Loading

காலையில் வீட்டுக்குச் செல்லலாம் என்று பையை தூக்கிக்கொண்டு கிளம்பிய தெய்வானை குகன் காபி வேண்டும் என்றதும் சீக்கிரமாக காபி போட்டு கொடுக்கலாம் என்று சமையல் அறைக்குள் சென்றாள். 

 

ஏற்கனவே பால் சூடாக இருக்க அருகிலேயே காபித்தூளும் சர்க்கரையும் இருந்தது இருவருக்குமான காபியை தயாரித்துக் கொண்டு, அவளுக்கு ஒன்றை வைத்துக்கொண்டு குகனிடம் ஒன்றை கொடுத்தாள். டிவி பார்த்துக் கொண்டே குடித்த குகன், காபி நன்றாக இருப்பதாக பாராட்டினான். 

 

இது என்ன? கொரோனான்னு புதுசா சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று அவளும் அதிர்ச்சியாக செய்திகளை பார்த்தாள். “எங்கும் செல்லக்கூடாது என்று தடை போட்டு இருக்கிறார்களாம். எப்படி உன்னை உன் வீட்டில் விடுவேன் என்று தெரியவில்லை” என்றான். 

 

எப்படியும் இன்று வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்த தெய்வானைக்கு செய்திகளை பார்க்க பயம்தான் வந்தது, பயத்தில் அவள் கண்கள் கலங்க, “அம்மா ரொம்ப பயந்து இருப்பாங்க சார். எப்படியாவது என்னை வீட்டில் விட்டு விடுங்களேன்” என்று கெஞ்சினாள். 

 

அவளைப் பார்க்கவும் பாவமாக இருக்க, தன் மனதில் தோன்றிய எண்ணங்களை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு சரி சீக்கிரமாக உன்னை கொண்டு உன் வீட்டில் விட்டு விடுகிறேன் கவலைப்படாதே என்று கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். 

 

அவனின் பின்னாலையே வந்து காரில் ஏறிய தெய்வானை “சாரி சார். நான் உங்களை ரொம்ப தொந்தரவு செய்கிறேன் என்று நினைக்கிறேன்” என்றாள். 

 

“அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று புன்னகையுடன் கூறி காரை இயக்கினான். 

 

மெயின் ரோட்டில் இருந்து கால் மணி நேர பயணத்தில் தான் அவனது பண்ணை வீடு இருந்து. 

 

கிளை சாலையில் இருந்து முக்கியச்சாலைக்கு கார் வரும் பொழுது அங்கிருந்த போலீசார் அவர்களது காரை நிறுத்தினார். 

 

அவர்கள் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறி, அவர்கள் இருப்பிடத்திற்கு சென்று விடுமாறு காவல்துறையினர் கூறினர். 

 

அங்கிருந்த காவலரிடம் தெய்வானை பற்றி கூறி, அவளது வீடு சேலத்தில் உள்ளது. அங்குதான் செல்வதாக கூற, ஊருக்குள் யாரையுமே அனுமதிப்பதில்லை. நீங்கள் இப்பொழுது இங்கிருந்து சென்றாலும் உங்களை உள்ளே விட மாட்டார்கள். தயவுசெய்து இருக்கிற இடத்திலேயே பத்திரமாக இருந்து கொள்ளுங்கள். அவர்கள் வீட்டிற்கு ஃபோன் செய்து தகவல் சொல்லி விடுங்கள்” என்ற காவல் துறையினர் அவர்களை மீண்டும் பண்ணை வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்தினார். 

 

வேறு வழி இல்லாத குகனும் காரை தனது வீட்டிற்கே திருப்பி விட்டான். தெய்வானையின் நிலை தான் மிகவும் கவலைக்கிடமாகியது. 

தான் இங்கு பத்திரமாக இருப்பதை அம்மாவிற்கு எப்படி தெரிவிப்பது என்று தெரியவில்லை. மீண்டும் பண்ணை வீட்டுக்கு வந்தனர் குகனும் தெய்வானையும். 

சோகமாக இறங்கிய தெய்வானை அப்படியே சோர்ந்து சோபாவில் அமர்ந்து விட்டாள். 

