Loading

 

மதுவை கையோடு சஞ்சய் வைத்திருக்க, மதுவிற்கு கோபம் வந்தது.

“கைய எடுனு சொல்லுறேன்ல?” என்று அவள் பல்லைக்கடிக்க, “ஏன்? இப்படி இருந்தா உன் காதலன் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிடுவானா? பயப்படாத. என் தலைமையில உங்க கல்யாணத்த நடத்தி வைக்கிறேன்” என்று பேசி வைத்தான்.

மதுராவிற்கு எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி, அவளுக்கு மேக் அப் போட்ட பெண்ணிடம் பேசி, எப்படியோ அவளுடைய கைபேசியை வாங்கி தந்தைக்கு தான் அழைத்தாள்.

எடுத்ததும் எதுவும் பேசாமல் இருக்கும் இடத்தையும் விவரத்தையும் மட்டும் சொல்லி விட்டு வைத்து விட்டாள்.

சஞ்சய் காதுக்கு விசயம் போவதற்கு முன்னால் பேச வேண்டும் என்று பேசி விட்டு வைத்து விட்டவள், தந்தைக்காக காத்திருக்க, வாசு தான் திருப்பி அழைத்தான்.

அவன் இடத்தின் விவரங்களை தெளிவாக வாங்கிக் கொண்டு வைத்து விட்டான். எப்படியாவது நேரத்தை போக்கி அங்கேயே இருந்து தப்பி விடலாம் என்றே மது நினைத்தாள்.

ஆனால் அலங்காரம் செய்யும் பெண் தன் வேலையை முடித்து விட்டு, சஞ்சய்யிடம் சொல்லி விட்டாள்.

வேறு வழியில்லாமல் அவனோடு கிளம்பியவளின் பார்வை, சுற்றுபுறத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது. யாராவது வந்து அழைத்துச் செல்ல மாட்டார்களா என.

யாரும் வராதது சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும், அந்த இடத்தில் சற்று தாமதிக்க நினைத்து தான் சஞ்சய்யிடம் உண்மையை உளறி வைத்தாள்.

அவன் அதிர்வான். எதாவது செய்ய நினைப்பான். நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க, அவளை அதிர வைத்து அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

இங்கு வாசுவை பார்த்து விட்டு, அவனோடு போக முடியாமல் சுற்றி வளைத்து பிடித்திருப்பவனை பார்த்து எரிச்சலாக வந்தது.

அவனிடமிருந்து விடுபட அவள் போராடிக் கொண்டிருக்க, வாசுவும் அவளை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான்.

திடீரென எங்கிருந்து முளைத்தாள் என்று தெரியாமல் வசுந்தரா வந்து குதித்தாள்.

வந்த வேகத்தில் வாசுவை வந்து கட்டி அணைக்க, மது அதை தவறாக ஒன்றும் நினைக்கவில்லை. அங்கே பலர் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தனர். அவளது கவனமெல்லாம் சஞ்சய்யிடமிருந்து விடுபடுவதில் இருந்தது.

“தேவ்.. நீங்க வர்ரதா சொல்லவே இல்லயே?” என்று கேட்டவளை வாசு தான் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

நேற்று கஷ்டப்பட்டு வழி அனுப்பி வைத்தவளை இன்று எப்படி எதிர்பார்ப்பான்?

தன்னை அணைத்து நின்றிருந்தவளை தள்ளி நிறுத்தியவன் பார்வை, அனுமதியில்லாமல் மதுவை தொட்டு மீண்டது. அவளது பார்வை இவர்களிடமில்லாமல் போக, உள்ளே ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டான்.

“நீ இங்க என்ன பண்ணுற?” என்று கோபத்தை முகத்தில் காட்டாமல் கேட்க, “எனக்கு இன்வைட் இருக்கு தேவ்” என்றாள்.

“ப்ச்ச்.. இங்கலாம் வரனுமா? உன்னை என்ன செய்ய சொன்னா என்ன செஞ்சுட்டு இருக்க நீ?”

“தேவ் ரிலாக்ஸ். இங்க ஒருத்தர நான் மீட் பண்ணனும். அவர் கூப்பிட்டு என்னால நோ சொல்ல முடியாது. ஃப்ளைட் நாளைக்கு தான? நான் போயிடுவேன்”

“யாரு கூப்பிட்டது உன்ன?”

“ஹலோ” என்று குரல் வர, திரும்பிப் பார்த்தனர்

ஒரு பெரிய திரைப்பட இயக்குனர் நின்றிருந்தார்.

“ஹலோ சார்” என்று வசுந்தரா பவ்யமாய் கை நீட்ட, அவரும் பட்டும் படாமல் குலுக்கி விட்டு, “வாசுதேவனும் வந்துருக்காரே!” என்று ஆச்சரியப்பட்டார்.

