Loading

 

காரை எடுத்த சஞ்சய் அவளை கண்டு கொள்ளாமல் ஓட்ட, திடீரென நினைவு வந்து, “வாசு? அவரு நல்லா இருக்காரு தான?” என்று பதட்டத்துடன் கேட்டாள் மதுரா.

“நல்லா தான் இருக்கான்.”

உணர்ச்சியில்லாமல் பதில் வர, “சத்தியமா அவர எதுவும் பண்ணல தான?” என்று கேட்டாள்.

“அவன அவ்வளவு சீக்கிரம் உலகத்த விட்டு அனுப்பிட்டா நான் வாழுறதே வேஸ்ட் பேப்ஸ். அதுனால பயப்படாத.”

அவனது கூற்றில் அதிர்ந்து போய் பார்த்தாள். எதுவோ புரிவது போல் இருக்க, கண்ணை அழுந்த துடைத்துக் கொண்டு திரும்பி நேராக அமர்ந்தாள்.

சில நிமிட பயணத்தில் ஒரு வீட்டை அடைந்தனர். மிக அருகிலேயே அந்த வீடு இருக்க, அப்போது தான் மது அது என்ன இடம் என்று பார்த்தாள். எந்த இடமென்று தெரியவில்லை. ஆனால் மிகவும் பீதியை கிளப்பியது.

காரை நிறுத்தி விட்டு அவள் பக்கம் வந்து கதவை திறந்து விட்டான் சஞ்சய்.

அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு இறங்கினாள்.

“உள்ள போகலாம்” என்று சஞ்சய் திரும்ப, மதுவின் பார்வை அந்த இடத்தை அலசியது.

விதவிதமான மரங்கள் அந்த இடத்தை மறைத்து இருந்தது.

இடையில் அழகான வீடு. சுற்றி ஆளுயரத்திற்கு சுற்றுச்சுவர். கேட் அடைத்து இருந்தது.

“அது ரிமோட் கன்ட்ரோல் கேட். சுத்தியும் பவர் சப்ளை இருக்கு. சும்மா தப்பிச்சு போக ட்ரை பண்ண மாட்டனு நினைக்கிறேன்?” என்று சஞ்சய் கேட்க, அவனை உணர்வற்ற பார்வை பார்த்தாள்.

“உள்ள போகலாம் வா” என்று கூறி, அவளை அழைத்துச் சென்றான்.

கதவை அவனே சாவி கொண்டு திறந்து உள்ளே செல்ல, திக்கென்றது அவளுக்கு. வீட்டில் யாரும் இருக்கப்போவது இல்லை.

‘கடவுளே.. இப்படி மாட்டிக்கிட்டேனே’ என்று அவள் உள்ளம் பதற, சஞ்சய் வாசலில் நிற்பவளை திரும்பிப் பார்த்தான்.

“வா மதுரா. அங்க நின்னு என்ன செய்யப்போற?”

“வீ.. வீட்டுல யாருமே இல்லயே”

அவள் குரல் நடுங்க அவளை ஆழ்ந்து பார்த்தவன், விறுவிறுவென சென்று அவளது கையைப்பிடித்து உள்ளே இழுத்து வந்தான்.

“விடு..ங்க” என்று அவள் பதற, உடனே கையை உதறினான்.

“இது தான் லாஸ்ட். திரும்ப சொல்ல வைக்காத. உன் மேல எனக்கு வேற எந்த ஆசையும் கிடையாது”

“அப்.. அப்புறம் ஏன்…” என்று ஆரம்பித்தவள், அவனது அழுத்தமான பார்வையில் வார்த்தை வராமல் நிறுத்தினாள்.

“உன் கிட்ட மறைக்கிற ஐடியா இல்ல. ஆனா இப்ப சொல்லுற ஐடியாவும் இல்ல”

அவள் புரியாமல் பார்க்க, அவள் கையைப்பிடித்து தூக்கியவன் அவளது கைக்கடிகாரத்தை கழட்டி விட்டான்.

“இங்க இருக்க வரை உன் வாட்ச் என் கிட்ட தான் இருக்கும். திரும்ப போகும் போது தர்ரேன்”

வாட்சை பாக்கெட்டில் போட்டுக் கொண்டவனை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியாமல் பார்த்தாள்.

“அது நார்மல் வாட்ச் தான்”

“தெரியும்” என்றவன் அங்கிருந்து நகர்ந்து சென்று கதவை காட்டினான்.

