அத்தியாயம் 9
“இதோ இன்னும் ஒரு பகல், இரண்டு இரவு. அவனைக் காணும் அந்த நொடி… எப்படியிருக்கும்.? நண்பன் படத்தில் வருவதுபோல உடலில் பூ மலருமா? நட்சத்திரங்கள் எல்லாம் நிலவாகத் தோன்றுமா? தன்னை சுற்றி பட்டாம்பூச்சி பறக்குமா? இவையெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக என் உடலில் டொபமைன் சுரக்கும். வேதியியல் மாற்றங்கள் ஆசுவாசமாக நிகழும். இது உறுதி. வெட்கம் வருமோ? சிரிப்புத்தான் வருகிறது, எனக்கும் வெட்கம் என்ற ஒன்று இருக்கிறது என்று எண்ணுகையில். அதீத கற்பனை நல்லதல்ல இதழ். வரட்டும், நேரில் பார்த்து பேசிவிட்டு அவனோடு கைக்கோர்க்கும் அந்த நொடிக்காக மனதை தயார்படுத்திக் கொள்ளலாம். – இதழ்”
இளையாவும் பிரவீனும் மகிழுந்தில் இதழின் இல்லத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.
“என்ன இளையா பேசணும்? சொல்லுங்க.”
“இதழ் எப்டி ப்ரோ?”
கேள்வியில் சிரித்தவன், “எப்டின்னா என்ன ப்ரோ? இதுக்கு நான் என்ன சொல்றது?”
“ஐ மீன், கேரக்டர்?” என்று இழுத்தான்.
“என்ன ப்ரோ, என்கூட ப்ரென்ட்சிப் வச்சி இருக்குறதுனால யோசிக்குறீங்களா?”
“அய்யோ, ப்ரோ! அப்டி இல்ல. வீட்ல நடந்தது உங்களுக்கே தெரியும். ஆக்சுவலி நான் என்னோட பாய்ண்ட் ஆஃப் வியூவ எடுத்து சொல்லணும். சொன்னா இதழ் புரிஞ்சிப்பாங்களா? அதப்பத்தி தான் கேட்க வந்தேன்.” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
“நான் சும்மாதான் ப்ரோ கேட்டேன். இவ்ளோ எக்ஸ்ப்ளனேசன் தேவையில்ல. என் ப்ரென்ட்ட பத்தி நானே பெருமையா சொல்லக் கூடாது. ஆனாலும் சொல்றேன், நல்ல பொண்ணு. கேரக்டர்… ஒவ்வொருத்தரோட பாய்ன்ட் ஆஃப் வியூல எல்லாரோட கேரக்டரும் ஒவ்வொரு மாதிரி தெரியும். இப்போ வீட்டுக்கு தானே வரீங்க. நீங்களே தெரிஞ்சுக்கோங்க” என்றுவிட்டான்.
இளையாவிற்கே ஒரு நிமிடம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. லடாக் செல்வதற்கு முன் திருமணம் பற்றிய குழப்பத்தில் இருந்த நாம்தான் தற்போது அவளைக் காண ஆவலோடு இருக்கின்றோமா என்று. பொங்கிய ஆவலை அடக்கிக்கொண்டு இளமாறனின் வீட்டிற்கு வந்தனர் இருவரும்.
மகிழுந்துவில் இருந்து இறங்கவே இளையாவிற்கு ஏதோ ஒரு உணர்வாகத்தான் இருந்தது. முதலில் இளமாறனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தவன், பிரவீனோடு சென்றான்.
“I’m Scared Of The Mountain
Of The River Of The Fire
Of The Sound Lightning In The Sky
Those Sounds Make Me Wanna Cry
This Light Above Me
I’m Shit Scared Of That
Those Colors
I’m Shit Scared Of That
These Speakers
I’m Shit Scared Of That
Those Woofers
I’m Shit Scared Of That
Bad Trip”
என்ற பாடலை முணுமுணுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் பிரவீன்.
உள்ளே இளமாறனும் பிறையும் குழம்பிக் குடித்துக் கொண்டிருக்க, இவன் வந்ததைப் பார்த்த பிறை, “வாடா… காஃபி குடிக்கிறீயா?” என்றபடி எழுந்தவரை அமர்த்திய பிரவீன்,
“நம்ம வீட்டுக்கு நான் ஒருத்தர கூட்டிட்டு வந்து இருக்கேன்” என்றபடியே வாயிலைப் பார்த்தான்.
இளையா இளமாறனை எவ்வாறு சந்திப்பது என்று தயங்கியவாறு நிற்க, “வாப்பா, ஏன் அங்கயே நின்னுட்ட” என்று அழைத்தார் இளமாறன்.
