Loading

நீங்க நல்லவர் என்று கூறி சிறிது நேரம் கூட ஆகி இருக்காது. தன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்ட குகனை அதிர்ச்சியாக பார்த்தாள். 

அதிர்ச்சியும் வேதனையும் அவள் கண்களில் தெரிய, அதைக் கண்டு சற்று வருத்தமடைந்த குகன், “நான் எதுக்கு சொல்றேன் என்றால்” என்று அவன் பேசும்போது, “போதும்” என்று கைகாட்டி நிறுத்திய தெய்வானை, 

“உண்மையில் நான் உங்களை ரொம்ப நல்லவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் ஒரு சராசரி மனிதன் தான் என்று நிரூபித்து விட்டீர்கள்.

இவளால் இப்பொழுது எப்படி எங்கும் போக முடியாது என்று நினைத்து விட்டீர்களா?” என்று கோபமாக கேட்டாள்.

அவளது கோபத்தை அமைதியாக எதிர்கொண்ட குகன், “முதலில் நான் சொல்லுவதை கேள்” என்று சற்று அதட்டலாக கூறினான். 

தெய்வானைக்கு பயம் வந்துவிட்டது. வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்ல முடியாத நிலை. அப்படி இருக்க இவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டால் என்ன செய்வது என்று பயத்தில் தன் கையில் இருந்த பையை அணைத்தபடி உட்கார்ந்து விட்டாள். 

அவளின் முகத்தை வைத்தே, அவள் என்ன நினைத்திருப்பாள் என்பதை புரிந்து கொண்ட குகனுக்கு உங்களிடம் என் அப்பாவிடம் இருக்கும் பாதுகாப்பை பார்க்கிறேன் என்று சொன்ன பெண், தன்னை பற்றி இப்பொழுது என்ன நினைத்து இருப்பாள் என்பதை நினைக்கும் பொழுது ஒரு ஆணாய் தன்னை நினைத்து வெட்கப்பட்டான். 

அவளுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, தனது ஃபோனை எடுத்து அவள் எதிரில் வைத்து, “உன் அம்மாவிடம் பேச வேண்டும் என்றால் பேசிக் கொள். அவர்களிடம் சொல் நேற்று இரவு நான் வந்த பேருந்து பழுதாகி ஒரு இளைஞனின் வீட்டில் தனியாக இருக்கிறேன் என்று சொல். அங்கே உட்கார்ந்திருக்கும் உன் தாய் மாமா உடனே ஏதாவது செய்து உன்னை வந்து கூட்டிச் செல்வான். அவனுடனே போய்விடு. 

தெரியாத ஒரு ஆணுடன் ஒரு நாள் தனியாக இருந்திருக்கிறாள் என்று ஊரில் உள்ளவர்கள் பேசுவதை கேட்டு உன் அம்மா மனதிற்குள்ளேயே மறிப்பதை கண்ணார காண். அந்த ஒரு காரணத்தை வைத்தே உன் தாய் மாமன் உனக்கு வரும் நல்ல வாழ்க்கையை எல்லாம் கெடுத்து விட்டு, அவனே உன்னை கல்யாணம் செய்து கொள்வான். சந்தோஷமாக அவனை கல்யாணம் செய்து கொள். 

பின்னர் பணம் பத்தவில்லை என்று ஏதாவது பணம் படைத்தவனுக்கு உன்னை கூட்டி கொடுப்பான் அப்பொழுதும் சந்தோஷமாக..” என்று கோபமாக நிறுத்தினான். 

குகன் பேச ஆரம்பித்ததும், அவன் சொன்ன விஷயங்களை உள்ள உண்மையைக் கண்டு கலங்கிக் கொண்டிருந்த தெய்வானை, கடைசியில் அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து “என்ன சொல்றீங்க?” என்றாள் கண்களில் கண்ணீர் வடிய. 

