“எங்கடி இவள காணோம்?” என்று மதுராவை தேட ஆரம்பித்த தோழிகள், அவளை ஹோட்டல் முழுவதும் தேடி கிடைக்காமல் பதட்டப்பட ஆரம்பித்திருந்தனர்.
ஒன்றும் புரியாமல் ஹோட்டலில் விசாரிக்க, யாருக்கும் விசயம் தெரியவில்லை. உடனே ஞானசுந்தரத்தை அழைக்க, அவருக்கு அழைப்பும் செல்லவில்லை. மற்றவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் சொல்ல ஆரம்பித்தனர்.
ஹோட்டலின் சிசிடிவி காட்சிகள் சுத்தமாய் காணாமல் போயிருந்தது.
மதுராவிற்கு எதோ ஆபத்து என்று புரிய, அழவே ஆரம்பித்து விட்டனர். அவர்களது வீட்டில் இருந்து ஆட்கள் வந்து அவர்களை மீண்டும் ஊருக்கு அழைத்துச் செல்லும் வரை போராட்டம் தான்.
ஞானசுந்தரம் வேறு என்ன ஆனார் என்று தெரியாமல் போக, ஆண்டாளுக்கு மட்டுமே விசயத்தை சொல்லி இருந்தனர்.
________
மது அந்த வீட்டை அன்னாந்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். சில நிமிடங்களில் மாறிய தன் வாழ்வை நம்ப முடியாமல் அரண்டு போயிருந்தாள். ஹோட்டல் அறைக்குள் இருந்தவளை, சத்தமே இல்லாமல் இங்கு அழைத்து வந்து விட்டான் அவன். இன்னும் பெயரைக்கூட சொல்லவில்லை.
ஞானசுந்தரத்தின் உயிரை பணயம், வைத்து அவளை சுலபமாகவே கடத்தி விட்டான். நினைக்க நினைக்க நெஞ்சு குமுறியது.
முதலில் அந்த இடத்திலிருந்து ஓடிவிடலாம் என்று முடிவு செய்தாள் தான். ஏன் இரண்டடி கூட எடுத்து வைத்து விட்டாள். ஆனால் சஞ்சய் விடுவதாக இல்லை.
“வாசு எங்க போயிட்டு இருக்கான் மகேஷ்?” என்று கேட்க, அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள்.
“அவனையும் தூக்க வேண்டி இருக்கும் போல. ரெடியா இரு” என்று கூற விறுவிறுவென அவனருகே வந்தாள்.
“யார் நீ? எதுக்கு இப்படி என்னை கடத்திட்டு வந்துருக்க?”
“நோ பேபி. நீயா தான் கார்ல ஏறுன”
“அதையே திரும்ப திரும்ப சொல்லாத. வாசுவுக்கும் என் அப்பாவுக்கும் எதாச்சும் ஆச்சு… உன்னை உண்டு இல்லனு ஆக்கிடுவேன்”
“அடேங்கப்பா.. பேபி மிரட்டுது”
எதோ திட்ட வந்தவள், உடனே எதுவும் செய்யாமல் திரும்பி நடந்தாள்.
ஆனால் அந்த பகுதியில் கையில் கைபேசி இல்லாமல் பாதையும் தெரியாமல் நடப்பதை நினைத்தால், திக்கென்று தான் இருந்தது.
“பேப்ஸ்.. நீயே நினைச்சாலும் இந்த எல்லைய கடந்து போக முடியாது. பட் உன் தைரியத்த பாராட்டுறேன். நேரா போய் முதல் லெஃப்ட் கட் பண்ணு. அப்புறம் உன் அப்பாவோட கடைசி காரியத்துக்கு எதாச்சும் ஹெல்ப் வேணும்னா கேளு” என்றவன் அதற்கு மேல் பேசவில்லை.
அவளோ எல்லாம் காதில் விழுந்தும் நிற்காமல் நடந்தாள்.
அவன் தன்னை பின் தொடராமல் அங்கேயே நிற்பதை பார்த்து சந்தேகம் வந்தாலும், தப்பி விடும் எண்ணத்தில் வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.
