Loading

ஆட்டம் பாட்டம் என கலை கட்டியது கார். பேசிச்சிரித்து சந்தோசமாக கேரளாவை அடைந்தனர் மதுராவும் அவளது தோழிகள் பட்டாளமும். அங்கு ஞானசுந்தரம் சொன்ன ஹோட்டலில் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று தங்க வைத்தனர். மூன்று அறைகள் தான். யாரும் தனியாய் தங்குவதற்கு ஞானசுந்தரம் அனுமதிக்கவில்லை.

ஒன்றாய் தங்கி, ஒன்றாய் தூங்கி எழுந்து, ஊரை சுற்ற ஆரம்பித்தனர். நினைத்த இடத்தில் புகைப்படங்கள் எடுப்பதும், நினைத்த இடத்தில் சாப்பிடுவதும் அவர்களின் நாட்கள் இறக்கை இல்லாமலே பறந்தது.

நான்கு நாட்கள் முடிந்திருக்க நாளை கிளம்ப வேண்டும் என்பதால், எல்லோரும் சாப்பிட சென்றனர். தேவையான பொருட்களை வாங்கி கொண்டு, அங்கிருந்த உணவகத்தில் உண்டு முடித்து வெளியே வர, நாயை துரத்திக் கொண்டு ஓடிய எவனோ ஒருவன், மதுராவின் மீது பலமாக மோதி இருந்தான்.

மோதிய வேகத்தில் அவள் கையிலிருந்து அனைத்தும் கீழே விழுந்து சிதற, அவள் மட்டும் எப்படியோ விழாமல் தப்பித்தாள்.

இடித்தவன் பதறிப்போய், “சாரி மேடம்.. சமமிக்கனும்..” என்று திக்கித்திணறி மன்னிப்பு கேட்டான்.

“ஏய் பார்த்துடி..” என்று பதறிய தோழிகள் கூட, அவன் மன்னிப்பு கேட்டதும் சற்று இறங்கி விட்டனர்.

அவனுடைய நாய் கயிறோடு ஓடிக் கொண்டிருந்தது. அவன் நிற்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல் தள்ளாட, “யூ கோ” என்றாள் மதுரா.

மீண்டும் ஒரு முறை மன்னிப்பை கேட்டு விட்டு, நாயை துரத்திக் கொண்டு ஓடி விட்டான்.

கீழே விழுந்த பொருட்களை எடுத்தனர்.

“இப்படியா வந்து மோதுவான்? இங்க பாரு போன் உடைஞ்சு போச்சு”

“விடு.. அவன் பப்பி ஓடி போயிட்டு இருக்க பதட்டத்துல வந்து மோதிட்டான். விட்டுத்தள்ளு.”

“அதுக்காக? ரோட்டுல போற எல்லாரு மேலயும் இடிக்கிறதா?”

“அதான் போயிட்டான்ல? விடேன்”

ஆளுக்கொன்றை பேசி விட்டு, அங்கிருந்து கிளம்பினார்கள்.

ஹோட்டல் வந்து சேர்ந்து எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி விட்டு, மதுரா குளிக்கப்போனாள். தோழிகள் எல்லோரும் ஒரே அறையில் அரட்டை அடித்துக் கொண்டிருக்க, மதுரா மட்டும் தனி அறையில் இருந்தாள்.

குளித்து வேறு உடைக்கு மாறி வந்து சேர, கதவு தட்டும் சத்தம் கேட்டது.

“ரூம் கார்ட்ட மறந்துட்டு போயிட்டாளா?” என்று யோசித்துக் கொண்டு கதவை திறந்தாள் மதுரா.

அங்கு ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவன் நின்று இருந்தான்.

“மேடம் மதுராங்குறது?”

“நான் தான். ஏன்?”

“உங்கள பார்க்க உங்க உட்.பி வந்துருக்காரு. கீழ பார்க்கிங்ல இருக்காரு”

‘வாசுவா!’ என்று ஆச்சரியமாக நினைத்தவள், “ஓகே போங்க வர்றேன்” என்று கூறி விட்டு கதவை அடைத்தாள்.