சிறு தலையசைப்புடன் உள்ளே வந்தவன் “உட்காருப்பா. நான் காஃபி கொண்டு வரேன்” என்றபடி எழுந்தார் பிறை.
“பராவால்ல ஆன்ட்டி. நான் முதல்ல உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அங்க நடந்த விசயம் கண்டிப்பா உங்கள பாதிச்சு இருக்கும். நான் யாரயும் லவ் பண்ணல. என்னோட தனிப்பட்ட விசயத்த காலம் முழுக்க என்கூட வாழ்க்கைய பகிர்ந்துக்க போறவங்ககிட்ட தான் சொல்லணும்னு இருந்தேன். இதழ்ல நேர்ல பாக்குறப்போ சொல்லிட்டு அவங்களுக்கு சம்மதம்னா அடுத்து பேசலாம்னு தான் முடிவு செஞ்சு இருந்தேன். கடைசில என்ன என்னமோ ஆகிடுச்சு. நான் இதழ் கிட்ட பேசலாமா?”
இவனின் இத்தகைய தெளிவான அணுகுமுறை இளமாறனை சற்று நிம்மதியடையச் செய்தது. பிறை பிரவீனிடம் கண்களாலேயே என்னவென்று வினவ, ஒன்றுமில்லை என்பதுபோல் சைகை செய்தான் அவனும்.
இளமாறன் யோசித்துக் கொண்டிருக்க, “ம்மா, ஒரு காஃபி” என்றபடியே அறையில் இருந்து வெளியே வந்தாள் இதழினி.
அனைவரும் திரும்பிப் பார்க்க, கூந்தலை தூக்கிக் கொண்டையிட்டு இருக்க, அதிலும் சில கற்றை முடிகள் அடங்காமல் முகத்தில் மோதிக் கொண்டிருந்தது. பாவடையும் முழுக்கை மேல்சட்டையும் அணிந்திருந்தவள், பாவடையை லுங்கிபோல் தூக்கிக் கட்டிக்கொண்டு வெளியே வந்திருந்தாள். இதில் காதில் ஒரு எழுதுகோலை செருகி வேறு வைத்திருந்தாள்.
அவள் நின்ற கோலத்தைக் கண்டு பிரவீனும் இளமாறனும் “எரும”, “இதழ்மா” என்று தலையில் அடித்துக் கொண்டனர்.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள், “ஏய், எரும” என்று பிரவீனிடம் வர எத்தனித்தவளை, அவன் கண்களாலேயே வேண்டாம் என்பது போல் மறுக்க, அப்பொழுதுதான் சுற்றம் உணர்ந்தவள், தன்னிலையை உணர்ந்து வேகமாக தன்னறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
இளையாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவனிற்கு சிரிப்புத்தான் வந்தது. இனி காலம் முழுக்க அவள் இந்த கோலத்தில் இருந்தாலும் வாழ்க்கை அழகுதான் என்றுக்கூட சிந்தித்தான்.
அறையில் இருந்தவளின் இதயமோ எக்கச்சக்கமாக எகிறி குதித்தது. ‘போச்சு, போச்சு… இந்த மாதிரியா அவன் முன்னாடி போய் நிக்கணும். நாளன்னைக்குதானே வராங்கன்னு சொன்னாங்க. இன்னைக்கே ஏன்? அதுவும் இந்த எருமக்கூட வேற வந்து இருக்கான். அய்யோ நம்மள பத்தி என்ன நினச்சு இருப்பானோ? கண்டிப்பா சிரிச்சு இருப்பான். ஆமா, சிரிச்சான். நான் பாத்தேன். ஒருவேள லூசுன்னு நினச்சு இருப்பானோ? முதல் முதல்ல இப்டியா ரெண்டு பேரும் பாத்துக்கணும். கடவுளே, அவன் மூஞ்சிய வேற சரியா பாக்கலயே… கொஞ்சம் நிதானமா நின்னு பாத்துட்டு வந்து இருக்கலாமோ?’
‘ஏது, இந்த மாதிரியா? மனசுல பெரிய நஸ்ரியான்னு நினப்பா? த்தூ’ என்று அவளின் மனமே அவளைக் காறித் துப்பியது.
வெளியே, “நீங்க தப்பா எதுவும் நினைக்க வேண்டாம். அவ வீட்ல அப்டிதான் இருப்பா. நீங்க பேசிட்டு இருங்க. நான் வரேன்” என்றபடியே இதழின் அறைக்குள் சென்றார் பிறை.
