Loading

குகன் “நான் கேட்டதற்கு நீ இன்னும் பதில் சொல்ல வில்லையே” என்று கேட்டான் தெய்வானையிடம். 

“என்ன கேட்டீங்க?” என்று உண்மையிலேயே மறந்து அவனிடம் கேட்டாள். 

“நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா?” என்று மீண்டும் அதே தெளிவுடன் கேட்டான். 

கல்யாணம் என்றதும் அதிர்ந்த தெய்வானை, “கல்யாணம்னா உங்களுக்கு அவ்வளவு விளையாட்டாக போயிடுச்சா? முதலில் இரு வீட்டில் உள்ள பெரியவர்களும் பேசி முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு தானே திருமணம்? உங்கள் அப்பா அம்மாவிற்கும் தெரியாமல் என் அம்மாவிற்கும் தெரியாமல் எப்படி திருமணம் செய்து கொள்வது?” என்றாள். 

தன் விருப்பத்தை தன் அப்பாவாது கொஞ்சம் ஏற்றுக் கொள்வார், ஆனால் அம்மா முற்றிலும் மறுத்துவிடுவார் என்று உணர்ந்த குகன், “முதலில் கல்யாணம் பண்ணிக்கலாம். பிறகு எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லலாம்” என்றான். 

“என் அம்மாவுக்கு தெரியாமல் நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்றாள் தெய்வானை. 

“ஏன்? என்னை உனக்கு பிடிக்கவில்லையா?” என்றான் ஒருவித கவலையுடன்.

“பிடிக்குது, பிடிக்கவில்லை என்பது அடுத்த விஷயம். நம் திருமணம் பெரியோர்கள் சம்மதத்துடன் தான் நடக்க வேண்டும்” என்றாள்.

“என்ன? நம் திருமணமா?” என்று புன்னகைத்தபடியே கேட்க, 

பின்னர்தான் தான் பேசியதை உணர்ந்து 

“இல்லை இல்லை. என் திருமணம், என் அம்மாவின் சம்மதத்துடன் தான் நடக்க வேண்டும். அப்பா இறந்து இப்பொழுதுதான் கொஞ்ச காலம் ஆகுது. அம்மா ரொம்ப ஒடிஞ்சு போய் இருக்காங்க. இப்போ அவர்களுக்கு தெரியாமல் நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. அம்மா பார்க்கும் மாப்பிள்ளையை தான் நான் திருமணம் செய்து கொள்வேன்” என்றாள் உறுதியாக. 

“ஓ.. அப்போ உன்னோட மாமா உனக்கு ஓகே தானா?” என்று கோபமாக கேட்டான்

“நீங்க ஏன் இப்ப கோவப்படுறீங்க? எங்க அம்மா ஒன்னும் அவரை கல்யாணம் பண்ணிக்க சொல்ல மாட்டாங்க” என்றாள் அவனின் கோபத்தை கண்டு பயந்தபடி

“உங்க அம்மா நிச்சயம் அப்படி சொல்ல மாட்டாங்க. நீ வீட்டுக்கு போன பிறகு அதுதான் நடக்கும். அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது” என்று தன் கோவத்தை சற்றும் குறையாமல் கூறினான். 

“அதெல்லாம் நடக்காது. நான் வேலைக்கு போகணும், எங்க அம்மாவ நல்லா பாத்துக்கணும்” என்று அழும் குரலில் பேசினாள். 

பின்னர்தான் தான் அவளை வற்புறுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டான் குகன். “பின்னர் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கொஞ்சம் புரிந்துகொள் தெய்வா! ஏனென்று தெரியவில்லை. உன்னை பார்த்ததுமே எனக்கு பிடித்து விட்டது. ஐ லவ் யூ என்று, என் காதலை சொன்னால், நீ ஏற்றுக்கொள்ள மாட்டாய் என்றுதான் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டேன். ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ. நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்” என்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 

அவனின் பேச்சிலும் செய்கையிலும் அவளுக்குள்ளும் ஏதோ குறுகுறுப்பு தோன்றியது. ஆனால் அது என்ன என்றுதான் அவளுக்கு புரியவில்லை. “அது எப்படி? பார்த்ததும் என்னை உங்களுக்கு பிடித்தது?” என்றாள் கேள்வியாக.

