Loading

 

அடுத்த நாள் காலையும் ஐந்து மணிக்கு மதுராவை எழுப்பி விட்டான் சஞ்சய். இன்று கதவையே திறக்காமல் அவள் படுத்துக் கொள்ள, “நானே கதவ திறந்து வந்தா நல்லா இருக்காதுனு நினைச்சேன். விட மாட்ட போலயே. சாவிய எடுத்துட்டு வர்ரேன் இரு” என்று கூற, மதுரா பதறி அடித்து எழுந்தாள்.

“நானே திறக்குறேன்” என்றவள் ஓடி வந்து திறக்க, “உன் ப்ரைவசிக்கு மரியாதை வேணும்னா என்னை இக்னார் பண்ணாம இருக்க பழகு” என்று கோபமாகவே சொன்னவன், திரும்பி நடந்தான்.

“போடா” என்று வாயை மட்டும் அசைத்தவள், கிளம்பி வந்தாள்.

மீண்டும் அதே நடை. இந்த முறை அவளை நடக்க விட்டு, அவன் ஓடினான். அப்போதும் அவளை கவனித்துக் கொண்டே ஓட, கடுப்பாகி விட்டாள்.

நடந்து ஓய்ந்து, காலை பிடித்துக் கொண்டு அவள் குனிந்து நிற்க, சொடக்கு சத்தம் கேட்டது.

தலையை மட்டும் தூக்கி பார்த்தாள்.

“வாட்?”

“எனக்கு கால் வலிக்குது”

“ஜஸ்ட் வாக் பண்ணதுக்கா? ஒழுங்கா நட” என்றவன் முறைக்க, “என்ன தான்யா உன் பிரச்சனை?” என்று எகிறினாள்.

வலி, அவனது முறைப்பில் கோபமாக மாறி இருந்தது.

அவன் அதற்கும் முறைக்க, “உனக்கு என்ன தான்யா வேணும்? தேவையில்லாம என்னை என் குடும்பத்துல இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்து, இப்படி பாடா படுத்துற? என்னயா வேணும் உனக்கு? சொல்லித்தொலையேன். நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்? ஏன் என் உயிர வாங்குற?” என்று கத்தினாள்.

“லாஸ்ட் வார்னிங். வாயா போயானு பேசாத”

“பொண்ண கடத்திட்டு வந்த உனக்கு எதுக்கு மரியாதை?”

“கடத்திட்டு வந்து? வந்து உன்னை என்னடி பண்ணிட்டேன்?” என்று அவனும் எகிற, பயந்தே போய் விட்டாள் மதுரா.

ஆனால் அதெல்லாம் ஒரு நொடி தான். அடுத்த நொடி பயமும் சேர்ந்து கோபமானது.

“இப்படி நடக்க வச்சு டார்ச்சர் பண்ணுறது போதாதா?”

“சாப்பிட்டு சாப்பிட்டு வெட்டியா இருக்கதுக்கு உன் அப்பன் வீடு இல்ல”

எரிச்லுடனும் எகத்தாளத்துடனும் கூறினான். அவன் பேச்சில் மேலும் கோபம் வர, மதுராவின் முகம் சிவக்க ஆரம்பித்து விட்டது.

“அப்புறம் எதுக்கு என்னை இங்க வச்சுருக்க? அனுப்பி விட வேண்டியது தான?”

“நீ எங்கயும் போக முடியாது. சாப்பிடுற சாப்பாட்டுக்கு ஏத்த மாதிரி உடல் உழைப்பையும் கத்துக்க. இல்லனா பட்னியா இரு.”

“இருந்துட்டா?”

“ஒரு மாசம் கழிச்சு உன் பொணத்த கொண்டு போய் உன் அப்பா கிட்ட கொடுத்துடுறேன். ஆனா அதுவும் ஒரு மாசம் கழிச்சு தான்”

திடமான குரலில் சொன்னவன், மீண்டும் ஓட ஆரம்பித்து விட்டான். மதுரா தான் அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.

அவள் செத்தே போனாலும் அவனுக்கு அக்கறை இல்லை. உடலைக்கூட ஒரு மாதம் கழித்து தான் கொடுப்பானாம். கண்ணீர் வந்து விட்டது.

