Loading

தெய்வானையின் நெற்றியில் இதழ் பதித்தபடியே நின்றிருந்தான் குகன். சங்கிலியை அணிவித்த நொடி அவளது உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்ததை உணர்ந்து அந்த நிலையை அனுபவித்தபடியே அமைதியாக கண்கள் மூடி அசையாமல் நின்றிருந்தாள் தெய்வானை. 

நிமிடங்கள் கடக்க இருவரும் தங்கள் நிலையை உணர்ந்து விலக, அவளை புன்னகையாக பார்த்துக் கொண்டே, “ஹலோ மிஸஸ் குகன்” என்று அவள் கைகளை பிடித்தான். அவனின் புன்னகை முகத்தை கண்டதும் அவளும் வெட்கத்துடன் புன்னகைத்து கொண்டாள். 

அங்கு ஒரு மௌனமான நிலை நிலவியது. இருவருமே அமைதியாக இருக்க, தொண்டையை செருமிய குகன் “சாப்பிடலாமா? பொண்டாட்டி” என்றான். 

அவள் நிமிர்ந்து பார்த்ததும் ஒற்றை கண்ணடித்து இதழ் குவித்து பறக்கும் முத்தம் கொடுத்தான். அதில் மீண்டும் வெட்கமடைந்த தெய்வானை, தன் முகச் சிகப்பை மறைப்பதற்கு வேகமாக சமையலறையில் சென்று மறைந்தது கொண்டாள். 

சமையலறை சென்றவள் அங்கு தயாராக இருந்த காலை உணவுகளை எடுத்து மேஜையில் அடுக்கினாள். இட்லி சட்னி சாம்பார் கேசரி என்று செய்திருந்தான். அவனுக்கு பரிமாறிவிட்டு, தனக்கும் தட்டில் வைத்துக் கொண்டு எதிரில் அமர, கேசரியை எடுத்து அவளுக்கு ஊட்டி விட அவளின் வாய் அருகே கொண்டு சென்றான். 

திடீரென்று அவன் அப்படி செய்ததும் முதலில் பயந்து விலகிய தெய்வானை, அவன் கண்களில் இருந்த காதல் ஏக்கத்தைக் கண்டு, மெதுவாக வாய் திறந்தாள். உடனே மகிழ்ந்து அவளுக்கு ஊட்டி விட்டு அவனும், “ஆ” என்றான். வேறு வழியின்றி அவளும் கொஞ்சம் கேசரியை எடுத்து தலை குனிந்தபடியே அவனின் முன்நீட்ட, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

இன்னும் வாய் வாங்காமல் என்ன செய்கிறார் என்று நிமிர்ந்து அவனைப் பார்த்ததும், அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவளின் கைபிடித்து கேசரியை சாப்பிட்டான். அவனின் பார்வையில் கன்னங்கள் மீண்டும் சிவக்க, தனக்கு என்ன தான் நடக்கிறது என்று யோசித்துக் கொண்டே, உணவை உண்ண ஆரம்பித்தாள்.

சாப்பாடுதான் இறங்கவே மறுத்தது. எப்பொழுதும் நான்கு அல்லது ஐந்து இட்லி சாப்பிடுபவள், தட்டில் வைத்த இரண்டு இட்லியையே பிசைந்து கொண்டிருக்க, 

“சமையல் நல்லா இல்லையா? பிடிக்கலையா?” என்றான். பிறகுதான் தான் இன்னும் சாப்பிடாமல் இருப்பதை உணர்ந்து வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள். சாம்பார், சட்னி, கேசரி அனைத்துமே மிகவும் சுவையாக இருக்க, ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். 

அவள் முகத்தைக் கண்டதும் “புடிச்சிருக்கா?” என்று வாயசைத்து கேட்டான். அவள் தலையை ஆட்டி, “எப்படி இவ்வளவு நல்லா சமைக்கிறீங்க? என்னால கூட இப்படி செய்ய முடியாது?” என்றாள்.

அவன் புன்னகையுடன் “காலேஜ் போனதிலிருந்து  நானேதான் சமைச்சு  சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்” என்றான். சாப்பிட்டு முடிந்ததும் அவள் சென்று டிவி  போட்டு அமர, அவளின் அருகில் வந்து அமர்ந்தான் குகன்.