பிரவீனும் அவரின் பின்னே செல்ல எத்தனிக்க, “நீ எங்கடா போற?” என்று அதட்டினார் இளமாறன்.
“இதழ்பா…”
“அதான் பிறை போறாள? பேசாம உட்காரு” ‘நல்லவேளை இளையா இருந்ததினால் மரியாதையாக திட்டினார்’ என்று மனதிற்குள் நினைத்தவன் ஒரு அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அமர்ந்துவிட்டான்.
‘இந்த எரும இப்போதான் எழுந்திரிச்சு இருக்காளா? நாம வேற வரத சொல்லவே இல்லயே. அதுக்கு வேற சாமியாடுவாளே. இப்போ இவன்கூட வந்ததுக்கும் ஆயிரெத்தெட்டு கேள்வி கேட்பாளே. ஆத்தா மாரியாத்தா, இந்த காட்டேரிக்கிட்ட இருந்து காப்பாத்து ஆத்தா’ என்று உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தான்.
“சரிங்க மாமா நான் வரேன்.” என்று இளையா கிளம்ப எத்தனிக்க,
“இதழ்கிட்ட பேசணும்னு சொன்னீங்கப்பா.”
“இப்போ கண்டிப்பா அவங்களே நெர்வசா ஃபீல் பண்ணுவாங்க. நாளன்னைக்குதான் வரோம்ல. அப்போ பேசிக்குறேன்.” என்ற பதிலுக்கு,
“அப்டிலாம் ஒன்னும் இல்ல ப்ரோ. வாங்க நாம மாடிக்கு போகலாம். இதழ் வருவா” என்று அழைத்து சென்றுவிட்டான்.
“இப்போதான் இந்த பிரவீன் பையன் கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்குறான்.” என்றபடி இதழின் அறையை நோக்கி சென்றார் இளமாறன்.
“என்ன இதழ்மா இது? அட்லீஸ்ட் ஸ்கர்ட்ட கீழ இறக்கி விட்டுட்டாவது வந்து இருக்கலாம்ல?”
“இளையா வந்து இருக்கான்னு எனக்கு எப்டி தெரியும்? ஆமா, இந்த பிரவீன் பைய எப்போ வந்தான்?” என்று கேட்டுக்கொண்டே சுடிதாரை அணிந்தவள் எந்த வித ஒப்பனையும் இல்லாமல், தலையை மட்டும் சீவி பின்னலிட்டுக் கொண்டாள்.
இத்தனைக்கும் பிறை ஏதும் பேசவில்லை. இதழுக்கு தலை சீவிவிட்டுக் கொண்டிருந்தார்.
“ஏன்மா, வந்து திட்டுவீங்கன்னு பாத்தா? ஏதும் பேசாம இருக்கீங்க?”
“தப்பு எங்க மேல தான். அவங்க வந்து இருக்காங்கன்னு உன்கிட்ட சொல்லி இருக்கணும். இளையா வரது எங்களுக்கும் தெரியாது இல்லயா? இதுல யார தப்பு சொல்லி திட்டி நான் என்ன செய்யப் போறேன்.” என்றவரின் பதிலில் இருவருக்கும் சிரிப்புத்தான் வந்தது. இதுவே மற்ற வீடாக இருந்து, இவ்வாறு நடந்திருந்தால் நிச்சயம் பெண் பிள்ளை இவ்வாறு வரலாமா? அடக்கமாக இருக்கத் தெரியாதா? என்று ஆயிரெத்தெட்டு வசவுகள் அந்த பெண்ணிற்கு விழுந்திருக்கும். தன் பெற்றோர்களின் புரிதலில் தினமும் மெய்சிலிர்த்துப் போவாள் இதழ், இன்றும் அவ்வாறே.
“இளையா ஏதோ உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க. மேல பிரவீன் கூட இருக்காங்க. போய் பேசிட்டு வா.” என்று அனுப்பி வைத்தார் இளமாறன்.
‘என்னவா இருக்கும்? ஒருவேள யாரயாவது லவ் பன்றேன்னு வந்து சொல்லப்போறானோ? கடவுளே அப்டி மட்டும் இருந்துடக் கூடாது. அப்டி லவ் இருந்தாலும் அது ப்ரேக் அப் ஆகி இருக்கணும் ஈஸ்வரா’ என்று வேண்டிக் கொண்டே மாடியேறினாள் இதழ்.
“ஏன் ப்ரோ, இதழ் எப்பவும் இப்டிதானா?”
“அட அவ வீட்ல இருக்குறதுனால அப்டி இருக்கா ப்ரோ. வெளில வரப்போலாம் சுடிதான்.” என்று அவன் பேசிக் கொண்டிருக்க, இதழ் வந்தாள்.
