Loading

“இன்னொன்னு?”

“பிச்சுடுவேன்.”

“ஒன்னே ஒன்னு.. ப்ளீஸ்”

“இப்படித்தான் இதுக்கு முன்னாடியும் சொன்ன”

மதுரா உதட்டை நாக்கால் தடவிக் கொண்டு, “அவ்வளவு டெஸ்ட்!” என்றாள்.

“அந்த நாக்க பிடிச்சு சூடு வச்சா தெரியும் எவ்வளவு டேஸ்ட்னு” என்று கொதித்தார் ஆண்டாள்.

நான்கு தோசையை முழுங்கி விட்டு, ஐந்தாவது தோசைக்கு அடி போட்டுக் கொண்டிருந்தாள் மதுரா. அதைப் பார்த்துக் கடுப்பாகித்தான் ஆண்டாள் கத்திக் கொண்டிருந்தார்.

“சாப்பிடுற பிள்ளைக்கு சோறு போட சலிச்சுக்கிறீங்களே.. நீங்க எல்லாம் ஒரு அம்மாவா?”

“சுடிதார் சைஸ் பத்தல மம்மினு வரும் போது இதே வாய் பேசுறியானு பார்க்கிறேன்டி”

பதிலுக்கு அவர் வாரி விட, “எனக்கு உங்க தோசையே வேணாம்” என்று முறுக்கிக் கொண்டு எழுந்து விட்டாள்.

கைகழுவி விட்டு கல்லூரி பையை தூக்கியவள், “கிளம்புறேன்மா” என்று கூறினாள்.

“ஒழுங்கு மரியாதையா டிஃபன்ல இருக்கத தான் இன்னைக்கு சாப்பிடுற.. கேன்டீன்ல கண்டத வாங்கி தின்னனு தெரிஞ்சது… வாய தைச்சு விட்டுருவேன்”

ஆண்டாள் வழக்கமான புராணத்தைப் பாட, மதுரா காதில் வாங்காமல் கிளம்பியிருந்தாள்.

இரண்டு மாதங்களில் இருபது வயதைத் தொடங்கும் இளம்பெண் மதுரா. கொழு கொழு உடலும், குழி விழும் கன்னமும் அவளை பள்ளி மாணவியாகத்தான் காட்டும். சுண்டினால் இரத்தம் வந்து விடும் போன்று மிருதுவானவள். மனமும் அதே போல் தான். இடையை தொடும் பின்னலுடன் அவள் தோளில் போட்டிருந்த பையும் அசைந்தாடியது.

அவள் பேருந்து நிறுத்தத்தை அடையும் போதே, வழக்கம் போல வாசுதேவனின் அழைப்பு வந்தது.

கன்னத்தில் குழி விழா அழகாக புன்னகைத்துக் கொண்டே காதில் வைத்தாள்.

“குட் மார்னிங் வாசு”

“குட் மார்னிங் மது.. காலேஜ் கிளம்பியாச்சா?”

“கடந்த ரெண்டு மாசமா தினமும் கால் பண்ணி இதே கேள்விய கேட்குறீங்களே.. உங்களுக்கு சலிக்கலயா?”

“சலிக்கலயே. உன் கூட மார்னிங் பேசுனா தான் ஃப்ரஸ்ஸா இருக்கு.”

“ஐஸ் ஐஸ் ஐஸ்”

“வேணுமா?”

“இதுக்கும் மேல வச்சா தாங்காதுபா”

அந்த பக்கம் வாசு சிரிக்க, இந்த பக்கம் மது புன்னகைத்தாள். பேருந்து வரும் வரை பேசி விட்டு, வந்ததும் ஏறி அமர்ந்து கொண்டாள்.

இன்னும் ஒரே மாதம் தான். கல்லூரி வாழ்வு முடிவுக்கு வந்து விடும். அதன் பின்பு வாசுவோடு திருமணம். ஒரு அழகான குடும்ப வாழ்வு. அது மட்டும் தான் அவளது கனவும் ஆசையும்.