“இது ரூம். உனக்கு வேண்டிய எல்லாமே இருக்கும். ரிஃபரஸ் ஆகிக்கோ..” என்று நடந்தவன், “சொல்ல மறந்துட்டேன்.. உன் அப்பா இப்போ நல்லா தான் இருக்கான்” என்று திரும்பியே பார்க்காமல் பேசிக் கொண்டே வேறு அறைக்குள் சென்று விட்டான்.

இரண்டே அறைகள் தான் அங்கிருந்தது. அடுத்த அறையை நோட்டம் விட்டபடி உள்ளே சென்றாள் மதுரா.

மெத்தையும் ,மேசை நாற்காலியும் சுத்தமாக இருக்க, இரண்டு பக்கமும் அலமாரி இருந்தது.

எல்லாம் கண்ணில் பட்டாலும், மனம் என்னவோ தந்தையிடம் இருந்தது.

“அப்பா என்ன ஆனாங்கனு தெரியல. அம்மா வேற தேடுவாங்க. அய்யோ.. இங்க வந்து இப்படி மாட்டிருக்கேன். ஹவுஸ் அரஸ்ட்ல வச்சுட்டானே.. போனும் இல்லாம வந்தேன் பாரு.. மடச்சி மடச்சி.. இப்ப என்ன செய்யுறது?”

அறையில் நடந்தபடி தீவிரமாக யோசித்தாள்.

“இது என்ன இடம்னு கூட தெரியல. வாசு என்னை தேடுவார். அப்பா சரியாகனும். இங்க இருந்து போயிட்டா தப்பிச்சுடலாம். ஆனா அங்க நாய் வேற இருக்கு. நாய் தூங்கும் போது ஓடலாமா? நைட் போகலாமா?” என்று தீவிரமாக யோசித்தாள்.

‘பீரியட்னு சொல்லி பேட் கேட்கலாமா? அத அவனே வாங்க போய் நம்மல பூட்டி வச்சுட்டா? சுவர சுத்தி கரெண்ட் இருக்குனு சொல்லுறான். இந்த வீட்டுல மெயின ஆஃப் பண்ணிட்டா? அப்ப பவர் இருக்காது. தப்பிச்சுடலாம். ஆனா பாதை தெரியாதே. சுத்தியும் மரம் தான் இருக்கு. ஓடிப்போய் எதாவது கார் லிஃப்ட் கேட்டா? ஆனா லிஃப்ட் கொடுக்குறவன் நல்லவனா இல்லனா?’

இப்படியே யோசித்துக் கொண்டே சாதக பாதகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள். அவள் யோசனையில் மூழ்கி இருக்க, “மதுரா” என்று சஞ்சய் கூப்பிடுவது கேட்க, தூக்கி வாரிப்போட நிமிர்ந்து பார்த்தாள்.

“ஃப்ரஸ் ஆகலயா?” என்று கதவில் சாய்ந்து கொண்டு விருந்தினரை விசாரிப்பது போல் அவன் விசாரிக்க, அவளுக்கு பேச்சே வரவில்லை.

சமாளித்துக் கொண்டு வாயைத்திறக்கப்போக, “அந்த கபோர்ட்ல லெஃப்ட் சைட்ல உனக்கு தேவையானது எல்லாமே இருக்கும். பூட்டல. பத்து நிமிஷத்துல ஃப்ரஸ்ஸாகிட்டு வரனும்” என்று விவரமும் கொடுத்து விட்டு கட்டளையும் இட்டவன், கதவை அடைத்துக் கொண்டு சென்று விட்டான்.

அவன் சென்றதும் மூச்சை இழுத்து விட்டவள், தொய்ந்து மீண்டும் மெத்தையில் அமர்ந்தாள். உடனே அவன் சொன்னது ஞாபகம் வர சட்டென எழுந்தாள்.

அங்கிருந்த அவன் சொன்ன அலமாரியை திறந்து பார்க்க, நிறைய புடவைகளும் சல்வாரும் இருந்தன.

அவளுக்கு புடவை கட்டத்தெரியாது என்பதால் அதை விட்டு சல்வாரை பார்த்தாள். மற்றவையும் உள்ளே இருக்க, புருவம் சுருங்கியது.

