ஜாலம் 11
இதோ முழுதாய் முடிந்து விட்டது மூன்று வாரங்கள்… திருமண வாழ்க்கை தினம் தினம் தித்திக்கும் பாலாச்சுளைதான் மீனாட்சிக்கு..
வேண்டி விரும்பி காதலித்தவன் இன்று அவள் கணவனாய்… அதிலும் அவனது ஒவ்வொரு புரிதலான செய்கையிலும் தெறிக்கும் மனைவி எனும் உரிமை உணர்வை மீனாட்சி பெரிதும் விரும்பினாள்…
அதிலும் இப்போதெல்லாம் வேந்தனவனின் பார்வை மங்கையிடத்தில் ரசனையாக படிகிறது…
மீனாட்சியும் உள்ளுக்குள் தோன்றும் குறுகுறுப்பை மறைக்க படாதபாடு பட்டுகொண்டுதான் இருக்கிறாள்… இன்றுவரையில் அந்த கடிதத்தை வைத்து அவளை ஓட்டுவதை மட்டும் அவன் நிறுத்தவேயில்லை…
அன்று விடுமுறை நாள்.. நால்வரும் வீட்டில் தான் இருந்தனர்.. தாயும் குழந்தைகளும் அவர்களது அறைகதவை மூடி அரைமணி நேரம் ஆகி இருந்தது ஆனால் இன்னும் வெளியே வந்தபாடில்லை…
“டேய் இவ்வளவு நேரம் என்னடா பண்ணுறீங்க.. வெளியே வாங்கடா… இல்லனா அப்பாவையும் சேத்துக்கோங்களேன்டா…” என்று வேந்தனோ பொறுமை இழந்து அறையை தட்ட அந்த பக்கம் சத்தமே இல்லை…
காலையில் தான் நால்வரையும் வரைய போகிறோம் என்று வேந்தனின் மூன்று வானரங்களும் உள்ளே நுழைந்து கதவடைத்திருந்தனர்…
சரியாக மேலும் பத்து நிமிடங்களில் கதவு திறக்கப்பட, வேந்தன் கண்களை மீனாட்சியை விட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவன் போல் பார்வையாலேயே அவளை களவாடி கொண்டிருந்தான்…
தூக்கிப்போட்ட கொண்டை இடையில் சொருகிய சேலை.. படம் வரைந்து கொண்டிருந்ததின் விளைவாய் கன்னத்தில் ஆங்காங்கே தீட்டப்பட்ட வர்ணம் என கொள்ளை அழகாய் தான் தெரிந்தாள் அவளவன் கண்களுக்கு..
“அப்பாஆஆஆ… பினிஷ்…” என்று கத்திய குழந்தைகளின் சத்தம் தான் அவளுள் முழ்க இருந்தவனை அந்த நேரம் காப்பாத்தியது என்று கூட சொல்லலாம்…
“எப்படி இருக்குப்பா..” என்ற மகி அவனிடம் படத்தை காட்ட, பார்த்தவன் கண்ணில் உண்மைக்கும் வியப்பு.. அத்தனை தத்துரூபமாய் வரைந்திருந்தாளே….
அவனையே பார்த்திருந்தவளுக்கும் அவன் கண்களில் வந்து போன ஆச்சரியம் புரிய உள்ளூற இனம்புரியா உவகை ஊற்றெடுத்தது உண்மை..
என்னதான் தான் வரைவது தனக்கு அழகாய் தெரிந்தாலும் யாரும் பாராட்டும் போது சிறு சந்தோசம் மனதில் எழுவது இயல்பு தானே அதிலும் தன்னவனின் பாராட்டானா பார்வை எத்தனை பொக்கிஷம்….
குழந்தைகளின் உயரத்துக்கு குனிந்தவன் “வாவ் செமயா இருக்கே… படத்துல பேமிலி டிரஸ்ஸா.. சோ ஸ்வீட்..” என்றவன் குழந்தைகள் இருவரின் கன்னத்திலும் முத்தம் வைத்தான்..
