Loading

 

காலை விடிந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள் மதுரா. கார் மிக மெதுவாக சென்று கொண்டிருந்ததால் அவளது தூக்கம் கலையவே இல்லை. திடீரென சில இரைச்சல்கள் காதில் விழ, உடனே எழுந்து விட்டாள்.

சுற்றியும் பார்க்க, கதவை திறந்து இறங்கி நின்றான் சஞ்சய். அவளை பார்த்து வெளியே வரும்படி கையசைக்க, அவளும் இறங்கினாள்.

அவள் முகத்தில் இப்போது அவமான உணர்வு. கடத்தி வந்திருப்பவன் காரில் போய் தூங்கி இருக்கிறாளே? எவ்வளவு தைரியம்?

‘கொண்டு போய் எதாவது செய்ய மாட்டான்னு தைரியமா?’ என்று மனசாட்சி வேறு சாட, பதில் சொல்ல முடியாமல் நின்று சுற்றியும் பார்த்தாள்.

அது விமானநிலையம். அவளை எங்கே அழைத்துச் செல்கிறான் என்று புரியாமல் அவள் பார்க்க, “வா போகலாம்” என்றவன் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான்.

“எங்க.. எங்க போறோம்?”

“போனதும் தெரிஞ்சுக்க” என்றவன் அவளது கையை விடாமல் இழுத்துக் கொண்டு நடந்தான்.

சுற்றியும் ஆட்கள் இருக்க, யாரிடமாவது உதவி கேட்கலாமா? என்று தோன்றியது. அதற்கு முதலில் சஞ்சயை விட்டு தள்ளிச் செல்ல வேண்டும்.

“நான் ரெஸ்ட் ரூம் போகனும்” என்றாள்.

அவளை திரும்பிப் பார்த்தவன், “ஃப்ளைட்ல ஏறுனதும் போகலாம். போர்டிங் முடியப்போகுது” என்றவன் அவளை விடவில்லை.

யாரோ ஒருவன் ஓடி வந்து பயணசீட்டை கொடுக்க, அதை வாங்கிக் கொண்டான் சஞ்சய்.

“கார் நிக்குது மகேஷ். எடுத்துட்டு கிளம்பு” என்றதும் மதுரா அந்த மகேஷை முறைத்தாள்

நேற்று இவன் தானே ஞானசுந்தரத்தை கொல்லப் போனவன். அவனை முறைத்துக் கொண்டே சஞ்சய் இழுத்த இழுப்புக்கு அவள் நடக்க, மகேஷ் அவளது முறைப்பை பார்த்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் சென்று விட்டான்.

“இவன் தான என் அப்பாவ கொல்ல போனது?” என்று கேட்டவள் முகத்தில் கோபம் தாண்டவமாட, சஞ்சய் அவளை பார்த்து புன்னகைத்து விட்டு திரும்பிக் கொண்டான்.

“பண்ணுறத பண்ணிட்டு கண்டுக்காம போறான் பாரு.. ராஸ்கல்”

“அவன ஏன் திட்டுற?”

“ஆமா அவன ஏன் திட்டனும்? கொல்ல சொன்ன உங்கள தான் திட்டனும்”

மதுரா எகிற, சிரித்துக் கொண்டே அவளை விமானத்தில் ஏற்றி விட்டான்.

பிஸ்னெஸ் க்ளாஸாக இருக்க, அந்த பகுதியில் ஆட்களே இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்களை சேர்த்து வெறும் ஐந்து நபர்கள் தான் இருந்தனர்.

அவளை அழைத்துச் சென்று கழிவறையை காட்டியவன், அங்கேயே நின்று அவளை மீண்டும் இருக்கைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.

யாரிடமும் பேசவும் வழியில்லை. உதவி கேட்கவும் வழியில்லை. அவள் எப்போதடா வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்க, சஞ்சய் அவளை கண்டும் காணாமல் அமர்ந்திருந்தான்.