கண்களில் அந்த கனவை சுமந்து கொண்டு, கல்லூரியை நோக்கி பயணித்தாள்.

_________

முகம் இறுக அமர்ந்திருந்தான் சஞ்சய் கிருஷ்ணா. கண் முன்னால் இருக்கும் பொருளை கிழித்துப் போடும் வெறி வந்தது.

விருட்டென எழுந்தவன், “எப்போ இங்க இருந்து கிளம்புறோம்?” என்று கேட்டான்.

“ரெண்டு நாள்ல பாஸ்”

“நான் அங்க போகும் போது அவனோட மொத்த டீடிலும் எனக்கு வரனும். ஏற்பாடு பண்ணு”

“ஓகே பாஸ்” என்ற ஜவஹர், உடனே அதற்கான வேலையில் இறங்கினான்.

சஞ்சய் அந்த காகிதங்களை எடுத்துப் பார்த்தான்.

அது ஒரு மருத்துவ அறிக்கை. ஒரு பெண் பல முறை கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள். அதை பார்க்கப்பார்க்க, காரணமானவை வெட்டி வீழ்த்தும் வேகம் கிளம்பியது.

‘கிடைக்கட்டும். மரணத்த விட கொடூரம் எப்படி இருக்கும்னு காட்டுறேன்’ என்று கறுவிக் கொண்டான்.

அந்த கோபத்திற்கு சொந்தக்காரனோ பாப் ஒன்றில் குடித்து விட்டு, ஒரு பெண்ணின் அங்கங்களை அத்துமீறிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தான்.

பகலிலேயே இரவு நேரம் போல் இருட்டாக காட்சியளித்த அந்த பப்பில், சத்தம் மட்டும் காதை கிழித்துக் கொண்டு இருந்தது.

“வாசு.. கமான் மேன்.. வந்ததுல இருந்து ஒரு பெக் கூட முடிக்கல நீ” என்று குறைபட்டான் ஜாக்சன்.

வாசுதேவனின் ஒரே தோழன்.

“ப்ச்ச்.. வேணாம்டா.”

“ஏன் உன் மாமனாருக்கு தெரிஞ்சா பொண்ணு தர மாட்டாரா?”

ஜாக்சன் நக்கலாக கேட்க, “அவரென்ன தர்ரது? மது எனக்கு சொந்தமானவ. அவள என் கிட்ட இருந்து எவனாலயும் பிரிக்க முடியாது” என்று கர்வமாக கூறினான்.

அந்த கர்வத்தை உடைக்கவே ஒருவன் கிளம்பி இருப்பதை அறியவில்லை.

“அப்புறம் என்ன? வா டான்ஸ் பண்ணலாம்”

“ப்ச்ச்.. எனக்கு மூட் இல்லடா. நான் கிளம்புறேன்”

“வரவர ரொம்ப பண்ணுற நீ. ஒரு நாள் உனக்கு இருக்கு”

“பை மேன்”

கையாட்டி விட்டு அங்கிருந்து வாசு கிளம்பி விட, ஜாக்சன் மட்டும் அங்கிருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.

______

வேலை முடிந்து விமானத்தில் ஏறினான் சஞ்சய் கிருஷ்ணா. விமானம் கிளம்பியதும் தன் கைபேசியை எடுத்தான். அதில் இருந்த புகைப்படத்தை ஆழ்ந்து பார்த்தான்.

‘ஐ நெவர் எக்ஸ்பெக்ட் திஸ்’ என்று நினைத்துக் கொண்டு, அடுத்து என்ன? என்கிற யோசனையுடன் திரும்பி வெளியே பார்த்தான்.

மொத்தமும் மேகமூட்டமாகி இருந்தது. அவனது மனதை போலவே.

______

தேர்வெழுதிக் கொண்டிருந்தாள் மதுரா. அவளது கடைசி தேர்வு இது. இப்போது தான் தேர்வு ஆரம்பமானது போல் இருந்தது. அதற்குள் நாட்கள் ஓடி மறைந்து, இன்று தேர்வும் முடிந்து விட்டது.