 

அவளுக்கு இங்கு தனியாக ஒரு ஆணுடன் இருக்கிறோமே என்ற பயம் எல்லாம் இல்லை. அம்மா தன்னை காணாமல் பயப்படுவார்களே என்ற கவலை மட்டும் தான் இருந்தது. “சார் கார்ல தானா போகக்கூடாது, நான் நடந்தே போயிடட்டுமா?” என்றாள் ஆர்வமாக. 

 

“பைத்தியம் மாதிரி பேசாத அவ்வளவு தூரம் நடந்தே போவியா?” என்றான். 

 

“என்ன சார்? ஒரு பத்து கிலோமீட்டர் இருக்குமா? நான் எப்படியாவது போயிடுறேன்” என்று மீண்டும் சிறு குழந்தை போல.

 

“பத்து கிலோமீட்டரா? இங்கிருந்து சேலம் பஸ் ஸ்டாண்டுக்கு எப்படியும் முப்பத்தைந்து கிலோமீட்டர் இருக்கும். அதுக்கப்புறம் உங்க வீட்டுக்கு போகணும் நீ. கொஞ்சமாவது யோசித்து தான் பேசுறியா?” என்றான் சற்று கோபமாக. 

 

“என்னை என்ன பண்ண சொல்றீங்க. எங்க அம்மா என்னை காணாம தவிச்சு போயிருப்பாங்க. ஃபோன் வேற பேட்டரி தீர்ந்து போச்சு. இப்போ எப்படி நான் தகவல் கொடுக்கிறது?” என்று சோகமாக, ஓடிக் கொண்டிருந்த டிவியை பார்த்தாள். 

 

“என் போனில் பேசுகிறாயா?” என்று மனம் கேட்டாலும், வாயிலிருந்து வார்த்தையாக சொல்லாமல் குகனும் அமைதியாக இருந்தான். 

 

“பஸ் ஸ்டாண்ட்ல இருந்திருந்தால், பொது தொலைபேசியிலாவது அம்மாவுடன் பேசி இருப்பேன். அட்லீஸ்ட் இங்கு ஒரு லேண்ட்லைன் ஃபோனாவது இருந்திருக்கலாம். அதுவும் இல்லை” என்று புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு, திடீரென்று “ஆமாம், உங்கள் ஃபோன் இருக்குல்ல! அதுல நான் ஃபோன் பண்ணி அம்மாவிடம் சொல்லலாம்ல!” என்று அவனை சந்தோஷமாக பார்த்தாள். 

 

‘ஐயோ, மக்கு பொண்ணு மண்டையில லைட் எரிஞ்சுடுச்சே’ என்று நினைத்த குகன், “பேசலாம் தான்” என்று தன் ஃபோனை எடுத்து மேசையில் மீது வைத்து விட்டு “ஆனால்” என்றான். 

 

அவன் போனை எடுத்து மேஜையில் வைத்ததும் சந்தோஷமாக அவனது ஃபோனை எடுத்த தெய்வானை, அவன் ஆனால் என்றதும் தயங்கி அவனை பார்த்தாள். 

 

“ஏன் ஆனால்? என்ன ஃபோன் செய்வதற்கு நான் காசு கொடுக்க வேண்டுமா?” என்று அவனின் முகத்தை பார்க்க, 

மக்கு என்று மானசகரமாக தன் தலையை தட்டிக் கொண்டு, அவளை முறைத்தபடி “அதுக்கு சொல்லவில்லை. “என் ஃபோனிலிருந்து இப்பொழுது பேசினாய் என்றால், யார் என்று கேட்பார்கள் அல்லவா?” என்றான்.

 

“ஆமா ல” என்று சோகமானாளா தெய்வானை. 

 

ஆமாம் என்று தலையாட்டிய குகன், “என்ன சொல்லுவ?” என்றான். 