விமானம் புறப்பட்டது. அத்தனை பேரின் கைபேசி சேவையும் துண்டிக்கப்பட வேண்டியிருந்தது. கேட்டதும் கோபமும் ஏமாற்றமும் வந்தாலும், சஞ்சய்யை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அமைதியாகி விட்டாள்‌. அதற்கு மேல் இறங்கும் போது தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாடு வாங்கிக் கொடுத்தான் சஞ்சய். சாப்பிட்டாள். முன்னால் இருந்த தொலைகாட்சியில் படம் போட்டு பார்த்தனர். சில நிமிடங்களில் சஞ்சய் தூங்கி விட, மதுராவிற்கு சலித்து விட்டது.

அவன் தூங்குகிறான். ஆனால் இப்போது யாரிடமும் உதவி கேட்டாலும் பயனில்லை. விசயத்தை சொன்னால் காவல் துறையினர் உதவியுடன் தன்னை காப்பாற்றுவார்களோ? என்று யோசித்தாள்.

யாரிடம் சொல்வது என்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்க, “உன் அப்பாவ முழுசா பார்க்கனும்னா பேசாம இரு” என்று காதருகே ரகசியமாக கேட்டது குரல்.

தூக்கி வாரிப்போட திரும்பிப் பார்க்க, சஞ்சய் கண்ணை மூடி படுத்துக் கிடந்தான். அவன் தான் பேசினானா? இல்லை பிரம்மையா? என்று புரியாமல் அவள் பார்த்துக் கொண்டிருக்க, கண்ணையே திறக்காமல் சுட்டு விரலால் தொலைகாட்சி பக்கம் கையை காட்டினான்.

கண்ணை மூடியும் கூட அவனால் பார்க்க முடியுமா? என்று நினைத்து அதிர்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

விமானம் தரை இறங்கியதும், எப்படி அழைத்து வந்தானோ அதே போல் இழுத்துச் சென்று காரில் ஏற்றினான். இம்முறை அவன் காரை ஓட்டவில்லை.

ஜவஹர் ஓட்ட பின் இருக்கையில் மதுவோடு அமர்ந்தவன், “வீட்டுக்கு போ” என்று கட்டளையிட்டு விட்டு, அடுத்த நிமிடமே தூங்கி விட்டான்.

அவன் உண்மையிலேயே தூங்கி விட்டதை உறுதி செய்து கொண்ட மதுரா, சற்று முன்னால் வந்து ஜவஹர் தோளை தொட்டாள்.

அவன் கண்ணாடி வழியாக அவளை பார்க்க, சைகையில் அவனது கைபேசியை கேட்டாள்.

“சார் முழிச்சதும் அவர் கிட்டயே கேளுங்க மேடம்” என்றான் ஜவஹர்.

மதுரா சஞ்சய்யை ஒரு நிமிடம் பார்த்து விட்டு ஜவஹரிடம் கை கூப்ப, “சாரி மேடம்” என்றவன், அதன் பிறகு அவள் என்ன செய்தும் அவள் பக்கம் திரும்பவில்லை.

‘என்ன இவ்வளவு விஸ்வாசமா இருக்கான்? அய்யோ மெய்ட் இருப்பாங்க. யாரு கிட்டயாவது பேசி தப்பிச்சுடலாம்னு பார்த்தா முடியாது போலயே. டிரைவரே இப்படி இருக்கான். மத்தவங்களும் இப்படித்தான் இருப்பாங்க. அய்யோ.. எல்லாம் போச்சு. இதெல்லாம் இவன் கார்ல ஏறுறதுக்கு முன்னாடியே யோசிச்சுருக்கனும். மடச்சி மாதிரி ஏறி உட்கார்ந்துட்டு இப்ப புலம்புறேன். ஆண்டவா.. என்னை எப்படியாவது முழுசா எங்கப்பா அம்மா கிட்ட சேர்த்துடு’

தானாய் தனக்குள் புலம்பி கடவுளையும் அழைத்து வேண்டிக் கொண்டிருக்க, கார் நிற்காமல் சென்றது.