அவள் கேள்வியில் அவனும் யோசித்தான். “எப்படி இது நடந்தது?” என்று அவள் நெற்றியில் முட்டி “அது தாண்டி காதல். எப்பொழுது தோன்றும் என்றெல்லாம் தெரியாது. ஆனால் எனக்குத் தோன்றி விட்டது. உனக்கும் என்றாவது தோன்றும். அப்பொழுது புரிந்து கொள்வாய், நீயும் என்னை காதலிப்பதை” என்றான் புன்னகையாக

“நான் ஒன்றும் உங்களை காதலிக்கவில்லை” என்றாள் சற்றென்று.

“சரி, காதலிக்க வேண்டாம். கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் மீண்டும். 

இப்பொழுது உண்மையிலேயே பயந்து விட்டாள் தெய்வானை. “சும்மா சும்மா கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்காதீர்கள். எனக்கு தூக்கம் வருது. நான் போய் தூங்ககுறேன்” என்று அங்கிருந்து எழுந்து வேகமாக தனது அறைக்குள் சென்று விட்டாள். அவன் பற்றிய கையிலும் அவன் முட்டிய நெற்றியிலும் ஒரு வித குறுகுறுப்பு இருக்க, உடல் முழுவதும் புது ரத்தம் பாய்ந்தது போல் ஒரு விதமாக புத்துணர்ச்சியாக இருந்தது. அது ஏன் என்றுதான் அவளுக்கு தெரியவில்லை. 

தன் காதலை தெய்வானையிடம் சொல்லியதில் நிம்மதி அடைந்த குகன், அமைதியாக செய்தியை பார்த்தான். உலகம் எங்கும் கொரோனா நோய் பரவி எண்ணற்ற மக்கள் பலியாவதை கண்டு வருந்தினான். இந்நோயின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கும் புரிய ஆரம்பித்தது. 

உடனே தன் தந்தைக்கு அழைத்து நோயைப் பற்றி கூறி ஜாக்கிரதையாக இருக்கும்படியும் சொன்னான். தான் இங்கு பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தான். அதன் பிறகு தெய்வானையின் அம்மா எப்படி இருப்பார்களோ? என்ற எண்ணமும் அவனுக்கு தோன்றியது. அவர்களைப் பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்று யோசித்தபடி உறங்கச் சென்றான். 

மறுநாள் எப்பொழுதும் போல விடிய காலை வேலைகளை செய்ய தொடங்கினான் குகன். வழக்கமாக வரும் நேரத்திற்கு கோனார் வரவில்லை. அவருக்கு ஃபோன் செய்து விசாரித்ததில், 

“இன்று என்னால் வர முடியாது தம்பி. யாரையும் எங்கும் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு ஏற்கனவே ஆஸ்மா நோய் இருப்பதால், என் மனைவியும் மிகவும் பயப்படுகிறாள். உங்களால் தனியாக மாட்டை பராமரிக்க முடியுமா? இல்லையென்றால் சொல்லுங்கள். நான் வேறு ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

“சரி கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். முடியவில்லை என்றால் உங்களிடம் கேட்கிறேன்” என்று சொல்லி ஃபோனை வைத்த குகன், கடந்த மூன்று நாட்களாக கோனார் செய்வதை பார்த்துக் கொண்டிருந்ததால் அவர் செய்தது போல ஒவ்வொரு வேலையையும் செய்ய தொடங்கினான். 

பால் கறப்பது மட்டும் அவனுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்க, கோனார் கறந்து கொடுப்பதை விட குறைவாகத்தான் அவனால் கறக்க முடிந்தது. பரவாயில்லை என்று நினைத்த குகன் ‘முதல் தடவை இவ்வளவு கறந்திருக்கிறாயே குகா!’ என்று தன்னையே பாராட்டிக் கொண்டான். அடுத்து கொட்டகையை சுத்தம் பண்ணும் வேலையை ஆரம்பிக்க, அப்பொழுதுதான் எழுந்து அங்கு வந்தாள் தெய்வானை.

