Loading

 

மாலை வீடு வந்த சஞ்சய்யிடம், மதுரா சாப்பிடாமல் இருப்பதை பற்றிக் கூறினார் முனியா.

“ஒரு நாள் சாப்பிடலனா செத்துட மாட்டா”

சஞ்சய் அலட்சியமாக சொல்ல, முனியா தான் வருத்தமாக பார்த்தார். நிறைய சாப்பிடும் பெண், ஒன்றுமே சாப்பிடாமல் இருக்கிறாளே என்ற கவலை அவருக்கு.

அவரது முகத்தை பார்த்து விட்டு சலிப்பாக தலையசைத்தவன், விறுவிறுவென மதுராவின் அறை நோக்கி சென்றான்.

“மதுரா.. வெளிய வா” என்க, அவளிடமிருந்து பதில் இல்லை.

மீண்டும் மீண்டும் கதவை தட்டிப்பார்த்தான்.

“இப்ப நீ திறக்கலனா நானே திறந்து வருவேன்” என்க, அப்போதும் பதில் வரவில்லை.

உடனே சென்று சாவியை எடுத்து வந்து கதவை திறந்து விட்டான். உள்ளே மதுரா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். ஆழ்ந்த உறக்கம். அவனது சத்தம் கூட கேட்காத அளவு.

அருகே சென்று பார்த்தவன் சலித்துக் கொண்டு திரும்ப, அறையிருந்த கோலம் அவனை அதிர வைத்தது. அலங்கோலமாக போட்டு வைத்திருந்தாள். எதுவும் சரியான இடத்தில் இல்லை.

‘என்ன பொண்ணு இவ?’ என்று தான் தோன்றியது அவனுக்கு.

நிம்மதியாக தூங்குபவளை பார்த்து விட்டு வெளியே வந்தான்.

“தூங்குறா. எழுந்தா அவளே செஞ்சு சாப்பிடட்டும். நீங்க போங்க” என்று முனியாவை அனுப்பி விட்டு, அவனும் அவனது வேலையை பார்க்கச் சென்று விட்டான்.

அடுத்த நாள் காலை வரை மதுரா அறையிலிருந்து வெளியே வரவில்லை. அதிகாலை ஐந்து மணிக்கு அவளை எழுப்ப நினைத்தவன், நேற்று சாப்பிடாதது நினைவு வந்ததால் அவளை அப்படியே விட்டு விட்டான்.

காலை உணவுக்கான நேரம் வர, முனியா கெஞ்சலாக பார்க்க, வேண்டா வெறுப்பாக சென்று மீண்டும் கதவை தட்டினான். பதில் வரவில்லை.

“மதுரா.. நானே கதவ திறந்து வந்துடுவேன்” என்று கூற, உடனே வந்து திறந்தாள்.

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”

“செத்து போயிட்டியானு பார்க்க வந்தேன். பரவாயில்ல.. உனக்கு இருக்க கொழுப்புக்கு இன்னும் நாலு நாள் தாங்குவ போல?”

அவன் நக்கலாக கேட்க, மதுராவிற்கு நின்றிருந்த கண்ணீர் திரும்ப வர பார்த்தது. வீம்புக்கு சாப்பிடாமல் இருக்கிறாள். ஆனால் பசி உயிர் போனது. வயிறு அதன் வேலையை நன்றாகவே செய்து கொண்டிருக்க, அவளால் அழ மட்டுமே முடிந்தது.

“செத்துட்டா வந்து பார்த்துக்கோங்க.” என்றவள் கதவை அடைக்கப்போக, தடுத்து நிறுத்தினான்.

“நீ செத்துட்டியா இல்லையானு நான் அடிக்கடி வந்து பார்க்கனுமா? எனக்கு வேற வேலை இல்லையா?”

“செத்து போயிட்டா தெரிஞ்சுடும். எப்படியும் செத்தப்புறம் ஸ்மெல் வரும்ல?”

கேட்கும் போதே தொண்டை அடைத்தது. வாழ அவ்வளவு ஆசை இருந்தும், இப்போது சாவை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாளே. அந்த வேதனை அவளை கலங்க வைத்தது.

“அது செத்து ஒரு வாரம் ஆனா தான் வரும். அது வரை வராதே”

சஞ்சய்யும் விடாமல் பேச, மதுராவிற்கு எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.

