Loading

தன் தந்தைக்கு உடம்பு சரியில்லை என்று தாய் ஃபோன் செய்து சொன்னதும் உடனே திருச்சிக்கு செல்ல வேண்டும் என்று தன் மனைவியிடம் கூறினான் குகன். 

தெய்வானையோ நான் வரவில்லை என்று கூற, குகனுக்கு கோபம் வந்தது. “நிலைமை புரியாமல் பேசாதே தெய்வா. அங்கு அப்பா உடம்பு சரியில்லாமல் இருக்கிறார். இந்நேரம் நீ இப்படி பிடிவாதம் பிடிக்காதே” என்றான் சற்று கோபமாக. முதன் முறையாக கோவப்படுகிறான். அவனது கோபத்தையும் தனக்குள் ஞாபகமாக பதித்துக் கொண்டாள் தெய்வானை. 

“நான் சொல்வதை நீங்க புரிஞ்சுக்கோங்க. நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு முதல் முதலாக வீட்டுக்கு போறோம். இப்போ மாமா உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக சொல்கிறீர்கள். இந்த நேரத்தில் நான் அங்கு வந்தால், வீட்டிற்கு வந்த மருமகள் நேரம் சரியில்லை என்று ஏதாவது சொல்லுவாங்க இல்லையா?” என்றாள். 

அவள் சொல்லுவதும் சரிதான். அம்மாவும் அவளை வேண்டாம் என்று சொல்வதற்கு காரணங்களை தேடிக் கொண்டுதானே இருக்கிறார். இன்னும் அவர் தெய்வானையை முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லையே! என்று யோசித்தான். 

“அதற்கு என்ன பண்ண முடியும் தெய்வா? சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. யாராவது பேசினால் நான் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொள்கிறேன். நீ கிளம்பு” என்று அவளை கிளப்புவதில்லையே குறியாக இருந்தான். 

ஆனால் திடமாக மறுத்த தெய்வானை “நான் சொல்வதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் முதலில் பார்க்க வேண்டியது உங்கள் அப்பாவை தான். அவரை கவனித்து கொள்வதில் உங்கள் கவனத்தை செலுத்துவீர்களா? இல்லை என்னை அங்கு நிருபிக்க உங்கள் கவனத்தை செலுத்துவீர்களா? முதலில் அவர் குணமாகட்டும். அதன் பிறகு வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்றாள் தெளிவாக. 

அவள் சொல்வதும் சரிதானே. இந்த நேரத்தில் அவளை அழைத்துச் செல்வது சரியாக படவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான்.

அவன் குழப்பமான முகத்தைப் பார்த்த தெய்வானை, “நான் சொல்வதை கேளுங்க. முதலில் நீங்கள் போய் அப்பாவிற்கு குணமானதும் வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்றாள். 

“அதுவரை நீ தனியாக இருந்து கொள்வாயா?” என்று கவலையாக கேட்டான் குகன்.

“இங்கு எனக்கென்ன பயம்? அதுதான் நாளை கந்தன் அண்ணன் வந்து விடுவார் என்கின்றீர்களே! அவர் குடும்பம் இருக்கும் பொழுது எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நான் தைரியமாக இருப்பேன். நீங்கள் உங்களை குழப்பிக் கொள்ளாமல், வீட்டுக்கு போய் அப்பாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அவனை கிளம்ப கூறினாள்.

அவளின் கூற்றை அரைமனதாக ஏற்றுக்கொண்ட குகன் “சரி, பத்திரமாக இருந்துக்கோ” என்று பீரோவில் இருந்த லாக்கரின் எண்ணை சொல்லிக் கொடுத்து, அவளை இரண்டு முறை திறக்க வைத்தான். பின்னர் இதில் தேவையான அளவிற்கு பணம் இருக்கு. எதுவும் தேவை என்றால் வாங்கிக் கொள். பணம் போதவில்லை என்றால் எனக்கு சொல்லு. உடனே அனுப்புகிறேன்” என்றான்.

அவளோ அவனின் செய்கையை கண்டு புன்னகைத்து, “எனக்கு என்ன செலவு வரப்போகிறது. நம் வீட்டைச் சுற்றியே நமக்கு தேவையான காய்கறிகள் இருக்கிறது” என்றாள். 

“வேற எதுவும் வேணும்னா?” என்று அவன் கேட்க, 

“சரி நான் எடுத்துக் கொள்கிறேன்” என்றாள்.