“உண்மையை சொல்கிறேன். இப்பொழுது நீ உன் அம்மாவிற்கு ஃபோன் செய்தால் அது தான் நடக்கும். ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்கோ சூழ்நிலை எப்படி என்று தெரிந்து கொண்டு நானே உன்னை நேரில் அழைத்துச் சென்று விட்டுவிடுகிறேன். அப்பொழுதுதான் உன் அம்மாவிற்கு கொஞ்சமாவது நிம்மதி இருக்கும். 

அதை விட்டுவிட்டு இப்பொழுது ஃபோன் செய்தால் அவர்களுக்கு உன்னை பார்க்கும் வரை ஒருவித பயமும், ஊரார் என்ன பேசுவார்களோ என்ற அவமானமும், இருந்து கொண்டே இருக்கும். 

இப்பொழுது உன்னை காணவில்லை என்ற ஒரு கவலை தான் இருக்கும். அதை புரிந்து கொள். நீ இதுவரை உன் குடும்பத்தைப் பற்றி கூறியதை வைத்து சொல்கிறேன். 

உன் அம்மா நான் நேரில் வந்து உன்னை வீட்டில் விட்டால் தான் நிம்மதியாக இருப்பார்கள். தயவுசெய்து புரிந்துகொள். இல்லை என்றால் நான் சொன்னது தான் நடக்கும். உன் மாமா அழகு பற்றி உனக்குத் தெரியும் தானே?” என்று கேள்வியாக நிறுத்தினான். 

அவன் கூறியதை கேட்டு மழங்க மழங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தாள் தெய்வானை

“என்ன..? தெரியுமா, தெரியாதா?” என்று மீண்டும் அதட்டலாக கேட்டான். 

‘தெரியாது’ என்கின்ற விதமாக தலையாட்டி “ஏதோ தப்பான தொழில் செய்வதாக அப்பா சொல்லி கேட்டிருக்கிறேன்” என்று பயந்தபடி கூறினாள். 

குகன் கூறியதில் உள்ள அதிர்ச்சியை இருந்து மீள்வதற்கு சிறிது நேரம் ஆகியது தெய்வானைக்கு. அந்த இடமே அமைதியாக இருக்க, அந்த அமைதியை கலைக்கும் விதமாக “உனக்கு சமைக்க தெரியுமா?” என்றான். 

எதற்காக கேட்கிறான் என்று புரியாமல் “ஓரளவுக்கு” என்றாள் தெய்வானை. 

“அப்ப சரி, காலையில சாப்பாட்டுக்கு அங்க என்ன இருக்குன்னு பார்த்து சமைத்து விடு. நான் போய் ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துவிட்டு, செடிகளுக்கும் தண்ணீர் பாய்த்து விட்டு வருகிறேன்” என்று வெளியே சென்று விட்டான். 

‘என்னது சமையல் செய்யணுமா? இவர் என்ன இப்படி சொல்லிட்டு போறாரு. வெளியே போயிட்டு வந்த உடனே கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டாரு. அத பத்தி பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே, சமையல் செய் அப்படின்னு சொல்லிட்டு வெளியே போயிட்டாரு. என்னதான் நினைச்சுகிட்டு இருக்காரு. நான் என்ன இவருக்கு சமையல் செய்து கொடுப்பதற்காக இங்கு வந்திருக்கேன்?’ என்று கோபமாக நினைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்தாள். 

பின்னர் அவன் சொல்லிய அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்க, அதுவும் சரிதான் என்று தோன்றியது. ‘எப்படியும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் அம்மாவை பார்க்க முடியும். அதுவரை இங்குதான் இருக்க வேண்டும். அதற்கு சாப்பிட வேண்டுமே! சரி என்ன இருக்கிறது என்று பார்த்து சமைப்போம்’ என்று எழுந்து சமையலறைக்கு சென்றாள். 