“சாகும் போது நானே கூப்பிட்டு சொல்லுறேன். போதுமா?” என்றவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

குடும்பத்தை கடைசியாக பார்க்காமலே செத்து விடுவோமோ என்ற கவலை அவளுக்கு.

“குட். மறக்காம சொல்லிடு. அப்புறம்.. ஏன் இந்த திடீர் சாகுற முடிவு?”

கதை கேட்பது போல் கையை கட்டிக் கொண்டு சந்தேகம் கேட்டான்.

“எனக்கு வாழவே பிடிக்கல. போதுமா? இப்ப போறியா?”

எரிந்து விழுந்தாள். ஆனால் அது சஞ்சய்யை‌ பாதித்தால் தானே?

“அப்புறம் ஏன் இப்ப வாழுற? உன் கிட்ட துப்பட்டா எதுவும் இல்லையா? ரூம்ல ஃபேன் இருக்கு தான?” என்றவன் மின்விசிறியை எட்டி வேறு பார்த்தான்.

அவன் சொல்ல வருவது புரிய, மதுராவிற்கு வெறியே வந்தது.

“என்னை சாகுனு சொல்லுறியா அப்போ?”

“இவ்வளவு நேரமும் அத தான சொல்லுறேன்? புரியலயா? துப்பட்டா சைஸ் பத்தாதா? சேரி தான் வேணுமா? முனியா கிட்ட இருக்கும். வாங்கிக்கோ”

அவள் சாவதற்கு ஐடியா கொடுத்தான். அதுவும் மிகவும் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு.

“சூஸைட் பண்ண சொல்லுற?”

அவள் அதிர்ந்து போய் கேட்க, “சாப்பிடாம இருந்து செத்தாலும் சூஸைட் தான். அத ஏன் ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணனும்? ஃபேன் இருக்கு. கிட்சன்ல கத்தி இருக்கு. இல்லனா‌ டெரஸ் இருக்கு. மேக் இட் ஈஸி பேபி” என்று கூறி கண்ணடித்து வைத்தான்.

மதுரா பேச்சற்று நின்று விட்டாள்.

“சீக்கிரமா முடிச்சனா நல்லா இருக்கும். எனி வே சாகும் போது சொல்லி அனுப்பு” என்றவன் அங்கிருந்து நகர ஆரம்பித்தான்.

“ரொம்ப ஈசியா சொல்லுற செத்துடுனு. நான் செத்து போனா நீ தான் போலீஸ் கிட்ட மாட்டுவ. அத ஞாபகம் வச்சுக்கோ”

மதுரா கத்த, சஞ்சய் சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தான்.

“வாட்? நீ செத்தா நான் மாட்டுவேனா? அதுக்காக தான் இந்த சாவு முடிவா? ஸ்டுப்பிட்” என்றான் சிரித்துக் கொண்டே.

“உன் வீட்டுல நான் செத்தா போலீஸ் கிட்ட நீ தான மாட்டுவ? ஏற்கனவே என் அப்பா அம்மாவுக்கு நீ தான் என்னை கடத்திட்டனு தெரியும். இப்பவே அவங்க போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்துருப்பாங்க. கண்டிப்பா மாட்டுவ”

அவள் வெறியோடு பேச, அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

இடவலமாக தலையை ஆட்டி சிரித்தவன், சோபாவில் சென்று அமர்ந்து கொண்டு, அவளை கேலியாக பார்த்தான்.

“ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்.. இது வரை எந்த இடத்துலயும் நீ காணாம போயிட்டதா கேஸ் ஃபைல் ஆகல. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா.. எங்கயுமே ஃபைல் ஆகல.”

“ஏன்? எப்படி?” என்று அதிர்ச்சியாக கேட்டவள், அவனருகே வேகமாக வந்தாள்.

“ஏன்னா உன் காதலன் பண்ண விடல.”

“வாசுவா? அவரு ஏன் அப்படி சொல்லனும்?”

“எனக்கு பயந்திருக்கலாம்”

“வாய்ப்பே இல்ல. வாசு பெரிய இடத்து பையன். நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா உன்னை பார்த்து அவரு பயப்பட?”

“ஐ டோன்ட் நோ. பட் இதான் உண்மை”

“நான் நம்ப மாட்டேன்… ஆனா.. ஒரு வேளை கேஸ் ஃபைல் பண்ணா நீ என்னை எதாவது பண்ணிடுவனு அவர் பயந்திருக்கலாம்”

வாசுவுக்கு விடாமல் வக்காளத்து வாங்கியவளை பார்த்து சஞ்சய்க்கு சிரிப்பு தான் வந்தது.

