குகன் ஏதோ பேச வந்து பாதியிலேயே நிறுத்தியதை என்ன என்று கேட்டாள் தெய்வானை.
“நேரம் ஆகிவிட்டது. இப்பொழுது போய் தூங்கு. காலையில் கண்டிப்பாக சொல்கிறேன்” என்று கூறி அவளை உறங்க அனுப்பினான்.
அவள் சென்ற பிறகு ஒரு வாரமாக தங்கள் வீட்டில் நடந்து கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தான்.
குகனின் தாய் தந்தையரான சக்திவேலுக்கும் மீனாட்சிக்கும் அவனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதனால் அவனை திருமணம் செய்ய சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஏனோ அவனுக்கு அவர்கள் ஆசைக்காக திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாலும், அவர்கள் பார்க்கும் பெண் அவனது மனதிற்கு பிடிக்கவில்லை.
ஒவ்வொரு பெண்களையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே இருக்க, அவர் தந்தையின் தங்கை மகளை. அவனுக்கு மணமுடிக்க முடிவு செய்து விட்டார்கள். “அவள் சிறுவயதிலிருந்தே என் கூடவே வளர்ந்தவள். என்னால் எப்படி அவளை திருமணம் செய்து கொள்ள முடியும்?” என்று மறுத்தான்.
அவனது தாயோ “அத்தை மகளையோ மாமன் மகளையோ திருமணம் செய்து கொள்வது நடக்கத்தானே செய்கிறது. கூட வளர்ந்தால் என்ன? அவள் உனக்கு அத்தையின் மகள் தானே” என்று அவனது என்ன உணர்வை புரிந்து கொள்ளாமல் பேசினார் அவனது தாய் மீனாட்சி.
கடந்த ஒரு வாரமாக அவனது தாயின் நச்சரிப்பு அதிகரிக்க “என்னால் அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது. மீறி என்னை நீங்கள் கட்டாயப்படுத்தினால் நான் எங்காவது சென்று விடுவேன்” என்று இன்று காலையில் கோபமாக பேசினான்.
அதே சமயத்தில் இங்கு வேலை செய்பவரும் ஊருக்கு செல்வதாக சொல்ல, அவர் வரும் வரை தாமே இதை கவனித்துக் கொள்ளலாம் என்று இங்கு வந்து விட்டான்.
இப்போது தெய்வானையின் வாழ்க்கையை கேட்டதில் அவனுக்கு நாம் ஏன் இவளை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று தோன்றியது.
நான் திருமணம் செய்துகொண்டால் அழகிடம் இருந்து அவளை காப்பாற்றிவிடலாம் என்றும் தோன்றியது.
தன் எண்ணம் போகும் வேகத்தைக் கண்டு வியந்தான் குகன்.
தன் தாய் தன்னை அவசரப்படுத்துவதால், யார் என்று தெரியாத ஒரு பெண்ணை மணக்க துணிந்து விட்டேனே என்று நினைத்தான். அவளை திருமணம் செய்யும் எண்ணம் வரை வந்திருக்கிறதே. இதுதான் பார்த்ததும் காதல் என்பதோ? என்று பலவாறு அவனுக்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்தது. எதையும் யோசிக்க வேண்டாம், முதலில் நன்கு தூங்கி எழுந்திருப்போம் என்று படுக்கையில் வந்து படுத்தான்.
வெகு நேரம் உறக்கம் வராமல் காலையில் நிறைய வேலை இருக்கிறது என்ற நினைப்பில் கண்களை இறுக முடி தூங்கி விட்டான். மறுநாள் காலை ஐந்து மணிக்கு எல்லாம் அவன் தோட்டத்தில் உள்ள கோழிகளின் சத்தத்தில் விழித்து விட்டான் குகன். காலை குளிர் சிறிது இருந்தாலும் கதவைத் திறந்து வெளியே வர, அவனின் வளர்ப்பு நாய் அவன் கால்களை சுற்றி சுற்றி வந்தது.
“டைகர், நேத்து நைட்டு உன் சத்தத்தையே காணோமே?” என்று அதன் கழுத்தை பிடித்து தடவிக் கொஞ்சினான். அவன் செய்கையில் அது வாலாட்டிக் கொண்டு அவன் கால்களை சுற்றி வர, பின்னர் சிறிது தூரம் முன்னாள் ஓடி, அவனை திரும்பிப் பார்த்தது.
“இதோ வரேன்” என்று அதன் பின்னாலே செல்ல, அது அவர்கள் வீட்டிற்கு பின்னால் இருந்த மறைவிடத்தில் நான்கு குட்டிகளுடன் ஒரு பெண் நாய் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது.
“இது உன்னோட குட்டிகளாடா?” என்று சொல்லிக் கொண்டே ஒரு குட்டியை கையில் தூக்க முயல, தாய் நாய் அவனை பார்த்து குறைத்தது. உடனே டைகர் அந்த பெண் நாயை பார்த்து குரைத்து எதோ சொல்ல, அதன் பிறகு அமைதியாகியது.
தாய் நாயின் செய்கைகளை கண்டு வியந்த குகன், அனைத்து குட்டிகளையும் தடவி கொடுப்பது போல் தாய்நாயையும் தடவி கொடுத்து மகிழ்ந்தான்.
பின்னர் தன் தோட்டக்காரன் கந்தனுக்கு ஃபோன் செய்து, கோழிகளுக்கு ஆடு மாடு அனைத்திற்கும் என்னென்ன தீவனங்கள்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்று கேட்டு தெரிந்து கொண்டான்.
