Loading

இன்று காலையில் இருந்து இருந்த மனபாரத்தையும் கலக்கத்தையும் விடுத்து அமைதியாக நிலவை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் தெய்வானை. 

கடல் அலையின் இரைச்சல், அலைபாயும் அவளின் மனதை அமைதிப்படுத்தியது. செந்தூர் அருகில் விளையாடிக் கொண்டிருக்க, அவனையும் பார்த்தவாறே, கடலில் தோன்றும் நிலவையும், மக்களின் ஆரவாரத்தையும் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள். 

சற்று நேரம் தன்னையும் மறந்து நிலவை விடுத்து தன் கண்களை எடுக்க முடியாமல் அமர்ந்திருந்தாள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தாலோ! மகன் வந்து அவளின் சேலை முந்தானையை பிடித்து இழுக்கும்பொழுதுதான் அவனை பார்த்தாள். “என்ன செந்தூர்? ரொம்ப நேரம் ஆயிடுச்சா? குட்டிக்கு போரடிக்குதா?” என்று அவனை தூக்கி கொஞ்ச, அவன் கையில் இருந்த கேட்பரீஸ் சாக்லேட்டை கண்டு திகைத்து, 

“யார் உனக்கு வாங்கி கொடுத்தது? அம்மா சொல்லி இருக்கேன் இல்ல, யார் கொடுத்தாலும் வாங்க கூடாது என்று?” என்று அவனை திட்டியபடியே சுற்றும் முற்றும் பார்த்தாள்.

மீண்டும் அதட்டலாக “யார் வாங்கிக் கொடுத்தா?” என்று கேட்டதும், 

“அப்பா” என்றான் செந்தூர் பயந்தவாறு.

உடனே சுர் என்று கோபம் தலைக்கு ஏறியது. ‘கண்ணன்தான் வந்து குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்துவிட்டு சென்றிருக்கிறான்’ என்று நினைத்து, 

“உனக்கு நான் அன்றே சொன்னேன் அல்லவா? யாரையும் அப்பா என்று சொல்லக்கூடாது என்று?” என்று கோபமாக சொல்லி, அவன் கையில் இருந்த சாக்லேட்டை பிடுங்கினாள். 

சாக்லேட்டை பிடுங்கியதும் குழந்தை வாய்விட்டு சத்தமாக அழ, அக்கம் பக்கம் உள்ளவர்கள் “குழந்தைகிட்ட ஏன்மா இப்படி சாக்லேட்டை புடுங்குற? என்னைக்காவது ஒரு நாள் தானே பிள்ளைங்க சாப்பிடும்” என்று கேட்க ஆரம்பித்தனர்.

நிலைமை தெரியாமல் சுற்றி இருந்தவர்கள் தன்னை குற்றவாளி போல் பார்த்ததும், அமைதியாகி விட்டாள். சற்று நேரம் அப்படியே அங்கு அமர்ந்து விட்டாள்.  

சிறிது நேரம் கழித்து “வா வீட்டுக்கு போகலாம்” என்று அவனது மறுக்கையை பிடித்து வேகமாக இழுத்து நடக்க ஆரம்பித்தாள். அம்மா தன் சாக்லேட்டை மீண்டும் பிடுங்கி விடுவார்களோ என்று பயந்து, வேக வேகமாக சாக்லேட்டை சாப்பிட்டான் செந்தூர்.

எவ்வளவு சொல்லியும் கண்ணன் மீண்டும் மகனிடம் இப்படி நடந்து கொண்டுள்ளாரே என்ற கோவம் ஒருபுறம் இருக்க, மகனையும் கண்டிக்க முடியவில்லை என்ற நிலையில், தன் கோபத்தை தனக்குள்ளையே புதைத்துக் கொண்டு வழக்கமாக அவர்கள் வரும், பழ ரசக்கடையில், தேவையானவற்றை வாங்கிக் கொண்டு ,வேகமாகச் சென்று சிற்றூரிந்தில் ஏறினாள்.

அதற்குள் செந்தூர் சாக்லேட் முழுவதையும் உண்டு முடித்திருக்க, கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வைத்து அவன் கை வாய்களை துடைத்து விட்டாள். பேருந்தில் ஏறியதும் மகனிடம் “அம்மா உன்னிடம் எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். யார் எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிடக்கூடாது என்று. இருந்தும் இன்று யாரோ சாக்லேட் கொடுத்ததும் வாங்கி சாப்பிடுகிறாயே. இது ரொம்ப கெட்ட பழக்கம் செந்தூர் குட்டி. இப்படி செய்ய கூடாது, சரியா?” என்று கோவமாக ஆரம்பித்து அமைதியாக சொன்னாள். 