அவன் கேரளாவில் வேலை இருப்பதாக சொல்லி இருந்தது நினைவு வந்தது. வந்தவன் கைபேசியில் அழைக்கவில்லையே என்று யோசித்து அதை எடுத்துப்பார்க்க, கீழே விழுந்ததில் அது அணைந்து போய் கிடந்தது.

“ச்சே.. ஆஃப் ஆகி இருக்கு” என்று அதை தூக்கி சார்ஜரில் போட்டு விட்டு, உடனே வாசுவை பார்க்க கிளம்பினாள்.

பார்க்கிங் பகுதியில் நுழைய, அங்கு யாரும் கண்ணில் படவில்லை.

‘எங்க இருக்காருனு தெரியல?’ என்று தேடிக் கொண்டிருந்தவள் முன்னால், கருப்புக் கண்ணாடியும் உதட்டில் உறைந்த புன்னகையுமாய் வந்து நின்றான் சஞ்சய் கிருஷ்ணா.

“ஹாய்..” என்று வேறு கூற, அவள் அவனை மேலிருந்து கீழ் பார்த்தாள்.

யாரென்று தெரியாதவன் திடீரென வந்து பேசினால் பார்க்கும் பார்வை.

வாசு அங்கே இல்லை என்று உறுதிசெய்து கொண்டு திரும்பியவளை, “மிஸ் மதுரா” என்று நிறுத்தினான்.

சட்டென நின்று திரும்பிப் பார்த்தாள்.

“வாட்? மீ?”

“நீங்க தான மதுரா? உங்கள தான் கூப்பிடுறேன்” என்று தமிழில் பேசினான்.

ஆனால் அது வித்தியாசமாகவும் இருந்தது.

“நீங்க யாருனு எனக்குத் தெரியலயே?”

“அத இப்போ தெரிஞ்சுக்க தேவையில்ல.” என்றவனின் புன்னகை கொஞ்சமும் வாடவில்லை.

“என்ன?” என்று புரியாமல் பார்த்தவள், ‘லூசா இருப்பானோ?’ என்று சந்தேகம் எழ, உடனே இடத்தை காலி செய்யும் முடிவுக்கு வந்து விட்டாள்.

“நில்லுங்க மதுரா.” என்று அழைத்தவன், அவள் முன்னால் சென்று நின்று விட்டான்.

மனதில் அபாயமணி அடிக்க ஒரு அடி பின்னால் நகர்ந்தவள், “யார் சார் நீங்க? வழிய விடுங்க” என்று கோபமாக பேசினாள்.

“போகலாம். ஆனா கார்ல. உள்ள ஏறுங்க”

“வாட்? அதுக்கு வேற ஆள பாருங்க” என்றவள் அவனை சுற்றிக் கொண்டு நடக்க, “உங்க அப்பா உயிரோட வேணாமா மதுரா?” என்று கேட்டு வைத்தான்.

சட்டென நின்றவளுக்கு இதயம் படுவேகமாக துடிக்க ஆரம்பித்து விட்டது.

“உன்னோட அப்பா ஞானசுந்தரம்.. உயிரோட வேணாமா?” என்று மீண்டும் கேட்டவன், “வேணாம்னா போகலாம்” என்றான்.

வேகமாக திரும்பியவள், “என்ன மேன் மிரட்டுறியா? இந்த பிளாக் மெயிலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். போலீஸ் கிட்ட போவேன் ஜாக்கிரதை.” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

தன் கைபேசியை எடுத்துக் கொண்டே, “யுவர் விஸ். போலீஸ் போய் காப்பாத்துற வரை உன் அப்பா உயிரோட இருக்க போறது இல்ல” என்றான்.

மதுரா அதிர்ந்து பார்க்க, கண்ணாடியை கழட்டி விட்டு கைபேசியை திருப்பி அவளுக்கு காட்டினான்.

அதில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அவளுடைய தந்தையின் காரைப்போலவே.

“ஏய்.. யார் நீ?” என்று கேட்டு வேகமாக அவனருகே வந்தாள்.

“உன் அப்பா கார் தான? பின்னாடி ரெண்டு லாரி ஃபாலோவ் பண்ணிட்டு இருக்கு”

கூலாக அவன் சொல்ல, மதுரா உடனே சுதாரித்தாள். ஒருவேலை அவளை ஏமாற்ற நினைத்துச் செய்தால்?