“கார்ல ஏறியிருக்கவே கூடாது. அறிவு கெட்டவளே.. ஹோட்டலுக்குள்ள போய் யாரோட ஹெல்ப் ஆச்சும் கேட்டுருக்கலாம். அத விட்டுட்டு கார்ல ஏறி இருக்க.. உனக்கெல்லாம் மூளையே கிடையாது” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டு ஓடவும் ஆரம்பித்தாள்.
பதட்டத்தில் வேலை செய்யாத மூளை, இப்போது நன்றாக வேலை செய்து கொண்டிருந்தது. இந்த மிரட்டலுக்கு பயப்படாமல் இங்கிருந்து சென்று தந்தையை காப்பாற்ற முயற்சிப்போம் என்ற முடிவுக்கு வந்திருக்க, சஞ்சய் சொன்னது போல் பாதை திரும்பியது.
ஒன்று நேராய் சென்றது. மற்றொன்று இடது பக்கம் சென்றது. அவன் சொன்னதை நம்ப முடியாது. ஒரு வேளை அங்கு எதாவது வைத்து, தன்னை தடுக்க நினைத்திருக்கலாம். எதற்கும் நேராகவே செல்வோம் என்று முடிவு செய்து நடக்க ஆரம்பித்தவள் திடீரென நின்றாள்.
சாலையின் நடுவே பெரிய இரும்புக் கதவு. அதைக்கடந்து தான் உள்ளே சென்றோம் என்பதே அவளுக்கு அப்போது தான் விளங்கியது.
அந்த கதவில் நான்கு நாய்கள். ஒவ்வொன்றும் அவள் உயரத்திற்கு இருந்தது. அத்தனையும் சாதுவாய் படுத்துக் கிடந்தது. ஆனால் அதன் கண்களும் உருவமும் அவளை மிரட்டியது.
அவளுக்கு நாயோ பூனையோ எதுவுமே பிடிக்காது. எங்கே பார்த்தாலும் காத தூரம் ஓடி விடுவாள். இப்போது ஒன்றுக்கு நான்காக படுத்துக் கிடக்க, இதயம் தொண்டைக்கு வந்து விட்டது.
“இதுங்கள தாண்டி போனா கடிச்சு கொதறிடும் போலயே.. பேசாம அவன் சொன்ன மாதிரி லெஃப்ட்டே திரும்பி இருக்கலாம்” என்றது மனசாட்சி.
“அந்த பக்கம் மட்டும் எதுவும் இல்லாம இருக்குமா? அவன போய் நம்புறியே” என்று மனசாட்சி தலையில் அடித்து அடக்கினாள்.
நாயை தாண்டித்தான் ஆக வேண்டும். ஆனால் எப்படி?
சுற்றும் முற்றும் பார்த்தாள். அடர்ந்த காடு. இறங்கி தாண்டினால்? யோசனை வந்து செடிகள் பக்கம் சென்றாள். பார்வை நாயையும் பார்த்துக் கொண்டது.
உள்ளே இறங்கி சுற்றி பார்க்க, கம்பியில் வேலிகள் போடப்பட்டு இருந்தது.
“இதுல போனா டிரஸ் கிழிஞ்சுட்டாலும் பரவாயில்ல. ரத்தம் வந்து மயங்கிட்டா?” என்று நகத்தைக் கடித்துக் கொண்டு பார்க்க, “அதுக்கு முன்னாடி சாக் அடிச்சு செத்துருவ” என்ற குரல் காதோரம் ஒலித்தது.
“அம்மா…” என்று அலறியே விட்டாள்.
அவ்வளவு நெருக்கத்தில் திடீரென அவனை பார்த்ததிலும், அவனது குரலும் கொடுத்த பயத்திலும் அலறி திரும்பியவள், பின்னால் கம்பியில் விழப்போக அவளது கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினான்.
“இப்பவே சாக ஆசையா?” என்ற கேள்வியோடு.
எச்சிலை விழுங்கிக் கொண்டு அந்த கம்பியை ஒரு முறை பார்த்தவள் அவனையும் பார்த்தாள்.