“இவரும் வர்ராருனு எனக்கு தெரியாது சார். தெரிஞ்சுருந்தா முன்னாடியே சொல்லி இருப்பேன்”

“தட்ஸ் ஓகே. நாம மூணு பேரும் சேர்ந்தே பேசலாம்”

வாசுதேவன் ஒரு முறை வணக்கம் வைத்து விட்டு, மதுவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டான். அவள் இன்னும் சஞ்சய்யின் பிடியில் இருக்க, வாசுவுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

அவள் பார்க்கும் முன்பே, பேசி வசுந்தராவை கிளப்பி விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். முவரும் பேச ஆரம்பித்தனர்.

அந்த இயக்குனர் அவரது அடுத்த படத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு வசுந்தராவை நடிக்க வைக்க நினைத்திருந்தார். இதற்கு முன்பு சிறு சிறு கதாபார்த்திரத்தில் நடித்தாலும், வசுந்தராவின் முதன்மை மாடலிங் உலகம் மட்டுமே.

அதற்காக தான் இப்போது வெளிநாடும் செல்கிறாள். இரண்டு வருடங்களுக்கு அங்கே தான் வேலை. மிகப்பெரிய நிறுவனத்தோடு ஒப்பந்தம். பணம் எக்கச்சக்கமாய் விளையாடும். அப்படி பட்ட வேலைக்கு போவதற்கு முன்பு இயக்குனர் அழைத்தார் என்று வந்து சேர்ந்து விட்டாள்.

படத்தை பற்றி பேசியவர், அடுத்த மூன்று மாதங்களில் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்றார். அது வசுந்தராவை யோசிக்க வைத்தது.

இரண்டு வருடம் நாட்டை விட்டு வெளியே இருக்கும் போது இங்கு படம் நடிக்க முடியாதல்லவா? அவள் யோசித்துக் கொண்டிருக்க, வாசுதேவன் முள்ளின் மீது நின்றிருந்தான்.

அந்த இயக்குனரை பகைத்துக் கொள்ளவும் முடியாமல், வெளிப்படையாக விருப்பமின்மையை காட்டவும் முடியாமல் அவன் திண்டாடிக் கொண்டிருக்க, பேச்சு நீண்டு கொண்டே போனது.

ஒரு வழியாக யோசித்து நாளை பதில் சொல்வதாக வசுந்தரா சொன்னதும், அவர் நகர்ந்து விட்டார்.

“எதுக்கு யோசிச்சு சொல்லுறேன்னு சொல்லுற? நாளைக்கு ஃப்ளைட் நினைப்பு இருக்கா இல்லையா?” என்று வாசு வசுந்தராவிடம் எகிறினான்.

“எல்லாம் இருக்கு. ஆனா இதுவும் பெரிய ஆப்பர்ச்சுனிட்டி. உடனே எப்படி முடியாதுனு தூக்கி போட முடியும்?”

“அதுக்காக அந்த வேலைய விட்டுட்டு இங்க படத்துல நடிக்க கிளம்ப போறியா? சில்லியா பேசாத. நீ போற அவ்வளவு தான்”

“முதல்ல என்னை பேச விடுங்க தேவ். நான் நடிக்க போறதா சொல்லல. சப்போஸ் என்னால ரெண்டையும் மேனேஜ் பண்ண முடியுமானு தான் பார்க்க போறேன்”

“அது எப்படி முடியும்?” என்ற கேள்வி சஞ்சய்யிடமிருந்து வந்தது.

பதறி அடித்து வாசு திரும்ப, அவன் நினைத்தது போல் அவனருகே மது நின்றிருந்தாள்.

“ஹேய்.. சஞ்சய்! எப்படி இருக்க?”

ஆர்வமாக பேசினாள் வசுந்தரா.

“ஐம் ஃபைன். பட்.. நீங்க சரி இல்ல போல? என்ன ரெண்டு விசயத்த மேனேஜிங்?”

“ஒரே நேரத்துல ரெண்டு ஆப்பர்ச்சுனிட்டி வந்துடுச்சு. எத சூஸ் பண்ணனு தெரியல. சோ கன்ஃபியூஸன்”

வசுந்தரா அழகாய் கை விரித்து பேச, மது அவளை பார்த்து விட்டு வாசுவை தான் கவனித்தாள்.

“நீ எப்பவும் கரெக்ட்டா தான் சூஸ் பண்ணுவ வசுந்தரா. கான்ஃபிடண்ட்டா பண்ணு”

சஞ்சய் உறுதியாய் சொல்ல, வசுந்தரா புன்னகைத்தாள். மதுரா தான் வசுந்தரா என்ற பெயரை கேட்டு அதிர்ந்து பார்த்தாள்.

‘பிரின்ஸ் சொன்ன வசுந்தரா இவள் தானா? இருவரும் இவ்வளவு சாதாரணமாக பேசிக் கொள்கிறார்களே?’ என்று குழம்பி விட்டாள்.