உடனே சற்று விலகி அமர்ந்தாள் தெய்வானை. அவன் என்ன செய்தாலும் அவளுக்குள் ஒரு குறுகுறுப்பு இருக்க, அதை மறைக்க அவளும் போராடிக் கொண்டு இருந்தாள். 

இதை கவனித்த குகன் இனிமேல் அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவெடுத்து “சரி, நான் போய் தோட்டத்தை ஒரு ரவுண்டு பார்த்துட்டு வரேன்” என்று கிளம்பினான். 

வழக்கமாக அவன் தோட்டத்திற்குச் செல்லும் பொழுது, அவளும் பின்னாலேயே தான் செல்வாள். ஆனால் இன்று ஏனோ அவளால் செல்ல முடியவில்லை. தொலைக்காட்சியை பார்க்க, அதில் கண்ட செய்தியை கண்டு அவளுக்கு கவலையாகத்தான் இருந்தது. 

அம்மாவை எப்பொழுது பார்ப்போம் என்ற எண்ணமும் வர, அவரது ஃபோனில் இருந்து அம்மாவிற்கு பேசுவோமா என்று எண்ணம் தோன்றியது. ஆனால் பேசினால் அம்மாவின் நிலைமை என்ன? இப்பொழுது நான் திருமணம் செய்து கொண்டேன் என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? ஃபோனில் அவர்களுக்கு என் நிலைமையை சொன்னால், அவர்களால் புரிந்து கொள்ள முடியுமா? ஒருவேளை விசயத்தை கேட்டதும் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? என்று பலவாறு எண்ணங்கள் வர, இந்த கொரோனா லாக்டவுன் முடிந்ததும் அம்மாவிடம் நேரிலேயே அவருடன் சென்று சொல்லி புரிய வைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தாள். மீண்டும் மீண்டும் செய்தியை பார்த்து கவலைப்பட வேண்டாம் என்று தொலைக்காட்சியை அணைத்துவிட்டு மதிய உணவு செய்ய சமையலறைக்கு சென்று விட்டாள். 

அங்கு வந்த குகன், தன் கையில் உள்ள அவரக்காயை அவளிடம் கொடுத்தான். “தெய்வா. காலையில் உள்ள சாம்பார் இருக்கிறது. ரசம் வைத்துவிட்டு, அவரைக்காய் மட்டும் பொரியல் செய்து கொள்ளலாம்” என்று சொல்லி, “நீ செய்கிறாயா? நான் செய்யட்டுமா?” என்றான். 

இல்லை இல்லை நானே சமைக்கிறேன் என்று அவள் வேகமாக மறுத்து கூற சரி நீ பாரு நான் என் வேலையை பார்க்கிறேன் என்று வேற எதுவும் பேசாமல் வெளியே சென்று விட்டான்.

அதில் நிம்மதி அடைந்த தெய்வானை, மடமடவென்று மதிய உணவிற்கான வேலைகளை செய்தாள். சமையல் முடியவும் அவனிடம் சென்று, “சமையல் செய்து விட்டேன், சாப்பிடலாமா?” என்றாள்.

அவள் குரலில் நிமிர்ந்த குகன், “இன்னும் ஒரு டென் மினிட்ஸ்” என்று மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்.

மதிய உணவிற்கு பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்த குகன், கணணியில் தனது வேலை பார்க்கவும் தோட்ட வேலை பார்க்கவும் தனது நேரத்தை கடத்தினான். சிறிது நேரம் டிவி பார்த்த தெய்வானை அவளது அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள். 

சாயங்காலம் தனியாகவே பால் கறந்து வேலைகளை முடித்த குகன், இருவருக்குமான டீ போட்டுக் கொண்டு அவளது அறைக் கதவை தட்டினான். கதவை திறந்த தெய்வானையிடம், “டீ ரெடி, குடிக்கவா?” என்று சொல்லி சோபாவில் அமர்ந்தான். 

அவளும் வந்து தனக்குரிய டீயை எடுத்துக் கொண்டு குடிக்க தொடங்க, “இன்னைக்கு நீ எனக்கு ஹெல்ப் பண்றதுக்கு வரவே இல்ல. தனியாவே எல்லா வேலையையும் பார்த்தேன்” என்றான் அவளை பார்த்துக் கொண்டே,

அவன் அப்படி சொன்னதும் தெய்வானைக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. அவளும் தோட்ட வேலைகளை அவனுடன் செய்து பார்த்தவள்தானே, அதில் இருக்கும் கஷ்டத்தை உணர்ந்தவள்தான். ஆனால் ஏனோ அவனை பார்க்க ஒரு மாதிரி கூச்சமாக இருக்க, அவனை பார்ப்பதை தவிர்ப்பதற்காக அறைக்குள்ளையே முடங்கி விட்டாள். 