“நீ எப்படி எனக்கு ஃபோன் பண்ணுவ? உன்னிடம் தான் ஃபோன் இல்லையே! நான் வேண்டுமென்றால் கடை ஏதும் திறந்து இருந்தால் சார்ஜர் வாங்கி கொடுத்து விட்டுச் செல்லவா?” என்றான்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அதான் கந்தன் அண்ணா வந்து விடுவார் என்று சொல்கிறீர்கள் அல்லவா? அவரின் ஃபோன் மூலம் பேசிக் கொள்ளலாம்” என்றாள்.

ஆயிரம் முறை அவளுக்கு பத்திரமும் அறிவுரையும் சொல்லி அவளை விட்டு செல்ல மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினான் குகன். 

“நீ இல்லாமல் நான் எப்படி இருக்க போகிறேனோ? தெரியவில்லை” என்று புலம்பிக் கொண்டே காரில் ஏறினான். 

அவள் புன்னகைத்துக் கொண்டே, “அதெல்லாம் இருந்துவிடுவீங்க. அங்க போன உடனே உங்களுக்கு தலைக்கு மேல வேலை இருக்கும். அதில் என் நினைவு இருந்தால் தான் ஆச்சரியம்” என்று விளையாட்டாக கூற, 

“என் நினைவை விட்டு நீ போகிறாய் என்றால், அதன் பிறகு என் உடலில் உயிர் இருக்காது தெய்வா” என்று ஆத்மாத்மாக கூற, 

அவன் வாயில் கையை வைத்து, “அப்படி எல்லாம் பேசாதீங்க” என்று கண்கலங்க சொல்லி, “உங்களுக்காக ஒருத்தி இங்கு காத்திருக்கின்றாள் என்ற நினைப்பு இருக்கும் வரை, உங்கள் உயிரை நீங்கள் பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்றாள்.

அவளை இழுத்து அணைத்து, அவளின் இதழில் இதழ் பதித்து, “பத்திரமா இருந்துகோ” என்று கூறி தன் காரைக் கிளப்பினான். 

அவன் இதழ் ஒற்றலில் மெய் மறந்து நின்ற தெய்வானை, அவனின் கார் கேட்டை தாண்டியதும் தான், அவன் தன்னை விட்டுச் சென்றதை உணர்ந்தாள். அவனிடம் தைரியமாக பேசிய தெய்வானை, அவன் கார் கண்ணை விட்டு மறைந்ததும் தன்னிலை இழந்து கதறி அழுதாள், ஏன்? அழுகிறோம் என்று தெரியாமலேயே! 

அவளது உயிர் அவனுடனையே சென்று விட்டது போலவும், வெறும் கூடு மட்டும்தான் அங்கு இருப்பது போல் உணர்ந்தாள். நின்றயிடத்தில் அப்படியே மடங்கி உட்கார்ந்து அழ, எவ்வளவு நேரம் கடந்ததோ தெரியவில்லை. தன்னால் அழுகை குறைய மெதுவாய் எழுந்து வீட்டிற்குள் வந்தாள். அந்த வீட்டை சுற்றும் முற்றும் பார்க்க, எங்கும் அவர்கள் இருவரும் இருந்த சந்தோஷ நினைவுகளே அவளுக்கு வந்தது. அதில் மேலும் அவள் அழுகை அதிகரிக்க, அப்படியே சோபாவில் அழுது கொண்டே படுத்துவிட்டாள். 

படுத்தவள் தன்னையும் அறியாமல் உறங்கிவிட, கோழிகள் சத்தத்தில் தான் விழித்தெழுந்தாள். சாயங்காலம் ஆகியிருந்தது. ஆடு மாடுகளை கட்ட வேண்டிய இடத்தில் கட்டிவிட்டு, கோழியை கூண்டில் வைத்து அடைத்து, அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று உறுதி செய்தாள். 

அன்று குகனின் அம்மாவிடம் பேசியதில் இருந்தே குழப்பமான மனநிலையில் தான் இருந்தாள் தெய்வானை. கடைசியாக அவர் சொன்னது அவளது காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. “ஒழுங்கா மரியாதையாக என் பிள்ளையை விட்டு ஓடிப் போயிடு. நான் என் மருமகள்கள் யாரையாவது ஒருத்தியை அவனுக்கு மணமுடித்து வைத்து, உன்னை வெறுக்கும் படி செய்து விடுவேன்” என்றது. 

ஆனால் குகன் தன்னை அவனது தாயின் சொல் கேட்டு வெறுப்பான் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. அதற்கு தாமாகத்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாள். 

கடைசியாக அவனது லாக்கரில் இருந்த ஐம்பதாயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டாள். தன் துணிமணிகளையும் தனது சர்டிபிகேட்ஸ்களையும் எடுத்து கட்டை பையில் அடுக்கிக் கொண்டாள். 

