மதுரா எவ்வளவு பேசியும் சஞ்சய் கண்டு கொள்ளாமல் இருக்க, அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவளை சமைக்க அழைத்துச் சென்றவன், ஒவ்வொரு வேலையாய் வேறு சொல்ல, அவளும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
சப்பாத்திக்கு மாவை பிசைந்து வைத்து விட்டு, “நான் வாஷ் பண்ணிட்டு வர்ரேன்” என்று சஞ்சய் மீண்டும் அறைக்குள் சென்று விட, மதுரா வீட்டை அலசினான்.
எங்கும் தொலைபேசி இல்லை. தேடித்தேடி ஓய்ந்து போனவள், கண்ணீரை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.
சஞ்சய் வந்து சப்பாத்தியை செய்து கொடுத்து, அவளை உண்ணவும் வைத்தான்.
அழுகையை அடக்கிக் கொண்டு அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, “இப்ப ஏன் அழுற?” என்று கேட்டான்.
கேட்டதுமே கன்னத்தை தொட்டு விட்ட கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டவள், “வருது அழுறேன்” என்றாள்.
“அதான் ஏன்? காரம் அதிகமா இருக்கா?” என்று கேட்டு வைத்தான்.
நிமிர்ந்து பார்த்து முறைத்தவளுக்கு, மேலும் அழுகை தான் வந்தது.
“உன்னை ரொம்ப தைரியமான பொண்ணுனு நினைச்சுட்டேன். இப்ப இப்படி அழுற”
சாப்பிட்டுக் கொண்டே சாதாரணமாக அவன் பேச, அவளுக்கு அழுகை தான் விம்மி வெடித்தது.
“எனக்கு வீட்டுக்கு போகனும்” என்றாள் அழுது கொண்டே.
“நீ என்ன ஸ்கூல் பிள்ளையா?”
“எனக்கு வீட்டுக்கு போகனும். என்னை விட்டுருங்க”
“நோ சான்ஸ் பேபி”
“எதுக்காக… வாசு.. வாசு கிட்ட தான உங்களுக்கு பிரச்சனை? நான் வேணும்னா அவர் கிட்ட பேசுறேன். உங்க பிரச்சனைய சால்வ் பண்ணி வைக்கிறேன்”
“பிரச்சனையா? என்ன பிரச்சனை?”
“அத நீங்க சொல்ல மாட்டேங்குறீங்களே.. என் கிட்ட சொல்லுங்க. நான் சால்வ் பண்ணுறேன். அதுக்காக ஒரு பொண்ண கடத்துறது தப்பு”
“ஒரு பொண்ண கடத்துறது தப்பு தான்”
“பாருங்க உங்களுக்கே புரியுது. நாம பேசி தீர்த்துக்கலாமே”
“நான் சாதாரண பொண்ண கடத்தல பேபி. வாசுவோட மணப்பெண்ண கடத்திருக்கேன்”
சஞ்சய் கண்ணடிக்க, மதுரா அதிர்ந்து போய் பார்த்தாள்.
“அப்படினா?”
“அப்படித்தான். சீக்கிரமா சாப்பிடு. ஆறிட்டே இருக்கு பாரு”
தட்டை ஒரு நொடி பார்த்துக் கொண்டவள், “என்ன பிரச்சனை உங்களுக்கும் வாசுவுக்கும்?” என்று கேட்டாள்.
அவன் பதில் சொல்லாமல் போக, மதுரா தானாய் எதோ யோசித்தாள். ஆனால் உருப்படியாக எதுவும் பிடிபடாமல் போனது.
சாப்பிட்டு முடித்து எழுந்ததும், சஞ்சய் பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு அவளிடம் வந்தான்.
“தூங்க போ பேபி. குட் நைட்”
சொல்லி விட்டு நடக்க, “உங்களுக்கு கொஞ்சமும் மனசாட்சியே இல்லையா?” என்று கேட்டு விட்டாள்.
அவளை திரும்பிப் பார்த்தான்.
“தப்பான ஆசையில கடத்திருந்தா கூட, அவனுக்கு இதான் வேணும்னு தெரிஞ்சு போராடவாவது செய்வேன். இப்படி கூட்டிட்டு வந்து உட்கார வச்சு, எதுவுமே சொல்லாம போயிட்டு இருக்கீங்க. கண்ண கட்டி காட்டுல விடுறதுனு கேள்வி பட்டுருக்கேன். இங்க கண்ணு திறந்து இருந்தும், நடு காட்டுல ஒன்னுமே தெரியாம யாருனே தெரியாத ஒருத்தனோட ஒரு வீட்டுல உட்கார்ந்துருக்கேன்.”