‘இவன் இதெல்லாம் வாங்கி வச்சானா?’ என்று யோசித்தவள், அடுத்த அலமாரியை திறக்க அதில் ஒரு ஆணின் உடைகள் இருந்தது.

‘இவன் டிரஸ்ஸா? இங்க இருக்கே?’ என்று புரியாமல் குழப்பத்தோடு பார்த்தாள்.

யோசிக்கும் போதே அவன் சொன்ன பத்து நிமிடமும் ஞாபகம் வர, அலமாரியை மூடிவிட்டு அங்கிருந்த குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

முகம் துடைத்தபடி வெளியே வர, சஞ்சய் கதவை தட்டினான். ஆழ மூச்செடுத்துக் கொண்டு கதவை திறந்தாள்.

“உனக்கு சமைக்க தெரியுமா?”

“ஆன்? சமையலா?”

“தெரியுமா?”

“சமையல் செய்யவா கடத்திட்டு வந்தீங்க?”

“நான் உன்னை கடத்தவே இல்லமா.. நீயா தான் வந்த”

“இதயே திருப்பி திருப்பி சொல்லாதீங்க. உண்மைய சொல்லுங்க. நீங்க தான என் போன உடைக்க வச்சது? என் கெஸ் கரெக்ட்னா, என் கிட்ட வந்து வாசு வந்துருக்கதா சொன்னவன் கூட உங்க ஆளு தான். எதுக்காக இப்படி பண்ணுறீங்க? என் மேல வேற எந்த ஆசையும் இல்லனு சொல்லிட்டீங்க. நீங்க சொன்னதுக்காக நம்பல. நிஜம்மாவே உங்க பிகேவியர்ல என் மேல கேவலமா எதுவும் ஆசை இருக்க மாதிரி தெரியல. அப்புறம் எதுக்குங்க இப்படி பண்ணுறீங்க?”

மூச்சு விடாமல் கேள்வி கேட்டவளை சஞ்சய் ஆச்சரியமாக பார்த்தான். அவளை மக்கு என்று நினைத்திருந்தான். இல்லை என்று காட்டி விட்டாள்.

“கடத்திட்டு வந்தா கத்தி ஆர்பாட்டம் தான் பண்ணுவாங்க. நீ கூலா கேள்வி கேட்குறியே.. இன்ட்ரெஸ்டிங் பேபி”

“அப்ப கடத்துனத ஒத்துக்கிறீங்க. எதுக்காக கடத்துனீங்க? பணத்துக்காகவா? இல்ல வாசு கிட்ட எதாவது பகையா?”

“கிட்டதட்ட நெருங்கிட்ட.. சரி வா மிச்சத்தையும் நீயே யோசி. இப்ப சமைக்கலாம். நைட் சாப்பிடனும்ல?”

அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவன் செல்ல, மதுவிற்கு கோபம் தான் வந்தது.

“கைய விடுங்க. நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்?”

“சொல்ல பிடிக்கலனு அர்த்தம் பேபி”

“முதல்ல பேபினு கூப்பிடாதீங்க”

“உன்னை பார்த்தா பேபி மாதிரி தான் இருக்கு. பேபி..”

சஞ்சய் சிரிக்க, மதுராவிற்கு மொத்த சக்தியும் வடிந்தது போல இருந்தது.

“யாருங்க நீங்க? ஏன் இப்படி பண்ணுறீங்க? யாருனே தெரியாத ஒருத்தனோட காட்டுக்குள்ள தனியா ஒரு வீட்டுல இருக்கது எவ்வளவு பெரிய பயமான விசயம் தெரியுமா?”

அவள் திடமாக கேட்டாலும், கண்கள் பயத்தை காட்டியது. நடுங்கும் கையை முடிந்த வரை கட்டுப் படுத்திக் கொண்டாள். அவள் பயந்து கதறாமல் தன்னை திடமாக காட்டிக் கொள்ள நினைக்கிறாள். அப்போது தான் விசயத்தை அறிந்து இங்கிருந்து செல்ல முடியும்.

எத்தனையோ கதைகளில் படிக்கும் போதும், திரைப்படங்களை பார்க்கும் போதும், அவளாக தனக்குள் வகுத்துக் கொண்ட ஒன்று இது.

அடித்து துன்புறுத்தினால் கூட, அழாமல் விசயத்தை கேட்டு தீர்த்து வைக்க பார்க்க வேண்டும் என்று பல முறை நினைத்திருக்கிறாள். ஆனால் அது எல்லாம் அந்த அந்த நேர யோசனை தான். உண்மையில் அவளுக்கு நடக்கும் என்று நினைக்கவில்லை.

