Loading

 

“வாசுதேவனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணு தான் அந்த மதுரா” என்று கூறிய பிஏவை, ஆச்சரியமாகப் பார்த்தார் விபாகரன்.

“அந்த பழைய ஃப்ரண்ட் வாசுவா?”

பிஏ ஆமோதிக்க, விபாகரனின் மனதில் எதோ யோசனை ஓடியது.

“அண்ட்.. வாசுதேவன் உங்கள பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுருக்கார்”

“அதுக்கு முன்னாடி நான் சஞ்சய்ய பார்க்கனும். வர சொல்லு.”

“வந்துட்டாரு. வெளிய வெயிட் பண்ணுறாரு”

பிஏ சொன்னதும் விபாகரனுக்கு ஆச்சரியம் எதுவும் எழவில்லை. மகனின் புத்திசாலித்தனத்தை நினைத்து சிரித்தவர், “உள்ள வர வேண்டியது தான? ஏன் வெளிய இருக்கான்?” என்று கேட்டார்.

“எதாவது வேலை இருந்தா முடிச்சதும் சொல்லுங்கனு சொல்லி வெயிட் பண்ணுறாரு”

“உள்ள கூப்பிடு”

உடனே அந்த பிஏ சஞ்சய்யை அழைக்க சென்றான்.

“டாட்..” என்று சஞ்சய் வந்து நிற்க, “நைனானு கூப்பிடுற பழக்கமே இல்ல உனக்கு?” என்று கேட்டு முறைத்தார்.

“எனக்கு டாட் தான் பிடிச்சுருக்குனு நானும் ஆயிரம் தடவ சொல்லிட்டேன்”

“சரி உட்காரு. சாப்பிட்டியா? வீட்டு பக்கம் வர்ரதே இல்ல.”

“வொர்க் டாட்.”

“இப்ப ஏன் வந்த?”

“உங்கள பார்க்க தான்”

“அப்ப லன்ச்க்கு இருக்கியா?”

“உங்களுக்கு லன்ச் இன்னைக்கு என் கூட சாப்பிட நேரமிருக்கா?”

அவன் அவர் பக்கமே கேள்வியை திருப்பி விட, புன்னகைத்துக் கொண்டார். இன்று அவருக்கு பல வேலைகள் இருந்தன. முதலமைச்சர் என்றால் சும்மா இல்லையே.

“என்னையே பேச்சுல மடக்குறான் பாரு என் மகன்.” என்று பெருமையாய் பிஏ விடம் கூற, அவன் தலையாட்டிக் கொண்டான்.

“யாரு அந்த பொண்ணு?” என்று விபாகரன் நேரடியாக விசயத்துக்கு வர, “இந்நேரம் தெரிஞ்சுருக்குமே?” என்று கேட்டான் சஞ்சய்.

“கேள்விக்கு நேரடியா பதில் சொல்லி பழகு சஞ்சய். எப்பவும் பதில் கேள்வி தான் கேட்குறது”

“எனக்கு அந்த பழக்கம் வரல. நான் என்ன பண்ணுறது?”

“வாசுதேவன் கூட என்ன பிரச்சனை?”

“புதுசா எதுவும் இல்ல. பழசு தான்”

“அதுக்காக ஒரு பொண்ண கடத்திட்டு வந்து வீட்டுல வைக்கிறது நல்ல பழக்கமா?”

“நான் கடத்தல டாட். அவளா தான் கார்ல ஏறி உட்கார்ந்து வந்தா. கடத்துறதுக்கு நான் என்ன ரவுடியா?”

“இப்பவும் ஒரு கேள்வியா? அந்த பொண்ணு உன் கூட இருக்கதால எவ்வளவு பிரச்சனை வரும்னு தெரியுமா?”

“இது வரை வரலயே? அப்ப இனிமேலும் வராது”

“அந்த பையன் என்னை பார்க்கனும்னு கேட்டுருக்கானாம்”

“இத சொல்ல தான் வருவான்”

“அவன் தன்னோட வருங்கால மனைவிய கேட்டா நான் என்னனு பதில் சொல்லுறது?”