“இவங்க…?” என்று வசுந்தரா மதுவை காட்டி இழுக்க, “இவங்க பேரு மதுரா. இவங்க யாருனு நான் சொல்லுறத விட அவங்களே சொல்லுவாங்க. கேளு” என்றான்.

“வாட்?” என்று வசுந்தரா குழப்பத்தோடு கேட்க, “உனக்கு நேரமாச்சுல கிளம்பு” என்றான் வாசுதேவன்.

“வெயிட் வாசுதேவன். மதுரா யாருனு தெரிஞ்சுக்கிற உரிமை வசுந்தராவுக்கு இருக்கு. பேபி.. நீ யாருனு நீயே சொல்லேன்” என்றான் சஞ்சய்.

அவனது கை இப்போது மதுவை விட்டு விட, இது தான் சமயம் என்று நினைத்தவள் சட்டென சஞ்சய்யிடமிருந்து விலகி, வாசுதேவனின் கையை பிடித்துக் கொண்டு சஞ்சய்யை முறைத்தாள்.

வசுந்தரா இதை புரியாமல் பார்க்க, சஞ்சய் வெளிறிப்போன வாசுவின் முகத்தை தான் இரசித்துக் கொண்டிருந்தான்.

“முறைக்காதமா.. நீ யாருனு கேட்டவங்களுக்கு பதில் சொல்லு”

“நான் ஏன் சொல்லனும்?”

மதுரா வீம்பு பிடித்தாள். இவனுடைய முன்னாள் காதலியிடம் நான் ஏன் பேச வேண்டும் என்ற வீம்பு.

“நீ சொல்லலனா? வாசு சொல்லுவாரா? மிஸ்டர் வாசு.. நீங்க சொல்லுங்க. மதுரா யாரு? உரிமையா கைய பிடிச்சு நிக்கிறத பார்த்தா… ஒரு வேளை தங்கச்சியா?”

“எதே..? யாரு தங்கச்சி? பிச்சுடுவேன். நான் கல்யாணம் பண்ணிக்க போறவர போய் எனக்கு அண்ணன்ங்குற?”

மதுரா எகிறிக் கொண்டு வர, சஞ்சய்யின் முகத்தில் திருப்தி புன்னகை படர்ந்தது.

வசுந்தரா பேயை பார்த்தது போல் திகைத்து வாசுவை பார்க்க, அவனால் சஞ்சய்யை முறைக்க மட்டுமே முடிந்தது.

“சாரி மா. தப்பா சொல்லிட்டேன். இன்னும் மூணு வாரத்துல கல்யாணம் இல்லையா? வாழ்த்துக்கள்”

சஞ்சய் சிரிப்பை அடக்கிக் கொண்டு பேச, “கல்யாணமா? யாருக்கும் யாருக்கும்?” என்று வசுந்தரா பதட்டமாக கேட்டாள்.

“நீ பிரில்லியண்ட் ஆச்சே வசுந்தரா. இன்னுமா புரியுல? வாசுதேவனுக்கும் மதுராவுக்கும் தான் கல்யாணம். இல்லையா பேபி?” என்று கேட்டான் சஞ்சய்.

“கிண்டல் பண்ணாத. உன் கிட்ட பேச எனக்கு இஷ்டமில்ல. வாசு வாங்க போகலாம்” என்று மது கையை பிடித்து இழுக்க, “நில்லு” என்று அதட்டினாள் வசுந்தரா.

“தேவ்.. உண்மையாவே கல்யாணமா? அதுவும் மூணு வாரத்துல?”

வசுந்தரா அப்போதும் நம்பாமலே கேட்டாள்.

“ஆமாங்க. உங்களுக்கு இன்விடேஷன் அனுப்புறோம் வந்துடுங்க. நாங்க கிளம்புறோம். வாசு போகலாம்”

மதுரா மீண்டும் வாசுவின் கையை பிடித்து இழுத்தாள். இன்னும் வசுந்தராவை சஞ்சய்யின் முன்னாள் காதலியாக மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாள். அதனால் அங்கிருந்து சென்றால் போதும் என்றிருந்தாள்.

அங்கே கண் முன்னால் நடந்ததை தடுக்க முடியாத கோபத்தோடு, வாசு சஞ்சய்யை முறைத்துக் கொண்டிருந்தான்.

“நினைச்சத நடத்திட்டல?” என்று வாசு வெறித்த பார்வையோடு கேட்க, “நோ மேன். இனிமே தான் நிறைய இருக்கு” என்றான்.

“நான் கேட்குறேன்ல? எனக்கு பதில் சொல்லுங்க தேவ். இந்த பொண்ணு சொல்லுறது உண்மையா?”

