Loading

தனது அறைக்கு வந்த குகனுக்கு தாய் பேசியதை நினைக்க நினைக்க கோபம் தான் வந்தது. உடனே தெய்வானையை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்ற, தனக்கு தேவையான உடைமைகளை எடுத்துக்கொண்டு, தன் அறையை விட்டு வெளியே வந்தான். 

கோபமாக வரும் மகனை தடுத்த சக்திவேல் “என்ன ஆயிற்று குகன்? எங்கே போகிறாய்?” என்றார். 

“அப்பா நான் போய் தெய்வானையை கூட்டிட்டு வரேன். இதற்கு மேலும் அவள் அங்கு தனியாக இருக்க வேண்டாம். அவள்தான் என் மனைவி என்று, நான் நம் சொந்தக்காரர்கள் எல்லோருக்கும் சொல்ல போகிறேன்” என்று கூறிவிட்டு, 

தன் தாயிடம் வந்து “அம்மா உங்களுக்கு ஒரே மகன்தான். அவனுக்கு ஒரே மனைவிதான். அவள் தெய்வானைதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. நான் போய் அவளை அழைத்துக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, 

மாமாவின் அருகில் சென்று, “அம்மா உங்களுக்கு ஏதாவது சொல்லி ஆசை காட்டி இருந்தால், எனக்காக அவர்களை மன்னித்து விடுங்கள் மாமா. என்னால் உங்கள் மகளை மட்டுமல்ல, வேறு எந்த ஒரு பெண்ணையும் இனிமேல் திருமணம் செய்து கொள்ள முடியாது” என்று தெளிவாக கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினான் குகன்

திருச்சியில் இருந்து கிளம்பி, அவனது பண்ணை வீட்டிற்கு வரும் வரை அவன் அவனாக இல்லை. தெய்வானை எங்கே சென்று இருப்பாள் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். ஒரு வழியாக பண்ணை வீட்டிருக்கும் வந்து விட்டான். நுழைந்ததும் எதிரில் வந்த கந்தனிடம் மீண்டும் தெய்வானை பற்றி விசாரிக்க, அவரோ மீண்டும் சொன்னதையே கூற மிகவும் குழம்பி விட்டான் குகன். 

வீட்டிற்குள் சென்று இலக்கில்லாமல் எதையோ தேடினான். அவனின் செயல்களை கண்டு கந்தனுக்கு மிகவும் பயமாகி போய்விட்டது. அவனை சாந்தப்படுத்த முயன்று கொண்டிருந்தார். அவரிடம் தன் ஃபோனில் இருந்த புகைப்படங்களை காண்பித்து, 

“இவள் தான் தெய்வானை அண்ணா, என் மனைவி” என்று சொல்லும் பொழுதே அவனது ஒரு கண்ணில் கண்ணீர் வடிந்தது. 

“அவனின் நிலையை புரிந்து கொண்ட கந்தன், “எங்கேயும் போயிருக்க மாட்டாங்க தம்பி. இங்கே தான் இருப்பாங்க. சேலம் தான் அவர்கள் அம்மா வீடு என்கிறீர்களே! ஒருவேளை அவர்கள் அம்மா வீட்டிற்கு கூட சென்று இருக்கலாமே!” என்று அவனை சமாதானப்படுத்த முயன்றார்.

அவர் சொன்னதும் அவனுக்கும் சற்று நிம்மதியாகி விட, உடனே அவள் கூறிய அடையாளங்களை வைத்து தெய்வானையின் வீட்டை தேடி சேலத்திற்கு சென்றான். வீட்டையும் கண்டுபிடித்து விட்டான். ஆனால் வீட்டில் தெய்வானையின் அம்மா மட்டுமே இருந்தார்.

அவரிடம் தெய்வானை பற்றி விசாரிக்க, சுற்றி உள்ளவர்கள் கூடிவிட்டனர், எதற்கு அவளை கேட்கிறீர்கள் என்று. அவளது அம்மாவும் பதற, அவன் சந்தித்த தேதியை சொல்லி “இன்டர்வியூக்கு வந்திருந்தாங்க. வேலையில் சேர சொல்லி இருந்தோம். அதன்பிறகு எந்த பதிலுமே இல்லை. அதுதான் நேரில் தெரிந்து கொள்ள என்று வந்தேன்”‘என்றான். 