 

நாடியில் ஒற்றை விரலால் தட்டி, சிறிது நேரம் யோசித்த தெய்வானை, “நான் என்ன சொன்னாலும் அவர்களுக்கு பயமாகத்தான் இருக்கும். தெரியாத ஆடவனிடம் தனியாக மாட்டிக் கொண்டேன் என்று. அவர்களுக்கு உங்களைப் பற்றி தெரியாதல்லவா?” என்று அவனிடமே கேள்வி கேட்டாள்.

 

ஆமாம் என்று தலையாட்டிய குகன், “அவர்களுக்கு மட்டுமா? என்னைப் பற்றி தெரியாது, உனக்கு தானே?” என்றான். 

 

“எனக்கு தான் உங்களைப் பற்றி நன்றாக தெரியுமே!” என்றாள் தெய்வானை. 

 

“நன்றாக தெரியுமா? என்ன தெரியும்?” 

 

“நீங்க ரொம்ப நல்லவரு” 

 

“அப்படியா!” என்று தன்னை மேலும் கீழும் பார்த்துக் கொண்டான். பின்னர் “எப்படி சொல்ற?” என்றான்.

 

“எப்படி என்று தெரியவில்லை? ஆனால் இங்கு இருப்பது என் வீட்டில், என் அப்பாவும் அம்மாவுடன் இருக்கும் போது கிடைக்கும் பாதுகாப்புடன் இருப்பது போல் தான் தோன்றுகிறது” என்றாள் யோசித்தபடியே.

 

அவளின் கூற்றில் அவனுக்கு மனதில் பறப்பது போல் தோன்றியது. ஒரு பெண் அவனிடம் அப்பாவிடம் கிடைக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது என்றால் பெரிய விஷயம் தானே. அந்த மகிழ்ச்சியில் அவன் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். 

 

“நேற்றிலிருந்து நான் உங்களை பார்க்கிறேன். உங்களது கண் என் முகத்தை தாண்டி செல்லவில்லை” என்றாள் அமைதியாக. 

 

அவள் அப்படி கூறியதும், அவனுக்கு ஏதோ தோன்ற “ஏன் அப்படி சொல்ற? எல்லா ஆண்களும் தெரியாத பெண்களிடம் அப்படித்தானே இருப்பார்கள்” என்றான்.‌

 

இல்லை என்று மறுப்பாக தலையாட்டிய தெய்வானை, “எங்கள் வீட்டில் என் மாமாவின் பார்வை மிகவும் தவறானதாக இருக்கும் என் முகத்தை தாண்டி எல்லாவற்றையும் பார்ப்பார்” என்று வெட்கி தலை குனிந்தாள். 

 

அவளது கவலையான முகம் அவன் இதயத்தில் ஒரு வலியை உண்டு பண்ணியதை உணர்ந்தான். அவளின் முக பாவங்கள் ஒன்று ஒவ்வொன்றும் அவனை அவளின் மேல் காதலின்பால் இழுத்துச் சென்றதை உணர்ந்தான். ‘அதனால்தான் அவளை திருமணம் செய்ய தோன்றுகிறதோ?’ என்ற எண்ணமும் அவனுக்கு வந்தது. 

 

இன்னும் எத்தனை நாட்கள் இங்கு இருக்க வேண்டுமோ என்று தெரியவில்லை. அதற்குள் பொறுமையாக பேசி அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்ற, “தெய்வானை” என்று அழைத்தான்

 

அவன் கூப்பிட்டதும் நிமிர்ந்து என்ன என்று பார்த்த பெண்ணிடம் “நாம் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் மென்மையாக. அவன் அப்படி கேட்டதும் அதிர்ந்து எழுந்து விட்டாள் தெய்வானை. 

 

சற்று நேரத்திற்கு முன்புதான் தன் தந்தையுடன் இருப்பது போல் ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறான் என்று சொன்னால், சொன்ன அடுத்த நொடியே தன்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டதும் அதிர்ந்தாள் தெய்வானை.

 

– தொடரும்..

 

 

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. குகன் கொஞ்சம் அவசரப்படாமல் பொறுமையாக இருந்திருக்கலாம் போல தோன்றுகிறது…

      1. Author

        நன்றி மா 😊 😊
        ஹாஹா அவனுக்கு என்ன அவசரமோ 😊