விடைத்தாள்களை கொடுத்து விட்டு, மாணவர்கள் வெளியே வந்தனர் .

“ஒரு வழியா எல்லாமே முடிஞ்சது. இனிமே நிம்மதியா இருக்கலாம்” என்று ஒருத்தி கூற, “இருக்கலாம். ஆனா அந்த இருபதாவது கேள்விக்கு பதில் யாராவது எழுதுனீங்களா?” என்று கேட்டாள்.

“நான் எழுதுனேன். உனக்கு என்ன ஆன்சர் வந்துச்சு?”

ஒருத்தி கேட்க, மற்றவள் பதில் சொல்ல, மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“அட்டாக்” என்று மதுரா சொல்ல, மொத்தமாய் அந்த இருவரையும் குனிய வைத்து மொத்தி விட்டனர்.

“டிஸ்கஸ் பண்ணுவீங்களா? பண்ணுவீங்களாடி?” என்று கேட்டு அவர்களை போட்டு உலுக்கி எடுத்தனர்.

“தொல்லை விட்டுச்சுனு வந்தா ஆன்சர பத்தியா பேசுறீங்க? வாயத்திறந்தீங்க? தைச்சுடுவேன்” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினாள் மது.

“போங்கடி.. நாம வீட்டுக்குப் போய் போன்ல பேசிக்கலாம்” என்று முதுகை தேய்த்துக் கொண்டே கூறினாள் அடி வாங்கியவள்.

“திருந்தாத கேசுங்க” என்று கூறி, எல்லோரும் தலையிலடித்தனர்.

“மது உன் ஆளுடி” என்று ஒருத்தி கூற, மது உடனே திரும்பிப் பார்த்தாள்.

வாசுதேவன் தான் வந்து கொண்டிருந்தான்.

“ச்சே! ஹீரோ மாதிரி இருக்கார்ல? மதுவுக்கு செம்ம பொருத்தம்”

ஒருத்தி வாய்விட்டே சொல்ல, “இன்னும் ஏன் நிக்கிற? உன்னை கூப்பிட தான் வந்துருக்காரு. போ” என்று தள்ளி விட்டனர்.

“நாம ஈவ்னிங் பார்க்கலாம். பை ” என்ற மது, வாசுதேவனை நோக்கிச் சென்றாள்.

“எக்ஸாம் முடிஞ்சதா? போகலாமா?” என்று வாசுதேவன் கேட்க, “என்ன திடீர்னு வந்து நிக்கிறீங்க?” என்று கேட்டாள்.

“சும்மா. போற வழி. பிக் அப் பண்ணலாமேனு”

“நம்பிட்டேன்.” என்றவள் நடக்க ஆரம்பிக்க, அவனும் நடந்தான்.

“எப்படி பண்ணிருக்க?”

“பண்ணிருக்கேன். எப்படினு எல்லாம் கேட்டா நோ ஆன்ஸர்”

“ரொம்ப நல்லது.. அடுத்து என்ன பண்ணுறதா இருக்க?”

“என்ன இப்படி கேட்குறீங்க? கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு இப்படி கேட்டா என்ன அர்த்தம்?”

முறைத்தவளை பார்த்து சிரித்தவன், கார் கதவை திறந்து விட்டான்.

“மேல படிக்க போறியானு கேட்டேன்மா. அதுக்கு முறைக்காத” என்று சமாதானபடுத்தி உள்ளே அமர வைத்தான்.

அவனும் அமர்ந்ததும், “நான் ஏன் மேல படிக்கனும்? எனக்கு அதுல ஆசையே இல்ல.” என்றாள்.

“உனக்கு படிக்கவே பிடிக்காதா? மார்க்ஸ் ஒன்னும் அவ்வளவு கம்மியா நீ வாங்கலயே?”

“அது நல்ல மார்க்ஸ். பட் எனக்கு படிக்க ஆசையெல்லாம் இல்ல. சோ படிக்க மாட்டேன்”

“அப்போ ஆஃபிஸுக்கு வேலைக்கு வர்ரியா?”