“அப்பா மீனும்மாக்கு..” என்றான் ஆர்வன்.. தங்களுக்கு போல அம்மாவிற்கும் முத்தமிட வேண்டுமென..
பெரியவர்கள் இருவருக்கும் அதிர்ச்சி… அதிலும் வேந்தன் இருக்கும் நிலைக்கு சொல்லவே வேண்டாம்…
“அம்மாக்கா???..” என்றான் கேள்வியாக ஆர்வனிடம்..
“ஆமாப்பா.. மீனும்மா தான கஷ்டப்பட்டு ட்ராவ் பண்ணி இருகாங்க.. பாவம்ல குடுங்கப்பா..” என்றான் மீண்டும்.. தனக்கு கிடைத்தது தனக்கு பிரியமானவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது தானே குழந்தைகளின் மனம்…
அவனுக்கு உள்ளுக்குள் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் வந்துவிட்டது… காதல் புகுந்தால் கள்ளத்தனமும் கூடவே சேர்ந்துக்கொள்ளுமே…
கண்களால் அவளிடம் பேசியவன் அவள் மறுப்பையும் மீறி அவளருகில் சென்றான்.. அவளது மறுப்பு கல்லாட்டம் என்பது தான் அவனுக்கு தெரியுமே..
“வேணாங்க…” என்ற அவள் மறுப்பு அவனுக்கு ஒருவித சுவாரஷ்யத்தை கொடுக்க..
“அப்போ ஸ்வீட் வேணாமா சிட்டு?..” என்றவனின் குரலில் இருந்தது என்னவென்று உணரும் முன்னரே அவளது கன்னத்தில் பட்டும் படாமல் இதழ்களை ஒற்றி எடுத்தவன் விருவிருவென அந்த இடத்தை விட்டே சென்றிருந்தான்…
மீனாட்சியின் விரிந்த கண்கள் சொன்னது அவள் நிலையை.. அவன் முதல் இதழ் ஸ்பரிசம் அவளுள் பல இரசவாத மாற்றங்களை நிகழ்த்தி இருந்தது…
“ஐயோ வெக்கம் வெக்கமா வருதே…” என்று மனதுக்குள் எண்ணிகொண்டவள் அவளவன் ஸ்பரிசித்த கன்னத்தை ஒருமுறை தொட்டுப்பார்ந்து கொண்டாள்… மீண்டும் அவனே முத்தமிட்டது போல் ஒரு உணர்வு…
தீட்டப்பட்ட வர்ணத்துக்கு மேலதிகமாக இப்போது அவள் கன்னம் நாணமிகுதியில் வெக்க வர்ணம் பூசிக்கொண்டது….
____________________________________________
அறைக்குள் நுழைந்து கொண்ட வேந்தனின் நிலையோ அவளை விட இன்னும் மோசமாய் தான் இருந்தது… அவன் உணரும் முதல் பெண்மையின் மென்மை அவனை சித்தம் கலங்கவே செய்திருந்தது…
ஆணவனுக்கும் மோக உணர்வு உண்டென்பதை இன்று தான் அவனே உணர்ந்துகொண்டான்..
பின் கழுத்தை அழுந்த வருடியவன் கீழிதழ்களை பற்களால் கடித்து உணர்வுகளை அடக்க போராடியும், முடியும் என்று தோன்றவே இல்லை…
கண்ணாடி முன் சென்று நின்றவன் “டேய் வேந்தா நீயாடா இது?… காதலா?.. அதுவும் அந்த ஆர்வகோளாறு மேலயா.. மூனே வாரத்துல கவுந்துட்டாளா?… ரொம்ப சாப்ட்டா இருக்காளே… கன்னமே இப்படி சாப்ட்னா அந்த உதடு…” என்று அவன் எண்ணம் போகும் திசை அவனுக்கே பயத்தை கொடுக்க தலையை உளுக்கி கொண்டான்..