கண்ணீரை துடைத்துக் கொண்டே அவள் பேசிக் கொண்டிருக்க, சஞ்சய் சில நொடிகள் யோசித்து விட்டு அவள் முன்னால் வந்து அமர்ந்து கொண்டான்.
“வந்து உட்கார்” என்று சோபாவை காட்ட, அவளும் அமர்ந்து விட்டாள்.
“ரொம்ப அழுற பேபி. இனி அழுகைய குறைச்சுக்க. எனக்கு அழுறவங்கள சுத்தமா பிடிக்காது.”
அழுத்தமாக சொன்னதும் கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவனை பார்த்தாள்.
“நாளைக்கு நாம இங்க இருந்து போயிடலாம். ஆனா அதுக்கு முன்னாடி நீ ஒரு விசயத்துக்கு ஒத்துக்கனும். உன் அப்பா இன்னும் என் கஸ்டடில தான் இருக்கான். அவன் பத்திரமா இருக்கனும்னா.. உன் கல்யாண நாள் வரை நீ என் கூட தான் இருக்கனும்”
“வாட்?”
“பயப்படாத கல்யாணத்தன்னைக்கு உன்னை கொண்டு போய் உன் காதலன் கிட்ட சேர்த்துடுவேன். உன் கல்யாணத்த நடத்திக்க. பட் இடையில இருக்க ஒரு மாசம் நீ என் கூடத்தான் இருக்கனும்.”
மதுரா அவனை பயந்து போய் பார்த்திருந்தாள். இதுவரை நிச்சயதார்த்தம் தான் முதலில் வைப்பதாக இருந்தது. இன்று காலையில் தான், ஆண்டாள் நேரடியாக திருமணம் வைப்பதை பற்றி அவளிடம் கூறி இருந்தார்.
நிச்சயம் வைத்து முகூர்த்தம் வைக்க தேதி கிடைக்காததால், நேரடியாக நிச்சயமும் திருமணமும் அடுத்தடுத்த நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
காலையில் அவள் அறிந்த விசயத்தை, இரவு யாரோ ஒருவன் சொல்லும் போது திகிலாகத்தான் இருந்தது. அவளை எவ்வளவு தூரம் கண்காணித்து இருக்கிறான் என்று புரிந்தது.
“அது வரை என் அப்பா?”
“நீ என் கூட இருப்பனா, உன் அப்பாவ நாளைக்கே விட்டுருவேன். உன் கல்யாண வேலைய பார்க்கனும்ல? ஆனா அவன் உயிர் எப்பவும் என் கிட்ட தான் இருக்கும்”
“நான் சம்மதிக்கலனா?”
“இங்க தான் அடுத்த ஒரு மாசமும் இருப்ப. உன் கூட நானும்”
அரை நாளுக்கே தாங்க முடியவில்லை. ஒரு மாதம் இவனோடு தனியாக இதே வீட்டிலா?
“நான் சரினு சொன்னா?”
“இங்க இருந்து வேற இடத்துக்கு போயிடுவோம்.”
“அங்கயும்.. நான்.. நீங்க தனியா..”
“மெய்ட் இருப்பாங்க”
சட்டென முகம் ஒளிர, “ஓகே” என்று விட்டாள்.
“இப்ப போய் தூங்கு. அழுதுட்டே இருக்காத” என்றவன் உடனே எழுந்து சென்று விட்டான்.
மதுரா சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து இருந்தாள். மனதில் பல எண்ணங்கள். ஆண்டாள் அவளை தேடிக் கொண்டிருப்பார். கிடைக்காமல் அழுதிருப்பார். ஞானசுந்தரம் வேறு இவன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார். அவரும் இல்லாமல், மகளும் இல்லாமல் ஆண்டாள் எப்படி தவித்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கும் போதே, கண்ணீர் மீண்டும் உடைப்பெடுத்தது.
சத்தமில்லாமல் அன்னையை நினைத்து அழ ஆரம்பித்தாள்.
________
அங்கு ஆண்டாள் உண்மையில் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, பயந்து கொண்டு தான் அமர்ந்திருந்தார்.
கணவனும் மகளும் போன இடம் தெரியவில்லை. வாசு அவரை கேரளா அழைத்து வந்திருந்தான். நீண்ட பயணத்தில், கணவனையும் மகளையும் காணவில்லை என்பதை நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தார்.