“இருக்கலாம். ஆனா நீ தான் சாக போறியே. என்னால நடக்காதத நீயே நடத்திக்க போற. நீ செத்தத அவன் கிட்ட சொன்னதும், அவன் என்ன செய்வான்னு பார்க்க இப்பவே ஆசையா இருக்கு. எப்படி பார்த்தாலும் எனக்கு ப்ராஃபிட் தான் அம்மாயி”

இரு கை விரித்து அவன் கூறும் போது, மதுராவிற்கு பல விசயங்கள் புரிந்தது. அவள் செத்துப்போனால் சஞ்சய் கவலைப்பட மாட்டான் தான். ஆனால் அவளது குடும்பம் தாங்குமா? அவளில்லாமல் அவளுடைய அன்னை எப்படி வாழ்வார்?

‘முட்டாள் தனமாக சாக நினைத்து விட்டோமே’ என்று மனம் எடுத்துக் கூற, உடனே சமயலறை பக்கம் நடந்தாள்.

வெற்றிகரமாக அவளை அனுப்பி விட்டு, ‘இவ பேபியே தான்’ என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.

அவளை கடத்தும் முன்பே அவளது அத்தனை விவரங்களும் அவனிடமிருந்தது. கேரளாவில் அவள் செலவழித்த ஐந்து நாட்களும் அவன் பார்வைக்கு வந்தது. அவளது பழக்க வழக்கங்கள் எல்லாம் பார்த்தவனுக்கு, சிறு பெண்ணாக தான் தோன்றினாள்.

‘இவளுக்கா வாசுவோடு திருமணம்?’ என்று ஆச்சரியம் கூட வந்தது.

வாசுவின் வயதும் அவளது வயதும் பெரிய இடைவெளியில் இருந்தது முதல் காரணம். வாசுவின் குணத்தை பற்றி சஞ்சய்க்கு நன்றாகவே தெரியும். அவனுக்கு மதுரா போன்றவள் எப்படி பொருந்துவாள்? என்று தான் ஆச்சரியபட்டான்.

இப்போதும் அவளை ஏமாற்றுவது சுலபமாக தான் இருந்தது. அவளாக சமையலறைக்கு சென்றதும், இனி சாப்பிடுவாள் என்று புரிந்தாலும் பின் தொடர்ந்தான்.

“ஃபாஸ்டிங் ஓவரா? இல்ல சாகுறதுக்கு விசம் ரெடி பண்ண போறியா? விசம் வேணும்னா நான் வாங்கி தர்ரேன். சாப்பாட வேஸ்ட் பண்ணாத”

கிண்டலாக சொல்லிக் கொண்டு அவன் வந்து நிற்க, மதுரா அவனை தீயாய் முறைத்தாள்‌.

“விசத்த வாங்கி நீ குடிச்சுக்கோ. எனக்கொன்னும் வேணாம்”

“அப்ப கத்திய எடுத்து வெட்ட வந்தியா?”

விடாமல் அவன் கேட்க, “இல்ல கத்திய எடுத்து உன்னை குத்த வந்தேன்” என்றவள் உடனே பெரிய கத்தியை எடுத்து அவனை குத்த வர, கையை பிடித்து விட்டான்.

“இந்த கத்தில குத்த முடியாது. வெட்ட தான் செய்யனும். வேற கத்திய எடுத்து ட்ரை பண்ணு” என்றவன், அவள் கையிலிருந்த கத்தியை சுலபமாக வாங்கி விட்டான்.

“இப்ப கூட உனக்கு பயம் இல்லயா? நான் குத்திட்டா என்ன செய்வ?”

“செத்துடுவேன். ஆனா நீ ஜெயிலுக்கு போயிடுவியே. அது போதும்”

“ஏன்?”

“வாசு நீ ஜெயிலுக்கு போனதும் என்ன செய்யுறான்னு சொர்கத்துல இருந்து பார்த்துட்டு இருப்பேன். அதுல எனக்கு சந்தோஷம். கண்டிப்பா அழுவான்ல?”

அவளிடமே கேட்டு வைக்க, மது பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தாள்.