“வெரி டேஞ்சரஸ் வேந்தா… இங்க இருக்காதாடா போய்ட்டு.. இதுக்கு மேலயும் இங்க இருந்த இழுத்துவெச்சு கிஸ் அடிச்சிட்டு தான் அடுத்த வேலையே பாப்ப நீ…” என்று அவன் மனமே அவனுக்கே அறிவுரை வழங்க, அந்த எண்ணமே அவன் மனதுக்குள் பனிசாரலை பொழிந்திருந்தது..
“பண்ணா என்னவாம்.. என் பொண்டாட்டி தான… கிஸ் மட்டுமில்ல அதுக்கு மேலயும் உரிமை இருக்கு…” என்று மீண்டும் இன்னொரு மனம் எடுத்துக்கொடுக்க..
“ஐயோ வசியக்காரி என்ன என்னடி பண்ணி தொலச்ச?… இப்படி உன்மேல பைத்தியமாகிட்டேனே.. எட்டு வருஷத்த நாம தான் வேஸ்ட் பண்ணிட்டோம் போலயே..” என்று ஒரே புலம்பல்கள் தான் அவன் எண்ணத்தை சூழ்ந்தது..
“பேசாம கிஸ் பண்ணிட்டு ஓடி வந்துடுவோமா?..” என்று கூட எண்ணம் அலைபாய தொடங்க உண்மையில் வேந்தன் பயந்தே போய்விட்டான்..
அந்த நேரம் அவனை உணர்வின் பிடியிலிருந்து மீட்டது என்னவோ ஹரிஷிடம் இருந்து அழைப்பு தான்..
உயிர்ப்பித்து காதில் வைத்தவன் “சொல்லுங்க ஹரிஷ்.. ஏதாச்சும் க்ளூ கிடைச்சிருக்கா?..”
“நோ சார்.. ஆளையே கண்டுபிடிச்சாச்சு..” என்க அவ்வளவு நேரமிருந்த இதம் அப்படியே தொலைந்திருந்தது…
இத்தனை நாள் அந்த பெண்ணை பற்றி தெரிய வராதா என்று எதிர்பார்த்தவன் அவன்… ஆனால் இன்று அவள் கிடைத்தும் சந்தோசப்பட முடியவில்லை…
“என்ன சார் சைலன்ட் ஆகிடீங்க…” என்றான் எதிர்பக்கமிருந்து இவனது அமைதியை உணர்ந்த ஹரிஷ்..
“நதிங் ஹரிஷ்.. சொல்லுங்க யாரு அவங்க?.. என்ன பன்றாங்க?.. வெட்டிங் பண்ணிக்கிட்டாங்களா?…” என்றவனது இறுதி கேள்வியில் அவன் உள்ளமும் அதிரவே செய்தது…
“அவங்க நியூ அட்ரஸ் கிடைச்சிருக்கு சார்… ***** ஏரியா தான் இருகாங்க… அங்க போய் விசாரிச்சதுல ஏதோ கேக் ஷாப் வெச்சு நடத்துறாங்கலாம்.. இப்போ ரீசண்டா மேரேஜ் பண்ணிகிட்டதா சொன்னாங்க.. பேர் கூட ஏதோ மீனானு சொன்னாங்க சார்…” என்றவன் முடிக்க..
எதிரில் இருப்பவனின் கூற்றில் மீனாட்சி தான் அவன் தேடிய பெண் என்பது தொண்ணூறு சதவீதம் புரிந்தாலும்.. மேலும் உறுதிப்படுத்த எண்ணியவன் “ஹரிஷ் அந்த பொண்ணோட போட்டோ இருந்தா எனக்கு வாட்ஸப் பண்ணுங்க..” என்றவன் அழைப்பை துண்டித்தான்..