அவளது முகத்தில் திடீரென தோன்றிய சந்தேகமும் தைரியமும், சஞ்சய் கண்ணை விட்டு தப்பவில்லை.

“உள்ள இருக்க உன் அப்பாவ பார்க்கனுமா? விடியோ கால் போட்டு லைவ்ல பார்க்கலாமா?” என்று கேட்டவன், உடனே யாரையோ அழைத்தான்.

“மகேஷ் அந்த ஆள காட்டு” என்றதும், பைக்கில் போன மகேஷ் கேமராவை கார் பக்கம் திருப்பினான்.

உள்ளே இருந்த ஞானசந்தரத்தை மதுவுக்கு காட்டிய சஞ்சய் புன்னகைத்தான்.

உண்மையில் தந்தை இருப்பதை பார்த்து அவள் அதிர்ந்து போனாள்.

“ப்பா..” என்று மது பதறி விட, “நாலு பைக் ரெண்டு லாரி.. எத வச்சு முதல் ஆட்டத்த ஆரம்பிக்கலாம்?” என்று கேட்டு வைத்தான்.

“ஏய்…”

“இப்ப முன்னாடி ஒரு லாரியும் பின்னாடி ஒரு லாரியும் போயிட்டு இருக்கு. ரெண்டையும் வச்சு நசுக்க வைக்கலாமா?” என்று அவளிடமே ஐடியா கேட்டான்.

“ஏய்.. என் அப்பாவுக்கு எதாவது ஆச்சு..”

அவள் எகிற, கொஞ்சமும் அசராமல் மீண்டும் கைபேசியை தன் பக்கம் திருப்பினான்.

“உள்ள இருக்கவனுக்கு கொஞ்சம் பயத்த காட்டு மகேஷ்” என்று கைபேசியை வாயின் அருகே வைத்து சஞ்சய் கூற, மதுரா பதறி விட்டாள்.

“ஏய் வேணாம் வேணாம்” என்று அவள் அலற, சஞ்சய் புன்னகை குறையாமல் தன் கார் பக்கம் கண்ணை காட்டினான்.

உள்ளே அவள் அமர வேண்டும். சட்டென அதைப்புரிந்து கொண்டவள் அவனை முறைத்தாள்.

“மாட்டேன். என் அப்பாவ விடு. இல்லனா நான் கத்தி எல்லாரையும் கூப்பிடுவேன்” என்று மிரட்டினாள்.

அவளது மிரட்டலில் மொல்லிய புன்னகை படர, மீண்டும் கைபேசியை வாயருகே கொண்டு சென்று, “கார தூக்கிடு” என்றான்.

அவ்வளவு தான். மதுராவிற்கு உயிர் போனது‌.

“நோ..” என்று அலறியவள் முன் கைபேசியை திருப்பிக் காட்ட, அதில் ஞானசுந்தரத்தின் கார் தூக்கி எறியப்படும் காட்சி தெரிந்தது.

“அப்பா…” என்று அலறினாள் மதுரா. ஒரு நொடியில் இதயம் தொண்டைக்கு வந்து விட்டது.

எட்டி கைபேசியை பறிக்கப்போக, பின்னால் இழுத்துக் கொண்டான்.

“செம்ம சவுண்ட்” என்று காதைக்குடைந்து கொண்டவன், “அடுத்த ஆட்டம் போகலாமா?” என்று கேட்டான்.

“அப்பா.. அப்பா.. ஏய்.. என் அப்பாவ விடு.. யார் நீ?” என்று சட்டையை பிடித்து உலுக்கியவளை சிரிப்போடு பார்த்தான்.

“ரொம்ப எமோஷனலாகாத மதுரா. உன் அப்பா மட்டும் இல்ல. உன் காதலன் வாசுதேவன் பின்னாடி கூட லாரி போயிட்டு தான் இருக்கு. பட் இப்ப உன் அப்பா தான் அடி பட்டு கிடக்குறான். நீ நல்ல பொண்ணா கார்ல ஏறி உட்கார்ந்துட்டா ஞானசுந்தரம் ஹாஸ்பிடல் போவான். இல்லனா நேரா..” என்று மேலே கை காட்டினான்.