காரணம் தெரியாமல் ஒருவனிடம் மாட்டிக் கொண்டு இருக்கிறாளே. அவனும் அவளது உயிர் போனால் கூட சரி என்கிறானே.

அவன் நல்லவன் என்று நினைத்தது தவறோ?

‘சாப்பிடாம செத்து போனாலும் சரி. இனி இவன் பேச்சு எதையும் கேட்க கூடாது’ என்ற முடிவுக்கு வந்தவள், கண்ணை துடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டாள்.

மாலை வரையிலும் அறையை விட்டு வெளியே வரவில்லை. பசி எடுத்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

அவள் அடைந்து கிடந்ததை பொருட் படுத்தாமல், முனியாவை அவளது காவலுக்கு வைத்து விட்டு சஞ்சய் வாசுவை பார்க்க கிளம்பினான்.

ஒரு மியூசிக் ஸ்டூடியோ அறையில் வாசு அமர்ந்திருக்க, அவனிடம் பேசிக் கொண்டிருந்தான் ஜவஹர். சஞ்சய் அங்கு இல்லை.

“சஞ்சய் எங்க?”

“அவருக்கு அவசர வேலை இருந்தது. நீங்க விசயத்த சொல்லுங்க. நான் இன்ஃபார்ம் பண்ணுறேன்”

ஜவஹர் ஒன்றும் அறியாதவன் போல் பேச, வாசுவுக்கு கோபம் தான் வந்தது.

“என்ன விளையாடுறீங்களா? எதுவும் செய்ய மாட்டேன்னு நினைப்பா?”

“செஞ்சுருக்க வேண்டியது தான?” என்று பின்னாலிருந்து குரல் கேட்டது.

வெடுக்கென எழுந்து விட்டான் வாசு. சஞ்சய் பாக்கெட்டில் கை விட்டுக் கொண்டு நின்றிருந்தான். வீட்டில் இருக்கும் போது உள்ள தோற்றம் அல்ல இது. பணச்செழுமை அவனது தலையிலிருந்து கால் வரை தெளிவாக தெரிந்தது.

முகத்திலும் ஒரு செருக்கோடு தான் நின்றிருந்தான். கூடவே வாசுவை பார்த்து நக்கலான பார்வையும் வீச, வாசு கொதித்து விட்டான்.

“எங்க மது?”

வாசு அதிகாரமாய் கேட்க, சஞ்சய்யின் உதட்டில் ஏளன சிரிப்பு.

“நீ இங்க எதுக்கு வந்த?”

“என் மதுவ கூட்டிட்டு போக. எங்க வச்சுருக்க அவள?”

“ஆட் விசயமா பேசனும்னு தான அப்பாயிண்ட்மெண்ட் கேட்ட?”

ஒன்றும் தெரியாதது போல் சஞ்சய் கேட்டு வைக்க, வாசுவுக்கு இரத்த அழுத்தம் கூடியது.

“வேணாம் சஞ்சய். பிரச்சனை உனக்கும் எனக்கும் தான? எதுக்கு அவள தேவையில்லாம உள்ள இழுத்துருக்க?”

“அவள தான கல்யாணம் பண்ணிக்க போற? அப்ப அவ தான் உள்ள வரனும்”

“ஏய்…”

“ஏன்டா பதறுற? நான் உன் வருங்கால மனைவிய எதுவும் பண்ணிடுவேன்னு பயமா? அதுக்கு வாய்ப்பே இல்லையே?”

சஞ்சய் கையை விரித்து, தோளை குலுக்கி, உதட்டை பிதுக்கி விளையாட்டாக கேட்டாலும், குரலில் விளையாட்டு சுத்தமாக இல்லை.

வாசு பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

“நடக்க வாய்ப்பில்லனு உனக்கு தான நல்லா தெரியும்? அப்புறம் ஏன் பதறுற?”

வாசு மூச்சை இழுத்து விட்டு நிதானத்துக்கு வந்தான்.

“எப்பவோ நடந்ததுக்கு இப்ப பழி வாங்கனுமா சஞ்சய்? அதுவும் சம்பந்தமே இல்லாத மதுவ போய்..”

“எப்பவோ நடந்ததா? எப்போ?”