அவளது அம்மா சரசு கதறி அழ ஆரம்பித்து விட்டார். அன்றைக்கு போனவள் தான் தம்பி. இன்னும் வீட்டுக்கு வரவில்லை. எங்கே இருக்கிறாளோ தெரியவில்லை?” என்று கதறி அழுதார்.

அவரை சமாதானப்படுத்திய அக்கம் பக்கத்தினர், “இப்பதான் உடம்பு தேறி வந்திருக்க. இப்படி அழுது உடம்ப மீண்டும் கெடுத்துக்காத” என்றனர். 

“என் பொண்ணு எங்கே இருக்காளோ தெரியலை? எப்படி இருக்காளோ தெரியலை? நான் மட்டும் நல்லா இருந்து என்ன பண்ணப் போறேன்” என்று அவர் மீண்டும் அழ, அவரை சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து சோகமாக கிளம்பினான் குகன்.  

அப்படி என்றால் அவள் அம்மா வீட்டிற்கும் செல்லவில்லை. எங்கே சென்றாய்? என்று தன் வீட்டிற்கு வந்து “தெய்வாஆ..” என்று வாய்விட்டு கத்தினான். 

அப்படியே இரண்டு நாட்கள் கழிய, தினமும் அவனது வேலை காரை எடுத்துக்கொண்டு அவளை தேடுவதுதான். காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து வைத்தான். நண்பர்களின் ஆலோசனைப்படி அவளது ஆதார் கார்டு எங்காவது பதிவு செய்யப்படுகிறதா? என்பதையும் கவனிக்க ஏற்பாடு செய்தான். 

எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் குகன் இரண்டு மூன்று நாட்களாக சோகமே உருவாக இருப்பதைக் கண்டு வருந்தினார் கந்தன். தனது தாய் தந்தையரின் அழைப்பை முழுவதுமாக ஏற்க மறுத்து விட்டான். பொறுமையிழந்த சக்திவேல் கந்தனிடம் ஃபோன் செய்து குகனை பற்றி விசாரிக்க, அவரோ நடந்ததை கூறினார். 

அதைக் கேட்டதும் மிகவும் வருந்திய சக்திவேல் தன் மகனுக்கு ஆறுதல் சொல்ல ஃபோன் செய்ய அவனோ ஃபோனை எடுத்த பாடில்லை. 

சோகமாக எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த குகனிடம் வந்த கந்தன், “தம்பி கால்நடைகளுக்கு மருந்தும் செடிகளுக்கு உரமும் வாங்க வேண்டும். ஒரு பத்தாயிரம் ரூபாய் வேண்டும் தம்பி” என்று கேட்டார். 

அதன் பிறகு தான் அவன் இங்கிருந்து சென்றதில் இருந்தே அவருக்கு பணம் கொடுக்க வில்லை என்று நினைவுக்கு வந்தது. அவரிடம் மன்னிப்பு வேண்டி விட்டு “ஜீ பே பண்ணட்டுமா அண்ணா?” என்று கேட்டான். 

அவரோ “வேண்டாம் தம்பி. பணமாக கொடுங்க” என்று சொல்ல, 

பணம் எடுப்பதற்காக லாக்கரை திறந்தான். அதில் பணம் இல்லாமல் இருக்க, ‘நான் போகும் பொழுது பணம் வைத்துவிட்டு தானே சென்றேன்’ என்று குழப்பமாக யோசிக்க, அதிலிருந்த வெள்ளை காகிதம் அவன் கண்களில் தெரிந்தது. 

ஓரளவு என்ன நடந்திருக்கும் என்பது அவனுக்கு புரிய, நடுங்கும் கைகளில் அந்த வெள்ளை காகிதத்தை எடுத்தான். 