சில நிமிட காத்திருப்பு கூட அவனுக்கு பல வருடமாக தான் தோன்றியது.. நொடிகள் கடக்க அவன் காத்திருந்த படமும் வந்து சேர்ந்தது…
பார்த்தவன் என்ன உணர்ந்தான் என்பது அவனுக்கே தெரியவில்லை… இத்தனை நாளாய் அவன் தேடிக்கொண்டிருப்பது அவன் மீனாட்சியை தானா… நம்பவே முடியவில்லை…
இது எதேர்ச்சியான விடயம் என்பதை அவன் மனது நம்ப தயாராக இல்லை… கடவுளின் சதுரங்க ஆட்டம் தானென்று உள்ளம் உறுதியாக நம்பியது…
இத்தனை நாள் அவன் பயந்த விடயம்.. குற்றவுணர்வில் வாடிய விடயம் இன்று ஒன்றுமில்லாமல் போனதில் மனது சற்று சாந்தமடையவே செய்தது…
“என் மீனாட்சி தானா?… என் மீனாட்சியே தான்… ஆருவ யாரும் எங்கிட்ட இருந்து பிரிக்க மாட்டாங்க… நான் யாருக்கும் துரோகம் பண்ணல…” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அத்தனை சந்தோசம் அவனுக்கு…
ஏதோ இத்தனை நாள் அழுத்திய உணர்வு விடுபட்டதில் மனது ஒரு நிலையிலில்லை… அவனால் அவன் உணர்வை தனியே சமாளிக்க முடியாது என்று தோன்றவும் வில்லில் ஏற்றப்பட்ட அம்பு போல மீனாட்சியிடமே விரைந்தான்…
ஒவ்வொரு அறையாய் அவளை தேடியவன்.. இறுதியாய் சமையலறைக்குள் அவளை கண்டுகொண்டான்…
அவளோ சமைத்த பாத்திரங்களை கழுவுவதற்காக எடுத்து வைத்துகொண்டிருக்க, வேந்தனோ வேறு எதையும் யோசிக்கவே இல்லை..
அவளை தன் பக்கமாக திருப்பியவன்… என்னவென்று உணரும் முன்னரே அவள் இதழில் தன் இதழ்களை ஆழமாகவும் அழுத்தமாகவும் பொருத்தியிருந்தான்…
அவன் ஒரு கரமோ அவளிடயை பற்றி தன்னுடன் நெருக்கிக்கொள்ள, மற்றைய கரத்தால் சமையலறையின் கதவை திறந்து தங்களை மறைக்கும் படி வைத்துக்கொண்டான்…
மீனாட்சியின் விரிந்த கண்களுக்குள் இருக்கும் கருமணிகளோ, மீன்தொட்டியிலிருந்து வெளியே குதித்துவிடும் மீன்களை போல் அங்குமிங்கும் தத்தளித்துக்கொண்டிருந்தது…
தன்னுணர்வுகளை எப்படி கையாள்வது என்று புரியாமல் அவன் சிகைக்குள் கைகோர்த்து அவன் முத்தத்தை உள்வாங்கிக்கொண்டாள் வேந்தனின் மனைவியவள்…
முத்தமது நிறைவுக்கு வர அவளும் எண்ணவில்லை.. அவனும் அனுமதி தரவில்லை… நீண்ட முத்தமது மனையாள் துவண்டு அவன் நெஞ்சில் விழும் வரை தொடர்ந்தது…
அவன் நெஞ்சில் தன்னை மறைத்துக்கொண்டவள் நிமிரவே இல்லை.. அவன் கண்களை சந்திக்கும் தைரியம் முற்றிலுமாக வடிந்திருந்தது…
வேந்தனவனுக்கோ தன்னை நிலைநிறுத்த முடியவில்லை… மனதை அமைதிப்படுத்த என்று ஆரம்பித்த முத்தம்.. அவன் மோக உணர்வுகளை உயிர்பித்திருந்தது…
அவன் கரங்களும் இதழ்களும் உணர்ந்து கொண்ட அவள் மென்மை அவனை பித்துக்கொள்ள வைத்திருந்தது…
காலம் மறந்தான்.. இடம் மறந்தான்.. சூழ்நிலை மறந்தான்… ஏன் அவனையே மறந்தான் என்று தான் சொல்லவேண்டும்… ஒற்றை முத்தத்தில் உயிர்குடிக்க முடியும் என்று உணர்த்தி இருந்தாள் அவன் மனைவி…
நெஞ்சில் சுகமாய் சாய்ந்திருக்கும் மனைவியை பார்த்தவன் “சிட்டு..” என்றான்.. அந்த குரலில் தான் எத்தனை மென்மை…
“ம்ம்ம்…”
“ஸ்வீட் எப்படி?..”