அவனை வெறித்துப்பார்த்தவள், அதற்கு மேல் யோசிக்காமல் கார் கதவை திறந்து உள்ளே ஏறி விட்டாள்.

அவளை தொடர்ந்து காரில் ஏறி அமர்ந்த சஞ்சய், கைபேசியை முன்னால் இருந்த ஸ்டாண்டில் பொறுத்தி விட்டு காரை எடுத்தான்.

அதில் கவிழ்ந்து கிடந்த காரை பார்த்த மது, “அதான் உட்கார்ந்துட்டேனே.. அப்பாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகச்சொல்லுங்க” என்று கெஞ்சினாள்.

“போகலாம். அதுக்கு முன்னாடி உன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு”

“என்ன என்ன?” என்று கேட்டதும் கைபேசியில் இருந்த அழைப்பை துண்டித்து விட்டு, காரின் வேகத்தை அதிகபடுத்தினான்.

“எங்க போறீங்க? என் அப்பாவ காப்பாத்த சொல்லுங்க”

“முதல்ல பேசி முடிச்சுக்கலாம் மதுரா”

“என்ன தான்‌ பேசனும்?” என்று எரிந்து விழுந்தாள்‌

“இந்த நிமிஷத்துல இருந்து நீ என் கட்டுப்பாட்டுக்குள்ள வரனும். அப்படி வந்துட்டா உன் அப்பாவ ஹாஸ்பிடல்ல சேர்க்க சொல்லுறேன்”

“வாட்?”

“கேட்கலயா?”

“என்ன உளறிட்டு இருக்கீங்க? நான் எதுக்கு உங்க கட்டுபாட்டுக்குள்ள வரனும்?”

“இப்போதைக்கு அது உனக்கு தெரிய தேவை இல்ல” என்று கூற, அவனை முறைத்தவளுக்கு அப்போது தான் புரிந்தது.

கார் சாலையில் பறந்து கொண்டிருக்க, அவளும் அவனோடு போகிறாள். கையில் கைபேசி இல்லை. அறையில் இருக்கிறது. யாரிடமும் அவள் சொல்லி விட்டும் வரவில்லை. வாசு வந்திருப்பதாக நினைத்து தனியே வந்த முட்டாள்தனத்தை நொந்து கொண்டாள்.

“புரிஞ்சுடுச்சு போலயே?”

சஞ்சய் கேட்க, அவன் முகத்திலிருந்த சிரிப்பு அவளை பார்த்து கேலி செய்வது போல் இருந்தது.

திட்டமிட்டு கடத்தப்பட்டிருப்பது போல் உணர்ந்தவளுக்கு, வியர்க்க ஆரம்பித்து விட்டது.

“கார நிறுத்துங்க”

அவனிடம் மாற்றம் இல்லை.

“கார நிறுத்துங்க” என்று அதிகார தொனியில் கட்டளையிட, அவன் திரும்பியும் பார்க்கவில்லை.

“ஸ்டாப் இட்” என்று குரலை உயர்த்தினாள்.

அப்போதும் அவன் அசையாமல் இருக்க, கதவை திறக்கப் பார்த்தாள். சென்டர் லாக் போடப்பட்டிருந்தது.

உடனே குனிந்து லாக்கை திறக்க, அடுத்த நொடி கார் உயர் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது.

“அம்மா..” என்று தலையை போர்டில் இடித்துக் கொண்டு அவள் அலற, மேலும் காரின் வேகம் கூடிக் கொண்டே போனது. இந்த வேகத்தில் கதவை திறந்து குதித்தால் அது தற்கொலைக்கு சமம்.

தடுமாறி சீட் பெல்ட்டை எடுத்து போட்டுக் கொண்டவள், “ஸ்லோ” என்று கத்தினாள்.

அவளது கத்தலுக்கு வேகம் கூடியதே தவிர குறையவில்லை. கியரை மாற்றி காரை ஆதீத வேகத்தில் சஞ்சய் கொண்டு செல்ல, “ஸ்லோ ப்ளீஸ்” என்று கண்ணை மூடிக் கொண்டு கெஞ்சினாள்.