கோழி கூண்டை முதலில் திறந்து அதற்குரிய தீவனத்தை வைத்தான். அப்பொழுது டிவிஎஸ் ஃபிட்டியில் ஒருவர் அவர்களிடத்திற்கு வர, அவரை பார்த்ததுமே தெரிந்தது பால் கறக்க வந்திருக்கிறார் என்று. அவர் வந்ததும் அங்கிருந்த மாட்டையும் கன்றையும் கவனித்துக் கொண்டார். அரை மணி நேரத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து பால் கறந்து குகனுக்கு தேவையானதை கொடுத்துவிட்டு சென்றார்.
செல்லும் பொழுது “தம்பி இன்னைக்கு யாரும் எங்கேயும் வெளியே போகக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. உங்களுக்கு தேவையானது எல்லாம் இருக்குதா? ஏதாவது வேண்டுமென்றால் எனக்கு ஃபோன் பண்ணி சொல்லுங்க. நான் கிடைத்தால் நாளைக்கு வரும்பொழுது வாங்கி வருகிறேன்” என்றார் சொல்லி கிளம்பினார்.
கோனாரின் புண்ணியத்தில் மாட்டு கொட்டகை சுத்தமாகிவிட, கோழி கூண்டை பெருக்கி விட்டு மூன்று ஆட்டுக்குட்டிகளுக்கும் தீவனத்தை வைத்து விட்டு வீட்டிற்குள் வந்தான்.
அதுவரையிலுமே தெய்வானை எழுந்திருக்கவே இல்லை. கோனார் கொடுத்த பாலை அடுப்பில் வைத்து சூடு படுத்தி வைத்தான். பின்னர் தொலைக்காட்சியில் செய்தி பார்க்க ஆரம்பித்தான்.
கொரோனா நோய் பற்றி தான் அனைத்து சேனல்களிலுமே செய்தி ஓடிக் கொண்டிருந்தது. தனது ஃபோனில் நோயைப் பற்றியும் பார்த்து தெரிந்து கொண்டான். எப்படியும் ஒரு மாதத்திற்கு இங்கிருந்து கிளம்ப முடியாது போலிருக்கிறதே என்று நினைத்து, அதுவரை சாப்பாட்டிற்குரிய பொருட்கள் இருக்கிறதா? என்று ஆராய்ந்தான்.
பின்னர் மீண்டும் கந்தனுக்கு ஃபோன் செய்து “நீங்கள் அவசரப்பட்டு இங்கு வரவேண்டாம். பேருந்துகள் ஓட தொடங்கிய பிறகு வாருங்கள். அதுவரை நான் இங்கு கவனித்துக் கொள்கிறேன்” என்றான்.
நேற்று முழுவதும் பேருந்து அலைச்சல், பயம், தாமதம், புது இடம், புது மனிதனின் பழக்கம் என்று இருந்த தெய்வானை நேரம் கடந்து உறங்க ஆரம்பித்தாள். உடலின் அலுப்பும், மனதின் கவலையிலும் விடிந்து நேரங்கழித்து, கோழி மாடு ஆடுகளின் சத்ததில் உறக்கம் கலைந்து எழுந்தாள்.
எழுந்ததும் புது இடமாக இருக்க சுற்றும் முற்றும் பார்த்தாள். பின்னர் தான் நேற்று நடந்தது ஒவ்வொன்றும் நினைவுக்கு வர, பதறி வேகமாக எழுந்து சுவற்றில் இருந்த கடிகாரத்தில் மணி பார்க்க, மணி எட்டு என்று காட்டியது. அச்சச்சோ இவ்வளவு நேரம் தூங்கிவிட்டோமே என்று அவசர அவசரமாக குளியல் அறைக்குச் சென்று காலை கடன்களை முடித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வேகமாக வெளியில் வந்தாள்.
அவளைப் பார்த்ததும் நேற்று இரவு அவன் நினைத்த நினைப்புகள் முன்னே வர, தூங்கி எழுந்து முகம் கழுவி வந்தவள் அவனை மிகவும் ஈர்த்தாள்.
“குட் மார்னிங் ஸ்..” ஸ்வீட் ஹார்ட் என்று சொல்ல வந்தவன் வெறும் குட் மார்னிங் நிறுத்தி விட்டான்.
“குட் மார்னிங் சார்” என்று சொல்லிவிட்டு, “இப்பொழுதே வீட்டிற்கு கிளம்பலாமா?” என்றாள்.
சரி என்பது போல் தலையாட்டிவிட்டு “காபி ஆர் டீ” என்றான்.
“பரவாயில்லை இருக்கட்டும். நான் வீட்டிற்கு போய் குடித்துக் கொள்கிறேன்” என்று தன் பையை தூக்கிக்கொண்டு கிளம்ப தயாராக நின்றாள்.
“உனக்கு வேண்டாமா இருக்கலாம். ஆனால் உன்னுடன் குடிக்க வேண்டும் என்று இவ்வளவு நேரம் காத்திருந்தேனே” என்றான்.
அவன் அப்படி சொன்னதும் “அச்சோ சாரி சார்” என்று சொல்லிவிட்டு, “நானே காபி போடுகிறேன்” என்று சமையலறைக்கு சென்றாள் தெய்வானை.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
குகன்… 😍
தலைவன் ரொம்ப வேகமா போறானே 🙈🙈…
லாக்டவுன் காதலா இது 🫣😝
ஜூப்பரா இருக்கு க்கா 🤩
நன்றி மா 😊😊
ஆமாம் 😊😜