“என் வருங்காலத்த சிதைக்கிறதுக்கு முன்னாடி அவன் அத யோசிச்சு இருக்கனும்.”

“அதுக்காக ஒரு பொண்ணோட விளையாடுறது தப்பு சஞ்சய்”

“நோ டாட். எனக்கு அவன் தான் வேணும். அவன் கல்யாணம் நடக்க கூடாது. இந்த ஜென்மத்துல அவன் எப்படி கல்யாணம் பண்ணுறான்னு பார்த்துடுறேன். அவன் வந்தா, என் கிட்ட டீல் பண்ணிக்க சொல்லுங்க. நான் கிளம்புறேன்”

உடனே எழுந்தவன் விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டான்.

விசயத்தை விளக்கவோ நியாயம் பேசவோ அவன் வரவில்லை. தந்தையிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிச் செல்ல தான் வந்திருந்தான். சொல்லி விட்டான். கிளம்பி விட்டான்.

இப்போது விபாகரனுக்கு வாசுவை சந்திப்பதா? வேண்டாமா? என்ற குழப்பம் தான் மிஞ்சியது.

ஆனால் அவரால் மகன் பக்கம் தவறை கண்டு பிடிக்க முடியவில்லை. முதலில் ஆரம்பித்தவன் வாசுதேவன் அல்லவா? தேவை இல்லாமல் ஒரு பெண் இடையில் மாட்டிக் கொண்டாள் என்பது தான் அவருக்கு வருத்தமாக இருந்தது.

___________

மதுரா குக்கரில் சோறு வைத்து விட்டு, அது வெடித்தால் தப்பிக்க வேண்டி தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனதில் காலையில் சஞ்சய் கேட்டது தான் ஓடிக் கொண்டிருந்தது. நேற்று இரவு, சஞ்சய் தூங்கி விட்டதாக நினைத்து வீட்டின் மின்சார இணைப்பை தேடி அலைந்தாள்.

சுற்றுச்சுவரில் மின்சார இணைப்பு உள்ளது என்று அவன் கூறி இருந்தான். தொட்டால் அவள் கருக வேண்டியது தான். அதனால் மின்சார இணைப்பை தேடி துண்டித்து விட்டால், சுவரேறி குதித்து தப்பித்து விடலாம் என்று திட்டம் போட்டிருந்தாள்.

இருளில் ஒன்றையும் கண்டு பிடிக்க முடியவில்லை. காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

காலையில் அவன் நேற்று போல் வெளியே செல்லும் நேரத்துக்காக காத்திருந்தாள். முனியாவையும் எப்படியாவது திசை திருப்பி விட்டால், தப்பித்து விடலாம் என்று திட்டம்.

அவனோ காலையில் எங்கும் கிளம்பாமல் இருக்க, மதுராவிற்கு பசியில் அழுகை தான் வந்தது. இங்கிருந்து தப்பிச் சென்று தான் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்.

அவள் முடிவை உடைப்பது போல் சஞ்சய் பேசி வைக்க, அவளும் அப்போதைக்கு சாப்பிட்டு விட்டாள்.

ஆனாலும் திட்டத்தை செயல் படுத்த நினைத்து சஞ்சய்யை கேள்வி கேட்க, அவனோ அவளை முழுதாக தெரிந்து வைத்திருந்தான்.

நேற்று அவள் தேடி அலையும் போது, அமைதியாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன், காலையில் இரண்டு காவலர்களை பணியில் அமர்த்தி விட்டான்.

மதுராவின் திட்டம் ஆரம்பிக்கும் முன்பே சொதப்பி விட, அடுத்து என்ன செய்வது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

மாலை தான் சஞ்சய் வந்தான். வந்ததும் அவளுக்கு ஒரு நற்செய்தியும் கொண்டு வந்தான். அது நற்செய்தி தானா? என்பது அவனுக்கே வெளிச்சம்.

“பேபி..” என்று ஆரம்பித்தான்.