அதற்கும் மாற்றமில்லாமல் போக சீட்டில் ஒட்டிக் கொண்டு, அவனை ஒரு பார்வை பார்த்தாள். பிறகு சட்டென குனிந்து மீண்டும் சென்டர் லாக் செய்தாள்.

உடனே வேகம் படிப்படியாய் குறைய ஆரம்பித்தது. கார் மீண்டும் மிதமான வேகத்துக்கு வர, அவனை வெறித்துப்பார்த்தாள். இன்னும் இதயம் தடக் தடக்கென குதித்துக் கொண்டிருந்தது.

“உங்களுக்கு பைத்தியமா?” என்று அவள் கத்த, “மே பி” என்றான் கூலாக.

அவனை அருவருப்பாய் ஒரு பார்வை பார்த்தவள், “இப்ப என்ன தான் வேணும் உங்களுக்கு?” என்று எரிந்து விழுந்தாள்.

“நீ தான்” என்ற பதிலோடு காரை ஓரங்கட்டி நிறுத்தினான்.

“என்ன சொன்ன?” என்று கேட்டவளில் குரலில் கோபம் தாண்டவமாடியது. அது வரை பேச்சில் இருந்த மரியாதை கூட போய் விட்டது.

காரை நிறுத்தி சீட் பெல்ட்டை கழட்டியவன், அவளை திரும்பிப்பார்த்தான். அவளது பார்வையின் அர்த்தம் புரிய, மீண்டும் புன்னகைத்தான்.

“நீ நினைக்கிற மாதிரி உன் மேல ஆசை எல்லாம் இல்ல. அதுனால இப்படி பொறுக்கி பார்க்குற மாதிரி பார்க்க கூடாது. அந்த மரியாதை இல்லாம பேசக்கூடாது” என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து வைத்தான்.

“இப்ப பண்ணுறது மட்டும் நல்ல செயலா? பொறுக்கித்தனம் இல்ல?”

“எது?”

“என்னை கத்திட்டு வந்துருக்கது”

“கடத்தலா? நீயா தான கார்ல ஏறுன?”

புருவம் உயர்த்தி அவன் கேட்க, மதுவிற்கு கோபம் தான் வந்தது.

“நீயா ஏறுனது கடத்தலாகுமா?”

“என்னை ஃபோர்ஸ் பண்றீங்க”

“ஆமா. ஃபோர்ஸ் தான் பண்றேன். நீ உங்கப்பா செத்தா செத்துட்டு போறான்னு போக வேண்டியது தான?”

இதைக்கேட்டதும், மதுராவிற்கு சட்டென இருந்த கோபம் மறைந்து போனது. தந்தையை பற்றி யோசிக்காமல் இவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாளே.

“அப்பாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறதா சொன்னீங்க.” என்று அவள் பதற, “நீ இன்னும் நான் சொன்னதுக்கு சரினு சொல்லலயே?” என்று கேட்டான்.

“ஆஆஆஆ…..” என்று அதீத கோபத்தில் கத்தியவள், “என்ன தான் வேணும் உங்களுக்கு?” என்ற குரலை தணிக்காமலே கேட்டாள்.

“ஏற்கனவே சொல்லிட்டேனே”

‘பைத்தியத்து கிட்ட வந்து மாட்டிக் கிட்டேனே’ என்று நினைத்தவள், கார் நின்று விட்டதை பார்த்து உடனே கதவை திறந்து இறங்கி விட்டாள்.

அவன் தடுக்கவில்லை. அவள் இறங்கியதும் அவனும் மறுபக்கம் இறங்கி வந்தான்.

நடுசாலையில் நின்ற மதுராவிற்கு, தூரலாக விழுந்த மழையிலும் வியர்த்து கொட்டியது.

சுற்றியும் யாருமே கண்ணுக்கு தெரியவில்லை. வெறும் சாலை மரங்கள் மட்டுமே தெரிந்தது. எந்த பக்கம் போவது என்று புரியாமல் அவள் பதறிக் கொண்டு நிற்க, சஞ்சய் தன் வாடாத புன்னகையுடன் அவள் முன்னால் வந்து காரில் சாய்ந்து நின்றான்.

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்