண கடத்துவானா? எந்திரிடி.. அவன ஒரு கை பார்க்குறேன்”

ஆண்டாளை அதட்டி விட்டு, ஞானசுந்தரம் விறுவிறுவென நடக்க, வாசு ஓடிச் சென்று அவரது வழியை மறித்தான்.

“அங்கிள்.. அவன் ரொம்ப மோசமானவன்.. ப்ளீஸ் அங்கிள்.. பொறுமையா இருங்க”

“என்ன பொறுமையா இருக்கது? என் மகள கடத்தி வச்சுருக்கான்”

“மது எனக்கும் முக்கியம் தான். ஆனா நாம எதாவது பண்ண போய், அவன் மதுவ எதாவது பண்ணிட்டா? ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க”

இந்த வார்த்தையில் ஆண்டாள் அரண்டு போக, ஞானசுந்தரமும் பின் வாங்கினார். மகளுக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவரை பிடித்து நிறுத்தியது.

“நான் அவன் கிட்ட பேசுறேன். முதல்ல இங்க இருந்து கிளம்புவோம். அவன் நம்மல கண்காணிச்சுட்டு இருப்பான்.”

“அது எப்படி போறது? என் மக இல்லாம போக மாட்டேன்.”

“காலையில என் கார் நொறுங்குனது.. நேத்து உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆனது எல்லாத்தையும் பண்ணது அவனா தான் இருக்கனும். இதுக்கும் மேல அவன் எதாவது பண்ணுறதுக்குள்ள நாம இங்க இருந்து கிளம்பிடனும். புரிஞ்சுக்கோங்க. வாங்க”

வாசு பேசப்பேச இருவர் முகத்தில் பீதி தெரிந்தது. நேற்று நடந்த விபத்து, காலையில் நொறுங்கிப்போன கார் எல்லாமே அவன் வேலையா? அவ்வளவு கொடூரமானவனிடம் மாட்டிக் கொண்டு மது என்ன பாடு படுகிறாளோ?

நினைக்கவே பெற்றோர் இருவருக்கும் குலை நடுங்க, வாசு அந்த நிமிடமே ஹோட்டலை காலி செய்து விட்டு கிளம்பினான்.

மதுரா தங்கியிருந்த ஹோட்டலில் தான் இவர்களும் இருந்தனர். புகார் செய்து விட்டு தான் கிளம்புவதாக இருந்தது. இப்போது அதை மாற்றிக் கொண்டனர்.

ஹோட்டல் முதலாளி கேள்வி கேட்க, மதுரா இருக்கும் இடம் தெரிந்து விட்டதாக கூறி விட்டு, இதை பற்றி பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு தமிழ்நாடு கிளம்பினர்.

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்