அது ஆந்திரா என்று மட்டும் அவளுக்குத் தெரியும். ஆனால் எந்த இடம்? எங்கு போகிறோம்? எதுவும் தெரியவில்லை.

சுற்றி பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றால், எல்லாம் தெலுங்கில் இருந்தது. அப்போது தான் ஒன்றை யோசித்தாள். சஞ்சய் பேசும் போது தமிழில் பேசினாலும், தெளிவான உச்சரிப்பாக இல்லை.

வேறு மாநிலத்தவன் கற்ற தமிழை போலவே பேசினான். இவன் தெலுங்கா? இவனுக்கும் வாசுவுக்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

புரியாமல் குழம்பிக் கொண்டே, வீடும் வந்து சேர்ந்து விட்டாள்.

முதலில் இருந்தது போல் இந்த வீடு காட்டுப்பகுதியில் இல்லை. சற்று விசாலமான தனி வீடாக இருந்தது. பிரம்மாண்டமாகவும்.

இவ்வளவு பெரிய வீடு இவனுடையதா? இவன் யார்? என்று பல விதமாக யோசித்துக் களைத்துப்போனாள்.

“பாஸ்..” என்று ஜவஹர் அழைக்க, சஞ்சய் எழவில்லை.

மதுரா அவனை திரும்பிப் பார்த்து விட்டு காரை விட்டு இறங்கினாள். ஜவஹரும் இறங்கி வந்து, சஞ்சய்யை தொட்டு எழுப்பியதும் கண் விழித்தான்.

“வந்தாச்சு பாஸ்” என்றதும் உடனே அருகிலிருந்தவளை தேட, அவள் காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள்.

சஞ்சய் இறங்கியதும் ஜவஹர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தான்.

மதுரா யாராவது தெரிகிறார்களா? உதவி கேட்போமா? இல்லை தப்பிப்போமா? என்ற கேள்வியோடு சுற்றியும் பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.

மிகவும் தூரமாக அவள் செல்லும் வரை பொறுத்திருந்த சஞ்சய், தன் கைபேசியை எடுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டான்.

தூரத்தில் சற்று மங்கலாக மதுரா தெரிய, அவனது முகம் அருகே தெரிந்தது.

எடுத்த படத்தை அப்போதே சமூக வலைதளத்தில் போட்டு விட்டு, கைபேசியை சட்டை பையில் வைத்துக் கொண்டு, மதுராவை நோக்கிச் சென்றான்.

“சுவரேறி குதிக்கிற ஐடியாவா?” என்று அருகே கேட்ட குரலில் பயந்து போய் அவள் திரும்ப, “இன்னுமா என் வாய்ஸ் உனக்கு பழகல? பயந்து போறியே” என்றான்.

“உங்க வாய்ஸ் எனக்கு ஏன் பழகனும்? உங்கள முன்ன பின்ன எனக்கு தெரியாது சார். நேத்து பார்த்துட்டு இன்னைக்கு பழகலயானு கேட்டா?”

இருந்த எரிச்சலில் அவள் எறிந்து விழ, சஞ்சய் அவளை மேலும் கீழும் பார்த்து வைத்தான்.

“ரொம்ப சூடாகிட்ட.. உள்ள போகலாம் வா”

அவள் கையை பிடித்து இழுக்க உடனே உதறி விட்டு, “நானே வர்ரேன்” என்றாள்.

தோளை குலுக்கி விட்டு அவன் முன்னால் நடக்க, பின் தொடர்ந்தாள்.

உள்ளே சென்றதும் ஒரு பெண்மணி வந்து அவன் முன்னால் நின்றார்.

“இவங்க முனியா. இந்த வீட்டோட எல்லாம் இவங்க தான்”

மதுராவிடம் சொல்ல, அவளது முகம் இப்போது தான் தெளிவானது. ஒரு பெண் துணைக்கு இருக்கிறாரே. தைரியம் வந்தது.

மதுரா தலையாட்ட, “முனியா டேக் கேர்” என்றவன் மதுராவை பார்க்காமல் விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டான்.