பின்னர் குகனுக்கு ஒரு காகிதத்தில், இவ்வளவு காலம் உனக்கு நான் என்னையே கொடுத்ததற்கு உன் லாக்கரில் உள்ள பணத்தை மொத்தமும் எடுத்துக் கொண்டேன். உன் அம்மா சொன்னது போல் உன் முறை பெண்கள் யாரையாவது ஒருவரை மணந்து சந்தோஷமாக வாழ். நான் உன்னைப் போல் வேறு ஒரு பணக்காரனை தேடி போகிறேன். இனி என்னை தேடாதே என்று எழுதி அவனது லாக்கரில் வைத்தாள். 

அவள் மனம் கதறி அழுது கொண்டே இருந்தது. குகன் இல்லாமல் என்னால் எப்படி வாழ முடியும் என்று நினைத்து மறுகினாள். ஆனால் காலத்தின் கட்டாயம் அவர்கள் அம்மாவிற்கு பிடிக்காத வாழ்க்கையை, அவன் வாழ வேண்டாம் என்று நினைத்து தன்னை சமாதானம் படுத்திக் கொண்டாள். 

அழுது அழுது தன்னையும் அறியாமல் அப்படியே உறங்கிவிட, உறக்கத்தில் அருகில் அவனைத் தேட, அவன் இல்லாத வெறுமையைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள் தெய்வானை. சுற்றும் முற்றும் பார்க்க அவன் இல்லாத நிதர்சனம் உணர, தனக்குள் வந்த அழுகையை அடக்கிக் கொண்டே எழுந்து குளித்து முடித்து வெளியே வந்து பார்க்க, கோனார் பால் கறந்து வைத்துவிட்டு சென்றிருந்தார். 

மணி ஆறுதான் ஆகியிருந்தது. அப்படி என்றால் கோனார் தினமும் இவ்வளவு சீக்கிரமே வந்து வேலைகளை முடித்து விடுவார்களா? என்று நினைத்தபடி தனக்குத் தேவையான அளவு பாலை எடுத்துக்கொண்டு, மீதியை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு காபி போட்டுக்கொண்டு, வீட்டைச் சுற்றி சுற்றி பார்த்து வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் மனதிற்குள் பதித்துக் கொண்டு, காபியை குடித்து முடித்தாள். 

அதன் பிறகு தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு, வீட்டை பூட்டிவிட்டு சாவியை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து, விலங்குகளை எல்லாம் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு அந்த இடத்தையும் தன் மனதில் ஆழமாக பதித்துக் கொண்டு, கண்ணீரோடு அங்கிருந்து வெளியேறினாள் தெய்வானை. 

இத்தனை நாட்கள் இங்கிருந்தாலும் வெளியில் வந்த பிறகு எந்தப் பக்கம் போவது என்று அவளுக்கு தெரியவில்லை. சாலையின் இருபுறமும் சிறிது நேரம் பார்த்துவிட்டு, குகனின் கார் சென்ற திசையிலேயே அவளும் அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள்.

அரை மணி நேரம் பயணத்தில் பேருந்து நிறுத்தம் தெரிய. அங்கு சென்று பேருந்துக்காக காத்திருந்தாள். எங்கு செல்வது என்று முடிவு செய்யவில்லை அவளுக்கு முதலில் சேலத்திற்கு, தனது அம்மா வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்தாள். பின்னர் குகன் இல்லாமல் சென்றால் அவர்கள் தன்னை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற பயம் வந்தது. அப்படியே யோசித்துக் கொண்டிருக்க, அப்பொழுது அங்கு கரூர் செல்லும் பேருந்து வந்தது. வேறு வழி இன்றி அதில் ஏறினாள், முதலில் இங்கிருந்து சென்று விடுவோம். அதன் பிறகு யோசிப்போம் என்று. 

இப்படியாக ஒவ்வொரு இடமாக மாறி மாறி பேருந்து ஏறி ஏறி, முடிவில் நடு இரவு நேரத்தில் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினாள். பேருந்து நிலையமே ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்க உறங்கிக் கொண்டிருந்த டிக்கெட் அலுவலகத்தில் இருந்தவரிடம் கன்னியாகுமரிக்கு செல்லும் பேருந்து எப்பொழுது வரும் என்று கேட்டாள்.

எல்லா ஊருக்கும் விடிந்த பிறகு தான் இனிமேல் பேருந்து என்று சொல்லி, அவர் தனது தூக்கத்தை தொடர, சற்று தள்ளி இருந்த பெஞ்சில் தன் பையை கட்டிப்பிடித்தவாறு அமர்ந்து கொண்டாள் தெய்வானை.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்