தெய்வானையின் நம்பிக்கையான பேச்சில் மகிழ்ச்சி அடைந்த குகன், அவளை லேசாக அணைத்து கொண்டான். அவனது அணைப்பில் திடுக்கிட்ட தெய்வனை அவனிடமிருந்து விலகமுயல, அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து, நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு, “நான் உன் புருஷன். அடிக்கடி கட்டிப்பிடிப்பேன். முத்தம் கொடுப்பேன். என்னிடம் இருந்து விலகாதே. என்னைக் கண்டு பயந்து நடுங்காதே!” என்று சொல்லிவிட்டு, “நிம்மதியாக தூங்கு” என்று சொல்லி, மேலும் அவளை தொந்தரவு செய்யாமல், படுக்க வைத்து விட்டு தனது அறைக்கு சென்று விட்டான்.
அவன் சென்றதும் நிம்மதியாக உறங்கினாள் தெய்வானை.
மறுநாள் வழக்கம்போல் காலையில் முதலில் எழுந்த குகன் தன் வேலைகளை தொடர, சிறிது நேரம் கழித்து எழுந்த தெய்வானை தன் காலை வேலைகளை முடித்துவிட்டு, குகனுக்கு உதவுவதற்காக மாட்டு கொட்டகைக்கு சென்றாள்.
அதற்குள் அவன் பால் கறந்து தயாராக வைத்திருக்க, அவளின் கையில் கொடுத்து “நீ போய் சமையல் வேலையை பார்” என்று அவளை அனுப்பி வைத்தான். இருவருக்கும் காபி கலந்து கொண்டு வந்த தெய்வானை அவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தானும் குடித்தாள். குடித்து முடித்ததும் அவனுடன் கூட மாட ஒத்தாசை செய்ய, வேலை செய்யும் சாக்கில் அவளை சின்னச் சின்ன சீண்டல்கள் மூலம் அவளிடம் நெருங்கினான் குகன்.
வேலை செய்யும் பொழுது தெரியாமல் நடக்கிறது என்று அதை கண்டு கொள்ளாமல் அனைத்து வேலைகளையும் முடித்து காலை சமையலையும் முடித்து குளித்துவிட்டு வருவதாக சென்றுவிட்டாள். இருவரும் குளித்து காலை உணவை உண்ட பிறகு அவளின் தோளில் கை போட்டு அருகில் அமர்ந்த குகன், “தெய்வா, உன்னிடம் ஒன்று கேட்பேன். நீ கோவித்துக் கொள்ள கூடாது” என்றான்.
அவனின் அருகில் அவள் உடல் கூச நெளிந்து கொண்டே “ம்ம் சொல்லுங்கள்” என்றாள்.
“அது.. நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல” என்றான் தயங்கி.
அவளும் ஆமாம் என்று தலையாட்ட,
“இனிமேல் நீ ஏன் தனியாக படுக்கனும்? என் அறையில் உறங்கலாமே?” என்றான்.
கணவனாக அவனது எதிர்பார்ப்புகள் தெய்வானைக்கு புரியாமல் இல்லை. ஆனால் அவளுக்கு தங்கள் வாழ்க்கையை பெரியவர்களின் ஆசி இல்லாமல் தொடங்குவதில் விருப்பமில்லை. “அது” என்று தயங்கிய தெய்வானை “நாம் ஊருக்குச் சென்ற பிறகு நம் வீட்டில் உங்களுடனே உறங்குகிறேனே!” என்றாள் மெதுவாக.
பெருமூச்சு விட்ட குகன் “உன் இஷ்டம்” என்று தன் வேலையை பார்க்க எழுந்து விட்டான்.
அவன் சட்டென்று அங்கிருந்து எழுந்தது அவளுக்கு ஒரு மாதிரி இருக்க, சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு, மதிய உணவுக்கான வேலைகளை செய்தாள். இருவரும் அவரவர் வேலைகளை செய்தனர். தேவை இல்லாமல் பேசுவதை குறைத்தான் குகன். இன்று காலையில் இருந்து அவளிடம் நெருக்கமாக நடந்து கொண்டதில் அவனது மனம் அவளை முழுமையாக அடைய விரும்பியது. ஆனால் அவளது சம்மதம் இல்லாமல் அவளின் அருகில் நெருங்கக் கூடாது என்று அவளை விட்டு விலகியே இருந்தான். ஆனால் இவ்வளவு காலம் நன்றாக பேசிக் கொண்டிருந்தவன், திடீரென்று பேசாததால் மிகவும் கஷ்டமாக உணர்ந்தாள் தெய்வானை.