வாசுவும், எப்படியாவது ஞானசுந்தரத்தையாவது கண்டு பிடித்து விட முடியுமா? என்று தேடிக் கொண்டிருந்தான். அவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. கடைசியாக யாரிடம் பேசினார் என்று விசாரிக்க சொல்லி விட்டு, மதுவை தேடி வந்தான்.
ஹோட்டலில் யாருக்கும் விவரம் தெரியவில்லை. எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு, மதுராவை அழைத்துச் சென்றிருக்கிறான்.
மற்ற பெண்களை பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, ஹோட்டல் முதலாளியோடு முடிந்த வரை தேட ஆரம்பித்தான். கண்காணிப்பு கேமராக்களில் எதுவும் பதிவாகவில்லை.
மதுரா ஹோட்டலுக்குள் வந்தது மட்டுமே இருந்தது. திரும்பி வெளியேறிய காட்சிகளை காணவில்லை.
“சார்.. இது கம்ப்ளீட் ப்ளான்ட். க்ளீன் கிட்னாப்னு தோனுது. எதுக்கும் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கலாம்” என்று ஹோட்டல் முதலாளி சொல்லி விட, வாசுவுக்கும் அதே எண்ணம் தான்.
ஆனால் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் இருந்த ஞானசுந்தரத்தையும் மதுராவையும் கடத்தி இருக்கிறான் என்றால்? யார் அவன்?
அழும் ஆண்டாளையும் ஒரு பக்கம் சரி படுத்த வேண்டி இருந்தது. இரவெல்லாம் எதாவது கிடைக்குமா என்று தேடி ஓய்ந்து விட்டு, காலையில் காவல்நிலையத்தில் புகார் அளிக்க கிளம்பினர்.
_______
மதுரா இரவெல்லாம் தூங்கவில்லை. பெற்றவர்களை நினைத்து நினைத்து அழுது கொண்டே அமர்ந்திருந்தாள். நள்ளிரவு நேரமாகி விட, கதவு தட்டும் சத்தம் கேட்டது.
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
“மதுரா வெளிய வா” என்று கதவை தட்டினான் சஞ்சய்.
“எ.. எதுக்கு?”
“கேள்வி கேட்காம வா” என்று அதட்டியவன் மேலும் கதவை தட்ட, உள்ளம் நடுங்க எழுந்து சென்று கதவில் கை வைத்தாள்.
ஆனால் திறக்கவில்லை. நள்ளிரவு நேரம். தெரியாத ஆண்மகன் அவன். கதவை பூட்டிக் கொண்டு பாதுகாப்பாக இருப்பதை விட்டு விட்டு, கதவை திறந்து அவன் முன்னால் செல்வது புத்திசாலித்தனம் அல்ல.
அவள் கதவை திறக்க யோசித்துக் கொண்டிருக்க, சஞ்சய்க்கு கோபம் வந்து விட்டது.
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன். திரும்ப கடைசியா சொல்லுறேன். உன் மேல எனக்கு ஆசை இல்ல. நீ என் டைப் உம் இல்ல. மரியாதையா வெளிய வா” என்று கத்த, எச்சிலை விழுங்கிக் கொண்டு கதவை மெதுவாக திறந்தாள்.
அவளை முறைத்த சஞ்சய், “வெளிய வா” என்று அதட்டி விட்டு சென்றான்.
அவனது கோபத்தை பார்த்தவளுக்கு பயம் வந்தாலும், வெளியே வந்து விட்டாள்.
“இன்னும் அழுதுட்டு தான் இருக்கியா?”
அவள் பதில் சொல்லாமல் பார்க்க, “கிளம்பு.” என்றவன் கதவை திறந்து வெளியே சென்றான்.
“இப்பவா?”
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் நடக்க, வேறு வழியில்லாமல் அவனை பின் தொடர்ந்தாள்.
இருவரும் காரில் கிளம்ப, இருளில் ஒன்றுமே தெரியவில்லை அவளுக்கு. நள்ளிரவு நேரம் அவனோடு தனியாய் பயணம் செய்தாலும், சற்று முன்பு அவன் கோபமாக சொன்ன விசயத்தை நம்பியதால், மனதில் பயம் குறைந்திருந்தது.
இங்கிருந்து சென்றால் போதும். பிறகு வேறு எதையும் யோசித்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் பாதையை கவனிக்க, இப்போது கேட்டை கடந்து தான் சென்றனர். நாய்கள் எதுவும் கண்ணில் படவில்லை.
சுற்றியும் பார்த்து விட்டு, “நாய காணோமே” என்றாள்.
“ம்ம்..”
அவன் பாதையில் கவனமாக இருக்க, “உங்க பேரென்ன?” என்று கேட்டு வைத்தாள்.