அவனும் அவளின் கன்னம் பற்றி “ஓகே மா. இனிமே வாங்க மாட்டேன்” என்று மழலையாக சொல்ல, இதற்கு மேலும் அவனை கண்டிக்க மனமில்லாமல் அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள். குழந்தையும் சற்று நேரத்தில் தூங்கிவிட, சின்னமுட்டம் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி, தங்களது குடிசையை நோக்கி மகனையும் தூக்கிக் கொண்டு நடந்தாள் தெய்வானை. 

எப்பொழுதும் வரும் நேரத்தை விட சீக்கிரமே வந்த தெய்வானையிடம் “என்னம்மா? இன்னைக்கு சீக்கிரமா வந்துட்ட?” என்றார் வள்ளியம்மா. 

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அமர்ந்த தெய்வானை, “இன்று அந்த கண்ணன் சார் என்ன செய்திருக்கிறார் தெரியுமாம்மா?” என்று மகனிடம் சாக்லேட் கொடுத்ததைப் பற்றியும், அங்கு நடந்ததை பற்றியும் வருத்தமாக கூறினாள். 

“இவ்வளவு நாள் அமைதியாக இருந்தார். இன்று செந்தூரை பார்த்ததும் மீண்டும் பழையபடி பேச ஆரம்பிக்கிறார் என்று நினைக்கிறேன்” என்றாள் வருத்தமாக. 

“நான் வேண்டுமென்றால் ஊர் தலைவரிடம் மீண்டும் ஒரு முறை சொல்லட்டுமா?” என்ற தாயிடம், 

“வேண்டாம்மா, நாளைக்கு நானே பள்ளிக்கூடத்தில் வைத்து அவரிடம் சொல்லிவிடுகிறேன். இனிமேல் இதை போல் நடந்து கொண்டால் அப்பொழுது பார்க்கலாம்” என்றாள்.  

அதுபோலவே மறுநாள் பள்ளி சென்றதும் நேராக கண்ணனின் முன்பு போய் நின்றாள் தெய்வானை. “நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை சார்” என்றாள் கோபமாக. 

அவனும் “நான் என்ன செய்தேன் டீச்சர்?” என்று அவளை குழப்பமாக பார்த்தான். 

“நீங்கள் நேற்று கன்னியாகுமரி வந்தீர்கள் தானே?” என்றாள். 

அவனும் ‘ஆமாம்’ என்று தலையாட்ட, 

“அங்கு செந்தூருக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தீர்களா?” என்றாள்.

“இல்லையே!” என்று மறுத்தான் கண்ணன். 

“பொய் சொல்லாதீங்க சார். நீங்க நேத்து காந்தி மண்டபத்துக்கு வந்து இருக்கீங்க. செந்தூர பார்த்து இருக்கீங்க. அவனிடம் சாக்லேட் வாங்கி கொடுத்து, அப்..” என்று பேச்சை நிறுத்தினாள். 

அவள் சொல்ல வந்தது புரிய “அப்பா என்று சொன்ன சொன்னேன் என்கிறீர்களா?” என்றான் கொஞ்சம் கோபமாக.  

அவள் ஆமாம் என்று தலையாட்டினாள். 

“இங்கே பாருங்க டீச்சர், ஒரு காலத்தில் நான் செந்தூருக்கு அப்பாவாக இருக்க ஆசைப்பட்டேன்தான். அதற்காக அவனிடம் அப்பா என்று சொல்லும்படி கூறினேன்தான். அதை நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் முடிவாக என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்களோ! அதன் பிறகு இதுவரை நான் உங்களிடம், ஏதாவது தவறாக நடந்து கொண்டேனா?” என்று அவளை பார்த்தான். 

அவளும் குழப்பமாக இல்லை என்று மறுத்து தலையாட்ட, 

“பின்ன ஏன் இப்படி சொல்றீங்க? நேத்து நான் கன்னியாகுமரி சென்றேன்தான். என் தங்கைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை வீட்டார் அங்கு வர சொல்லி இருந்தார்கள். அதனால் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றோம். நேற்று நான் அங்கு செந்தூரை பார்க்கவில்லை. நான் சென்றது என் சொந்த வேலை விஷயமாகத்தான். இனிமேல் இதுபோல் இப்படி சந்தேகப்பட்டு பேசாதீங்க டீச்சர்” என்று கோபமாக கூறி சென்றான். 

அவன் சென்றதும் இவர் கொடுக்கவில்லை என்றால் வேறு யார் கொடுத்திருப்பார்கள்? என்று குழப்பமாக யோசிக்க யோசிக்க அவளுக்கு தலை பாரம் எடுப்பது போல் இருந்தது.

ஆசிரியர்கள் ஓய்வறையில் சோர்வாக கண்களை மூடி அமர்ந்திருந்தவளுக்கு திடீரென்று ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவானது போல் தோன்ற, சுற்றும் முற்றும் பார்த்தாள்.