“நீ சொர்கத்துக்கு எல்லாம் போக மாட்ட. நரகத்துக்கு தான் போவ. உன்னை கடவுள் எண்ணெய் சட்டில போட்டு ஃப்ரை பண்ணி எடுத்து துண்டு துண்டா வெட்டி போட்டுருவாரு.”

சாபம் விட்டு விட்டு முகத்தை வெடுக்கென திருப்பியவள், பசியில் சமைக்க பிடிக்காமல் பழத்தை எடுத்து கழுவி சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

“அப்ப சாக மாட்டியா?” என்று அவள் சாப்பிடுவதை பார்த்து சோகமாக கேட்க, உறித்துக் கொண்டிருந்த ஆரஞ்சு தோலை அவன் மீது தூக்கி எறிந்தாள்.

சஞ்சய் சிரிப்ப அடக்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

பழங்களை வேக வேகமாக உள்ளே தள்ளிய மதுராவிற்கு, அடுத்து என்ன செய்வதென்றே புரியவில்லை. சாப்பிடாமல் இருந்தால் அவளை விட்டு விடுவான் என்று நினைத்தாள். ஆனால் செத்தாலும் கவலை இல்லை என்கிறான்.

இனி இப்படி தன்னையே வருத்திக் கொள்ள கூடாது. அவனை தான் பாடாய்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தாள்.

நான்கைந்து பழங்களை தட்டில் வைத்து எடுத்துக் கொண்டவள், அவனை தேடி வெளியே வந்தாள்.

வீட்டுக்கு வெளியே முனியாவோடு நின்று பேசிக் கொண்டிருந்தான். நேராக சென்று சோபாவில் அமர்ந்து கொண்டு, இருவரையும் நோட்டம் விட்டாள். முனியா எதோ பேசி விட்டு கிளம்பி விட்டார்.

சஞ்சய் மட்டும் உள்ளே வந்தான். அவள் அவனையே ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க, அவளது பார்வையை கவனித்தாலும்‌ கண்டு கொள்ளாமல், அவளுக்கு எதிரே அமர்ந்து தட்டிலிருந்த வாழைப்பழத்தை எடுத்தான் அவன்.

“ஏய்.. என்னது அது” என்று மதுரா குதிக்க, “போய் வேற எடுத்துக்க” என்றவன் சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

“குரங்கு” என்று முணங்கியவள், வெடுக்கென எழுந்து சென்று நிறைய பழங்களை அள்ளிக் கொண்டு வந்தாள்.

கைபேசியும் கையுமாக சஞ்சய் அமர்ந்திருக்க, “ஆமா உனக்கு வேலை வெட்டி எதுவும் இல்லையா?” என்று கேட்டாள்.

அவன் பார்வையை மட்டும் மதுராவிடம் திருப்ப, “எந்த நேரமும் வீட்டுக்குள்ளயே இருக்க” என்றாள்.

“நான் போனதும் சுவரேறி குதிக்கிற ஐடியா எதுவும் இருக்கா?”

ஒரு நொடி பகீரென்றது மதுராவிற்கு.

‘இவனுக்கு மைண்ட் ரீடிங் தெரியுமோ?’ என்று நினைத்தவள், “ச்சே ச்சே” என்றாள்.

“அப்படி எதாச்சும் ஆசை இருந்தாலும் மறந்துடு. ரெண்டு செக்யூரிட்டி போட்டுருக்கேன். புடிச்சுட்டு வந்து கட்டி வச்சுடுவாங்க”

அவன் சொன்ன தோரணையில் அதிர்ந்தவள், உடனே வெளியே சென்று பார்த்தாள். கேட்டில் ஒருவன் நின்றிருந்தான். ஒரு நேரத்தில் பத்து பேரை புரட்டி எடுக்கும் தோற்றத்தில். நேற்று வரை இல்லை. இன்று தான் நியமித்திருக்கிறான்.

‘சுத்தம்..’ என்று சலித்துக் கொண்டு திரும்பி வந்தாள்.

“என்ன? குதிக்கிற ஐடியா ஃப்ளாப்பா?”

“நான் குதிக்க போறேன்னு யாரு சொன்னா?”

வீம்புக்கு எகிறினாள்.

“அப்புறம் எதுக்கு நைட் பவர் சப்ளை எங்க இருக்குனு தேடிட்டு இருந்த?”

இதைக்கேட்டதும் இதயமே நின்று விட்டது போல் பார்த்தாள் மதுரா.

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
14
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்