பிரவீனின் மனதில் இருந்தது ஒன்றுதான், ‘நாம லடாக் போனது மட்டும் வெளில தெரிஞ்சது இவ நம்மள கூறு போட்டுடுவா.’ என்று நினைத்து முடிக்கவில்லை,
“எரும” என்ற அழைப்புடன்தான் வந்தாள்.
“ப்ரோ, இதழ் வந்துட்டா.” அவனும் கவனிக்கத்தான் செய்தான். நேர்த்தியாக உடையணிந்து, அழகாகப் புன்னகைத்துக் கொண்டே வந்தாள். அவளின் கண்களில் அப்படியொரு ஆர்வம் மிளிர்ந்தது. பொதுவாகவே, நமக்கு வாழ்க்கைத்துணையாக வரவிருக்கும் நம் துணையை முதல்முறை காண்பதில்தான் எத்தனை எத்தனை ஆனந்தம்.
“நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் போய்ட்டு வரேன்.” என்று நழுவிய ஆடவனை.
“எங்க போறீங்க?” “எங்க போற?” என்று இருவரும் ஒருசேர அவனைக் கேட்டனர்.
பிரவீன்தான் திருத்திருவென விழித்தான். பின் சட்டென்று புன்னகைத்தவன், “கீழதான் இருப்பேன். பேசிட்டு வாங்க” என்று சென்றுவிட்டான்.
இருவரும் எதிரெதிர் சுவற்றில் நின்றிருந்தாலும், பார்வை என்னவோ வானத்தையும், தரையையும் தான் பார்த்துக் கொண்டிருந்தது.
முதலில் அவனைக் காணவே வெட்கமாக இருந்தது. ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச்சு ஆரம்பித்தது. “ஆக்சுவலி, நீங்க வர போற விசயம் எனக்குத் தெரியாது. அதான், அப்டி கீழ…” அவனுக்கு புரிந்தது, தன்னைப் பற்றி தவறாக நினைத்து விடுவாரோ என்று எண்ணி படபடக்கிறாள் என்று.
“அச்சோ, இதுல என்ன இருக்கு.? எனக்காக எதுவும் நீங்க சேன்ஜ் பண்ணிக்க வேண்டாம். உங்களுக்கு எது கம்பர்டபிளோ அப்டியே இருக்கலாம்.” என்றதில் தன்னை மீண்டும் ஒருமுறை சமன்படுத்திக் கொண்டவள்,
“அதுக்குள்ள ப்ராஜக்ட் எல்லாம் முடிச்சிட்டீங்களா?”
“ஹான்… அது… இதழ்… முடிச்சிட்டேன்.” என்று தற்போது தடுமாறியது என்னவோ இளையாதான்.
தனக்குள் புன்னகைத்தவள், “எதாவது முக்கியமான விசயமா? கல்யாணத்துக்கு வீட்ல ஃபோர்ஸ் பன்றாங்களா?”
அவளின் கேள்வியில் இவன்தான் விழித்தான். புன்னகையோடுதான் கேட்டாள். அவள் கேட்ட விதத்தில் எந்தவித பயமும் பதட்டமும் தென்படவில்லை. சிறிது நேரத்திற்கு முன் நம்மைப் பார்த்து பேந்த பேந்த விழித்த இதழா இது என்று அவனுக்கே சந்தேகம் வந்துவிட்டது. ஆனால், என்னதான் குழந்தைத்தனம் இருந்தாலும் நிதர்சனமாகவும் யோசிக்கக்கூடியவள் என்று நிமிட நேரத்தில் புரிந்துக்கொண்டான் இளையா, இல்லை அவள் புரியவைத்துவிட்டாள்.
நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டவன், “என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கையே போய்டுச்சு. அந்த குற்றவுணர்ச்சில இருந்து என்னால வெளில வர முடியல. நாலு வருசமா அதனால ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். அன்ட், நான் லடாக்குக்கு போனதும் அந்த பொண்ண தேடிதான். பட், அவ இப்போ உயிரோட இல்ல.” என்று அவன் கூறியதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லா இருக்கும். தலையும் புரியல, வாலும் புரியல” கண்களை மேலே பார்த்து தோளைக் குலுக்கியபடி அவள் செய்த செய்கைக்கூட இளையாவை ஒருநிமிடம் தன்னிலை மறக்கச் செய்தது.
‘அடேய், நீ வந்த வேல என்ன? செய்ற வேல என்ன? முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுடா.’ என்று அவன் மனசாட்சியே அவனைக் கடிந்துக் கொண்டது.