அவன் நினைத்தபடியே தெய்வானையின் கடிதம். எடுத்து படித்ததும் அப்படியே அமைதியாக அமர்ந்து விட்டான். வெகு நேரம் ஆகியும் குகன் வெளியே வராததால், அவனது அறைக்குச் சென்று பார்த்த கந்தன், அவன் உட்கார்ந்திருந்த நிலையை கண்டு வருந்தினார். 

“என்ன ஆச்சு தம்பி?” என்று அவனின் தோளை தொட,

சுயம் வந்த குகன் “ஒன்றும் இல்லை அண்ணா. நான் பேங்க் போய் பணம் எடுத்துட்டு வருகிறேன்” என்று சொல்லி தேவையானவற்றை எடுத்துக்கொண்டு பேங்குக்கு சென்று பணத்தை எடுத்து கந்தனிடம் கொடுத்துவிட்டு, 

“அண்ணா நான் ஊருக்குச் சென்று, சில முக்கியமான வேலைகள் இருக்கிறது அதை எல்லாம் முடித்துவிட்டு வருகிறேன். அதுவரை பண்ணையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி தன் தாயைப் பார்க்க கிளம்பினான் குகன். 

அவன் வீட்டிற்கு வந்ததும் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றார் அவனின் தாய் மீனாட்சி. அவருக்கு தெய்வானை வீட்டை விட்டு போனது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இனிமேல் அவளை அப்படியே விட்டுவிட்டு தன் அண்ணன் மகளை குகனுக்கு மணமுடித்து விடலாம் என்று நினைத்து அவனை மகிழ்ச்சியாக வரவேற்றார். 

எதையும் கண்டுகொள்ளாமல் தனது அறைக்குச் சென்று அடைந்து கொண்டான் குகன். 

அப்படியே நேரம் கடக்க அவன் அறையை விட்டு வெளியே வரும் பாடு இல்லை. பொறுமை இழந்த சக்திவேல் அவனின் கதவை தட்ட, சோகமாக வந்து கதவைத் திறந்த குகன், தந்தையை கண்டு என்ன? என்பது போல் பார்க்க, அவனின் சோக முகத்தை கண்ட சக்திவேல்,

“என்ன ஆச்சு குகன்? ஏன் இப்படி இருக்கிறாய்? என்ற படியே அவனை தோளுடன் அணைத்து கொண்டார். 

தந்தையின் அணைப்பில் அவன் உடைந்து விட்டான். “அப்பா” என்று அவரை அணைத்து தோளில் முகம் பதித்து அழுதான். 

எந்த தந்தையால்தான் மகன் அழுதால் பொறுத்துக் கொள்ள முடியும்? சிறுவயதிலிருந்தே தெளிவாக யோசித்து, புத்திசாலித்தனமாக செயல்படும் மகனை கண்டு, பெருமை அடைந்தவர் அல்லவா! அவன் அழுததும் அவரால் தாங்க முடியவில்லை. மகனின் முதுகை ஆதரவாக தடவி விட்டுக்கொண்டு,

“என்னாச்சுப்பா? மருமகள் எங்கே என்று கண்டுபிடித்தாயா?” என்று அமைதி கேட்டார். 

இல்லை என்று தலையாட்டிய குகன், “லெட்டர் எழுதி வச்சுட்டு போயிட்டாப்பா!” என்றான். 

தந்தை மகனின் பாசப்பிணைப்பை பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சிக்கு எரிச்சலாக இருந்தது. தங்கள் தகுதிக்கு குறைவான ஒருத்திக்காக மகன் அழுவதை கண்டு பொறுக்காத மீனாட்சி, 

“அதான் லெட்டர் எழுதி வைத்துவிட்டு போய் தொலைந்துட்டால்ல, நீயும் அவளை விட்டுத் தொலை” என்று அலட்சியமாக கூறினார். 

அவரின் கூற்றில் கோபமான குகன், அவரிடம் பேச வர, அதேசமயம் மீனாட்சியின் அண்ணன் வீட்டிற்கு வந்தார். அவரை வரவேற்ற மீனாட்சி, “குகன் வந்துவிட்டான் அண்ணா. ஒரு நல்ல நாள் பார்த்து நாம் இருவரும் சம்மந்தியாகி விடலாம்” என்றார் பெருமையாக. 