“நம்பிக்கை இல்லனா தொடு போ.. ” என்றவன் அவளை விட்டு விட, உயிர் பயத்தில் நான்கடி தள்ளிச் சென்றாள்.
“உன்னை லெஃப்ட் தான போகச்சொன்னேன்? எதுக்கு இங்க வந்த?” என்று அவன் கேட்க, “உன் பேச்ச நம்புவேன்னு நினைப்பா?” என்று எகிறினாள்.
“ஏற்கனவே சொன்னேன். மரியாதையா பேசிப்பழகுனு.” என்றவன் ஒரு விரல் நீட்டி எச்சரித்து விட்டு, “கரெக்ட் தான். நான் சொன்னதுக்காகவே நீ அந்த பக்கம் போக மாட்டனு தெரியும். அதுக்காக தான் சொன்னேன். இப்போ அந்த பாதையும் மூட சொல்லிட்டேன். முதல்லயே போயிருந்தா தப்பிச்சுருப்ப. அத மூட சொல்லிட்டு தான் இங்க வர்ரேன். அண்ட்…” என்று நிறுத்தினான்.
நடந்து கொண்டே பேசியவன், சாலையில் ஏறி நின்று திரும்பிப் பார்த்தான்.
“யூ ஆர் ட்ராப்ட்” என்று கூறி கண்ணை வேறு சிமிட்டி வைத்தான்.
மதுராவிற்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.
“இங்கயே நின்னா பசில சாகலாம். இல்லனா டாக்ஸ்க்கு சாப்பாடாகி சாகலாம். ஆனா எப்படியும் உன் அப்பாவுக்கு அப்புறம் தான் நீ போவ. அதுனால….”
பாதியில் நிறுத்தி விட்டு திரும்பிச் சென்றான்.
திக்கென்ற மனதுடன் நாயை ஒரு முறை பார்த்து விட்டு, அவன் பின்னால் ஓடினாள் மதுரா.
“என் அப்பாவ காப்பாத்துங்க ப்ளீஸ்..”
“கார் அங்க நிக்குது. உள்ள ரொம்ப தூரம் போகனும். வா” என்றவன் நடக்க, “அப்பா..” என்றாள்.
“அதெல்லாம் ஹாஸ்பிடல் அனுப்பிடலாம். கூடவே உன் காதலன் வாசுவையும்” என்று கூறி கண்ணடிக்க, “வாட்?” என்று அதிர்ந்தாள்.
“ரொம்ப லவ்வோ? இவ்வளவு கத்துற?” என்று கிண்டலடித்தவன் கைபேசியை எடுத்தான்.
“மகேஷ்.. என்ன செய்யுறான் அவன்?” என்று சஞ்சய் பேச, “கார் உள்ள இருந்து கத்திட்டு இருக்கார் பாஸ்” என்றான் மகேஷ்.
ஸ்பீக்கரில் போட்டிருக்க, மதுவும் இதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அய்யோ என் அப்பா.. ஏய் உனக்கு மனசாட்சி இல்லையா? அவர ஏன் இப்படி பண்ணுற?”
“இப்படி கேள்வி கேட்குறது தப்பாச்சே” என்று ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்தவன், மதுவை பார்த்து கேலியாக புருவம் உயர்த்தினான்.
அவள் அரண்டு போய் பார்க்க, “மகேஷ்.. நீ ஒன்னு பண்ணு.. கார்ல இருந்து அவன வெளிய இழுத்துட்டு வந்து நடுரோட்டுல போடு” என்றான்.
“நோ நோ.. அப்பாவ என்ன பண்ண போறீங்க? நோ..” என்று மது பதற, சஞ்சய் புன்னகையுடன் அவளை வேடிக்கை பார்த்தான்.
“வீடியோ கால் போடு மகேஷ். கண் குளிர பார்க்க வேண்டி இருக்கு” என்று சஞ்சய் அழைப்பை துண்டிக்க, உடனே வீடியோ கால் வந்தது.
அதை ஆர்வமாக சஞ்சய் பார்க்க, மது பயந்து போய் எட்டிப்பார்த்தாள்.