முனியா மதுராவை பார்த்து கையசைவில் வருமாறு அழைக்க அவளோ, “உங்க கிட்ட ஃபோன் இருக்கா?” என்று தான் கேட்டாள்.

கூடவே சஞ்சய் சென்ற பாதையையும் பார்த்துக் கொண்டாள்.

அவரோ இல்லை என தலையாட்ட, “இந்த வீட்டுல எங்க ஃபோன் இருக்கு?” என்று கேட்டாள்.

அவர் தொலைபேசி பக்கம் கை காட்ட, ஓடிச் சென்று அதை எடுத்தவள் ஞானசுந்தரத்தின் எண்ணை அழுத்த ஆரம்பித்தாள்.

படபடக்கும் இதயத்தோடு சஞ்சய் சென்ற பாதையை பார்த்துக் கொண்டு, தொலைபேசியை கையில் பிடித்துக் கொண்டு அவள் காத்திருக்க, அழைப்பு சென்றதே தவிர யாரும் எடுக்கவில்லை.

அதை துண்டித்து விட்டு வாசுவின் எண்ணை அழுத்தினாள். அவனுக்கும் அழைப்பு போனது. அவனும் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தவளுக்கு பதட்டத்தில் கண்ணீரே வந்திருந்தது.

“வாசு பிக் அப்” என்று அவள் அழுகையை அடக்கிக் கொண்டு மீண்டும் முயற்சித்துக் கொண்டிருக்க, முனியா அங்கிருந்து மெதுவாக நகர்ந்து விட்டார்.

வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தவள் சஞ்சய் சென்ற திசையை பார்க்க, அங்கு அவன் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“எடுக்கலயா?” என்று சஞ்சய் சாதாரணமாக கேட்க, மதுராவின் இதயம் எகிறி குதித்தது.

மரணபீதி கண்ணில் தெரிய, அவள் எச்சிலை விழுங்கிக் கொண்டு பார்க்க, “அப்போ அட்டன் பண்ணல?” என்று கேட்டவன் அவளை நோக்கி வந்தான்.

மதுவுக்கு உயிர் போய் விட்டது.

“நான் ட்ரை பண்ணுறேன்.” என்று அருகே வந்து தொலை பேசியை தாங்கியில் வைத்து விட்டு, தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

“எங்க இருக்க?”

“வாசுதேவன் சார ஃபாலோவ் பண்ணிட்டு ஹை வே-ல போயிட்டு இருக்கேன் பாஸ்”

“எதுல போயிட்டு இருக்கான்?”

“கார்ல”

“அந்த கார லாரிய வச்சு நொறுக்கிட்டு ஃபோட்டோ அனுப்பு. பத்து நிமிஷத்துல கூப்பிடுறேன்” என்று வைத்து விட்டான்.

அது வரை பயத்தில் உறைந்து போயிருந்த மது, கடைசி பேச்சைக்கேட்டு, “அய்யோ” என்று அலறி விட்டாள்.

“ப்ளீஸ் ப்ளீஸ்.. நான் பண்ணது தப்பு தான். அவர ஒன்னும் பண்ணிடாதீங்க.. என்னை வேணா தண்டிங்க.. அவர் பாவம் ப்ளீஸ் சஞ்சய்.. அவர விட சொல்லுங்க” என்று அவன் கையைப்பிடித்துக் கொண்டு கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

“உனக்கு சப்பாத்தி ஓகேவா? சப்பாத்தி வித் தக்காளி சட்னி. செம்ம காம்போ. சாப்பிட்டிருக்கியா? நேத்து குருமால சாப்பிட்ட இன்னைக்கு சட்னி பண்ணலாம்” என்று சம்பந்தமில்லாமல் பேசி வைத்தான் அவன்.

மதுவுக்கு கண் கலங்கி விட்டது.

“நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன். இந்த ஒரு தடவ மன்னிச்சுடுங்க. சத்தியமா இனி நான் யாரு கூடயும் பேச ட்ரை பண்ண மாட்டேன். ப்ளீஸ் சஞ்சய்.”