காபி கப்போடு திரும்பி அவனை முறைத்தாள்.

“என்னை பேபினு கூப்பிடாத” என்று அவள் எகிற, அவன் அதை மதிக்கவில்லை.

“என் கூட வர்ரியா?”

“எங்க?”

“உன் லவ்வர பார்க்கலாம்”

“வாசுவயா?” என்று கேட்டவள் துள்ளி எழ, சஞ்சய் அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

“உண்மையாவா சொல்லுறீங்க? வாசுவ பார்க்கலாமா? எப்போ?”

கேள்வியோடு அவனை நெருங்க, அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.

“சிரிக்காம சொல்லுங்க. வாசுவ பார்க்க போறோமா?”

“இப்ப தெரியுதா உன்னை ஏன் பேபினு சொல்லுறேன்னு?”

சட்டென மதுராவின் துள்ளல் நின்றது. அவளோடு விளையாடி இருக்கிறான். முகம் சுருங்க அவனை பார்த்தவள், “பாவி” என்றாள்.

“நாளைக்கு ஆஃபிஸ் போறேன். நீயும் வா”

“ஆஃபிஸா? நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?”

“அங்க வந்து பாரு. நாளைக்கு எட்டு மணிக்கு போகனும். ரெடியா இரு”

கட்டளையிட்டு விட்டு அவன் சென்று விட, மதுரா அவன் முதுகை முறைத்தாள்.

“நான் ஏன் இவன் கூட போகனும்?” என்று மனம் வீம்பு பிடிக்க, “அடி லூசு.. அங்க இருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும்” என்றது மூளை.

பளிச்சென முகம் மலர்ந்தவள், ‘அதான? அங்க எத்தனையோ வழி இருக்கும். தப்பிச்சு ஓடிரலாம்’ என்ற முடிவுக்கு வந்தாள்.

_______

“என்னங்க?” என்று அழைத்தார் ஆண்டாள்.

அவரது முகமெல்லாம் வேதனையில் சுருங்கி இருந்தது. அழுது அழுது கண் விழி சிவந்து போயிருந்தது. மகள் காணாமல் போனதிலிருந்து இப்போது வரை அவரது அழுகை நின்றபாடில்லை.

கடத்தியவனை சபித்து சபித்து ஓய்ந்து விட்டார். ஆனால் வாசுதேவன் அவன் மீது வழக்கு தொடுக்க கூட கூடாது என்று விட்டான். மகள் திரும்பி வருவாளா? மாட்டாளா? என்று பயந்து போயிருந்தார்.

அவரது பயம் ஞானசுந்தரத்திடமும் இருந்தது. எப்படியாவது மகளை மீட்டெடுக்க நினைத்தார். ஆனால் அந்த சஞ்சய் யார் என்றும் தெரியவில்லை. அவனை எப்படி அணுகுவது என்றும் புரியவில்லை.

வாசுவை கேட்டால், “நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

“உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை?” என்று பல முறை கேட்டு விட்டார்.

வாசு வாயை திறக்கவே இல்லை. கப்பென மூடிக் கொண்டிருந்தான்.

இப்போதும் வாசுவை அழைக்க முயற்சித்தவரை தான் ஆண்டாள் அழைத்தார்.

“என்ன?”

“பேசாம நாம போலீஸ் கிட்டயே போகலாம். அங்க அவ என்ன செய்யுறானு தெரியாம பதறிட்டே இருக்கதுக்கு, எதாவது ஒரு முடிவு கிடைக்கும்”

“அத தான் நானும் நினைக்கிறேன். அவன் எவ்வளவு பெரிய ஆளா வேணா இருக்கட்டும். என் மகள அவன் கிட்ட இருந்து எப்படியாவது மீட்டே தீருவேன்” என்றவர், உடனே அவருக்கு தெரிந்த சிலரை பிடித்து நேராக கமிஷ்னரிடம் சென்று சேர்ந்து விட்டார்.

“சொல்லுங்க சார்” என்று கேட்டார் கமிஷ்னர்.