அங்கு கார் கதவை உடைத்து ஞானசுந்தரத்தை ஒருவன் வெளியே எடுத்தான். அங்காங்கே ரத்தத்துடன், கஷ்டப்பட்டு முனகிக் கொண்டு ஞானசந்தரம் வந்ததும், மதுவை கண்ணீர் விட வைத்து விட்டது.
“அப்பா.. அப்பா..” என்று மது கத்த, “நீ கத்துறது கேட்காது” என்று சஞ்சய் அவளது காதருகே வந்து சொன்னான்.
பட்டென விலகியவள், அவனை முறைத்து விட்டு, பார்வையை கைபேசிக்கு திருப்பினாள்.
“நல்லா இருக்கான்ல? உன் அப்பன்? இருக்க கூடாதுல?” என்று மதுவிடம் கேட்டு விட்டு, “அவன நடுரோட்டுல போட்டு லாரிய ரெண்டு தடவ மேல ஏத்துனா என்ன ஆவான் மகேஷ்?” என்று கேட்டான்.
“செத்துடுவான் பாஸ்”
“நோ..” என்று மது அலறினாள்.
“சாக வேணாம். ஒரு தடவ ஏத்திடு. உயிர் இருக்கனும். பாவம் அவன் பொண்ணு ரொம்ப அழுறா” என்றவன் அவள் கண்ணீரை துடைப்பது போல் வர, அவனிடமிருந்து முகத்தை நகர்த்தினாள்.
“இன்னும் நீ சரினு சொல்லல..”
“நோ நோ ப்ளீஸ். அப்பாவ விட்டுருங்க. அவரு பாவம்” என்று அவள் கெஞ்ச, சஞ்சய் வீடியோவில் கண்ணை பதித்து இருந்தான்.
“வேணாம். என் அப்பாவ விடுங்க” என்று அவள் கெஞ்ச கெஞ்ச கண்டு கொள்ளாமல் அவன் நிற்க, நடுசாலையில் ஞானசுந்தரம் படுக்க வைக்கப்பட்டார்.
அவரை காரிலிருந்து வெளியெடுத்தவன், அங்கிருந்து ஓடி விட லாரி கிளம்பியது.
“ப்ளீஸ் வேணாம். நிறுத்த சொல்லுங்க” என்று மது கெஞ்சிக் கொண்டே இருக்க, லாரி அதீத வேகத்தில் ஞானசுந்தரத்தை நெருங்கியது.
“ஓகே…” என்று இரு காதுகளையும் கண்களையும் மூடிக் கொண்டு அவள் கத்தி விட, “ஸ்டாப் மகேஷ்” என்றான் சஞ்சய்.
லாரி ஞானசுந்தரத்தின் அருகே வந்து நின்று விட்டது.
“எதுக்கு ஓகே பேப்ஸ்?”
“எல்லாத்துக்கும்.. இனி நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன். நான்.. நான் உங்க கட்டுப்பாட்டுக்குள்ள வந்துடுறேன்”
வார்த்தையை முடித்ததும், “தட்ஸ் குட் பேபி” என்றான்.
“அவன தூக்கிட்டு போய் ட்ரீட்மெண்ட் பாரு மகேஷ். முடிச்சுட்டு கால் பண்ணு” என்றவன், அழைப்பை துண்டித்து விட்டு மதுவை பார்த்தான்.
கண்ணீர் கன்னங்களில் ஓட, அவனையே பார்த்திருந்தாள். பார்வையில் அளவு கடந்த வெறுப்பு. உலகில் கொலை செய்யும் உரிமை கிடைத்தால், முதலில் இவனை கொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
“இப்ப கிளம்பலாமா?” என்று கேட்டு கார் பக்கம் கண்ணை காட்ட, கண்ணீர் மல்க அதில் ஏறி அமர்ந்தாள் மதுரா.
இனி பாதை என்றும் திரும்பப் போவதே இல்லை என்று, எங்கோ ஓரமாய் நின்று எதுவோ அவளது காதில் சொன்னது.
தித்திக்கும்.