“ஓஹ்! சாரி… நாம வெளில போலாமா? எதாவது அமைதியா ஒரு இடத்துக்கு…?” என்று அவள் கண்களைப் பார்த்தான். அப்பப்பா… அவளின் கண்கள் ஆயிரம் மொழிகள் பேசும்போல… அவள் யோசிக்கும் போதுதான் எத்தனை எத்தனை புருவமுடிச்சுகள்…
“ஓகே! கோவிலுக்குப் போகலாமா? அப்டியே செம்மொழி பூங்கா போகலாம். ஓகேவா?”
“கோவிலுக்கா… எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல. பார்க்குக்கு வேணா போகலாம்.”
இதற்கும் மென்னகை புரிந்தவள், “நான் உங்கள சாமி கும்பிட கூப்டலயே. சும்மா கூட வாங்க. நல்லாதான் இருக்கும். கடவுள் நம்பிக்க இருந்தாதான் கோவிலுக்கு வரணும்னு அவசியம் இல்லயே…” என்றவளின் கூற்றிற்கு செவிசாய்த்தவன் சரியென்று தலையசைத்தான்.
இருவரும் கீழே வர, பிரவீன்தான் ‘அதுக்குள்ள பேசிட்டாங்களா?’ என்று பார்த்தான். அவனின் பார்வையை உணர்ந்தவள் ‘த்தூ’ என்று துப்பிவிட்டு நின்றுக்கொண்டிருந்தாள்.
‘ரைட்டு… சம்பவம் நடக்கப் போகுது.’ பிரவீனின் உள்மனது உரக்கச் சொன்னது.
“மாமா… நான் இதழ வெளில கூட்டிட்டு போலாமா?” என்று அனுமதி வேண்டி நின்றவனின் செயலில் இதழுக்கு சிரிப்புதான் வந்தது.
பிரவீனுக்கோ எண்ணவலைகள் பின்னோக்கி சென்றது. ‘இதழ் வெளியே செல்வதாக இருந்தால் ‘அம்மா நான் வெளில போய்ட்டு வரேன். எங்க போறேன்னு எனக்கே தெரியல. போய்ட்டு வந்த சொல்றேன்’ என்று கத்திவிட்டு சென்றுவிடுவாள். ஆனால், இளையாவோ அனுமதி வேண்டி நிற்கின்றான். நல்ல பையன், இவளிடம் சிக்கி என்ன பாடுபட போகிறானோ?’
அவனருகில் சென்றவள், “உன்னோட மைன்ட் வாய்ஸ்ச நான் கேட்ச் பண்ணிட்டேன். நானும் அடக்கம் ஒடுக்கமா நல்ல பொண்ணா இருக்கணும்னு ட்ரை பண்ணிட்டு இருக்கேன். என் ஆளு முன்னாடி ஏதாவது பேசி கால வாறுன… மவனே, உன் லவ்வீக வாழ்க்கைய சந்நியாச வாழ்க்கையா மாத்திடுவேன். ஜாக்கிரத” என்று கடிந்தாள்.
‘எனக்கு ஏழரை வெளிய எங்கயும் இல்ல… என்னோட வாயும் மைன்ட்டும்தான். இந்த ராட்சசிகிட்ட மாட்டிக்கிட்டு தவிக்குறேன்’ என்று தற்போதும் அவனால் மனதிற்குள்தான் பேச முடிந்தது.
இளமாறன் அனுமதித்தன்பேரில் இருவரும் வெளியே வந்தனர். இளையா தன் மகிழுந்து அருகில் செல்ல, ‘பைக் இல்லயா?’ என்று இதழால் எண்ணத்தான் முடிந்தது.
ஏதும் பேசாமல் அவனுடன் சென்றவளுக்கு முன்பக்கக் கதவை திறந்து விட்டான் இளையா.
சுpறிய தலையசைப்புடன் ஏறிக்கொண்டவளின் மனமோ உள்ளுக்குள் ஆழிப்பேரலையாக சுழன்று கொண்டிருந்தது. ‘அவன் என்ன சொல்லப் போகின்றான்? ஒருவேளை முன்னாள் காதலாக இருக்குமோ? இவனால் வாழ்க்கையே போய்விட்டது என்றானே… ஒருவேளை வீட்டிற்கு தெரியாமல் முன்பே திருமணம் செய்துக்கொண்டானோ? ஈஸ்வரா…’ உண்மையில் பெண்ணின் மனதை யாராலும் புரிந்துக்கொள்ள முடியாது.
பயணம் தொடங்கியது…
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
+1