இப்போது நடந்து விட்டது. அழக்கூடாது என்று நினைக்கிறாள். பயப்படக்கூடாது என்று நினைக்கிறாள். ஆனால் உள்ளம் விடவில்லை. அவளது உடலை நடுங்க வைத்துக் கொண்டிருந்தது. சுமூகமாக பேசி இங்கிருந்து போனால் போதும் என்று தான் நினைக்கிறாள். ஆனால் அவனோ அவளை வைத்து விளையாடுகிறான்.

அவளை அப்போது தான் நன்றாக பார்த்தான் சஞ்சய். தைரியமாய் இருக்கிறாள் என்று நினைத்தால், தைரியமாய் காட்டிக் கொள்கிறாள் என்று இப்போது தான் புரிந்தது.

கை சில்லிட்டுப்போயிருந்தது. அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்துக் கொண்டு அவனை பார்த்தாள். கண்கள் இப்போதோ அப்போதோ அழ ஆரம்பித்து விடுவேன் என்று பயமுறுத்தியது.

“என் தப்பு தான். கார்ல ஏறி இருக்க கூடாது. அப்போ வேற என்ன செய்யனு தெரியல. அப்பானு வந்ததும் எமோஷனலாகிட்டேன். அது தப்பா? இப்படி கடத்திட்டு வந்து வச்சுட்டு.. ஏங்க? உங்களுக்கும் எனக்கும் என்னங்க சம்பந்தம்? நீங்க யாருனு கூட எனக்கு தெரியாது. என்னை விட்டுருங்க ப்ளீஸ்”

கண்ணீர் இமையை தாண்டி விட, கை கூப்பினாள். அவளால் வேறு எதுவும் யோசிக்கவும் முடியவில்லை. அவன் அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதற்காக, அவனை நம்பி அந்த வீட்டில் சும்மா இருந்து விட முடியுமா?

சஞ்சய் அவளது கண்ணீரை பார்த்து விட்டு, டிஸ்யூ டப்பாவை எடுத்து நீட்டினான்.

“துடைச்சுக்கோ”

அந்த டப்பாவை வெறித்துப் பார்த்தவளுக்கு தட்டி விடத்தோன்ற, யோசிக்காமல் செய்து விட்டாள்.

“நான் உங்க கிட்ட கெஞ்சுறேன். நீங்க விளையாடுறீங்க”

“உன் அப்பா உயிர் இன்னமும் கூட என் கையில தான் இருக்கு மதுரா.”

கீழே விழுந்த டப்பாவை எடுத்து வைத்து விட்டு, அவளை அழுத்தமாக பார்த்தான்.

“அவர ஏன் டார்கெட் பண்ணுறீங்க? உங்களுக்கு வாசு கூட பிரச்சனைனா அவர போய் பிடிங்களேன். நாங்க என்ன பண்ணோம்?”

“வாசுவ எது பண்ணாலும் உனக்கு ஓகேவா?” என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல் அவள் அதிர்ந்து பார்க்க, “அதுக்கு சரினு சொல்லு. உன்னை விட்டுட்டு அவன முடிச்சுடுறேன்” என்றான்.

மதுரா பயந்து போய் பார்க்க, சஞ்சய் அவளை பார்த்து சிரித்தான்.

“கஷ்டம் தான் போல.. காதலனாச்சே” என்று சிரித்தவன், “சரி வா பசிக்குது. எதாவது செஞ்சு சாப்பிடலாம்” என்று கூறி இழுத்துக் கொண்டு சென்றான்.

கண்ணை துடைத்துக் கொண்டவள், “அவங்க என்னை காணோம்னு தேடிட்டு இருப்பாங்க” என்றாள்.

“இன்னும் வாசுவுக்கு விசயம் தெரியாது. உன் அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும்.”

அவனை வெறித்துப் பார்த்தவள், “இப்பவாவது சொல்லுங்க. ஏன் இப்படி பண்ணுறீங்க?” என்று கேட்டாள்.

“உனக்கு காரம் பிடிக்குமா? சாப்பிடுவியா?”

சம்பந்தமில்லாமல் அவன் கேள்வி கேட்க, தலையை பிடித்துக் கொண்டாள்.

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்