அவரோ குகனை காண அவன் முகத்தில் இருந்த சோகமும், விரக்தியும் அவன் எந்த அளவிற்கு அவனது மனைவியை நேசித்திருக்கின்றான் என்று தெரிந்தது. 

அவனின் அருகில் வந்தவர் “தாய் மாமன் என்ற உறவு, தாய்க்கு சமமானது குகன். உன் நிலை புரியாவிட்டாலும் நான் உன்னுடைய மனம் படும் பாட்டை நன்கு உணர்கிறேன். உன் போல ஒரு நல்லவனை என் மகளுக்கு கட்டி வைக்க முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. 

உன்னை என் மகளுக்கு கட்டி கொடுத்து மருமகனாக ஆக்க முடியாவிட்டாலும், என்றைக்குமே நீ என் தங்கையின் மகன் என்ற முறையில் மருமகன் தான், மகன் போலதான். நிச்சயம் உன் மனைவி கிடைத்து விடுவாள். நீயும் அவளும் மிகவும் சந்தோஷமாக நூறாண்டு காலத்திற்கு மேல் வாழ்வீர்கள். கவலைப்படாமல் இரு. அவள் எங்கே இருக்கிறாள் என்று சேர்ந்தே தேடுவோம்” என்று கூறி அவனை அணைத்துக் கொண்டார். அவனின் ஒருபுறம் சக்திவேலும் மறுபுறம் அவன் தாய் மாமனும் இருக்க நடுவில் நின்றான் குகன். 

அண்ணனின் கூற்றில் அவரை அதிர்ந்து பார்த்தார் மீனாட்சி, அதை “என்ன அண்ணா சொல்றீங்க? நான் இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன்” என்று அதிர்ச்சியாக கேள்வி கேட்டார். 

பிள்ளைகளுக்கு அவர்களுக்கு பிடித்ததை தான் நாம் பார்த்து பார்த்து செய்து வளர்க்கிறோம். அவர்கள் வளர்ந்த பிறகு, அவர்கள் மனதில் எந்த ஆசையும் இல்லாமல் இருந்தால்தான் நாம் பார்க்கும் வரங்களை மணந்து அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

குகன் ஏற்கனவே ஒருத்தியை மனதார விரும்பி மணந்து கொண்டான். இப்பொழுது நமது வேலை, அவர்கள் சந்தோஷமாக வாழ வழி செய்வது தானே தவிர, அவர்களை பிரிப்பது இல்லை. 

ஒருவேளை அவன் உன் விருப்பத்திற்காக என் மகளை திருமணம் செய்தால், அவன் நிம்மதியாக வாழ மாட்டான். என் மகனின் நிம்மதி இல்லாத வாழ்க்கையை பார்க்க எனக்கு சக்தி இல்லை.

இனிமேல் நீயே என் மகளை அவனுக்கு திருமணம் முடிக்க கேட்டாலும், நான் தரமாட்டேன்” என்று உறுதியாக கூறியவர், மருமகனை தோளுடன் அணைத்து கொண்டு, “நீ தைரியமாய் இரு மாப்பிள்ளை. நிச்சயம் தெய்வானை கிடைப்பாள். அப்பா ஃபோன் பண்ணி எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். 

நீ வந்ததும் இவள் இப்படித்தான் ஏதாவது பேசுவாள் என்றுதான் வேகமாக வந்தேன். அவள் பேசுவதை எல்லாம் கவனத்தில் கொள்ளாதே! நீ தெய்வயானை தேடி கண்டுபிடி, என்னால் எதுவும் உதவி வேண்டுமென்றாலும் கேள்” என்று கூறி, 

தங்கையிடம் “அவனை வேறு மணம் முடிக்கச் சொல்லி வற்புறுத்தாதே! நான் வருகிறேன்” என்று சொல்லி கிளம்பிவிட்டார்.

தனக்காக தன் தாய் மாமனே பேசியதில் சற்று நிம்மதி அடைந்தான் குகன்.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்