இப்பொழுது அவன் தனியாக வேலை பார்த்திருக்கிறான் என்று தெரிந்ததும் வருந்தி, “சாரிங்க, அது.. என்னால..” என்று தயங்கினாள்.

“பரவாயில்லை தெய்வா, உனக்காக நான் எல்லா வேலைகளையும் தனியாகவே செய்வேன். எனக்கு இது ஒன்றும் கடினமாக இல்லை” என்று புன்னகைத்தான். பின்னர் சிறிது நேரம் டிவி பார்க்க, இரவு உணவு முடிந்ததும், பாத்திரங்களை எல்லாம் ஏற கட்டி வைத்துவிட்டு, வேகமாக அறைக்குள் சென்று விட்டாள். 

அவளின் செய்கையை கண்டு புன்னகைத்துக் கொண்ட குகன் சிறிது நேரம் தனது வேலையை தொடர்ந்தான். வேலையை முடித்து நிமிர மணி பதினொன்று ஆகி இருந்தது. இன்று இரவு உணவு சீக்கிரமே முடித்ததால், பசிப்பது போல் இருக்க, பாலை சுட வைத்து இரு டம்ளர்களில் ஊற்றி, தெய்வானையின் அறைக்கதவில் கை வைத்தான். 

அவன் கை பட்டதும் கதவு திறந்து விட, கட்டிலில் தன் உடலை குறுக்கிக் கொண்டு ஒரு பக்கமாக சாய்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் தெய்வானை. அங்கிருந்த ஜன்னல் திண்டில் பால் டம்ளரை வைத்துவிட்டு, அவளின் அருகில் அமர்ந்து அவளின் தோளை தொட்டான். 

அவன் தொட்டதும் வேகமாக எழுந்த தெய்வானை மிரட்ச்சியாக அவனைப் பார்த்தாள். 

அவளின் செயலில் தன்னை தண்டித்துக் கொண்ட குகன், “பயப்படாதே! நான் தான்” என்றான்.

அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயல, “இந்தா பால் குடிச்சிட்டு தூங்கு” என்று பாலை கொடுத்தான்.

தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி தூங்கு என்கிறானே என்று அவனை விசித்திரமாக பார்த்தாள். 

“எனக்கு பசித்தது, நானாவது மூன்று தோசை சாப்பிட்டேன். ஆனால் நீ ஒரு தோசை தானே சாப்பிட்டாய்! அப்படி என்றால் உனக்கும் பசிக்கும் தானே?” என்றான்.

அவன் சொன்ன பிறகுதான் தனது பசியை உணர்ந்தாள். மௌனமாக அவனிடமிருந்து பால் டம்ளரை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.  

தெய்வானையையே பார்த்துக் கொண்டிருந்த குகன், “ஆமா கதவை தாழ் போடாமல் படுத்திருக்கின்றாய்? உனக்கு என்னிடம் இருந்த பயம் போய்விட்டதா?” என்றான் விஷமமாக சிரித்தபடி.

அவன் கேட்டதன் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை. நான் எப்போதும் அம்மாவுடன்தான் படுப்பேன். எனக்கு தனியாக படுப்பது பயமாக இருக்கும். அதனால் தான் கதவை திறந்து வைத்து, நீங்கள் வேலை செய்துகொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டே உறங்குவேன்” என்றாள். 

“கதவை திறந்து வைத்தே படுத்திருந்தால், இரவு நான் வந்து உன்னை ஏதாவது செய்து விட மாட்டேனா?” என்றான் சிரித்துக் கொண்டே. 

“எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருந்தது, நீங்கள் ரொம்ப நல்லவர் என்று. நீங்கள் நிச்சயம் அப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்க மாட்டீர்கள்!” என்றாள் உறுதியாக. 

உண்மையிலேயே அவளது நம்பிக்கையான சொற்களில் மிகவும் மன மகிழ்ந்தான் குகன்.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்