ஆசிரியர்கள் அனைவரும் தலைமை ஆசிரியர் அலுவலகத்திற்கு வேகமாக சென்று கொண்டிருப்பது போல் தெரிந்தது. என்ன ஆயிற்று என்று அவளும் குழப்பமாக எழ, அச்சமயம் அங்கு வந்த ப்யூன், “கரஸ்பாண்டன்ட் சார் வந்திருக்காங்க டீச்சர். எல்லோரையும் ஹெச் எம் ரூமுக்கு வர சொன்னாங்க” என்று சொல்லிச் சென்றான். 

அவள் இங்கு வந்ததிலிருந்து, இன்று தான் அவர் முதல் முறை இவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்திருக்கிறார். தனக்கு வேலை கொடுத்து. இத்தனை வருடங்கள் வாழ வழிகாட்டியதற்கு, நன்றி கூற வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ந்து, தன் தலைவலியையும் மறந்து, வேகமாக தலைமை ஆசிரியர் அறையை நோக்கிச் சென்றாள் தெய்வானை.  

இவள் செல்வதற்கு முன்பே அவரை அறிமுகபடுத்தி முடித்திருந்தார் தலைமை ஆசிரியர். தலைமை ஆசிரியரின் எதிர்ப்புறம் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவரிடம், ஒவ்வொரு ஆசிரியரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். கடைசியாக தெய்வானையை தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அவரின் முன்பு சென்று நின்றாள். 

ஊர் தலைவரும் வள்ளியம்மாளும் சொன்னதை வைத்து, வயதானவராக இருப்பார் என்று எதிர்பார்த்து இருக்க, அங்கிருந்தவர் குறைந்த வயதுக்காரராக தெரிந்தார், முகத்தை முக்கால்வாசி மறைத்து இருந்தது தாடி. கருப்பு கண்ணாடி போட்டு கண்களையும் மறைத்திருக்க, ‘பார்ப்பதற்கு எங்கேயாவது கரஸ்பாண்டன்ட் மாதிரி இருக்கிறாரா? கண்ணாடியும், தாடியும் ஆளை பாரு’ என்று நினைத்துக் கொண்டே, தன் பெயர் தெய்வானை, என்றும் இங்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது என்றும் கூறினாள். 

உடனே தலைமை ஆசிரியர், “சின்னமுட்டம் மீனவ கிராமத்தில் தலைவர் அப்பாவிடம் கேட்டதற்காக இவர்களை இங்கு வேலைக்கு எடுத்துக் கொண்டோம். இங்கு இருப்பதிலேயே வெறும் ஒரு டிகிரி முடித்த ஆசிரியர் இவர் மட்டும்தான். மற்றவர்கள் எல்லோரும் ஆசிரியர் பயிற்சி படிப்பான பி எட் முடித்தவர்கள்” என்று கூறினார் தலைமை ஆசிரியர். 

அவர் அப்படிச் சொன்னதும் சங்கடமாக கரஸ்பாண்டையே பார்த்துக் கொண்டிருந்தாள் தெய்வானை. முதலில் எல்லோருக்கும் வணக்கம் சொன்ன கரஸ்பாண்டன் தெய்வானையை பார்த்து “ஆசிரியர் தொழிலுக்கு வெறும் ஒரு டிகிரி மட்டும் போதாது என்று தெரியுமா? மிஸ்..?” என்று அவள் பெயரை கேட்டு நிறுத்தினான். 

அவன் குரலைக் கேட்டதும் அவளுக்கு அதிர்ச்சியாக, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் பாதியை மறைத்தவாறு இருந்த தாடி, கண்களை மறைத்தவாறு இருந்த கருப்பு கண்ணாடி. அதில் அவளுக்கு எதிரில் இருந்தவனை அடையாளம் தெரியவில்லை. ஆனாலும் அவனது குரலை அவளால் மறக்க முடியுமா? அதிர்ச்சியில் பேச்சு வராமல் அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க, 

தன் கையில் இருந்த பேனாவை வைத்து டேபிளில் தட்டி, “சொல்லுங்க மிஸ். உங்க பெயர்?” என்றான் அழுத்தமாக. 

அவன் முகத்தில் இருந்த இருக்கம் அவளை பயமுறுத்தியது. இவர் உண்மையில் என்னை மறந்து விட்டாரா? என்று அதிர்ச்சியாக அவனை பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள் பக்கத்தில் இருந்த ஒரு ஆசிரியை தெய்வானையின் தோளைத் தொட்டு “டீச்சர், உங்க பெயரை சொல்லுங்க” என்றார். 

அதன் பிறகு தான் சுயம் உணர்ந்த தெய்வானை, “நான் தெய்வானை” என்றாள் மெதுவாக. 

“ஓ.. மிஸ் தெய்வானை, இங்கு..” என்று அவன் பேச தொடங்க, 

அவன் பேச்சை தடுத்தவாறு, 

“சாரி சார். மிஸ் தெய்வானை இல்லை, மிஸஸ் தெய்வானை. மிஸஸ் தெய்வானை குகன்” என்றாள் அழுத்தமாக. 

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்