“அய்ய.. வாய்ப்பில்ல. கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக சொல்ல மாட்டீங்க தான? அப்படி எதாவது சொன்னீங்க.. அவ்வுளவு தான்”

“உனக்கு என்ன பிடிக்குதோ செய்” என்று புன்னகை ததும்ப கூறியவன், “ஈவ்னிங் எங்கயாவது போகலாமா?” என்று கேட்டான்.

“ம்ம்… ம்ஹும்… ஈவ்னிங் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ண போறோம்”

“இப்ப தான பார்த்துட்டு வந்த?”

“எக்ஸாம் முடிஞ்சத கொண்டாடனும்ல? அதுக்காக சின்னதா ட்ரீட். ஜாலியா என்ஜாய் பண்ண போறோம்”

“படிக்காம எழுதுன பரிட்சைக்கு ட்ரீட் வேறயா?” என்று கேட்டு கேலி செய்தபடி காரை செலுத்தினான்.

வீட்டில் அவளை விட்டு விட்டு, ஆண்டாளிடம் பேசி விட்டுக் கிளம்பினான்.

மாலை பீட்சா ஹட்டில் ஆளுக்கொன்றை வாங்கிக் கொண்டு ஆறு பெண்கள் அமர்ந்திருந்தனர். எல்லோருமே மதுவின் தோழிகள். தேர்வு முடிந்த சந்தோசத்தில் கலகலத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.

“நாம ஒரு டிரிப் போகலாமா?” என்று ஒருத்தி கேட்க, “போகலாம். போகலாம்” என்று அத்தனை பேரும் ஒப்புக் கொண்டனர்.

ஆளாளுக்கு ஒரு இடத்தை சொல்ல, கடைசியாக கேரளா ஆலப்புழா பகுதியை தேர்வு செய்தனர். அதோடு வீட்டிலும் சம்மதம் வாங்க கிளம்பினர்.

“முடியாது. நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிச்சப்புறம் என்ன ட்ரிப் வேண்டி கிடக்கு? கல்யாணம் முடிஞ்சு வாசு கூட போயிக்கோ” என்று அதட்டினார் ஆண்டாள்.

“ம்மா.. அது வேற மா.. இது ஃப்ரண்ட்ஸ் கூட போறது”

“வேணாம்னா வேணாம் தான்” என்று அவர் கூறி விட, மதுரா தந்தையிடம் சென்று நின்றாள்.

“ப்பா.. ப்ளீஸ் பா.. இது மாதிரி பின்னாடி எப்பபா போக முடியும்? அம்மா கிட்ட சொல்லுங்க”

அவள் கெஞ்ச, எப்போதும் மகளின் மீது உயிரை வைத்திருக்கும் ஞானசுந்தரம் இளகி விட்டார்.

“யாரெல்லாம் போறீங்க?”

மதுரா அவளது தோழிகளின் பெயரை வரிசையாக கூற, “எங்க போகப்போறீங்க?” என்று கேட்டார்.

“கேரளா.. இங்க பக்கத்துல தான். ஆனா அம்மா என்னமோ வெளிநாடு போக கேட்ட மாதிரி குதிக்கிறாங்க”

“அப்படித்தான் குதிப்பேன். லீவ்ல ஒழுங்கா வீட்டுல இருந்து சமையல் கத்துக்கனு சொன்னா, ஊரு சுத்த போறேன்னு நிக்கிற. நீங்களும் கேட்டுட்டு இருக்கீங்க?”

இருவரையும் ஒன்றாய் ஆண்டாள் பேச, “கொஞ்சம் பொறுமையா பேசு” என்று அவரை அமைதி படுத்தினார் ஞானசுந்தரம்.

“இப்ப எதுக்கு திட்டிட்டு இருக்க? ஃப்ரண்டஸ் கூட தான வெளிய போறேங்குறா? அதுவும் எக்ஸாம் எல்லாம் முடிச்சுட்டு போறா. அனுப்பி வைப்போமே”

“என்னங்க நீங்க கல்யாணத்த வச்சுட்டு?”