சஞ்சய்க்கு சிரிப்பு வந்தது.
“தெரிஞ்சு என்ன செய்யப்போற?”
“நான் இங்க இருந்து போனதும் உங்க பேர்ல போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கனும். அதுக்கு தான்”
தைரியமாய் சொன்னவளை திரும்பிப் பார்த்து புன்னகைத்தவன், மீண்டும் பாதையை பார்த்தான்.
“ஹலோ.. பேரென்ன?”
“சஞ்சய்”
“இந்த பேர வாசு சொல்லி நான் கேட்டதே இல்லயே”
“ஓஹ்”
“உங்களுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை? எதாவது சொன்னா தான தெரியும்.”
“தெரிஞ்சுக்க வேணாம் பேப்ஸ். அப்படி தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா, உன் காதலன் கிட்ட போய் கேளு.”
“அவருக்கும் எனக்கும் கல்யாணம்னு தெரிஞ்சு கல்யாணத்த நிறுத்த தான் என்னை கடத்துனீங்களா?”
“இல்லையே”
“அப்புறம்?”
அவன் அமைதியாய் இருக்க, அவளுக்கு சலித்து விட்டது. காரணத்தை சொல்ல மறுக்கிறானே.
“வாசுவ உங்களுக்கு எப்படித்தெரியும்?” என்று வேறு பக்கம் பேச்சை திருப்பி விசயத்தை அறிய பார்த்தாள்.
சஞ்சய் புன்னகைத்தானே தவிர வாயைத்திறக்கவில்லை. அவனிடம் பதில் வராது என்றதும், சில நொடிகள் மௌனமாக இருந்தாள்.
“அப்பா பாவம். அவர விட்டுருவீங்க தான?”
“உன் அம்மா கிட்ட உன் அப்பா போயாச்சு.”
“உண்மையா தானா சொல்லுறீங்க? அவருக்கு எதுவும் இல்லையே”
“மூணு பேரும் சேர்ந்து தான் உன்னை தேட ஆரம்பிச்சுருக்காங்க”
‘சேர்ந்தா?’ என்று யோசித்தவள் விசயம் புரிந்ததும், “அப்போ அப்பாவ நீங்க கடத்தி வைக்கலயா?” என்று கேட்டாள்.
அவன் பதில் சொல்லாமல் போக, “ப்ளீஸ் சொல்லுங்க. அப்பாவ கடத்தி வைக்கலயா? அவருக்கு என்னை கடத்திருக்க விசயம் தெரியாதா?” என்று கேட்டாள்.
அவன் அப்போதும் அமைதி காக்க, சோகமாக திரும்பிக் கொண்டாள். கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, வெளியே மழை தூரல் விழ ஆரம்பித்திருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் பெரும் மழை வர ஆரம்பித்து விடும் என்று புரிய, சஞ்சய் பாதையை மட்டுமே கவனித்தான்.
மது பெற்றோரை நினைத்துக் கொண்டு இருளை வெறித்துக் கொண்டிருந்தாள். காரில் மௌனம் கனமாக நிறைய, ஒரு இதமான பாடலை போட்டு விட்டான் சஞ்சய். அது என்ன மொழி என்று புரியவில்லை என்றாலும், கேட்க இதமாக இருந்தது மதுராவிற்கு.
பாடலை கேட்டுக் கொண்டே இருந்த மதுரா ஒரு கட்டத்தில் தூங்கி விட்டாள். மழை வெளியே பலத்து விட, காரின் வேகத்தை மேலும் குறைத்துக் கொண்டு மதுராவை பார்த்தான். அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, அவன் முகத்தில் புன்னகை வந்தது. அதில் எவ்வளவு வன்மம் கலந்து இருந்தது என்று அவள் அறியவில்லை.
நிம்மதியாய் உறங்குகிறாள் என்றால், அவள் நம்பிக்கையை சம்பாதித்து விட்டான். இதற்காக தானே அவளை இவ்வளவு பொறுமையாய் கையாண்டான். இல்லையென்றால் யார் மீதோ இருந்த கோபத்திற்கு, மதுரா பலியாகி இருப்பாள்.
காரை ஓரம் கட்டியவன், ஒரு போர்வை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டான். கூடவே தன் கைபேசியை எடுத்து தூங்கும் அவளை படம் பிடித்துக் கொண்டான்.
அந்த படத்தை பார்க்கையில் இதழ்கள் வன்மச்சிரிப்பில் வளைய, அதை அணைத்து போட்டு விட்டு காரை எடுத்தான்.
தித்திக்கும்.