சஞ்சய் நக்கலாக கேட்க, வாசுவிற்கு மொத்த சக்தியும் வடிந்து விட்டது. அவனது முகத்தை பார்த்தே உணர்வை படித்த சஞ்சய், அவனை தாண்டிக் கொண்டு சென்று தன் இடத்தில் அமர்ந்தான்.

“ஆட் பத்தி பேசுறதா இருந்தா பேசு. இல்லனா கிளம்பு. எனக்கு வேலை இருக்கு”

மேசையில் இரண்டு கையையும் அடித்து ஊன்றிய வாசு, “உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டான்.

காலையில் மதுரா கேட்டது நினைவு வர, வாசுவை பார்த்து புன்னகைத்தான்.

“இன்னுமா புரியல?”

“புரியல. மதுவ விட்டுரு. அவ சின்ன பொண்ணு”

“எஸ். அவ பேபி தான்” என்று ஒத்துக் கொண்டான்.

“சஞ்சய்…”

“எஸ் மிஸ்டர் வாசுதேவன்”

“உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நான் செய்றேன். அவள விட்டுரு”

“நோ மை ஃப்ரண்ட். உன்னால அத செய்ய முடியாது. எனக்கு வேண்டியத நானே செஞ்சுப்பேன்”

வாசு நொந்து போய் நின்று விட, “மது மேல ரொம்ப லவ்வோ?” என்று கேட்டான்.

கேட்கும் போது அவன் குரலில் தெரிந்த வன்மம், வாசுவை சட்டென நிமிர வைத்தது. உடல் விறைக்க அவன் வெறித்துப்பார்க்க, “குட்” என்றான் சஞ்சய்.

“நான் பண்ணதுக்கு.. அவள போய்..”

“வாசு ஸ்டாப் இட். ஆட் பத்தி பேச எதுவும் இருக்கா?”

இடைவெட்டி பேச, சஞ்சய்யை ஒரு நொடி வெறித்தவன், கொண்டு வந்திருந்த ஃபைலை அவன் பக்கம் நகர்த்தி விட்டு அமர்ந்தான். ஆனால் சஞ்சய் அதை தொடவில்லை.

“நீ சொல்” என்பது போல் அவன் பார்க்க, பெருமூச்சோடு விளம்பரத்தை விளக்கினான்.

கேட்டு விட்டு, “வை மீ?” என்று கேட்டு வைத்தான் சஞ்சய்.

“சோபியா”

“எதிர்பார்த்தேன். பட் ஐ டோன்ட் லைக் ஹர். அவ கூட நான் நடிக்க முடியாது.”

சஞ்சய் திட்டவட்டமாக கூற, வாசுவுக்கு அது பெரிதாக தெரியவில்லை. அவன் மனமெல்லாம் மதுவிடம் தான் இருந்தது.

“ஓகே.” என்று உடனே ஒத்துக் கொண்டவன், “மதுவ என்ன செய்ய போற நீ?” என்று மீண்டும் அந்த பேச்சுக்கே தாவினான்.

“உனக்கு ஒரு மாசத்துல கல்யாணம்ல?” என்று சஞ்சய் கிண்டலாக கேட்க, வாசு அதிர்ந்து போய் பார்த்தான்.

“இன்வைட் பண்ணுவியா?”

“தப்பு பண்ணுற சஞ்சய். நான் உன் அப்பா கிட்ட போவேன்”

“கோ அகெட்.”

சஞ்சய் தைரியமாக சொல்ல, வாசு சற்று அதிர்ந்தான். தந்தையின் பெயருக்கு பயப்படுவான் என்று நினைத்தால், அமைதியாக இருக்கிறானே.

தந்தையை தான் கடைசி அஸ்திரமாக வைத்திருந்தான். அதற்கும் சஞ்சய் அசரவில்லை என்றால்? ஆனால் இதை அப்படியே விடவும் முடியாது. மதுவை எப்படியாவது மீட்டாக வேண்டும்.

“ஃபைன். நேரா அவர் கிட்ட பேசிக்கிறேன்”

“நான் வேணும்னா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தரவா?”

சஞ்சய் கிண்டலாக கேட்க, “தேவையில்ல நானே பார்த்துக்கிறேன். நீ உன் அப்பா கிட்ட எப்படி சமாளிக்கிறனு பார்க்குறேன்” என்றான் சவாலாக.

சஞ்சய் “பார்க்கலாம்” என்பது போல் தலையசைத்தான்.