மது கெஞ்சிக் கொண்டு அவன் பின்னால் அலைய, அவனோ நேராக சமையலறைக்குள் நுழைந்தான்.

“சப்பாத்தி பண்ண போறேன் முனியா. எடுத்துக் கொடுங்க” என்று கேட்க, அவர் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொடுத்து விட்டு, நகர்ந்து விட்டார்.

மதுராவோ இன்னும் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அதைப்பற்றிக் கவலை படாமல், மாவை எடுத்து பாத்திரத்தில் கொட்டிக் கொண்டிருந்தான் சஞ்சய்.

உடனே அவன் கையைப்பிடித்துக் கொண்டவள், “அவரு பாவம்.. அவர விடச்சொல்லுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சியவளின் கண்ணீர் கண்ணைத்தாண்டி இருந்தது.

அவளைத்திரும்பியும் பார்க்காமல் மாவுக்கு தண்ணீரை ஊற்றி பிசையவும் ஆரம்பித்து விட்டான்.

கெஞ்சிப்பயனில்லை என்று புரிய, முகத்தை மூடிக் கொண்டு அழுதுவிட்டாள். வாசுவின் உயிர் அவளால் போகப்போகிறது என்று நினைக்கவே தாங்க முடியவில்லை.

இந்த நிமிடத்தில் செத்து போனால் கூட என்ன? என்று தோன்றி விட, தரையில் மண்டியிட்டு அழுதாள்.

ஆனால் அதுவும் இரண்டு நிமிடம் தான். மீண்டும் சஞ்சய்யிடம் நிமிர்ந்து கெஞ்சினாள்.

“அவரு பாவம்… என்னால அவரைப்போய்.. ப்ளீஸ் சஞ்சய்.. நான் இனிமே இப்படிப் பண்ண மாட்டேன். இந்த ஒரு தடவ மட்டும்…”

கெஞ்சிக் கொண்டிருந்தவளை திரும்பிப் பார்த்தவன், “சப்பாத்தி மாவுல கொஞ்சம் எண்ணை சேர்த்து பிசைஞ்சா சாஃப்ட்டா இருக்கும். தெரியுமா உனக்கு?” என்று கேட்டு வைத்தான்.

அவனது முகத்தை வெறித்துப் பார்த்தவளுக்கு, கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

நிமிடங்கள் கடக்க கடக்க, அவளது அழுகை அதிகமாகியது. ஆனால் சஞ்சய் கொஞ்சமும் கண்டுகொண்டான் இல்லை.

சப்பாத்தி மாவை பிசைந்து வைத்தவன், “இந்த மாதிரி துணி போட்டு வச்சா ஃப்ரஸ்ஸா இருக்கும் மதுரா. கத்துக்க சொல்லிக் கொடுக்கும் போதே. கல்யாணம் ஆகப்போற பொண்ணுக்கு சமையல் முக்கியமாமே?” என்றவன் துணியை வைத்து மூடி விட்டு, கையை கழுவிக் கொண்டான்.

நேரம் கடந்து பத்து நிமிடம் முடிந்தே விட்டது. சஞ்சய் கையைத்திருப்பிப் பார்க்க, கைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி கேட்டது.

மதுவுக்கு பாதி உயிர் போய் விட்டது.

செய்தியை எடுத்துப் பார்த்தவன் முகத்தில் புன்னகை மலர, மதுவுக்கு அதைப்பார்த்து மயக்கம் தான் வந்தது.

உடனே அடிக்கச்சொன்னவனை அழைத்த சஞ்சய், “குட்” என்று பாராட்டினான்.

“சொன்னபடி வேலைய முடிச்சுட்ட மேன். வெல் டன்”

“மை டியூட்டி பாஸ்”

இருவரும் பேசிக் கொள்வதை கேட்ட மது, இரண்டு கையாலும் பொங்கி வந்த அழுகையை அடக்கினாள். வாசு செத்து விட்டானா? செத்தே விட்டானா?

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்