விவரத்தை எல்லாம் ஒப்புவித்தார் ஞானசுந்தரம்.

“அந்த பையன் யாருனு கூட எனக்குத் தெரியாது சார். என் மகளுக்கும் தெரியாது. என் மருமகன் கூட சண்டைனு என் மகள தூக்கிட்டு போயிருக்கான். பெரிய இடம்னு கம்ப்ளைண்ட் கொடுக்க தயங்குறான் மாப்பிள்ளை. எங்களுக்கு இப்ப என்ன செய்யுறதுனே தெரியல”

கமிஷ்னர் கதையை கேட்டு முடித்து விட்டு, “உங்க மருமகன வரச்சொல்லுங்க. பேசிடலாம்” என்றார்.

வாசுவை அழைக்க, “நான் ஆந்திரால இருக்கேன் மாமா. இப்ப வர முடியாது” என்றான்.

“அங்க என்ன பண்ணுற?”

“சி.எம்ம பார்க்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன். அவர் கிட்ட சொன்னா மதுவ எப்படியும் காப்பாத்தி கொடுத்துருவாரு. இப்போதைக்கு கேஸ் எதுவும் வேணாம்”

“நீ எப்ப அவர பார்த்து? அவரு எப்ப என் மகள மீட்டு கொடுக்குறது? அது வரை என் புள்ள அங்க என்ன பாடுபடுறாளோ?”

“அவ நல்லா இருக்கா மாமா. பெரிய பிரச்சனை எல்லாம் இருக்காது. என்னை நம்புங்க”

“எப்படி? எப்படி நம்ப சொல்லுற? இது வரைக்கும் என்ன பிரச்சனைனு கூட சொல்ல மாட்டேங்குற. நான் அவன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்க தான் போறேன். எனக்கு என் மக வேணும்”

“வெயிட் பண்ணுங்க மாமா. அவசர படாதீங்க. ஒரு வேளை சி.எம் நமக்கு ஹெல்ப் பண்ணலனா நானே கம்ப்ளைண்ட் பண்ணுறேன்”

“இப்படியே எத்தனை நாள் தள்ளி போடுறது?”

“நாளைக்கு.. நாளைக்கு நான் அவர பார்க்க ட்ரை பண்ணுறேன். முடியலனா கண்டிப்பா கம்ப்ளைண்ட் கொடுத்து மதுவ காப்பாத்திடலாம்”

ஞானசுந்தரம் எவ்வளவு தூரம் பேசினாலும், வாசு சமாளித்து விட்டான். கடைசியாக கமிஷ்னரிடம் விசயத்தை சொல்ல, “அவங்க பார்க்கட்டும். உங்க மருமகனே பேசி முடிச்சுட்டா சுமூகமா போயிடும் தான? அப்படியும் முடியலனா கண்டிப்பா ஆக்ஷன் எடுக்கலாம்” என்று கூறி விட்டார்.

வீடு வந்து ஆண்டாளிடம் இதைச்சொன்னால், அவர் புலம்பித்தள்ளினார்.

“இந்த பையனுக்கு கட்டி வைக்க பார்த்ததுக்கு, என் மகளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துடுச்சே. இந்த கல்யாணமும் வேணாம். ஒன்னும் வேணாம். நமக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லனு சொல்லியாச்சும் மதுவ கூட்டிட்டு வாங்க” என்று ஆண்டாள் அழுதார்.

ஞானசுந்தரத்திற்கு திருமணத்தை நிறுத்துவதில் உடன்பாடு இல்லை. வாசு நல்லவன். அவனை விட்டு வேறு மாப்பிள்ளையை மகளுக்கு தேட முடியாது. மகள் முழுதாய் வீடு வந்த பிறகு எதையும் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார்.

எல்லோரும் எதெதோ நினைத்திருக்க, சஞ்சய் தன் பெயருடன் மதுவின் பெயரை இணைக்க திட்டம் போட்டு வைத்திருந்தான். கடவுளும் சத்தமில்லாமல் அவன் திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்திருந்தார்.

தித்திக்கும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
11
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்