“அதுனால தான் சொல்லுறேன். கல்யாணமாகிடுச்சுனா எனக்குமே இந்த மாதிரி போக முடியாது. குடும்பத்த பார்த்துக்கனும். நீ இருக்கியே அப்படி. என் பொண்ணு அப்படி இருக்க வேணாம்.”

மனைவியை அதட்டி விட்டு மகளிடம் திரும்பினார்.

“நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க. ஆனா நான் புக் பண்ணுற ஹோட்டல்ல தான் நீங்க தங்கனும். நம்ம வீட்டு டிரைவர் கார ஓட்டிட்டு வருவான். எங்கனாலும் அந்த கார்ல தான் போகனும். ஆறு நாள் எல்லாம் இல்ல. அஞ்சு தான். ஆறாவது நாள் நீ இங்க இருக்கனும். இதுக்கு மேல நீ என்ன வேணா பண்ணலாம். பணம் தரேன்”

அவர் சொன்ன அனைத்துக்கும் தலையை ஆட்டியவள், ஆண்டாளை பார்த்து நாக்கை காட்டி விட்டு விசயத்தை நண்பர்களிடம் சொல்ல ஓடினாள்.

“ஏங்க..” என்று ஆரம்பித்த ஆண்டாளை பார்த்து, “என்ன சொல்ல போறனு தெரியும். எனக்கு ரொம்ப தெரிஞ்ச ஒருத்தரோட ஹோட்டல் இருக்கு. அங்க சொல்லிட்டா பாதுகாப்பா அவங்கள பார்த்துப்பாங்க. இதுக்கு மேல எதையும் சொல்லாம, மதுவுக்கு பேக் பண்ண ஹெல்ப் பண்ண போ” என்று முடித்து விட்டார்.

“நல்லது சொன்னா கேட்குறதே இல்ல. நான் ஏன் பண்ணனும்? அதெல்லாம் அவளே பண்ணிப்பா” என்று கூறி விட்டு கோபமாக சென்று விட்டார்.

மதுவின் வீட்டில் சம்மதித்து பாதுகாப்பு கிடைத்ததாலேயே, மற்றவர்களின் வீட்டிலும் சுலபமாக சம்மதம் கிடைத்தது. ஆண்டாள் தான் மூச்சுக்கு முன்னூறு முறை பத்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஒழுங்க கார்ல தான் போகனும். சும்மா கண்ட இடத்துல போட்டோ எதுக்குறேன்னு நிக்க கூடாது. சுத்தி பார்த்துட்டு வீடு வந்து சேரனும். எல்லாரும் ஒன்னா தான் இருக்கனும்” என்று ஆயிரம் அறிவுரைகள்.

அத்தனையும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு, தலையை மட்டும் வெறுமென ஆட்டி வைத்தாள் மது.

வாசுதேவனிடமும் பயணத்தைப் பற்றிக் கூறி இருந்தாள்.

“கேரளாவா? அங்க எனக்கு கூட ஒரு வேலை இருக்கு. போகனும்” என்றான் அவன்.

“அப்ப நீங்களும் வாங்களேன்”

“வேணாம்மா. ஃப்ரண்ட்ஸோட போ. நாம கல்யாணத்துக்கு அப்புறமா போவோம். இப்ப நான் தனியா போய் வேலைய பார்த்துக்கிறேன்”

“அப்ப சரி”

“எங்க தங்கப்போற? என்னலாம் பண்ண போறீங்க?” என்று கேட்டு விவரங்களை மட்டும் வாங்கிக் கொண்டான்.

கேரளா கிளம்பும் நாளும் வந்து சேர்ந்தது. ஞானசுந்தரத்தின் காரே ஆறு பேருக்கு போதுமானதாக இருக்க, அதிலேயே கிளம்பி விட்டனர். பல திருப்பங்களையும் மாற்றங்களையும் சந்திக்க போகும் உண்மை அறியாமல், மது சந்தோசமாக கிளம்பி இருந்தாள்.

தித்திக்கும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்