ஆனால் இம்முறை அவளிடம் பதிலில்லை ஆனால் அவன் நெஞ்சத்தில் அவள் கொடுத்த அழுத்தம் சொன்னது அவள் உணர்வுகளை…
அவனுக்கும் இந்த நெருக்கம் களையவேண்டாம் என்ற எண்ணம் தான்… ஆனால் அவளிடம் கேட்க வேண்டிய விடயங்கள் இருக்கிறதே…
அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவனின் கண்கள், மீண்டும் அவள் இதழ்களிலே நிலைக்க, கேட்க வேண்டிய கேள்விகள் மீண்டும் கிடைப்பில் போடப்பட்டது…
அவனோ மீண்டும் முத்தமிட துடிக்கும் இதழ்களை பற்கள் கொண்டு தடையிட்டவன் பார்வை அவளைவிட்டு அசையவேயில்லை..
பெண்ணவளை சொல்லவே வேண்டாம், வெக்கம் பிடுங்கி தின்றது… முழுங்கும் பார்வையாலேயே வெக்கம்கொள்ள வைக்கும் அவன் விழி ஆழியை அவள் கரம் கொண்டு மூடியவள், பற்களின் சிறையிலிருக்கும் வேந்தனவனின் இதழ்களுக்கு தன் இதழ்கள் கொண்டு விடுதலையளித்தாள் வேந்தனின் மீனாட்சியவள்…
மீண்டும் தொடர்ந்தது முடிவில்லா முத்த யுத்தம்….
எங்கோ தூரத்தில் கேட்டது போல் காதில் கேட்ட குழந்தைகளின் சத்தத்தை முதலில் உணர்ந்தது என்னவோ வேந்தன் தான்..
சட்டென்று அவளை தன்னிடமிருந்து பிரித்து, நெற்றியில் அவசர முத்தம் ஒன்றை பதித்தவன்.. மனைவிக்கு அவகாசம் அளிக்க எண்ணி தங்களை நோக்கி ஓடிவந்த குழந்தைகளை கைகளில் அள்ளியபடி ஹாலுக்குச்சென்றான்…
போராளிகள் விருப்பப்படாமல் முடியும் போர் முத்தபோர் தானோ??…
ஜாலம் தொடரும்…
_ஆஷா சாரா_
டேய் இன்னும் ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கு போலயே🤔🤔🤔 சரி அதையும் சிக்கிரம் எடுத்து விடு ❤️❤️anyway இன்னைக்கு ud super da 🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣🫣
சரிங்க மேடம் 🤭🤭🤭
இன்னும் என்ன ஃப்ளாஷ் பேக் இருக்கு வேந்தன் ஏன் கொற்ற உணர்வில் மீனுவை தேடிக்கிட்டு இருந்தான்??
Thank u கா ❤❤❤
இன்னும் இருக்கு ரெண்டு flash back அடுத்த udla ஒன்னு வந்துடும்
Ethana flash back than vechuruka neeeee