“வாசு..” என்று வேகமாக அவனை பார்த்த ஆர்வத்தில் மது இரண்டடி எடுத்து விட, அவளது கழுத்தை வளைத்துப் பிடித்துத் தன்னருகில் நிறுத்தினான் சஞ்சய்.
“மது..” என்று தவிப்பாக அழைத்த வாசுவும், சஞ்சய்யை பார்த்து விட்டு சட்டென நின்றான்.
“வாங்க மிஸ்டர் வாசுதேவன். என்ன இந்தப் பக்கம்?”
சஞ்சய் நக்கலான பார்வையோடும், அது குரலில் கொஞ்சம் கூட வெளிப்படாமலும் கேட்டு வைக்க, வாசு அவனை முறைத்தான்.
“அவள விடு சஞ்சய்” என்று வாசுதேவன் அழுத்தமாக கூற, “பால்ய நண்பன் நீ கேட்டு இல்லாமலா?” என்று கேட்டவன், உடனே கையை எடுத்து விட்டான்.
“விட்டுட்டேன். வர்றாளா பாரு” என்றவன் பேன்ட் பாக்கெட்டில் கையை நுழைத்தபடி, இருவரையும் வேடிக்கை பார்த்தான்.
அவன் விடுவித்து விட்டாலும், மது ஒரு அடி கூட நகரவில்லை. கண் முன்னால் வாசு இருக்க, அவனிடம் சென்று அடைக்கலம் புக முடியாமல் தவித்துப் போனாள்.
“போங்க மேடம். உங்க அருமை காதலன் கூப்பிடுறாருல?”
மதுவை பார்த்து எந்த உணர்வும் இல்லாமல் நல்ல பிள்ளை போல் பேசி விட்டு, அங்கிருந்த சுழற்நாற்காலியை காலால் இழுத்து அதில் அமர்ந்து கொண்டான் சஞ்சய்.
மதுவிற்கு கண்ணீர் வரப்பார்த்தது. கைகளை அழுந்த மூடி இறுகிப்போய் நின்றாள். சஞ்சய் முன்னால் அழக்கூடாது என்ற வைராக்கியம் இருக்கிறது. ஆனால், வாசுவை பார்த்ததில் மனம் தவித்து துடித்தது.
“பாரு.. அவளே வர மாட்டேங்குறா” என்று உதட்டை பிதுக்கிய சஞ்சய், அவள் கையை பிடித்து மடியில் அமர வைத்துக் கொள்ள, மதுவுக்கு தூக்கி வாரி போட்டது.
“உனக்கு என் கிட்ட தானடா பிரச்சனை? அவள ஏன்டா இப்படி காயப்படுத்துற?” என்ற வாசு கோபமும் கெஞ்சலுமாக கேட்க, சஞ்சய்யிடம் ஒரு மாற்றமும் இல்லை.
மதுவுக்கு கண்ணீர் கன்னத்தை தொட்டு விட்டது. சட்டென மேசையில் இருந்த டிஸ்யூவை எடுத்து, “டோண்ட் க்ரை பேபி. உன் லவ்வர் இத பார்த்தா, உன்னை நான் கொடுமை படுத்துறதா நினைப்பான்” என்று கூறி அவனே கண்ணீரை துடைத்து விட்டான்.
அவனது செய்கையில் வெறித்துப்பார்த்தவளுக்கு, வாழ்வே வெறுத்து விட்டது போல் இருந்தது.
“அவள விடுடா.. பாவம் சின்ன பொண்ணு” என்று வாசு கெஞ்ச, “சின்ன பொண்ணுக்கு ஏன்டா கல்யாண ஏற்பாடு பண்ணுறீங்க?” என்று கேட்டு வைத்தான் சஞ்சய்.
“சஞ்சய்”
“சொல்லு வாசு”
அவன் ஒன்றுமறியாதவன் போல் பேச, வாசுவுக்கு பொறுமை பறக்க ஆரம்பித்திருந்தது.
“மது.. நீ வா. அவன் என்ன செஞ்சாலும் பார்த்துக்கலாம். பயப்படாம வா” என்று கையை நீட்டினான்.
‘என்ன செஞ்சாலும் பார்த்துக்கிறதா? என்ன செய்வான்னு தான் ஏற்கனவே சாம்பிள் காட்டிட்டானே’ என்று நினைத்தவளுக்கு பயத்தில் உடல் சிலிர்த்தது.
அதை மடியில் அமர வைத்து அணைத்துப்பிடித்திருந்தவனும் உணர்ந்து கொள்ள, அவனது இதழில் மர்ம புன்னகை தவழ்ந்தது.
‘மாட்டேன்’ என்பது போல் மறுப்பாக தலையசைத்த மது, தவிப்பாக வாசுவை பார்த்தாள்.
“அவ வரலயாம் வாசு. நீ கிளம்பு. கல்யாண வேலை எல்லாம் இருக்கும்ல? போய் பாரு. கல்யாணத்துக்கு முதல் நாள் பொண்ண கரெக்ட்டா கொண்டு வந்து விட்டுருவேன்” என்று கூறி வாசலை காட்டினான் சஞ்சய் கிருஷ்ணா.