அந்த ஃபைலை எடுத்துக் கொண்ட வாசு, சஞ்சய்யை முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

“பாஸ்?” என்று ஜவஹர் இழுக்க, “போகட்டும். போய் பேசட்டும். என்ன செய்யுறான்னு நானும் பார்க்குறேன்” என்று சவால் விட்டவன், காலையில் மதுவோடு எடுத்துக் கொண்ட செல்ஃபியை வாசுவுக்கு அனுப்பி வைத்தான்.

அவன் பார்த்து விட்டதாக செய்தி வர, எழுந்து சென்று வாசலில் நின்று பார்த்தான்.

காரின் அருகே நின்றிருந்த வாசு கைபேசியை வெறித்து பார்த்துக் கொண்டிருக்க, சஞ்சய் நக்கலாக சிரித்துக் கொண்டான்.

வியர்வை சொட்ட மது வேறு எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க அவளுக்கு நெருக்கமாய் சஞ்சய்.

வாசு அந்த கைபேசியை விட்டு கண்ணை எடுக்காமல் நிற்க, “உன் வருங்கால மனைவி. என் கிட்ட பத்திரமா இருக்கா வாசு. பயப்படாம போ” என்று செய்தி அனுப்பியவன், அவனது முகமாற்றத்தை படித்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.

வாசுவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. திரும்பி சஞ்சய்யை ஒரு நொடி பார்த்து விட்டு, வேகமாக காரில் ஏறி கிளம்பி இருந்தான்.

இனி தாமதிக்க முடியாது என்று நினைத்தவன், அந்த நிமிடமே விபாகரனை சந்திக்க ஏற்பாடு செய்ய ஆரம்பித்து விட்டான். எப்படியாவது சஞ்சய்யிடம் மதுரா இருக்கும் விவரத்தை சொல்லி விட்டால், அவரே மீட்டுக் கொடுத்து விடுவார்.

அவர் முதலமைச்சராக இருந்தாலும், மிகவும் கண்டிப்பானவர். ஒரே ஒரு முறை, சஞ்சய்யின் நண்பன் என்ற முறையில் தான் அவரை பார்த்திருக்கிறான். மற்றபடி அவர் பெரிய புள்ளி. அவரை பற்றி கேள்விப்படுவதோடு சரி. ஏன் சஞ்சய்யே தந்தையை பற்றி நிறைய சொல்லி இருக்கிறான்.

அவரை சந்திக்க வாசு முயற்சிக்க, அவன் எதற்கு முயற்சிக்கிறானோ அது ஏற்கனவே நடந்து விட்டது. விபாகரனின் காதுக்கு மதுராவின் விசயம் சென்று சேர்ந்து விட்டது.

_______

“பொண்ணா?” என்று கேட்டார் விபாகரன்.

முகத்தில் நம்பிக்கையின்மையும் ஆச்சரியமும் போட்டி போட்டது.

“ஆமா பொண்ணு தான். முனியாவ மட்டும் அங்க வச்சுருக்காரு”

விபாகரனின் பி.ஏ கூற, அவரால் இன்னும் நம்ப முடியவில்லை.

மகன் நடிகனாக மாறும் போது அவருக்கு பெரிதாக பிடிக்கவில்லை தான். ஆனால் அவனுக்கு பிடித்ததை செய்கிறான் என்று விட்டிருந்தார். ஆனால் எந்த தவறான செயலும் செய்யக்கூடாது என்று சத்தியமும் வாங்கி இருந்தார்.

இன்று வரை பெண்கள் விசயத்தில் சஞ்சய் கிருஷ்ணாவின் பெயர் அடி பட்டது இல்லை. அவ்வளவு தூரம் தன்னை ஒதுக்கிக் கொண்டு தான் இருந்தான் சஞ்சய்.தி

இன்று திடீரென எதோ ஒரு பெண்ணை அவன் வீட்டில் தனியாக தங்க வைத்திருக்கிறான். புதிராக இருக்க, “யார்னு தெரியுமா?” என்று கேட்டார்.

பி.ஏ மறுப்பாக தலையசைக்க, “விசாரி. அப்புறமா சஞ்சய் கிட்ட கேட்டுக்கலாம்” என்று முடித்து விட்டார்.

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்