சமையலறை ஓரளவுக்கு புதுமையானதாக தான் இருந்தது. குளிர்சாதன பெட்டியை திறக்க அதில் ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு அரைத்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு கிண்ணத்தில் சாம்பார் இருக்க, ‘ஏற்கனவே எழுந்து சமையல் செய்து உள்ளே வைத்து விட்டாரா?’ என்று நினைத்துக் கொண்டே சாம்பாரை எடுத்து சட்டியில் ஊற்றி சுட வைத்தாள். மாவை எடுத்து வெளியே வைத்துவிட்டு இட்லியும் அவித்தாள். 

அதற்கு அரை மணி நேரம் ஓடி இருக்க, முகத்தை துரைத்துக்கொண்டே டைனிங் மேஜையில் வந்து அமர்ந்தான் குகன். “அதுக்குள்ள சமைச்சிட்டியா? சாம்பார் வாசம் தோட்டம் வரைக்கும் வந்துச்சு!” என்று சொல்லிக் கொண்டே தட்டை எடுத்து, வைத்து இட்லி வைத்து சாப்பிட ஆரம்பித்தான். “சாம்பார் சூப்பரா இருக்கு” என்று பாராட்டவும் செய்தான். 

செய்யாத வேலைக்கு பாராட்டு வாங்க விரும்பாத தெய்வனை, “நான் வெறுமனே இட்லி மட்டும் தான் அவித்தேன். சாம்பார் பிரிட்ஜில் இருந்தது. எடுத்து சுடவைத்தேன் அவ்வளவு தான்” என்றாள். 

அதேநேரம் கந்தன் போன் செய்தார். தன்னால் முடிந்த அளவிற்கு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்திருப்பதாகவும், அவரது வீட்டில் சமையல் மேடை அருகில் டைகருக்கு தேவையான உணவிற்கான அரிசி இருப்பதாகவும் கூறினார். 

“சரி அண்ணா, நான் இங்கு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அங்கு உங்கள் வேலையை பார்த்துவிட்டு, எப்பொழுது வர முடியுமோ அப்பொழுது ஃபோன் செய்து விட்டு வாருங்கள்” என்று கூறினான். 

அவரிடம் பேசி முடித்த பிறகு ஃபோனை காண்பித்து, அதற்குரிய பேட்டனை அவளுக்கு சொல்லிக் கொடுத்தான். “உனக்கு எப்பொழுது யாரிடம் ஃபோன் பண்ணி பேச வேண்டும் என்று நினைத்தாலும் பேசிக் கொள்” என்று சொல்லிவிட்டு, “நீ சாப்பிடவில்லையா?” என்று கேட்டான். 

“இல்லை. குளிக்கணும்” என்றாள்.

“சரி குளிச்சிட்டு வந்து சாப்பிடு. எனக்கு வேலை இருக்கு” மடிக்கணினியை உயிர்ப்பித்தான். 

அவள் தயங்கி அங்கேயே நிற்க, என்ன என்றான் பார்வையாலேயே

“குளிச்சிட்டு போட டிரஸ்” என்று தயங்கினாள்.

தனது டிராவல் பேக்கில் இருந்து, ஒரு டீசர்டையும் சாட்சையும் எடுத்து அவளது கையில் கொடுத்தான். இரண்டுமே புதிதாக இருந்தது. அவளை மேலிருந்து கீழ்நோக்கி பார்த்து “ட்ராக் பேண்ட் உனக்கு ரொம்ப உயரமா இருக்கும், அதான் சார்ட்ஸ் கொடுத்தேன். இரண்டுமே புதிதுதான்” என்று சொல்லிவிட்டு தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தான் குகன்.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
14
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ம்ம் பரவாயில்லையேடா குகன் ரொம்ப தெளிவா எல்லாம் யோசித்து பேசுற… ஆனா நான் நம்ப மாட்டேன். நீ அவள காதோல் பண்ற தானே 🫣🫣

      1. Author

        நன்றி மா 😊😊
        கண்டுபுடிச்சிட்டீங்க 😊😊😍