அப்படியே இரண்டு நாட்கள் கழிய, இரவு உணவு முடித்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும். எப்பொழுதும் சிறிது நேரத்திலேயே உறங்கச் சென்று விடுவாள் தெய்வானை. ஆனால் இன்று வெகு நேரம் கடந்து இருக்க அவள் இருந்த இடத்தை விட்டு எழவே இல்லை.
அவளைப் பார்த்த குகன் “தூங்கலையா?” என்று கேட்டான்.
“தூங்கணும்” என்று சொல்லிய தெய்வானை, மீண்டும் தன் கவனத்தை டிவியில் வைக்க,
“சரி, நான் ஒரு முறை வீட்டைச் சுற்றி பார்த்துவிட்டு வருகிறேன். எல்லாவற்றையும் ஆஃப் பண்ணிட்டு போய் படு” என்று சொல்லிவிட்டு டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு, கோழி எல்லாம் ஒழுங்காக அடைந்து விட்டதா என்று பார்த்துவிட்டு, வீட்டின் கதவையும் மூடிவிட்டு வந்தான்.
அதற்குள் டிவி அணைத்து இருக்க, தெய்வானையின் அறையை பார்த்தான். கதவு சாத்தியிருக்க, சரி அவள் உறங்க போயிருப்பாள் என்று தனது அறைக்கு வந்த குகன் அங்கு தெய்வானை கட்டிலில் உட்கார்ந்து இருப்பதை கண்டு அதிர்ந்தான்.
“ஏய் தெய்வா! நீ என்ன இங்க! தூங்கலையா?” என்று அவளின் அருகில் வர, மௌனமாக எழுந்த தெய்வானை, “நமக்குத்தான் திருமணம் முடிந்து விட்டதே, அதான் உங்களுடனே உறங்கலாம் என்று வந்துவிட்டேன்” என்று சொல்லி அவனுக்கு முதுகு காட்டி கட்டிலில் படுத்து விட்டாள்.
அவள் செய்கையில் புன்னகைத்துக் கொண்ட குகன், விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்து அவளையும் பின்புறமாக அணைத்தான். அவன் அணைத்ததும் உடல் நடுங்க, அதை உணர்ந்த குகன் அவளின் பின்னங்கழுத்தில் உதடு உரச “என்னைக் கண்டு பயப்படாதே தெய்வா. நான் உன் கணவன் என்று நினைத்தால் என்னுடன் நீ சகஜமாக இருக்கலாம்” என்று கூறி இதழ் பதித்தான்.
அவனின் முத்தம் அவளின் உயிர் வரை ஊடுருவ இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டாள்.
மென்மையாக பேசி பேசியே அவளின் சம்மதத்துடன் அவர்களது இல்வாழ்க்கையை தொடங்கினான் குகன்.
வெகு நேரம் கூடி களித்து விடியலில் கண் உறங்கினர் இருவரும்.
வழக்கத்தில் அவன் எழும் நேரத்தையும் கடந்து வெகு நேரம் கழித்து கண் விழித்தான். அதுவும் கன்றுக்குட்டி பசியால் கத்தும் சத்தத்தை கேட்டு.
திடுக்கிட்டு எழுந்த குகன் அறைக்குள் வெளிச்சமாக இருப்பதை கண்டு, விடிந்துவிட்டது போலவே என்று அவசரமாக எழுந்தான்.
அருகில் உறங்கும் தெய்வானையைக் கண்டதும் நேற்றைய தங்களது நிலை நினைவுக்கு வர, புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து, போர்வையை போர்த்தி விட்டுவிட்டு வேகமாக எழுந்து கன்று குட்டிக்கு பசியாற்ற சென்றான்.
தாமதம் ஆகியதால் எல்லாம் இவனை கண்டதும் சத்தம் போட்டு ஆர்ப்பரித்தன. கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்ட குகன், கோழிக் கூண்டைத் திறந்து வெளியே விட்டான். பின்னர் தங்களுக்கு தேவையான பாலை கறந்து விட்டு அனைத்து விலங்குகளுக்கும் தீவனமிட்டு அவற்றின் பசியை போக்கினான்.
அனைத்து வேலையும் முடிய மணி ஒன்பதை தாண்டி விட்டது. அவள் எழுந்தாளா என்று தெரியவில்லையே? என்று நினைத்து விலங்குகள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறதா? என்று ஒரு முறை பார்த்து விட்டு, வேகமாக வீட்டிற்குள் வந்தான்.
தெய்வானை அப்படியே உறங்கிக் கொண்டிருக்க, புன்னகையாக அவளை பார்த்துவிட்டு இருவருக்கும் காபி போட்டு எடுத்துக் கொண்டு அவர்களது அறைக்கு வந்து தெய்வானையை எழுப்பினான்.
“இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்ங்க” என்று திரும்பிப் படுத்த தெய்வானையிடம்,
“காபியை குடிச்சிட்டு தூங்கு தெய்வா” என்றான்.
அவனது தெய்வா என்ற சப்தத்தில் பட்டென்று கண் திறந்தாள். நேற்று முழுவதும் மந்திரம் போல அவன் தெய்வா என்ற பெயரை தானே மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தான். அது நினைவுக்கு வந்ததும் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
அமர்ந்த பிறகு தான் தன் நிலை தெரிய போர்வையை இறுக்கமாக பற்றி கொண்டாள். அவளது செய்கையில் சிரித்த குகன் “காபியை குடிச்சிட்டு, தூங்கனும்னா தூங்கு நான் போய் டிபன் செய்கிறேன்” என்று அவளுக்கு தன்னை சரிப்படுத்திக் கொள்ள நேரம் கொடுத்து விட்டு சமையல் செய்ய சென்று விட்டான்.
அதன் பிறகு உறங்க மனம் இல்லாததால் எழுந்து குளித்து வெளியே வந்தாள். “ஏன் எழுந்த? அதுக்குள்ள குளிச்சிட்ட, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே” என்றான்.
அவளுக்கு அவனின் முகத்தை பார்ப்பதற்கே வெட்கமாக இருந்தது. “இல்லை, பரவாயில்லை. தூக்கம் போயிடுச்சு” என்று சோபாவையும் சுவற்றையும் பார்த்து பேசிக் கொண்டிருந்தாள்.
“தெய்வா” என்று அவளின் அருகில் வந்த குகன், தன் இரு கைகளிலும் அவள் முகத்தை தாங்கி தன்னை பார்க்க வைத்து, “இங்கே பாருடா! எல்லா கணவன் மனைவிக்குள்ளும் நடக்கும் விஷயம் தான் நமக்குள்ளும் நேற்று நடந்தது. இதற்கு நீ இப்படி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் நான் என்ன செய்வது. இங்கு இருப்பது நாம் இருவர் மட்டும்தான். நீயே என்னுடன் முகம் கொடுத்து பேசாவிட்டால், நான் எங்கே போவது” என்று சோகமாக கூறி அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்து, “ப்ளீஸ், என்னிடம் எப்பொழுதும் போல பேசு” என்றான்.
‘இவர் மட்டும் நம்ம கூட பேசாம ரெண்டு நாள் திரிஞ்சுக்கிட்டு இருந்தாரு. இப்ப நான் ரெண்டு நிமிஷம் அவரை பார்க்க வெட்கப்பட்டதுக்கு, இவ்வளவு பெருசா பேசுறாரு’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட தெய்வானை, மௌவுனமாக சரி என்று தலையாட்டினாள்.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாகினாள் தெய்வானை. அதன்பிறகு புதுமணத் தம்பதியர்கள் போல் இருவரும் சிலுமிஷம் செய்து கொண்டே தங்களது வேலைகளை செய்தார்கள். ஒருவரை விட்டு ஒருவர் ஒரு பத்து நிமிடம் கூட தனியே இருக்க முடியாத நிலை இருவருக்கும் உருவாகி இருந்தது.
மனம் ஒத்த தம்பதிகர்களாக குகனும் தெய்வானையும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். இருவருக்குள்ளும் மகிழ்ச்சியைத் தவிர வேறு எந்த நினைவுமே இல்லை. தெய்வானை தன் தாயை முற்றிலும் மறந்து விட்டாள் என்றே சொல்லலாம்.
அதே நிலைதான் குகனுக்கும். தன் வீட்டின் நினைப்பு அவனுக்கு கொஞ்சம் கூட வரவில்லை. நாட்கள் இனிமையாக கடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வெளிவர தொடங்கினர்.
நோயின் தாக்கம் குறைந்ததாக தோன்றியது. தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் எல்லோரும் அதை கட்டாயம் போட வேண்டும் என்றும் செய்திகளில் கூறப்பட்டது. இருந்தும் இவர்கள் வீட்டிற்கு யாரும் வரவே இல்லை.
ஒரு நாள், “ஆமாம், பஸ் எல்லாம் ஓடுதுன்னு நியூஸ்ல சொல்றாங்க. ஆனால் இங்கு இருந்த தோட்டக்காரர் இன்னும் வரவில்லையே! ஏன்?” என்று குகனிடம் சந்தேகமாக கேட்டாள் தெய்வானை.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..