அவளும் கூடமாட சேர்ந்து வேலை செய்ய, சூரியன் நன்றாக உதயமாகி வெளிச்சம் பரவி மணி ஏழரை ஆகிவிட்டது. 

தெய்வானைக்கு லைட்டா பசிப்பது போல் இருக்க,  

“காபி குடிப்போமா?” என்று கேட்டான் குகன். தனக்கு பசிக்கிறது என்று நினைக்கும் போது அவரும் காபி கேட்கிறாறே என்று ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.

இவ்வளவு நேரம் வேலையில் கவனமாக இருந்த இருவரும் நேரடியாக ஒருவர் ஒருவர் முகத்தை பார்க்க, வியர்வையில் குளித்திருந்த தெய்வானையை கண்டு குகனுக்குள் ஒருவித சிலிர்ப்பு தோன்றியது. 

இடுப்பில் கட்டி இருந்த அவளது துப்பட்டாவை உருவி அவள் முகத்தை துடைக்க முனைந்தான். அவனிடமிருந்து வாங்கி அவளே துடைத்துக் கொள்ள துப்பட்டாவின் மறுமுனை வைத்து அவனது முகத்தையும் தன் உடம்பையும் துடைத்தான். 

அவன் செய்கையில் அவன் முகத்தை நேராக பார்க்க முடியாத தெய்வானை, துப்பட்டாவை விட்டுவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டாள். சமையலறை சென்று பாலை அடுப்பில் வைத்த பிறகு கூட அவளுக்குள் ஏதோ ஒரு விதமான தவிப்பான நிலை இருப்பதை உணர்ந்தாள் . 

அவள் ஓடிச் சென்ற பிறகு தலையை குலுக்கி தன்னை சமன்படுத்திய குகன் ‘டேய் அவளுக்கு உன்னை பிடிக்கலைடா. ஏன் ஒரு பொண்ணு கிட்ட இப்படி நடந்துக்கிற’ என்று தன்னைத்தானே கண்டித்துக் கொண்டான். 

இப்படியே குகன் தனக்கு தோன்றிய உணர்வை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்க, தெய்வானையோ தனக்கு காதல் தோன்றியதையே உணராமல், ‘ஏன்? இப்படி இருக்கிறது’ என்று யோசித்தபடியே சுற்றிக் கொண்டிருந்தாள். இருவரும் சேர்ந்து வீட்டையும் தோட்டத்தையும் கவனிக்கும் வேலையை செய்ய அதிலேயே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது.

மதியத்திற்கு மேல் அவன் ஃபோனில் பேசியபடியே அவன் வேலைகளை செய்ய ஆரம்பிக்க, டிவி பார்த்துக் கொண்டு நேரத்தை போக்கும் தெய்வானைக்கு, செய்திகளை பார்க்க பார்க்க அம்மா எப்படி இருப்பார்களோ? என்ற கவலை அதிகரிக்க ஆரம்பித்தது. 

இரண்டு நாட்கள் இப்படியே கழிய உலகில் கொரோனா நோயினால் இறப்பு விகிதம் அதிகரித்து கொண்டே இருந்தது. செய்தியை பார்த்து கலங்கும் தெய்வானையை கண்டு டிவி போடக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டான்.

நோயின் தீவிரம் அதிகரிக்க அரசாங்கத்தின் கெடுபிடிகளும் அதிகரித்தது. 

ஒரு நாள் காலண்டரை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான் குகன். 

“என்ன பாக்குறீங்க?” என்று அவனின் எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள். 

“நாளைக்கு புதன்கிழமை, வளர்பிறை முகூர்த்த நாள்” என்றான். 

“அதனால் என்ன?” என்றவளிடம் 

“நாளை நமக்கு கல்யாணம்” என்று அலுங்காமல் குலுங்காமல் அவள் தலையில் இடியை இறக்கினான் குகன்.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
12
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. என்ன இப்படி உடனே கல்யாணம் என்று அவ தலையில் இடிய இறக்கி விட்டான்.
      கதை ரொம்ப நல்லா இருக்கு நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு அதையெல்லாம் சரி பண்ணிக்கோங்க

      1. Author

        நன்றி மா 😊😊
        திருத்தம் செய்கிறேன்