வசுந்தரா அழுத்தமாக கேட்க, “நீ கிளம்பு நாம அப்புறம் பேசலாம்” என்று அவளை அனுப்ப பார்த்தான்.

“அப்புறம்னா? எப்போ? உங்க கல்யாணம் முடிஞ்சு குழந்தை பெத்து பேரு வைக்கும் போதா?”

வசுந்தரா பல்லைக்கடித்துக் கொண்டு பேசினாலும் கண் கலங்கி இருந்தது.

“நீங்க ஏன் இவ்வளவு கோபமா பேசுறீங்க? உங்க எக்ஸ் சஞ்சய் தான? அவன் கிட்ட உங்க பஞ்சாயத்த வச்சுக்கோங்க.” என்று மதுரா இடையில் வந்து பேச, சஞ்சய்க்கு தான் சிரிப்பு வந்து விட்டது.

“நான் யாரு தெரியுமா?” என்று வசுந்தரா கேட்க, “இவனோட எக்ஸ் தான?” என்று சஞ்சய்யை கை காட்டினாள்.

“என்னோட எக்ஸ் இல்லமா. வசுந்தராவுக்கு தான் நான் எக்ஸ். அதுவும் பழைய எக்ஸ். இப்ப புது எக்ஸ் உன் வருங்கால கணவனா இருக்க வாய்ப்பு இருக்கு”

“அப்படினா?”

மதுரா புரியாமல் பார்க்க, “நாங்க எத்தனை வருசமா லவ் பண்ணுறோம் தெரியுமா?” என்று கேட்டாள் வசுந்தரா.

“யா.. யார?”

“வாசுதேவனும் நானும்”

மதுவின் கைகள் மெல்ல வாசுவின் கையை விடுவித்து விட, நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அவனோ, கை மீறிப்போனதை என்ன செய்வது என்று யோசித்து திணறி நின்றிருந்தான்.

“லவ்வா?”

“ஆமா.. அதுவும் இப்ப இல்ல. பல வருசமா லவ் பண்ணிட்டு இருக்கோம்”

வசுந்தரா கலங்கிய கண்ணோடு வாசுவை முறைத்துக் கொண்டே பதில் கூறினாள்.

மது சஞ்சய்யை பார்த்தாள்.

“இவங்க உன் லவ்வர் இல்லையா?”

இடவலமாக தலையை மட்டும் ஆட்டினான்.

“பொய் தான?” என்று கடைசியாக கேட்டவளின் குரலிலேயே நம்பிக்கை இல்லை.

“வாசு எனக்கு யாருனு கேட்டியே.. என்னோட ஃப்ரண்ட். ஆனா சீனியர். வசுந்தரா என் கூட படிச்ச பொண்ணு. காலேஜ் முடிச்சதுல இருந்தே இவங்க ரெண்டு பேரும் ரிலேஷன்சிப்ல இருக்காங்க.”

“லிவ் இன்லயும்” என்று சேர்த்து சொன்னாள் வசுந்தரா.

இதைக்கேட்டதுமே மது ஒரு அடி பின்னால் சென்று விட்டாள்.

அவளுக்கு பின்னால் சஞ்சய் நின்றிருந்தான். புன்னகையுடன் நடப்பதை இரசித்துக் கொண்டிருந்தான். வசுந்தரா எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வாசுவை பார்த்தாள்.

“என்னை அந்த பக்கம் அனுப்பிட்டு இந்த பக்கம் இவ கூட கல்யாணம் பேசுனீங்களா வாசுதேவன்? ச்சே..” என்ற வசுந்தரா விறுவிறுவென கிளம்பி விட்டாள்.

அவள் போவதை பார்த்து விட்டு முகத்தை அழுந்த துடைத்தவன், “மது வா போகலாம்” என்று அவள் கையை பிடிக்க வந்தான்.

சட்டென நகர்ந்தவள், “நான் வரல” என்றாள்.

அவளது கண்களும் கலங்கி இருந்தது.

“மது.. விளையாடாத வா”

“வரலங்குறேன்ல?”

“அவ வர மாட்டா” என்ற சஞ்சய் அவளது கையை பிடித்துக் கொண்டான்.

“நீ போய் உன் லவ்வர்.. சாரி எக்ஸ் லவ்வராகிருப்பாங்க இந்நேரம். அவங்கள போய் கவனி.” என்று நக்கலாக சொன்னவன், மதுவை இழுத்துக் கொண்டு நடந்தான்.

சட்டென விளக்குகள் அணைந்து ஆளாளுக்கு ஆட ஆரம்பித்து விட, மதுவை அழைத்துக் கொண்டு சஞ்சய் தூரமாக சென்று விட்டான். அவளை பிடிக்க நினைத்து கையை நீட்டிய வாசுவை, கூட்டம் வேறு பக்கம் தள்ளிச் சென்றது.

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
17
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்